Skip to content
Post Views: 3,959
அத்தியாயம் 20
“மஞ்சு, என் பொண்ணுக்கு தோசை ஊத்த தெரியாதுன்னு சொன்ன? என்ன எல்லாம் சமைச்சு கொடுத்தா தெரியுமா? கருப்பட்டி பணியாரம், சீயம், ஆப்பம், பருப்புருண்டை குழம்பு, வத்தக்குழம்பு, மாங்காய் பச்சடி இப்படி நம்மூர் பலகாரத்துல ஆரம்பிச்சி குல்குலா, சிங்கோரி, மண்டுவா ரொட்டி அப்படின்னு அந்தூரு பலகாரம் வரை செஞ்சு அசத்திட்டா எம்பொண்ணு!
Advertisement
அர்ஸான்னு ஒரு இனிப்பு பலகாரம் செஞ்சிருந்தா பாரு.. நம்ம ஊர் அதிரசம் கணக்கா.. இப்ப நினைச்சாலும் வாயில அந்த ருசி போகலை.. அட அட அட..”
“உங்க பொண்ணு என்ன வேலைக்கா போறா? வீட்ல இருந்து வித விதமா சமைக்கறதை தவிற வேற என்ன வேலை?” என்று நொடித்துக்கொண்டார் மஞ்சு.
Advertisement
Advertisement
“விருந்தோம்பல் அப்படின்னா என்னன்னு தெரிஞ்சுக்கனும்னா என் பொண்ணு வீட்டுக்கு போயிட்டு வாங்க..”
மஞ்சு பேசுவதை காதில் வாங்கியது போலவே தெரியவில்லை. ஆனந்தன் அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே இருந்தார்.
Advertisement
“என்னமா ஹிந்தி பேசுறா தெரியுமா? நம்ம மாப்பிள்ளை எப்படி பம்பரமா சுத்துறாரு தெரியுமா? செல்லம்மா செல்லம்மான்னு என் பொண்ணு கால் தரையில பட விடாம தாங்குறாரு..”
“டேய்… ஊர்ல இல்லாத பொண்ணு மாப்பிள்ளை.. எல்லாம் நான் தூக்கி வளர்த்த பிள்ளைகள் தானே.. இந்த பார்வதி பேரனும் பேத்தியும் தானே.. நான் சொல்லி கொடுத்த நல்ல பழக்க வழக்கம் இல்லாமையா போகும்..” என்றார் பாரு பாட்டி.
இவர்கள் பேசி கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டே உணவருந்தி கொண்டிருந்த ரித்விகா செந்தில் தாத்தா இருவருக்கும் பாரு பாட்டி சொன்னதை கேட்டதும், புரை ஏறிக்கொண்டது.
இருவரையும் பாட்டி கடுமையாக முறைக்கவும், இருவரும் ஒருவர் தலையை ஒருவர் மாற்றி மாற்றி தட்டி கொண்டு அருகில் இருந்த நீரை எடுத்து குடித்தனர்.
ஹல்த்வானி சென்று வந்ததில் இருந்து ஆனந்தன், அருணா குருவின் பெருமையை வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தார்.
அதற்கு மஞ்சுவும் பாரு பாட்டியும் நொடித்து கொண்டதில் இருவர் கழுத்தும் சுளிக்கியது தான் சிறப்பு.
அங்கே கும்பகோணத்தில்,
“அப்படியே நம்ம அப்பா மாதிரி இருக்கான் அம்மா குரு.. அவ்வளவு சுறுசுறுப்பு.. அத்தனை உயர்வா சொல்றாங்க நம்ம குருவை அந்த ஊர் மக்கள். கடைக்கு கூட சொக்கன் டீ ஸ்டால் அப்படின்னு நம்ம அப்பா பேரு தான் அம்மா வச்சிருக்கான்” என்றார் வடிவேலு தன் தாயிடம்.
“பெரிய ஸ்டார் ஹோட்டல் வச்சிருக்கான் உங்க பிள்ளை. அதுக்கு உங்க அப்பா பேரு வச்சிருகான்னு பெருமை வேற” என்று நொடித்துக்கொண்டார் அஞ்சனா.
“காலையில புருஷனும் பொண்டாட்டியுமா சேர்ந்து கடையை சுத்தம் பண்ணி, கோலம் போட்டு, பூஜை செஞ்சு, தொழிலை ஆரம்பிக்கிறாங்க பாருங்க. பார்க்கவே அவ்வளவு நல்லா இருந்துச்சு தெரியுமா?”
வடிவேலுவும் அஞ்சு பேசுவதை காதில் வாங்காமல் பேசி கொண்டே சென்றார்.
“நீ சொல்றதை கேக்கவே மனசுக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு வடிவேலு” என்றார் சொர்ணம் பாட்டி நெகிழ்ச்சியாக.
“இந்த அம்மா பத்தி ஒரு வார்த்தையாவது கேட்டானா என் புள்ள. இல்ல மாயாஜாலம் பண்ணி என்னை மொத்தமா மறக்க வச்சிட்டாளா உங்க மருமகள்?” என்று ஆங்காரமாய் கேட்டார் அஞ்சு.
“சும்மா வாய்க்கு வந்ததை பேசாதே அஞ்சு.. தங்கமான பிள்ளை அருணா.. உனக்கு எவ்வளவு ஆசையா ஷால் எல்லாம் அது கையாலே பின்னி கொடுத்திருக்கு.. கலர் கூட கவனிச்சியா, உனக்கு பிடிச்ச மஞ்சள். எப்படி அனுசரணையா இருக்கு தெரியுமா நம்ம பையன் கிட்ட? அவன் கண்ணை பார்த்தே அவன் என்ன சொல்லவரான்னு தெரிஞ்சுக்குது. நம்ம குருவும் அருணாவுமான்னு எனக்கே சந்தேகமா இருந்துச்சு. அப்படி ஒரு அந்யோனியம்.. எங்களை அப்படி பார்த்து பார்த்து கவனிச்சுது. எங்க அம்மா கை பக்குவம் அப்படியே இருக்கு தெரியுமா?”
“அப்ப நான் சமைக்கிறது நல்லா இல்லைன்னு சொல்றீங்களா?”
“நீ எப்பம்மா சமைச்சிருக்க? நாங்க சாப்பிட்டாத்தானே நல்லா இருக்கு இல்லைன்னு சொல்றதுக்கு. பாட்டி சமைக்காட்டி வேலை செய்ற அம்மா தானே சமைப்பாங்க” என்றாள் அபிநயா இப்பொழுது.
பின் அஞ்சனாவின் தீப்பார்வையில் கப்சிப் ஆகிவிட்டாள்.
“நம்ம பிள்ளைகளை அந்த ஊரே கொண்டாடுது அஞ்சு. அங்க உள்ள மனுஷ மக்களுக்கு அவ்வளவு உதவியா இருக்காங்க இரண்டுபேரும். உனக்கும் உங்க அண்ணிக்கும் இந்த ஜென்மத்துல அவங்க அருமை புரிய போறது இல்ல”
“போதும் உங்க மகன் மருமகள் புராணம். எங்களுக்கு புரிஞ்ச வரைக்கும் போதும்” என்று நொடித்துக்கொண்டு எழுந்து சென்றுவிட்டார் அஞ்சு.
இப்படி இரண்டு அப்பாக்களும் பிள்ளைகளை பற்றி தான் பேசி கொண்டிருந்தார்கள்.
ஆஃபிஸ் சென்று முதலில் மஞ்சுவிற்கு தான் அழைத்தார் அஞ்சு.
“எப்படி இருக்க அஞ்சு, எனக்கு தலையெல்லாம் வலிக்குது”
“எனக்கு காதுல இருந்து ரத்தம் மட்டும் தான் வரலை.. பொண்ணு மாப்பிள்ளை புராணத்தை உங்க அண்ணா முடிக்கவே மாட்டாரு போல அஞ்சு”
“இங்கேயும் அதே கதை தான் மஞ்சு, இதுக்காகவே நாம இரண்டு பேரும் ஒரு தடவை அங்கே போயிட்டு வரணும். என்ன சொல்ற?”
“நம்மளை ஒரு தடவையாது வாங்கன்னு கூப்பிட்டாங்களா? இல்லையே.. அப்புறம் எப்படி போறது?”
“அதுவும் சரி தான் அஞ்சு, நம்ம அவ்வளவு இளக்காரமா போய்ட்டோம் அவங்களுக்கு”
“அம்மான்னா சும்மாவா? நம்ம தேவை அவங்களுக்கு வராமலா போகப்போது. அப்ப அவங்களே கூப்பிடுவாங்க, அப்ப எல்லாரையும் ஒரு கை பாத்துக்கலாம்”
“பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுன்னு சொல்லுவாங்க. நம்ம ஒவ்வொரு நாளும் அவங்களை நினைச்சுட்டே இருக்கோம். நம்மளை பத்தி ஒரு வார்த்தை கூட விசாரிக்கல பார்த்தியா?”
“நீ வருத்த படாத மஞ்சு… நிச்சயம் அவங்க தப்பை உணருவாங்க. அம்மான்னு நம்ம கிட்ட வந்து நிப்பாங்க பாரு.”
“நீயும் மனதை வ்ருத்திக்காத அஞ்சு.. நம்மளை ஒரு நாள் எல்லாரும் புரிஞ்சுக்குவாங்க”
இருவரும் தொலைபேசியில் பேசி தங்கள் மனதை ஆற்றிக்கொண்டார்கள். இவர்களது வேற்றுமையால் வந்த பிரச்சனைகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு, இப்பொழுது ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
‘இப்படி அஞ்சுவும் மஞ்சுவும், அருணாவும் குருவும் ஒரு நாள் நிச்சயம் இவர்களிடம் வருவார்கள்’ என்று வீம்பு பிடித்து கொண்டு காத்து கொண்டிருக்கிறார்கள்.
காலமும் நேரமும் ஆனால் யாருக்காகவும் காத்து கொண்டிருக்காது இல்லையா?
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அருணா குருவின் காதல் ஆழமாக வளர்ந்துகொண்டே சென்றது.
புருஷன் பொண்டாட்டின்னா.. இவங்கள மாதிரி தான் இருக்கணும்னு சொல்லாதவர்கள் பாக்கி இல்லை.
சொக்கன் டீ ஸ்டால் என்றால் ஹல்த்வானியில் மிகவும் பிரபலம். உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமில்லாமல் டூரிஸ்ட் வருபவர்களும் தேடி இங்கே வந்து சென்றார்கள்.
“நேரமாச்சு பாட்டி.. சீக்கிரம் வாங்க..” என்று பாட்டி வீட்டின் கேட்டின் முன்பு தனது ஸ்கூடியில் நின்று கொண்டு ஹாரன் அடித்துக்கொண்டிருந்தாள் அருணா.
அழகான மயில் கழுத்து நிறத்தில் வெளிர் மஞ்சளும் ரோசும் கலந்த எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்த சல்வார் கமீஸ் அணிந்திருந்தாள். குரு நேற்று இரவு தான் பரிசளித்திருந்தான்.
“உள்ளே போய் கூப்பிட வேண்டியது தானே செல்லம்மா.. பாட்டிக்கு கதவு பூட்ட உதவலாம் இல்ல?” என்று கேட்டு கொண்டே தனது மிதிவண்டியில் வந்திறங்கினான் குரு. முதலில் மிதிவண்டி தான் வாங்கினார்கள். சமீபத்தில் தான் இன்ஸ்டால்மென்டில் ஸ்கூட்டி வாங்கி இருந்தார்கள். பாட்டியும் இவர்களுடன் வருவதால், அருணாவும் பாட்டியும் ஸ்கூட்டியிலும் குரு மிதிவண்டியிலும் செல்வதாக ஏற்பாடு.
“உங்க பாட்டி எல்லாம் ஐயன் லேடி, அவங்களே வந்துடுவாங்க சொக்கரே..” என்றாள் அருணா அழகாக சிரித்துக்கொண்டே.
அவளது அழைப்பிலும் சிரிப்பிலும் சொக்கித்தான் போனான்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே பாட்டி கதவை பூட்டிக்கொண்டு வந்துவிட்டார். அதே மயில் கழுத்து நிற சல்வாரில்.
“எப்படி இருக்கு குரு?” என்று தனது துப்பட்டாவை அட்ஜஸ்ட் செய்துகொண்டே கேட்டார்.
“உங்களுக்கு என்ன பாட்டி, அப்படியே ஸ்ரீதேவி மாதிரி இருக்கீங்க..” என்று கூறவும் பாட்டியும் மலர்ந்து புன்னகைத்தார்.
“அடப்பாவி.. பாட்டிக்கும் வாங்கி இருக்கேன்னு சொல்லவே இல்லை?” என்றாள் குருவிடம்.
பலசமயங்களில் மரியாதை பன்மையில் பேசுவாள் கணவரிடம், சில சமயங்களில் ஒருமையில் பேசுவாள். குருவிற்கு மனைவி எப்படி பேசினாலும் பிடிக்கும்.
“அதானே.. உன் செல்லம்மாவிற்கும் வாங்கி இருக்கேன்னு என்கிட்ட சொல்லவே இல்லை” என்றார் பாட்டி.
“இரண்டு பேருக்கும் சர்ப்ரைஸ். கிளம்புங்க நேரமாச்சு”
“ஒரே டிரஸ் ஓகே.. யாருக்கு அழகா இருக்குன்னு சொல்லுங்க?” என்றாள் அருணா.
“அதான் சொல்லிட்டானே.. நான் ஸ்ரீதேவி மாதிரி இருக்கேன்னு “ என்றார் பாட்டி.
அருணா உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டாள்
‘ஆஹா.. இரண்டும் சேர்ந்து நம்மளை மாட்டிவிட பாக்குதுங்க’ என்று மனதிற்குள் கூறிக்கொண்டு, “எல்லாரும் நமக்காக காத்துகிட்டு இருப்பாங்க. அருணா பார்த்து மெதுவா ஓட்டிட்டு வரணும். நான் பின்னாடியே வந்துடறேன், கிளம்புங்க” என்று அவர்களை கிளம்ப சொல்லி, இவன் அவர்களுக்கு முன்னே தன் மிதிவண்டியில் பறந்துவிட்டான்.
பெண்களின் சிரிப்பு சத்தம் குருவை பின் தொடர்ந்தது.
“போலாமா பாட்டி, உங்களுக்கு இந்த டிரஸ் சூப்பரா இருக்கு”
“உனக்கும் ரொம்ப நல்லா இருக்கு அருணா.. குரு இரண்டு பேருக்கும் பொருந்தற மாதிரி அருமையா செலக்ட் பன்னிருக்கான்”
“பின்ன யாரு புருஷன்? இந்த அருணா புருஷனாச்சே?”
இவர்கள் பேசிக்கொண்டே மெதுவாக சென்றார்கள்.
கரிஷ்மா ஒரு முறை வந்திருந்த போது, ”எங்க அம்மா என் கிட்டயோ என் பசங்க கிட்டயோ கூட இவ்வளவு ஒட்டுதலோடு இருந்தது இல்லை அருணா.. நீயும் குருவும் அவங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல். நீங்க இருக்கிற தைரியத்துல தான் நான் அங்கே பசங்க வீட்ல நிம்மதியா இருக்கிறேன்” என்று கூறி இருந்தார். அவர் மகள் வீட்டில் ஐந்து மாதமும் மகன் வீட்டில் ஐந்து மாதமும் மீதம் இரண்டு மாதங்கள் ஹல்த்வானியிலும் என இருக்கிறார்கள்.
மூவரும் இப்பொழுது நந்தா தேவி இண்டஸ்ட்ரீஸ் முதலாம் ஆண்டு விழாவிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
நந்தா தேவி இண்டஸ்ட்ரீஸ், பெண்கள் சேர்ந்து தொடங்கிய உத்தரகண்ட் மாநிலத்தின் சிறப்பு ஸ்னாக்ஸ் செய்து விற்பனை செய்யும் சிறு தொழில். இப்பொழுது மாநிலம் முழுவதும் இவர்களது பொருட்கள் பிரபலமாகி உள்ளது.
ஓராண்டில் அசுர வளர்ச்சி என்றே கூற வேண்டும்.
அருணாவோ பாட்டியோ அதில் நேரடியாக பங்கு கொள்வதில்லை. இருந்தாலும் இந்த தொழில்காண விதையை போட்டது அருணா என்று அந்த பெண்கள் அருணாவையும் குருவையும் கொண்டாடினார்கள். பாட்டியின் அனுபவமும் அறிவும் ஆரம்ப நாட்களில் தங்களை தாங்கி பிடித்தது என்று கம்லா பாட்டியிடம் நிறைய அன்பும் மரியாதையும் வைத்துள்ளார்கள்.
இவர்கள் மூவரும் சென்று முன்வரிசையில் அமர்ந்து விழாவில் கலந்துகொண்டு, அங்கே உள்ளவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அங்கே பேசும்பொழுது ஒரு பெண்மணி, பாட்டியின் பழைய மாணவி என்று அறிமுக படுத்திகொண்டு இவர்களுடன் உரையாடினார்.
அருணாவிடம் குழந்தை இல்லையா என்று கேட்டார். விஷயம் அறிந்ததும், “நான் ஒரு விரதம் சொல்றேன். அதை முழு மனதாக இரும்மா.. நிச்சயம் குழந்தை பிறக்கும்” என்றார்.
சில நேரங்களில் சிலர் கூறுவதை உடனே கேட்க வேண்டும் என்று தோன்றுமல்லவா? அப்படி அந்த பெண்மணி கூறும்பொழுது அருணாவிற்கு தோன்றியது.
“சொல்லுங்க அம்மா” என்றாள்.
“சந்தோஷி மாதா விரதம். கேள்வி பட்டிருக்கியா?”
“சந்தோஷி மாதா பத்தி தெரியும் அம்மா.. ஆனா நான் எந்த விரதமும் இதுவரை இருந்தித்ததில்லை” என்றாள் அருணா.
“டீச்சர் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் இல்லையா?” என்றார் கம்லா பாட்டியை பார்த்து.
“நான் பெருசா விரதம் இருந்ததில்லை.. நீயே விவரம் சொல்லும்மா.. நாங்க அப்படியே செய்கிறோம்” என்றார் பாட்டி.
நாங்கள் என்று பாட்டி தன்னையும் இணைத்து சொன்னது அவருக்கும் அருணாவிற்குமான ஒட்டுதலை காட்டியது அந்த பெண்மணிக்கு.
பிறகு அந்த பெண்மணி விரத முறைகளை அழகாக எடுத்து சொன்னார்.
மூவரும் சிரத்தையாக கேட்டு கொண்டார்கள்.
பிறகு மதிய உணவையும் அங்கேயே முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்கள்.
அன்று இரவு ஒரு வாக் போகலாம் என்று கணவன் மனைவி இருவரும் நடந்தார்கள்.
“எனக்கு எதோ ஒரு நம்பிக்கை வருது… இது அந்த கடவுளே நமக்கு சொன்ன செய்தி மாதிரி தெரியுது சொக்கரே.. “என்றாள் அருணா.
“கண்டிப்பா செல்லம்மா.. நம்ம தங்கம் நம்மகிட்ட சீக்கிரமா வந்திடுவா பாரு.. ”
“இங்க வந்து இரண்டு வருஷம் ஓடிடுச்சு”
“ஆமா அருணா, இரண்டு வருஷம் போனதே தெரியலை. நம்ம தங்கத்தின் இழப்பின் பாரத்தை தவிர நமக்கு இங்க வந்தப்புறம் வேற எந்த கவலையும் இல்லை இல்ல”
“முடிவில்லா தேடலோடு இங்கு வந்தோம். நிறைவான வாழ்கை தான் இங்கே, நம்ம தங்கம் வந்துட்டா அப்புறம் குறையேதும் இருக்காது இல்ல சொக்கரே”
“நம்ம அந்த விரதம் இருப்போம் அருணா. கடவுள் காட்டுற வழியில் நம்ம பயணத்தை தொடங்கினோம். ஏதோ ஒரு ரூபத்தில் கடவுள் நம்மளுக்கு வழியை காட்டிகிட்டு தான் இருக்காரு.
சம்பந்தமே இல்லாத ஊர், அறிமுகமே இல்லாத தொழில், பழக்கமில்லாத வாழ்கை முறை, ஆனாலும் எல்லாமே நமக்கு நல்லதை தான் கொடுத்தது. பாட்டி, ருக்கும்மா, கோலுன்னு.. எத்தனை அன்பான உறவுகள். அதே மாதிரி தான், இப்ப இந்த அம்மா நமக்கு விரதம் பத்தி சொல்லி இருக்காங்கன்னு தோணுது”
“நான் இந்த வாரத்துல இருந்தே அப்ப விரதத்தை ஆரம்பிச்சிடறேன்”
“நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் செல்லம்மா… கடவுள் நம்ம பக்க துணையா இருப்பாரு செல்லம்மா..”
இருவரும் கைகோர்த்துகொன்டே மீதி தூரத்தை அமைதியாக நடந்தனர்.
error: Content is protected !!