Skip to content
Post Views: 2,201
எப்போதும் போல முகத்தை வைத்துக்கொண்டவன், “நா நல்லா தான் இருக்கேன். போடா.. போய் உன் வேலைய பாரு. இன்னும் கொஞ்ச நேரம் நல்லா தூங்கி எழுந்தா சரியாகிடுவேன்..” என்றுவிட்டு மீண்டும் படுக்க போக,
“சின்ன புள்ளையா ண்ணே.. நீ..? காய்ச்சல் கொதிக்குது. கையே வைக்க முடியல உன்மேல. முதல்ல வா டாக்டர்கிட்ட போயிட்டு வந்திடலாம்..” என்றான் குமரன் அதட்டலாய்.
Advertisement
அவனின் அதட்டலுக்கு மசியாமல், “அதெல்லாம் வேணாம்டா.. ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்..” என தீனா மறுத்துக்கொண்டிருக்க,
“நீங்க நா சொன்னா கேட்க மாட்டீங்க.. இருங்க மணியண்ணனுக்கு போன போடறேன்..” என அவன் போனை எடுத்திருந்தான்.
Advertisement
Advertisement
அதில் கடுப்பான தீனா, “ஏன் டா.. நீயும் என்ன படுத்தறே..?” எனச் சொன்னவன்,
“வந்து தொலையிறேன்.. இரு.. கொஞ்சம் முகம் கழுவிட்டு வர்றேன்..” என சொல்லி மாடிக்கு ஏறப்போனான்.
Advertisement
அதை கண்ட குமரன், “அண்ணே, உன்னோட உடம்பு இருக்கற இருப்புக்கு மாடிக்கு எங்கே போறே..? இங்கேயே முகத்தை கழுவிட்டு கிளம்பு போயிட்டு வந்திடுலாம்..” என்றிட,
“அடேய்.. வாய்ல நல்லா வந்திடும். எழுந்து இன்னும் பாத்ரூம் கூட போலடா மடையா. நா போயிட்டு வர்றேன்..” என்று வார்த்தையை கடித்து துப்பியவன் மெதுவாக படியேற தொடங்கினான்.
குமரன், “அண்ணே.. நானும்..” என கூட வரப்போக,
“இத்தன வருஷமா நீ தான் என்னை பாத்தீயா..? ஓவரா பண்ணாம போய் இன்னைக்கு பேக்கிங் பண்ண என்ன எதுன்னு நேத்து சொன்னத வேலை பாக்கறவங்களுக்கு எடுத்து கொடு. நா போயிட்டு வந்திடுறேன்..” என்று விட்டு மேலேற தொடங்கினான்.
“எதுக்கு இந்த வெட்டி பிடிவாதம்..! கூட ஆள் வந்தா என்னவாம் இவருக்கு..?” என முனங்க மட்டுமே முடிந்தது அவனால்.
அதோடு தீனா சொன்னது போல வேலைக்கு வருபவரையும் பார்க்க வேண்டுமே..!
அதனால் தீனா வருவதற்குள் உள்ளே அவனின் வேலையை முடிக்க சென்றான்.
மெதுவாக படியேறிய தீனாவிற்கு ஸ்டிச்சிங் செக்ஷன் வரும் வரை இருந்த தெம்பு சுத்தமாய் வடிந்து விட அடுத்து ஒரு அடி வைக்கவும் முடியாது என்றானது அவன் உடல்நிலை.
“ஏன்டா.. அவ்வளவு வீக்கா நீ..?” என அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு பிடிவாதமாய் அந்த இடத்தை கடக்க ஆரம்பித்தான்.
மேல் மாடிக்கு இப்போது அவன் ஏறிய அதே இடத்திலிருந்தே போகலாம் என்ற போதும், ஏனோ அவனின் கால்கள் அந்த ஸ்டிச்சிங் யூனிட்டின் உள்ளே தானாக செல்லத்துவங்கியது.
அவனின் கட்டுப்பாட்டில் இல்லாத மனம் எதையோ அங்கு தேடி அவனை அழைத்து செல்ல, ‘அவன் எதிர்பார்த்தது கிட்டாது..’ என்பதை அவன் புத்தி உரைக்க,
தளர்ந்து யமுனாவின் மிஷினை வாஞ்சையோடு தடவியவன் அவள் அமரும் இருக்கையில் அமர்ந்து அதிலேயே தலை சாய்த்துக்கொண்டான்.
அவளின் மடி சேர்ந்த ஆறுதலை அது தந்ததோ என்னவோ.. அவனின் விழிகள் மூடிய போதும் அதையும் மீறி லேசாக கசிய ஆரம்பித்தது கண்ணீர்.
அந்த கண்ணீர் அவனின் கன்னம் தாண்டி இருக்கையை தொடும் நேரம் அவனின் தலையை பரிவோடு யாரோ வருடும் உணர்வு தோன்றியது.
அந்த பரிவும், இதமும் அவனின் இழந்துவிட்ட தாயை நினைவூட்ட அந்த இதத்தை இழக்க விரும்பாது கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக் கொண்டான்.
உடல்நலம் சரியில்லாத நேரத்தில் தாயை தேடும் மனநிலையில் அவன்.
அந்த இதம் தானாகவே வலிய வந்து கிடைக்க அதை ஆழ்ந்து அனுபவித்து கொண்டிருந்தான் சிறிது நேரம் தன்னை மறந்து.
சற்று நேரத்தில் மீண்டும் மீண்டும் உணர்ந்த அதே உணர்வில் தன்னை முழுதாய் மீட்டுக்கொண்டவன் அது கற்பனை அல்ல நிஜமென உணர்ந்து அவசரமாய் நிமிர்ந்தான்.
அங்கு அவனின் கற்பனைக்கு உயிர் கொடுப்பது போல தாயின் மறுஉருவமாய் கண்களில் கனிவோடு சேர்ந்த பரிதவிப்போடு அவனையே பார்த்திருந்தாள் யமுனா.
****
அன்று நள்ளிரவுக்கு மேல் ஏனோ யமுனாவால் நிம்மதியாக உறங்க முடியாது ஏதோ ஒன்று அவளை பாடாய் படுத்த ஆரம்பித்தது.
முயன்று பார்த்தும் முடியாது எழுந்து அமர்ந்தவள் போனில் மணியை பார்க்க அதுவோ விடியலை கொண்டு வர இன்னும் நேரமிருக்கிறது என சொல்லி கொண்டிருந்தது.
அதன் பின் நேரத்தை நெட்டித்தள்ளியவள் ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் எழுந்து அவளுக்கான வேலையை சீக்கிரமே முடிக்கத்தொடங்கினாள்.
மற்ற மூவரும் எழுந்து பார்க்கும் போது யமுனா செய்ய வேண்டிய சமையல் வேலை முழுதாய் முடிந்திருந்தது.
“என்னாச்சு யமுனா.. இந்த நேரத்துக்கே சமையல முடுச்சிட்டே..?” என சாரதா கேட்க,
“நேத்து தச்சதுல ஒரு மிஸ்டேக் பண்ணிட்டேன். அதை பஹதூர் அண்ணாகிட்ட தனியா வச்சு காலைல தாங்க சரி பண்ணி தர்றேன்னு சொல்லிட்டு வந்தேன்.
அதான் நேரமே போனா அதை முடுச்சுட்டு இன்னைக்கான கட்டு எடுக்க சரியா இருக்கும்..” என வாய்க்கு வந்த காரணத்தை எடுத்து விட,
யமுனாவின் மீது எதாவது சந்தேகம் இருந்திருந்தால் தானே ஆட்சேபனை அல்லது கேள்வி வரும். அதனால் அவர்களும் நம்பிக்கொண்டனர்.
அதன் பின் அவசரமாக குளித்து தயாரானவள் கிளம்பும் போது, “உனக்கு தானே வேல. நீ பாத்து போ.. நாங்க வரும் போது கங்காவ கூட்டிட்டு வந்திடுறோம்..” என்றும் சொல்ல,
நிம்மதியாக தலையசைத்துவிட்டு காம்பவுண்ட் கேட் வரை பொறுமையாய் வந்தவள் அதன் பிறகு என்ன வேகத்தில் வந்தாளோ.. அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
அவள் வரும் போது தீனா தடுமாற்றத்தோடு மாடி ஏறுவதை கண்டதுமே புரிந்துவிட்டது.. ‘தனக்கு ஏன் அந்த மனச்சுமை..’ என்பது.
அதிலும் அவனை பின் தொடர்ந்து வந்தவள் அவன் அவளின் மிஷின் ஸ்டூலில் அமர்ந்து அதை தடவிய விதமும் தலை சாய்த்த நொடியும் அவளின் மென்மனதை அசைத்து விட மொத்தமாய் நொறுக்கி விட்டாள்.
“ஏன் தயா இப்படி நீங்களும் தவிச்சு.. என்னையும் தவிக்க விடறீங்க..?” என்ற ஆதங்கம் உண்டாக மெதுவாக அவனை நெருங்கி அவனின் தலையை லேசாக வருடிவிட்டாள் ஆதுரமாய்.
அவனை அவள் ஊன்றி கவனிக்க காரணமே அவன் தாயில்லா பிள்ளை என்ற காரணத்தால் தானே.
அவள் இந்த கம்பெனிக்கு வந்த புதிதில் எப்போதும் வெள்ளியன்று இவள் செல்லும் கோவிலில் முகமெல்லாம் சோர்ந்து நடுத்தர வயதுள்ள பெண்மணி ஒருவருக்கு புடவையை அளித்துக்கொண்டிருப்பதை தானே அவள் முதலில் கண்டதே.
அதன் பிறகே அவன் அவள் வேலை பார்க்கும் இடத்தில் இருப்பது தெரிந்து, அவனை விழியால் தொடர ஆரம்பித்து.. அடுத்த வருடம் அதே நாளில் அவள் கண்டு கொண்டது தானே அது அவன் தாயின் இறந்த நாள் என.
அதுவரை ஆராய்ச்சியாக அவனை கண்டவளுக்குள் அவனின் மீது ‘தாயில்லா பிள்ளை..’ என்ற பாசம் உண்டாகியிருந்தது.
அந்த பாசத்தால் அவனை இன்னும் உன்னிப்பாக பார்க்க போய் கடைசியில், ‘இனி அவனின்றி வாழ்க்கை இல்லை..’ என்ற நிலையில் வந்து நிற்கிறார் அந்த பாவை.
*****
அவளை அந்த நேரத்தில் எதிர்பார்க்காமல் திகைத்தவன்.. அவளின் கண்ணில் வழிந்த காருண்யத்தில் கட்டுண்டு சில நொடி இருந்தவன் கண்கள் பளிச்சென பிரகாசிக்க.. காய்ச்சலின் வீரியத்தால் வறண்டு இருந்த இதழ்கள் கூட லேசான புன்னகையை சிந்த தயாரானது.
‘ஆனால் இந்த பந்தம் நிரந்தரமாகுமா.. என தெரியாத போது என்ன செய்வது..?
அவளின் மனதின் ஆசையை அதிகரித்து நாளை அவளின் எண்ணம் நடக்காது போனால்.. மீண்டும் ஒரு கஸ்தூரியாய் அவள் இருக்க வேண்டாம்..’ என்ற எண்ணம் அவனை இறுக்கமாக்கியது.
புன்னகைக்க முயன்ற இதழ்கள் அதை மறுத்து ஒட்டிக்கொள்ள உடலின் ஒட்டு மொத்த வலுவையும் கூட்டி வேகமாய் அங்கிருந்து மாடிக்கு விரைந்திருந்தான்.
‘எங்கே இன்னும் ஒரு நொடி நின்றால் கூட அவளை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொள்வோமோ..?’ என்ற அச்சம் கொடுத்த வேகம் அதில் கலந்திருப்பதை அவன் உள்மனம் மட்டுமே அறிந்திருந்தது.
அவனின் ஒதுக்கத்தில் அதிர்ந்தவள்,
‘உங்க கண்ணுல நான் பார்த்த காதல் பொய்யில்ல.
நீங்களும் உங்க வாயும் பொய் சொல்லலாம். ஆனா உங்க கண்ணு.. அது பேசற பாசை புரியாதவளா நா..! அது என்கிட்ட உங்க மனச சொல்லிடுச்சே..!
ஏன் அதை நீங்க ஒத்துக்க மாட்டேன்னு இப்படி பிடிவாதம் பிடிக்கறீங்க..?’ என மனதோடு புலம்பிக்கொண்டு அவன் சென்ற வழியை பார்த்திருந்தாள் இயலாமையோடு.
அவனின் இந்த பிடிவாதமும் தளரும் நாளும் வெகு விரைவிலேயே வந்து சேர்ந்தது.
காதல் என்னை பிழிகிறதே
கண்ணீா் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே
error: Content is protected !!