Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்?

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 23

சித்தரஞ்சன் அவளுக்குக் கொடுத்திருந்த ஏடிஎம் கார்டை, திருமண சமயத்தில் அவனிடமே கொடுத்தாள் அபர்ணா.

“என்ன இது?”

“நீங்கள் கொடுத்த ஏடிஎம் கார்டு.”

“என்ன கிண்டலா? இதை எதுக்கு என்கிட்ட தர்றேன்னுதான் கேட்டேன்?”



Advertisement

“திருமண செலவில் பெண் வீட்டிற்கும் பங்கு உண்டுதானே? அதுக்கு இதை எடுத்துக்குங்க.”

“நான் உனக்கு கொடுத்த பணத்தில் இதுவரை நீ ஒரு பைசா கூட எடுத்துக்கலை.” என்றான் கோபமாய்.

“இப்ப தேவைப்படும்னுதான் நான் எடுத்துக்கலை.” என்றாள் பொறுமையாய்.

Advertisement

“நீ செலவுக்குப் பணம் தந்தால்தான் கல்யாணம் நல்லபடியா நடக்குமா?”

Advertisement

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. சித்தி சித்தப்பா இருந்தால் என்ன செய்வாங்களோ? அதை நான் செய்யறேன்.” என்று அவன் கையிலேயே அந்த கார்டை திணித்துவிட்டாள்.

அதிலிருந்தே அவன் அவளிடம் பேசவில்லை.

அதற்கு முன்பு மட்டும் கொஞ்சிக்கொண்டா இருந்தான்?

Advertisement



திருமணமாகி இந்த ஒரு மாதமும் தண்டாத ஒரு வாழ்க்கைதான். ஒப்பந்த திருமணம்தானே என்று அவளும் எதையும் கண்டு கொள்ளவில்லை.

சில நேரங்களில் சரண்யா திருமண வாழ்க்கைப் பற்றிப் பேசும்போது இவளுக்குக் கூச்சமாயிருக்கும்.

இவளும் அவளைப் போல் நிஜமான திருமணம் செய்திருந்தால் அப்படி இருந்திருக்காதோ? என்னவோ?

மனம் கேட்காமல் அவனிடம் சென்றவள்,

“ஒரு வருடம் வரைக்கும் கண்டிப்பா காத்திருக்கனுமா? இப்பதான் சரண்யாவை உங்கம்மா ஏத்துக்கிட்டாங்களே? நாம பிரிஞ்சுடுவோம்.” என்றாள் யோசனையாய்.

அவன் பார்த்த பார்வையில் கடுமை நிறைந்திருந்தது.

“தயவு செய்து என் முன்னாடி நிற்காதே. போயிடு. இப்பப் பிரிஞ்சு போனால், அவங்களுக்காகத்தான் நாம கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்னு நினைச்சு அவங்க வருத்தப்படமாட்டாங்களா? எப்போதும் சுயநலமாவே யோசிக்காதே. அவங்களாவது அவங்க வாழ்க்கையை சந்தோசமா வாழட்டும்.”

அவளுக்கு நாளுக்கு நாள் எப்போது இங்கிருந்து கிளம்புவோம் என்றிருந்தது.

இன்று ஒரு மாத உழைப்பின் பலனை ஊக்கத் தொகையாகப் பெற்ற போது சரண்யா மகிழ்ந்து போனாள்.

அவளை இந்த ஒரு மாதத்தில் கவனித்திருந்த தேவேந்திரனுக்கு மிகவும் திருப்தி.

அவளிடம் நிர்வாகத் திறன் இயல்பாகவே இருந்தது. பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கினாள். தவறு செய்தால் கண்டிக்கவும் செய்தாள்.

வாடிக்கையாளர்களிடம் திறமையாகப் பேசி வியாபாரத்தை அதிகப்படுத்தினாள்.

அவளுடைய தொழிலுக்கு மேலும் என்ன தேவை என்று அதைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்கிறாள்.

எங்கே பெரிய மகன் தவறான முடிவெடுத்துவிட்டானோ என்ற தயக்கம் கொஞ்சம் அவருக்கு இருந்தது. ஆனால் இப்போது சரியாகக் கணித்த மூத்த மகன் மீது மதிப்பு அதிகமானது.

மனோரஞ்சனுமே மிகவும் பொறுப்பானவனாக மாறிவிட்டான்.

அவனுடைய நிர்வாகத்தில் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து, அவர்களிடம் ஆலோசித்து, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறான்.

சித்தரஞ்சன் தான் இந்த ஊக்கத் தொகை கொடுக்கும் யோசனையை  தேவேந்திரனிடம் கூறினான்.

அப்போதுதான் அடுத்து உற்சாகமாக உழைப்பார்கள் என்று அவன் கூறவும், தேவேந்திரனுக்கும் அது சரியெனப்பட்டது. எவ்வளவு கொடுக்கலாம் என்று அவனிடமே கேட்டார்.

வந்த லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை கொடுக்கலாம். அப்போதுதான் அடுத்து வியாபாரத்தை அதிகப்படுத்த தோன்றும் என்று அவன் கூற அதன்படியே கொடுத்துவிட்டார்.

அதனால்தான் அவர் அபர்ணாவைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. அவளை அவன் பார்த்துக்கொள்வான் என்று விட்டுவிட்டார்.

சகுந்தலாவிற்கும் ஒரு தொகை கொடுத்த போது அவர் முகத்தில் அத்தனை பிரகாசம். இத்தனை நாட்கள் வீட்டில் சும்மா அதிகாரம் செய்து கொண்டிருந்த போது வராத மனதிருப்தி, இந்தப் பொறுப்பை ஏற்றதிலிருந்து வந்திருக்கிறது.

இத்தனை பேர் பார்க்கக்கூடிய இந்த வேலைகளை எல்லாம் மூத்த மகன் ஒருவனே சமாளித்திருக்கிறான் என்ற போது அவருக்கு மகன் மீது மரியாதை வந்திருந்தது.

இதோ இப்போது, இரவு உணவு முடிந்து வேலைகளை முடித்துவிட்டு வந்த அபர்ணாவிடம் ஒரு கவரில் பணத்தை வைத்துக் கொடுக்க, அவளோ அதைத் தொட்டுக்கூடப் பார்க்காமல் அவனிடம் கோபமாகப் பேசுகிறாள்.

அவனுக்கு வந்த ஆத்திரத்தில் அவளை அறைவோமா? என்று தோன்றியது.

“இதப்பாரு முன்னாடி நான் உனக்கு சம்பளமா கொடுத்த பணத்தையும் நீ எடுத்துக்கலை. இப்ப ஒரு கணவனா உன் செலவுக்குப் பணம் கொடுத்தால் கேள்வி கேக்கறியா?”

“எனக்குத் தேவையானது எப்போதும் போல் வீட்டுக்கு வந்துடுதே. அப்புறம், கணவனா உங்க கடமையைச் செய்ய இது ஒன்றும் உண்மைத் திருமணம் கிடையாது. ஒப்பந்தத் திருமணம்.”

அவன் கோபத்தில் அவளை முறைத்துக்கொண்டே நின்றான்.

“அப்புறம், சம்பளமில்லாத வேலைக்காரின்னுதானே சொன்னீங்க? இப்ப எதுக்கு பணம் தர்றீங்க?”

அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தவன், நிதானமாய் அவளருகில் வந்தான்.

கையை அவள் முன் நீட்டவும், அவள் பின்வாங்கினாள்.

அவன் இன்னும் நெருங்கி, அவள் கழுத்தில் கைவைத்துத் தாலியைத் தூக்கிக் காண்பித்தான்.

“இதை உண்மையாத்தான்டி நான் உன் கழுத்தில் கட்டினேன். இது உன் கழுத்தில் இருக்கிற வரைக்கும் நான் சொல்றபடிதான் நடக்கனும்.” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவனை வெறித்துப் பார்த்தவள் திடீரென்று குளியலறைக்குள் ஓடி நுழைந்து கொண்டாள்.

“ஏய். நான் உன்கிட்டதான்டி பேசிக்கிட்டிருக்கேன். பதில் சொல்லாமப் போனால் என்ன அர்த்தம்?” கோபமாகக் கதவைத் தட்டினான்.

அவள் கதவைத் திறந்து வெளியில் வந்தாள்.

“ஏய் என்ன திமிராடி? பேசிட்டிருக்கும் போதே போய் கதவை அடைச்சா என்ன அர்த்தம்?” என்றவன் அவளைப் பார்த்து அதிர்ந்தான். மிகவும் சோர்ந்திருந்தாள்.

“சித்து” என்றவாறே அவன் மீது சரிந்தாள். அவன் மார்பில் அவளின் ரத்தத் துளிகள்.

மேலும் மேலும் ரத்த வாந்தியாய் எடுத்தவளைக் கண்டு அதிர்ந்து போனான்.

அவன் எதையும் யோசிக்கவில்லை. யாரையும் கூப்பிட வேண்டும் என்று கூட தோணவில்லை. அப்படியே அவளை வாரி எடுத்துக் கொண்டான்.

காரின் பின்னிருக்கையில் அவளைப் படுக்க வைத்தவன் வெறித்தனமாக காரை செலுத்த ஆரம்பித்தான்.



கிருஷ்ணா மருத்துவமனை.

அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலில் வாழ்க்கையை வெறுத்த நிலையில் நின்றிருந்தான் சித்தரஞ்சன்.

இன்னும் இவன் வந்தது வீட்டினர் யாருக்கும் தெரியாது.

இவன் வந்த நிலையைக் கண்டு, அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் உடனே ஜெயச்சந்திரனுக்கு அழைத்துவிட்டனர்.

அருகிலேயே வீடு இருந்ததால் அவரும் பதட்டத்துடன் ஓடி வந்துவிட்டார். கூடவே கிருஷ்ணாவும்.

உள்ளே சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. அவன் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கிறான்.

அவன் மனக்கண்ணில் ‘சித்து’ என்ற அழைப்புடன் தன் மீது அவள் சரிந்ததும், அவள் ரத்தம் தன் மார்பில் வழிந்ததும் தான் வந்து வந்து போனது. இப்போதும் அவன் அந்த ரத்தம் படிந்த சட்டையுடன் தான் நிற்கிறான்.

இன்னும் மருத்துவர்கள் வெளியில் வரவில்லை.

அவசர சிகிச்சைப் பிரிவின் அறைக்கதவு திறந்ததும், வெறித்தப் பார்வையுடன் நின்றிருந்தவனைக் கண்ட ஜெயச்சந்திரன் அவனை ஒரு நாற்காலியில் அமர வைத்தார்.

“ரஞ்சன். இப்படி நீயே இடிஞ்சு போகலாமா? நீதான் உன் குடும்பத்தோட அஸ்திவாரம். எல்லாத்தையும் தைரியமா எதிர்கொண்டவன் நீ.”

அவர் சொன்னதும் அவன் விலுக்கென்று நிமிர்ந்தான்.

‘அவள்தான் உன் வாழ்க்கைக்கு ஆதாரம்’ என்ற குரல் அவன் மனதில் ஒலித்தது.

“இப்போதைக்கு அபர்ணா அபாய கட்டத்தைத் தாண்டிட்டா. எல்லா டெஸ்டும் எடுக்கச் சொல்லிட்டேன். ரிசல்ட் வரட்டும். என்ன பிரச்சினைனு பார்த்துடலாம்.”

“நான் இப்ப அவளைப் பார்க்கலாமா அங்கிள்?”

“போ. போய் அவளைப் பாரு. ஆமா வீட்டில் யார்கிட்டயாவது இங்கே இருக்கேன்னு சொன்னியா?”

‘இல்லை’ என்று தலையசைத்தவன் அபர்ணாவைப் பார்க்கச் சென்றான்.

இதுவரைக்கும் நடந்ததை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணா மனோரஞ்சனுக்கு அலைபேசியில் அழைத்தான்.

“சொல்லுங்கண்ணா.” என்ற மனோரஞ்சன் மறுமுனையில் பரபரப்புடன் இருந்தான்.

“அங்க என்ன பிரச்சினை சொல்லு?”

“தண்ணி எடுக்கனும்னு வெளியில் வந்த போது அண்ணா ரூம் திறந்திருச்சு. பார்த்தால் அண்ணாவும், அண்ணியும் ரூமில் இல்லை. அவனுக்குப் போன் அடிச்சா, அதுவும் ரூமில்தான் இருக்கு. அதுதான் எங்கே போனாங்கன்னு தெரியாம நின்னுக்கிட்டிருக்கேன்.”

“அப்பாட்ட எதுவும் சொன்னியா?”

“இல்லண்ணா. இந்த நேரத்தில் அவங்களையும் கலவரப்படுத்த வேண்டாம்னு சொல்லலை.”

“ம். குட். அவங்க இங்க ஹாஸ்பிட்டலில்தான் இருக்காங்க. நீ மட்டும் வா. சரண்யா வீட்டில் இருக்கட்டும். வரும்போது உன் அண்ணாவுக்கு ஒரு செட் டிரஸ் மட்டும் எடுத்துட்டு வா.”

“என்னாச்சுண்ணா?” பதட்டமானான்.

“இங்கே வா. பேசிக்கலாம்.” என்று அழைப்பைத் துண்டித்தான்.

ஜெயச்சந்திரன் தனதறைக்குச் சென்றிருந்தார்.

கிருஷ்ணா அபர்ணாவைக் காணச் சென்றான்.

அங்கே அபர்ணாவின் கைகளைப் பற்றிக் கொண்டு அவளையே வெறித்தவாறு அவளருகிலேயே அமர்ந்திருந்தான் சித்தரஞ்சன்.

அவன் வாய் ‘அபி அபி’ என்று முணுமுணுத்துக்கொண்டிருந்தது. அப்போது அபர்ணாவும் எதையோ முணங்க, காதை அவள் அருகில் கொண்டு சென்றான் சித்தரஞ்சன்.

அவன் முகம் மாறியது.

“அது யார் கண்ணன்? உனக்குத் தெரியுமா கிருஷ்ணா?”

“அது அவளோட சின்ன வயசு ப்ரண்டு போலண்ணா. எப்பவாவது அந்தப் பெயரை சொல்வாள்.” என்றான் கிருஷ்ணா யோசனையோடு.

அவர்களின் திருமணம் முடிந்ததில் இருந்து, சித்தரஞ்சன் அவனிடம் இணக்கமாக, உரிமையாக அழைத்துப் பேச அவனுக்கு ஆச்சர்யம்தான். அதனால் அவனும் ‘அண்ணா’ என்றே அழைத்தான்.

அவனுக்கு சித்தரஞ்சனைப் பார்க்கப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.

அவனறிந்த சித்தரஞ்சன் வேறு மாதிரி இருந்தான்.

அபர்ணா அவன் வாழ்க்கையில் நுழைந்துவிட்ட பிறகு அவன் மாறிப் போயிருந்தான்.

‘ஒரு மனிதனை காதலும், கல்யாணமும் இப்படி மாற்றிவிடுமா?’

முதலில் அபர்ணாவுக்கு அவனுடன் திருமணம், அதுவும் காதல் திருமணம் என்றதும் அவனால் நம்ப முடியவில்லை.

இப்போது பார்த்தால் சித்தரஞ்சன் அபர்ணாவைக் காதலிக்கிறான் என்று புரிந்தது.

‘எப்போது, எப்படி அவளைக் காதலிக்க ஆரம்பித்தான்?’

‘பார்க்கும் போதெல்லாம் அவளிடம் சண்டைதானே போட்டுக்கொண்டிருந்தான்.’

அதற்கு நேர்மாறாக அபர்ணாவிடம் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்களை விட்டுவிட்டு கிருஷ்ணா வெளியில் வந்துவிட்டான்.

மனோரஞ்சன் பரபரப்புடன் ஓடி வந்தான்.

“யாருக்கு? என்னாச்சுண்ணா?” என்றான் முகத்தில் கலவரத்தைத் தாங்கி.

“உன் அண்ணிக்குத்தான். என்னாச்சுன்னு இனிதான் கண்டு பிடிக்கனும். உன் அண்ணன்கிட்ட டிரஸ்ஸை கொடுத்து மாத்திக்கச் சொல்லு. உள்ளே போ.” என்றான்.

வெளிறிப்போன முகத்துடன் உள்ளே நுழைந்தான் மனோரஞ்சன்.

அங்கே அபர்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த சித்தரஞ்சனின் தோற்றத்தைக் கண்ட மனோரஞ்சன் அதிர்ந்து போனான்.

அவசரமாக சித்தரஞ்சனின் அருகில் போய் அவன் தோளைத் தொட்டான்.

“அண்ணா.” என்றதுதான் தாமதம்.

அவன் தோளில் சாய்ந்த சித்தரஞ்சன் குலுங்கினான்.

மனோரஞ்சன் இதை எதிர்பார்க்கவில்லை. அவன் பார்த்து வளர்ந்த சித்தரஞ்சன் இப்படியிருக்கவில்லை.

அவன் முகத்தில் அதிகாரத் தோரணையைத் தான் அவன் பார்த்திருக்கிறான். பாசத்தைக் கூட கனிவோடு காட்டமாட்டான்.

“ப்ச். அண்ணிக்கு ஒன்னுமாகாது அண்ணா. முதல்ல நீ டிரஸ்ஸை மாத்து.” என்றான் மெல்ல கண்டிப்புடன்.

இப்போது சித்தரஞ்சன் குழந்தையாகிப்போனான்.

அவன் சொல்பேச்சுக் கேட்டு வெளியில் வந்தான்.

“மனோ. பக்கத்து ரூமில் நீங்க இருந்துக்கங்க. அண்ணனை இப்ப அங்கே அழைச்சுட்டுப் போ.”

அவன் கைப்பற்றி அழைத்துச் சென்றான் மனோரஞ்சன். அங்கே நுழைந்த பிறகு உடையை மாற்றிக் கொண்ட சித்தரஞ்சன் மீண்டும் அபர்ணாவின் அருகில் போய் அமர்ந்து கொள்ள, கிருஷ்ணாவும் அவனை அப்படியே விட்டுவிடுமாறு கூறிவிட்டான்.

அப்படியே பொழுது புலர்ந்தது. வீட்டினர் விவரம் தெரிந்து பதறியடித்து வந்தனர்.

“என்னாச்சு மனோ? ஏன் ராத்திரியே எங்ககிட்ட சொல்லலை.”

“ஏம்ப்பா உங்க நிம்மதியையும் கெடுக்கனுமா?”

“நீங்க இங்கே என்ன நிலைமையில் இருந்திருக்கீங்க? நான் அங்கே நிம்மதியா தூங்கிக்கிட்டு இருந்திருக்கேனே.” என்று தன்னையே நொந்து கொண்டார் தேவேந்திரன்.

உள்ளே சென்று பார்த்தனர்.

மருமகளையும், அவளருகில் வெறித்த பார்வையுடன் மகனையும் பார்த்துவிட்டு வந்த தேவேந்திரன் இடிந்து போய் நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.

“நானே என் மருமகளுக்கு திருஷ்டி வச்சுட்டேன்.” என்று தனக்குத்தானே புலம்பினார்.

சகுந்தலா கூட அபர்ணாவைக் கண்டுவிட்டு அதிர்ந்து போய் நின்றார்.

சரண்யா ‘அக்கா.’ என்று அழத்தயாராக மனோரஞ்சன் அவளைத் தாங்கி, இருக்கும் சூழ்நிலையைக் காட்டி ஆசுவாசப்படுத்தினான்.

மதன்ராஜின் நிலைமையைச் சொல்ல வேண்டாம்.

அவனுடைய பெற்றோர் எரிந்து கட்டையாகிப் போவதைக் கண்ட அதிர்ச்சியில் இருந்தவனை கட்டியணைத்து ஆறுதல் அளித்து, அடுத்த தாயானவள் அபர்ணா.

அப்போது அரவணைத்துக் கொண்டவள் இப்போது வரைக்கும் தன்னுடனே வைத்திருக்கிறாள்.

அவன் அழ சகுந்தலா அவனைத் தன் மடியில் தாங்கிக் கொண்டார்.

குடும்பமே அபர்ணாவிற்காக வேண்டிக்கொண்டு அந்த அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலில் தவமிருந்தது.

ஜெயச்சந்திரன் அங்கே வர,  தேவேந்திரன் அவர் கைகளைப் பற்றிக் கொண்டார்.

“சந்திரா. என் மருமகளுக்கு என்னாச்சுப்பா?”

“இப்ப ஒன்னும் சொல்ல முடியாது தேவா. எல்லா டெஸ்ட்டும் எடுத்திருக்கோம். சில டெஸ்ட் இங்கே செய்ய முடியாது. பிளட் சாம்பிள்ஸ் எடுத்து சென்னைக்கு அனுப்பியிருக்கோம். அங்கே அருண்பிரசாத்திடம் பேசியிருக்கேன். ரிசல்ட் வந்தாதான் என்னன்னு தெரியும்.”

அபர்ணா கண்விழித்துவிட்டாள். அவளால் பேச முடியவில்லை.

சிரமப்பட்டு பேச முயற்சி செய்தவளை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டார் ஜெயச்சந்திரன். வீட்டினர் ஒவ்வொருத்தராக அவளைப் பார்த்தனர். சித்தரஞ்சன் மட்டும் அங்கேயே இருந்தான்.

“சரி தேவா. அதான் ரஞ்சன் இங்கே இருக்கான்ல. நீங்க எல்லாரும் வீட்டுக்குப் போங்க.” என்று ஜெயச்சந்திரன் சொல்ல, அவர்கள் அரைமனதுடன் வீட்டிற்குக் கிளம்பினர்.

சென்னையிலிருந்து அருண்பிரசாத்தும், ராஜலட்சுமியும் வந்துவிட்டனர். துவண்டு போய் கிடந்த அவளைக் கண்டதும் அழுகை பீறிட்டது ராஜலட்சுமிக்கு.

எப்படி சுறுசுறுப்பாக சிரித்த முகத்துடன் வளைய வந்த பெண்.

ராம்பிரசாத்தும், நவீன் பிரசாத்தும் ஒரு கருத்தரங்கிற்காக வெளிநாடு சென்றிருந்தனர்.

இன்னும் இரண்டு நாட்களில் வந்துவிடுவர். சித்தரஞ்சன் பேசும் நிலையில் இல்லை என்று அருண்பிரசாத் கூறியிருந்தான். அதனால் அவர்கள் மனோரஞ்சனிடம் பேசினார்கள்.

அன்று மாலை அவர்கள் ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள்.



அபர்ணாவுக்கு இப்போது உடல்நிலை கொஞ்சம் தேறியிருந்தது. ஆனாலும் அவளால் சாப்பிட முடியவில்லை. திரவ ஆகாரம் தான் கொடுக்கின்றனர்.

மாத்திரை கூட அவளால் விழுங்க இயலவில்லை.

அவளுக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டன. அதைக் கண்ட ஜெயச்சந்திரன் சோர்ந்து போனார்.

“இதை நான் எப்படி தேவாக்கிட்ட சொல்லுவேன். அவன் பயந்துடுவானே? சொல்லலைன்னாலும் பிரச்சினை.” என்று புலம்பினார்.

“அப்பா. இப்போதைக்கு நீங்க யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.”

“சொல்லாம இருக்கிறது தப்பு கிருஷ்ணா.”

“அது எனக்கும் புரியுதுப்பா. அந்த வீட்டில் தைரியமான ஆளுன்னு பார்த்தால் ரஞ்சன் அண்ணாதான். அவர் தெளிவா எல்லாத்தையும் யோசித்து முடிவு எடுப்பார்.”

“நீ சொல்றது எல்லாம் சரிதான். அவனே இப்ப இந்த நிலைமையில் இருக்கானே. நான் எப்படி சொல்வேன்?”

“நானே பக்குவமா சொல்லிக்கறேன்ப்பா. அதுக்குப் பிறகு நீங்க யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம். என்ன செய்யனுமோ அதை ரஞ்சன் அண்ணா பார்த்துக்குவார்.” என்றான்.

“நீ சொல்றதும் சரிதான். அவன் முகத்தைப் பார்த்து என்னால் இந்த விசயத்தைச் சொல்ல முடியாது. நீயே சொல்லிரு.” என்று பொறுப்பைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டார்.

ஏற்கனவே என்ன செய்ய வேண்டும் என்று நவீன் பிரசாத் அவனிடம் சொல்லியிருந்தான்.

அபர்ணாவை வீட்டிற்கு அழைத்துப் போகச் சொல்லி முன்பே ஜெயச்சந்திரன் கூறிவிட்டார்.

ஆனால் பரிசோதனை முடிவுகள் தெரியாமல் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவன் தயாராயில்லை.

“அண்ணா.” என்று தயக்கமுடன் அழைத்தான் கிருஷ்ணா.

“என்ன கிருஷ்ணா?”

“டெஸ்ட் ரிப்போர்ட் வந்துடுச்சு.”

“என்னாச்சு கிருஷ்ணா?”

“வாங்க ரூமுக்குப் போய் பேசிக்கலாம்.” என்றான் சுரத்தேயில்லாமல்.

இருவரும் உள்ளே நுழைய அங்கே இருந்த ஜெயச்சந்திரன் கிளம்பினார்.

“பயப்படாதே ரஞ்சன். எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்.”

“அப்பா. நான் சொல்லிக்கறேன்.”

“ஆமா. ரஞ்சன். கிருஷ்ணா எல்லாத்தையும் சொல்வான். நீ பார்த்துப் பக்குவமா நடந்துக்கோ.”

“என்னாச்சு கிருஷ்ணா. சொல்றதுக்கு முன்னாடியே பயமுறுத்தறீங்க.” என்றான் பொறுமையற்று.

“அண்ணா. உங்களுக்கு இது அதிர்ச்சி தரக்கூடிய விசயம்தான்.”

“சீக்கிரம் சொல்லு.”

“அப்புவுக்கு தொண்டையில் கேன்சர். அது எத்தனாவது ஸ்டேஜ்னு இனிதான் டெஸ்ட் செய்து பார்க்கனும்.”

“என்னது?” என்று அதிர்ந்து எழுந்தவனின் கண்களில் கரகரவென கண்ணீர் வழிந்தது.

காதல் வளரும் ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!