Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் செல்ல சீமாட்டி

என் செல்ல சீமாட்டி 15

அத்தியாயம் 15 

 

கம்லா பாட்டி ஊருக்கு சென்று ஒரு வாரம் ஆகிவிட்டது. பாட்டி இல்லாததால், ருக்மணி இப்பொழுது அருணா வீட்டிற்கு வந்து அவளுக்கு உதவி செய்கிறார். அருணா மறுத்தாலும் காதில் போட்டு கொள்ள மாட்டார். கோலுவை வேலைக்கு சேர்த்துக்கொண்டு அவனை நன்றாக பார்த்து கொள்வதால் இவர்கள் மீது அவருக்கு மிகுந்த அன்பு ஏற்பட்டிருந்தது.

 



Advertisement

வந்த புதிதில் மேம்சாப் என்று தான் அருணாவை அழைத்தார். நானும் உங்க பொண்ணு மாதிரி தானே ருக்கும்மா, அருணா என்றே கூப்பிடுங்கள் என்றிருந்தாள்.

 

பாட்டி வீட்டு தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு நேரே அருணா வீட்டிற்கு வந்துவிட்டார்.

Advertisement

 

Advertisement

“என்ன அருணா? காலை சமையல் முடிஞ்சுதா?” 

 

“நேத்து நீங்க சொல்லிக்கொடுத்த ராகி ரொட்டி தான் செஞ்சிட்டு இருக்கேன். நீங்களும் சாப்பிட்டு தான் போகணும்”

Advertisement

 

“சரிதான், துணி எல்லாம் கொடு, நான் போய் துவைச்சிட்டு காய போடறேன்”

 

“நான் இன்னிக்கு காலையிலே துவைச்சிட்டேன். நீங்க வந்து உட்காருங்க. பொண்ணுங்க எல்லாம் கிளம்பியாச்சா? ஆமா ருக்கும்மா உங்க பொண்ணுங்க பத்தி அதிகம் எதுவும் சொன்னதில்லையே. என்ன செய்றாங்க மூணு பேரும்?”

 

“பெரியவ நைனிக்கா, நர்ஸிங் இந்த வருஷம் தான் சேர்ந்திருக்கா. அடுத்தவ தேவிக்கா பத்தாவது. சின்னவ கன்னிக்கா இப்ப தான் ஏழாவது.”

 

“சூப்பர்.. மூணு பேருக்கும் நல்ல பெயர் வச்சிருக்கீங்க”

 

“நான் தான் வைச்சேன். எங்க வீட்டுக்காரர்க்கும், மாமியாருக்கும் ஆண் குழந்தை  தான் வேணும்னு ஆசை, அதுனால பிள்ளைகளை பெருசா கண்டுக்க மாட்டாங்க“

 

இங்கும் இப்படி மனிதர்கள் இருக்கிறார்களே என்று தான் தோன்றியது அருணாவிற்கு. 

 

“உங்க கணவர் எப்படி இறந்தாரு? உங்க அப்பா அம்மா எல்லாம் எங்க இருக்காங்க?”

 

“டீ எஸ்டேட்ல தான் வேலை செஞ்சிட்டு இருந்தாரு. ரொம்ப பாசமா இருக்க மாட்டாரு, ஆனாலும் கடமையை சரியா செய்வாரு. மாதம் மாதம் சம்பளத்தை என்கிட்ட அப்படியே கொடுத்திடுவாரு. திடீர்ன்னு ஒரு நாள் காய்ச்சல்ன்னு  படுத்துட்டாரு. என்ன நோய்ன்னு கண்டு பிடிக்கிறதுக்குள்ளவே போய் சேர்ந்துட்டாரு. பத்து வருஷம் ஆச்சு, சின்ன பொண்ணுக்கு அப்ப இரண்டு வயசு தான்”

 

“பழசை கேட்டு சங்கடப்படுத்திட்டேனா ருக்கும்மா?“

 

“அதை எல்லாம் நினைச்சு வருத்தப்படற நிலையை தாண்டியாச்சு. இப்ப ஏதோ  கதை சொல்ற மாதிரி தான் இருக்கு” என்றார் மெல்லிய சிரிப்புடன்.

 

“மூணு குழந்தைகளை தனி ஆளா வளர்க்கிறது பெரிய விஷயம்”

 

“கம்லா டீச்சர் தான் எனக்கு உதவி செஞ்சாங்க. நைனி அப்ப அஞ்சாவது  படிச்சுக்கிட்டு இருந்தா. அவங்க வகுப்பு ஆசிரியர் தான் கம்லா டீச்சர். அவ தான் டீச்சர் கிட்ட, எங்க அம்மாவுக்கு ஏதாவது வேலை கிடைக்குமான்னு கேட்டிருக்கா. அப்ப தான் அவங்க என்னை அழைச்சு பேசுனாங்க. அப்புறம் அவங்க வீட்லயே வேலையும் போட்டு கொடுத்து இன்னிக்கு வரைக்கும்  துணையா நிக்கிறாங்க”

 

“கோலு? உங்க சொந்த தம்பியா?”

 

“ஆமா, என் கல்யாணத்தப்ப அவனுக்கு நாலு வயசு. ஆண்  குழந்தை வேணுன்னு வேண்டி பொறந்த குழந்தை. இப்படி மனவளர்ச்சி கம்மியா பொறந்துட்டான்னு என் அம்மாவுக்கு ரொம்ப வருத்தம்.

 

என் புருஷன் இறந்த ஒரு வருடத்துக்குள்ள எங்க அப்பாவும் அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்க. அநாதரவா இருந்த பதினாலு வயசு கோலுவை எங்க கூட கூட்டிட்டு வந்துட்டேன். எங்க அக்காவும் தங்கையும் நல்ல வசதியா தான் இருக்காங்க. ஆனாலும் எங்ககூட தொடர்பு வச்சுக்க மாட்டாங்க. எங்கே பேசுனா எங்களுக்கு உதவி செய்யணும்னு தள்ளியே இருந்துக்குவாங்க. எங்களுக்கு கோலுவும் அவனுக்கு நாங்களும்னு வாழ்ந்துட்டு இருக்கோம்” என்று அவரது கதையை கூறி முடித்தார்.

 

அதற்குள் அருணா ராகி ரொட்டியும் தேங்காய் சட்னியும் தயார் செய்து அவருக்கு வைத்து கொடுத்தாள்.

 

“நீயம் சாப்பிடு அருணா”

 

“இன்னும் பத்து நிமிஷத்துல அவர் வந்திடுவார் ருக்கும்மா… நான் அவரோடு  சேர்ந்து சாப்பிட்டுக்கிறேன்”

 

“நல்ல பிள்ளைகள் நீங்க இரண்டு பேரும். நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கிறேன் என்று அதை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார்”

 

இவர்கள் வசிக்கும் பகுதி லோயர் மிடில் கிளாஸ். கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் வசிக்கும் இடம்.

 

அங்கே இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளியில் தான் படித்து கொண்டிருந்தனர். 

அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு ஆங்கிலம் சரளமாக பேச வரவில்லை என்பதை கண்டறிந்த அருணா, மாலை இரண்டு மணி நேரம் விருப்பம் உள்ள பிள்ளைகளுக்கு ஆங்கில டியூஷன் எடுத்தாள். 

 

நான் இப்படி செய்யட்டுமா? என்று அருணா  கேட்டபொழுது “உனக்கு பிடிச்சிருந்தா செய் செல்லம்மா“ என்று விட்டான் குரு.

 

இவ்வளவு கட்டணம் என்று கறாராக வாங்கவில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுங்கள் என்று கூறிவிட்டாள். இந்த காலத்தில் இப்படி யார் சொல்லி கொடுப்பார்கள் என்று பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு அருணாவின் மேல் தனி மரியாதை.

 

டீ கடையில் வியாபாரம் நன்றாக நடந்தாலும் இன்னும் வீட்டிற்கு பணம் எடுக்கும் நிலைமை வரவில்லை. அதனால் இந்த சிறிய கட்டணம் அவர்களுக்கு  உதவியாக தான் இருந்தது.

 

சிக்கனமாக பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தினர் இருவரும். கணக்கு பார்க்காமல் செலவு செய்ததில் கிடைத்த மகிழ்ச்சியை விட இப்படி பட்ஜெட் போட்டு செலவு செய்வதில் அதிக நிம்மதி கிடைப்பதாக உணர்ந்தனர்.

 

“இன்னும் ஒரு மூனு மாசம் செல்லம்மா.. அதுக்கப்புறம் நமக்கு நிரந்திரமா கடையில் இருந்து ஒரு வருமானம் வந்திடும்”

 

“ஒன்னும் பிரச்சனை இல்லை குரு, சாமாளிச்சிக்காலம்”

 

“கடையை முறையே ரெஜிஸ்டர் பண்ணனும். எல்லாம் முறை படி செய்யணும். அதுக்கு நிறைய வேலை இருக்கு. ஒண்ணன்னா பார்க்கணும்”

 

“நான் எதாவது உதவி செய்யணுமா?”

 

“அதுக்கு ஆதார் கார்டு எல்லாம் வேண்டும். முதலில் ஆதார் கார்டு இந்த வீட்டு அட்ரஸ்க்கு மாத்தணும். ரேஷன் கார்டு அப்ளை பண்ணனும். அது எல்லாம் எங்க என்னன்னு விசாரிச்சு வைக்கிறீயா? நாளைக்கே ஆரம்பிச்சிடலாம்”

 

“சரி குரு, நான் விசாரிச்சு வைச்சிடறேன்“

 

வாரம் ஒரு நாள், செவ்வாய் கிழமை மட்டும் கடைக்கு விடுமுறை. அன்று மற்ற வேலைகள் அனைத்தையும் பார்த்துக்கொள்வார்கள்.

 

செவ்வாய் காலையில் ஆதார் அட்டை புதுபிக்க சென்று விட்டு மதியம் வீடு திரும்பினார்கள். போவதற்கு முன்பே தக்காளி சாதம் செய்து வைத்துவிட்டு வந்திருந்தாள் அருணா. இருவரும் உண்டுவிட்டு ரிலாக்ஸாக அமர்ந்தார்கள்.

 

“அருணா, நம்ம மின்னஞ்சல் ஒரு தடவை செக் பண்ணுவோமா?”

 

“பண்ணலாமே, யார்கிட்டயும் சொல்லாம வந்துட்டோம். நிறைய பேர் தேடி இருப்பாங்க. யாராவது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டிருக்கங்களான்னு பார்க்கலாம்”

 

அப்படி பார்க்கும் போது,  நந்தனின் மின்னஞ்சல் பார்த்து இன்பமாக அதிர்ந்தனர்.

 

தம்பியின் வார்த்தைகள்  குருவை நெகிழ்த்தியது.

 

“நம்ம அம்மாக்களை மட்டுமே பார்த்து, மத்தவங்களை கஷ்டப்படுத்திட்டோமா செல்லம்மா?”

 

“நம்ம பெங்களூர்ல இருந்தாலும் தூரமாதானே இருந்தோம். விடுங்க, திரும்ப மெயில் அனுப்பலாம். நம்ம கூட ஒரு தொடர்பு இருந்தாலே சந்தோசப்படுவாங்க. அபி, ரித்து இவங்களும் இருக்காங்களே அனுப்புனர் லிஸ்ட்ல. மூனு பேருக்கு சேர்த்தே பதில் அனுப்புங்க“

 

இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியப்படுத்தாமல், பொதுவாக தம்பி தங்கைகளுக்கு பதில் அனுப்பினார்கள். 

 

அதில் இருந்து சிறியவர்களுக்கு இடையே மின்னஞ்சல் தொடர்பு மெல்லியதாக தொடங்கி, இதமாக தொடர்ந்தது. சிறியவர்களுக்கு சரி தவறு எல்லாம் எடுத்து கூறினார்கள். இவர்களிடம் யோசனை கேட்கும்பொழுது தயங்காமல் யோசனை கூறினார்கள். நல்ல கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்கள். மொத்தத்தில் தேவைப்படும்பொழுது நாங்கள் இருக்கிறோம் என்று சிறியவர்கள் மனதில் பதிய வைத்தனர்.

 

“அக்கா எதாவது நல்ல ஊரா போய் சுற்றி பாருங்க. மறக்காம அங்க இருந்து நம்ம வீட்டுக்கு லெட்டர் போடுங்க. நாங்களும் உங்களை தேடி பார்க்கிற சாக்குல இன்னொரு ஊரயும் சுத்தி பார்ப்போமில்லை. ஒரே போரா போகுது லைப்” என்று ரித்து மெயில் அனுப்பி இருந்தாள்.

 

ரித்துவின் மெயிலை படித்து சிரித்து கொண்டனர் இருவரும்.

 

தெளிந்த நீரோடை போல வாழ்க்கை சென்றது. 

 

கடை ஆரம்பித்து ஆறுமாதங்கள் ஆகிற்று. இப்பொழுது போதுமானளவு  வருமானம் வருகிறது. பெங்களூர் சென்ற பாட்டி இன்னும் திரும்ப வரவில்லை.

 

அருணாவிற்கு அடிக்கடி குழந்தையின் நியாபகம் வரும். அப்பொழுது எல்லாம் வளைகாப்பு புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு, தன் தங்கத்தோடு பேசிக்கொண்டிருப்பாள். குருவிற்கும் குழந்தையின் எண்ணம் வரும். பஞ்சு பொதியென தன் கையில் வாங்கிய மகளின் ஸ்பரிசம் இன்னும் கையில் இருப்பதாய் சிலநேரம் தோன்றும். காலம் தான் அனைத்திற்கும் மருந்து என்பார்கள். காலங்கள் சென்றாலும் தங்கள் மகளின் இழப்பை தாண்டி வரமுடியுமா என்றுதான் தோன்றும் குருவிற்கும் அருணாவிற்கும்.

 

அங்கே பெங்களூரில், கம்லா பாட்டி திரும்ப ஹல்த்வானி வர வேண்டும் என்று அடம் பிடித்துக்கொண்டிருந்தார். பாட்டியின் மருமகனால் கொண்டு வந்த விட முடியாத சூழ்நிலை. பாட்டி தனியாக போய்க்கொள்வதாக கூறவும், அவர்களுக்கு தனியே அனுப்ப மனமில்லை. அதனால் குரு வந்து அழைத்து செல்ல முடியுமா என்று பாட்டியின் மகள் கரிஷ்மா அருணாவிடம் கேட்டிருந்தார்.

 

எத்தனை உதவி செய்திருப்பார்கள். முடியாது என்று மறுக்க முடியாதில்லையா. அதனால் செவ்வாய் விடுமுறையோடு இன்னும் இரண்டு நாட்கள் கடைக்கு விடுமுறை விட்டுவிட்டு  குரு பெங்களூரு சென்று வருவதாக ஏற்பாடு.

 

அருணாவிற்கு மனது சஞ்சலமாகேவே இருந்தது.. 

 

“யாராவது உன்னை பார்த்தா என்ன செய்றது ? எப்படி சமாளிப்ப? “

 

“பார்த்தா என்ன செல்லம்மா, முன்ன தான் நமக்கு என்ன பண்ணப்போறோம்ன்னே  தெரியாது. இப்ப தான் நாம இங்க ஒரு நிலையா நின்னுட்டோமே. கேட்டா உள்ளதை சொல்லி, எங்க ஊருக்கு வாங்கன்னு சொல்லிட்டு வந்துடறேன். மனசை போட்டு குழப்பிக்காத செல்லம்மா.”

 

“அம்மா அத்தை யாரவது பார்த்தா?”

 

“அவங்க எதுக்கு பெங்களூர் வரப்போறாங்க. வந்தாலும் நான் பார்த்துகிறேன்”

 

“இவ்வளவு தூரம் போற குரு, ஊருக்கு போயிட்டு எல்லாரையும் பார்த்திட்டு வரணும்ன்னு தோணுதா?”

 

அருணா நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் குழம்பிய மனநிலையில் இருந்தாள்.

 

“இப்ப நான் போகட்டுமா? வேண்டாமா? நீ இப்படி பதட்டப்பட்டா நான் எங்கயும் போகலை செல்லம்மா”

 

“இல்ல, என்னால நம்ம தங்கம் போனதுக்கு காரணமான விஷயங்களை மறுபடியும் ஏத்துக்க முடியாது, அதான்”

 

“என்னை நம்புற இல்ல? உனக்கு அப்புறம் தான் எல்லாம். நான் போய் பாட்டியை கூட்டிட்டு சீக்கிரமா வந்துடறேன்”

 

சரி என்று தலை ஆட்டினாள்.

 

“நீ தனியா இங்கே இருந்துப்ப தானே?”

அதற்கும் இருந்துப்பேன் என்பது போல தலை ஆட்டினாள்.

 

“எதுக்கும் நான் ருக்கும்மா கிட்ட சொல்லி நைனிக்காவை உனக்கு துணையா அனுப்ப சொல்றேன்”

 

அதற்கும் தலையசைப்பு மட்டுமே.

 

“மூனே  நாள் தான் செல்லம்மா, பிளைட் டிக்கெட் அவங்களே புக் பண்ணி இருக்காங்க, போயிட்டு வந்துடறேன்”

 

வெகுவாக அருணாவை சமாதானம் செய்து பெங்களூருக்கு வந்து சேர்ந்தான்  கந்தகுரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!