Skip to content
Post Views: 7,682
அத்தியாயம் 8
எப்போதுமே சிறகடித்து பறக்கும்
ஆசை கொண்ட நான், உந்தன்
மனதில் சிறை படவே விரும்புகிறேன்!!!
Advertisement
“அவர் என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசலை டி. வந்தார், படுத்தார், தூங்கிட்டார்”, என்று சொல்லும் போதே சுஜியின் கண்கள் கலங்கி விட்டது.
Advertisement
“சுஜி, அண்ணா வந்து….”, என்று அண்ணனுக்கு பரிந்து பேச “முதல் நாளே நான் எல்லாம் நடக்கணும்னு எதிர் பாக்கலை வெண்ணிலா. ஆனா ஒண்ணும் பேசாம… ஏதோ ஒரு மாதிரி….. எனக்கு அதைச் சொல்ல தெரியலை”, என்று வேதனையாகச் சொன்னாள் சுஜி.
Advertisement
“எனக்கு புரியுது சுஜி. அண்ணா ரொம்ப தயங்குவாங்க. ஆனா ரொம்ப நல்லவங்க தான்”
Advertisement
“எனக்கு அதெல்லாம் யோசனை இல்லை. அவங்களுக்கு என்னைப் பிடிக்கலையோன்னு தான் கவலையா இருக்கு”
“அவனுக்கு கல்யாணமே பிடிக்கலை டி. இந்த பரணி மாமா அவனை அப்படி மாத்தி வச்சிருக்கு. கொஞ்சம் பொறுமையா இரு டி. அண்ணா கண்டிப்பா மாறுவான்”
“வேற வழி”
“எல்லாம் சரியாகிரும் சுஜி. சரி வா, வேலைக்காரி கிட்ட சொல்லி ஒரு சூப்பரா காபி போடச் சொல்லிக் குடிப்போம்”, என்று அழைத்துச் சென்றாள்.
ஆனால் அவர்கள் அங்கே சென்ற போது அடுப்படியில் காலையில் இருந்து காபி போட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை. கூடவே சமையல் வேலை செய்யும் அன்னம் என்ற பெண்ணையும் காணும்.
“அம்மா, அன்னம் எங்க?”, என்று கேட்டாள் வெண்ணிலா.
“அவ எதுக்கு?”
“காபி போட தான், காலைல டிபன் வேற செய்யணும்”
“அதான் இவ இருக்காளே? அவளைப் போய்ச் செய்யச் சொல்லு. அவ தானே இந்த வீட்டுக்கு மருமக. அப்படின்னா அவ தான் செய்யணும். நான் வேலைக்காரியை நிறுத்திட்டேன்”
“இவ மட்டும் தான் இந்த வீட்டுக்கு மருமகளா? உன் அண்ணன் பொண்ணு ரேணுகாவும் இந்த வீட்டு மருமக தானே? அவ இன்னும் எழுந்தே வரலை. அவளையும் சமையல் செய்யச் சொல்லு மா”
“அவ எதுக்கு செய்யணும்? அவ பிறக்கும் போதே மகாலட்சுமியா பிறந்தவ டி. ஆனா மத்தவங்க அப்படியா?”
“அம்மா”, என்று கத்தினாள் வெண்ணிலா.
“விடு வெண்ணிலா, கல்யாணம் முடிஞ்சா சமையல் வேலை செய்யுறது இயற்கை தானே? நானே பண்ணுறேன். ஆனா எனக்கு இன்னைக்கு மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு”, என்று சுஜி சொல்ல அவளை மிதப்பாக பார்த்தாள் மல்லிகா.
அதற்கு மேல் பேசினால் வீணான வாக்குவாதம் தான் வரும் என்பதால் சுஜியுடன் சமையல் அறைக்குச் சென்ற வெண்ணிலா எது எது எங்கே இருக்கிறது என்று அவளுக்குச் சொல்லிக் கொடுத்தாள். இருவரும் பேசிய படியே வேலை செய்ய ஆரம்பித்தனர்.
மீண்டும் மீண்டும் இட்லி ஊத்தி எடுக்கும் போது சுஜிக்கு அன்னையின் நினைவு வந்தது. அங்கே சுந்தரிக்கு ஒரு உதவி கூட செய்யாததின் விளைவு தான் இது என்று புரிந்தது.
“கஷ்டமா இருக்கா சுஜி?”, என்று கேட்டாள் வெண்ணிலா.
“பழகிரும் விடு”, என்று வெண்ணிலாவுக்கு சொன்ன சுஜி அதே வார்த்தையை தனக்குமே ஆறுதலாக சொல்லிக் கொண்டாள்.
இவர்கள் இருவரும் எல்லாம் செய்து வைத்திருக்க மகேஷும் ரேணுகாவும் வந்து சாப்பிட்டார்கள்.
“ரேணு, நாளைல இருந்து நீயும் சமையல் கட்டுக்கு வரணும்”, என்றாள் வெண்ணிலா.
“நானா நான் எதுக்கு? அன்னம் எங்க?”
“அன்னத்தை அம்மா வேலையை விட்டு நிறுத்திட்டாங்க. இனி நீயும் சுஜியும் தான் வீட்டு வேலை எல்லாம் செய்யணும்”
“என்னங்க பாத்தீங்களா? இந்த வெண்ணிலா எப்படிச் சொல்றான்னு”, என்று ரேணுகா கணவரிடம் புகார் வாசிக்க அவளது குணம் புரிந்த மகேஷ் “என்ன வெண்ணிலா நீ அவளைப் போய்ச் வேலை செய்யச் சொல்ற? அதெல்லாம் அவ செய்ய மாட்டா”, என்றான்.
இதைப் போல தன்னுடைய கணவனும் தனக்கு சப்போர்ட் செய்வானா என்ற எதிர்பார்ப்பு சுஜி மனதில் எழுந்தது. “என்ன நீ அவளை மாதிரியே பேசுற? அவ கண்டிப்பா செஞ்சு தான் ஆகணும்”, என்று வெண்ணிலா சொல்ல “அவ செய்ய மாட்டா வெண்ணிலா. வேணும்னா நாங்க தனிக் குடித்தனம் போறோம்”, என்றான் மகேஷ்.
அதைக் கேட்ட படி அங்கே வந்த மல்லிகா “மகராசி வந்தாலும் வந்தா, வந்த அடுத்த நாளே என் சின்ன மகனை என் கிட்ட இருந்து பிரிக்கப் பாக்குறாளே?”, என்று சுஜியைக் கத்த ஆரம்பித்தாள். நிலைமை வேறு மாதிரி போவதைக் கண்ட சுஜிக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை.
“எல்லா வேலையும் நானே செய்றேன் வெண்ணிலா. விடு. பிரச்சனையை பெருசாக்காதே”, என்று தோழியைத் தான் அடக்கினாள். அவர்கள் வீட்டில் எப்போதுமே அமைதியும் சந்தோஷமும் மட்டுமே இருக்கும். வாக்குவாதமோ வீணான சண்டைகளையோ அதிகம் பார்த்திறாத சுஜிக்கு சண்டை போடுவதற்கு வேலை செய்வதே மேல் என்று தான் தோன்றியது.
வேலைக்காரியை நிறுத்தியதைப் பற்றி வெண்ணிலா பாரியிடம் சொன்னதும் அவர் மனைவியைக் கண்டிக்க “இந்த வீட்ல ஒரு வேலைக்காரியை வேலையை விட்டுத் தூக்குறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா? அந்த அளவுக்கு நான் வேண்டாதவளா போய்ட்டேனா?”, என்று மல்லிகா பேச ஆரம்பிக்க தலைவலியுடன் பாரி அங்கிருந்து அகன்று விட்டார்.
அதன் பின் சுஜி வெண்ணிலா இருவரும் சேர்ந்து மதிய உணவை சமைத்தார்கள். யுடியூப் அவர்களுக்கு உதவியாக இருந்தது.
அவர்கள் சமைத்து முடித்து பரணி மற்றும் புவிக்காக காத்திருக்க அந்த நேரம் “மாப்பிள்ளை நீ போய் சாப்பிட்டு வா”, என்றான் பரணி.
“இல்லை மாமா, எனக்கு பசிக்கலை. நீ போய் சாப்பிட்டு வா”, என்று புவி சொல்ல “மாப்பிள்ளை, அந்த பிள்ளை பாவம். உன்னை நம்பி தானே வந்துருக்கு? இப்ப நீ போகலைன்னா அவ கஷ்டப் படுவா. நியாயமா பாத்தா இன்னைக்கு முழுக்க நீ அவளுக்கு துணையா இருந்துருக்கணும்”, என்றான்.
“ரூமுக்குள்ள அவ கூட இருக்க முடியாம தான் காலைல அவ்வளவு சீக்கிரம் ஓடி வந்தேன். நீ என்ன டான்னா அவ கூடவே இருக்கச் சொல்ற? இதுக்கு தான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். யார் என் பேச்சைக் கேட்டா?”, என்று எரிச்சலுடன் சொல்லி விட்டுக் வீட்டுக்கு கிளம்பினான். அவன் பேச்சு பரணிக்கு அதிர்வைத் தான் தந்தது. இதை எப்படி சரி செய்ய என்று சுத்தமாக அவனுக்கு புரிய வில்லை.
புவி வீட்டுக்கு வரவும் சுஜி ஆசையாக அவன் முகம் பார்க்க அவனோ அவள் முகத்தைக் கூட பார்க்காமல் அறைக்குள் சென்று விட்டான்.
அவன் வந்ததைப் பார்த்த வெண்ணிலா “அண்ணா”, என்று அழைத்த படி அவர்கள் அறைக்குள் சென்றாள்.
“என்ன டா?”, என்று கேட்டான் புவி.
“வீட்ல என்ன நடக்குன்னு தெரியுமா? புதுசா கல்யாணம் பண்ணி வந்த சுஜியை இப்படியா தனியா விட்டுட்டு போவ? அம்மா அவளை பயங்கரமா டார்ச்சல் பண்ணுறாங்க. நீ வந்து என்னன்னு கேளு”
“என்ன பண்ணினாங்க?”
“அன்னத்தை வேலையை விட்டு நிறுத்திட்டாங்க. எல்லா வேலையையும் அவ தான் செய்யணுமாம். இது என்ன நியாயம் சொல்லு?”
“அவளுக்கு சமையல் தெரியும்னு நினைச்சு சொல்லிருப்பாங்க வெண்ணிலா. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?”
“என்ன அண்ணா இப்படி பொறுப்பில்லாம பேசுற?”
“என்ன பொறுப்பில்லாம பேசுறேன்? இதுக்கு தான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். நீ தானே பிளாக் மெயில் பண்ணி கல்யாணம் கட்டி வச்ச. அதனாலே நீயே எல்லாத்தையும் சமாளி. அப்படி அவளுக்கு இங்க இருக்க பிடிக்கலைன்னா அவளை அவளோட அப்பா வீட்டுக்கு போகச் சொல்லு”, என்று புவி சொல்ல வெண்ணிலா அண்ணன் பேசியதைக் கேட்டு திகைத்துப் போனாள் என்றால் அவர்களை சாப்பிட அழைக்க வந்த சுஜி அந்த பேச்சைக் கேட்டு விக்கித்துப் போனாள்.
அதற்கு மேல் அண்ணனிடம் என்ன பேச என்று தெரியாமல் வெளியே வந்த வெண்ணிலா சுஜியின் அதிர்ந்த முகத்தைப் பார்த்து கவலை கொண்டாள். ஆனால் அப்படிப் பேசுபவனிடம் என்ன பேச என்று அவளுக்கு தெரிய வில்லை.
சிறிது நேரத்தில் மல்லிகா அழைத்ததும் உணவு உண்ண வந்த புவி, சுஜி சாப்பிட்டாளா இல்லையா என்று கூட கேட்காமல் சாப்பிட்டு விட்டுச் சென்று விட்டான்.
அவனுடைய உதாசீனத்தால் கண்களில் பெருகத் துடிக்கும் கண்ணீரை சமையல் அறைக்குச் சென்று மறைத்துக் கொண்டாள். அடுத்து வந்த நாட்களில் இது தான் நிதர்சனம் என்று உணர்ந்து கொண்டாள் சுஜி. வெண்ணிலா உதவிக்கு இருப்பதால் கொஞ்சம் நன்றாகவே சமாளித்தாள். மனக் கஷ்டங்களை அவளால் வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அவளுடைய அன்னையிடம் சொன்னால் கண்டிப்பாக ஏதாவது குத்திக் காட்டுவாள் என்பதால் மனதுக்குள்ளே புதைத்துக் கொண்டாள்.
error: Content is protected !!