Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் ஹைக்கூ காதல்

என் ஹைக்கூ காதல் 21 1

விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் காரைக்குடிக்குள் கார் ஒன்று மிதமான வேகத்தில் வந்துக்கொண்டிருந்தது. உள்ளே பரவசமான மனநிலையில் சில வருடங்களுக்கு பிறகு தனது ஊரை ஆசையாக வேடிக்கைப்பார்த்துக்கொண்டு வந்தான் கோவர்த்தன்.

“இதோ இங்க தான் நாங்க கிரிக்கெட் ஆடுவோம் நிலா… இப்போ பிளாட் போட்டு வீடு கட்டுறாங்க” ஜன்னல் வழியே வெளியே தலையை பாதி நீட்டியபடி ஒவ்வொரு இடமாக, தன் நினைவுகளை சேர்த்து சொல்லிக்கொண்டு வந்தான்.



Advertisement

“அதோ அங்க தான் ஸ்கூல் முடிச்சு…” சொல்லிக்கொண்டே அவளை பார்த்தவன், அவள் ஏதோ அசௌகர்யமாய் இருப்பதை கண்டு, “என்ன ஆச்சும்மா?” என்றான் அக்கறையாய்.

திருச்சி ஏர்போட்டில் வந்து நடுஇரவை தாண்டிய நேரம் இறங்கியவர்கள், அங்கேயே டேக்சி பிடித்து காரைக்குடிக்கு பிரயாணப்பட்டார்கள். காரில் ஏறியதும் கோவர்த்தன் மடியில் படுத்து உறங்கிவிட்டாள் வாணிலா. காரைக்குடியை நெருங்கியதும் தான் கோவர்த்தன் ஆர்வமிகுதியில் அங்கும் இங்கும் நகர்ந்த அசைவில் கண் விழித்து அமர்ந்தாள். அமர்ந்த சில நிமிடங்களிலேயே லேசாக தலை சுற்ற, ஜன்னல் மேலே சாய்ந்துக்கொண்டாள்.

Advertisement

Advertisement

கோவர்த்தன் பேசிக்கொண்டு வருவதெல்லாம் காதில் விழுந்தாலும், அவளால் ஆர்வமாய் பார்க்க முடியவில்லை. லேசாக குமட்டுவது போலவும் இருந்தது. அவஸ்தையுடன் அவள் அமர்ந்திருக்க, அப்போது தான் அவளை கவனித்து கேட்டான் அவன்.

பதில் சொல்லும் முன்பே குமட்டல் அதிகமாக, வேகமாய் சைகையில் வண்டியை நிறுத்த சொன்னாள் வாணிலா.

Advertisement

“வண்டியை நிறுத்துங்க ண்ணா” கோவர்த்தன் சொன்னதும் அந்த ஆளில்லாத சாலையில் வண்டி நிற்க, இறங்கி சென்றவள் ஓங்கரித்தாள். தண்ணீர் பாட்டிலுடன் வந்தவன், அவளை ஆதரவாய் பற்றிக்கொண்டு, அவளை ஆசுவாசப்படுத்த, “சாரி!” என்றாள் அவள்.

“ப்ச், லூசு!” உரிமையாய் நெற்றியில் தட்டியவன், “என்ன ஆச்சு? ட்ராவல் சிக்னசா?” என்று கேட்டிட, “எனக்கு அதெல்லாம் கிடையாதே கோ! என்னன்னு தெர்ல, ரெண்டு நாளாவே இப்படி தான் இருக்கு. கிளம்புற பிசில உங்கக்கிட்ட சொல்லல நான்” என்றாள்.

“ரெண்டு நாளாவா? ஏதாவது புட் அலர்ஜியா?” என்று கேட்டிட, “தெரிலையே” என்றவள், “தலை வேற சுத்துது” என்று நெற்றியை பற்ற, “எதுவுமே பண்ணாம எப்படி உனக்கு…” பேசிக்கொண்டே வந்தவன், பேச்சு அப்படியே நின்றது.

வைத்தியனுக்கு தெரியாத கணக்கா? இருவரும் ஒன்றாக வாழ ஆரம்பித்த பின்னர் அவள் தனியே படுக்கவே இல்லையே… முதல் நாளை தவிர மற்ற நாட்களில் இது நடந்திருக்க வாய்ப்புகளே இல்லை. வேகமாய் கணக்கு போட்டுப்பார்த்தான்.

குரலை சின்னதாக்கி, “வாட் இஸ் யுவர் லாஸ்ட் பீரியட் டேட்?” என்றிட, சின்ன அதிர்வோடு அவள் சொன்னதும், விரல் விட்டு சில நொடிகள் ஏதோ செய்தவன், நீண்ட மூச்சொன்றை விட்டு, “இட்ஸ் பாசிடிவ்!” என்றான்.

“எப்படி? இப்போதான் ஒரு மாசமே ஆகப்போகுது… ஜஸ்ட் ஒரு நாள் தான் தள்ளி போயிருக்கு. இட்ஸ் யூசுவல்! எனக்கு வன் வீக் லேட்டா கூட வந்துருக்கு” படபடவென அவள் பேசிக்கொண்டிருக்க, “சில்…சில்…! இப்ப என்ன? இருக்காதுன்னு சொல்றியா? இருந்தாலும் பிரச்சனை இல்ல… சரியா?” என்று கோவர்த்தன் சொல்ல,

“உங்க வீட்ல என்ன சொல்ல முடியும் கோ!?” என்று பதட்டமானாள் வாணிலா.

“ப்ச்… நீ வொர்ரி பண்ணாத! நாந்தான் இருக்கேன்ல? நான் பாத்துக்குறேன்” என்றவன், அவள் சற்று ஆசுவாசமானதும் காரில் பயணத்தை தொடங்கினான். அடுத்த இருபது நிமிடங்களில் வீடு வந்தது.

காரை விட்டு இறங்கியவள் கண் முன் தெரிந்த சந்திரமுகி பங்களா கேட்டை பார்த்து திகைத்து நின்றாள். லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு, காருக்கு காசை கொடுத்து அனுப்பிவிட்டு அவளிடம் வந்தவன், “இதான் நிலாக்குட்டி உன் புகுந்த வீடு… உள்ள புகலாம் வரியா?” என்றான் சிரிப்புடன்.

“இது வீடு இல்ல, பங்களா!” அவள் கேட்டை பார்த்தே வாய் பிளக்க, “அந்த காலத்து வீடு… வீடு வெறுமையா போய்டகூடாதேன்னே   ஆளாளுக்கு ஆறு ஏழு புள்ளை பெத்தாங்களாம்” என்றவன், கதவை திறந்து உள்ளே அழைத்து போக, சற்று தயக்கத்துடன் தான் உடன் வந்தாள்.

வீட்டின் பின்னே இருந்த கறவைகளின் ‘ம்மாஆஆ’ என்ற சத்தம் வாசல் வரை கேட்டது. சேவல்கள் ஒன்று மாற்றி ஒன்று, ‘கொக்ரகொக்கோ’ என்று ராகம் வேறு பாட, சூரியன் நெட்டி முறித்து எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்த நேரம், அந்த பெரிய தேக்குக்கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தாள் தீபா. வீட்டின் மூத்த மருமகள்.

அவள் வந்த வேகமும் தெளிவுமே, அவள் எழுந்து வெகு நேரம் சென்றுவிட்டது என்று சொல்ல, தண்ணீர் வாளியோடு வாசலை தெளிக்க வந்தவள் முன்னே முகம் கொள்ளா புன்னகையோடு நின்றான் கோவர்த்தன்.

“பால் கறக்காம இங்க என்ன செய்யுற?” வேலையாள் என்று நினைத்துக்கொண்டு திரும்பிய தீபா, தன் கொழுந்தனை கண்டதும் சமைந்துப்போனாள்.

ஒருநொடி தான். அடுத்த நொடி, ‘அத்தே…’ என அலறப்போக, பாய்ந்து அவள் வாயை மூடிய கோவர்த்தன், “கத்தாதீங்க அண்ணமண்டி… நானே எல்லாருக்கும் சர்ப்ரைஸ் குடுக்குறேன்” என்று மெல்ல சொல்ல, ‘சரி’ என அவள் மண்டையை உருட்டியதும் கையை எடுத்தவன், “சௌக்கியமா?” என்றான்.

அவளுக்கு சந்தோசத்தில் பேச்சே வரவில்லை. தீபா யாரோ எல்லாம் கிடையாது. சின்ன வயதில் இருந்து ஒன்றாக விளையாடிய சொந்தக்கார பெண் தான். கிட்டத்தட்ட கோவர்த்தனின் வயது தான்.  அந்த குடும்பத்தில் இதுவரை யாருமே சொந்தம் விட்டு வெளிய பெண் எடுத்ததில்லை. கோவர்த்தன் தான் அதற்கு முன்னோடியாக போகிறவன்.

“இவங்க வாணிலா… தெரியும்ல?” சின்ன அறிமுகம் வேறு! அதற்கும் அவள் மண்டையாட்ட, “அண்ணமண்டி அதிர்ச்சியாகிட்டா பேசாது. நம்ம உள்ள போலாம்” என்றவன் லக்கேஜ் எல்லாம் திண்ணையில் வைத்துவிட்டு, வாணிலா கரத்தை பற்றியபடி தன் வீட்டுக்குள் வலது கால் வைத்து ஜோடியாக சென்றான்.

பூஜையறையில் இருந்து சுப்ரபாத ரெகார்ட் மெல்லிய ஒலியில் கேட்டுக்கொண்டிருந்தது. பூனை போல நடந்து சென்றவனை தொடர்ந்து வானிலாவும் சென்றாள். அவளுக்கு இதெல்லாம் புதுமையாக, சுவாரஸ்யமாக இருந்தது.

தலையில் துண்டை சுற்றிக்கொண்டு பக்கவாட்டு வாசலில் இருந்து வேகமாக வந்த ஒரு உருவத்துடன் குறுக்கே சென்ற கோவர்த்தன் இடிக்க, அந்த உருவம் கத்தும் முன்னே வாயை அடைத்தவன், “பாரு க்கா!” என்றான் ஆசையாய்.

கண்கள் விரிய அவனை பார்த்த பர்வதவர்த்தினி, அவன் கையை தட்டிவிட்டு, “டேய் தம்பி?” என்று கன்னம் தாங்க, “கத்திடாதக்கா!” என்றான் முன்னெச்சரிக்கையாய். அவன் எண்ணத்தை சொல்லாமல் புரிந்துக்கொண்ட அக்காவும், “அம்மா இப்போதான் கிட்சன் போனாங்க… போ போ” என்றுவிட்டு, “வாணிலா… வாடா!” என்று வரவேற்றாள்.

அப்போது தான் வானிலாவுக்கு சற்று ஆறுதலாகவே இருந்தது. வெளியே தீபா அவளிடம் பேசாமல் போயிருக்க, சங்கடமாய் போனது. இப்போது பர்வதமும் பேசாமல் போயிருந்தால், மிகமும் சங்கடப்பட்டிருப்பாள்.

அவன் ஹாலில் இருந்து அடுக்களைக்கு போகும் முன்னேயே வீட்டின் ஒவ்வொருவரும் அவனை பார்த்துவிட்டனர். அப்பம்மா, ஐயா கால்களில் வானிலாவோடு விழுந்து வணங்கினான். அண்ணன் அக்கா மக்களை பார்த்தவன் தூக்கி சுற்றினான். ராகவர்த்தினிக்கு நாளை மறுநாள் வளைகாப்பு என்பதால் வீட்டின் அத்தனை உருப்படிகளும் அங்கு தான் இருந்தது.

வானிலாவுக்கு இந்த நேரத்தில் இவர்கள் எல்லாம் எதற்கு விழித்திருக்கிறார்கள் என்றே புரியவில்லை. அவளுக்கு எப்படி தெரியும்? அவர்கள் பொழுது நான்கு மணிக்கே தொடங்கிவிடும் என்று! ராகவர்த்தினி மட்டுமே அசதியில் உறங்கிக்கொண்டிருந்தாள்.

நகுலனும், பர்வதவர்த்தினியின் கணவன் சுபாஷும் வயலுக்கு நீர் பாய்ச்ச கால்நடையாய் சென்றிருக்க, ஸ்ரிவர்த்தன் மொட்டை மாடியில் படித்துக்கொண்டிருந்தான்.

விஷ்ணுவர்த்தன் பூஜையறையில் இருந்து அப்போதுதான் வெளியே வந்தவர், மகனை கண்டதும் கண்டது கண்டபடி நின்றுவிட்டார். எத்தனை மாதங்கள் கடந்திருக்கும் அவனை இப்படி கண்முன்னே கண்டு.  பிள்ளைகளை தூக்கி கொஞ்சிக்கொண்டிருந்தவன், தந்தையை கண்டதும், “அப்புச்சி!” என்று அடக்கமாய் சென்று அருகில் நின்றான்.

அவனை மேலும் கீழும் கண் நிறைய கண்டவர், “சொல்லிட்டு வந்துருக்கலாம்ல?” என்றார்.

“நம்ம வீடு தானே ப்பு…” அவன் சொன்னதும், “இப்போதான் நியாபகம் வருதா?” என்றார் ஆதங்கமாய். அவன் தலைகுனிய, பின்னால் வாணிலா நிற்பதை பார்த்தவர், சிரித்த முகமாய், “வாடா!” என்றார்.

அந்த சிரிப்பு அவளை தொத்திக்கொள்ள, அவரிடம் வந்தவள், “நல்லா இருக்கீங்களா அங்கிள்?” என்றாள்.

“நீங்க வந்துட்டீங்கள்ள? இன்னும் நல்லா இருப்பேன்” என்றார் சந்தோஷமாய்.

“போ போய் அம்சாவை பாருங்க… வரதை சொல்லாம விட்டதுக்கு வாங்கிக்கட்டிக்க” என்றவர், “நீ வாடா… கொல்லையை பார்க்கலாம்” என்று வானிலாவை பின்கட்டுக்கு  அழைத்து சென்றுவிட்டார்.

தந்தையிடம் முகத்தை திருப்பிக்கொண்டு யாரோ எவரோ போல வீடியோ காலில் பேசியதை போன்று நேரில் பேசமுடியவில்லை அவனால். அவர் என்ன விரோதியா என்ன? ஆனாலும், தன்னை அன்னையிடம் தனியே மாட்டிவிட்டு செல்லும் தந்தையை முறைக்க மறக்கவில்லை அவன்.

அதற்குள் மாடியில் இருந்து குதித்து இறங்கி வந்த ஸ்ரிவர்த்தன், “ப்ரோ!!!” என்றான் கூவலாய். கோவர்த்தன் ஸ்பெயின் நாட்டிற்கு கிளம்பி சென்றபோது, ரெண்டு வயது குழந்தை அவன். அவனோடு பெரிய உறவு கிடையாது கோவர்த்தனிற்கு. அதே தான் ஸ்ரிவர்த்தனுக்கும். இருந்தாலும் இங்கே வந்து தங்கும் சில மாதங்களில் அவனோடு நன்றாகவே ஒட்டிக்கொள்வான் ஸ்ரிவர்த்தன்.

“கத்தாதடா கடைமாடு” அதட்டிய கோவர்த்தன், “இவ்ளோ காலைல படிக்க மாடிக்கு போறியா? இல்ல எதாவது சைட்டிங்’கா?” என்று மென் குரலில் கேட்க, “அவ்வ.. அவ்வ.. அவ்வா! வொய் ப்ரோ வந்ததும் வராததுமா அபச்சாரமா பேசுறீங்க? நான் அம்மா ஆசைப்படி டாக்டர் ஆகணும்ன்னு ஒத்தை காலுல நின்னு படிக்குறேன்” அவன் தீவிரமாய் சொல்வதை கேட்டவன்,

“பார்த்து டா… ஸ்லிப் ஆகிட போற!” என்றான் நக்கலாய்.

இதற்குமேல் தாமதிக்க முடியாது. கன்னி வெடியில் காலை வைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. சற்றே பயத்தோடு நீண்ட நடை நடந்து அடுக்களைக்குள் அவன் நுழைய, தரையில் அமர்ந்து தேங்காய் துருவிக்கொண்டிருந்தார் அம்ஸா. காலை நேர நிகழ்ச்சி வானொலியில் ஓடிக்கொண்டிருக்க, அதை கேட்டுக்கொண்டே துருவிக்கொண்டிருந்தார்.

மெல்ல மெல்ல அவர் பின்னே சென்று அமர்ந்தவன், மலைப்போல குவிந்துக்கிடந்த தேங்காயை கையில் அள்ள, சுள்ளென அவன் கையில் தட்டிய அம்ஸா, “சமையலுக்கு வேணும்டா கோமாடு” என்றார் தன்னியல்பாய். துருவிக்கொண்டே சொன்னவர் கை, சட்டென நின்றுப்போனது. அந்த வீட்டில் துருவிய தேங்காய்க்கு கை நீட்டும் ஒரே ஆள் கோவர்த்தன் தான்.

எப்போது தேங்காய் துருவினாலும் அவன் நினைவு தான் அவருக்கு வரும். அதே நினைவில் இருந்தவர் தன்னை மீறி சொல்லியிருக்க, அவர் அடித்தது உண்மை என உணர்ந்த நேரம், சட்டென நின்றுவிட்டார்.

எதிர்ப்பார்ப்பில் தலையை திருப்பிப்பார்த்து ஏமாற அவருக்கு அச்சமாக இருக்க, அப்படியே அசையாமல் இருந்தவரை பின்னிருந்து கழுத்தோடு கட்டிக்கொண்டான் கோவர்த்தன்.

“ம்மா!!!” அவன் மெல்ல அழைக்க, சந்தோஷ அதிர்ச்சியில் உறைந்து இருந்தார் அம்சவர்த்தினி. அவனை நேரில் கண்டு குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது இருக்கும். அவனை ‘வா’ ‘வா’ என அழைத்து நொந்துப்போயிருந்தவர் அழைப்பதையே விட்டிருந்தார்.

இப்போது ‘வளைகாப்பிற்கு’ அழைத்தும் அவன் மறுத்தது அவரை உள்ளுக்குள் வாட்டியது. வெளியே சொல்ல முடியவில்லை. யாரிடம் சொல்ல முடியும்!? தனக்குள்ளேயே போட்டு உலட்டிக்கொண்டிருந்தவர், அவன் இப்படி திடீரென வந்து நிற்பான் என கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்கவில்லை.

மகனின் ஸ்பரிஸத்தை அனுபவித்தபடி அப்படியே அமர்ந்துவிட்டார்.

கழுத்தோடு இறுக்கமாய் கட்டிக்கொண்டவன், “வந்துட்டேன் ம்மா!” என்று சொல்ல, தலையை திருப்பி மகனை முகத்தை கண்டவர் பேசவே இல்லை. ஃபோனில் எத்தனை முறை பார்த்தாலும் நேரில் பார்ப்பது போல வருமா? பதினேழு வயது வரை தன்னோடு இருந்தவன் அதன்பின் கையை விட்டு போயிருக்க, அவனை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவனது பரிமாற்றங்கள் அவரை ஏங்க வைக்கும். அவன் வளர்ச்சியை மாற்றத்தை அனுதினமும் கண்டு ரசிக்கமுடியவில்லையே என்ற தாயின் ஏக்கம் அது. எத்தனை வளர்ந்தாலும், இன்னும் அவனுக்கு தோள் சுருங்கி முடி நரைத்தாலும் ஒரு தாயாக அவன் மாற்றத்தை கண்க்கொண்டு காண களிக்கும் ஏக்கம்!

அம்சவர்த்தினிக்கு எதையும் வாயிட்டு மென்மையாய் சொல்லி பழக்கமில்லை. இப்போதும் அவன் மாற்றத்தை கண்ணில் நிறைத்துக்கொண்டு அமைதியாய் இருந்தார்.

வீட்டின் அத்தனை உருப்படிகளும் அடுக்களைக்கு வெளியே தான் நின்றனர். அடுக்களை என்றால் வெறும் பத்துக்கு பத்து அறை அல்ல அது. பத்து பேர் தாராளமாய் படுத்து புரளும் அளவுக்கு பெரிய விஸ்தாரமான இடம். அதன் கோடியில் இருந்த இருவரையும் வாசலில் நின்று சரியாக பார்க்கமுடியவில்லை இவர்களால்.

“என்ன தீபா? ஒரே அமைதியா இருக்கு… சத்தமே இல்ல” பர்வதவர்த்தினி கேட்க, “எனக்கும் தெரியலையே அயித்தியாண்டி(அண்ணி)?” என்றாள் தீபா.

அதற்குள் பின்கட்டில் இருந்து வானிலாவை அழைத்துக்கொண்டு விஷ்ணுவர்த்தன் அங்கே வந்திருக்க, பொதுவாக, “வெடி வெடிச்சுதா?” என்றார்.

“இன்னும் இல்லங்க அப்பு” ஸ்ரிவர்த்தன் சொல்ல, “இன்னுமா…வெடிக்…” அவர் சந்தேகமாய் ஆரம்பித்தபோதே, “அம்மே…!” என்ற கோவர்த்தனின் அலறல் உள்ளிருந்து கேட்டது. பதறி உள்ளே செல்ல முயன்ற வானிலாவை பிடித்துக்கொண்ட பர்வதம், “முடிஞ்சு அவனே வருவான், பொறு” என்று பிடித்துக்கொள்ள, அவளை தவிர எல்லாரும் சிரித்துக்கொண்டே உள்ளே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தனர்.

தன் கழுத்தை கட்டிக்கொண்ட அவன் கரத்தில் நறுக்கென அம்ஸா கில்லி விட்டதில், ‘அம்மே’ என்று அலறியிருந்தான் கோவர்த்தன். அவன் கரங்களை விலக்கியதும், முடியை அள்ளி முடிந்து எழுந்து நின்றவர் இடுப்பில் கைவைத்து முறைத்தார் அவனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!