Skip to content
Post Views: 4,662
கண்மூடி அமர்ந்திருந்தவளின் முன்னே சென்று நின்றவன், ஒரு நெடிய மூச்செடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பைக்கில் வந்ததால் லேசாக கலைந்திருந்த சிகையை கைகளாலேயே அட்ஜஸ்ட் செய்துவிட்டு, ‘உப்ப்’ ‘உப்ப்’ என சத்தம் இல்லாமல் பதட்டத்தை ஊதித்தள்ளினான். பின்னே, “ஹாய் பவி!” என்றவன் கையை நீட்ட, சத்தத்தில் கண்ணை திறந்தவள் லேசாக திடுக்கிட்டு தான் போனாள்.
அதிலும் அவன் கையை நீட்டிக்கொண்டு நிற்க, சுதாரித்தவள் அதை பற்றி குலுக்க, சிரித்தமுகமாய் அமர்ந்துக்கொண்டான் அவன்.
Advertisement
அழைத்தாள்… வந்துவிட்டான்… ஆனாலும் எப்படி பேச என்று தான் தயக்கம் அவளுக்கு. ‘நீ வேண்டாம்’ என்று எப்படி சொல்வது?!
Advertisement
அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை. மெனு கார்டை எடுத்தவன், “ஒன்னும் ஆர்டர் பண்ணல போலயே பவி…?” என்றான்.
Advertisement
“ம்ஹும்!”
Advertisement
சர்வரை அழைத்தவன், “தந்தூரி இருக்கா?” என்று கேட்க, “இல்ல சார்… அது லேட் ஆகும்! கிரில் இருக்கு” என்றான் அவன்.
“சூப்பர்… அப்போ ஹால்ப் கிரில்… ரெண்டு ஷவர்மா!” என்றதும், “இல்ல எனக்கு வேண்டாம்!” என்றாள் பவி.
“நான் எனக்கு மட்டும் தான் சொல்றேன்” என்ற பிரஷாந்த், மீண்டும் சர்வரிடம், “மயோனிஸ் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கொண்டு வாங்க… தென் புதினா லெமன் போட்டு ஒரு ஜூஸ்” என்று முடிக்க, அடுத்து சர்வர் பவித்ரா பக்கம் திரும்பினான்.
அவள் எண்ணமே அடுத்து பேசப்போகும் விஷயத்தில் மூழ்கியிருக்க, மனசுக்குள் ஒத்திகை நடத்திக்கொண்டிருந்தாள்.
“பவி… பவி???” அவள் முகத்தின் முன்னே கைகளை அசைத்ததும் கலைந்தவள், சூழ்நிலை புரிந்து, “வேகன் ஃபூட்ஸ் இருக்கா?” என்றாள் சர்வரிடம்.
“நோ மேம்!”
“ஷிட்!” முனகியவள், “எதுவும் வேண்டாம்!” என்றுவிட்டாள்.
“ஏன் பவி? ஹேவ் சம்திங்!” அவன் அக்கறையாய் சொல்ல, “இல்ல வேண்டாம்” என்றுவிட்டாள்.
“ப்ச்! ஜஸ்ட் ஸ்டார்ட்டர் மட்டுமாவது எடுத்துக்கோ! நான் சாப்பிடுறத நீ வேடிக்கை பார்த்தா எனக்கு வயிறு வலிக்கும்” என்றவன், “ஒன் கேக் பீஸ்” என்றான்.
வேகமாய், “நோ நோ …” என்றவள், “அதுல எக் இருக்கும்” என்றாள்.
“வி ஹேவ் எக்லஸ் கேக் மேம்” என்றான் சர்வர். பிரஷாந்த் அவளை பார்க்க, “இல்ல, எக் போடலைன்னாலும் பட்டர் ஆர் மில்க் போட்டுருப்பாங்க! வேண்டாம்” என்றவள், “எனக்கு ஒரு கோக்கனட் மில்க் போதும்!” என்றாள்.
“தேங்கா பாலா?” ஆச்சர்யமாய் கேட்டான்.
“ம்ம்ம்! தட்ஸ் இனஃ” என்றவள், “நான் பேசணும்!” என்றாள். சர்வரை அனுப்பிவிட்டு, “சொல்லு பவி!” என்றவனிடம்,
“மிஸ்டர் பிரஷாந்த்!” என அவள் ஆரம்பிக்க, “ஒவ்வொரு முறை என்னை பேசும்போதும் மிஸ்டர் போட்டுட்டே இருப்பியா என்ன? மரியாதை எல்லாம் வேண்டாம் எனக்கு” என்றான் இலகுவாய்.
அவளுக்கு தான் பேசுவது இன்னும் கடினமாய் போனது. ஆனாலும் முயன்று, “பிரஷாந்த், நீங்க அழகா இருக்கீங்க! இன்ஃபேக்ட் ரொம்பவே அழகா, மேன்லியா இருக்கீங்க” என்றாள்.
பிரஷாந்தை கேட்கவும் வேண்டுமா? ஒரு பெண் தானே முன்வந்து ஒரு ஆணை அழகன் என்று சொன்னால், அது எட்டாம் அதிசயம் அன்றோ! அது தந்த பூரிப்பில் அவன் பறக்க, அவனை ‘டமார்’ என பாதாளத்தில் தள்ளும்படி, “ஆனா, எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்! நீங்க தான் ‘கால் ஆஃப்’ பண்ணனும்” என்றாள் பளிச்சென.
பிரஷாந்த் துளியிலும் துளியாய் கூட இதை எதிர்ப்பார்க்கவில்லை. அவள் மறுப்பை முதலில் எதிர்ப்பார்த்தவன் தான். ஆனால் எப்போது எந்தவித மறுப்பும் இன்றி அவள் நிச்சய மேடையில் வந்து நின்றாலோ அப்போதே அவனது அந்த கலக்கம் மறைந்துவிட்டது.
இப்போது ‘பழகிப்பாக்கலாம் வா’ என்று அவள் அழைப்பதாய் தான் நினைத்து வந்தான். திடீரென இப்படி சொன்னதில் பேச்சற்று திகைத்தவன், எதிரே இருந்த குவளையை எடுத்து நீரை மொத்தமாய் விழுங்கினான், கூடவே அவன் அதிர்வையும்.
சில நொடிகள் கண் மூடினான். பின்னே ஆழ மூச்செடுத்தான். பின் நேரே அவளை பார்த்து, “சார்’கிட்ட சொல்லிருக்கலாமே!?” என்றான்.
“சொல்லிருக்க மாட்டேன்னா நினைக்குறீங்க? அப்பா புரிஞ்சுக்கவே மாட்டேங்குறார்! உங்களை அவரோட கலையுலக வாரிசா காட்டனும்! அதுக்கு நான் உங்களை கல்யாணம் பண்ணனும்… அதான் அவர் எண்ணம்!” என்றதும், மொத்தமும் விளங்கியது அவனுக்கு.
“இப்போ சொல்றதை நிச்சயத்துக்கு முன்னாடியே சொல்லிருக்கலாமே பவி!”
“பிரஷாந்த் டு பி ஃபிரான்க், எனக்கு பெருசா ‘நோ’ சொல்ல எந்த காரணமும் இல்ல அப்போ!”
“இப்போ மட்டும் என்ன ஆச்சு?”
“இப்போ… இப்போ உங்ககிட்ட பேசி பழக தான் புரியுது! வீ ஆர் நாட் மேட் ஃபார் ஈச் அதர்”
“நம்ம இன்னும் பேசி பழகவே இல்ல பவி”
“அதுக்கு முன்னாடியே எனக்கு புரியுதுன்னு சொல்றேன்!”
“என்ன புரியுது?”
‘ஐயோ எப்படி புரியும்படி சொல்வது?’ என மண்டை காய்ந்தது அவளுக்கு. சில விஷயங்களை வார்த்தைகளில் வடிக்க இயலாது. உணர்வுகளில் வெளிப்படும் எண்ணங்கள் வார்த்தைகளில் அடங்க மறுக்க, சொல்லிதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் வேறு அவளுக்கு.
அவள் அமைதியை கண்டவன், “என் வேலை… அது பிடிக்கலையா? இல்ல நான் இன்னும் சொல்லிக்குற மாதிரி பேர் எடுக்கலன்னு நினைக்குரியா?” என்றவன், “பவி இன்னும் ரெண்டே வருஷம்… சினிமால ஒன் ஆஃப் த லீடிங் கொரியோக்ராபேர்’ரா நான் இருப்பேன்! ஐ ப்ராமிஸ்!” என்றான்.
“ஒன் ஆஃப் த லீடிங் கொரியோக்ராபேர்’ஸ்’” என்று சொன்னவளை புரியாத பார்வையால்
“என்ன?” என்றான் அவன்.
“ஒன் ஆஃப் த சொல்லும்போது அடுத்து வர வார்த்தை ப்ளூரல்’ல இருக்கணும்!” என்றாள்.
“ரொம்ப முக்கியம் இப்போ! ப்ச்… பவித்ரா… மேரேஜ் ஒன்னும் ஈசி இல்ல!” என்றதும், “அதே தான் நானும் சொல்றேன்! மேரேஜ் ஒன்னும் ஈசி இல்லை! வொர்க் அவுட் ஆகாதுன்னு தெளிவா தெரியும்போது எப்டி கல்யாணம் பண்ணமுடியும்?” என்றாள்.
அதற்குள் உணவுகள் வந்து மேசையை நிறைத்தது. வரும்போது நல்ல பசியோடு தான் வந்தான். ஆனால் இப்போது கண்முன் இருந்த உணவுகளை அவன் நாசி கூட சீண்ட மறுத்தது. கிரில் சிக்கன் அவன் கேட்ட எக்ஸ்ட்ரா மயோனிஸ் உடன் நடுநாயகமாய் அவன் புறம் இருக்க, இருபுறமும் ஷவர்மா அரணாய் வீற்றிருந்தது. அவள் புறமோ ஒரு நீண்ட கண்ணாடி குடுவையில் பளிசென்ற வெண்மையில் தேங்காய்பால் மட்டும்!
மேசையை சில நொடிகள் பார்த்த பவி, “இங்க பாருங்க பிரஷாந்த், சாப்புடுற விஷயத்துல கூட நமக்கு ஒத்துப்போகல!” என்றவள், “நான் வேகன்!” என்றாள்.
புருவம் சுருக்கியவன், “நானும் வெந்ததை தான் சாப்பிடுவேன்” என்று சொல்ல, தலையை உலுக்கியவள், “இது.. இது தான் பிரச்சனை பிரஷாந்த். நான் பேசுறது, என் விருப்பம், பழக்க வழக்கம் எதுலையும் நீங்க ஒத்து வரமாட்டீங்க!” என்றாள்.
“கிரில் சிக்கன் சாப்பிட்டா பிடிக்காதா?” என்றான். அவனுக்கு சத்தியமாய் ஒன்றுமே விளங்கவில்லை. எதற்காக என்னை வேண்டாம் என்கிறாள் என்பதே புலப்படவில்லை. அழகாய் இருக்கிறேன் என்று எடுத்ததுமே சொல்லிவிட்டதால் அதை கேட்க முடியாது. நடனம்? அது அவர் தந்தையிடமே இருக்கிறதே… அதை ஒரு காரணமாய் அவளால் சொல்ல முடியாது! வேறு என்ன? என்ன யோசித்தும் அவள் சொல்வது விளங்கவில்லை.
அவனுக்கு விளங்க வைக்கும் அளவு அவளிடம் வார்த்தைகள் இல்லை. அவளது உள்ளுணர்வு அது. ‘இது சரி வராது’ என்று திடமாய் தோன்றும் ஒன்றை எப்படி சம்பந்தப்பட்ட அவனுக்கு விளங்க வைக்க என்ற கையறு நிலை கோவமாய் உருமாற,
“ஆமா, எனக்கு க்ரில் சிக்கன் சாப்பிட்டா பிடிக்காது… சோ இந்த கல்யாணம் வேண்டாம்! கால் இட் ஆஃப்” என்றவள் கைப்பையை எடுத்துக்கொண்டு விறுவிறுவென வெளியேற,
“பவி… பவி?” என கத்திக்கொண்டே பதட்டமாய் அவளை பின்தொடர்ந்து ஓடினான் பிரஷாந்த்.
“பவி…. ஸ்டாப்! ஒரு நிமிஷம்…” அவன் வரவர இவள் வேகமாய் சென்றாள். அவளை பிடித்து விட வேண்டும் என்ற வேகத்தில் விரைவாய் நகர்ந்தவன் புதியதாய் உள்ளே நுழைந்த இருவரில் ஒருவர் மீது பலமாய் மோதிவிட, அவன் அந்நேரத்திலும் திரும்பி, ‘சாரி’ என சொல்கையில்,
“பொ…று…க்…கி!” என பல்லிடுக்கில் திட்டியிருந்தாள் சம்யுக்தா.
error: Content is protected !!