Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எழவு வீடு

எ லவ் 7.1

7

அந்த வீட்டை பொறுத்தவரை மட்டும் தான் மணி இன்னும் விடியற்காலை மூன்று! ஆனால், உண்மையில் அவர்கள் அந்த கானகத்திற்குள் நுழைந்து, முழுதாய் பத்து மணி நேரங்கள் முடிந்திருந்தது.

மதியம் ஒரு மணி!

தனது அலுவலக அறையில் இயக்குனர் ஒருவரிடம் கதைக்கேட்டுக்கொண்டிருந்த ராஜசேகர், அந்த கதையோடு மனம் லயிக்க முடியாமல், அடிக்கடி தன் அலைபேசியை எடுத்து பார்த்தவண்ணமே இருந்தார்.



Advertisement

சொல்லிக்கொண்டிருந்த கதை இடைவேளையை நெருங்கப்போகும் நேரம் ஆகிக்கூட ராஜசேகருக்கு மனதில் ஒன்றுமே பதியவில்லை. அவருக்கே தான் செய்வது தவறு என்று தெளிவாய் தெரிய, சொல்லிக்கொண்டிருந்தவரை, “ஒரு நிமிஷம்!” என்று நிறுத்தினார்.

அவர் இடையே நிறுத்தவும் பதறிய அந்த மனிதர், “ஏன் சார்… இந்த ஸீன் பிடிக்கலையா? அடுத்த ஸீன்க்கும் இதுக்கும் கனெக்டிவிட்டி இருக்கு சார்! கேட்டு பாருங்களேன், கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்!” எங்கே வாய்ப்பு கிட்டாமல் போய்விடுமோ என்ற ஐயத்தில் பதட்டமாய் சொல்ல,

“ரிலாக்ஸ்! நீங்க குடுத்த சம்மரி பிடிச்சு தான் ஸ்க்ரீன்ப்ளே நரெட் பண்ண உங்களை கூப்பிட்டேன்! ஆனா, எனக்கு இப்போ கதை கேட்குற மூட் இல்ல… கொஞ்சம் பர்சனல் இஷூஸ்!” என்று சொல்ல, அந்த இயக்குனரின் முகம் வதங்கிப்போனது.

Advertisement

அதை கண்ணுற்றவர், “கண்டிப்பா இந்த படம் நான் ப்ரோடியூஸ் பண்றேன்! ஸ்டோரி டிஸ்கஷன் இன்னொரு நாள் வச்சுக்கலாம்! வெளில வெயிட் பண்ணுங்க, உங்களுக்கு நெக்ஸ்ட் அப்பாயின்ட்மென்ட்’க்கான ஸ்கெடியூள் கார்ட் குடுப்பாங்க!” என்று அவர் சொல்ல, இயக்குனரின் முகம் கொஞ்சம் தெளிவாக சற்றே நிம்மதியுடன் வெளியேறினார்.

Advertisement

அவர் போனதும், தன் மொபைலில் இருந்து மீண்டும் தன் மகள் சம்யுக்தா ராணியின் எண்ணிற்கு தொடர்புகொண்டார் ராஜசேகர். இத்தனை நேரம் சொன்னதை போலவே, ‘தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்’ என்ற அறிவிப்பே வர, அடுத்ததாய் வித்தகனின் எண்ணிற்கு அழைக்க, அதிலும் அதே அறிவிப்பு தான் வந்தது.

மகளின் ஆசைக்கு ஒருநாளும் குறுக்கே வந்திராத அருமையான தந்தை அவர். அதனால் தான், ஏதோ ஒரு காட்டுக்கு காதலனுடன் போகிறேன் என்று அவள் கேட்டபோது, அவளுக்கான பாதுகாப்புகளாய் என்னென்ன செய்யலாம் என்று மெனக்கெட்டாரே அன்று, போகவே கூடாது என முட்டுக்கட்டை போடவில்லை.

காலையில் இருந்து அவளது அழைப்புக்காக அவர் காத்திருக்க, சென்று சேர்ந்துவிட்டதாய் கூட அவளிடம் இருந்து பதில் இல்லாமல் இருக்க, கடந்த இரண்டு மணி நேரங்களாய் தொடர்ந்து முயன்றுக்கொண்டிருக்கிறார்.

Advertisement

இன்னும் சற்று நேரத்தில் மாலை ஆகிவிடும்! மகளை பற்றிய செய்தியின்றி அவருக்கு உறக்கமும் வருமா என்ன? உடனே தன் ‘பவுன்சர்’களை அழைத்து, ஜி.பி.எஸ் காட்டும் லொகேஷனில் சம்யுக்தாவை தேடி போக சொன்னார்.

திரும்பி அவர்கள் கண்டிப்பாக மகளுடன் தான் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு நகரும் மணித்துளிகளை நகரா விழிகளோடு அவர் கடக்க, அதே நேரம்… இருள் சூழ்ந்த வீட்டுக்குள் நால்வரும் ஒருவருக்கொருவர் பிணைந்த கைகளுடன் மூச்சு விடும் ஓசை கூட கேட்காதபடி உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர்.

அது என்னவோ வெளிச்சத்தில் பார்க்க ரம்யமாய் தெரிந்த வீடு, இருளில் ஈரக்குலையை நடுங்க செய்வதாய்!

வித்தகனும் பிரஷாந்தும் இருபுறம் நிற்க, அவர்களுக்கு நடுவே பவித்ராவும் சம்யுக்தாவும் தங்கள் இணையின் கரங்களோடு பிணைந்தபடி நின்றிருந்தனர். பிடித்திருந்த கையை இன்னும் அழுத்தமாய் பற்றிய சம்யுக்தா, “ஜி… ரொம்ப பயமா இருக்கு” என்றாள் காற்றுக்கும் கேட்காத குரலில்.

அவளை தோளோடு அணைத்து தன்மீது சாய்த்துக்கொண்ட வித்தகன், “பயப்படாத! படயப்படாத வரை நமக்கு ஒன்னும் ஆகாது!” என்றான் அவன் பயமற்ற குரலில். குரலில் மட்டும் தான் பயம் இல்லாது இருந்தது.

“யோவ்… எப்படிய்யா பயம் இல்லாம இருக்கிறது!? அடிவயிறு கலங்கி அவசரமா வருது!” கலங்கிய குரலோடு பிரஷாந்த் சொல்ல,

“மிஞ்சிப்போன என்ன நடக்கும்? உயிர் போகுமா? செத்துப்போவோமா? அவ்ளோதானே!? போனா போகுதுன்னு ஃப்ரீயா விட்டுப்பாரு! பயம் போய்டும்!” வித்தகன் அவனுடைய டெக்னிக்கை சொல்லிக்கொடுக்க, அந்த இருட்டிலும் அவன் முகத்தை பார்க்க தேடினான் பிரஷாந்த்.

“உனக்கு பயமே இல்லையா?” அவன் ஆச்சர்யமாய் கேட்க, “பயப்படுற வரை இங்கிருந்து போக முடியாது! நம்ம பயந்தா, கண்டிப்பா செத்துடுவோம்!” என்றான் வித்தகன்.

அவன் சொல்வதை கொஞ்சமும் விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும், ‘பயந்து என்ன ஆகபோகுது!? சாவு தானே… பயப்படாம இருந்து பார்ப்போமா?’ என்று மூவருக்கும் தோன்ற தான் செய்தது.

தன்னைத்தானே தைரியப்படுத்திக்கொள்ள, “சாதாரண மனுஷனுக்கு தான்டா சாவை பார்த்தா பயம் வரும்… இந்த ‘பிரஷாந்த் தி கிங்’க பார்த்தா சாவுக்கே பயம் வரும் டா!” என்று தில்லாய் ஒரு பஞ்ச் வசனத்தை அவன் எடுத்து விட, பவித்ராவும் ஆழ மூச்செடுத்து தெளிந்துக்கொண்டாள்.

சம்யுக்தாவுக்கு மூச்சிறைப்பு பிரச்சனை உண்டு என்பதால், கொஞ்சம் பதட்டம் ஆனாலும் கூட அவளுக்கு, இரைப்பு வந்துவிடும்! எனவே, அவள் தான் இருப்பதிலேயே தைரியமாக இருக்க வேண்டும் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

“டைம் ஓடலன்னா என்ன? இந்த இடம் என் அப்பாக்கு தெரியும்! அவர் இங்க வருவாரு! நம்ம எல்லாரும் எஸ்கேப் ஆகிடலாம்!” என்று சம்யுக்தா திடமாய் சொல்ல, நால்வரின் இறுக்கமும் தளர்ந்து, அவர்கள் தெளிந்த அந்த கணம்… வீடு மீண்டும் பிரகாசித்தது.

வீட்டின் அத்தனை விளக்குகளும் திடீரென மொத்தமாய் எரிய, மூவரும் திகைத்துப்போய் வித்தகனை பார்த்தனர்.

“சொன்னேன்’ல? நம்ம பயப்படாம இருக்கவரை நமக்கு ஒன்னும் ஆகாது!” என்றான் அவன் இன்னும் திடமாய்.

அவன் சொல்வதன் பின்புலம் தெரியாவிடினும், அது உண்மையில் வேலை செய்வதை உணர்ந்தவர்கள் முடிந்தவரை பயப்படக்கூடாது என்று நெஞ்சுக்குள் உருப்போட்டுக்கொண்டனர்.

“அப்புறம் என்ன? எவ்ளோ நேரம் நின்னுக்கிட்டே பயப்படாம இருக்கிறது? அப்படி போய் சோபா’ல சௌகர்யமா உட்காந்து பயப்படாம இருக்கலாம்’ல?” என்று பிரஷாந்த் கேட்டதும், மூவரும் நிமிர்ந்து சோபா இருந்த இடத்துக்கு மேல நடுநாயகமாய் தொங்கிக்கொண்டிருந்த சான்ட்லியரை பார்க்க, அவர்களை தொடர்ந்து அங்கே பார்த்தவனுக்கு, திடுமென உடலே நடுங்கியது.

உடனே சமாளித்து, “ஹிஹி, நான் பயப்படலையே! எனக்கென்ன பயம்? அது கீழ விழுந்துடும்ன்னு நீங்க பயந்தா, நம்ம வேணா அப்பாலிக்க இருக்க, டைனிங் டேபிள் பக்கம் ஒதுங்கிக்கலாம்! என்ன சொல்றீங்க!?” என்று பந்தாவாய் கேட்டிட, வித்தகன் சம்யுக்தாவோடு டைனிங் ஹால் நோக்கி நகர்ந்துவிட்டான். பவியோ, பிரஷாந்தை அற்பமென ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கே போக, பிரஷாந்த் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே சென்று அமர்ந்தான்.

சிறிது நேரம் யாரும் பேசவில்லை. சம்யுக்தா நன்றாக அப்போது தெளிந்திருக்க, அவள் வாய் வேறு வெகு நேரமாய் பேசாமல் இருந்ததில் துருபிடித்துப்போயிருந்தது. பக்கத்தில் இருந்த வித்தகனை பார்த்தாள். அவன் டேபிள் மீது இரு கைகளையும் கோர்த்து வைத்து அதையே வெறித்துக்கொண்டிருந்தான்.

கவனத்தை ஈர்க்க அவள் தொண்டையை செரும, அவன் கவனம் சிறிதும் சிதறவில்லை.

“ஜி…!?” மெல்ல அழைத்தாள். திரும்பிக்கூட பாராது, “சொல்லு!” என்றான்.

‘என்னத்த சொல்றது!’ என யோசித்தவளோ, “இந்த வீட்டு இன்டீரியர் டிசைன் எல்லாம் செம்மையா இருக்குல? நீங்க கூட ஆர்க்கிடெக்ட் தானே!? இது மாதிரி ஒன்னு ப்ளான் பண்ணலாம்’ல!?” என்று கேட்க, மெல்ல அவளை பக்கவாட்டாய் திரும்பி பார்த்தவனின் ஒற்றை பார்வையில் எதையாவது பேச வேண்டும் என்ற அவள் அவா கூட அடங்கிப்போனது.

இடப்பக்கம் இருந்தவனை ஒதுக்கிவிட்டு வலப்பக்கம் திரும்பினாள். நிமிடத்திற்கு ஒருமுறை இமைகள் மட்டும் அதன் வேலையை செய்யாமல் இருந்திருந்தால், இது சிலிகான் சிலையோ என்றே சந்தேகம் வந்துவிடும்! அந்த அளவிற்கு பவித்ரா பவ்யமாய் அமர்ந்திருந்தாள்.

‘எப்டி தான் இது ரெண்டும் இப்படி இருக்கோ!?’ என ஆச்சர்யமாய் நினைத்த சம்மு, நேராக பார்க்க, எதிரே இருந்த கதிரையில், பவர்ஸ்டார் போல, வாயை பலவித கோணங்களில் நெளித்துக்கொண்டு வீட்டையே ஒவ்வொரு இடமாய் பார்த்துக்கொண்டிருந்தான் பிரஷாந்த்.

‘ஹான்! இதான் நமக்கேத்த எள்ளுருண்ட!’ என்று எண்ணியவள், மெதுவாய் எழுந்துக்கொள்ள, வித்தகன், ‘என்ன?’ என்பதை போல பார்த்தான்.

“இங்கே ஒரே புழுக்கமா இருக்கு ஜி! நான் அங்க போயிட்டு, பவித்ராவை இங்க அனுப்புறேன்!” என்றவள், உடனே அதை செய்துவிட்டாள்.

வித்தகனும் சரி, பவித்ராவும் சரி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. இப்போது பிரஷாந்த் அருகே அமர்ந்திருந்த சம்யுக்தா, “ஹாய் ப்ரஷு!” என்றாள்.

அவளை பார்த்தவனோ, “உன் ஆளு முறைக்கவும், இந்த பக்கம் தாவிட்டியா?” என்றான் நக்கலுடன்.

கண்டுக்கொண்டானே என்று தோன்றினாலும் விட்டுக்கொடுக்காமல், “ஹலோ, அவர் ஒன்னும் முறைக்கல… ஜஸ்ட் பார்த்தாரு!” என்றாள் முடியை சிலுப்பிக்கொண்டு.

‘பார்ரா’ என உதடு வளைத்தவன், “நான் கொஞ்சம் பேசணும்” என்றான் சத்தமாய். மூவரும் அவனை பார்க்க, “நம்மளை சுத்தி என்ன நடக்குது… நம்ம ஏன் இங்க இருக்கோம்… எப்படி வெளில போகப்போறோம் ஒன்னும் புரியல எனக்கு! ஆனா, இந்த இருக்கும் வரைக்கும் நம்ம ஒண்ணா இருக்கணும்!” என்றான். யாரும் மறுத்து பேசவில்லை.

பிரசாந்த், “அப்படி இந்த வீட்ல நம்ம சர்வைவ் பண்ண முக்கியமா மூணு ரூல்ஸ் இருக்கு! அதுக்கு கண்டிப்பா எல்லாரும் உடன்படனும்!” என்று சொல்ல, புரியாத பார்வையில் மூவரும் விழிக்க,

“ரூல் நம்பர் ஒன்…! வீடு ரொம்ப பெருசா இருக்கு, நிறைய ரூம்ஸ் இருக்கு, நிறைய நிறைய பொருட்கள் அழகா இருக்கு… அதுக்காக சுற்றுலா வந்த சுட்டிக்குழந்தை மாறி எல்லா இடத்துக்கும் போய் சுத்துறது, பேயோட ப்ராபர்ட்டீஸ்’ல கை வைக்குறதுன்னு எந்த அதிகப்பிரசங்கி வேலையும் செய்யக்கூடாது” என்றவன்,

“ஏய் சம்சு, முக்கியமா உனக்கு தான் இது! கியூட்டா பண்றேன்னு ஏதாவது கோக்குமாக்கா செஞ்சு பேயை உசுப்பிவிட்டுடாத!” என்றான்.

முறைத்த சம்யுக்தா, “ஏன் எடுத்தா என்ன?” என்று எதிர்கேள்வி கேட்க, “இவ்ளோ நேரமும் என் வாழ்க்கையில நான் பார்த்த பேய் படம் எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா ஓட்டிப்பார்த்ததுல, பேயோட பொருளை தொட்டா அதுக்கு கோவம் வந்து செஞ்சுவிடும்ன்னு நல்லா புரிஞ்சுது!” என்றான்.

அவளும், ‘சந்திரமுகி, காஞ்சனா, டீமாண்டி காலனி’ என தனக்கு தெரிந்தவரை நினைத்துப்பார்த்து, பின் அவன் சொன்ன ரூலை ஒத்துக்கொண்டாள்.

“ரூல் நம்பர் டூ…! நம்ம நாலு பேரும் எப்பவும் ஒண்ணா தான் இருக்கணும்! ஆளுக்கு ஒரு பக்கமா போற வேலையே இங்க நடக்காது!” என்றான் திட்டவட்டமாய்.

“ஏன்!?” இப்போதும் சம்யுக்தாவே கேள்வி கேட்க, “நாலு மாடும் ஒரு சிங்கமும் கதை படிச்சுருக்கியா? ஒத்துமை தான் பலம்’ன்னு நமக்கு ஒன்னாங்கிளாசுலையே சொல்லிக்குடுத்துருக்காங்க!” என்றவன், “நம்ம கூட்டமா இருந்தா தான் பேய் பயந்து கம்முன்னு இருக்கும்… தனி தனியா போனோம்! அவ்ளோதான், நம்மளை பயங்காட்டி போட்டுதள்ளிடும்” என்றான் பயங்கரமாய்.

‘ஹும்!’ என அவள் முகத்தை திருப்ப, “மூணாவது ரூல்… ரொம்பவே முக்கியமான ரூல்! இந்த வீட்டை விட்டு வெளில போக சான்ஸ் கிடைச்சா கண்டிப்பா நாலு பேரும் தான் போகணும்! நம்ம மட்டும் தப்பிச்சா போதும்ன்னு யாரும் ‘செல்பிஷ் ஜெயின்ட்’ மாறி சில்லியா பிஹேவ் பண்ணக்கூடாது!” என்று சொன்னதும், பவித்ரா அலட்சியமாய் உதட்டை சுளிக்க,

“நான் இந்த ரூல் போட்டதே உனக்காக தான்! கல்யாணத்தை நிறுத்த, என்னை காவு குடுத்துட்டு நீ மட்டும் எஸ் ஆக பார்க்காத! அந்த பாவம் உன்னை சும்மா விடாது!” என்றான் அவளிடம் சீரியசாக.

“என்ன ரூல்ஸ் ஓகே’வா எல்லாருக்கும்?” பிரஷாந்த் கேட்க, வித்தகன் சம்மதமாய் கட்டை விரல் உயர்த்தினான். பின் இரு பெண்களும் ஒத்துக்கொள்ள, “அப்புறம் என்ன? ஜாலியா இருப்போம்! சும்மா இருந்தா மனசு கிடந்து தவிக்கும்! எதாவது பேசிக்கிட்டு இருக்கலாமே!” என்றதும், முதல் ஆளாய் “எனக்கு ஓகே” என குதூகலமாய் கை தூக்கினாள் சம்யுக்தா.

வித்தகனும் பவித்ராவும் அப்படியே இருக்க, “ஜி… கம் ஆன் ஜி… இப்படி இப்படி கம்முன்னு இருந்தா மட்டும் கதவு திறக்கவா போகுது!?” என்று சம்யுக்தா கெஞ்சலாய் கேட்க, மூச்சை இழுத்திவிட்டு நிமிர்ந்து அமர்ந்தவன், அவளைப்பார்த்து மெலிதாய் புன்னகைத்து தன் சம்மதத்தை சொன்னான்.

அதில் அவள் முகம் பிரகாசமாக, அடுத்து சும்மா இருந்த பவித்ராவையும் கூட சுரண்டி சுரண்டி தங்கள் வழிக்கு இழுத்துக்கொண்டனர்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு, அலுப்புத்தட்டிவிட, ஏதாவது கலைநிகழ்ச்சி நடத்தலாம் என ஐடியா கொடுத்தான் பிரஷாந்த். அதன்பேரில், சம்யுக்தா வித்தகனை நச்சரிக்க ஆரம்பித்தாள்.

“ஜி, நீங்க பாடி கேட்டு எவ்ளோ ஆள் ஆச்சு! எனக்காக… ஒன்னே ஒன்னு.. ப்ளீஸ்!” அவள் கெஞ்ச, “இந்த சூழ்நிலைல ராகமா வரும்?” என்றவனோ, “கவிதை சொல்லவா?” என்றான்.

“ஹான்… அது போர்’ எனக்கு வேணாம்! ப்ளீஸ் ப்ளீஸ் பாடுங்க” என்ற சம்யுக்தா, “உனக்கு தெரியுமா ப்ரஷு, என் ஜி பாடுனா, பக்கவாத்தியம் கூட தேவைப்படாது! குரலு குயிலு மாறி இருக்கும்!” என்றாள் பெருமையாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!