Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒற்றை ஜன்னல்

ஒற்றை ஜன்னல் – 8 . 2

“இங்க விஜயகுமார் அவங்க வீடு எங்க இருக்கு” என்று அந்தக் கடையில் கேட்க.

 

“கல்யாணவீட்டுக்கா…  சொந்தமா?  தெரிஞ்சவங்களா?  இதுக்கு முன்ன பாத்ததில்லையே மாப்பிளை வீட…”  என்ற கேள்விகள் அவன் இதயத்துடிப்பை எகிற வைத்தது.



Advertisement

 

 

Advertisement

“நேரா போய் ரெண்டாவது தெரு வாசல்ல பந்தக்கால் இருக்கும்”  என்க அங்கேயே அவன் உடைந்துவிட்டான்,  வரமாட்டேன் என்ற கால்களை இழுத்துக்கொண்டு வீட்டின் முன் சென்று நின்றான்,  நலுங்கு வைத்து முடித்து அனைவரும் சென்றிருக்க பார்கவியும் துர்காவும் வீட்டை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தனர்.

Advertisement

 

வாயிலில் நிழலாடுவதை பார்த்த பார்கவி நிமிர்ந்து பார்த்து அதிர்ச்சியில் கையிலிருந்த பாத்திரத்தைச் சிதறவிட்டாள்.

Advertisement

 

 

“என்னடி பண்ற” என்ற சத்தத்தோடு வெளியில் வந்த சாந்தா தமிழை பார்த்து அதிர்ச்சியாகி, சட்டென்று கணவரின் அறையை எட்டி பார்த்தார் அங்குதான் தந்தையின் காலடியில் அமர்ந்திருந்தாள் துளசி.

 

 

தமிழின் அருகில் வந்தவர் “எதுக்கு இப்போ  வந்தீங்க… துளசிக்கு கல்யாணம் முடிவாயிடுச்சு நாளைக்கு கல்யாணம் மாப்பிள வீட்டாளுங்க எல்லாம் இங்க பக்கத்துலதான் தங்கியிருக்காங்க தேவையில்லாம பிரச்சனை  பண்ணாதீங்க, உங்கள இங்க பாத்தா அவ புகுந்த வீட்டில பிரச்சனை பண்ண போறாங்க போங்க” என்றார் கோபத்தோடு.

 

 

“ஒரே ஒருதடவை துளசியை பாத்துக்குறேன்” என்றான் கலங்கிய குரலில்.

 

 

 

“எதுக்கு?  அவ மனசு மாறிக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா நீங்கப் பேசி மறுபடியும் அவளைக் குழப்ப போறீங்களா முதல்ல கிளம்புங்க யார் கண்ணுலயும் படாம” என்க.

 

 

“எங்க அம்மா பேசினது ரொம்ப பெரிய தப்பு இல்லன்னு நான் சொல்லல ஆனா இவ்ளோ அவசரப்பட்டு நீங்க இந்த முடிவு எடுத்திருக்க வேண்டாம்,  அவ மனசை நீக்க யோசிக்கவேயில்லையா” என்றவன் குரல் செவிகளைத் தீண்டத் தட்டு தடுமாறி எழுந்து அவசரமாக வெளியில் வந்தாள் துளசி.

 

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அப்படியே  நிற்க “உள்ளபோ துளசி” என்றாள் துர்கா.

 

 

இவர்களைக் கடந்து வேகநடையில் அவளின் அருகில் சென்றவன் விழிகள் முதலில் அந்த மூக்குத் தியில் பதிந்தது வெள்ளைக்கல் மூக்குத்தி அணிந்திருந்தாள்.

 

 

“இங்க பாரு துளசி என்னை மீறி நீ போனா இந்த வீட்டில மூணு பொணம் கிடக்கும்,  எங்களைக் கொன்னுட்டு நீ மட்டும் போய் நிம்மதியா வாழு உன்னைப் பெத்து வளத்தத்துக்கு உங்க அப்பாவுக்கு நல்ல பேரை வாங்கி குடு அப்படியே  ஓடிப் போனவ தங்கச்சின்னு உன் அக்காவும் வீட்டோடு வரட்டும்”.

 

 

“இத்தனை வருஷம் வளத்த எங்களைவிட மூணு மாசம் தெரிஞ்ச இவன் உனக்கு முக்கியமா போயிட்டான்னா போ” என்றார் சாந்தா.

 

 

கசப்பான ஒரு முறுவல் தமிழின் இதழ்களில், அவள் நெற்றியில்  இப்பொழுதும் இடம்பிடித்திருந்தது காயத்திற்கு போட்ட பிளாஸ்டர் அதை வருட நீண்ட கையைக் கடினப்பட்டு பிடித்துவைத்தான், தன்னை மாய்த்துக்கொள்ள அவள் முயன்றதின் தழும்பு என்று அவன் அறியவில்லை எதையும் அவளிடம் கேட்கவும் முடியவில்லை.

 

 

 

“கடைசில ரெண்டு பேரோட  அம்மாவுக்கும் அவங்க பிள்ளைங்க மனசு புரியல…   இப்போ கூப்பிட்டா வரமாட்டல்ல… உன்னால வர முடியாது,  நான் ரொம்ப லேட்டா வந்துட்டேன்”  என்றவன் விழிகள் கலங்க தொடங்க துளசி பெரும் கேவலோடு அவன் காலின் கீழே அப்படியே மடங்கி அமர்ந்தாள்.

 

 

நெஞ்சம் விம்மியது இதயம் அழுந்தியது வலியைத் தாங்கமுடியவில்லை தமிழால்,  பக்கத்தில் திரும்பிப் பார்த்தவன் அங்குத் தாம்பாளத்தில் வைத்திருந்த அட்சதையை எடுத்து அவள் தலையில் இட்டு “நல்லா இரு துளசி நல்லா இரு”  என்றதோடு அங்கிருந்து வெளியேறினான், சட்டை பையில் அவளுக்காக வாங்கி வைத்திருந்த தாலிக்கொடி அவன் உடலைவிடப் பாரமாகக் கனத்தது.

 

 

மறுநாள் துளசியின் திருமணம் அந்த ஊரின் அம்மன் கோவிலில் எளிமையாக நடந்து முடிந்தது பாண்டிச்சேரியில் வரவேற்பு வைத்துக்கொள்வதாக வெற்றிவேல் குடும்பத்தில் சொல்லிவிட இங்கே கோவிலில் திருமணம் முடித்து அங்கேயே மண்டபத்தில் விருந்தும் நடந்தது.

 

 

ஜெயந்தி குடும்பத்தோடு வந்திருந்தார் சாந்தா பெரிதாகக் கொண்டாடவில்லையென்றாலும் வந்தவர்களுக்கு மரியாதை குறைவு இல்லாமல் பார்த்துக்கொண்டார்,  துளசி யாரிடமும் பேசவில்லை.

 

 

“பெரியம்மாவுக்கும்  பிரியாவுக்கும்  ஒன்றுமே செய்யமாட்டேன்” என்று பிடிவாதமாக நின்றாள் பார்கவி.

 

 

 

“கல்யாணப்பொண்ணு இப்படி உம்முனு இருக்கலாமா” என்றார் துளசியின் மாமியார் விஜயலக்ஷ்மி.

 

 

“அவங்க அப்பா முடியாம இருக்கார்ல அவரால கல்யாணத்தை பாக்க முடியலையே அந்த வருத்தம்,  அதோட வழுக்கி விழுந்து அடி வேற பட்டிருச்சு அதான் அப்படி இருக்கா” என்றார் சாந்தா.

 

தன்னையே அனைவரும் கவனிப்பதை உணர்ந்த துளசி இருபத்தைந்து நாட்களுக்குப் பிறகு வராத சிரிப்பை வலுக்கட்டாயமாக இதழில் ஒட்டவைத்தாள், அன்றே சடங்குக்கு நாள் பார்த்திருந்ததனர்  மாலை கோவில் சென்றுவந்து இரவுக்கு அவளைத் தயார் செய்ய அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

 

 

 

“அக்கா…” என்று அருகில் வந்த பார்கவியை கை நீட்டித் தடுத்தாள் துளசி “என் பக்கத்துல  வராத பாரு எனக்கு அழ வேண்டாம், உங்க அம்மாவைத் திருப்தி படுத்திட்டேன் இப்போ மாப்பிளையை திருப்தி படுத்தனும் வேலை இருக்கு” என்றாள் உணர்ச்சியே இல்லாமல்.

 

 

 

“அக்கா” என்று பார்கவியும்” துளசி” என்று துர்காவும் அதிர்ச்சியாக அழைக்க அவளையே பார்த்து நின்றார் சாந்தா ‘என்ன இது’ என்று அவர் கையிலிருந்து பாலை வாங்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

 

 

அன்று இரவு சாந்தாவும் துர்காவும் மட்டும் அங்குத் தங்கிக்கொள்ள மற்றவர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கிக்கொண்டனர்,  கட்டிலில் அமர்ந்திருந்தவன் அவள் வந்ததும் சினேகமாகப் புன்னகைத்தான் அவன் கையில் பாலை  கொடுத்துத் துளசி அசையாமல் நின்றாள்.

 

 

“உக்காரு துளசி” என்றான்.

 

 

“துளசி…”  என்ற தமிழின் அழைப்பு செவிகளில் ஒலிக்கத் துளசி தடுமாறினாள் உடல் விறைத்தது ‘மறந்துவிடு மறந்துவிடு’  என்று கைகளை இறுக்கமாக அழுத்தி மூடி நின்றாள்.

 

 

 

“உன்னைப் பத்தி நிறைய சொன்னாங்க உன் அக்கா நமக்குப் பேசிக்குற அளவு டைமும் கிடைக்கல, உனக்கு என்னைப்பத்தி தெரியுமா” என்றான்.

 

 

அவள் “ம்ம்” என்றாள்.

 

“இனிமே ஒன்னாதான இருக்க  போறோம் பொறுமையா தெரிஞ்சிக்கலாம்” என்றவன் விளக்கை அணைத்துவிட்டு அவளையும் அணைத்தான்.

 

 

துளசியின் உடல் மரக்கட்டையாக மாறியது அவளுக்கு எந்த உணர்ச்சியும் தோன்றவில்லை விருப்பம் இல்லாமல் ஒருவன் தன்  மீது படர்கிறான், அவனைத் தடுக்கமுடியாமல் தன்னை அவனுக்கு விற்றுவிட்டார்கள் தன்  வீட்டினர்.

 

 

அடிமைக்கு எதிர்க்கும் உரிமை எங்கிருக்கிறது… அவளிடம் பேசி அவளை அவன் புரிந்துகொள்ள முயன்றிருக்கலாம் துளசி அழவில்லை உள்ளுக்குள்ளே அழுத்திவைத்தாள் அத்தனை வலிகளையும்.

 

 

பாதி உயிராகத் திரும்பி வந்தவனை பார்த்துக் கையைப் பிசைந்தாள் தாமரை என்னவென்று கேட்க அவனிடம் அவன் தோற்றமே சொல்கிறதே ஏதோ தவறாகப் போய்விட்டதாக,  சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்ததவன் “அக்கா நீ ஊருக்குக் கிளம்பு எவ்ளோ நாள் இங்கேயே இருப்ப போய் உன் குடும்பத்தைப் பாரு” என்றான் அமைதியாகவே.

 

 

“தமிழு… துளசி…” என்றவளை பார்த்து விருக்தியாகச் சிரித்தான்.

 

 

“இப்போ அவ இன்னொருத்தன் பொண்டாட்டி” என்க.

 

 

தாமரையின் விழிகள் கண்ணீர் பொழிந்தது தம்பியின் நிலையைப் பார்த்து “ஆசைப்பட்டவளை   கட்டிக்கிட்டா அவ பின்னாடியே  போய்டுவேன் இவங்கள மறந்துடுவேன்னு பயந்தாங்கல்ல இனிமே அந்தப் பயம் வேண்டாம் கடைசிவரைக்கும் அவங்க மகனாவே இருப்பேன்” என்றவன் தன் அறைக்குள் நுழைந்துகொண்டான்.

 

 

 

தாமரை ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள் அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு கற்பகத்தின் அறைக்குச் சென்றாள் “நான் ஊருக்குக் கிளம்புறேன்” என்றவளை பார்த்த கற்பகம் “அடிக்கடி வந்து போ அவன் மனசு மாறும்” என்க.

 

 

“உன் நம்பிக்கை உன்னைக் காப்பாத்தட்டும், இப்போ கூட உனக்கு அவன் மனசு புரியல செஞ்சது தப்புனு தோணல” என்றவள் ஊருக்குச் சென்றுவிட்டாள்.

 

 

திருமணம் முடிந்த மறுநாள் காலைக் குளித்து அடுப்படிக்கு வந்த துளசி அவளே  டி போட்டு எடுத்துக்கொண்டு பின்னில் சென்று அமர்ந்தாள் மெதுவாகக் குடித்து முடிக்க அவள் அருகில் வந்தார் சாந்தா.

 

 

“துளசி மாப்பிளை எழுந்துட்டாரா ஒன்னும் பிரச்னையில்லயே” என்க.

 

 

அவரைத் திரும்பியும் பார்க்காமல் உள்ளே வந்தவள் வேறு டி போட்டு எடுத்துக்கொண்டு அவளின் ரூமிற்க்கு சென்றாள்,  வெற்றிவேல் குளித்து உடைமாற்றி நின்றிருந்தான்.

 

 

அவன் கையில் அதைக் கொடுத்தவள் “உங்க வீட்ல எல்லாரும் வந்துட்டாங்க சாப்பிட கூப்பிடுறாங்க” என்றாள்.

 

 

“ஹ்ம்ம் போலாம்” என்றவன் அவளுடன் வெளியில் வந்தான்,  உணவு முடிந்து அவளுடைய பொருட்கள் மீதம் இருந்தததையும் பேக் செய்தாள் மாலை ஊருக்குச் செல்கின்றனர்,  சாந்தா மட்டும் அங்கேயே இருப்பதாக முடிவு செய்திருந்ததனர் விஜயகுமாரை பார்த்துக்கொள்ள அவர் அங்கு இருக்கவேண்டுமே.

 

 

தந்தையின் அருகில் சென்று  “நான் கிளம்புறேன்பா உடம்பை பாத்துக்கோங்க” என்றவள் தாயிடம் ஒன்றும்  பேசாமலே அவளுடைய பிறந்த  வீட்டை விட்டுப் படியிறங்கினாள்.

 

 

அவளுடனே துர்காவும் அவளின் கணவன் சேகரும் பிள்ளையும் மற்றும் பார்கவியும் கடலூர் செல்வதாக முடிவு செய்யப்பட்டிருந்ததது அதன் படி அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்,  மறுநாள் மதியம் போலக் கடலூர் சென்று சேர்ந்தனர்  அங்கிருந்து கார் வைத்து வெற்றிவேலின் வீட்டிற்கு சென்றனர்.

 

 

 

மெய்ன் ரோட்டிலிருந்து உள்ளே செல்லச் செல்லச் சாலை குறுகிக்கொண்டே சென்றது,  கார்  உள்ளே நுழைய முடியாத குறிகிய தெருவின் முன்னே வந்ததும் வண்டியை நிறுத்தச் சொன்னான் வெற்றிவேல்.

 

 

“கார் உள்ள போகாது இங்கேயே இறங்கிக்கலாம்” என்க அவனின் பெற்றோர்    மற்றும் அக்கா குடும்பம் அனைவரும் அங்கேயே இறங்கிக்கொண்டனர்.

 

 

துர்கா சேகர் பார்கவி அனைவரின் முகமும் மாறிவிட்டது, மிகவும் குறுகலான வீடுகள் ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டிற்கும் இடையே இடைவெளியே இல்லை மெல்ல நடந்து பாதிதூரம் சென்றதும் ஒரு பச்சை பெயிண்ட்  அடித்த வீட்டிற்கு முன் நின்றான் வெற்றிவேல்.

 

 

இவர்கள் வந்ததுமே அந்த வீட்டின் முன்னே நின்றிருந்த பெண்மணி ஒருவர் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார் “இவங்க நம்ம வீட்டில மேல குடியிருக்காங்க” என்றான் வெற்றிவேல்.

 

 

விஜயலக்ஷ்மி சென்று கதவைத் திறந்தார் முன்னில் ஒரு சிறிய இடம் இரண்டு பைக் நிறுத்தினாலே இடம் அடைத்துக்கொள்ளும் ஒரு ஆள் நடமாடவே இடம் இருக்கும், அங்கிருந்து உள்ளே செல்ல ஒரு சிறிய ஹால் அதிகம் போனால் நான்கு பேர் மூச்சுமுட்டாமல் நிற்கலாம்.

 

 

ஹாலிலிருந்து உள்ளே சென்றாள் மிகச்சிறிய அடுக்களை பிரிட்ஜ் கூட இல்லை உண்மையில் பிரிட்ஜ் வைக்கக் கூட அங்கு இடமில்லை  அதைத் தாண்டினால் ஒரு படுக்கையறை கட்டில் மட்டுமே அதிலிருந்து கீழிறங்கினால் ஒரு ஆள் நடக்கலாம் அங்கிருந்து ஒரு சிறிய கதவு அதைத் திறந்தால் ஒரு இடுக்கு சந்து அங்கே துணி காயப்போட கொடி கட்டியிருந்தது.

 

 

லைட் போடவில்லையென்றால் வீடே இருளில் மூழ்கிக் கிடக்கும், சொந்தமாக வீடு இருக்கிறது என்றதை இப்படி இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை பார்கவியின் முகம் கோபத்தில் சிவந்தது.

 

 

துர்காவை திரும்பிப் பார்த்து முறைத்தவள் “எல்லாம் பேசினியே  வீட்டைப் பத்தி  எதுவும் பேசலையா,  இந்த வீட்டில எப்படி இருக்க முடியும் வீடா இது குருவிக்கூடு காத்து இல்ல வெளிச்சமில்ல உன்னை இப்படியொரு வீட்டுக்கு அனுப்பியிருந்தா சும்மா இருப்பியா” என்றாள் பல்லைக் கடித்துக்கொண்டு.

 

 

“நான் என்னடி பண்ண வந்து பாக்க யாரும் இல்ல” என்றாள்,  அவள் முகமும்  ஒருமாதிரி  ஒவ்வாத தன்மையோடு இருந்தது.

 

 

இருவரும் துளசியை பார்க்க அவள்  எழுந்து ஹாலின் மூலைக்கு சென்றாள் அங்கு மிகச் சிறிய அளவில் ஒரு ஜன்னல் அதைத் திறந்துவைத்தாள், அவள் விழிகள் அந்த வீட்டிலிருந்த அந்த ஒற்றை ஜன்னலின் வழியே இலக்கு இல்லாமல் வெறித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!