Skip to content
Post Views: 1,897
நதி 9
டி எம் டெக்ஸ்.. வண்ண வண்ணப் பூக்களாலும், காகிதங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டிருக்க..
பெண்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து அவர்களின் கை வண்ணத்தை வாசலில் காட்டியதில் அழகாய் மிளிர்ந்தது அந்த ரங்கோலி கோலம்.
Advertisement
அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாய் விதவிதமாக வித்தியாசமான உடைகளோடு இளம் பெண்கள் கலகலத்துக்கொண்டிருக்க,
Advertisement
இளைஞர்கள் அவர்களால் முடிந்த வேலைகளை செய்வதிலும் பெண்களை கடைக்கண்ணால் நோட்டம் விடுவதிலும் குறியாய் இருந்தனர்.
Advertisement
குடும்பத்தோடு இருந்து கொண்டு வேலைக்கு வரும் பெண்களோ, “எப்போ பூஜை முடுஞ்சு.. வீட்டுக்கு போய் மத்த வேலைய பார்க்கறது..?” என முணுமுணுத்து கொண்டிருந்தனர்.
Advertisement
ஆயுத பூஜை. திருப்பூரில் மிகவும் விமர்சையாக கொண்டாடக்கூடிய விழாக்களில் மிகவும் முக்கியமானது.
தங்களுக்கு வாழ்வளிக்கும் தெய்வமான தொழில் நிலையங்களில் எல்லாரும் ஒன்று கூடி மிகவும் உற்சாகமாகவும்.. கோலாகலமாகவும் கொண்டாடும் அற்புத விழா.
தீபாவளி பண்டிகைக்கு வேலை பார்ப்பவர்கள் பெரும்பான்மையானோர் அவர்களின் சொந்த ஊருக்கு சென்று விடுவார்கள் என்பதால், அதற்கு முன் வரும் இந்த திருவிழா அவர்களுக்கு ஒரு மினி தீபாவளி தான்.
குடும்பத்தலைவியாய் இருந்து வேலைக்கு வருபவர்களை விட இளைஞர் இளைஞியர் பட்டாளத்திற்கு அன்று அளவில்லா மகிழ்ச்சியை கொடுக்கும் நாள்.
விதவிதமான ஆடைகளும், ஆபர்ணங்களும் அணிந்து கொண்டு வந்து இளைஞர்களை ஏக்கப்பெருமூச்சு விட வைப்பதில் அவர்களுக்கு ஒரு குஷி.
இளைஞர்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை.. என்று காட்டும் வண்ணம் ஆண்மையை பறைசாற்றும் விதமான ஆடை அணிந்து கெத்தாக வலம் வருவர்.
அப்படிப்பட்ட விழா நாளுக்காக டி எம் டெக்ஸூம் தயாராய் இருந்தது.
“எங்கே.. இந்த பாப்பா இன்னும் ஆளக்காணோம்..? ஆசையா எடுத்து கொடுத்த சேரில எப்படி இருப்பான்னு பார்க்க ஒருத்தன் காத்திருப்பானேன்னு கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா அவளுக்கு..?” என தனது மீசையை விரலால் தடவியபடி புலம்பிக்கொண்டிருந்தான் தீனா.
அவனின் ஓயாத புலம்பலை கேட்டு நமுட்டு சிரிப்பை உதிர்த்த குமரனை, “என்னடா இளிப்பு..?” என்று முறைக்க,
“இல்ல ண்ணே.. இந்த கம்பெனிக்கே நேந்து விட்டது கணக்கா ஒரு ஆள் சுத்திட்டு இருந்தாரே.. அவர காணோமேன்னு தான்..” என்றான் கிண்டலாய்.
“ஓவர் கொழுப்பாகிடுச்சுடா குமரா உனக்கு..” என்ற போதும் வெக்கச்சிரிப்பு அழகாய் அவன் இதழில்.
“இப்ப பாக்க மூஞ்சி எம்புட்டு பிரைட்டா இருக்கு..” என்றான் ராகமாய்.
“அடிங்க.. வரவர அந்த வாலு கூட சேர்ந்து நீயும் கெட்டு போயிட்டே..” என்றான் பொய்யாய் முறைத்து.
யமுனாவிடம் காதலை தீனா உரைத்த மறுநாள் யமுனா மூலமாக விசயத்தை அறிந்தது முதல் இப்படி தான் தீனாவை அவ்வப்போது சீண்டிக்கொண்டிருக்கிறான் குமரன்.
தங்கமணிக்கு சொல்ல நினைத்த குமரனை, “நானே சொன்னா தான்டா நல்லா இருக்கும்.. அதான் அவருக்கான மரியாதையும் கூட..” என்றுவிட,
தீனாவின் வார்த்தையில் இருந்த உண்மை புரிந்ததால் குமரனும் அவரிடம் இன்னும் விசயத்தை கொண்டு செல்லாமல் இருக்கிறான்.
“தீனா.. டிபன் சுண்டல் பொங்கலெல்லாம் வந்தாச்சா..?” என அலுவலக அறையில் அமர்ந்திருந்த தங்கமணி வாசலையே பார்த்து நின்றிருந்த தீனாவிடம் கேட்க தங்கமணி இருக்குமிடம் விரைந்தவன்,
“அண்ணே.. ஆர்டர் பண்ண எல்லா ஐட்டமும் நேரமே வந்தாச்சு. பசங்க ஒரு க்ரூப் பொறி கட்டிட்டு இருக்காங்க. கொஞ்ச பேர் போட்டோக்கு டெக்ரேஷன் பண்ணி மத்தது எல்லாம் பாத்து எடுத்து வச்சுட்டு இருக்காங்க.
குறிச்சு கொடுத்த நல்ல நேரத்துக்கு இன்னும் அரைமணி நேரம் இருக்கு. வீட்டுல இருந்து அண்ணி வந்ததும் பூஜைய ஸ்டார்ட் பண்ணிடலாம்..” என்றவனின் துள்ளல் குரலில்
அவனையே பார்த்திருந்தார் தங்கமணி.
பேசி முடித்த பிறகே அவரின் பார்வையை கண்டவன் அகன்ற புன்னகையோடு, “என்ன அண்ணே..! எதுக்கு இப்படி பார்க்கறீங்க.. என்னை..?” என்றான்.
“இந்த வேட்டி சட்டையில பார்க்க ரொம்ப அழகா இருக்கடா..” என்றார் அவரும் புன்னகைத்து.
அதில் லேசாக சிவந்த தன் முகத்தை அவருக்கு காட்டாமல் எதேச்சையாக திரும்புவது போல மறுபுறம் திரும்பியவன்,
“அப்போ.. இத்தன நாள் போட்ட டிரஸ்ல அசிங்கமாவா இருந்தேன்..?” என்றான் தனது வெக்கம் தெரிந்து விடாது காத்து.
“இத்தன நாளை விட என்னமோ இப்போ.. இன்னும் ரொம்ப அழகா இருக்கே..!
இத்தன வருஷம் இல்லாம இன்னைக்கு என்ன புதுசா வேட்டி சட்டையெல்லாம்..?
நானே போடச்சொல்லி எடுத்து கொடுத்தப்ப கூட போடலையே நீ..! என்னடா விசயம்..?” என்றார் அவரும் விடாமல்.
“உங்களுக்கு தான் என்னமோ ஆகிடுச்சு. அண்ணிய வரச்சொல்லி, அவங்கள சைட் அடிக்காம என்னை சைட் அடுச்சிட்டு விசாரணை கமிஷன் நடத்திட்டு இருக்கீங்க..” எனக் கிண்டலாக சொல்ல,
“இதான்.. இதே தான். இப்படி பேசறவனாடா நீ..?” என்றார் கண்டு கொண்ட பாவனையில்.
“எதோ.. எதார்த்தமா வாயில வந்துச்சு.. அதுக்குப்போய் ஆராய்ச்சி பண்ணுவீங்களா..?” என அவன் தடுமாறினாலும் சமாளிக்க முயல,
“தீனா.. உன்ன எனக்கு பத்து வருஷமா தெரியுமுன்னு ஒவ்வொரு தடவையும் சொல்லனுமா..?
உன் முகமே ஏதோ விசயமிருக்குன்னு காட்டிக்கொடுக்குதே..! என்கிட்டையே மறைக்கற இல்ல நீ..?” என்றிட,
அவர் அமர்ந்திருந்த சேரின் முன் சென்று மண்டியிட்டு அவரின் கையை பற்றிக்கொண்டு,
“அண்ணே.. என்ன அண்ணே இது. விசயத்தை உங்ககிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்ல போறேன்..?” என்றதும்,
“அப்போ விசயம் இருக்கு தானே..? சொல்லு..” என்றார் அவரும் விடாமல்,
“விசயத்தை சொல்றேன். ஆனா இப்ப இல்ல. பூஜை முடுஞ்சு நேர்லயே காட்றேன்..” என புன்னகையோடு அவன் சொல்ல,
அவனின் முகத்தின் தெரிந்த பூரிப்பும், அவனின் விழியில் இதுவரை காணாத ஒளியும்.. அதோடு அவனின் வார்த்தையும் அவருக்கு விசயத்தை புரிய வைக்க,
“யாருடா.. அந்த பொண்ணு..?” என்றார் உற்சாகமாய்.
அதில் அவனின் முகம் வெக்க சாயத்தை அளவில்லாமல் பூசிக்கொள்ள கண்டவரின் நிலை தான் ஆரவாரமாக இருந்தது.
“டேய்..! நிஜமாவாடா..? எங்கடா இருக்கா..? இங்கேயா..? காட்டுடா..” என்றார் சிறு குழந்தை போல ஆர்ப்பரித்து.
“காட்டுறேன். முதல்ல பூஜைய முடிங்க. அப்புறம் அவள பார்க்கலாம்..” என்ற தீனாவை முறைத்தவர்,
“அதெல்லாம் முடியாது. முதல்ல கூட்டிட்டு வந்து என் முன்னாடி நிறுத்து. அப்புறம் பூஜைய பாக்கலாம்..” என்றார் பிடிவாதமாய்.
“சுத்தம். அவளை பார்க்க முடியலன்னு தான் நானே சுத்திட்டு இருக்கேன். இதுல இவரு வேற..” என அவருக்கு கேட்காதபடி முணுமுணுத்தவன்,
“அவ எங்கேயும் போக மாட்டா.. முதல்ல எழுந்து வாங்க. பூஜைய முடுச்சிட்டு அவள பார்க்கலாம்..” என வம்படியாக அவரை இழுத்துக் கொண்டு பூஜை நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் தீனா.
தங்கமணிக்கு ஆர்வமும், ஆசையும் இருந்த போதும் தீனா சொல்வது போல இன்று எதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.. என்பது அவருக்கும் தெரியுமே.
அதனால் அமைதியாய் அவனின் இழுப்புக்கு இசைந்து வந்திருந்தார் அவரும்.
அந்த கட்டிடம் மொத்தமாக சுத்தம் செய்யப்பட்டு அவரவர் வேலை பார்க்கும் பொருளை(மிஷின், கட்டிங் டேபிள், பேக்கிங் டேபிள்) துடைத்து ஓரமாய் நகர்த்தி வைக்கப்பட்டு பொட்டிட்டு, பூக்களால் அலங்கரித்து பூஜைக்காக தயார் நிலையில் வைத்திருக்க,
நடுநாயகமாக வைக்கப்பட்டிருந்த சாமி போட்டோக்களும் வண்ண தோரணங்களாலும்.. தெய்வீக பொருட்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு, படையலாக மூன்று வித சுண்டல், பொங்கல் பொறி கடலை மிட்டாய், பழவகைகள்.. என வைக்கப்பட்டிருந்தது.
தங்கமணி அழைத்து வந்து பூஜை நடக்குமிடம் விட்டவன், “அண்ணே.. எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. நா அண்ணி வர்றாங்களா ன்னு பார்க்கறேன்..” என்றவன் அவரை அழைத்து வரும் சாக்கில் மீண்டும் தன் பாப்பா வந்தால் பார்க்கும் ஆர்வத்தோடு வாசலுக்கு விரைந்தான்.
அவனின் எண்ணத்தின் நாயகியோ அவனாடிய கண்ணாமூச்சி ஆட்டத்தை அவனுக்கே ஆடிக்காட்டும் முடிவோடு இருப்பதை அவனெங்கே அறிந்தான்..!!
அவன் வாசலையே பார்த்திருந்த போதும் அவனின் கண்கள் அவள் ஒருத்தியை மட்டுமே தேடிக்கொண்டிருக்க அங்கு வந்த தங்கமணியின் மனைவியை கவனிக்கவே இல்லை.
error: Content is protected !!