Skip to content
Post Views: 3,508
அத்தியாயம் 19
வடிவேலுவும் ஆனந்தனும் அருணாவுடன் நைனிட்டால் சென்று வந்தார்கள்.
அவ்வளவு நன்றாக பார்த்துக்கொண்டாள் பெண் இருவரையும். பொறுமையாக ஒவ்வொரு இடமாக விளக்கம் கூறி அழைத்து சென்றாள்.
Advertisement
மறுநாள், இருவரையும் ஹல்த்வானி சப்ஜி மண்டி அழைத்து சென்றாள். வடிவேலுவுக்கு மிகவும் பிடித்திருந்தது அந்த மார்க்கெட். பிறகு மூவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்கி வந்தார்கள்.
Advertisement
ஒரு நாள் பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்றாள். பாட்டி அவர்களுக்கு சிறு விருந்தே ஏற்பாடு செய்திருந்தார்.
Advertisement
பாட்டி தனக்கு தெரிந்த தமிழில் இருவருடனும் உரையாடினார். தேவைப்படும்பொழுது அருணா இரு பக்கமும் மொழி பெயர்த்தாள். அதனால் சம்பாஷணைகள் சுமூகமாக சென்றது.
Advertisement
“எங்க பிள்ளைங்க இங்க பிழைக்க நீங்க தான் துணையா இருந்தீங்கன்னு குருவும் அருணாவும் சொன்னாங்க. அதுக்கு நாங்க எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல“ என்றார் ஆனந்தன் பாட்டியிடம்.
“தங்கமான பிள்ளைங்க.. அவங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்று கூறி பாட்டி சிரித்து கொண்டார்.
வடிவேலுவுக்கும் ஆனந்தனுக்கு இந்த ஊர், மக்கள், கடை, வீடு என்று எல்லாம் அவ்வளவு திருப்தியாக இருந்தது. இவர்களது அமைதியான வாழ்வை பார்த்து உள்ளம் குளிர்ந்துதான் போனது.
அன்று, மதியம் உணவை முடித்துவிட்டு குரு கடைக்கு கிளம்பினான்.
அருணாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் இருவரும்.
அப்பொழுது இரண்டு பெண்கள் வந்தார்கள்.
“வாங்க தீதி..”
“கடைக்கு இப்பதான் பலகாரம் கொடுத்துட்டு வரோம். அப்படியே உன்னையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தோம். உங்க அப்பா வந்திருக்காங்களாமே?”
“ஆமா தீதி, இது என் அப்பா, இது என் மாமனார்..”
“இவங்க யசோதா.. இவங்க ராதா.. நம்ம கடைக்கு ஸ்னாக்ஸ் டெலிவரி செய்றவங்க” என்று அருணா முறையே அறிமுகப் படுத்தினாள்.
“நமஸ்தே” என்று கூறி இரு பெண்களும் இவர்கள் கால்களை தொட்டு வணங்கினார்கள்.
இருவரும் பதறிபோய் அருணாவை பார்த்தனர்.
“இங்கே பெரியவர்களை பார்த்தால் இதுதான் பழக்கம்” என்றாள் அருணா மெதுவாக.
“இந்தா அருணா.. நாளைக்கு நீங்க அல்மோரா போறதா ருக்கு சொன்னா.. போகும் போது சாப்பிட எடுத்துட்டு போங்க” என்று பை நிறைய பலகாரங்களை கொடுத்தனர்.
“எதுக்கு இவ்வளவு? ரொம்ப நன்றி.. எவ்வளவு ஆச்சு?”
“நாங்க அன்பா கொடுக்கிறது அருணா.. காசு வேணாம்”
“அன்பு வேற.. தொழில் வேற.. இப்படி கேக்காமலே கொண்டு வந்து கொடுக்கிறதே பெரிய அன்பு தானே.. “, பின் அவளே கணக்கு பார்த்து காசு கொண்டு வந்து கொடுத்தாள்.
“இப்படி பெண் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கனும்“ என்று அந்த பெண்கள் ஆனந்தனையும் வடிவேலுவையும் பார்த்து கூறினார்கள். ஹிந்தியில் தான் பேசினார்கள்.
“இன்னிக்கு எங்களுக்கு ஒரு தொழில் இருக்கு. அதுல இருந்து வருமானம் வருது, ‘எங்களால என்ன முடியும்னு யோசித்த எங்களை, எங்களாலையும் முடியும்னு’ புரிய வச்சது உங்க பசங்க தான்.”
அருணா அவர்கள் கூறுவதை மொழி பெயர்த்தாள். தங்களை பற்றி பெருமையாக கூறுவது ஒரு சங்கோஜத்தை ஏற்படுத்தியது தான். ஆனால் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் பேசுவதை மொழி பெயர்த்தாள்.
“இப்ப எங்க குழுவில் கிட்டத்தட்ட முப்பது பெண்கள் இருக்கோம். எல்லோரும் அவங்க அவங்க வீட்ல இருந்தே பலகாரம் செய்து, விற்பனை செய்ய வழி சொல்லிக்கொடுத்தது அருணாவும் குருவும் தான்.
முதலில் நாங்க இரண்டு பேரும் மட்டும் சொக்கன் சாய் துக்கானுக்கு ரவுட் செய்து கொடுத்தோம். நல்ல வரவேற்பு கிடைக்கவும், எங்க பாரம்பரிய பலகாரமான சிங்கல், அர்ஸா, கஜோல், குல்குலா, குல்ஜியா.. இப்படி எல்லாம் செய்ய ஆரம்பிச்சோம். இங்க டூரிஸ்ட் வரவங்க கேட்டு வாங்கிட்டு போனாங்க.
அப்ப குரு தான் வேற சில இடத்துலயும் கேட்டு அங்கேயும் ஆர்டர் வாங்கி கொடுத்தார். அப்புறம் நாங்க இன்னும் நாலு பேரை சேர்த்துக்கிட்டோம். கம்லா டீச்சரும் எங்களுக்கு துணையா இருக்காங்க. அப்படியே எட்டு மாதத்தில இப்ப முப்பது பெண்கள் இருக்கோம்.
நான் ஒரு பால் வித்வா.. அப்படினா சின்ன வயசுலயே விதவை ஆனவள். எங்க குழுவில் என்னை மாதிரி கணவரை இழந்தவர்கள், கணவனால் கை விட பட்டவர்கள், இப்படி பத்து பேர் இருக்கோம். பெண்கள் சிறு தொழிலுக்காக அரசாங்க திட்டங்கள் பற்றி எல்லாம் அருணா தான் சொல்லி கொடுத்தாள்.
இதுல எங்கேயும் நேரடியா அருணா இல்லை. ஆனால் எங்களுக்கு எப்படி செய்யலாம், என்ன செய்யலாம் அப்படின்னு ஒரு வழிகாட்டியா நிக்குறா.
தனி தனியே இருந்த அகல், எண்ணெய், திரி, நெருப்பு, எல்லாவற்றையும் சரியாக சேர்த்து தீபமா நாங்க ஒளிர துணையா இருக்காங்க உங்க பிள்ளைங்க.
இப்படி பட்ட மனிதர்களை பார்ப்பது அபூர்வம். செய்யாத உதவிக்கே போஸ்டர் அடிச்சு ஒட்டுற இந்த காலத்துல, ‘நாங்க என்ன, எப்படி செய்யலாம்னு மட்டும் தான் சொன்னோம்.. மிச்சம் உங்க உழைப்பும் திறமையும் தானே..’ அருணாவும் சரி குருவும் சரி எப்பவும் இப்படி தான் சொல்வாங்க.
அற்புதமான பெண் அருணா. அன்பான பையன் குரு. குரு எங்க கோலுவை வேலைக்கு சேர்த்து அவனுடன் வைத்திருக்கிறான். இது கோலு மாதிரி குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய உதவி தெரியுமா? இந்த சமூகத்திற்கு ஒரு முன்னுதாரம் இல்லயா?
எங்கயோ பிறந்து வளர்ந்து அடைக்கலமா தான் எங்க ஊருக்கு வந்தாங்க. ஆனால் அவங்க மட்டும் முன்னேறாம இங்க உள்ளவர்களுக்கும் தங்களால் ஆன உதவி செய்யனும்னு நினைக்கிறாங்க. அந்த நல்ல மனசுதான் எங்க எல்லார் மனசுலயும் அவங்களுக்கு நல்ல இடத்தை கொடுத்திருக்கு”
இருவரும் பிறகு அருணா கொடுத்த டீயை குடித்துவிட்டு விடைபெற்று கிளம்பினார்கள்.
“இதுவரைக்கும் என்னத்தை பெருசா சாதிருச்சிகா உங்க பொண்ணு, எந்த ஒரு லட்சியமும் கிடையாது” என்று தான் எப்பொழுதும் மஞ்சு கூறுவார்.
“உங்க பையன் சரியான மக்கு. எப்படியோ தட்டி தடுமாறி இன்ஜினியரிங் படிக்க வச்சாச்சு. இவனை வச்சு பெருசா கனவு எல்லாம் காண முடியாது” என்பார் அஞ்சனா.
ஆனால், பல்லாயிரம் மையில்களுக்கு அப்பால் வந்து நின்று, ஒரு தொழில் தொடங்கி, அங்கே உள்ள மக்கள் மனதில் இடம் பிடித்து, அவர்கள் வாயால் இப்படி ஒரு பாராட்டை பெற்றிருக்கிறார்கள். சாதாரண பெண்மணியிடம் இருந்து கிடைத்த இந்த பாராட்டு, பெரிய விருது வாங்கியதை போல இருந்தது இரு அப்பாக்களுக்கும்.
பின் ஆனந்தனும் வடிவேலுவும் சற்று நேரம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார்கள்.
ஆனந்தன் இப்பொழுது காசு வாங்கி வைத்துக்கொள்வதும் சரியான சில்லறை கொடுப்பதும் என்று குருவிற்கு உதவினார்.
வடிவேலு, கோலுவோடு சேர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தார்.
“நாளைக்கு லீவு தானே கோலு, நாங்க எல்லாம் அல்மோரா போக போறோம்” என்றார் வடிவேலு.
“லீவுன்னா போர் சித்தப்பா… “
“நீயும் எங்க கூட வர்றீயா?”
“ருக்கு தீதிகிட்ட கேளுங்க.. நானும் வர்றேன்”
பின் வடிவேலு அருணாவிற்கு அழைத்து கோலுவை அழைத்து செல்ல முடியுமா? அவங்க அக்கா கிட்ட கேளும்மா” என்று கூறினார்.
ருக்மணி சரி என்று கூறவும், கோலுவையும் உடன் அழைத்து செல்வதாக முடிவானது.
அன்று இரவு படுத்ததும், “நம்ம வந்து அதுக்குள்ள ஒரு வாரம் ஓடியே போயிடுச்சு இல்ல மச்சான்”
“ஆமா மச்சான், நாள் போனதே தெரியலை. நாளைக்கு அல்மோரா போயிட்டு வந்து ஒரு நாள் தான் இருக்கு. திரும்ப ஊருக்கு கிளம்பனும்”
“எனக்கு இங்க இருந்து கிளம்பவே மனசு இல்ல மச்சான். மனசு நிறைஞ்சு இருக்கு”
“கிளம்பலனா, என் பொண்டாட்டியும் உன் பொண்டாட்டியும் இங்க கிளம்பி வந்துடுவாங்கய்யா…”
“அதுவும் சரி தான். இனி வருஷத்துக்கு ஒரு முறை இப்படி நம்ம இரண்டு பேரும் மட்டும் கிளம்பி வரணும்.”
“உனக்கு பேராசை மச்சான். ஒரு தடவை தனியா வரத்துக்கே நம்ம எப்படி போராட வேண்டியதா போச்சு… திரும்ப எல்லாம் வாய்ப்பு இல்ல மச்சான்”
“நீ வேணா என் தங்கச்சிய கூட்டிட்டு செகண்ட் ஹனி மூன் வாயேன்”
“யோவ்.. பேசாம தூங்குய்யா.. லூசுத்தனமா உளறிக்கிட்டு”
“நல்லது சொன்னா லூசுங்கற? என் தங்கச்சி இல்லாம கொழுப்பு கூடி போச்சுய்யா உனக்கு”
“இருய்யா.. போய், உன் சம்சாரத்துக்கிட்ட, ‘உன் புருஷன் என்னையும் அவர் தங்கச்சியை மட்டும் ஹனி மூன் போக சொல்றான். உனக்கும் உன் புருஷனுக்கும் ஏதாவது சண்டையான்னு கேக்கறேன்’ ”
“யோவ்.. ஏன்யா..அப்படி மட்டும் கேட்டு வச்சிரதய்யா”
“உன் தங்கச்சி பத்தி இனி பேசுவியாய்யா?”
இப்படி கலாட்டாவாக பேசிக்கொண்டே இருவரும் தூங்கி விட்டார்கள்.
மறுநாள் காலை நாலு மணிக்கு அருணா, குரு, வடிவேலு, ஆனந்தன், கோலு என்று ஐவரும் கிளம்பினார்கள். குரு மாடி வீட்டில் இருப்பவரிடம், அவனே டாக்சியை ஓட்டிக்கொள்வதாக கூறினான். அவரும் ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று மகிழ்ச்சியாக வண்டியை கொடுத்துவிட்டார்.
error: Content is protected !!