மத்தபடி.. விளையாட்டு தான் சொன்னாங்க கண்ணா. நீங்க பயப்படாதீங்க..” என மகனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு சொல்ல,
இப்போது தந்தை கையிலிருந்து பெரிய தந்தையை முறைத்தான் அந்த பெரிய மனிதன்.
“அடேய்.. என்னடா இப்படி பார்க்கறே..?
உனக்காக தான்டா அவனை அடுச்சேன்..” என சோகமாக சந்தீப் கேட்க,
“திஸ் ஈஸ் ஏ பேட் ஹேபிட்..” என்றான் தந்தைக்கே புத்தி சொன்ன அந்த குமரனாக.
“சரி தான்.. இவங்கள நம்பி களத்துல இறங்கக்கூடாதுன்னு நினைச்சாலும் அடங்குதா.. எனக்கு..” என முணுமுணுத்து கொண்டு இருக்கும் போதே அறையின் கதவு திறந்தது.
முதலில் அமிழ்தினியாள் ஒரு கூடையோடு உள்ளே வர.. பின்னால் வந்த சம்யுக்தாவிடம் இருந்தாள் வெண்பா.
இனியாளை கண்டவுடன் தந்தையிடமிருந்து இறங்கி.. முடிந்தவரை வேகமாக நடக்க போனவன் தடுமாற..
“கண்ணா..!! தங்கம்..!!” என்றபடி,
ரியானும்.. இனியாளும் ஒரே நேரத்தில் குழந்தையை பிடித்திருந்தனர் அவன் உடல் நிலத்தை தொடும் முன்.
அவர்களின் சத்தத்தில் வெண்பா அதிர்ந்து தனது சித்தியின் முகம் பார்த்தாள்.
“அந்த குட்டி கீழே டொம்முன்னு விழுந்தா வலிக்குமில்ல.
அதான், உன் அம்மாவும்.. அவங்களும் பிடிச்சாங்க..” என அவளுக்கு சம்யுக்தா விளக்க,
“ஓ..” என தலையாட்டினாலும், அவளின் முகம் யோசனையோடே இருந்தது அந்த மூவரையும் பார்த்த படியே.
‘முகுந்த் தன்னை நிலைப்படுத்திக்கொண்டான்..’ என உறுதியானதுமே தான்.. இருவரும் தங்கள் நிலையை பார்த்தனர்.
முகுந்தின் மார்பில் ரியான் கரத்திற்கு மேல் இனியாளின் கரமெனில்,
முதுகு பக்கம் இனியாளின் கரத்தின் மீது ரியானின் கரம் பதிந்திருந்தது.
அதை உணர்ந்த நொடி அவசரமாக இருவரும் கைகளை விலக்கி தள்ளி நின்றனர்.
“யாருடா இந்த பொண்ணு..? சம்மந்தமே இல்லாம வந்தா.. முகுந்தை பிடிக்கறேன்னு உன் கைய பிடிக்கறா..?” என ரியானை மெல்லிய குரலில் கேட்க,
‘அப்ப சொன்னேனே அந்த பெண்..’ என கண்ணால் ஜாடைகாட்டினான் அண்ணனுக்கு.
‘அட நல்ல பொண்ணா தானே இருக்கு..’ என சந்தீப் நினைக்க,
அது அறிந்தது போல கண்ணாலேயே அதட்டினான் ரியான்.
முகுந்தும், ‘தடுமாறியதில் விழுந்திருந்தால்..’ என நினைத்து அமைதியாக நிற்க,
மற்றவர்கள் அவனை கவனிக்க ரியான் சந்தீப் செய்கையை யாரும் கவனிக்கவில்லை.
அந்த அறைக்குள் சிறிது அமைதி நிலவ, அந்த அமைதியை கலைத்தாள் பெரிய மனுஷி.
“சித்தா, இது யாரு..?” என முகுந்தை காட்டி கேட்க,
“இது முகுந்த்..” என சொல்ல,
சம்யுக்தாவிடமிருந்து இறங்கி முகுந்திடம் வந்து நின்று.. சில நொடி அவனை குறுகுறுவென பார்த்தவள்,
“நீ பாயா..? கேளா..?” என்றாள் சந்தேகமாய்.
எதை எதிர்பார்த்திருந்தாலும்.. இந்த கேள்வியை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவே இல்லை.
ஏனெனில் வெண்பா போட்டிருந்த பனியன் செட் போன்ற உடையை தான் அவனும் அணிந்திருக்க,
முகுந்தின் கருத்து அடர்ந்த சுருள் கூந்தல்.. அவனின் நெற்றி முழுவதும் பரவி கிடக்க,
ஆணாகினும்.. பெண் குழந்தை போன்ற அழகான நீண்ட ரப்பை கொண்ட இமைகள்.. என அவனை பெண் குழந்தையாகவும் நினைக்க வைக்கும் தான்.
அங்கு வந்த புதிதில், அவனுக்கு இங்கு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உடை வாங்க சென்ற கடையில் இருந்த அனைவரும்,
“பாப்பாக்கு என்ன பார்க்கறீங்க சார்..?” என கேட்டது இப்போது நினைவில் எழுந்தது ரியானுக்கு.
திருதிருவென விழித்த முகுந்த்,
“ஓய் ஆர் யூ ஆஸ்க்கிங் லைக் திஸ்..?” என அவனின் ஆஸ்த்தான ஸ்டைலுக்கு தாவ,
இப்போது விழிப்பது வெண்பாவின் முறையானது.
இரு குழந்தைகளின் இந்த பேச்சு, இதற்கு முன் நடந்த நிகழ்வை மறக்க வைக்க,
இனியாள் சங்கடத்தை துறந்து முகுந்தை பிடிக்கவென கீழே வைத்த பையை எடுத்த படி தங்கையிடம் சைகை காட்டினாள்.
அவசரமாக அதை வாங்கி அதிலிருந்த ஃப்ளாஸ்க்கையும், கவரிலிருந்த டம்ளர் இரண்டில் பாலை ஊற்றி ஒன்றை முகுந்துக்காக.. தன் அக்காவிடமும், மற்றதை ரியானிடமும் நீட்டினாள்.
“பேபி.. எதுக்கு இதெல்லாம்..?” என ரியான் தயங்க,
“அட.. பிடிங்க பாஸ். முகுந்தை பார்த்துட்டு.. எப்படியும் நீங்க காலைல இதுவரை எதுவும் குடுச்சிருக்க மாட்டீங்க தானே..?
அதான் அவனோட சேர்ந்து உங்களுக்கும் கொண்டு வந்தோம்..” என கட்டாயப்படுத்தி கொடுக்க, மறுக்க முடியா நிலையில் கையில் வாங்கினான்.
சந்தீப்புக்கு மனதில் சிறு குற்ற உணர்வு, ‘அட, இதை நம்ம யோசிக்கலையே..?’ என.
முகுந்தை தூக்கி மெத்தையில் அமர்த்திய இனியாள், இன்னுமொரு டம்ளர் கொண்டு பதமாக ஆற்றி அதை அவனுக்கு கொடுக்க,
ஆசையாய் அதை பருக வாய் வரை கொண்டு சென்றவன், அருகே அமர்ந்திருந்த வெண்பாவிடம் திரும்பி, “உன்க்கு..” என்றிட,
அழகாய் ஓர் புன்னகை வெண்பாவிடம்.
“முகுன்டா.. நா குதிச்சாச்சு.. நீ குதி.. உன்க்கு தா உவ்வான்னு சித்தா சொன்னா.. இத குச்சா ஸ்டாங்கா என்ன மாறி ஆளாம்.