Skip to content
Post Views: 3,314
அபர்ணா ராஜலட்சுமியிடம் பேசுவதற்காக தோட்டத்துப் பக்கம் சென்றாள்.
‘என்ன பேசுவது? எப்படி சொல்வது?’ ஒரே தயக்கம்.
சரண்யாவின் திருமணம் என்று வந்துவிட்டு, இப்போது தனக்குத் திருமணம் என்றால் நிச்சயம் மகிழத்தான் செய்வர்.
‘ஆனால் இத்தனை நாட்களும் திருமணமே வேண்டாம் என்று மறுத்துவிட்டு, இப்போது சொல்லும் போது அவர்கள் அதை நம்புவார்களா?’
Advertisement
‘அதுவும் அருண் பிரசாத் நிச்சயம் சந்தேகம் கொள்வான்.’
‘வேறு வழியில்லை. பேசித்தான் ஆகவேண்டும். அவர்கள் அறியாமல் என்னுடைய வாழ்க்கையில் எந்த முக்கியமான முடிவையும் எடுக்க மாட்டேன்.’
ராஜலட்சுமிக்கு அழைத்தாள்.
Advertisement
“அம்மு. எப்படிடா இருக்கே?” என்றார் நெகிழ்வாய்.
Advertisement
“நல்லாருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க? சார் ரெண்டு பேரும் எப்படியிருக்காங்க? நவீன் எப்படியிருக்கான்?”
“கொஞ்சம் மூச்சுவிட்டுப் பேசுடா. எல்லாரும் நல்லாருக்காங்க.” என்றார் சிரித்தவாறே.
“அ.ம்..மா…” என்றாள் தயங்கியவாறே.
Advertisement
“என் அம்மு எதற்கும் இப்படி தயங்கறவ கிடையாதே. பட்டுன்னு போட்டு உடைச்சிடுவாளே.”
அவள் கையில் உள்ள அலைபேசி பறிக்கப்பட்டது.
கோபத்துடன் திரும்பினாள். அங்கே சித்தரஞ்சன் நின்றிருந்தான்.
அவனை முறைத்துக்கொண்டு அலைபேசியை கைப்பற்ற முயன்றாள்.
“வணக்கம்மா. நான் சித்தரஞ்சன். எங்களைப் பத்திப் பேசத்தான் உங்க பொண்ணு உங்களைக் கூப்பிட்டா. அது என்னவோ வெட்கம் வந்துடுச்சு போல. அதான் இழுத்துக்கிட்டு நிக்கிறா.”
“என்னப்பா சொல்றே?” பரபரப்பானார் ராஜலட்சுமி.
“நீங்க நினைக்கிறது சரிதான்மா. கல்யாணத்தைப் பத்தி கல்யாணப் பொண்ணே எப்படிப் பேசுவா? மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் வீட்டிற்குப் பேசுவதுதான் முறை.”
“ரொம்ப சந்தோசம்பா.”
“மத்தது அப்பா பேசுவாங்கம்மா. நீங்க உங்க பொண்ணுக்கிட்ட பேசுங்க.”
அவள் கையில் அலைபேசியைத் திணித்துவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.
“அம்மு. கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்குடா. அதனால்தான் அங்கேயே ரொம்ப நாளா தங்கிட்டியாடா? உன் காதல் உன்னை அங்கேயே பிடிச்சு வச்சுடுச்சா?”
“ம்…” வெறுமனே ம் கொட்டினாள்.
“என்னடா எதுவுமே பேசலை. நான் ஒருத்தி. வெட்கப்படற புள்ளைக்கிட்ட நோண்டி நோண்டி கேட்கறேன். சரி போனை வச்சிடறேன்டா. வீட்டில் எல்லாருக்கும் சொல்லனும். கல்யாண வேலை நிறைய இருக்கு.” பரபரப்புடன் அழைப்பைத் துண்டித்தார்.
அங்கேயே நின்றாள்.
‘இவனை யாரு என் போனைப் பிடுங்கச் சொன்னது?’
“என்ன பேசி முடிச்சிட்டியா இல்லையா? மசமசன்னு நிக்காம வா. வேலை நிறைய இருக்கு.”
சித்தரஞ்சன் தான் நின்றிருந்தான். அவனை முறைத்தாள்.
“என்னை முறைக்கிறது இருக்கட்டும்மா. சூடா அத்தானுக்கு ஒரு டீ போடு.”
“என்னது?”
“அத்தான்மா அத்தான். என் அப்பா சரண்யாக்கிட்ட சொன்னது காதில் விழுந்தது தானே? அவள் உன் தங்கை. அவளுக்கு அத்தான்னா உனக்கும் அத்தான்தான்.”
“அத்தானாம் அத்தான். சட்டை பொத்தான்.”
“ஹே ரைமிங்கா இருக்கு. இனி பொழுது போறது ஜாலியா இருக்கும் போலவே?”
பாலைக் காய்ச்சத் தொடங்கினாள்.
“ம். அப்படி இருக்கனும். டேய் ரஞ்சா. இனி உனக்கு மச்சம்தான்டா. இரண்டு ஆளுக்குக் கொடுத்த சம்பளம் இனி மிச்சம்டா.” என்றாவறே அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்.
அவள் எதுவும் கேட்கவில்லை.
“உன் வருங்காலக் கணவன் பணத்தை மிச்சம் பண்றான்னா சந்தோசப்பட்டு என்னன்னு கேட்க வேண்டாமா? மனோவைப் பார்த்துக்க சரண்யா வந்துட்டா. அதனால் இனி நர்சம்மாவுக்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை. இந்த வீட்டு மருமகளாகிட்டா உனக்கும் சமையல்காரிக்கான சம்பளம் கொடுக்கத் தேவையில்லை.”
அவள் பல்லைக்கடித்தாள்.
தேநீரில் உப்பைக் கலந்து கொடுத்தாள்.
“அப்பா. வாங்கப்பா. உங்க மருமகள் உங்களுக்காக டீ போட்டுத் தருகிறாள். நீங்க தட்டாமல் குடிக்கனும்.” என்கவும் தேவேந்திரன் வந்ததை அப்போதுதான் கவனித்தாள் அபர்ணா.
அவரும் அதை வாங்க கை நீட்டி விட்டார்.
“ஐயோ. மாமா. நீங்க டீ குடிக்க மாட்டீங்களே.” என்று எதார்த்தமாக மாமா என்றே அழைத்துவிட்டாள்.
“அம்மாடி. நீ என்னை மாமான்னு கூப்பிட்டுக் கொடுத்தால் நான் விசத்தைக் கூட குடிப்பேன்மா.” என்றார் நெகிழ்வுடன்.
“அப்படி எல்லாம் சொல்லாதீங்க மாமா. நான் உங்களுக்கு சத்து மாவுக் கஞ்சியே கொண்டு வந்து தர்றேன். இது உங்க மகன் ஆசையாக் கேட்டதுன்னு போட்டது.” என்றாள் முகம் சிவக்க.
“அப்படிங்கறே. சரிம்மா.” என்றவர் திரும்ப,
“ஐயோ. அப்பா. என்னைக் காப்பாத்துங்க.” என்று அவன் அலறினான்.
மீண்டும் அவர்களைப் பார்த்தார். பார்த்த உடன் பக்கென்று சிரித்துவிட்டார்.
“பார்த்தீங்களாப்பா. கல்யாணம்னு சொன்ன உடனே உங்க மருமகள் அதுக்கு எப்படி தயாராயிட்டா? மீ பாவம்பா.” என்று முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டான்.
அபர்ணா அவனை அடிப்பதற்காக கரண்டியை தூக்கிக் கொண்டிருந்தாள்.
“ம். நல்ல பிள்ளைங்க போங்க. எல்லாமே விளையாட்டுத்தான்.” என்றவர் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்.
அவன் முகத்தில் சிரிப்பு மறைந்தது.
“உப்பு போட்ட டீயை நீயே குடி.” அவள் கையில் திணித்தான்.
“எல்லாம் அப்பாவுக்காகத்தான். நான் உன்னைக் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கறேன்னு அப்பாவை நம்ப வைக்க வேண்டியிருக்கே.” என்றவன் ஒரு தோள் குலுக்கலுடன் அங்கிருந்து சென்றான்.
அவள் அப்படியே திகைத்து நின்றாள்.
தேவேந்திரன் மருத்துவர் ஜெயச்சந்திரன் வீட்டிற்கு வந்தார்.
“வாப்பா. எப்படியிருக்கே? மனோ எப்படியிருக்கான்? என்ன முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல ஜொலிக்குது.”
“ஜொலிக்காதா பின்னே. கூடிய சீக்கிரமே நான் தாத்தா ஆகப்போறேன்ல.” என்றார் மர்மப் புன்னகையுடன்.
“என்னது? நான் உன் பசங்களை ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சுக்கிட்டிருந்தேனேப்பா.” நண்பனுக்கு சளைக்காமல் பதில் கொடுத்தார் ஜெயச்சந்திரன்.
“வாங்கண்ணா.” என்றார் அவருடைய மனைவி.
“நல்லாருக்கியாம்மா?”
“நல்லாருக்கேண்ணா. நீங்க பேசிக்கிட்டிருங்க. நான் இப்ப வந்துடறேன்.”
“ஸ்வீட் எடுத்துட்டு வாம்மா. நல்ல விசயம் சொல்ல வந்துருக்கேன்.” என்றார்.
அவரும் உடனே இனிப்புடன் வந்துவிட்டார்.
இனிப்பை வாயில் போட்டுக்கொண்டே “இப்பவாவது சொல்லறியாப்பா? என்ன விசயம்?”
“என் இரண்டு பசங்களுக்கும் கல்யாணம் கூடி வந்துருக்குப்பா.”
ஜெயச்சந்திரன் இதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்து போனார்.
நண்பனுடைய கவலையே இரண்டு மகன்களையும் நினைத்துத்தானே?
அதன் பிறகு தேவேந்திரன் சித்தரஞ்சன் தன்னிடம் கூறியதை எல்லாம் கூறினார்.
“எப்படியோ சந்திரா இப்ப எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடுச்சு.” என்றார் மகிழ்வுடன்.
“இவ்வளவு நடந்திருக்கா தேவா?” என்று அவரும் ஆச்சர்யப்பட்டார்.
அபர்ணாவைத்தான் சித்தரஞ்சன் திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்றதும் அவர் யோசனையானார்.
“கொஞ்சம் பொறு தேவா. நான் கிருஷ்ணாக்கிட்ட பேசிட்டு வர்றேன்.”
அவர் கிருஷ்ணனிடம் பேசினார். அவனும் அபர்ணாவைப் பற்றிக் கூறினான்.
“உங்களுக்கு அவள் மீது சந்தேகம் வேண்டாம்பா. ரொம்ப நல்ல பொண்ணு. நீங்க வேணும்னா டாக்டர் ராம் பிரசாத்கிட்ட பேசுங்க.”
என்றவன் உடனே ராம் பிரசாத்திற்கு அழைத்துவிட்டான்.
“இதோ எங்கப்பா இருக்காங்க அங்கிள். பேசுங்க.” என்று அவரிடம் கொடுத்தான்.
“ஹலோ டாக்டர். நான் ராம் பிரசாத் பேசறேன். வீட்டில் என்னோட மனைவியும் பேசினாங்க. அபர்ணா எங்க வீட்டுப் பொண்ணு.” என்றார்.
“சரிங்க டாக்டர். இதோ மாப்பிள்ளையோட அப்பா, என்னோட நண்பர் தேவேந்திரன் இருக்காரு. அவரும் உங்ககிட்ட முறைப்படி பேசனும்னு சொன்னார்.”
“கொடுங்க. பேசிடுவோம்.”
“இந்தாப்பா தேவா. டாக்டர் ராம் பிரசாத் லைன்ல இருக்கார்.”
“ஹலோ டாக்டர் சார்.”
“நீங்க என்னை சம்பந்தின்னே கூப்பிடுங்க சம்பந்தி. அபர்ணா எங்களோட பொண்ணு. என்ன ஒன்னு. என் மனைவி அவளை வயித்தில் சுமக்கலை. அவ்வளவுதான். மத்தபடி அபர்ணா எங்க பொண்ணுதான். நீங்க கல்யாண தேதியை முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க. நாங்க உடனே கிளம்பி வர்றோம்.”
“ரொம்ப சந்தோசம் சம்பந்தி. உடனே தேதி குறிச்சிட்டு சொல்றோம்.”
தேவேந்திரன் விடைபெற்றுச் சென்ற உடன், “எல்லாம் சின்னப்பிள்ளைங்க மாதிரி நடந்திருக்கீங்க. படிச்ச புள்ளைங்க செய்யற வேலையா அது?” என்று மகனைத் திட்டித் தீர்த்துவிட்டார் ஜெயச்சந்திரன்.
அபர்ணாவிற்கு அடுத்தடுத்து அலைபேசி அழைப்பு வந்தது.
முதலில் அருண் பிரசாத் தான் அழைத்திருந்தான்.
“அப்பு. அம்மா சொன்னாங்க. வாழ்த்துகள் அப்பு. மத்தது எல்லாம் நேரில் வரும்போது பேசிக்கலாம். இதோ நவீன்கிட்ட கொடுக்கிறேன்.” என்று நவீன் பிரசாத்திடம் கொடுத்துவிட்டான்.
“ஹே அப்பு. எங்ககிட்ட எல்லாம் மறைச்சிட்டே இல்லை.”
“அப்படியெல்லாம் இல்ல நவீன்.”
“நடத்து நடத்து.”
“சரி மகா எங்கே?”
“மக்கு அவங்க ஊருக்குப் போயிருக்கு.”
“வருங்கால அண்ணியை மக்குன்னு சொல்றே. உனக்குப் போஜனம் கிடைக்காது.”
“சாபம் எல்லாம் விடாதே.”
“நான் மகாவைக் கேட்டதா சொல்லு.”
சற்று நேரம் அளவளாவிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
கிருஷ்ணா நேரே வந்துவிட்டான்.
“அப்பு. உண்மையாவே அந்த சிடுமூஞ்சியை நீ காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறியா?” என்றான் சந்தேகமாய்.
அவள் இளித்து வைத்தாள்.
“ஓகோ. இப்பத்தான் எனக்குப் புரியுது.”
“என்ன புரியுது?” என்றவாறே அங்கு வந்தான் சித்தரஞ்சன்.
“ஹலோ ரஞ்சன் சார். வாழ்த்துகள்.”
“என்ன டாக்டர் சார் என் கூட எல்லாம் பேசுவீங்களா என்ன?”
“இனிமேல் பேசுவோம் ரஞ்சன் சார். ஒன்னுக்குள்ள ஒன்னாகிட்டோம். இனி என்னை நீங்க கிருஷ்ணான்னே கூப்பிடலாம்.” என்றான் பெருந்தன்மையாய்.
“ரொம்ப நன்றி டாக்டர் கிருஷ்ணா.”
அவனும் சென்ற உடன் அபர்ணாவிடம் வந்தான் சித்தரஞ்சன்.
“இப்படி குடும்பத்துக்குள் பிணைப்பு உண்டாக்கிட்டா அதன் பிறகு ஒரு வருசம் கழிச்சு இங்கேயே இருந்துடலாம்னு பிளான் பண்றியா? அதுக்குதான் எல்லார்கிட்டயும் சொல்லனும்னு சொன்னியா?”
“நீங்க பயப்படாதீங்க சார். ஒரு வருசம் கழிச்சு நான் உங்க வாழ்க்கையில் இருந்து போயிடுவேன். யாராலயும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. அதனால் நீங்க போய் நிம்மதியா இருங்க. நடிக்க பிராக்டிஸ் பண்ணிக்குங்க. தேவைப்படும்.”
காதல் வளரும் ……
error: Content is protected !!