Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா 8

அத்தியாயம் 8

“என்ன பாட்டி, என்னை பத்தி தான் பேசிகிட்டு இருக்கீங்க போல” என்று கேட்டபடி ஸ்மிருதி வந்து நிற்க, “ஆமாடி” அதட்டலோடு சொன்னவரோ,.. “சரி முதல்ல நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு, நீ உன்னோட புருஷனுக்கு சமச்சி போடுறியா இல்லையா, எதற்காக அவரை இப்படி துரும்பா இழச்சி போய் கூட்டிட்டு வந்திருக்க” என கேட்க,.. “பாட்டி இப்படி கேட்கிறது உனக்கே ஓவரா தெரியல, அவர் என்ன சின்ன குழந்தையா சாப்பிடாட்டினா ஊட்டி விடுறதுக்கு” என ஸ்மிருதி சலிப்பாக கேட்க,…



Advertisement

“ஆமாடி, புருஷன் பொண்டாட்டிக்கு குழந்தை மாதிரி தான், புருஷன் சாப்பிடலனா பொண்டாட்டி அவருக்கு ஊட்டி விடுறதுல எந்த தவறும் இல்லை” என பாட்டி சொல்லி கொண்டிருந்த நேரம், இங்கு சாப்பிட்டு கொண்டிருந்த அஜய்க்கு புரை ஏற ஆரம்பித்தது,.. அங்கு ஸ்மிருதிக்கோ எரிந்து கொண்டிருந்தது,…

“பார்த்து அண்ணா” என்றவாறு அஜய்யின் தலையையும் முதுகையும் தடவி கொடுத்தாள் ஹேமா,… “ஏன்டி,.. உன்னோட புருஷனுக்கு தானே புரை ஏருது, வந்து தட்டி கொடுக்க மாட்டியா” என பாட்டி கடுகடுவென்று சொல்ல, அதற்கு மேலும் அங்கு நிற்க பிடிக்காமல் வேகமாக அவ்விடத்தை காலி செய்தாள் ஸ்மிருதி,….

Advertisement

Advertisement

அஜய் சாப்பிட்டு முடித்து கைகழுவிய நேரம், “இங்கே வாப்பா இங்கே வந்து உட்காரு” அவனை தன் பக்கம் அமர சொன்னார் பாட்டி,…. “சொல்லுங்க பாட்டி” என்ற அஜய்யிடம்,.. “ஏன்பா அஜய் நீ நல்லா இருக்கியாப்பா” என கவலையுடன் கேட்க,..

“எனக்கென்ன பாட்டி, நான் நல்லா தானே இருக்கேன், நீங்க பார்த்துட்டு தானே இருக்கீங்க” என இதழ் விரிந்த புன்னகையுடன் சொன்னான் அஜய்…

Advertisement

“நான் அதை கேட்கலப்பா, ஸ்மிருதி உன்னை சந்தோசமா வச்சிருக்காளா, அவளோட பேச்சையும் நடவடிக்கையும் பார்க்கும் போது நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இல்லனு தோணுது, கல்யாணம் முடிந்து ஒரு மாதம் வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் இந்த வீட்டுல தான் இருந்தீங்க, அப்போதும் முகம் கொடுத்து பேசிக்காம நீ யாரோ நான் யாரோ மாதிரி தான் திரிஞ்சீங்க, தனியா போனாளாவது ஒருத்தருகொருதர் மனம் விட்டு பேசி ஒன்னு சேருவீங்கனு நினைச்சி தான், நீ அன்னைக்கு கேட்டதுக்கு உங்க ரெண்டு பேரையும் தனியா அனுப்பி வச்சோம், ஆனா நாங்க நினைச்ச மாதிரி எதுவும் மாறின மாதிரியே தெரியல, அப்படினா நீங்க இப்படியே தான் இருக்க போறீங்களா, ஒன்னு சேரவே மாட்டீங்களா” என்று கேட்ட பாட்டிக்கு தன்னையும் மீறி கண்ணீரும் சுரந்து விட, அஜய் தான் பதறி போய்விட்டான்…

“எதுக்காக நீங்க இந்தளவுக்கு எமோசனல் ஆகுறீங்க பாட்டி, உங்களுக்கே தெரியும் எனக்கும் சரி ஸ்மிருதிக்கும் சரி, ரொம்ப பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கு, அதனை கடந்து வர சில காலம் ஆக தான் செய்யும், அதை நீங்க முதல்ல புரிஞ்சிக்கனும் பாட்டி,. விஷ்ணு கிட்ட சொன்னதை தான் இப்போ உங்க கிட்டயும் சொல்றேன், ஸ்மிருதி இப்போ என் பொறுப்பு, அவ கழுத்தில தாலி கட்டிய நொடியிலிருந்து அவ எனக்கானவள்னு நான் மனசுல அழுத்தமா பதிய வச்சுகிட்டேன், அவ மனசுல இருக்கும் வேதனை குறையும் வரை அவளுக்காக நான் காத்திருப்பேன்” என அஜய் சொல்ல, கனகவள்ளி பாட்டி கண்ணீரை துடைத்து மகிழ்ச்சியோடு புன்னகைத்தார், இப்போது தான் அவர் மனது கொஞ்சம் சமன்பட்டது போல் இருந்தது.

பாட்டியின் முகத்தில் புன்னகையை பார்த்த பிறகு தான் அஜய்க்கும் நிம்மதி பெருமூச்சு வந்தது, அஜய்யும் பாட்டியும் பேசி கொண்டிருந்த வேளையில் அவ்வீட்டிற்கு வருகை தந்தனர் ஸ்மிருதியின் சித்தப்பாவான கார்மேகமும், சித்தியான வசுந்தராவும்,… அவர்களை  தொடர்ந்து அவர்களின் செல்வ புதல்வன்களான கண்ணன், மற்றும் செழியன் அவர்களின் உடன் வந்திருந்தனர்,….

ஈஸ்வரனின் ஒரே தங்கை தான் வசுந்தரா, மென்மையான மனம் கொண்டவர், இவரின் கணவர் கார்மேகம், இவரும் தன் மனைவிக்கு சளைத்தவர் இல்லை, தன்னுடைய சிரிப்பு மற்றும் பேச்சினால் தன்னை சுற்றியிருப்பவர்களை ஈர்த்து விடுவார், இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து பதிமூன்று வருடத்திற்கு பிறகு பிறந்தவன் தான் செழியன், செழியன் பிறந்த அடுத்த ஆறுமாத்திலேயே கண்ணன் கருவாக உருவாகிவிட்டான், நமக்கு குழந்தையே பிறக்காதா என ஏங்கி கொண்டிருந்த அவர்களுக்கு இரண்டாவதாக கண்ணனும் பிறந்ததை எண்ணி திக்குமுக்காடி போயினர் அவர்கள்,..

கார்மேகம் சொந்தமாக ஸ்வீட் கடை நடத்தி வருகிறார், குழந்தைகள் பிறந்த அந்நாளிலிருந்து அவர்களுக்கு துன்ப காலம் போய் வசந்த காலத்துடன் தங்கள் செல்வங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்…

தன் மகளை கண்ட கனகவள்ளி பாட்டி,.. “அட,.. வசு வாடி, இப்போ தான் கண்ணு தெரிந்ததா இந்த வீட்டு பக்கம் வர” சிறிதாய் கடிந்தபடி மகளை வரவேற்றார் பாட்டி,..

“அத்த,.. இங்கே நானும் ஒருத்தன் இருக்கேன், என்னையும் கொஞ்சம் வரவேற்கிறது” என கார்மேகம் புன்னகையுடன் சொல்ல,… “இது உங்க வீடு மாப்பிள்ள, நான் உங்களை வரவேற்கனும்னு அவசியம் என்ன வந்தது,” என்றார் தன் மருமகனிடம்,…

“எப்படி இருக்கிங்க மாப்பிள்ள, உங்களை பார்க்க தான் அவசரமா கிளம்பி வந்தோம்” என கார்மேகம் வாய் நிறைய சிரிப்புடன் அஜயிடம் சொல்ல,.. “நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க,” என்றான் அஜய்யும்,…

“நேத்தே வரணும்னு தயாராகினோம், தோது கிடைக்கல, அதான் விடிந்ததுமே புறப்பட்டு வந்தாச்சு” என்ற சகுந்தலாவும், அஜய்யை நலம் விசாரிக்க துவங்கினார்..

“மாப்பிள்ள,.. இந்தாங்க, உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட்,” என்றவாறு அஜய்யின் கையில் இனிப்பு வகை நிரம்பிய சிறு பெட்டியை திணித்தார் கார்மேகம்,…

“மாமா,.. நல்லா இருக்கீங்களா” என்றவாறு, பெரியவனான செழியன், அஜயை நலம் விசாரித்திட, சின்னவனான கண்ணன் தன் அக்கா ஸ்மிருதியை காண வந்ததுமே ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்,…

“நல்லா இருக்கேன் பா,” என்ற அஜய், பன்னிரண்டு வயதே நிரம்பியிருந்த செழியனின் பள்ளி படிப்பை பற்றி சிறிது நேரம் பேசி கொண்டிருந்தான்,…

சகுந்தலாவும் வந்தவர்களை வரவேற்று, அவர்களுடன் பேசி கொண்டிருந்தார், ஹேமா அவர்களுக்கு சாப்பிட சர்பத் எடுத்து வந்து பரிமாறினாள்,… “என்ன அண்ணி, அண்ணாவும் விஷ்ணுவும் வேலைக்கு போயிட்டாங்களா” என வசுந்தரா கேட்க,… “ஆமா வசு, நீ வரது தெரிந்தா உன் அண்ணன் கண்டிப்பா போயிருந்திருக்க மாட்டாரு,” என்றார் அவரின் அருகில் வந்து அமர்ந்தவாறு..

“நம்ம ஸ்மிருதி எங்கே, ஆளையே காணோம், சித்தப்பா சத்தம் கேட்டதுமே ஓடி வந்துடுமே எங்கே போயிடுச்சு” என கார்மேகம் கேட்க, “இருங்க நான் போய் கூட்டிட்டு வரேன்” என்றவாறு ஸ்மிருதியின் அறை நோக்கி சென்றார் வசுந்தரா….

“உள்ளே வரலாமா” என கேலியாக அனுமதி கேட்டபடி அறையினுள் வந்த தன் சித்தியை கண்ட ஸ்மிருதி,.. “என்ன சித்தி,.. பர்மிஷன்லாம் கேட்கிறீங்க, சரி கேட்டது தான் கேட்டுடீங்க, வாங்க வாங்க உள்ளே வாங்க” என ஸ்மிருத்தியும் கிண்டலாக சொல்ல,.. “ம்ம்… உன்னோட இந்த குறும்பு பேச்சு இந்த சித்தி கிட்ட மட்டும் எப்போதும் மாறாதுன்னு எனக்கு தெரியும்” என்றார் வசுந்தரா,…

“ஏன்டா கண்ணா நீ இங்க என்னடா செஞ்சிக்கிட்டு இருக்க” என தன் மகனை அங்கு கண்ட வசுந்தரா கண்டிப்புடன் கேட்க,.. “அக்கா கிட்ட எனக்காக ஒரு மொபைல் வாங்கிட்டு வர சொன்னேன், அதுவும் வாங்கிட்டு வரேன்னு சொல்லுச்சிமா, ஆனா இப்போ என்னன்னா வாங்கிட்டு வர முடியாம போய்டுச்சின்னு சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு இருக்கு” என பத்து வயதே நிரம்பியிருந்த கண்ணன் ஸ்மிருதியை பற்றி குறை கூறினான்,….

“ஸ்கூல் படிக்கிற வயசுல உனக்கு என்னடா போன் வேண்டி கிடக்கு, போடா போய் அண்ணன் கூட இரு” என்றவாறு அவனை அறையிலிருந்து விரட்டினார் வசுந்தரா,….

“சரி சொல்லுடா ஸ்மிருதி, நீ நல்லா இருக்கியா, மாப்பிள உன்னை நல்லபடியா பார்த்துகிறாரா” என வசுந்தரா அவள் அருகில் அமர்ந்தபடி கேட்க, அவளோ.. “என்னை எதுக்காக சித்தி அவர் பார்த்துக்கனும், நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லையே, என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்” என்றாள்

“என்னடி இப்படி சொல்லிட்ட, கல்யாணம் முடிஞ்சி ஒரு மாசம் தான் ஆகுது, மாப்பிள்ளை நல்லா பார்த்துகிறாரானு கேட்டா, ஆமானு நல்லதா ஒரு வார்த்தையாவது சொல்லாம, இப்படி சிடுசிடுப்பா சொல்லி முடிச்சிட்ட” என வருத்தத்துடன் கேட்டார் வசுந்தரா…

“சித்தி, எனக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு மட்டும் உங்களுக்கு நியாபகம் இருக்குல, அதே மாதிரி இது எனக்கு செக்கேன்ட் மேரேஜ்ன்னு ஏன் உங்க யாருக்கும் நியாபகம் இருக்க மாட்டேங்கிது,” என வேதனையுடன் கேட்ட ஸ்மிருதி,.. “இந்த வீட்டுக்கு நேத்து தான் வந்தேன், வந்ததிலிருந்தே எல்லாரும் ஏன் இதையே கேட்டு சாகடிக்கிறீங்க, ஃபர்ஸ்ட் ஹஸ்பண்டை இழந்துட்டு நிக்கிறேன், நீங்களா முடிவு செய்து இன்னொரு கல்யாணத்தையும் செய்து வைத்து, அவர் கூட சந்தோசமா வாழ சொல்றீங்களே, இது எப்படி என்னால முடியும், என்னை எதுக்காக யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க” என்று கேட்டவளுக்கு சட்டென்று கண்ணீரும் வடிந்தது,.

“அட இப்போ எதுக்காக கண்கலங்குற, உன் வலி எங்களுக்கு புரியுதுடா, நீ உன் மனசுல இருக்கும் கவலைய மறக்கணும்னு தான் உனக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைத்தோம், அதோட நீ சின்ன பொண்ணு ஸ்மிருதி, போனவரையே நினைச்சிக்கிட்டு உன்னால வாழ்க்கையை வாழ்ந்திட முடியுமா சொல்லு, ரொம்ப கஷ்டம் டா,” என்றவர்,.. “சரி விடு, இப்போ நான் கேட்கிறதுக்கு மறைக்காம பதில் சொல்லு, மாப்பிளைய உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா” என வசுந்தரா கேட்க,.. “எனக்கு அவர துளி கூட பிடிக்கல சித்தி, அவரை பார்த்தாலே கோவம் வெறுப்பு  மட்டும் தான் வருது, இதுல என்னை அவர் கூட சேர்ந்து சந்தோஷமா வாழுனு வேற இம்சை படுத்துறீஙக எல்லாரும் சேர்ந்து, என்னால கண்டிப்பா அவர் கூட சேர்ந்து வாழ முடியாது சித்தி” என உறுதியாக கூறினாள்…

ஸ்மிருதியின் இந்த பேச்சில் திகைத்து போன வசுந்தரா,.. ‘என்ன இவ இப்படி பேசிக்கிட்டு இருக்கா, அவருக்கு அப்படி என்ன கொறச்சலா இருக்கு, இவ முதல் கணவரை விட அழகுலேயும் சரி, அந்தஸ்துலேயும் சரி, அஜய் மாப்பிள்ளை தான் முதலாவதாக தெரிகிறார்’ என்று தன் மனதில் பேசி கொண்டவர், ‘என்ன செய்றது ஸ்மிருதி தன்னோட முதல் கணவர் மேல அதிக அன்பை வச்சிருக்கா, எந்த பொண்ணாலும் இன்னொரு வாழ்க்கையை அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்கமுடியாது தான், ஆனா இவ எதுக்காக மாப்பிள்ளையை இந்தளவு வெறுக்கிற, கல்யாண முடிந்த சில நாட்கள் நான் இவ கூட தான் இருந்தேன், அப்போ அவர் மேல இந்தளவு கோவமா இருந்தது போல நான் பார்க்கலையே, என்னவா இருக்கும்’ என்று நினைத்தவர்,.. ‘சரி ஸ்மிருதி கிட்டயே கேட்போம்’ எனும் முடிவிற்கு வந்து, தன் அண்ணன் மகளை நோக்கி,.. “மாப்பிள மேல நீ எதுக்காக இந்தளவு கோவமா இருக்க, என்ன காரணம்” என வசுந்தரா கேட்க, அந்த இடத்திற்கு சரியாக வருகை தந்தார் கார்மேகம்…

“என்னடா ஸ்மிருதி, எப்படி இருக்க” என வந்தவர் கேட்க,.. “நலலா இருக்கேன் சித்தப்பா, நீங்க எப்படி இருக்கீங்க” என தன் சித்தப்பாவை கண்ட ஆனந்தத்தில் அவளும் விசாரிக்க துவங்கினாள்,…

“உன் சித்தப்பாக்கு என்னடா, நானும் நல்லா இருக்கேன்” என்றவர்,.. “புள்ளைய கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டு அது கூட இருந்து கதை பேச ஆரம்பிச்சியடியா” மனைவியிடம் கேட்டவர்,… “ஏன்டா ஸ்மிருதி,.. வந்ததுமே உன்னோட சித்தி பாடம் நடத்த ஆரம்பிச்சிட்டாளா” என்றார் சிரித்தவாறே….

“சித்தியை விடுங்க சித்தப்பா, எங்கே நான் கேட்ட ஸ்வீட், கொண்டு வந்தீங்களா, இல மறந்துட்டீங்களா” என ஸ்மிருதி ஆவலாக கேட்க,.. “நீ கேட்டு நான் எப்படி டா மறப்பேன், உன் புருஷன் கிட்ட தான் கொடுத்திருக்கேன், நீயும் அவரும் சேர்ந்து ஆற அமர சாப்பிடுங்க” என்று சிரித்தவர், ஸ்மிருதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பத்தை கவனிக்க தவறினார், அவளின் சித்தியான வசுந்தராவோ அதனை சரியாக கவனித்து கொண்டார்,…

“சரி சரி,… பேசுன வரைக்கும் போதும், வாங்க” என்றபடி தன் மனைவியை அழைத்த கார்மேகம்,.. “நீயும் வாடா” என்றவாறு ஸ்மிருதியையும் கையோடு மற்றவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தார்,….

அனைவரும் கூடி அமர்ந்து சந்தோசமாக பேசி கொண்டிருந்தனர், தன் தங்கை வந்திருக்ககும் செய்தி கேள்விபட்டு ஈஸ்வரனும் வீடு வந்து சேர்ந்தார்,… விஷ்ணுவை தவிர அன்று மதிய உணவை வந்திருக்கின்ற உறவினர்களுடன் தான் அஜய்யும் சேர்ந்து சாப்பிட்டான்,…

“அப்றம் மாப்பிள்ள, நீங்க எப்படியும் ரெண்டு வாரமாவது இருந்துட்டு தானே போவீங்க, அடுத்த வாரமும் உங்களுக்காவே நாங்க இங்கு வருவோம்” என கார்மேகம் சொல்ல,.. “இல்ல,… அது இன்னைக்கே நாங்க கிளம்பனும்” என அஜய் சொல்ல, ஸ்மிருதிக்கு தான் இது பெரிய திகைப்பை ஏற்படுத்தியது..

“என்னப்பா, வந்த அடுத்த நாளே கிளம்பனுமா, இன்னும் ஒரு நாளு நாளாச்சு இருந்துட்டு போலாம்ல” என பாட்டி சொல்ல,. “மன்னிச்சிடுங்க பாட்டி, இருக்க முடியாத சூழ்நிலை, நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா ஒரு மாதம் தங்கிட்டு போற மாதிரியே வரேன்” என்றான் அஜய்…

“சரிப்பா, உனக்கும் லேவதேவை இருக்க தானே செய்யும்,” என மேலும் அவனை நச்சரிக்க விரும்பாமல் கேட்டதோடு விட்டு விட்டார் பாட்டி,….

“சிந்தாமணி அண்ணி வந்ததா கேள்வி பட்டேன், எங்கே ஆளையே காணோம்” என வசுந்தரா கேட்க,.. “அதை ஏன் கேட்கிற வசு, அக்கா ரெண்டு மூணு நாள் தங்கிட்டு போலாம்னு தான் வந்துச்சி, அது வந்த நேரம் அதோட மாமியாருக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சுனு தகவல் வந்தது, அதான் விடிந்ததுமே புறப்பட்டு போயிடுச்சி” என சகுந்தலா சொல்லி முடிக்க,… “ஓஹ்… அதான் காலைல இருந்து அந்த டைனோசரை காணோமா,’ என மனதில் நினைத்துக் கொண்டாள் ஸ்மிருதி,….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!