Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 8 3

“இந்த அம்மாவுக்கு இப்ப என்னன்னு தெரியலையே?”, என்றாள் வெண்ணிலா.

“அவங்க என்ன சொன்னாலும் நீ எதுவும் பேசாத வெண்ணிலா. என்னை தானே பேசுறாங்க. பேசிட்டு போகட்டும். வா என்னன்னு கேப்போம்”, என்று சொன்ன சுஜி தோழியை அழைத்து வந்தாள்.



Advertisement

மல்லிகா சுஜியை முறைத்துப் பார்க்க “என்ன மா உன் பிரச்சனை?’, என்று கேட்டாள் வெண்ணிலா.

Advertisement

“இதோ இங்க நிக்குறாளே இவ தான் பிரச்சனை. ஆமா இவளை எதுக்கு என் பிள்ளைக்கு கட்டி வச்ச வெண்ணிலா?”

Advertisement

“என்ன மா இப்படி கேக்குற? அண்ணா நல்லா இருக்கணும்னு”

Advertisement

“அவன் நல்லா இருக்கானா? அவன் எப்படி நல்லா இருப்பான்? அவனுக்கு தான் இவளைப் பிடிக்கவே இல்லையே?”

“அம்மா”

“என்ன அம்மா? கல்யாணம் முடிஞ்சு இத்தன மாசத்துல இவ எத்தனை நாள் என் பிள்ளை கூட வாழ்ந்தளாம்?”, என்று மல்லிகா கேட்க தன்னுடைய அந்தரங்கம் நடு சபையில் அலசப் படுவது சுஜிக்கு எரிச்சலாக வந்தது. ஆனால் பேசி தன்னுடைய தரத்தை தாழ்த்திக் கொள்ளக் கூடாது என்று அமைதியாக இருந்தாள்.

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா மா? எதை எங்க பேசணும்னு தெரியாது?”, என்று தாயைக் கடிந்து கொண்ட வெண்ணிலா ரேணுவை முறைத்து விட்டு “இதை இவ தான் ஓட்டு கேட்டுட்டு வந்து உன் கிட்ட சொன்னாளா? ஏய் ரேணு உனக்கு அறிவில்லையா டி?”, என்று கேட்டாள்.

“அவ மேல ஏன் பாயுற? அவ என்ன இல்லாததையா சொன்னா? எனக்கு இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும். இவளை தான் என் மகனுக்கு பிடிக்கலையே? அப்படின்னா இவளை இங்க இருந்து துரத்த தானே செய்யணும்?”

“என்ன இங்க சத்தம்?”, என்று கேட்ட படி பாரி வார அனைவரும் அவர் பக்கம் பார்த்தார்கள். அங்கே தான் புவியும் நின்றான். அவனைக் கண்டதும் சுஜியின் கண்கள் கலங்கிப் போனது. அவள் அழுது கொண்டே அறைக்குள் சென்று விட்டாள். அதைப் பார்த்த புவி திகைத்துப் போனான். முதல் முறையாக அவளது கண்ணீரைக் காண்கிறான்.

திருமணம் என்ற பெயரில் அவள் வாழ்க்கையை நாசமாக்கி விட்டாய் என்று அவன் மனசாட்சி அவனை திட்டித் தீர்த்தது.

“அப்பா இங்க என்ன எல்லாம் அக்கிரமம் நடக்குது தெரியுமா?”, என்று ஆரம்பித்தாள் வெண்ணிலா.

“தினமும் ஒரு சண்டை. எல்லார்க்கும் நிம்மதியே போகுது. எல்லாத்துக்கும் காரணம் உன் அம்மா தானே?”, என்று கேட்டார் பாரி.

“ஆமா பா”, என்று வெண்ணிலா சொல்ல “என்ன மல்லி இதெல்லாம்?”, என்று கேட்டார் பாரி.

“ஆமா, உங்களுக்கு நான் தான் தப்பானவளா தெரியுவேன். நான் சொன்னப்ப யாராவது என் பேச்சைக் கேட்டீங்களா? வேற ஏதாவது ஒரு பொண்ணைப் பாத்துருக்கலாம்”, என்றாள் மல்லிகா.

“ஏன் சுஜிக்கு என்ன டி குறை?”

“என்ன குறையா? என் மகனுக்கு பிடிக்காத பொண்ணைக் கட்டி வச்சு அவன் வாழ்க்கையை கெடுத்துட்டீங்க. புவிக்கு இவளை பிடிக்கவே இல்லை. அப்படி தானே டா?”, என்று கேட்க அன்னையின் கேள்வியில் புவியே புருவம் உயர்த்தினான்.

அன்னைக்கு பதில் சொல்லாமல் அவன் குழப்பத்துடன் நிற்க உள்ளே இருந்து அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சுஜி புவிக்கு தன்னை பிடிக்க வில்லை என்று எண்ணிக் கொண்டாள்.

“என்ன சொல்ற நீ? அவன் வந்து உன் கிட்ட சொன்னானா? என்ன புவி உங்க அம்மா கிட்ட சொன்னியா, சுஜியைப் பிடிக்கலைன்னு”,. என்று மகனிடம் கேட்டார் பாரி.

“அதை வாய்ட்டு சொன்னா தானா? கல்யாணம் முடிஞ்சு இத்தனை நாள்ல பொண்டாட்டி நிழலைக் கூட தொடாம இருக்கானே? அதுலயே தெரியலையா? இனி இவ எதுக்கு இங்க இருக்கணும்? இவளை அத்து விட்டுருங்க”, என்று மல்லிகா சொல்ல அனைவருமே அதிர்ந்து போனார்கள்.

அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்த பாரி “ஒழுங்கு மரியாதையா உள்ளே போ. இனி ஒரு வார்த்தை பேசின நான் மனுசனா இருக்க மாட்டேன். என்ன வெண்ணிலா இதெல்லாம்?”, என்று மனைவியை கடிந்து கொண்டு மகளிடம் கேட்டார்.

“சுஜி குழந்தை உண்டாகலைன்னு திட்டினாங்க பா. அதான் என்ன பிரச்சனைன்னு அவளை தனியா கூப்பிட்டு விசாரிச்சேன். அப்ப தான் அவ உண்மையைச் சொன்னா. அதை இந்த ரேணு ஓட்டு கேட்டு அம்மா கிட்ட வத்தி வச்சிட்டா”, என்று சொன்னதும் பாரி ரேணுகாவை முறைத்துப் பார்க்க முதல் முறையாக மாமாவுக்கு பயந்து மகேஷ் பின்னால் ஒளிந்தாள்.

எப்போதுமே அவளுக்கு சப்போர்ட் செய்யும் மகேஷ்க்கு மனைவியின் இந்த செயல் பிடிக்க வில்லை. அதனால் இன்று அவன் மனைவிக்காக பரிந்து பேசாமல் நின்றான்.

புவியோ சிலை போல தான் நின்றான். இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று அவன் கனவில் கூட நினைக்க வில்லை. அவனது குற்றஉணர்வு அவனை மேலும் கொன்றது.

“மகேஷ் உன் மாமனார்க்கு போனைப் போடு”, என்றார் பாரி.

“ஆத்தி அந்த மனுஷன் கிட்ட பேசனுமா?”, என்று பயந்த மகேஷ் “அப்பா அவர்”, என்று தயங்கினான்.

“நீ போனைப் போடு. நீ பேச வேண்டாம். நான் பேசிக்கிறேன்”, என்று சொல்ல அவன் போட்டு கொடுத்தான்.

போன் ஸ்பீக்கரில் இருக்க அனைவருக்கும் அவர் பேசுவது கேட்டது. “என்ன மாப்பிள்ளை? எப்படி இருக்கீங்க”, என்று சிதம்பரம் கேட்க “நான் பாரி பேசுறேன்”, என்றார்.

“பெரிய மாப்பிள்ளையா பேசுறது? சொல்லுங்க. தங்கச்சி நல்லா இருக்கா? என் மக நல்லா இருக்காளா?”

“உங்க பொண்ணு எங்க வீட்டுக்கு வர வரைக்கும் எல்லாரும் நல்லா தான் இருந்தோம். எப்ப அவளை இங்க இழுத்துட்டு வந்தோமோ எங்க நிம்மதியே போச்சு”

“மாப்பிள்ளை, என் பொண்ணைப் பத்தி என் கிட்டயே இப்படி பேசுறீங்க? என்னால இதை மன்னிக்க முடியாது”

“யாரும் யாரையும் மன்னிக்க வேண்டாம். தயவு செஞ்சு நீங்க வந்து உங்க பொண்ணைக் கூட்டிட்டு போயிருங்க”

“என்ன நினைச்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல? நீங்க எப்படி அப்படிக் சொல்லலாம்? அவ எப்படி வளந்தவ தெரியுமா?”, என்று அவர் ஆரம்பிக்க மச்சினன் என்றும் பாராமல் “யோவ் வாயை மூடு யா. பொண்ணையா வளத்து வச்சிருக்க? வீட்ல கலகம் மூட்டி விட தான் இவளை எங்க குடும்பத்துல கட்டி வச்சியா?”, என்று கத்தி விட்டார் பாரி.

“நாங்க கட்டலை, என் தங்கச்சி தான் பொண்ணு கேட்டா. இல்லைன்னா என் மகளுக்கு எப்பேற்பட்ட வாழ்க்கை கிடைச்சிருக்கும் தெரியுமா?”, என்று சிதம்பரம் பெருமை பேச “இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. என் மகன் விவாகரத்து கொடுப்பான். அப்புறம் உங்க பொண்ணை வேற பெரிய இடத்துல கட்டி வை”, என்று ஒரே போடாக போட்டார்.

மகேஷ் மனதுக்குள் அப்பாவுக்கு சபாஷ் போட “அத்தான், பாருங்க மாமா எப்படி பேசுறாங்கன்னு. நீங்க என்ன அமைதியா இருக்கீங்க? வாங்க நாம தனிக் குடித்தனம் போயிறலாம்”, என்று கணவனின் காதைக் கடித்தாள் ரேணுகா.

“எங்க அப்பா சொன்னா நான் கண்டிப்பா செய்வேன். உன் கூட தனியா வந்து என்னை சிங்கி அடிக்கச் சொல்றியா?”, என்று மகேஷ் கேட்க உண்மையிலே வாழ்க்கையை நினைத்து முதல் முறையாக பயம் வந்தது ரேணுகாவுக்கு.

“என்ன மாப்பிள்ளை மரியாதை இல்லாம பேசுறீங்க? நான் யார் தெரியும்ல? என் தங்கச்சியை உங்களுக்கு கொடுத்துருக்கேன். என் மகளையும் உங்க பையனுக்கு கொடுத்துருக்கேன். அப்படி இருக்க மட்டு மரியாதை இல்லாம பேசுறீங்க? பொண்ணைக் கொடுத்தா இளக்காரமா? நாம ஒண்ணுக்குள்ள ஒண்ணு. நான் உங்க மச்சினன். அது நினைவு இருக்கட்டும்”, என்றார் சிதம்பரம்.

“சொந்த மச்சினன்ன்னு நானும் பொறுமையா தான் போனேன். ஆனா உன் பொண்ணால என் குடும்பம் நிம்மதி போச்சுன்னா நான் கேக்க தான் செய்வேன். ஒழுங்கா வந்து உன் பொண்ணைக் கூட்டிட்டு போ. அப்படியே உன் தங்கச்சியையும் கூட்டிட்டு போனா இன்னும் புண்ணியமா போகும். உன் குடும்பத்து பொம்பளைங்களால எங்க வீட்ல நிம்மதியே இல்லை”, என்று சொல்லி போனை வைத்து விட்டார்.

அனைவரையும் முறைத்துப் பார்த்த பாரி “முதல்ல எல்லாரும் உள்ள போங்க”, என்று கத்த அனைவரும் உள்ளே சென்றார்கள். அமைதியாகச் செல்லும் புவியைப் பார்த்தவர் “புவி”, என்று அழைத்தார்.

காதல் தொடரும் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!