சோலை தலைப்பை ஒரு கையால் பற்றி தூணிலிருந்து சற்று விலகி நின்று, “எப்படீ..? நல்லா இருக்கா..?” என்றாள் விழிகள் மின்ன.
“கலக்கறடீ..” என கிறக்கமாய் சொல்லி அந்த தூணிலேயே சாய்ந்து மயங்குவது போல நடிக்க,
பாவைக்கோ மீண்டும் சென்ற வெக்கம் திரும்ப, இன்னும் மலர்ந்து போன முகத்தோடு யமுனா நின்றாள்.
அவளின் மலர்ந்த முகத்தை புன்னகையோடு பார்த்த படியே, “இந்தா..” என்றான் தன் பாக்கெட்டில் இருந்த சிறிய சாக்லெட் பார் ஒன்றை நீட்டி ஆசையாய்.
அவள் அதை அவன் முகத்தை பார்த்துக்கொண்டே வாங்க, இருவரின் முகத்திலும் அந்த அளவற்ற மகிழ்ச்சி அத்தனை நிறைவை தந்தது அதை தூரமிருந்து கண்ட தங்கமணிக்கும் அருந்ததிக்கும்.
அவனுக்கு பாந்தமாய் அவளின் தோற்றமும், அவளின் முகத்தில் தெரிந்த குழந்தைத்தனமும் இதழில் வழியும் மாசற்ற புன்னகையும் அவர்களுக்கு பெரும் நிறைவை கொடுத்தது.
‘அப்பாடா..’ என்ற ஒரு நிம்மதி அவர்களுக்குள்.
“பரவாயில்லைங்க. பொண்ணு பார்க்க ரொம்ப அழகா இருக்கா. இவன குணமா பார்த்துக்குமா..?” என தயங்கிய அருந்ததியிடம்,
“இப்பவே அந்த பொண்ணு அவர அப்படி தாங்குது. கல்யாணமானா இன்னும் தாங்கோ தாங்குன்னு தாங்கும்..” என இடையிட்டு சொன்னான் குமரன்.
தீனா, யமுனா இருவரின் விழியும் காதல் மொழி பேச விலக இயலா நேசத்தில் கட்டுண்டு நின்றிருந்தவர்களை,
அதில் தெளிந்தவன் இதழில் எழுந்த வெக்க முறுவலுடன் அவர்களுக்கும் என கொண்டு வந்த சாக்லெட்டை கொடுத்து விட்டு கங்காவிடம் நகர,
இதழை சுழித்து காண்பித்து திரும்பி நின்றாள் அவனின் செல்ல மச்சினி.
“என்ன கங்கா.. உனக்கு வேணாமா..? மாமா மேல என்ன கோபம்..?” என்று தீனா சிரிப்போடு வினவ,
“போங்க மாமா.. உங்களுக்கு அக்கா தான் பஸ்ட் கண்ணுக்கு தெரியும்.
அவள விட சின்ன புள்ள நானு. எனக்கு பஸ்ட் கொடுக்காம, என்ன பாக்க வச்சிட்டு அவளுக்கு கொடுக்கறீங்க..?
நானும் நீங்க வாங்கி கொடுத்த சுடிதார போட்டுட்டு வந்திருக்கேன். எப்படி இருக்குன்னு சொல்லவே இல்ல..?” என சிலிப்பிக்கொண்டு நிற்க வாய்விட்டே நகைத்தான் தீனா.
அவனிடம் அவள் கொள்ளும் இந்த உரிமை கோபம் கூட அவனுக்கு சந்தோஷத்தை தான் தந்தது.
“நா கோபப்பட்டா.. சமாதானம் செய்யாம சிரிக்கிறீங்க..?” என அவள் இன்னும் மூக்கை சுழிக்க புன்னகையோடே,
“உனக்கு இது நல்லா இருக்குமுன்னு தானே தேடி எடுத்து கொடுத்தேன். அப்புறம் நல்லா இல்லாம போகுமா..?
அதுமட்டுமில்ல உனக்கு இது தான் பிடிக்குமுன்னு தனியா ஸ்பெஷலா வாங்கிட்டு வந்தேன். வேணாம் ன்னா சொல்லு. உன்னோட அக்காவுக்கே இதையும் கொடுத்திடுறேன்..” என அவன் காட்டியதை கண்டவளுக்கும் இதழில் தானாய் ஒரு புன்னகை.
“வாவ்..!!” என அதை ஆசையாய் வாங்கிக்கொண்டவள்,
“ஏய் யமுனா.. பாத்தியா..! மாமா எனக்கு மட்டும் ஸ்பெஷலா கொண்டு வந்து கொடுத்திருக்காங்க..” என யமுனாவிடம் அவளுக்கு தந்ததை விட பெரிதாக இருந்த பார் சாக்லெட்டை காட்ட,
“யோவ் கண்ணழகா.. என்ன இது.. எனக்கு எங்கே..?” என்பதாய் விழியில் கணை தொடுத்தாள் அவனின் ரதி.
அக்கா தங்கையின் இந்த வித போட்டாபோட்டி என்று அவனின் காதல் வெளி வந்ததோ அன்று முதலே தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது.
நமுட்டு சிரிப்போடு அவளை பார்த்தவன், “ஸ்பெஷலா வேணுமுன்னா.. நீயும் ஸ்பெஷலா எதாவது செய்ய வேணாமா..?” என்றான் அவளை நெருங்கி நின்று அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய்.
அவன் கேட்ட விதம் வில்லங்கமாய் பட, “கண்ணழகா.. நீங்க பேசறது வரவர சரியே இல்ல. எக்குத்தப்பா அன்னைக்கு மாதிரி வந்து கட்டி கிட்டி புடுச்சீங்க அம்புட்டு தான்..” என விழியை உருட்டி மிரட்ட,
“ஓ.. என்ன பண்ணுவியாம்..?” என்றான் அவனும் அவளை நெருங்கி வந்தவாரே உல்லாசமாய்.
அவசரமாய் சுத்தி பார்க்க சாரதாவும் வசந்தியும் பேச்சு கொடுத்துக்கொண்டே கங்காவை தள்ளிக்கொண்டு உணவு உண்ணும் தளத்திற்கு செல்வது தெரிந்தது.
அந்த தளத்திலும் இவர்கள் நிற்பது யாருக்கும் தெரியாது.. என்ற நிலையை கண்டவள்,
‘அய்யோ.. என்ன இப்படி தனியா விட்டுட்டு போயிட்டாங்க..!’ என அதிர்ந்து முன்னால் திரும்ப,
மிக நெருக்கமாய் தீனா..
“அய்யோ.. ஆத்தீ..!!” என பதறி வேகமாய் பின்னால் போனவளை கண்டு வாய் விட்டு சிரித்தவன்,
“வாய் பேச்சு மட்டும் தான் டீ உன்கிட்ட. இந்த பதறு பதற்றே கிட்ட வர முன்னாடியே. இதுல நா பாப்பான்னு சொன்னா மட்டும் ரோஷம் வருதோ..?” என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி நக்கலாய்.
“யாரு.. யாருக்கு பயம்..? அதெல்லாம் நா 2 கே கிட்டாக்கும்.. பயமே எங்கள கண்டா பயப்படுமாக்கும்..” என்றாள் தடுமாறினாலும் தன் கெத்தை விடாது.
“ஓ.. அப்படி. அப்ப சரி..” என்றவன் இன்னும் அவளை வேகமாய் நெருங்க,
“அடி ஆத்தி.. இன்னைக்கு நீங்க ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க.. நா வர்றேன்..” என்றவள் அவசரமாய் இங்கிருந்து ஓடப்போக,
அவளின் கை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், “நீ தான் தைரியமான ஆளாச்சே..! பயமே பயப்படற அளவுக்கு. அப்புறம் ஏன் இந்த ஓட்டம்..? ஹூம்..” என்றிட,
“அதெப்படி விட.. நீ தான்.. ஸ்பெஷலா வேணுமுன்னு கேட்டையே.. தராம போனா.. சாமி குத்தம் ஆகிடாது..?” என்றவனின் கடைசி வார்த்தையை பிடித்துக்கொண்டவள்,
“அதான்.. அதே தான்.. இப்ப சாமி கும்பிட்டோமா.. அங்கே இதெல்லாம் தப்பு..” என்றாள் படபடக்கும் இமைகளை கொட்டி விழித்து,
“அதனால தானே.. அதை விட்டு தள்ளி வந்துட்டோம்..” என்றவனின் வார்த்தை கேட்டு,
அவசரமாய் தாங்கள் இருக்கும் இடத்தை அவதானிக்க அதிர்ந்தே போனாள் மொத்தமாய்.
பேச்சோடு பேச்சாய்.. அவளை நகர்த்திக்கொண்டு மாடிப்படி வளைவுக்கு அல்லவா கூட்டி வந்திருந்தான்.
“அடப்பாவி.. இது எப்படி நடந்துச்சு..?” என்ற பார்வை தான் பாவையிடம்.
அதில் எழுந்த சிரிப்பை கீழ் உதட்டை கடித்து அடக்கியவன், “என்ன.. ஸ்பெஷலா செய்வோமா..?” என்றான் புருவத்தை உயர்த்தி உல்லாசமாய்.
அவனின் சிரிப்பும் பேச்சும் ஒரு வித கிறக்கத்தையும் கூடவே கிலியையும் உண்டாக்க, தன்னை நெருங்கியவனின் நெஞ்சில் கரம் கொண்டு தடுக்க முயன்று கொண்டே பின்னால் நகர்ந்து சுவரில் இடித்து நின்றவள்,
“யோவ்.. வேணாய்யா.. தெரியாம கேட்டுட்டேன். இனி உங்ககிட்ட ஒண்ணுமே கேட்க மாட்டேன்..
ப்ளீஸ்.. நா பாப்பா தானே..? பாவம் தானே..?” என அவள் பேசப்பேச இன்னும் அவளை நெருங்கிக்கொண்டே வந்தவனை..
‘எப்படி தடுக்க..?’ எனத்தெரியாது விழிகளை அந்தப்பக்கம், இந்தப்பக்கம்.. என திரும்பி பார்த்தவள், இறுதியாக கண்களை இறுக மூடிக்கொண்டாள் நடப்பது நடக்கட்டும் என்பது போல.
இதழ்களை பற்களால் இறுக கடித்து சிரிப்பை அடக்க முயன்று அவளின் செய்கையை ஆசையாய் ரசித்திருந்தான் அந்த கள்வன்.
அவனின் நெஞ்சில் பதிந்திருந்த கரம் நடுக்கத்திலும், வியர்வையிலும் அவனை விட்டு விலகியதும் அவளின் மூடிய விழிகளை கண்டபடி லேசாக அவளை விட்டு விலகி கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவளையே அவன் பார்த்திருக்க,
சிறிது நேரத்தில் ஒற்றை கண்ணை மட்டும் லேசாக திறந்து, “என்ன ஒண்ணும் நடக்கல..?” என்பதாய் பார்த்தவள்,
அவன் நின்ற நிலை கண்டு பட்டென இரு விழியையும் நன்றாக திறந்து பார்த்தாள் அதிர்ந்து.
அவனின் நமுட்டு சிரிப்பில் தான் ‘அவன் தன்னிடம் விளையாட்டாய் எல்லாம் செய்திருக்கிறான்..’ என்பது புரிய கோபம் கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றாள்.
“ஏன்டீ.. குள்ளச்சி.. ஆசையிருந்தா என்ன மாதிரி நேரா சொல்லனும். அதவிட்டு நாணி கோணி எங்கள மயக்கி நீங்க வாங்கிட்டு, நீங்க தான் மோசமுன்னு எங்களையே குத்தம் சொல்றது..” என்று அவன் சீண்டலாய் சொல்ல,
“அய்யோ.. உங்கள..” என அவனை நெருங்கி அவன் மார்பில் தனது கரம் கொண்டு அடித்தவளின் கரத்தை பற்றிக்கொண்டவன்,
சிரிப்போடே, “அடியேய்.. என்னை அடுச்சா அடிக்கற உன் கை தான் வலிக்கும்டீ.. என் ஆச குள்ளச்சீ..” என பற்றிய கரத்தை அவனை நோக்கி இழுக்க,
தன்னருகே வந்தவளை அணைத்தவன் அணைத்த வேகத்தில் விடுவித்து,
“அச்சோ.. ஏற்கனவே முடியலன்னு தான் சட்டுன்னு விலகி நிற்கறேன்.
இதுல சும்மா சும்மா உதட்ட சுழுச்சு காட்டிக்கிட்டு நின்னேன்னு வச்சுக்கே அப்படியே அதை கடுச்சு வச்சிருவேன்.. பாத்துக்கோ..” என்று கடிப்பது போல பாவனை காட்டி நெருங்கியவனை தன் ஒரு கரத்தை அவன் நெஞ்சில் வைத்து தடுத்தவள்,
அவளின் முதுகுக்கு பின் சிரிப்போடு, “பாத்துடீ..” என்றவனின் அக்கறை குரலுக்கு வேகமாய் தலையை மட்டும் அசைத்தவள் கங்கா இருக்கும் இடத்துக்கு சென்று சேர்ந்தாள் அவசரமாக.
அவளின் செய்கையில் மலர்ந்த முகத்தோடு கூடவே தனது பேச்சுக்களை எண்ணி வெக்கமும் சூழ தனது பிடறியை கரம் கொண்டு கோதியபடி திரும்பியவன் கண்டது ஒற்றை புருவத்தை உயர்த்தி முறைத்து கொண்டு நின்ற தங்கமணியையும் அருந்ததியையும் தான்.
அவர்களின் பார்வையிலேயே அவர்கள் அங்கு நடந்ததை கண்டுவிட்டது புரிய, அதில் உண்டான கூச்சத்தோடு, “ண்ணே..!!!” என்றான் குரல் திக்க.
“என்னடா நடக்குது..?” என்றார் லேசாக உடலை சாய்த்து படியை எட்டி பார்த்து.
“அது.. அதாண்ணே.. அது வந்து ண்ணே..” என திக்கியவன்,
தன்னை திடமாக்கிக்கொண்டு, “யமுனா. நான் கட்டிக்கப்போற பொண்ணு ண்ணே..” என்றவனின் விரல் நீண்டு யமுனாவை சுட்டி காட்டியிருந்தது.
அவனை அப்படியே இறுக அணைத்தவர்,
“ரொம்ப சந்தோஷமா இருக்குடா.. இதுக்கு தான் நானும் ஆசைப்பட்டேன். இப்போ தான் நிம்மதியா இருக்கு..” என்றவரின் வார்த்தையில் அவருக்கு தன் மீதான பாசம் புரிய,
‘இப்படிப்பட்ட உறவு கிடைக்க என்ன புண்ணியம் செய்தேனோ..?’ என்ற எண்ணத்தோடு அவனும் அவரை அணைத்துக்கொண்டான் நிறைவாய்.
“நீங்க ரெண்டு பேரும் அப்புறமா கொஞ்சிக்கோங்க. எப்போ கல்யாணத்த பத்தி வீட்டுல பேசப்போறே..? நாங்க வந்து பேசவா..?” என அருந்ததி அக்கறையாக கேட்க,
“இந்த தீபாவளிக்கு நா ஊருக்கு போலாமுன்னு முடிவு பண்ணிட்டேனுங்க அண்ணி..” என்றவனின் பேச்சிலேயே புரிந்து கொண்டவர்,
“அப்படி போடு.. அப்ப கூடிய சீக்கிரம் கெட்டி மேளம் தான்..” என்றார் ஆரவாரமாக.
கண்கள் இருப்பது உன்னை ரசித்திட என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அணைத்திட அள்ளிக் கொள்ள துணிந்தேன்
எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன் துணை சோ்ந்து போக தேதி பாா்க்கிறேன்
நெற்றியில் குங்குமம் சூட… இளம் நெஞ்சினில் இன்பமும் கூட… மெதுவா… வரவா… தரவா…