என் செல்ல சீமாட்டி 21
ஏன் மஞ்சு, அந்த ஊருக்கு போனா, நாம அந்த ஊர் காரங்க ஆயிடுவோமா? இவங்க இரண்டு பேருக்கும் என்ன தெரியும்ன்னு விரதம் எல்லாம் ஆரம்பிக்கிறாங்க?”
“ஆமா அஞ்சு.. அம்மான்னு என்கிட்டயும் ஒரு வார்த்தை கேக்கல.. அத்தைன்னு உன்கிட்டயும் யோசனை கேக்கல.. யாரோ சொன்னாங்களாம், இந்த விரதம் இருந்தா குழந்தை பிறக்கும்னு. உடனே என் பொண்ணு இருக்க போறாளாம். தகவல் மட்டும் தான் சொல்றா”
Advertisement
“குழந்தை இறந்தப்போ எப்படி பதறி போய் நாம ஓடி போய் நின்னோம் மஞ்சு… நம்மளை இருக்கவே விடாம துரத்திட்டு, நமக்கு பாசமே இல்லாத மாதிரி இல்ல செய்றாங்க”
“எல்லோர் கண்ணுக்கும் நம்ம என்னமோ அவங்க எதிரி மாதிரி காட்டுறாங்க”
Advertisement
Advertisement
“சரியா சொன்ன.. என்னமோ பண்ணட்டும். நம்ம கிட்ட கேக்காதவங்களுக்கு நாம எதுவும் சொல்ல வேண்டாம்”
“நம்ம சொன்னா மட்டும்? நம்ம விரதம் இருக்க சொல்லி இருந்தா இருப்பாங்களா?”
Advertisement
“இங்கே எங்க அம்மாவோட ஒன்னு விட்ட தம்பி பொண்ணுக்கு, ஏழு வருஷமா குழந்தை இல்லாம இருந்தது, சஷ்டி விரதம் இருந்து இப்ப தங்க விக்ரஹம் மாதிரி ஆம்பிளை குழந்தை பிறந்திருக்கு. எனக்கு கூட நம்ம அருணாகிட்ட சொல்லணும்னு ஆசை.. சொன்னா, என்ன சொல்லுவாங்களோனு நான் சொல்லலை, அஞ்சு”
“அதானே, நாம ஏதாவது சொன்னா.. வெந்த புண்ணுல வேலை பாய்ச்சாதீங்கன்னு நம்மகிட்ட தானே எகிறுறாங்க எல்லாரும். என் ஆபீஸ்ல கூட வேலை பாக்கிறவங்க ஒருத்தங்க பையனுக்கு கூட குழந்தை பிறக்காம இருந்துச்சது. அவங்க சொல்லி அவங்க மருமகள் மேல்மருவத்தூர் அம்மனுக்கு வேண்டிக்கிட்டு இப்ப நாலு மாசம் முழுகாம இருக்கா”
அருணாவும் குருவும் தங்கள் விரதத்தை பற்றி கூறியதில் இருந்து அஞ்சுவும் மஞ்சுவும் தொலைபேசியில் பொருமி கொண்டிருக்கிறார்கள்.
விரதம் இருக்கலாம் என்று முடிவு செய்ததும் முதலில் அம்மாக்களுக்கு தான் அழைத்து கூறினார்கள். கூடவே தடங்கலாக எதுவும் சொல்லி விடாதீர்கள் என்று சேர்த்தும் கூறினார்கள்.
அதனால் அவர்களிடம் எதுவும் கூறாமல் இருவரும் கைபேசியில் புலம்பி கொண்டிருக்கிறார்கள்.
வியாழன் இரவு சொர்ணம் பாட்டிக்கு அழைத்தார்கள் குருவும் அருணாவும். இரவு நேரத்தில் அழைத்திருந்தார்கள். அப்பொழுது இரவு உணவு உண்டு கொண்டிருந்தார்கள். அதனால் வடிவேலு, அஞ்சனா, அபிநயா மூவரும் அங்கு தான் இருந்தார்கள்.
“இதுவரை உங்க அம்மாவை கேக்காம நான் ஏதாவது செஞ்சிருக்கேன்னா? வீட்டுக்கு பெரியவங்க அவங்க… ‘ஆச்சி நாங்க குழந்தை பிறக்க என்ன விரதம் இருக்கனும்?’ அப்படின்னு அவங்க கிட்ட தானே கேக்கணும். நான் தான் வேண்டாதவ, உங்க அம்மாவையாவது கேட்கணுமா இல்லையா? எல்லாம் அவங்க இஷ்டத்துக்கு செய்யறாங்க. எதுக்கு சும்மா நல்லவங்க மாதிரி இப்ப போன் போடறாங்க?” என்று அஞ்சனா வடிவேலுவின் காதை கடித்தார்.
வடிவேலுக்கு கூட மனைவி சொல்வதில் நியாயம் இருப்பதாகவே தோன்றியது.
“சொல்லு குரு. நாளைக்கு தானே விரதத்தை ஆரம்பிக்கிறீங்க? எல்லாம் கேட்டு வச்சிருக்கீங்க தானே. தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கிட்டிங்களா?”
என்றார் சொர்ணம் பாட்டி.
“எல்லாம் கேட்டுகிட்டோம் ஆச்சி. ஒரு சந்தேகம் ஆச்சி, பொதுவா இந்த விரதம் பெண்கள் தான் இருப்பாங்களாம். ஆனா நானும் அருணாவோடு இருக்கலாம்னு நினைக்கிறன். அப்படி செய்யலாமா?”
“நல்லா செய்யலாம் குரு.. கணவனும் மனைவியும் இணைந்து விரதம் இருக்கிறது மிகவும் சிறப்பு. அந்த தாய் மனம் குளிர்ந்து உங்க வேண்டுதலை நிச்சயம் நிறைவேத்துவா”
“பாட்டி, நாங்க இந்த விரதத்தை நல்ல படியா முடிக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க” என்றாள் அருணா.
“நல்லபடியா செய்வீங்க அம்மாடி, நானும் இங்கே வேண்டிக்கிறேன். ஆனா முதலில் நம்ம குலதெய்வத்துக்கு பதினோரு ரூபாய் ஒரு மஞ்ச துணில சுத்தி எடுத்து வச்சிடுங்க. எந்த ஒரு பூஜையோ விரதமோ, முதலில் இப்படி குல தெய்வத்துக்கு காசு முடிஞ்சு வச்சிடனும்.”
“சரி ஆச்சி … அப்படியே பண்ணிடறோம்” என்றான் குரு.
“சாப்பிட்டீங்களா? சீக்கிரமா தூங்கிடுங்க. நாளைக்கு சீக்கிரமா எழுந்திருக்கணும் இல்ல?” என்றார் பாட்டி.
“ஆல் தி பெஸ்ட் அண்ணி. நாளைக்கு என்ன எல்லாம் செய்யணும்?” என்றாள் அபிநயா.
“தேங்க்ஸ் அபி. இந்த விரதம் இடைவெளி இல்லாமல் பதினாறு வாரங்கள் இருக்கணுமாம். வீடு வாசல் எல்லாம் சுத்தமா துடைத்து, படுக்கை விரிப்பு, திரை சீலைன்னு எல்லாத்தையும் துவைத்து சுத்தமா வைக்கணும். புளிப்பு சேர்க்க கூடாதாம். காலை ஒரு வேலை மட்டும் சாப்பிட கூடாது. சந்தோஷி மாதா படம் வைத்து பூ போட்டு விளக்கேற்றி, அவங்க வரலாறு அவங்களை பற்றிய கதைகள் படிக்கணுமாம். வறுத்த வேர்க்கடலை வெல்லம் கலந்து நெய்வேத்தியம் செய்யணும். விரதம் முடியற அன்னிக்கு பதினாறு ஆண் பிள்ளைகளுக்கு உணவு கொடுத்து விரதத்தை முடிக்கணும்.சாமி படம், அதற்கான புக் எல்லாம் வாங்கிட்டோம்.” என்றாள் அருணா.
“சரி குரு, நல்ல படியா ஆரம்பிங்க..” என்று மனதார கூறினார் சொர்ணம் பாட்டி.
அவர் பேசிக்கொண்டிருந்ததை அஞ்சுவும் கேட்டு கொண்டுதான் இருந்தார். எவ்வளவு சாதாரணமாக எடுத்து கொண்டார். நல்ல வார்த்தை கூறி, நம் வீட்டு பழக்கத்தையும் அழகாக கூறிவிட்டார் என்று வியப்பாக இருந்தது.
‘முதல் முறையாக நாம் ஏன் இப்படி நல்ல விதமாக யோசிக்கவில்லை’ என்று சிந்தித்தார்.
உடனே மஞ்சுவிற்கு அழைத்து இங்கே சொர்ணம் பாட்டி பேசியது, தனக்கு தோன்றியது அனைத்தையும் கூறினார்.
“இங்கே உங்க அம்மாகூட, விரதத்தை பத்தி சொன்னதும், நம்மளை மாதிரி பெருசா அலட்டிக்கல. இப்பயாவது பொறுப்பு வந்திருக்கே, நல்லபடியா செய்யட்டும்னு” தான் சொன்னாங்க.
“நம்ம தான் தேவை இல்லாம ரொம்ப யோசிக்கிறோம் போல”
“நீ சொல்றதும் சரி தான், நம்ம கிட்ட கேக்காட்டி என்ன? நல்லபடியா விரதம் இருக்கட்டும். குழந்தை வரம் கிடைச்சா நமக்கு அதைவிட வேற என்ன வேண்டும்?”
வெள்ளியன்று காலை அருணா குளிக்க சென்றிருக்கையில், குரு அனைத்து துணிகளையும் கொல்லைப்புறம் எடுத்து சென்று துவைத்து காய போட்டான் .
பின் இருவரும் சேர்ந்து வீடு பெருக்கி துடைத்தார்கள்.
வாசலில் கோலம் போடலாம் என்று வந்து பார்த்தால், அவர்கள் குடியிருப்பில் இருக்கும் பெண்கள், காம்பவுண்ட் முதற் கொண்டு, மாடிப்படி எல்லாம் கழுவி விட்டுக்கொண்டிருந்தார்கள்.
“எதுக்கு தீதி நீங்க எல்லாரும் காலைல கஷ்டபடறீங்க?” என்று அருணா கேட்டதற்கு, “சந்தோஷி வரும்போது சுத்தமா இருக்கனும் இல்ல, நீ அஞ்சு நிமிஷம் இரு. நாங்க கழுவி முடிக்கவும் நீ கோலம் போடலாம்” என்றுவிட்டு அவர்கள் வேலையை தொடர்ந்தார்கள்.
ஏற்கனவே நெகிழ்ச்சியாக இருந்த அருணா ‘சரி’ என்று தலையை மட்டும் ஆட்டிக்கொண்டாள்.
“நீ தலையை காய வைசிட்டு கோலம் போடு அருணா.. நான் கடைக்கு போய் பார்த்துட்டு சீக்கிரம் வந்துடறேன். நான் வந்ததும் மீதி வேலையை பார்ப்போம்” என்று கடைக்கு விரைந்து விட்டான்.
அங்கே கோலு கடையை சுத்தப்படுத்தி, அடுப்பு முதற்கொண்டு எல்லாம் துடைத்து, பாய்லர்க்கு பொட்டு வைத்து, பால் வாங்கி உள்ளே வைத்து என்று எல்லாம் செய்து வைத்திருந்தான்.
ருக்கும்மா துணைக்கு இருந்து எல்லாம் சொல்லி கொடுத்தார் கோலுவுக்கு .
இப்பொழுது உதவிக்கு இன்னொரு டீ மாஸ்டரும் வேலைக்கு சேர்த்திருந்தான். அவன் “ருக்கு தீதி சொன்னாங்க.. காலைல உங்க வீட்ல பூஜைன்னு. இன்னிக்கு நான் கடையை பார்த்துகிறேன் .. நீங்க வீட்டுக்கு போயிட்டு பூஜை முடிசிட்டே வாங்க” என்று குருவை அனுப்பி விட்டான்.
வீட்டிற்கு வந்து அருணாவிடம் கூறி சிரித்தான். “விரதம் இருக்கிறது மட்டும் தான் நாம, ஆனா நம்ம ஒண்ணுமே பண்ண வேணாம் போல. ஆளுக்கொரு வேலையா செய்றாங்க”
அருணா, மெல்லிய புன்னகையோடு தலையசைத்தாள்.
பின் வேர்க்கடலையை வாணலியில் போட்டு வறுக்க தொடங்கினாள்.
“நான் போய் பூ வாங்கிட்டு வரேன் செல்லம்மா, வேற என்ன வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கையில் , கம்லா பாட்டி அவர்கள் தோட்டத்து மலர்களை எல்லாம் பறித்து எடுத்து வந்திருந்தார்.
அவரும் குளித்து முடித்து பூஜைக்கு தயாராகி வந்திருந்தார்.
“வேற என்ன வாங்கணும் பாட்டி” என்றான் அவரிடமே.
அவர், ”வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், கொஞ்சம் பழங்கள்… “ என்று லிஸ்ட் கொடுத்து வாங்கி வர கூறினார்.
சொர்ணம் பாட்டி கூறியதை போல முதலில் அவர்கள் குல தெய்வதிற்கு காசு எடுத்து வைத்து பூஜையை தொடங்கினார்கள்.
கம்லா பாட்டி அமர்ந்துகொண்டு எல்லாம் ஒவ்வொன்றாக கூறினார்.
குருவும் அருணாவும் அருகருகே அமர்ந்து அனைத்தும் பக்தி சிரத்தை உடன் செய்தார்கள்.
பின் சந்தோஷி மாதா ஸ்தோத்திரம் படித்து, மாதாவின் கதையையும் படித்தார்கள்.
இவர்கள் குடி இருப்பில் வசிக்கும் பெண்களில் ஐந்து பேர் வந்து இவர்கள் பூஜையில் கலந்து கொண்டார்கள்.
அனைவரும் ஒரு மனதாக இவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டி சந்தோஷி மாதாவை பிரார்தித்து கொண்டார்கள்.
அருணாவும் குருவும் சேர்ந்து மங்கள ஆரத்தி காண்பித்து அனைவர்க்கும் பிரசாதம் கொடுத்தார்கள். பின் பாட்டி கூறியது போல அனைவருக்கும் தாம்பூலம் கொடுத்து அனுப்பினார்கள்.
மதியத்திற்கு தேங்காய் சாதமும் உருள கிழங்கு வறுவலும் என்று சமைத்து பாட்டியுடன் சேர்ந்து உண்டார்கள். இரவு பூரியும் குருமாவும் செய்துகொள்ளும்படி கூறிவிட்டு பாட்டி அவர் வீட்டிற்கு கிளம்பினார்.
இருவரது மனதும் நிர்மலமாக இருந்தது.
முதல் வாரம் மட்டுமில்லாமல் அடுத்து வந்த ஆறு வாரங்களும் இப்படி அனைவரும் துணை நின்று விரதத்தை சிறப்பாக செய்தார்கள்.
அன்று ஏழாவது வார பூஜை சிறப்பாக முடிந்திருந்தது. இரவு பேசிக்கொண்டிருந்துவிட்டு சற்று தாமதமாக தான் இருவரும் படுக்க சென்றனர்.
குரு படுத்ததும் தூங்கிவிட்டான். அருணாவிற்கு தூக்கம் வரவில்லை. அமைதியாக படுத்திருந்தாள். நள்ளிரவு நேரம் தாண்டியும் ஏதேதோ சிந்தனைகள். ‘விரதம் ஏழு வாரங்கள் எந்த தடங்கலும் இல்லாமல் முடிஞ்சிடுச்சுல்ல’ என்று யோசித்தாள்… அப்பொழுது திடீரென்று தான் அவளுக்கு ஒன்று தோன்றியது. ‘இன்னும் எனக்கு பீரியட்ஸ் வரவில்லேயே’ என்று.
இந்த எண்ணம் தோன்றியதும் உடனே ஒரு படபடப்பு அவளை தொற்றிக்கொண்டது. அப்பொழுது மணி நல்லிரவு இரண்டு .
“சொக்கரே.. சொக்கரே.. என்று பக்கத்தில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த குருவை தட்டி எழுப்பினாள்.
“என்னாச்சு? என்ன செல்லம்மா?” என்று பதறி கொண்டு தான் எழுந்தமர்ந்தான்.
அருணாவின் கைகள் நடுங்கி கொண்டிருந்தது. நெற்றியில் வேர்வை பூத்திருந்தது.
“என்னாச்சு செல்லம்மா.. என்ன பண்ணுது? என்ன பண்ணுது மா?” என்று வேகமாக சென்று தண்ணீர் எடுத்து வந்து அவளுக்கு பருக கொடுத்தான்.
“சொக்கரே.. சொக்கரே ..” என்றாளே தவிர வேற வார்த்தைகளே வரவில்லை.
குருவிற்கு வேர்க்க தொடங்கியது, “என்னன்னு சொல்லு செல்லம்மா.. உடம்புக்கு முடியலையா? டாக்டர் கிட்ட போவோமா?” என்றான் விட்டால் அழுதுவிடுபவன் போல.
“எனக்கு.. எனக்கு..”
“என்ன பண்ணுது சொல்லு செல்லம்மா.. எனக்கு பயமா இருக்கு. நான் பாட்டிக்கு போன் போடவா, அவங்களை வர சொல்லவா?”
வேண்டாம் என்று தலையசைத்து, குருவின் கைகளை கெட்டியாக பிடித்துகொண்டாள்.
பின், “எனக்கு..எனக்கு இந்த மாசம் இன்னும் பீரியட்ஸ் வரலை. நம்ம விரதம் ஆரம்பிச்சு ஏழு வாரம் ஆச்சுல்ல, அதுக்கு முன்ன வந்தது. இப்ப தான் ஞாபகம் வந்துச்சு..“என்று திக்கி திக்கி ஒரு வழியாக விஷயத்தை கூறிவிட்டாள்.
குருவிற்கு முன்பே ஒரு யூகம் இருந்தது. “சரி டா செல்லாம்மா.. வேற ஒன்னும் இல்லையே, உடம்புக்கு எதுவும் செய்யுதா?” என்று இதமாக பேசி அவள் முதுகை வருடி கொடுத்தான்.
“நல்ல விஷயமா தானே இருக்கும் சொக்கரே?” என்றாள் அருணா மெதுவாக.
“சந்தோஷி மாதா நமக்கு நல்ல வழி காட்டுனதா தான் எனக்கு தோணுது செல்லம்மா.. நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்” என்றான் குரு.
அதற்கு பின் இருவருக்கும் தூங்கா இரவாகி போனது. குருவின் தோள்வளைவில் அமைதியாக படுத்துகொண்டாள் அருணா. குருவும் மெதுவாக அவள் தலையை வருடிக்கொண்டே படுத்திருந்தான்.
விடியவும் இருவரும் எழுந்து குளித்து விளக்கேற்றி கடவுளை வணங்கினார்கள்.
“பாட்டிகிட்ட எந்த டாக்டர்கிட்ட காட்றதுன்னு கேட்டுட்டு போலாம் செல்லம்மா”
“நீங்க கடைக்கு போங்க. நான் பாட்டி வீட்டிற்கு போய் அவங்ககிட்ட கேக்கிறேன். அப்பாய்ண்ட்மென்ட் வாங்கணும்னா வாங்கிட்டு உங்களை கூப்பிடறேன்.”
இருவராலும் எவ்வளவு முயன்றும் தாங்கள் முதல் முறை கருவுற்றதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
கஷ்டப்பட்டு நிகழ்காலத்திற்கு வந்தனர்.
அருணா, நேரே பாட்டியின் வீட்டிற்கு சென்றாள். குரு கடைக்கு சென்று விட்டான்.
“என்ன அருணா காலையில அதிசயமா இந்த பாட்டியை பார்க்க வந்திருக்க. காலையில உன் சொக்கர் பின்னதானே சுத்துவ?” என்று சிரித்துக்கொண்டே அவளை வரவேற்றார்.
சுற்றி வளைக்காமல் அருணா நேரடியாக விஷயத்தை கூறிவிட்டாள்.
பாட்டியிடம் கூறியதும், பாட்டியின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் வழிந்தது.
“என்ன பாட்டி நீங்க?” என்று பாட்டியை கட்டி பிடித்துகொண்டாள்.
பின், பாட்டி தனக்கு தெரிந்த டாக்டரிடம் பேசி காலை பதினொன்று மணிக்கு அப்பாய்ண்ட்மென்ட் வாங்கினார்.
குருவிற்கு அழைத்து தெரியப்படுத்தினாள் அருணா. குருவும் கடையை பார்த்து கொள்ளுமாறு டீ மாஸ்டரிடமும் கோலுவிடமும் கூறிவிட்டு பாட்டி வீட்டிற்கு வந்துவிட்டான். அருணாவும் பாட்டியும் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார்கள்.
குரு இவர்களிடம் வரவும், பாட்டி அவன் தலையை வாஞ்சையாக தடவி கொடுத்தார். பின் காலை உணவை அங்கேயே முடித்து விட்டு பாட்டியையும் அழைத்துக்கொண்டு மருத்துவரை பார்க்க சென்றார்கள்.
“இப்ப எல்லாம் வீட்லயே டெஸ்ட் பண்ணி பார்த்துடறாங்களே? நீங்க பரிசோதிக்கலையா?” என்றார் அந்த மருத்துவர்.
“இல்ல, நேத்து தான் எனக்கு தெரிஞ்சிது”, என்று அருணா சங்கடத்துடன் சொல்லவும், “நல்ல பெண் தான்..” என்று கூறி அருணாவை பரிசோதித்தார்.
அடுத்த அரைமணி நேரத்தில் கர்ப்பம் என்று உறுதி செய்து வாழ்த்து தெரிவித்தார் அந்த மருத்துவர்.
டாக்டருக்கு நன்றி கூறிவிட்டு கிளம்பினார்கள். முதலில் பாட்டி வீட்டிற்கு சென்றார்கள்.
பாட்டி இருவர் கைகளையும் பிடித்துக்கொண்டு, “உங்க நல்ல மனசுக்கு இனி எல்லாம் நல்லபடியா நடக்கும். சந்தோசமா இருங்க” என்று மனதார வாழ்த்தினார்.
இருவரும் பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டார்கள்.
“மூனு மாசம் கழிச்சு எல்லார்கிட்டயும் சொன்னா போதும் “ என்றார் பாட்டி பெரியவராக.
சரி என்று கூறிவிட்டு வீடு திரும்பினார்கள். மனம் நிறைந்திருந்தது, உணர்வுகள் குவிந்திருந்தது. அதனால் பேச்சுக்கள் நின்றிருந்தது.
