Skip to content
Post Views: 7,310
அத்தியாயம் 24
வீடே விழாக்கோலம் பூண்டுவிட்டது. வாசலில் பந்தல் போட்டு, மாமரம் கட்டி, தோரணங்கள் இட்டு, வளைகாப்பையே பிரம்மாண்டமாய் செய்ய ஆயத்தப்படுத்தியிருந்தனர் வர்த்தன் குடும்பத்தினர். ஒரு திருமணமே தாராளமாய் நடத்தும் அளவுக்கு பெரிய வீடு தான் என்பதால் அங்கே வளைக்காப்பு நடத்துவது ஒன்றும் அத்தனை சிரமமில்லை. சொந்தபந்தம் அத்தனையும் சுற்றி சுற்றி நான்கு ஊருக்குள் தான் அதிகம் என்பதால் மறுநாள் விழாவிற்கு காலையில் நேரமே வந்துவிடுவார்.
Advertisement
இரவு உணவு நேரம் மூன்றாம் கட்டில் கூடியிருந்தனர் வீட்டினர்.
வீட்டினர் என்றால், மொத்த வர்த்தன் குடும்பத்துடன், ராகவர்த்தினியின் புகுந்த வீட்டினர்.
ராகவர்த்தினியின் புகுந்த வீட்டினர் என்றால், நகுலனின் பெற்றோர்.
Advertisement
நகுலனின் பெற்றோர் என்றால், கோவர்த்தன் மற்றும் இதர வர்த்தன்களின் தாய்மாமன் மற்றும் அத்தை.
Advertisement
வர்த்தன்களின் தாய்மாமன் மற்றும் அத்தை என்றால், அம்சவர்த்தினியின் ஒரே அண்ணன் மற்றும் அண்ணமண்டி.
அம்சவர்த்தினியின் ஒரே அண்ணன் மற்றும்…. ஸ்ஸ்ஸ்… போதும் ப்பா! முடிச்சுக்கலாம்!!!
Advertisement
மருமகளை தன் வீட்டோடு வந்து இரு என அதட்டாமல், உன் விருப்பம் போல இருடா’ என அரவணைக்கும் அதிசய ஜீவன்கள் இரண்டும். அதனாலேயே ராகவர்த்தினியிடம் எப்போதும் அம்சவர்த்தினி மட்டும் சற்று ஸ்ட்ரிட்டாக இருப்பார்.
காலையில் சமையலுக்கு ஆட்கள் வந்துவிடுவார்கள் என்பதால் அம்சவர்த்தினிக்கு கவலை இல்லை. பின்கட்டில் அதற்க்கான ஏற்ப்பாடுகள் எல்லாம் செய்துவிட்டு வேண்டிய பாத்திரங்களை பரணில் இருந்து எடுத்து கழுவி வைத்துவிட்டு, வேண்டும் பொருட்களையும் வாங்கி அங்கேயே பத்திரமாய் வைத்துவிட்டு வந்து பார்க்க, மகளும் மருமகளுமாய் இரவு உணவை செய்து முடித்திருந்தனர்.
வாணிலா முதல் நாள் போலவே அன்று காலையும் எழுந்ததும் சற்று நேரத்தில் எல்லாம் சோர்வாக சென்று படுத்துக்கொண்டாள். மணி பத்தை தாண்டும் போது அவள் இயல்புக்கு திரும்பியிருந்தாள். இரண்டு நாட்களாய் இதை பார்ப்பவர்கள், ‘ஜெட் லாக்’ இன்னும் போகல போல, பாவம்’ என்று எண்ணியிருந்தனர். வாணிலா முகம் சோரும்போதெல்லாம் விஷ்ணுவர்த்தன் தான் கோவர்த்தனை ஆன மட்டும் முறைத்துப்பார்பார்.
அவரை பார்த்தால் தானே அதெல்லாம் கண்ணுக்கு தெரிய!? அவனை பொறுத்தவரை விஷயத்தை சொல்லியாகிவிட்டது, இனி பெற்றவர் பாடு என்ற மனநிலை. வானிலாவை நன்றாகவே கவனித்துக்கொண்டான் அவன். அவர்கள் இருக்கிறார்கள், இவர்கள் இருக்கிறார்கள், என்ன நினைப்பார்கள் என்ற எந்த கூச்சமும் அவனிடம் இல்லை.
தட்டில் வைத்த உணவுவகைகளை பேசி சிரித்துக்கொண்டே உண்ண ஆரம்பித்தனர் எல்லோரும். வாணிலா கோவர்த்தனின் அருகில் தானாக சென்று அமர்ந்துக்கொண்டாள். அதற்கே அவன் முகம் பூவாகிப்போனது. ஏதோ விருது வாங்கியவன் போல நிமிர்ந்து அமர்ந்து காலரை தூக்கிவிட்டுக்கொண்டு உண்டான்.
எல்லோரும் பேசி சிரிப்பது வாணிலா காதில் விழுந்தாலும், அவளால் அதில் கவனம் வைக்க முடியவில்லை. மனமெல்லாம் மதியம் கோவர்த்தன் பேசியதில் தான் சுற்றி சுழன்றது. மதிய உணவு முடித்து சற்று அசரும் நேரம், வீடே அமைதியாய் இருந்த பொழுதில் வானிலாவை வீட்டின் பின்னே இருக்கும் தோட்டத்திற்கு வர சொன்னான் கோவர்த்தன்.
மூன்று நாட்களாய் முத்தத்திற்கு கூட பஞ்சமாகி இருக்க, அதற்குத்தான் அழைக்கிறான் என்று நினைத்து ஆசையாய் ஓடியவளை நகுலனிடம் நின்றுக்கொண்டு ஏமாற்றினான் கோவர்த்தன். ஃபுல் சார்ஜில் ஓடிவந்தவள் பேட்டரி போனவளை போல புஸ்சென போயிருக்க, “ஹே நிலா… வாம்மா” என்றான் அவன்.
நகுலன் சிரிக்க, தானும் சிரித்தபடி கோவர்த்தன் அருகே போய் நின்றாள். நகுலன் கையில் ஏதோ காகிதம் இருக்கவே, இரு ஆண்களின் முகமும் சற்று தீவிரத்துடனும் இருக்க, “என்ன ஆச்சு?” என்றாள் அந்த பேப்பரை பார்த்தபடி.
நகுலன் சட்டென அதை அவளிடம் நீட்டினான்.
“என்ன அண்ணா இது?”
“படிச்சு பாரும்மா!” என்றவன் அமைதியாய் நின்றான். அந்த பேப்பரின் முதல் சில வரிகளிலேயே விதிர்த்துப்போய் கோவர்த்தனை பார்த்தாள் வாணிலா. கண்ணை மூடித்திறந்து, “முழுசா படி!” என்றான் அவன். நடுங்கும் விரல்கள் கொண்டு பேப்பரை கெட்டியாய் பிடித்தவள், முழுதாய் முயன்று படிக்க, அவள் கண்கள் எல்லாம் கண்ணீரால் கனத்துப்போனது.
“ஏன் வரூ? மறுபடியும் எதுக்கு? வேண்டாமே!” பயமா? வெறுப்பா? என்று அறியா பாவனையில் பேசினாள் வாணிலா. அவள் கண்ணீரை அழுத்தமாய் துடைத்துவிட்டவன், “கண்டிப்பா வேணும் நிலா… மறுபடியும் அந்த சுரேஷ் மேல நீ கேஸ் குடுக்கணும். உன் அக்கா சாவுல சந்தேகம் இருக்குன்னு கேஸ் குடுக்கணும்” அவன் சொல்ல,
“ஏன்? எனக்கு சப்போர்ட்டா என்னை பெத்தவங்க கூட வரமாட்டாங்க வரூ. ஏற்கனவே அசிங்கப்பட்டுருக்கேன்!” என்றாள் வேதனையுடன்.
“அவங்க எதுக்கு? அதான் நாங்க இருக்கோம்ல? நான் இருக்கேன்ல?” அழுத்தி கேட்டான் கோவர்த்தன்.
“ஆனா, எதுக்கு வரூ? புரில. அவன் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு சொன்னாங்க. இப்ப போய் நம்ம ஏன் கேஸ் குடுக்கணும்?” அவள் புரியாமல் கேட்டதும், “குடுக்கலன்னா உன் அக்கா மாதிரி இன்னொரு பொண்ணோட உயிர் போகக்கூட வாய்ப்பிருக்கும்மா!” என்றான் நகுலன்.
நகுலன் இப்படி சொன்னதும் குழப்பத்தில் சுருங்கிய அவள் புருவங்கள், சில நொடிகளில் அதிர்ந்து விரிந்தது. கூடவே, “ரே…ரேகா’வா?” என்று கேட்க, ‘ஆம்’ என்றான் கோவர்த்தன்.
உடனே பதட்டமானவள், “என்ன ஆச்சு அவங்களுக்கு? பிரச்சனையா?” என்றாள்.
“உறுதியா தெரியல ம்மா… நான் இவன் சொன்னான்னு ரெண்டு முறை நேருல போய் பாத்தேன். என் நம்பர் குடுத்து, ஒரு ஃ’போனும் குடுத்து பேசுங்கன்னு சொன்னேன். பிரச்சனை இல்லன்னா என்னை ரெண்டாவது முறை பாத்தப்போ கோவப்பட்டுருக்கணும். நீங்க யாருன்னே தெரியாது, போங்கன்னு சொல்லிருக்கணும். அதைவிட்டுட்டு அழுதாங்க. முகமெல்லாம் வீங்கி வேற இருந்துச்சு.
அவங்களுக்கு உண்மையா பிரச்சனை இருக்கு. அதை சொல்ல தயங்குறது தான் ஏன்னு தெரியல. ஒருவேளை அந்த சுரேஷ் எதாவது சொல்லி மிரட்டிக்கூட வச்சுருக்கலாம். நம்மளா ஆக்ஷன் எடுக்க ரொம்ப நேரம் ஆகாது. ஆனா, ‘எனக்கு ஒன்னும் இல்ல, என் புருஷனை விடுங்க’ன்னு அந்த பொண்ணு பல்டி அடிச்சுட்டா கஷ்டம், நிறைய பாத்துருக்கேன் இப்படி…” என்றான் நகுலன் தெளிவாக.
வாணிலா என்ன சொல்வதென புரியாத பாவனையில் கோவர்த்தனை பார்க்க, “அவன்கிட்ட ஏதோ ஒரு தப்பு இருக்குன்னு தோணுது நிலா. உன் அக்காவை அவன் தற்கொலைக்கு தூண்டிருக்கலாம். நம்ம ஏன் அதை அப்படியே விடனும்? சொல்லு?” கோவர்த்தன் கேட்டதும், “நான் என்ன செய்யணும்?” என்றாள் நிலா.
“இப்போதைக்கு கையெழுத்து போடு! தேவைப்பட்ட ஸ்டேஷன் போறமாதிரி இருக்கும்” என்றதும், தன் கையெழுத்தை போட்டு நகுலனிடம் பேப்பரை நீட்டினாள் வாணிலா.
வாங்கிக்கொண்ட நகுலன் , “நாளைக்கு பங்க்ஷன் முடியட்டும். அடுத்து இந்த வேலை தான்” என்றதோடு நகர்ந்துவிட, சமைந்த நின்ற வானிலாவின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் வைத்தான் கோவர்த்தன். அதில் தெளிந்து அவனை பார்த்தவள் கலக்கத்தோடு, “அவன் மேல தப்பு இருக்குனு நிரூபிச்சு தண்டனையே வாங்கிக்குடுத்தாலும் என் அக்கா எனக்கு கிடைக்கப்போறது இல்ல தானே!?” என்றாள்.
“அதுக்காக அவனை அப்படியே விடவா முடியும்?” அவன் கேட்க, மறுப்பாக தலையாட்டிய நிலா, “அப்படி சொல்லல… என் தேனு போய்ட்டா தானே? திரும்ப கிடைக்க போறதே இல்ல தானே!? அவ மேல நம்பிக்கை வைக்காத ஒரு அம்மா அப்பாக்கு உண்மையா இருந்து அவ உயிர் போனது தானே மிச்சம்?” என்று கண்ணீரோடு கேட்டவளை ஆதரவாய் அணைத்து வருடிக்கொடுத்தான் கோவர்த்தன்.
“என்னால அவ இல்லங்குறதை ஏத்துக்கவே முடில வரூ”
“நீ உன் அக்காவை இவ்ளோ லவ் பண்றப்போ அவங்களும் உன்க்கூட இருக்கத்தானே ஆசைப்படுவாங்க? ம்ம்ம்?” கோவர்த்தன் கேட்க, மையமாய் தலையாட்டினாள் அவள்.
“அப்போ அவங்க வருவாங்க!” அவன் சொன்னதும், வெடுக்கென நிமிர்ந்தவள், “எப்படி?” என்றாள் அதிர்வாய்.
“நீ ஆசைப்படு… வேணுன்னு நினை… வரணும்ன்னு வேண்டிக்கோ… வருவாங்க…” என்றவன், “இங்க!” என்று அவள் வயிற்றில் கரம் வைக்க, அவளால் பேசவே முடியவில்லை.
“தேனிலாக்கு நல்ல அப்பா அம்மாவா நம்ம இருப்போம் சரியா?” என்றான்.
“அவ வரலன்னா?” வாணிலா முனக, “வர வரைக்கும் நான் நிறுத்த மாட்டேன்” என்றான் அவன் தீவிரமாய். சட்டென மனம் இளகி புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது அவள் முகத்தில். அவள் இறுக்கங்களை நொடியில் தளர்க்க அவனால் மட்டும் தானே முடிகிறது!?
“என்னம்மா சாப்பிடாம அளந்துட்டு இருக்க?” தீபா கேட்டதும், இந்த நிமிடத்துக்கு வந்த வாணிலா, “ஒன்னும் இல்ல அக்கா… பசி இல்லாத மாறி இருக்கு” என்றாள்.
“இந்த சமயத்துல அதெல்லாம் அப்படி தான் தெரியும். அதுக்காக சாப்பிடாம எழுந்துக்கக்கூடாது” விஷ்ணுவர்த்தன் சொல்ல, எல்லோரும் அவரை கேள்வியாய் பார்த்தனர். கோவர்த்தன் மட்டும் முறைத்துப்பார்க்க, “என்ன இந்த சமயத்துல?” என்றார் அம்சவர்தினி.
“அது… அது நிலாக்கு… மாச…” அவர் விட்டால் உளரிவிடுவார் என்ற நொடியில், “நான் இந்த வாரமே ஸ்பெயின் கிளம்பலாம்ன்னு இருக்கேன்” என்று குண்டை தூக்கிப்போட்டான் கோவர்த்தன்.
அவன் நினைத்தது போலவே அத்தனை பேரின் கவனமும் அவனிடம் வந்தது, வாணிலா உட்பட.
error: Content is protected !!