Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒளி சிந்தும் இரவு

ஒளி சிந்தும் இரவு 6.2

குவைத்தில் ஷுட்டிங் முடித்து மீண்டும் சென்னையில் இருபதுநாள் தங்கியிருந்து நடித்தான். நான்கு நாள் கழித்து மீண்டும் ஷுட்டிங் இருக்கவே, உடல் ஓய்விற்கு ஏங்கியபோதும் ஜனனிக்காகவும், சுகந்திக்காகவும் வீட்டிற்கு வந்தான்.

   சத்யனுக்கு தான் அளித்த ஒருமாத கால அவகாசத்தில் இருபதுநாள் முடிந்திருந்ததால் இன்னும் பத்து நாள் கழித்து நல்ல பதில் சொல்வான் என்ற அற்ப நம்பிக்கை இருந்தது. இனி சுகந்தியிடம் பேசனும். நேரடியாக மறுமணம் குறித்து பேச வேண்டாம். வேறு மாதிரி பேசலாம் என்ற நினைப்போடு வீட்டிற்கு வந்தான்.

   மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த ஜனனி அன்பரசை கண்டதும் சந்தோசத்தில் திளைத்தாள். பள்ளியிலும் பாட்டு க்ளாஸிலும் நடந்தவைகளை விளக்கி, நாளை மறுநாள் போட்டிக்கு தயாராக இருப்பதாய் பெருமையோடு சொன்னாள்.

    மகளை அரவணைத்து மகிழ்ந்தவன், “இந்த முறை காம்படேஷன்க்கு நான் வரேன்டா ஜனனிம்மா. அப்பா இன்னும் மூனு நாளைக்கு இங்கதான் இருப்பேன்” என்றான்.



Advertisement

    தந்தை போட்டியை காண வருக்கிறார் என சந்தோசித்தாலும், “நாலு நாளுக்கப்புறம் போகனுமாப்பா?” என்றாள் சோர்வாக.

     “ஆமாம்டா. அப்பா பெரிய பட்ஜட் படத்துல பெரிய பெரிய ஆக்டரோட நடிக்கிறேன். நிறைய வேலை இருக்கும்ல?” என தேற்றி, “இந்த முறை காம்படேஷன்க்கு பெரியம்மாவை கூட்டிட்டு போலாமா?” என்றான்.

    “ஓ எஸ் போலாமே. ஆனா பெரியம்மா வரமாட்டாங்களே. அவங்களுக்கு பிடிக்காது” என்றாள்.

Advertisement

    “உனக்காக வர வைப்போம். நீ கூப்பிடு. நானும் சொல்றேன், இரண்டு பேரும் சேர்ந்து வர வைப்போம் சரியா?”

Advertisement

    “ம்” என சந்தோசிக்க, “அத்தை” என அழைத்தான்.

    கல்பனா வரவே, “சுகந்திக்கு கால் பண்ணுத்த, நானும் ஜனனிம்மாவும் பேசனும்” என்றான்.

     “வேணாம் அன்பு” என்றார் கலக்கத்தோடு.

Advertisement

     “ஏன்த்த?” என இவன் புருவம் சுருக்க, “நீ ஊருக்கு போகும் முன்ன ஒரு வரன் வந்துச்சினு சொன்னேன்ல அன்பு. சுகந்திகிட்ட பேசினேன். சம்மதிக்கவே மாட்டேனுட்டா. இப்படியே உன்னை தனியா விட்டுட்டு நான் செத்தேன்னா என் கட்டை வேகுமானு கேட்டேன். அப்போ உனக்கு முன்ன நான் செத்துட்டா உன் கட்டை வேகுமானு கேட்குறா” என்றார் வேதனையோடு.

    “ஓ… அதான் நான் போன் செய்தப்போவும் எடுக்கலயா?” என முணுமுணுத்தவன், “நான்தான் இனி சுகந்திகிட்ட கல்யாணத்தை பத்தி பேசாதிங்கனு சொன்னேன்ல? எதுக்கு பேசுனிங்க?” என்றான் முறைப்போடு.

    “பேசாம என்ன செய்யிறது?” என்றார் ஆற்றாமையோடு.

    “ப்ச் அத்த…” என சலித்தவன், “முதல்ல சுகந்தியை கோவில், சொந்தங்கள் கல்யாணம் அப்படியிப்படினு வெளில கூட்டிட்டு போங்க. வீட்டுக்குள்ளயே அடைஞ்சி கிடக்கவும்தான் எதுக்கும் ஆசைப் பட மாட்டேங்குது” என கடிந்து, “என் நம்பர்லயிருந்து கூப்பிட்டா எடுக்கமாட்டேங்குது. போன் பண்ணித்தாங்க” என்றான்.

    கல்பனா அழைப்பு விடுக்க, அன்னை அழைப்பையும் ஏற்கவில்லை சுகந்தி. “இது வேலைக்காகாது. வாடா தங்கம் நாம நேர்ல போய் சொல்லலாம்” என்றெழுந்தான்.

   “இந்த நேரத்துக்கா? நீ ஜிம்முக்கு போகல?”

    “நடிக்க ஆரம்பிச்சதுலயிருந்து கிடைக்குற நேரத்துலதான் எக்ஸைஸ் பண்றேன். வாரத்துல இரண்டு மூனு நாள் விட்டுப் போய்டுதுத்த.  இன்னைக்கும் அப்படியே நினைச்சுக்கிறேன்” என்றவன் “ஜனனிம்மா, போய் வேற டிரஸ் போட்டுட்டு வாடா” என்று தானும் கிளம்ப அறைக்குள் சென்று வந்தான்.

    “பாப்பா எதுக்கு அன்பு? நீ மட்டும் போய் வாயேன். வர நேரமாகிட்டா காலைல சீக்கிரம் எழுந்துக்கமாட்டா” என்றார் கல்பனா.

    “பாப்பாவை வச்சுத்தான் சுகந்தியை இழுக்கனும். இப்போ மணி அஞ்சுதானத்த ஆகுது? ஆறரைக்கு அங்க போய்டுவோம். அரைமணி நேரம் பேசியிருந்து ஏழுக்கு கிளம்பி எட்டரைக்கெல்லாம் வந்துடுவோம். பாப்பாக்கு அங்கையே சாப்பிட வச்சிடறேன், எனக்கு இங்க சமைச்சிடுங்க, அப்பா வந்ததும் சொல்லிடுங்க” என்று கிளம்பினான்.

   சரியாக ஆறரை மணிபோல் சுகந்தி வீட்டிற்கு வர, அத்தனை சந்தோசப்பட்டான் சேகர். “அன்பு… வாடா வாடா” என வரவேற்று “குட்டிம்மா” என தூக்கிக்கொண்டான் ஜனனியை.

   அறையிலிருந்து சுகந்தி வெளியே வந்தாள். “நல்லாயிருக்கியா சுகந்தி?” என்றான் இயல்பாக.

   “ம்” என இறுகிய முகத்தோடு சொன்னவள், “ஜனனிம்மா” என சிறுமியிடம் சென்றாள்.

    சேகர் மனைவி தண்ணீர் கொண்டு வர, “நல்லாயிருக்கிங்களாக்கா?” என்க, “நல்லாயிருக்கேன் அன்பு. நீதான் ரொம்ப பிஸி. போன் கூட செய்யிறதில்ல” என குறைப்பட்டாள்.

   தன் திருமணத்தைப் பற்றித்தான் பேச வந்திருப்பான் என நினைத்த சுகந்தி, “இவ்வளோ பிஸியில என்ன விசயமா வந்த?” என்றாள் முறைப்பாக.

   “நானொன்னும் உன்னைப் பார்க்க வரல, ஜனனிம்மாக்கு உன்னை பார்க்கனுமாம்” என்றான் இவனும் முறைப்பாக.

     “அப்படியாடா தங்கம்… பெரியம்மாவைப் பார்க்க வந்தியா?” என்றாள் சந்தோசமாக.

     “ஆமாம் பெரியம்மா, நான் காம்படேஷன்ல கலந்துக்கப்போறேன், நீங்களும் பார்க்க வரனும்” என கட்டளையிட்டு “போன் செய்தா நீங்க பேசமாட்டேங்கிறிங்க” என குறைபட்டாள் சின்னவள்.

    “சாரிடாம்மா. இனி என்னோட பேசனும்னா தாத்தா போன்லயிருந்து வாய்ஸ் மெஸேஜ் போடு. நான் உடனே கால் பண்றேன்” என்றாள் சமாதானமாக.

    “ம்” என சமாதானம் ஆனவள், “பெரியம்மா என்னோட காம்படேஷன் நடக்குற இடம் உங்களுக்கு தெரியாது. அதுக்கு ரொம்ப தூரம் போகனும், எங்களோட வாங்க. அப்பா நம்மளை கூட்டிட்டு போவார்” என்றாள்.

    “பெரியம்மாக்கு வேலையிருக்குடா” என சுகந்தி சமாளிக்கப் பார்க்க, “என்ன வேலை?” என முறைத்தான் அன்பரசு.

    “என்னவோ வேலை” என இவளும் முறைத்து சின்னவளை சமாதானம் செய்யப்பார்க்க, “அத்தைகிட்ட இனி சுகந்தி கல்யாணத்தைப்பத்தி பேசாதிங்கனு சொல்லிட்டுத்தான் போனேன். எதுக்குத்தான் சும்மா அதையே யோசிக்கிறாங்களோ?” என கடிந்து “கல்யாணம் பிடிக்கலனா வாழ்க்கையில வேற எதுவுமே இல்லையா சுகந்தி?

    எதுலயும் ஆர்வமில்லாம எதுக்கு இப்படி முடங்கியிருக்க? அதனாலதான் உன்னை நினைச்சு மத்தவங்களும் வருந்துறாங்க. உனக்கு பிடிச்சதை செய்துட்டு சந்தோசமா இருந்தா யாரும் கல்யாணத்தை பத்தி பேசமாட்டாங்க. அதுக்கு நான் கியாரண்டி” என்றான் சுகந்தியிடம்.

    பேசுவது நீதானா? என்பதுபோல் சுகந்தி பார்க்க, “நிஜமாத்தான் சொல்றேன். உன் கல்யாணத்துக்கு முன்ன தீபாவளிக்கு எங்க வீட்டுக்கு வருவதான? இனி அது தொடரனும். நாங்களும் முன்ன மாதிரி பொங்கலுக்கு இங்க வரோம். சேகர் குழந்தைகளுக்கு பிறந்தநாளுக்கு நான் ஊர்ல இருந்தேன்னா வரேன். இல்லைனா அப்பாவோட ஜனனிம்மா வருவா. அதேபோல நீயும் ஜனனிம்மா பிறந்தநாளுக்கு வரனும். புரியுதா?” என்றான் கட்டளையாக.

    “இல்ல. நீ சொன்னாலும் அம்மா கேட்காது. அதோட உன் பேச்சை நம்பமாட்டேன். அம்மாவோட சேர்ந்து நீயும் என்னை மறு கல்யாணத்துக்கு கம்பல் செய்தவன்தான? இப்போ என்ன புது அக்கறை?” என்றாள் நம்பாத்தன்மையோடு.

    முறைத்தவன், “ஜனனிம்மா போய் பாப்பாங்களோட கார்ட்டூன் பாரு. அப்பா வரேன்” என சேகர் குழந்தைகளோடு அனுப்பியவன், “உன்மேல எப்போவும் எனக்கு அக்கறை இருக்கு. உனக்கு புரியலைனா இல்லைனு ஆகிடுமா?” என முறைத்து, “இனி உன் கல்யாண பேச்சை எடுக்க வேணாம்னு சொன்னது உனக்காக மட்டும் இல்ல, ஜனனிம்மாக்காகவும்” என்றான்.

   ஜனனி என்றதும் சுகந்தி முகம் இலக, பார்த்தவன் மனம் நிம்மதிகொண்டது. “ஜனனிக்கு ஏழு வயசு முடியப்போகுது சுகந்தி. நானும் சத்யனுக்கு கல்யாணம் செய்திடனும் எவ்வளவோ பேசினேன். முடியவே முடியாதுனுட்டான்.

   ஸ்கூலுக்கு அனுப்புறது, பாட்டு க்ளாசுக்கு அனுப்புறதுனு அத்தை ரொம்ப நல்லா பார்த்துக்கிறாங்கதான். ஆனாலும் ஸ்கூல் ஃபங்ஷன்க்கு, சிங்கிங் காம்படேஷன்னு அத்தையால அலைய முடியல. நான் இங்க இருந்தேன்னா போய்டுவேன். நான் இல்லாத நேரம் யாரும் நம்ம கூட வரலைனு ரொம்ப வருந்துறா.

    ஜனனிம்மாக்குள்ள இன்னும் நிறைய திறமை இருக்கு. ஆனா அவளுக்கு ஹெல்ப் பண்ண ஆளில்ல. நீ படிச்சவ, ஒரு செவன்ந்த் இல்ல எய்த் முடிக்கும் வரை பாப்பாவை கைட் பண்ணினா போதும். அதுக்கப்புறம் அவளே படிச்சிப்பா. உன்னை அங்கையே இருந்து பார்த்துக்கோனு சொல்லலை. வாரம் இரண்டு இல்ல மூனு நாளைக்கு மட்டுமாவது அங்க வரலாமில்ல?” என்றான் உரிமையாக.

    “எனக்கு வரது பத்தி ஒன்னுமில்ல. ஆனா…” என்றவளுக்கு குரல் உள்ளே போக, “இனி யாரும் உன் கல்யாணத்தைப் பத்தி பேசமாட்டாங்க” என்றான் மீண்டும்.

    அப்பொழுதும் சுகந்தி தடுமாற, “அப்பாகிட்டயும் அத்தைகிட்டயும் சுகந்தி கல்யாணம் பத்தி பேசக்கூடாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன். சத்யனும் சரவணனும் போன் செய்தா நீ பேசப்போறதில்ல. அப்புறம் வேற யாரு உன்னை தொல்லைப் பண்ணப்போறாங்க? இந்த ஒருமுறை என் பேச்சை நம்பித்தான் பாரேன்” என்றான் கெஞ்சலாக.

    “சரி வரேன்” என்றாள் சன்னக்குரலில்.

    சந்தோஷித்தவன் “இன்னைக்கே வரியா? நாளை மறுநாள் ஜனனிக்கு காம்படேஷன் இருக்கு. அது முடிஞ்சதும் நானே கூட்டிட்டு வந்து விட்டுடறேன்” என்றான் ஆசையாக.

    சுகந்தி முகம் சுருக்க, “உன்னை இன்வைட் பண்ணத்தான் ஜனனிபாப்பா வந்தா. அவளோடவே வரேனு சொன்னா ரொம்ப சந்தோசப்படுவா. வந்தாதான் என்னவாம்?” என்றான் முறைப்பாக.

    பிறந்ததிலிருந்து அன்னை அரவணைப்பில்லாமல் வளர்ந்த ஜனனியை பார்வையால் வருடியவள் “சரி வரேன். ஆனா எல்லாரும் நாளைக்கு போலாம். இன்னைக்கு இங்க இரு” என்றாள்.

    “நாளை மறுநாள் காம்படேஷன்றதால நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கெல்லாம் ஜனனி க்ளாசுக்கு போகனும். நானே சம்மதிச்சாலும் ஜனனி தங்கமாட்டா” என்றான்.

   “சரி பாப்பாவை சாப்பிட வச்ச பின்னயாவது கிளம்பலாம்ல?”

   “டபுள் ஒகே. சமையல் ஆச்சாம்மா?” என சேகர் மனைவியிடம் கேட்க, “அவளுக்கு உடம்பு சரியில்ல, நான்தான் சமைக்கனும். சேகரோட பேசிட்டிரு, அரைமணி நேரத்துல சமையல் முடிச்சிடறேன்” என கிச்சனுள் சென்றாள்.

    “என்ன அன்பு இப்படி பேசிட்ட?” என சேகர் சன்னக் குரலில் கடிய, “ம்… அப்புறம் சேகர், ஒர்க்லாம் எப்படி போகுது?” என்றான் இயல்பாக.

    “அதுக்கென்ன நல்லாத்தான் போகுது” என்று கடுகடுத்து வெளியே போனான் சேகர். இவன் கிச்சனில் இருக்கும் சுகந்திக்கு கேட்கும் வகையில், “சுகந்திக்கு கல்யாணம் பிடிக்கலனா நான் என்னம்மா செய்வேன்? என்னை திட்டிட்டு போறான். கல்யாணம் அவங்கவங்க விருப்பம்தானே?” என அனுவிடம் நியாயம் கேட்டு சேகரை காண வெளியேறினான்.

    சேகர் முகம் இறுக, “அந்த பிசாசு சமைச்சி முடிக்கும் முன்ன பேசிடறேன்” என்றவன், “இனி வெளியாட்களுக்கு சுகந்தியை கட்டிக்கொடுக்க நினைகிறது முட்டாள்தனம் சேகர்” என்றான் அன்பரசு.

   சேகர் புரியாமல் பார்க்க, சத்தியனிடம் தான் பேசியதை சொன்னான். “கண்டிப்பா சுகந்தி ஒத்துக்கமாட்டா அன்பு. சத்தியனை விட சுகந்தி பெரியவ” என்றான் அதிர்வாக.

    “சுகந்தி பெரியவனு எனக்கு தெரியாதா?” என முறைத்து, “முதல்ல சத்யனே இன்னும் ஒத்துக்கல. ஆனா சம்மதிப்பானு எனக்கு நம்பிக்கையிருக்கு. அதேபோல கண்டிப்பா சுகந்தி சம்மதிக்காதுதான். எனக்கு தேவை உன் சம்மதம்தான். சத்யனுக்கு சம்மதம்னா உனக்கு சம்மதமா?” என்றான்.

    “சுகந்திக்கு விருப்பமில்லாத விசயத்துக்கு என்னால எப்படி சம்மதம் சொல்ல முடியும்? அதோட என்னோட சின்ன பையனை கட்டிக்கிற அளவுக்கு இந்த வீட்டுல நான் பாரமாகிட்டேனானு கேட்பாடா” என்றான் கவலையாக.

    “சுகந்திகிட்ட சம்மதம் கேட்கப்போறதில்ல. சத்யன் சம்மதிச்சதும் நாங்க எப்படியோ கல்யாணத்தை நடத்திக்கிறோம். சுகந்தியையும் பார்த்துக்கிறோம். சுகந்திக்கு பிடிக்காதுனு நீ ஏதும் ஆரம்பிக்காம இருந்தா போதும்” என்றான் அன்பரசு.

     “எனக்கு பயமாயிருக்கு அன்பு. உயிரோட இருந்தாளாவது அவ விருப்பத்துக்கு வாழ விட்டோம்ன்ற நிம்மதியாவது இருக்கும். நாம எதாவது செய்யப்போய் வினையாகிடப்போகுது. அவளை பறிகொடுத்துட்டு என்னால நிம்மதியா வாழ முடியாது” என்றான் பயத்தோடு.

   “ஒன்னும் ஆகாது, என்னை நம்பு. மத்ததை நான் பார்த்துக்கிறேன். இனி சுகந்திகிட்ட கல்யாணத்தை பத்தி பேச வேணாம். சத்யன் விசயமும் நமக்குள்ள இருக்கட்டும். அத்தை, அப்பாக்கு தெரியாது.” என்று எடுத்துரைத்து உள்ளே சென்றான் அன்பரசு.

    பின்னே உண்டு முடித்ததும் சுகந்தி கிளம்பி வர, “என்ன கையை வீசிட்டு வர? காம்படேஷன்க்கு போகும்போது போட்டுக்க டிரஸ் எடுத்துக்கோ. இந்த சாரியை மாத்திட்டு சுடிதார் போட்டுட்டு வா” என்றான்.

    “நான் சுடிதார் போடுறதை விட்டு ஆறேழு வருசமாகிடுச்சு” என சுகந்தி முறைக்க, “அதனால என்ன? இப்போ போடு” என்றான்.

    “நான் வரல போடா” என்று இவள் உள்ளே போக எத்தனிக்க, “ப்ச் சைல்டிஸா பிகேவ் பண்ணாத சுகந்தி… ஜனனி வழியில தூங்கிடுவா. பைக்ல ஒன்சைட் உக்கார்ந்தா பாப்பாவை பிடிக்கிறது கஷ்டம். அதுக்காகத்தான் சொல்றேன். டைம் ஆகுது. சீக்கிரம் போய் மாத்திட்டு வா” என்றான் சலிப்பாக.

   “இவ்வளோ சம்பாதிக்கிற? கார் வாங்குறதுக்கென்ன?” என முறைத்து உடைமாற்ற உள்ளே செல்ல, “நீ சொல்லிட்டல்ல? நாளைக்கே புக் பண்றேன்” என்றான் சத்தமாக.

     சுகந்தி சுடிதார் போடச் சென்றது அத்தனை சந்தோசத்தை கொடுக்க, சேகரின் சந்தோசம் பார்த்து தன் காலரையும் ஒற்றை புருவத்தையும் பெருமையோடு உயர்த்தி, “எப்புடீ?” என்றான் கிசுகிசுப்பாக.

   சேகர் “எதோ பண்ணுடா, எனக்கு சுகந்தி சந்தோசமா இருந்தா போதும்” என்றான் நிம்மதியோடு.

   பின்னே சுகந்தி சுடிதாரோடு வர, “வா வா” என அவசரம் காட்டி, சேகர் குழந்தைகளுக்கு முத்தமிட்டு, சேகரிடமும் அவனின் மனைவியிடமும் விடைபெற்று மகிழ்வோடு கிளம்பினான் அன்பரசு.

   ஒன்றரை மணிநேர பயணத்திற்கு பிறகு வீட்டிற்கு வர, பைக்கை நிறுத்தியவன் “இறங்கு சுகந்தி” என்றான்.

    “பாப்பா தூங்கிட்டா அன்பு. இவளை தூக்கிட்டு எனக்கு இறங்க வரல” என்று சுகந்தி சொல்ல, “அத்தை” என்ற குரலுக்கு வெளியே வந்தார் கல்பனா.

    மகளைப் பார்த்ததும் கல்பனா மகம் அதீத மகிழ்வை காட்ட, “நம்ம சுகந்தி நம்மளோடவே கடைசி வரை இருக்கட்டும். இனி கல்யாணத்தை பத்தி பேசமாட்டேனு சொல்லி கூட்டிட்டு வந்திருக்கேன். எதாவது பேசி சுகந்தி மனசை கஷ்டப்படுத்திடாதிங்க” என எச்சரித்து, “பாப்பாவை தூக்கத்தை” என்றான்.

    ஜனனியை தூக்கிக்கொணடு கல்பனா உள்ளே போக, சுகந்தியோடு உள்ளே சென்றான் அன்பரசு. சுகந்தியை கண்ட மாதவனும் சந்தோசித்து, நலன் விசாரித்து, “அன்பு… ரங்கசாமி வீட்டுல எதோ சண்டையாம். டைப்புக்கு வர பசங்க பேசிக்கிட்டாங்க, ஆதிக்கு போன் செய்தேன், அவன் எடுக்கல” என்றதும், “அந்த கஜேந்திரனேது பிரச்சனை செய்தானாப்பா?” என்றான் அதிர்வாக.

    “சரியா தெரியல, ஆனா அப்படியிருக்குமோனுதான் வந்ததும் உன்கிட்ட சொல்றேன்” என்றார்.

    “நான் பார்த்துட்டு வரேன்ப்பா” என்று மாதவனின் பதிலுக்கு காத்திராமல் முல்லை வீட்டிற்கு கிளம்பினான் அன்பரசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!