Skip to content
Post Views: 5,984
மகள் தாய்மை அடைந்திருப்பதை இரண்டு மாதங்களுக்குப் பிறகே அறிந்துகொண்டார் சாந்தா, அவள்தான் அவருடன் பேசுவதில்லையே பார்கவியிடம் மட்டுமே பேசுவது, அன்று பேசும்போது சமையல் செய்ய முடியவில்லை சாப்பிட முடியவில்லை என்று சொல்லப் பார்கவி தோண்டி துருவினாள் அதன் மூலமே சாந்தா மகளின் நிலையை அறிந்துகொண்டது.
Advertisement
தெரிந்து கொண்ட பிறகு இருப்பு கொள்ளவில்லை அடுத்தவாரமே மூத்த மகள் துர்காவின் வீட்டிற்கு சென்றுவிட்டு அவளையும் அழைத்துக்கொண்டு துளசியை காண வந்திருந்தார், ஆளே பாதியாக இளைத்து போயிருந்தாள் காலை வேளை தலைசுத்தல் வாந்தி என்று படுத்தியது அதோடு வேலைக்கும் சென்றுவந்துகொண்டிருந்தாள்.
Advertisement
Advertisement
அவள் வேலைக்குச் செல்வதும் அவர்களுக்குத் தெரியவில்லை இரண்டு நாட்கள் கடையில் விடுமுறை எடுத்திருந்தாள் இவர்கள் வருவதை முன்னிட்டு, வந்தவர்களை வரவேற்றதோடு சரி பெரிதாக எதுவும் பேசவோ விசாரிக்கவோ இல்லை வெற்றி மகளுக்கென்று பார்த்துப் பார்த்துச் சமைத்துவைத்தார் சாந்தா.
Advertisement
“ஏண்டி இப்படி இருக்க? இப்போ என்ன ஆயிடுச்சு! மனுஷங்களோடு சேர்ந்து பழகாத ஆளா இருக்கார் மத்தபடி எந்தக் கெட்டபழக்கமும் இல்லல உன்னை நல்லா பாத்துக்குறார் தானே” என்ற தாயை நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவள்.
“எதுக்குடி இந்த நேரத்துல வேலைக்குப் போற எப்படி இருக்க பாரு, அப்படி என்ன தேவை” என்றாள் துர்கா.
“ஏன் செலவுக்கு நீ காசு தருவியா” என்றாள் தமக்கையிடம்.
“ஏன் உன் வீட்டுக்காரர் சம்பாதிக்கிறாரே அப்புறம் என்ன” என்றார் சாந்தா துளசியிடம் பதிலில்லை, கிடைக்கும் வருமானத்தில் கட்டுக்கோப்பாகக் குடும்பத்தை நடத்துவதுதானே ஒரு பெண்ணிற்கு அழகு என்பது அவரின் மனநிலை அப்படியொரு வாழ்வை தானே அவர் வாழ்ந்தார்.
மதியம் சாப்பிட வந்தவன் ஒரு சிரிப்போடு அவர்களைக் கடந்துவிட்டான் உணவை முடித்துக்கொண்டு அவன் உறங்கச் சென்றுவிட சாந்தாவும் துர்காவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
துளசியிடம் சாப்பிட்டியா என்று கேட்கவில்லை அவளிடம் ஒன்றுமே விசாரிக்கவில்லை, துளசியும் அதையெல்லாம் எதிர்பார்த்ததாகத் தெரியவில்லை.
“நீங்கச் சாப்பிடுங்க” என்றவள் கொஞ்சமாக உண்டுவிட்டு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டாள், அவர்கள் தங்கியிருந்த மூன்று நாளும் கணவனும் மனைவியும் ஒரு ஒட்டாத தன்மையோடே இருந்தனர்.
“துளசி கிளம்பு வெளில போயிட்டு வரலாம் அப்படியே டாக்டரைப் பாத்துட்டு வரலாம்” என்றாள் துர்கா.
“எதுக்கு ஒரு வாரம் முன்னாடிதான் போய்ப் பார்த்தேன்” என்றாள் துளசி.
“இன்னொரு தடவ கேக்குறதால ஒன்னும் கொறஞ்சு போய்டாது வா” என்று வம்படியாக அவளை அழைத்துச் சென்றனர்.
“அன்னைக்கு சொன்னதையேதான் இப்போவும் சொல்றேன் இந்தப் பொண்ணு உடம்பை நல்லா பாத்துக்கணும் இல்லனா ஒன்னும் சொல்றதுக்கில்லை வயித்துல இருக்குற பிள்ளையைப் பத்தி கொஞ்சம் யோசிக்கணும் இப்படி இருந்தா அந்தக் குழந்தைக்கு என்ன சத்து கிடைக்கும், நான் குடுத்த மருந்து எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறீங்களா” என்றார் அந்த மருத்துவர்.
“ஹ்ம்ம்” என்றாள் அவள்.
“உங்க ஹஸ்பேன்ட் அன்னைக்கு ஒருநாள் வந்தார் அவ்ளோதான் அப்புறம் அவரையும் காணோம்” என்றவர் சாந்தாவை பார்த்து “முடிஞ்சா நீங்கக் கொஞ்ச நாள் உங்ககூட வெச்சு பாத்துக்கிட்டா நல்லது” என்றார்.
வெளியில் வந்தபிறகும் மூவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை, துர்காவிற்கு அவளுடைய வீட்டிற்கு போக வேண்டும் பிள்ளையை மாமியாரிடம் விட்டு வந்திருக்கிறாள், சாந்தாவும் ஊருக்குப் போக வேண்டும் பார்கவியின் பொறுப்பில் விட்டு வந்திருக்கிறார் கணவரை.
அன்று இரவு வெற்றி வந்ததும் துளசியின் உடல் நிலையைப் பற்றி அவனிடம் பேசினார் சாந்தா “இல்ல அத்த… அக்கா சொன்னாங்க சில பேருக்கு இப்படித்தான் இருக்குமாம் அப்புறம் சரியாயிடுமாம் எங்க அக்காகூட முதல்ல எலும்பாதான் இருந்துச்சு அஞ்சு மாசம் ஆனதும் நல்ல வெய்ட் போட்டுட்டுடுச்சு” என்றவனை என்ன சொல்ல என்று தெரியாமல் பார்த்து நின்றனர் இருவரும்.
அவள் மனதளவிலும் உடல் அளவிலும் பாதிக்கப் பட்டிருக்கிறாள் அதைப் பற்றிய தெளிவே இவனிடம் இல்லையே என்று அவர்கள் கவலை கொண்டனர்.
“என்கூட ஊருக்கு வாத்துளசி உடம்பு கொஞ்சம் தேரட்டும் அதோட இங்க இருந்து மட்டும் என்ன? யார் உன்னைப் பத்தி கவலை படுறா உன் மாமியாராவது கொஞ்ச நாள் வந்து நிக்கலாம்ல அங்க என்னதான் பண்றாங்க” என்றார் சாந்தா.
துளசியிடம் எந்தப் பதிலும் இல்லை முதல் முறையாகச் சாந்தாவின் மனதில் பயம் முளைத்தது துளசியின் நிலையைப் பார்த்து, தவறு செய்துவிட்டேனோ நிதானமாக யோசித்திருக்கலாமோ என்று காலம் கடந்து யோசித்துக்கொண்டிருந்தார்.
அன்று மாலை துர்கா ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டாள், மறுநாள் காலை விடியல் துளசிக்கு மருத்துவமனையிலேயே விடிந்தது இரவு வயிற்றுவலி என்று துடித்தவளை அப்பொழுதே கொண்டுவந்திருக்க அதற்குள் முடிந்திருந்தது.
“வருத்தமான விஷயம்தான் ஆனா மனசை தேத்திக்கோங்க இதுவும் நல்லதுக்குதான் துளசியோட உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கு ஒன்னு குழந்தைக்கு இல்லனா தாய்க்கு ஆபத்தா முடியும்னு எனக்குத் தோணுச்சு அதனாலதான் போனதடவையே உங்கள எச்சரிக்கை பண்ணேன்”.
“அந்தப் பொண்ணோட உடம்பையும் மனசையும் தேத்தி கொண்டு வாங்க அப்புறம் பாக்கலாம் இன்னும் வயசு இருக்கு நல்லதே நடக்கும் நீங்கதான் அவங்களுக்கு ஆறுதலா இருக்கணும்” என்று மருத்துவர் அறிவுரை வழங்கினார்.
இந்தமுறை சாந்தா பிடிவாதமாக நின்றார் துளசியை தன்னுடன் அழைத்துச்செல்வேன் என்று, இதற்க்கு கூட வெற்றியின் தாய் தந்தை வரவில்லை போனில் அழைத்து விசாரித்ததோடு சரி இந்த நிலையில் இவர்களை நம்பி மகளை விட்டுச் செல்ல இயலாது என்று தெளிவாகப் புரிந்துபோனது.
துளசியிடம் பெரிதாக ஏமாற்றமோ அழுகையோ இல்லை மிகச் சாதாரணமாவே இருந்தாள் எதற்கு இந்த வாழ்க்கை என்ற எண்ணமே ஓங்கி நிற்க இடையில் பிள்ளை உண்டானபோது ஒருபக்கம் சந்தோஷமும் மறுபக்கம் ஏதோ சொல்ல முடியா பயமும் இருந்தது.
எதிர்காலம் என்ன எப்படி என்று அவளுக்கே தெளிவில்லை மனதின் குழப்பமும் கவலையும் விரைவிலே தன்னை கொண்டு சென்று விடும் அதிக நாட்கள் தான் உயிர்வாழப் போவதில்லை என்ற எண்ணங்கள் அவள் மனதை ஆக்கிரமித்திருந்தது.
ஒருவேளை பிள்ளை பிறந்தபிறகு தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் குழந்தையை இவர்கள் யாரும் பார்த்துக்கொள்ளமாட்டார்கள் அப்பொழுது அந்தப் பிள்ளையின் நிலை என்ன என்றெல்லாம் யோசித்து யோசித்து குழப்ப நிலையிலே நாட்களைக் கடத்தி வந்தாள்.
மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த நான்காம் நாள் சாந்தா துளசியை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஊருக்குச் சென்றுவிட்டார், வேலைக்கு வர இயலாது என்று தகவல் சொல்லிவிட்டாள் அடுத்த மூன்று மாதங்கள் பிறந்த வீட்டில்.
சாந்தா மகளைக் கவனமாகப் பார்த்துக்கொண்டார் அவள் பேசவில்லையென்றாலும் பார்கவியின் வழி அவளுக்குச் சத்தான உணவுகள் சென்று சேர்ந்தது கூடுமானவரை துளசியுடன் நேரத்தைச் செலவழித்தாள் பார்கவி.
‘தனக்கு ஏன் வருத்தம் தோன்றவில்லை’ என்று எண்ணிப்பார்த்தாள் துளசி ‘தான் சரியாக இல்லையோ அரக்கியாக மாறிவிட்டேனா ஒரு சிறு உயிர் போனதை எண்ணி ஏன் எனக்கு அழுகைக்கூட வரவில்லை’ என்று இரவெல்லாம் யோசித்து விழித்துக்கிடந்தாள்.
பிறகு அவளாகவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள் இல்லை இதுவும் நல்லதிற்குத்தான் என்னோடு சேர்ந்து அந்தச் சிறு உயிரும் இந்த நரகத்தில் கஷ்டப்பட வேண்டாம், எனக்கு வாழ்வில் எந்தப் பிடிப்பும் வேண்டாம் என் நிலையே என்னவென்று தெரியவில்லை போகட்டும் என்று அமைதியாகப் படுத்துவிட்டாள்.
ஊருக்கு வந்தபிறகு உண்மையிலே மனம் கொஞ்சம் லேசாக இருந்தது துளசிக்கு பலமாதங்களாக அவளைப் பாடாய் படுத்திய உறக்கம் மொத்தமாகச் சுருட்டிக்கொண்டது, எப்படி தனக்கு இப்படி உறக்கம் வருகிறது என்ற யோசனையும் அவளுக்கு இருந்தது.
பாவம் அவள் அறியவில்லையே தினமும் உறங்கச் சிறு அளவில் தூக்க மாத்திரை கொடுக்கப்படுகிறது என்று.
“தூக்கம் ரொம்ப முக்கியம் இப்போதைக்கு அதுதான் அவங்க உடம்புக்கு நல்லது ஒரு பத்து நாளுக்கு மாத்திரை கொடுக்குறேன் அவங்கள சாப்பிட வைங்க, முக்கியமா அவங்களுக்கு தெரியவேணாம் பத்து நாளுக்கு அப்புறம் நிறுத்திடுங்க” என்றிருந்தார் மருத்துவர்.
மெல்ல மெல்ல வேலைகள் செய்யத் தொடங்கினாள் அதோடு தந்தையை பார்த்துக்கொள்வது என்று நாட்கள் நகர்ந்தது துளசி வந்து மூன்று மாதங்கள் கடந்திருந்தது, ஒரு வாரமாகத் தாயும் தங்கையும் தனியாகப் பேசுவதும் வாதம் புரிவதும் அவள் பார்வையில் விழுந்துகொண்டே இருந்தது.
அவளாக எதுவும் கேட்கவில்லை சொல்வதானால் சொல்லட்டும் என்று விட்டுவிட்டாள், அன்று ஞாயிற்று கிழமை காலைத் துளசி தோட்டத்தில் அமர்ந்திருக்க அவள் அருகில் வந்த சாந்தா “துளசி பார்கவி கல்யாண விஷயமா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் உள்ள வா” என்க.
அவள் திரும்பித் தங்கையைப் பார்த்தாள் பார்கவி ஒருவித எதிர்பார்ப்போடு இவளின் முகத்தைப் பார்த்து நின்றாள், உள்ளே வந்து சோபாவில் அமர்ந்ததும்.
“உன் தங்கச்சி காதலிக்கிறாளாம்… அதும் நாலு வருஷமா… அந்தப் பையன் நம்ம ஆளும் இல்ல, பையன் ஏதோ வெளிநாட்டுல வேலை பாக்குறான்” என்றவர் சொல்லிக்கொண்டிருக்க.
“ஆஸ்திரேலியா” என்றாள் பார்கவி.
“அந்தப் பையன் வீட்டில எல்லாருக்கும் சம்மதம் ரெண்டு தடவ அவங்க அப்பா அம்மா இங்கேவந்து பேசிட்டு போனாங்க, இது வேண்டாம் நம்ம சாதி சனத்துலயே ஒரு நல்ல பையன பாக்குறேன்னு சொல்றேன் அடங்காபிடாரி சொல்ற பேச்சும் கேக்குறதில்லை, அப்பா படுக்கையில கிடக்குறாரே நம்மள யார் கேள்வி கேப்பான்னு திமிர்”.
“அந்தக் கொழுப்புலதான் ஆடிட்டு இருக்கா இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்னு சொல்றேன்… அப்படினா வீட்டை விட்டுப் போய் அவனைக் கட்டிப்பாளாம் எவ்ளோ திமிர் பாரு காலை ஓடிச்சு போட்டா தெரியும்” என்றவர் கத்திக்கொண்டிருக்க.
“அப்பா படுக்கையில விழுந்துட்டாரு இனிமே நம்மள யார் கேள்வி கேக்குறதுன்னு தானே என் வாழ்க்கையை உங்க இஷடத்துக்கு வளச்சுடீங்க” என்றாள் துளசி சாந்தாவை பார்த்து.
“நல்ல மாப்பிளைன்னா எப்படி? எனக்குப் பாத்து கட்டி வெச்சீங்களே அப்படியா… ஒருத்தியை காவு கொடுத்தது பத்தலயா உங்களுக்கு இந்த வீட்டில இன்னொரு துளசியா… போதும்” என்றவள் பார்கவியை பார்த்து.
“என்னை மாதிரி முட்டாளா இருக்காத, குடும்ப கவுரவம்… அப்பா அம்மாக்கு அவமானம் அப்படி இப்படினு பேசுற யாரும் உன் ரூமுக்குள்ள என்ன நடக்குதுன்னு கவலைப்படமாட்டாங்க, நாலு சுவத்துக்குள்ள இருக்கப்போற வாழ்க்கை மூச்சு முட்டணுமா நிம்மதியை குடுக்கணுமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ” என்றதோடு அறைக்குள் சென்று கதவை அடைத்தாள்.
இதுவரை இப்படி அவள் பேசி யாருமே பார்த்ததில்லை துர்காவும் பார்கவியும் துடுக்குத்தனமாகப் பேசும்போதும் அனைத்தையும் பொறுமையாகக் கடப்பவள் தன் இயல்பைத் தொலைத்து விட்டு யாரோ போல் பேசிச்செல்லும் மகளை அதிர்ச்சி விலகாமல் பார்த்து அமர்ந்திருந்தார் சாந்தா.
error: Content is protected !!