உலகநாதன் நாளை ரதியோடு நடக்கும் கல்யாணத்தை எண்ணி கனவு கண்டு கொண்டு இருக்க.
Advertisement
திடீரென்று ரதி போன் செய்து அழுது கொண்டே ” மச்சான்” என்று அழுகவும் பதறிப் போனவர்..
உடனே அவளை பார்க்க அவள் வீட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார்..
கோவில் வாசலிலே கண் கலங்கியவாரே தன்னவளை பார்த்ததற்கு நெஞ்சம் பதறியது..
பைக்கை வேகமாக நிறுத்தியவர் ரதியின் அருகில் வர..
அவளோ தன்னவனை பார்த்தவாறு வேகமாக உலகநாதன் அருகில் வந்தாள்..
“என்ன ஆச்சுடா” என்று உலகநாதன் கேட்டவுடன்,, அவரின் கையை பிடித்தவள் “வாங்க” என்று அங்கே உள்ள ஒரு பெரிய ஆலமரத்து பக்கத்தில் அழைத்துச் செல்ல..
“என்னாச்சு சொல்லு ரதி ஏன் போனுல அழுத”என்றார்..
அவளோ மீண்டும் அழ..
“ஏய் சொல்லுடி” என்றவுடன் அவள் கொண்டுவந்திருந்த வளையல் பெட்டியை அவரிடம் காட்ட…
அதில் உலகநாதன் அன்று வாங்கி கொடுத்து அனைத்து வளையல்களும் உடைந்து போய் இருந்தது.
” இது எப்படி ஒடஞ்சு போச்சு” என்று உலகநாதன் கேட்க..
“எனக்கே தெரியவில்லை யாரோ இது மேல கனமான பொருளை தூக்கி வச்சிருக்காங்க அதனால எல்லா வளையலும் ஒடஞ்சு போச்சு” என்று மீண்டும் ரதி அழுக..
” ஏய் இதுக்கு போய் ஏன் இப்படி அழுகிற, கடைக்கு போய் வாங்கிக்கலாம் அழாத” என்று ரதியை சமாதானம் பண்ண…
” இல்ல எனக்கு பயமா இருக்கு நம்ம கல்யாணத்துல ஏதோ பிரச்சினை வரப்போகுது” என்று கலங்கியவளே,, தோள் அணைத்துக் கொண்டவர்,,..
“பயப்படாத நாளைக்கு இந்த நேரம் நீ என் கூட, எங்க வீட்டுல இருப்படா, நம்ம சந்தோஷமா வாழ்வோம்”….
” இல்லை எனக்கு பயமா இருக்கு மச்சான்” என்று அவரின் அணைப்பில் இறந்தபடியே ரதி பேசினாள்..
“வளையல் உடைந்ததெல்லாம் ஒரு பெரிய விஷயமா, வளையல் தானே வேற வாங்கிங்கலாம் ரதி”..
” வளையல் மட்டும் உடையல,, நேத்து காலையில முகூர்த்த கால் நட்டும் போது, சாமி கும்பிட நான் குத்து விளக்கு எடுக்க போகும் போது பரண்மேல இருந்த பல்லி என் உச்சந்தலையில் விழுந்திருச்சு” என்று ரதி பயந்த படியே பேச..
” ஏய் பல்லி இருக்குற இடத்துல நீ போய் பொருளை எடுத்தா, அது பயந்து போய் உன் மேல் விழுந்திருக்கும்,, அதற்கு போய் அழலாமா, கண்ணை தொட ரதி” என்று அவளின் கண்ணை துடைத்து விட…
” இல்லை மச்சான் பல்லி தலையில் விழக்கூடாது, அப்படி விழுந்தா பெரிய துன்பம் நடக்கும்.. இல்லன்னா மரணம் வரைக்கும் கூட நடக்கலாம்” என்று ரதி வருத்தபட்டு கூற..
” நீ தேவையில்லாம பயப்படுற நம்ம ஒன்னா சேர்ந்து வாழ போறது உறுதி, நமக்குள்ள பிரச்சனை வந்தா நாமளே பேசி சரி பண்ணிக்கொள்ளலாம்,, நீ தேவை இல்லாம பயப்படுற வீட்டுக்கு கிளம்பி போ உன்னை உன் வீட்டில் தேட போறாங்க, போ” என்று அவளிடம் பேசி வீட்டுக்கு அனுப்பி வைக்க உலகநாதன் முயற்சி பண்ண..
“நம்ம கல்யாணத்துல எந்த பிரச்சனையும் வராதுல” என்று கூறியவளை என்ன சொல்லி புரிய வைப்பது என்று உலகநாதன் அவளை பார்த்த படியே இருந்தவர்…
அவள் மிகவும் பயந்து போய் இருப்பது போல் அவருக்கு தெரிய.
“இப்ப சொல்றேண்டா என் வாழ்க்கையில நீ மட்டும் தான்…
உனக்கு நான் தான்,, எனக்கு நீதான் இதை யார் நெனச்சாலும் இது மாறாது..
நீ ஏதாவது பிரச்சனையின்னு என்னை விட்டு போனாலும், நான் உன்னை விட்டு போக மாட்டேன்,, இந்த ஜீவன் உனக்கு மட்டும் தான்,. அதை நீ புரிஞ்சிக்கணும் ஒருவேளை நான் செத்தா கூட”.. என்று அவர் சொல்லி முடிக்கும் முன் உலகநாதன் வாயில் தன் கைவிரலை வைத்து சொல்ல வேண்டாம் என்பது போல் ரதி தலையாட்ட..
” நான் சொல்லுறத கேளு ஒரு வேள எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, அடுத்த ஜென்மத்துல கூட இந்த ஜீவன் உன்னை வந்து தான் சேரும் போதுமா கிளம்பு”.. என்று அவளிடம் நான் அப்போதும், நான் உன் கூடாவே இருப்பேன் என்று உறுதி அழித்து
அவளை அவள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்…
உலகநாதனுக்கும் நேற்றில் இருந்து மனமே சரியில்லை ரதி சொல்லியது போலவே அவருக்கும் கல்யாணத்தில் ஏதாவது பிரச்சனை நடந்து விடுமோ என்ற எண்ணம் அவருக்குமே தோன்ற,, அப்படி எதுவும் நடக்காது,, நடக்கவும் நான் விட மாட்டேன் என்று நினைத்துக் கொண்டார்..
அன்று இரவே உலகநாதனுக்கும், ரதிக்கும் நிச்சயதார்தம் மிக எளிமையாக நடந்து முடிந்திருந்தது..
ரதியும், உலகநாதனும் மிகவும் அமைதியாகவே இருந்தனர்..
கல்யாண நாள் காலை அழகாக விடிந்தது , இருவரும் கல்யாண மண்டபத்தில் அவரவர் அறையில் கல்யாணத்திற்காக தயாராகிக் கொண்டிருக்க..
உலகநாதனின் போன் ஒலித்தது அதை ஆன் பண்ணி காதுக்கு வைத்தவருக்கு எதிரில் உள்ளவர் சொன்ன செய்தியில் கைகால் எல்லாம் உதற ஆரம்பித்திருந்தது..
அவர் போனை அனைத்துவிட்டு அப்படியே அசையாமல் நின்று இருக்க..
” உலகம் வா டைம் ஆச்சு ஐயர் கூப்பிடுறாரு” என்று வசந்தா வந்து மகனை அழைத்து திருநீர் பூசி விட்டு மணமேடைக்கு போக செல்ல..
அதன் பின் ரதி உலகநாதன் வாங்கித் தந்த புடவையில் தேவதை போல் அலங்காரம் பண்ணிக்கொண்டு உலகநாதன் அருகில் வந்து அமர்ந்ததை கூட அவர் உணரவில்லை..
உலகநாதன் ஏதோ குழப்பத்தில் இருப்பது போல் உணர்ந்த ரதி. தன்னை கூட பார்க்காமல் ஏதோ யோசனையில் இருந்த உலகநாதனிடம்.
” மச்சான் என்ன ஆச்சு “என்று ரதி கேட்க..
அப்போது தான் ரதி தன் பக்கத்தில் வந்தது அமர்ந்ததை உணர்ந்தவர் “ரதி நான் உன்கிட்ட சொல்லியிருந்தேனே என் முதலாளி பொண்ணு, என்னை விரும்புச்சுன்னு, அந்த பொண்ணு
பாய்சன் சாப்பிட்டாளாம், உயிர் பிழைக்கிறது கஷ்டமாம்” என்று கூற..
ரதிக்குமே இது அதிர்ச்சியாக இருக்க, “உங்கள விரும்புன பொண்ணு சாக கிடக்குறளா?”..
“ஆமாம் ரதி அந்த பொண்ணு சூசைட் பண்ணி இப்ப ஐ, சி, யூவுல இருக்காளாம் பிழைக்கிறதே ரொம்ப கஷ்டமுன்னு, என் கூட வேலை பாக்குறவரு சொன்றாரு”..
ஐயர் “கெட்டி மேளம், கெட்டிமேளம்” என்று உலகநாதன் கையில் திருமங்கல்யத்தை கொடுக்க..
உலகநாதனுக்கு அதை வாங்கவே முடிய வில்லை கைகள் கால்கள் எல்லாம் உதரல் எடுக்க எப்படியோ கையில் திருமாங்கல்யத்தை வாங்கி இருந்தவர்..
குற்ற உணர்ச்சியில் கைகள் நடுங்க..
” என்னால முடியாதது ரதி.
என்னை நெனச்சு விரும்பிய பொண்ணு, அங்க சாக கெடக்குறா, அவளை நீ எப்படியோ போன்னு,, உன் கழுத்துல என்னால தாலி கட்ட முடியாதுடா” என்று கூற..
” நீங்க போய் அந்த பொண்ணை பார்த்துட்டு வாங்க மச்சான் நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்” என்று ரதி கூற..
” தேங்க்யூ டா என் நிலைமையை புரிஞ்சுகிட்டதுக்கு நான் எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வருவேன்” என்று உலகநாதன் மணமேடையை விட்டு இறங்க..
ரதியிடம் கூறியது போலவே உலகநாதன் அனைவரிடம், “என்னை காதலிச்ச பொண்ணு அங்க சென்னையில் சாக கெடக்குற, நான் போய் பார்த்துட்டு வந்துடறேன்” என்று சொல்லி யாரிடமும் அனுமதி வாங்காமல் தன் காரை எடுத்துக் கொண்டு உலகநாதன் கிளம்பி இருந்தார்.
அன்று போனவர் தான் இன்று தான் ரதியை பார்க்க வந்திருக்கிறார்.
தன் மகளிடம் அனைத்தையும் கூறியவர் ரதியை தேட..
“அவங்க அப்பவே இந்த பக்கமா போயிட்டாங்கப்பா”.. என்று மாயா கூற..
“எந்த பக்கம்?” என்று மாயாவை அழைத்துக் கொண்டு ரதி தேடி போக..
உலகநாதனுக்கு அந்த வழியில் செல்ல செல்ல பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்து போனது. அன்று ஒரு நாள் ரதிக்கு வளையல் வாங்கி கொடுத்து விட்டு வரும் வழியில் இளநீர் வாங்கி பருகிய இடம்.
அவரின் கால்கள் நடக்க முடியாமல் பின்ன அந்த கொய்யா தோப்புக்கு பக்கத்தில் சென்றார்..
அவர் நினைத்தது போலவே ரதி அங்கு தான் இருந்தாள்..
அன்று மணமேடையில் தேவதை போல் தன் பக்கத்தில் வந்த ரதியை தான் அவர் கடைசியாக பார்த்தது…
இப்போது தன் முன் உருக்குளைந்து போய் ஆடை மாறி, தோற்றம் மாறி,,, தன்னை அடையாளம் கூட தெரியாத நிலையில் இருப்பவளிடம் சென்றார்…
ரதி ஏதோ பேசுவது போல் தெரிய.. அவள் பக்கத்தில் சென்று மண்டியிட்டு அமர்ந்து அவள் ஜாடைகாட்டி பேசியதை கேட்டார்..
” நீங்க குடிங்க மச்சான் எனக்கு இளநீர் வேண்டாம்” என்று அவள் பேசியதை கேட்டவருக்கு சர்வாங்கமும் அடங்கியது…
அன்று தன்னிடம் பேசியதை அப்படியே பேசிக் கொண்டிருந்தாள் ரதி இன்று..