“இல்ல.. பரவாயில்ல ங்க அத்தே.. யமுனாவோட வரும் போது சாப்பிடுறேன். இப்ப தண்ணி மட்டும் கொடுங்க..” என நாசுக்காக மறுத்துவிட்டான்.
Advertisement
தன் மகளை விட்டும் கொடுக்காமல்.. தனது தன்மானத்தையும் விட்டு கொடுக்காதவன்.. மீது முதல் முறை ஒரு மரியாதை எழுந்தது பெரியவர்கள் இருவருக்கும்.
Advertisement
இரண்டு செட் உடையை எடுத்தபடி.. கங்காவிடம் இரண்டு நாளுக்கு என்ன செய்யவேண்டும்.. என பாடம் நடத்திய மரகதத்தை கண்டு லேசாக தொண்டையை செருமி அவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர்,
அருகே நின்றிருந்த கங்கா தான், “ம்மா.. அப்பா உன்ன மூனு மாசத்துக்கு அக்கா கூடவே இருந்து பாத்துக்க சொல்றாரு..” என உற்சாகமாய் சொல்ல,
அவரின் மனது மாறுவதற்கு முன் அவசரமாக இன்னும் சில உடைகளோடு வந்து சேர்ந்திருந்தார் திருப்பூருக்கு.
இங்கு வந்து அவளை தேற்றி.. ஓரளவு அவளால் முடியும்.. என்றான பின் சென்றவர் வளைகாப்புக்கு வந்தார் ஒன்பதாம் மாதம்.
அப்போதும் யமுனாவின் தந்தை வரவில்லை. கங்காவும் கிருஷ்ணாவும் மட்டும் சில உறவுகளோடு வர, வருத்தமிருந்தாலும் இவர்களையாவது வர அனுமதிக்கிறாரே எனும் அளவில் திருப்தியே எல்லாருக்கும்.
வளைகாப்பு முடிந்து மற்றவர்களோடு பிள்ளைகளை அனுப்பியவர் அங்கேயே தங்கிக்கொண்டார் மகளின் பிரசவத்திற்காக.
அங்கிருந்த வரை தீனா யமுனாவை தாங்குவதை கண்டு அத்தனை ஆனந்தம் பெற்ற தாயாய் அவருக்கு.
தினமும் தங்களின் மகள் வாழும் வாழ்வை பற்றி பூரிப்போடு தன் கணவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்.
இதோ இப்போதும் வலியில் அவள் துடிக்கும் முன் அவன் காட்டும் பயமும், தவிப்பும் போதாதா.. அவன் யமுனா மீது வைத்திருக்கும் பிரியத்தை சொல்ல..?
“ம்மா…!!” என்ற யமுனாவின் வலியால் உண்டான குரல் அவரை நிகழ்வுக்கு கொண்டு வர அவளின் கையை பற்றியவர்,
“கொஞ்சம் பொறுத்துக்க யமுனா..” என்றார் ஆறுதலாய்.
நேரம் கூட கூட வலியின் வீரியமும் கூடியது. தீனா அங்கு இல்லாத ஒன்றே அவளால் தன் உணர்வை அழுகையாய் காட்ட ஏதுவாய் அமைந்தது.
அவன் அங்கு இருந்திருந்தால் அது கூட முடிந்திருக்காது அவனை கொண்டே..
ஒரு கட்டத்தில் வலி அதிகமாகிட வந்து அவளை பரிசோதித்து பார்த்த மருத்துவர்,
“லேபர்வார்டுக்கு கொண்டு போயிடலாம். பேபி தல வெளியே வர ஆரம்பிச்சிடுச்சு..” என்றதும் உடனடியாக அங்கே மாற்றப்பட்டாள் யமுனா.
இதுவரை கண்டதெல்லாம் வலியே இல்லை.. எனும்படியான ஒன்றை ஒற்றை பெண்ணாய் உள்ளே அவள் அனுபவிக்க, வெளியே காத்திருந்த பெண்கள் இருவருக்கும், ‘எல்லாம் நல்லபடியா நடக்கனும் ஆண்டவா..’ என்ற பிராத்தனையே.
சக்தியோ வெளியே இதுவரை போராடி பிடித்து வைத்திருந்த தீனாவை சமாளிக்கவே முடியாமல் போனை வாணிக்கு போட,
“லேபர்வார்டுக்கு கொண்டு வந்தாச்சுங்க மாமா. இப்ப கொழந்த பொறந்திடும்..” என்றிட,
அது காதில் லேசாக விழுந்த நொடி சக்தியை மீறிக்கொண்டு ஓடியிருந்தான் உள்ளே.
“எப்பா சாமீ.. இவனோட..” என தலையில் அடித்துக்கொண்ட சக்தி, “உந்தம்பி புயல் வேகத்துல உள்ளார வர்றான் புடுச்சு வெய்யி.. இல்ல.. இவனே போயி பிரசவம் பாத்துடுவான்..” என நக்கலாக சொல்ல,
“அவனோட அவிதி உங்களுக்கு விளையாட்டா இருக்காக்கும்.. வாங்க வச்சுக்கறேன்..” என்ற வாணி போனை கட் செய்யும் முன் மூச்சு வாங்க வந்து நின்றிருந்தான் தீனா.
“க்கா.. அவ.. எப்படி இருக்கா..?” என திக்கி திணறி கேட்கவும்,
அதோடு எழுந்த பிள்ளையின் அழுகை குரலெல்லாம் அவன் காதில் விழுந்ததா..? என்பது அவனுக்கே வெளிச்சம்.
“தம்பி, பயப்படாதீங்க புள்ள பொறந்திடுச்சு.. இனி வலி இருக்காது..” என மரகதமும் வாணியும் தேற்றிய போதும்.. அவனின் நடுக்கம் மட்டும் குறைவதாய் இல்லை.
அங்கே வந்த சக்தி விசயம் தெரிந்து, “மாப்ளே.. அப்பா ஆகிட்ட.. வாழ்த்துக்கள் டா..” என கட்டித்தழுவ,
அவரின் தோளோடு சாய்ந்தவன் சந்தோஷிப்பான் என எதிர்பார்த்ததுக்கு பதிலாய் கதறலாய் ஒரு அழுகை.
வெளியே பிள்ளையோடு வந்த டாக்டரே ஒரு நொடி பயந்து போனார் அவனின் அழுகையில்..
“வாட் ஹேப்பண்ட் ஹியர்..?” என அவர் சத்தமாக கேட்க,
குழந்தையோடு இருந்தவரை கண்டு முகம் மலர்ந்த வாணி, “டேய் தம்பி.. டாக்டர் புள்ளையோட வந்திருக்காங்கடா.. வாங்குடா உம்புள்ளய..” என அவனின் தோளில் தட்டி சொல்ல,
அவசரமாய் தன் தோள்பட்டையில் கண்ணை துடைத்தவன், “டாக்டர்.. யமுனா எப்படி இருக்கா..?” என்றான் பரபரப்பாய்.
அவரும் இதுபோல சிலரை பார்த்தவர் தானே.. அதனால் மெலிதாக சிரித்தவர்,
“டோண்ட் வொரி. அவங்க ரொம்ப நல்லா இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணுவாங்க.. அங்கே பார்த்துக்கோங்க..” என்றவர்,
“என்ன பேபின்னும் கேட்கல.. அதை வாங்கவும் தோணல..” என கிண்டலாய் சொல்ல அவரை கண்டு அசட்டு சிரிப்பை உதிர்த்தவன்,
அவசரமாய் தனது காலில் இருந்த செருப்பை ஓரமாய் கழட்டிவிட்டு, தனது இரு கரத்தையும் பேன்ட் பாக்கெட்டில் இருந்த ஹேண்ட்கீ கொண்டு அழுத்தமாய் துடைத்துவிட்டு கை நீட்டினான் பிள்ளைக்காக.
அவனின் செய்கையை எல்லாம் பார்த்திருந்த மருத்துவருக்கு அவனின் மீதான அபிமானம் கூடித்தான் போனது அந்நொடி.
“பொண்ணு மிஸ்டர்..” என அவனின் கையில் கொடுக்கும் போது டாக்டர் சொல்ல ஆசையாய் மகளின் முகம் பார்த்தான் தீனா.
அவளோ தனது பிஞ்சு வாய் திறந்து கொட்டாவி ஒன்றை விட்டு, லேசாக நெளிந்து பின் தன் கருந்திராட்சை கண்ணை திறந்தாள்.
அதை அருகே நின்று பார்த்த வாணியோ, “தம்பி..! பாப்பா அப்படியே உன்னைய உருச்சு வச்சு பொறந்திருக்காடா..!!
அதும் அந்த கண்ண பாறேன்..! அப்படியே உங்கண்ணு தான்.. மைய அப்பி வச்சதாட்டம் எம்புட்டு அம்சமா இருக்கு..” என சிலாகிக்க,
தீனாவிற்கோ தன் தாயே தன் கையில் வந்தது போன்ற தோற்றம்.
“மானும்மா..” என மென்குரலில் தீனா அழைக்க மெல்லிய புன்னகை அந்த இளவரசியின் இதழில்.
“அச்சோ.. இப்பவே சிரிப்ப பாரு அப்பன பாத்து..” என சக்தி எட்டி பார்த்து சொல்ல,
தந்தையவனுக்கோ உடலெல்லாம் சிலிர்த்தது உணர்வு பெருக்கில்.
தீனாவிடமிருந்து குழந்தையை தன் கைக்கு வாணி மாற்ற.. அழுகையை தொடங்கினாள் அந்த பூஞ்சிட்டு.
அவளின் அழுகையை கேட்டால் சும்மா இருப்பானா தீனா..?
“ஏ வாணி புள்ளய கொடு..” என திரும்ப தானே வாங்க, ஸ்விட்ச் போட்டது போல நின்று போனது அவளின் அழுகை.
மரகதம் எடுத்த போதும்.. சக்தி எடுத்த போதும்.. இதே தான் திரும்ப நடக்க,
உன்னைய தாண்டி யாரையும் தொட விட மாட்டிங்கறா பாரு..” என சக்தி சொல்ல ஈடில்லா பெருமிதம் தீனதாயளனுக்கு.
யமுனா அறைக்கு மாற்றப்பட, அவளிடம் பிள்ளையை கொடுத்தவனோடு.. அவர்களுக்கு தனிமை தந்து எல்லாரும் வெளியே நின்றனர்.
பிள்ளையை யமுனா நெஞ்சோடு தாங்கிக்கொள்ள, அவர்கள் இருவரையும் மென்மையாய் தன் அணைப்புக்குள் வைத்துக்கொண்டவனிடம் சற்று நேரம் எந்த அசைவும் இல்லை.
“தயா..” என மெல்ல யமுனா அழைக்க,
“ம்ம்ம்..” என்ற சத்தம் மட்டுமே அவனிடம் பதிலாய்.
மீண்டும் சிறிது நேரம் விட்டவள், “என்னாச்சுப்பா..?” என்றாள் பரிவாய்.
“ரொம்ப கஷ்டப்பட்ட இல்ல.. நா கேட்டேன் நீ கதறுனத..” என்றவனின் கரகரத்த குரலே அவன் அவளின் வலியை உணர்ந்தது புரிய,
“வலிக்காம புள்ள பெக்கற டெக்னாலஜி இன்னும் நம்ம ஊருக்கு வரல கண்ணழகா..” என கிண்டலாக சொல்ல, அவளை விட்டு விலகி செல்லமாய் முறைத்தான்.
“நா எவ்வளவு ஃபீல் பண்ணி பேசிட்டு இருக்கேன்.. நீ என்ன எப்ப பாரு இப்படியே பேசறே..?” என்றான் சிறுபிள்ளை போல.
“என்னா.. தம்பி ஃபீலிங்கு..?” என வடிவேல் மாடுலேஷனின் கேட்டவளை குட்ட ஓங்கிய கையால் அவளின் தலையை பட்டிலும் மென்மையாய் நீவியவன்,
“இப்போ.. இந்த நிமிஷம்.. இந்த உலகத்துல இருக்கறவங்கள்ல யாரு அதிர்ஷ்டசாலின்னு கேட்டா அது நாந்தான்னு பெருமையா சொல்வேன் பாப்பா..” என உணர்ச்சி வசப்பட்டு பேசியவனின் பேச்சை,
இம்முறை தாய்க்கு பதிலாக அழுகையால் முற்றுப்புள்ளி வைத்திருந்தாள் அவர்களின் செல்ல மகள்.