Skip to content
Post Views: 5,266
அத்தியாயம் – 3
சிறுவனுடன் உள்ளே நுழைந்தவளைப் பின்தொடர்ந்தான் சித்தரஞ்சன்.
அவள் வரவேற்பறைக்குச் செல்லாமல் அங்கே நல்ல பழக்கப்பட்டவள் போன்று உள்ளே சென்றாள்.
‘அவளுக்குத் தெரிந்த யாராவது இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களோ?’
Advertisement
‘இருந்தாலும் அதற்காக யாராவது பெட்டியைக் கொண்டு வருவார்களா?’
சந்தேகத்துடன் பின்தொடர்ந்தான். அவள் நேரே ஜெயச்சந்திரனின் அறை நோக்கியே சென்றாள்.
இடையில் தன்னுடைய அலைபேசியை எடுத்தவள் யாருக்கோ அழைத்தாள்.
Advertisement
சிறிது நேரத்திலேயே அங்கே விரைந்து வந்தான் கிருஷ்ணா. அவளைக் கண்டதும் புன்னகையுடன் கைகளை விரித்தவாறே வந்தான்.
Advertisement
அவனது கைகளை ஒதுக்கினாள் அவள்.
‘ஒருவேளை இருக்கும் இடமறிந்து நல்லவள் போன்று வேசம் போடுகிறாளோ? ‘
அந்த கிருஷ்ணாவும் லேசுப்பட்டவன் கிடையாது. அவளை அணைப்பது போல் வந்தவன் அந்த சிறுவனை அணைத்துத் தூக்கிக் கொண்டான்.
Advertisement
அந்த சிறுவனும் வாகாக அவனிடம் பொருந்திக் கொண்டான். ஏனோ அந்தக் காட்சியை சித்தரஞ்சனால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
அவளது பெட்டியை வாங்க கையை நீட்டினானோ? நீட்டிய மாதிரிதான் இருந்தது. ஆனால் பெட்டி அவள் கையில்தான் இருந்தது.
அந்தளவிற்கு அவள் அவனுக்கு முக்கியமானவளா?
அவன் முகம் கடுத்தது. மூவரும் ஜெயச்சந்திரனின் அறைக்குள் நுழைந்தனர்.
அவனுக்கு மனம் பொறுக்கவில்லை. அவள் எதற்காக இங்கே வந்திருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரிந்தாக வேண்டும்.
அவர்கள் பின்னேயே கிட்டத்தட்ட ஓடியவன் ஜெயச்சந்திரனின் அறைக் கதவைத் தட்டினான்.
ஜெயச்சந்திரன் “வரலாம்” என்றார்.
அவன் உள்ளே நுழைந்தபோது கிருஷ்ணா யாரென்று திரும்பிப் பார்த்தான். அவளோ திரும்பக்கூட இல்லை.
“வாப்பா. ரஞ்சன்.”
“முக்கியமான விசயமா பேச வந்தேன் அங்கிள். நான் தப்பான நேரத்தில் வந்திட்டேன்னு நினைக்கிறேன். நீங்க ….” என்று சொல்ல வந்ததை சொல்லாமல் தயக்கத்துடன் நிறுத்தினான்.
அதாவது முக்கியமாக பேச வந்தவன் அவர்கள் ஏதோ முக்கியமாக பேசுவதை உணர்ந்து தயங்குவது போல் அவனது பாசாங்கு இருந்தது.
அவனைக் கண்டதுமே கிருஷ்ணாவின் முகத்தில் தெரிந்த கோபத்தை அலட்சியப்படுத்தினான் சித்தரஞ்சன்.
கிருஷ்ணா கோபத்தை அடக்கிக்கொண்டான்.
‘அதுதான் முக்கியமா நாங்க பேசறது தெரியுதுல்ல. வேண்டுமென்றே வந்துவிட்டு எதற்கு இப்படி தயங்குவது போல் நடிக்கிறான். இவனிடம் கோபத்தையும் காட்ட முடியாது. அப்பாவிற்கு அது பிடிக்காது.’
பல்லைக் கடித்துப் பொறுமையுடன் நின்றான்.
“அங்கிள். நான் வேணா வெளியில்….” இழுத்தவாறே அவர்களை நோக்கினான்.
“வேண்டாம்பா. ரொம்ப முக்கியமான விசயம் இல்லை. இந்தப் பெண்ணிற்கு இங்கே வேலை வேண்டுமாம். அவனுடைய நண்பனுக்குத் தெரிந்த பெண்ணாம். அதுதான் அழைத்து வந்திருக்கிறான். நீ உட்காருப்பா. நான் பேசிவிட்டு வருகிறேன்.”
ஜெயச்சந்திரன் சொன்னதும், கிருஷ்ணாவை அமர்த்தலாகப் பார்த்துக்கொண்டே அங்கிருந்த நாற்காலியில் தோரணையாக அமர்ந்தான் சித்தரஞ்சன்.
கிருஷ்ணா பல்லைக் கடித்தான்.
‘அவளுக்கு இங்கே என்ன வேலையிருக்கப் போகிறது? எல்லாம் பொய். வேலை பார்க்க வந்தவளிடம் நடக்கிற மாதிரியா அந்த கிருஷ்ணா நடந்தான்? பார்த்த உடனே இளிக்க ஆரம்பிக்கவில்லை. இவளைக் கண்டும் பல்லை இளிக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம். அவர்கள் ஒழுங்காக இருந்தாலும் இவள்தான் மயக்கிவிடுவாளே?’ எரிச்சலுடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கிருஷ்ணாவிற்கு அவனது செயல் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. ‘என்னதான் அப்பா அவனை இங்கே அமரச் சொன்னாலும் அவனுக்கு கொஞ்சமாவது அறிவு வேண்டாமா? அப்படியே அமர்ந்தாலும் இப்படியா தங்களை குறுகுறுவென்று வேடிக்கைப் பார்ப்பது?’
அவன் ஒருத்தன் அங்கே அமர்ந்திருப்பதை அவள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
தான் சந்திக்க வந்தவர்கள் மட்டுமே அங்கே இருப்பதாக அவள் செயல் இருந்தது.
“அப்புறம் என்ன கிருஷ்ணா? உனக்கு நன்றாக தெரிந்த பெண் என்கிறாய். வேலையில் சேர்ந்துக்கட்டும். என்ன விவரம் வேணுமோ சொல்லிவிடு.” மகனையும் அந்தப் பெண்ணையும் அங்கிருந்து அகற்றிவிட்டு தன் நண்பனின் மகனிடம் பேச ஆயத்தமானார் ஜெயச்சந்திரன்.
அதை அப்படியே விட்டுவிடுபவனா சித்தரஞ்சன். அவள் எந்த வேலைக்காக இங்கே வந்திருக்கிறாள், எத்தனை நாட்கள் தங்கப் போகிறாள் எல்லாம் அவனுக்குத் தெரிந்தாக வேண்டுமே.
“அது எப்படி அங்கிள்? எந்த விவரமும் தெரியாமல் வேலையில் சேர்க்கப் போறீங்க? நான் காத்திருக்கேன்னு நீங்க யோசிக்க வேண்டாம் அங்கிள். நிதானமாக நீங்கள் அவர்களை விசாரித்துவிட்டே வேலையில் சேர்த்துக்கொள்ளுங்கள். நான் வெயிட் பண்றேன்.”
என்னவோ தன்னுடைய நேரத்தை அவர்களுக்காக விட்டுத்தருவது போன்று அவன் பேச்சு இருந்தது.
அத்துடன் விட்டானா? அவர்களைப் பார்வையிட வசதியாக அமர்ந்துகொண்டான்.
இதெல்லாம் தன் தந்தைக்குப் புரியாதா? என்று அவரை நோக்கினான்.
அவரோ சித்தரஞ்சன் கூறியதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு அவளைப் பற்றிய விசாரணையில் இறங்க ஆரம்பித்தார்.
“அப்பா. இவங்க அபர்ணா. இது அவங்களோட தம்பி மதன்ராஜ். இவங்களோட சொந்த ஊர் இந்தப் பக்கம்தான். ஆனால் சின்ன வயசுலேயே சென்னைக்குப் போயிட்டாங்க. பெத்தவங்க ஒரு விபத்தில் இறந்ததை நேரில் பார்த்த அதிர்ச்சியில் அவங்க தம்பிக்குப் பேச்சு போய்விட்டது. இப்ப அவங்க இந்தப் பக்கமே இருக்கலாம்னு வந்திருக்காங்க. இங்கே நர்ஸ் வேலைக்காக வந்திருக்காங்க. அவங்க ஏற்கனவே என் நண்பனோட மருத்துவமனையில் வேலை பார்த்தாங்க. உங்களுக்குத் தெரியுமேப்பா. நவீன் பிரசாத். நான் கூட அடிக்கடி சொல்லியிருக்கேனே. இதெல்லாம் நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லியிருக்கேன்.” அழுத்தமான குரலில் கூறினான் கிருஷ்ணா.
“சொன்னேப்பா. இருந்தாலும் வேலைப் பளுவில் நான் மறந்துட்டேன்.”
மகனையும் விட்டுக்கொடுக்காது, நண்பன் மகனின் மனதையும் வருத்தப்படுத்தாது விசயத்தை எளிதில் முடித்துக் கொண்டார் ஜெயச்சந்திரன்.
“சரிப்பா. இவங்க ரொம்ப தூரம் வந்த களைப்பில் இருப்பாங்க.” அவர்களைப் பற்றி நினைவுறுத்தினான் கிருஷ்ணா.
“சரி கிருஷ்ணா. அந்தப் பொண்ணை அழைச்சுட்டுப்போய் எப்ப வேலையில் சேர்ந்துக்கிறாள்னு விசாரிச்சுக்கோ. அவள் எங்கே தங்கப் போகிறாள்?”
“அதை நான் பார்த்துக்கிறேன்ப்பா. இடம் பார்த்து வச்சிட்டேன்.”
“டாக்டர் சார். நான் இப்பவே வேலையில் சேர்ந்துக்கிறேன். எனக்கு ஓய்வு தேவையில்லை. என் தம்பிக்கு மட்டும் இப்போது இருக்க இடம் வேண்டும்.”
“சரி அபர்ணா. போகலாம்.” கிருஷ்ணா கூற அவன் ஒருவன் அங்கிருப்பதையே கவனிக்காமல் அவர்கள் மூவரும் அங்கிருந்து கிளம்பினர்.
ஜெயச்சந்திரன் சித்தரஞ்சனை கேள்வியாக நோக்க தன் தம்பியின் உடல்நிலையைப் பற்றி ஏதோ வாய்க்கு வந்ததை பேசியவன் உடனடியாக அவ்விடம் விட்டு அகன்றான்.
அவன் மேல் ஜெயச்சந்திரனும் சந்தேகம் கொள்ளவில்லை. அந்தளவிற்கு அவர் தன் நண்பனின் குடும்பத்தார் மீது பாசம் கொண்டிருந்தார்.
வெளியில் வந்த சித்தரஞ்சன் அவள், அந்த அபர்ணா எங்கே சென்றிருப்பாள்? என்று யோசித்தான். அவளைப் பற்றி அவனுக்கு நல்லெண்ணம் கிடையாது.
அவள் எதற்காக இங்கே வந்திருக்கிறாள்? அச்சு அசலாய் அவளையே வார்த்தெடுத்தாற் போலிருந்த அந்த சிறுவனை அவளது தம்பி என்பதை அவனால் நம்ப முடியவில்லை.
அவன் அவளது குடும்பத்தை நன்றாக அறிவான். அவளது பெற்றோர் இறந்ததினால் அந்த அதிர்ச்சியில் அவளது தம்பிக்குப் பேச்சு போனதாக கிருஷ்ணா கூறியதையும் அவனால் நம்ப முடியவில்லை. அவளது பெற்றோர் உயிருடன் தான் இருக்கிறார்கள்.
அவள் சென்னையில் இருந்தாள் என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். இத்தனை வருடங்கள் சென்னையில்தான் இருந்தாளா?
அங்கில்லாத வேலையா? இங்கே எதற்காக வந்திருக்கிறாள்?
இங்கேயே செட்டில் ஆகப்போவதாக சொல்ல வேண்டிய காரணம் என்ன? எதற்காக அவளது மகனை தம்பி என்று நாக்கூசாமல் கூறுகிறாள்?
அந்த சிறுவனை அவளது தம்பி என்று அவன் நம்பத் தயாராக இல்லை. அவளையே அச்செடுத்த மாதிரி இருக்கும் அந்த சிறுவன் நிச்சயம் அவளது மகனாகத்தான் இருப்பான் என்று நம்பினான்.
பெற்ற மகனை தம்பி என்கிறாள். அதுவும் பெற்றோர் இறந்துவிட்டார்கள் என்கிறாள். இதெல்லாம் அடுத்தவர்களிடம் அனுதாபத்தை சம்பாதிப்பதற்காகத்தான் என்று நிச்சயமாக எண்ணினான்.
அப்போதுதானே அவள் மீது பரிதாபப்படுவார்கள். அந்த யாரோ ஒருவர் அவள் மீது காதல் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.
அதில் பசையாக யார் இருக்கிறார்களோ அவர்களிடம் ஒட்டிக்கொள்ள ஏதாவது ஒரு காரணம் வேண்டுமே.
பெற்ற மகன் என்றால் யார் மணக்க முன்வருவார்கள்? இவள் எல்லாம் ஒருவனை மணந்து அவனுடன் ஒழுங்காக வாழ்பவள் என்றால் இங்கே வந்திருக்கவே மாட்டாளே?
இந்த கிருஷ்ணாவே அவளிடம் நன்றாக மயங்கித்தானே கிடக்கிறான்? அவள் ஏன் வேறு ஒருவனைத் தேடப் போகிறாள்? வெறுப்புடன் நினைத்தான்.
அவளைப் பற்றி நினைக்க நினைக்க அவன் பிரச்சினை பின்னே போயிற்று.
‘நான் இப்படி காதல் என்றாலே வெறுத்துப் போவதற்கு இவள்தானே காரணம். திருமணமே வேண்டாம் என்று நான் முடிவெடுத்ததற்கும் என்னுடைய வாழ்க்கை மட்டுமல்லாது என் தம்பியின் வாழ்க்கையிலும் நான் தவறான முடிவெடுத்ததற்கும் இவள்தானே காரணம். இவள் மட்டும் நிம்மதியாக இருந்துவிடுவாளா? அதையும் தான் பார்ப்போம்.’
அவள் மீதான அவனது கோபம் அதிகமானது. வஞ்சினம் கொண்டான்.
அவர்கள் எங்கே சென்றிருப்பார்கள்? யோசனையுடன் தேடத் தொடங்கினான்.
ஒருவழியாக அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்த சிறிய உணவகத்தில் அவர்களைக் கண்டு பிடித்தான்.
“அ..ப்” கூப்பிட ஆரம்பித்த கிருஷ்ணா அவளது கோபமான பார்வையில் “அப்பர்ணா” என்று முடித்தான்.
“டாக்டர் சார். நீங்க இருக்கிற இடத்தை மறந்துடாதீங்க டாக்டர் சார். இங்கே நீங்க எனக்கு வேலை கொடுத்திருக்கிற முதலாளி டாக்டர் சார். நான் உங்ககிட்ட வேலை பார்க்க வந்திருக்கிறேன் டாக்டர் சார்.” என்று பல்லைக் கடித்தவாறே பேசிக்கொண்டிருந்தாள் அபர்ணா.
‘அய்யய்யோ. இவள் இத்தனை டாக்டர் சார் போடுகிறாளே? என்ன ஆப்பு வச்சிருக்கான்னு தெரியலையே.’ மனதிற்குள்ளேயே அரண்டான்.
அப்போது அவன் பார்வையில் சித்தரஞ்சன் அவர்களை நோக்கி வருவது தெரிந்தது.
“நல்லா ஒரு தடவை யோசிச்சுக்கோ. மனோரஞ்சனோட அண்ணன் சித்தரஞ்சன் நம்மை நோக்கித்தான் வந்து கொண்டிருக்கிறான். அவன் சரியான எமகாதகன். அத்தோட ரொம்ப திமிர் பிடிச்சவன். அவன் இருக்கிற இடத்தில் நீ எப்படி? உன்னோட பாதுகாப்பு எனக்கு முக்கியம்? உனக்கு ஏதாவது ஒன்னுன்னா எங்களால் தாங்கிக்க முடியாது. அத்தோட நவீன் என்னைக் கொன்னே போட்டுடுவான்.”
“எனக்கு நீ….ங்க பாதுகாப்பு தர்றீங்களா டாக்டர்?” கேலிக் குரலில் கேட்டாள் அபர்ணா.
“சரி. உன்னை நீயே பார்த்துப்பே. நான் நம்பறேன். நான் ரொம்ப நேரம் இங்கே உட்கார்ந்து பேச முடியாது. அவன் எதற்காக நம்ம பின்னாடியே வால் பிடித்துக்கொண்டு அலைகிறான் என்று தெரியவில்லை. ஏதாவது சந்தேகம் வந்துடுச்சா? அப்பாவோட அறைக்குள் கூட வேண்டுமென்றே வந்த மாதிரிதான் தெரிந்தது. நான் கிளம்பறேன்.”
“சரிங்க டாக்டர். கூட மதுவையும் அழைச்சுட்டுப்போக முடியுமா?”
“ஏன்?”
“அந்த சித்தரஞ்சன் எதற்காக இங்கே வர்றான்னு தெரிஞ்சுக்கனுமே?”
“உனக்கு எதற்கு வேண்டாத வேலை?”
“நான் எப்படியும் வந்த வேலையைப் பார்க்கனும். அதற்கு அவனை தவிர்க்க முடியாது.”
“என்னவோ பண்ணித் தொலை.” எரிச்சலுடன் கூறியவாறே மதன்ராஜை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
ஓரவிழியில் சித்தரஞ்சனைக் கண்டாலும் அவனைக் காணாதது மாதிரி அவ்விடம் விட்டு அகன்றான்.
அபர்ணா தைரியமானவள். அவளே அவளைக் கவனித்துக்கொள்வாள். எப்படியும் அவள் சொன்ன மாதிரி அவள் வந்த வேலைக்கு சித்தரஞ்சனை தவிர்க்க முடியாது.
‘அந்த திமிர் பிடித்தவனுக்கு இந்த ராட்சசி தான் சரியானவள்.’ அவளைப் பற்றிய கவலை அகன்று அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
சித்தரஞ்சன் வேறு எதற்கோ வந்த மாதிரி பாசாங்கு எல்லாம் செய்யாமல் நேரே அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தவன் அவள் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
அவள் அவனைக் கண்டு கொள்ளாமல் தேநீரை நிதானமாக உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.
அவனோ பல்லைக் கடித்தான்.
‘இப்படி கண்டுகொள்ளாமல் இருப்பது போல் நடித்து அடுத்தவர்களைக் கவர்வதுதானே இவளோட நோக்கம். உன் நடிப்பு என்னிடம் செல்லாதுடி.’ மனதிற்குள்ளேயே கருவிக்கொண்டான்.
“எதற்காக இந்த நாடகம்?”
அவனது கேள்வி காதில் விழுந்தாலும் யாரோ யாரிடமோ பேசுகிறார்கள் என்பது போல் அமர்ந்திருந்தாள் அபர்ணா.
“உன்னிடம் தான் கேட்கிறேன்.” பல்லைக் கடித்து அழுத்தமான குரலில் அவளை நோக்கிக் கூறினான்.
“எக்ஸ்க்யூஸ்மீ. என்னிடம் தான் கேட்டீர்களா?” என்று படபடத்த விழிகளுடன் அப்பாவியாக கேட்டாள் அபர்ணா.
“என்னடீ நடிக்கிறே? உன்கிட்டேதான் கேட்கிறேன்னு உனக்குத் தெரியாதா?”
“என்னது டீயா? நீங்க யாரோன்னு நினைச்சு என்கிட்டே பேசிக்கிட்டு இருக்கீங்க?” கோபத்தை அடக்கிய குரலில் சொன்னாள்.
“யாருன்னு தெரிஞ்சுக்கிட்டுதான் பேசறேன்டீ.” மீண்டும் அழுத்தமாக கூறினான்.
அவள் சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டாள்.
“இதப் பாருங்க சார். முதன் முறையா பார்க்கிற பொண்ணுக்கிட்ட இப்படித்தான் முறை தவறி பேசுவீங்களா?” நிதானமாக கேட்டவளை வெறித்தான்.
“முதன் முதலா பார்க்கிறேனா?” கோபம் தெறித்தது அவன் குரலில்.
“ஆமா சார். நான் இன்னிக்குக் காலையில்தான் சென்னையில் இருந்து வர்றேன். நான் உங்களை சென்னையில் பார்த்த ஞாபகமே எனக்கு இல்லை.”
“ஓ. அம்மணி. பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையோ? என்னவோ இங்கேதான் உங்கள் ஊர் என்று அந்த கிருஷ்ணா அளந்து கொண்டிருந்தானே?” நக்கலாக வந்தது பதில்.
“ஆமாம். நான் என்னோட சின்ன வயசுலேயே இந்த ஊரை விட்டுப் போயிட்டேன். அப்பவும் நான் உங்களோட பழகின ஞாபகம் எனக்கு இல்லை.”
“எப்படி இருக்கும்? ஒருத்தன் இரண்டு பேருன்னா ஞாபகம் இருக்கும்?” அனல் தெறிக்கப் பேசியவனை வெறித்தாள்.
அதற்கு மேல் அவளால் அங்கு அமைதியாக அமர்ந்திருக்க முடியாது என்று தோன்றியது. இத்தனை நேரம் பொறுமையை இழுத்துப் பிடித்து அமர்ந்திருந்தாள்.
தான் வந்த நோக்கம் நிறைவேறும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்றுதான் அவள் பொறுமை காக்கிறாள். ஆனால் அவன் பேச்சு கேட்கக் கேட்க அவள் கோபம் அதிகமாகிறது.
நீ பேசினால் பேசிவிட்டுப் போ என்ற தொனியில் அவள் எழுந்தாள். அவன் அவள் கையை இறுக்கப் பற்றினான். அவளுக்கு வலித்தது.
“என்ன பண்றீங்க? கையை விடுங்க.” அக்கம் பக்கம் யாராவது பார்க்கிறார்களா? என்று பதட்டத்துடன் பார்த்தவாறே அவனிடம் கூறினாள்.
“எங்கேடி ஓடப் பார்க்கிறே? நான் பேசிக்கிட்டு இருக்கேன்? நீ பாட்டுக்கும் கிளம்பறே?”
“உங்களோட அநியாய பேச்சுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.”
“ஓகோகோ. நீ செய்யும்போது தெரியாத அநியாயம் அதையே நான் பேசும்போது மட்டும் உனக்குத் தெரிகிறதோ?”
“என்ன அநியாயம் செய்துவிட்டேன்?”
“பழசை எல்லாம் கூட விட்டுவிடுவேன்டி. ஆனால் இப்ப நீ பெத்த பிள்ளையையே உன் தம்பின்னு சொன்ன பாரு. அதை எப்படிடி மன்னிக்கிறது?”
“ச்சீ. அசிங்கமா பேசாதீங்க.” சீறினாள்.
“நீ செய்யும்போது அசிங்கமா தெரியாதது, நீ செய்யறதை நான் கூறினால் மட்டும் அது அசிங்கமா?” கோபம் தெறிக்கப் பேசுபவனை வெறிக்கப் பார்த்தாள்.
அவள் பேசப் பேச அவன் கோபம் அதிகமாவதை உணர்ந்தாள். மேலும் அவனுடன் வாதத்தை வளர்க்க அவள் விரும்பவில்லை. நீ என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள் என்று அவள் வாயை இறுக மூடிக்கொண்டாள்.
“இத்தனை வருசம் கழிச்சு வந்தால் நீ செஞ்ச அசிங்கத்தை எல்லாரும் மறந்திருப்பாங்கன்ற தைரியத்தில்தானே வந்தாய்? நான் இருக்கேன்டி. எல்லாத்தையும் தெரிஞ்ச நான் இங்கேயேதான் இருக்கேன்.”
“அப்படி என்ன அசிங்கத்தை செஞ்சிட்டேன்?”
“ச்சீ. எல்லாத்தையும் மறந்துட்டியா? பணத்திற்காகப் படிக்கிற வயதில் இன்னொருத்தியோட புருசனோட ஓடியவள்தானே நீ? அவனுக்குப் பிறந்தவன்தான் இந்தப் பையனா? ஏன் அவனை விட்டுட்டே? அவனோட முதல் தாரத்துக் குடும்பம் உங்களைக் கண்டு பிடிச்சு விரட்டிட்டாங்களா? அதனால் தான் விட்டதைப் பிடிக்கலாம்னு திரும்பவும் இங்கே வந்தியா?” அவன் குரலில் ஆத்திரம் அளவு மீறி இருந்தது.
‘அய்யோ. கடவுளே. இவனிடம் நான் என்ன சொல்லிப் புரிய வைக்க?’ சோர்ந்து போனாள்.
‘இவன்கிட்ட நான் யாருன்னு ஏன் புரிய வைக்கனும்? தேவையில்லை. இவனோட எண்ணத்தை மாத்தனும்கிறது என்னோட தேவையும் இல்லை. நான் எதுக்காக வந்தேனோ அதை செஞ்சுட்டு கிளம்பிக்கிட்டே இருக்கப்போறேன்.’ முடிவெடுத்தவள் கிளம்பினாள்.
“என்ன கிளம்பிட்டே. அந்தக் கிருஷ்ணாவை மயக்கி ஜெயச்சந்திரன் அங்கிளை ஏமாத்திட்டோம்னு கணக்குப் போடாதே. நான் விடமாட்டேன்.”
“அய்யா சாமி. நீங்க விடவேண்டாம். எனக்கு இந்த ஹாஸ்பிட்டலை விட்டால் வேறு இடத்தில் வேலையா கிடைக்காது. நான் போயிடுறேன் சாமி. நீங்க யாரையும் என்கிட்டேயிருந்து காப்பாத்த போராட வேண்டாம்.” மரத்தக் குரலில் கூறியவள் அங்கிருந்து அகன்றாள்.
‘அப்படி எளிதில் உன்னை விட்டுவிடுவேனா?’ மனதில் கருவிக்கொண்டான்.
அபர்ணாவின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது.
‘அபர்ணா. நீ இந்தளவிற்கு உணர்ச்சிவசப்பட என்னவாகிவிட்டது? இத்தனை நாட்கள் மற்றவர்களின் பேச்சுக்களை நீ செவி மடுத்தாயா? இப்போது மட்டும் என்ன? யார் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கட்டும். அதை நீ பொருட்படுத்தினால் உன்னால் நிம்மதியா இருக்க முடியாது. இத்தனை நாட்கள் நீ பயின்றது எல்லாம் என்னவாயிற்று. மனதை அடக்கப் பயின்ற நீ இப்படி உணர்ச்சி வசப்படுவது தவறு.’ அவளுடைய மனம் அவளை அறிவுறுத்தியது.
‘நல்லவேளை. கிருஷ்ணாவோடு மதுவை அனுப்பி வைத்தேன். இல்லை என்றால் இந்தப் பேச்சை எல்லாம் அவன் கேட்க வேண்டி வந்திருக்கும். இந்த சின்ன வயதில் அவன் படுவது போதாது என்று இன்னும் அவன் மனம் வேதனை கொண்டிருக்கும்.’ நிம்மதி பெருமூச்சு விட்டவள் அமைதியாக தன் முகத்தை வைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றாள்.
அவளிடம் அமைதியைக் கண்டவன் அமைதி இல்லாமல் தவித்தான்.
‘கை தேர்ந்த நடிகை அவள். அதனால் தான் இத்தனை பேச்சுக்கு அப்புறமும் அவள் தன் முகத்தை அமைதியாக மாற்றிக்கொண்டு செல்ல முடிகிறது. இத்தகைய நடிப்பைக் கண்டு நான் ஏமாற மாட்டேன்.’ கோபத்தில் கொதித்தான்.
‘எங்கே போய்விடப் போகிறாள்? இனி அவள் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது.’ தனக்குள்ளும் நிதானம் கொண்டு வர முயன்றான்.
அவ்விடம் விட்டு அகன்ற அபர்ணா கிருஷ்ணாவிற்கு அழைத்து மதன்ராஜ் எங்கிருக்கிறான் என்று அறிந்துகொண்டாள்.
நல்லவேளை அவன் அந்த சித்தரஞ்சனைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.
மதன்ராஜ் செவிலியர்களின் ஓய்வறையில் இருந்த கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். சிறுவனின் அருகில் சென்றவள் ஆதூரத்துடன் அவன் தலையைக் கோதினாள்.
“ஹாய். நீங்கதான் இன்னிக்கு புதுசா ஜாயின் பண்ண அபர்ணா சிஸ்டரா? நான் பொன்னி.” என்று ஒரு பெண் அறிமுகப்படுத்திக்கொண்டாள்.
“ஹலோ பொன்னி.” புன்னகையுடன் அவளது நட்புக்கரத்தைப் பற்றிக்கொண்டாள் அபர்ணா.
“இது உன்னோட தம்பியா?” சட்டென்று ஒருமைக்கு உரிமையுடன் தாவியவளை ஏனோ அபர்ணாவிற்குப் பிடித்துப் போயிற்று.
“ஆமா பொன்னி. ஊரிலிருந்து வந்த களைப்பில் நல்லா தூங்கறான்.”
அபர்ணா வேலையைப் பற்றி பொன்னியிடம் கேட்டறிந்தாள்.
அதில் சந்தேகம் வராதவாறு மனோரஞ்சனைப் பற்றியும் அறிந்தாள். மூன்று நாட்களாக கண் விழிக்காமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மனோரஞ்சனைப் பற்றி கவலையுடன் அவளிடம் பகிர்ந்துகொண்டாள் பொன்னி.
அன்றைய பொழுது மெதுவாக நகர்ந்தது. இரவு பத்து மணிக்கு மேல் யாரும் தன்னைக் கவனிக்கிறார்களா என்று நோட்டம் விட்டவாறே மனோரஞ்சன் வைக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சைப் பிரிவிற்குள் அவள் நுழைந்தாள்.
அன்று இரவு பொன்னிதான் அங்கே இருக்கப் போகிறாள் என்று தெரிந்துதான் உள்ளே நுழைந்தாள்.
“அபர்ணா. என்ன இங்கே வந்துட்டே?” ஆச்சர்யத்துடன் கேட்டாள் பொன்னி.
“இல்லப்பா. நீ இவரைப் பற்றி ரொம்ப கவலைப்பட்டு பேசினியா? இப்ப எப்படியிருக்கார்னு பார்க்க வந்தேன்.”
“நீ வந்ததும் நல்லதா போயிடுச்சு. கொஞ்ச நேரம் இங்கே இருக்கியா? நான் அம்மாகிட்ட முக்கியமா ஒரு விசயம் பேசனும். பேசிட்டு வந்துடுறேன்.”
அவளை எப்படி என்ன சொல்லி வெளியே அனுப்புவது என்று யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு பொன்னி கேட்டதும் நிம்மதியானது.
“சரிப்பா. இதுக்கு ஏன் இப்படி யோசிச்சுக் கேட்கிறே? செய்னா செய்துட்டுப்போறேன்.”
சிரித்தவாறே அவளை வெளியில் அனுப்பியவள் யோசனையுடன் மனோரஞ்சனை நோக்கினாள்.
அவளுக்கு தற்போதைய தங்கள் நிலைமை கண்ணுக்குள் விரிய ஆரம்பித்தது. வெறித்த பார்வையுடன் சிறிது நேரம் யோசனையுடன் நின்றவள் நேரம் ஆகிறதை உணர்ந்து மெதுவாக மனோரஞ்சனை நெருங்கினாள்.
சிறிது நேரம் கழித்தே பொன்னி அங்கே வந்தாள். அவள் வந்த உடன் அபர்ணா புன்னகையுடன் அங்கிருந்து அகன்றாள்.
அவள் அங்கிருந்து அகன்ற சிறிது நேரத்திற்கெல்லாம் மனோரஞ்சனின் அறையிலிருந்து “டாக்டர்” என்ற பொன்னியின் குரல் அந்த இரவு நேரத்தில் அலறலாகக் கேட்டது.
காதல் வளரும் . . . . . .
error: Content is protected !!