Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இருளை வென்ற இமைகள்

கங்காவின் இருளை வென்ற இமைகள் 2 2

ஆனா, என் அப்பாவோட மானமும், என் தங்கச்சிங்களோட எதிர்காலமும் போயிடக் கூடாதுன்னு பல்லைக் கடிச்சுக்கிட்டு உக்காந்திருந்தேன்.

பந்தியில அவ சாப்பிடத் தடுமாறுனப்போ கூட, யாருக்கும் தெரியாம அவ கையைப் பிடிச்சுச் சாப்பாடு எடுத்துக் கொடுத்தேன்ப்பா!

ஒரு தடவை… ஒரே ஒரு தடவை பொண்ணைப் பார்த்துட்டு முடிவு பண்ணியிருக்கக் கூடாதா? என் வாழ்க்கையையே இருட்டாக்கிட்டீங்களே!”

வைரக்கண்ணு தலையில அடிச்சுக்கிட்டு அழ, மீனாட்சி தன் மகனைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு கதறுனாங்க.



Advertisement

அழாதடா வைரம் இப்படிலாம் ஆகும்னு எங்களுக்கு என்னடா தெரியும் “என்னை மன்னிச்சுடுடா கண்ணா…

வீட்டுக்கு மூத்தவனா நீ படுற கஷ்டத்தைப் பார்த்து, உனக்கு ஒரு நல்ல துணை சீக்கிரம் அமையணும்னுதான்டா அவசரப்பட்டோம்.

அந்தப் பாவிகள் இப்படிப் பொய் சொல்லுவாங்கன்னு நாங்க
கனவுல கூட நினைக்கலடா…

Advertisement

இப்ப கூட ஒன்னும் கெட்டு
போகல நீ வேண்டாம்னு
சொன்னா இப்போவே கிளம்பிப் போயிடலாம்டா, என் பையன் வாழ்க்கை பாழாகுறதை என்னால பார்க்க முடியாதுடா!” என்றாள் மீனாட்சி.

Advertisement

அந்த அறையில் ஒரு மூலையில அமர்ந்திருந்த தங்கமயிலுவுக்கு, இந்த வார்த்தைகள் ஒவ்வொண்ணும் தன் நெஞ்சை அறுக்குற ரணமாய் இருந்தது.

‘ஐயோ… கடவுளே! என் அப்பா பண்ணுன தப்புக்கு, இந்த
நல்ல மனுஷனோட வாழ்க்கை இப்படிப் பாழாகிப் போச்சே!

தம்பிகளுக்காகவும் தங்கைகளுக்காகவும் தன் வாழ்க்கையையே தியாகம் செஞ்ச ஒரு உத்தமருக்கு, என்னைப்
போன்ற ஒரு குருடியை கட்டி வச்சுட்டாங்களே!’ன்னு அவ உள்ளுக்குள்ளயே குமுறி
அழுது கொண்டிருந்தாள்.

Advertisement

அப்போது, கதவுக்கு வெளியே பெரியசாமியோட குரல் கேட்டது. “சம்பந்தி… நல்ல நேரம் முடியுறதுக்குள்ள பால் பழம் கொடுக்குற சடங்கை முடிச்சிடலாம். நாங்க உள்ள வரலாமா?” என்றார்.

பழனிச்சாமி கோபத்துல பல்லைக் கடிக்க, “அப்பா, அமைதியா இருங்க. அவங்க உள்ள வரட்டும்,”ன்னு மகன் தன் கண்ணீரைத் துடைச்சுக்கிட்டான்.

கதவு திறந்தது. பெரியசாமியும், அவர் மனைவி பார்வதியும், மகன் கார்த்திக்கும் அவனது மனைவி வெண்ணிலா அனைவரும் உள்ளே வந்தார்கள். மாப்பிள்ளையோட சிவந்த கண்களைப் பார்த்ததும், பெரியசாமிக்கு உள்ளுக்குள்ள நடுங்கதான் செய்தது.

பிறகு பார்வதி எதையும் பொருட்படுத்தாமல்
“மாப்பிள்ளை, இந்தாங்க…

முதல்ல பொண்ணுக்குப் பால் கொடுங்க,”ன்னு வெள்ளித் தம்ளரை நீட்ட,

எதுவும் பேசாமல் அந்தத்
தம்ளரை வாங்கிட்டு, கட்டில்ல பயந்து நடுங்கிக்கிட்டு உட்கார்ந்திருந்த தங்கமயிலு பக்கத்துல போய் உட்கார்ந்தான்.

ஒரு நொடி அவளையே உத்துப் பார்த்தான். அவ முகத்துல எந்தச் சூழ்ச்சியும் இல்ல. பெத்தவங்க பண்ணுன தப்புக்கு, இவளும் ஒரு பலிகடா மாதிரி நடுங்கிக்கிட்டு உட்கார்ந்திருக்கா.

‘நான் இவளை வேண்டாம்னு ஒதுக்கி வச்சா, வாழ்க்கை முழுக்க புருஷனால கைவிடப்பட்டவங்கிற பழியோட இவ சாக வேண்டியதுதானா?

என் அப்பா அம்மா செஞ்ச
தப்புக்கும், இவ பெத்தவங்க
செஞ்ச துரோகத்துக்கும், நான் என்னையே தண்டிச்சுக்கிட்டா என்ன?’

மெதுவா பால் தம்ளரை அவ உதட்டுக்கிட்ட கொண்டு
போனான். “குடிங்க…”ன்னு
ரொம்ப மென்மையாச்
சொன்னான்.

தங்கமயிலு அதிர்ச்சியோட முகத்தை லேசா உயர்த்துனா. இவ்வளவு கோபத்துலயும், தன்
மேல கொஞ்சம் கூட வெறுப்பைக் காட்டாம மென்மையாப் பேசுற தன் புருஷனோட குரலைக் கேட்டு அவளுக்குள்ள கண்ணீர் பெருக்கெடுத்துச்சு.

அவ தயங்கிக்கிட்டே ஒரு மிடறு பாலைக் குடிச்சா. பதிலுக்கு அவ கையாலயே அந்தப் பாலை அவனும் குடிச்சான். வாழைப்பழத்தையும் இருவரும் பகிர்ந்து சாப்பிட்டாங்க.

சடங்கு முடிஞ்சதும், பழனிச்சாமி நிம்மதிப் பெருமூச்சு விட்டு, “சரி சம்பந்தி, நாங்க பொண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறோம். எல்லாரும் வண்டியில ஏறுங்கப்பா…”னு சொன்னாரு.

“நில்லுங்கப்பா!”

கணீர்னு ஒலிச்ச அந்தக் குரல் அறையை மீண்டும் அதிர வைக்க, அவன் எழுந்து நின்னான்.

“நான் உங்க வீட்டுக்கு வரலப்பா!”

“என்னடா சொல்ற? உங்க வீடா?விளையாடாத!” என்று மீனாட்சி
பதற.

“நான் விளையாடல. நீங்க செஞ்ச தப்புக்கும், இவங்க பெத்தவங்க செஞ்ச துரோகத்துக்கும் நான் என்னையே தண்டிச்சுக்க முடிவு பண்ணிட்டேன்.

என் கையால இவ கழுத்துல
தாலி கட்டியாச்சு. இனிமே இவ
என் பொண்டாட்டி. இவளை நடுத்தெருவுல விட்டுட்டுப் போற கோழை நான் இல்ல. இந்த வாழ்க்கையை நான்
ஏத்துக்கிறேன்!”

இதைக் கேட்டதும் பெரியசாமி கண்களில் நீரோட கைகூப்பி. “மாப்பிள்ளை… நீங்க தெய்வம் மாப்பிள்ளை!

எங்க பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னுதான் நாங்க இப்படிப் பண்ணிட்டோம்… எங்களை மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை!”னு காலடியில விழப் போக,

அவன் அவரை தடுத்து நிறுத்திவிட்டு, அவரைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் பேசினான்.

“பெத்த பொண்ணு மேல உங்களுக்கு இருந்த பாசத்தை
விட, என் அப்பா அம்மா என் மேல வச்சிருந்த நம்பிக்கை பெருசு பெரியசாமி ஐயா!

ஆனா, ரெண்டு பேருமே சேர்ந்து
என் வாழ்க்கையைப் பலி கொடுத்துட்டீங்க. உங்க பொண்ணை நான் கண்கலங்காம பார்த்துக்குவேன்… ஆனா, இந்த துரோகத்துக்கு உங்க முகத்துலயும் இனிமே நான் முழிக்க மாட்டேன்!”

பிறகு, நேரா தன் அப்பா அம்மா முன்னாடி வந்து நின்றவன்,

“ஆனா ஒண்ணுப்பா… உங்க மேல எனக்கு இருக்குற கோபம் சாகுற வரைக்கும் போகாது.

பெத்த பையன் வாழ்க்கையை
பத்தி ஒரு தடவை கூட யோசிக்காம இப்படிப் பணயம் வச்சுட்டீங்களே…

நான் உங்க வீட்டுக்கு வந்தா, தினம் தினம் உங்க முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு இந்தத் துரோகம்தான் ஞாபகத்துக்கு வரும். அது உங்களுக்கும் கஷ்டம், எனக்கும் கஷ்டம்.

இனிமேல் நான் உங்க மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்! இவளைக் கூட்டிக்கிட்டு, யாருக்கும் தெரியாத தூரத்துக்கு… இந்த ஊரை விட்டே நான் போறேன்!”

“டேய் வைரக்கண்ணு! வேண்டாம்டா, அப்பா தப்பு பண்ணலடா, உன்ன பிரிஞ்சா செத்துப் போயிடுவேன்டா!”ன்னு
பழனிச்சாமி கதறிக்கிட்டு மகன் பின்னோடு ஓடினார்.

வைரக்கண்ணு தன் அப்பாவைத் தடுத்து நிறுத்திவிட்டு, கதவை நோக்கி அடி எடுத்து வைத்த அந்த நொடி… அந்த அறையே ஒரு போர்க்களமாகவும், கண்ணீர் கடலாகவும் மாறியது.

“அண்ணா! போகாதண்ணா! எங்களை விட்டுட்டுப் போகாதண்ணா!”

கடைசித் தங்கச்சி அல்லி ஓடி
வந்து, தன் அண்ணனின் இரு கால்களையும் கட்டிக்கொண்டு தரையில் விழுந்து கதறினாள்.

“அண்ணா, நீ இல்லாம நாங்க எப்படிண்ணா இருப்போம்? எங்களுக்கு அப்பாவும் நீதான், அம்மாவும் நீதான்ணா!

காலையில ஸ்கூலுக்குப் போகும்போது எங்களுக்குத் தலை பின்னி விட்டு, கையில காசு கொடுத்து அனுப்புறது நீதானண்ணா! நீ போயிட்டா எங்களை யாருண்ணா
பார்ப்பாங்க?

எங்க மேல உனக்குப் பாசமே இல்லையாண்ணா?” என்று அந்தப் பதினாறு வயதுப் பெண், தன் பிஞ்சுக் கைகளால் அண்ணனின் வேட்டியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு விம்மி விம்மி கேட்க,

அவளது அழுகுரலைக் கேட்டு,
மற்ற இரு தங்கைகளான பூங்கொடியும், செவ்வந்தியும் ஓடி வந்து அண்ணனின் இரு கைகளையும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டார்கள்.

“அண்ணா, அப்பா அம்மா செஞ்ச தப்புக்கு எங்களுக்கு ஏண்ணா தண்டனை கொடுக்குற?

எங்க கல்யாணத்தை முன்னாடி நின்னு நடத்தி வைக்க வேண்டியதே நீதானண்ணா! நீ இல்லாம நாங்க இந்த வீட்டுல எப்படிண்ணா நிம்மதியா இருப்போம்?

கோபப்படாதண்ணா, ப்ளீஸ் அண்ணா… வீட்டுக்கு வாண்ணா!” என்று பூங்கொடி அண்ணனின் தோளில் சாய்ந்து கதறியபோது, அங்கிருந்த அத்தனை பேரின் கண்களும் குளமாயின.

“அண்ணா, உனக்கு இந்த அண்ணி வேணாம்னா விட்டுடுண்ணா, இல்ல அண்ணியையும் நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வாண்ணா! நாங்க மூணு பேரும் அண்ணியைக் கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துக்குறோம்ணா!

அண்ணிக்குக் கண்ணா நாங்க இருக்கோம்ணா… நீ மட்டும் எங்களை விட்டுட்டுப் போகாதண்ணா!” என்று செவ்வந்தி கதறிய வார்த்தைகள், அங்கிருந்த பெரியசாமியின் நெஞ்சையே சுக்குநூறாக உடைத்தது.

அப்போது தான் தம்பிகள் முத்துவும், மாணிக்கமும் கண்ணீரோடு அண்ணனின் முன்னால் வந்து நின்றார்கள்.

“அண்ணா! நீ எங்களுக்காக உன் படிப்பை விட்ட, உன் ஆசைகளை விட்ட, உன் இளமையையே தொலைச்சண்ணா!
இப்போ நாங்க வளர்ந்து நிக்கிறோம்ணா…

இனிமே நாங்க உழைச்சு
உன்னை உட்கார வச்சுப் பார்த்துக்குவோம்னா! நீ எங்கள விட்டுப் போயிட்டா, நாங்க உயிரோட இருந்தும் செத்த பிணத்துக்குச் சமம் அண்ணா!

எங்களை அனாதையா ஆக்கிட்டுப் போகாதண்ணா!” என்று முத்து அண்ணனின் கைகளைப் பிடித்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதான். மாணிக்கம் தன் முகத்தை மூடிக்கொண்டு சுவரில் சாய்ந்து கதறினான்.

அந்த ஐந்து பிள்ளைகளின் அழுகுரலும், “அண்ணா… அண்ணா…” என்ற கதறலும் அந்த அறையின் சுவர்களில் மோதி மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.

வைரக்கண்ணுவுக்கு நெஞ்சுக்குள்ளே ஈட்டியால் குத்துவது போல வலித்தது. அவனது உடல் நடுங்கியது.

தன் உயிருக்கு உயிரான ஐந்து தம்பி தங்கைகளின் கண்ணீரைப் பார்த்து, ஒரு நொடி அவனது வைராக்கியமே ஆட்டம் கண்டது.

‘அய்யோ… என் தங்கச்சிங்க
இப்படி அழுறாங்களே, என்
தம்பிங்க இப்படித் துடிக்கிறாங்களே!’ என்று
அவன் மனம் கதறியது.

ஆனால், அடுத்த நொடியே அவன் கட்டிலில் அமர்ந்திருந்த தங்கமயிலுவைப் பார்த்தான்.

அவளோ, “என்னாலதானே இந்தப் பாசமான குடும்பம் பிரியுது” என்று தன் தலையில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள்.

வைரக்கண்ணு தன் கண்களை இறுக்கமாக மூடி, வழிந்த கண்ணீரைத் தன் உள்ளங்கையால் துடைத்துக்கொண்டான்.

தன் தம்பி தங்கைகளின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தால், தன்னால் கண்டிப்பாகப் போக முடியாது என்பதை உணர்ந்தவன், முகத்தைத் திருப்பிக்கொண்டே பேசினான்.

“பூங்கொடி, செவ்வந்தி, அல்லி… அழாதீங்கடா. அண்ணன் உங்களை விட்டு எங்கேயும் ஓடிப் போகல.

ஆனா, என் மனசுல விழுந்த இந்தப் பெரிய காயம் ஆறுற வரைக்கும் நான் இந்த ஊர்ல இருந்தா, தினம் தினம் செத்துப் பிழைக்க வேண்டியிருக்கும்.

முத்து, மாணிக்கம்… நீங்க ரெண்டு பேரும் இனிமே சின்னப் பசங்க இல்ல. அப்பா அம்மாவையும், நம்ம மூணு தங்கச்சிங்களையும் நீங்கதான் பொறுப்பாப் பார்த்துக்கணும்!”

“அண்ணா…” என்று அல்லி
மீண்டும் கதற, வைரக்கண்ணு குனிந்து தன் கடைசித் தங்கையின் நெற்றியில் முத்தமிட்டான். அவனது கண்ணீர் அவளது நெற்றியில் விழுந்தது.

“நான் எங்க இருந்தாலும் என் தங்கச்சிங்க, நல்லது கெட்டதுக்குக் கண்டிப்பா வருவேன்… ஆனா, இந்த ஊருக்குள்ள இனிமே வாழமாட்டேன்!”

தனது கைகளையும் கால்களையும் பிடித்திருந்த தங்கைகளின் கைகளை மெதுவாக, மிக மிக மெதுவாக விலக்கிவிட்ட வைரக்கண்ணு, தன் நெஞ்சில் கல்லாய் கனத்த சோகத்தை அடக்கிக்கொண்டு எழுந்தான்.

பிறகு, கட்டிலில் நடுங்கிக்கொண்டிருந்த தங்கமயிலுவின் அருகே
சென்றான். அவளது கையைத்
தன் கையால் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.

“வா…” என்று ஒரே ஒரு வார்த்தை சொல்லி, பார்வையற்ற தன் மனைவியை அழைத்துக்கொண்டு, பெற்றவர்களின் கதறலையும், தம்பி தங்கைகளின் நெஞ்சை உருக்கும் அழுகுரலையும் தாண்டி, அந்த மண்டபத்தை விட்டு வெளியே நடந்தான் வைரக்கண்ணு!

மண்டப வாசல்ல நின்ன வாடகைக் காரில் மனைவியை ஏத்திவிட்டு, தானும் ஏறி உட்கார்ந்தான். கார் ஊர் எல்லையைத் தாண்டிப் புழுதியைக் கிளப்பிக்கிட்டுப் பறந்தது.

ஜன்னல் வழியே பின்னாடி திரும்பிப் பார்த்த வைரக்கண்ணுவின் கண்களில், மண்டப வாசலில் நின்றுகொண்டு கைகளை நீட்டி அழுதுகொண்டிருந்த தன் ஐந்து தம்பி தங்கைகளின் உருவம் மெல்ல மெல்ல மறைந்தது.

கையில பெரிசா பணம் இல்ல; போகுமிடம் எதுன்னு தெரியாது;
கூட வர்றவளுக்கோ கண்ணும் தெரியாது!

ஆனா, வைரக்கண்ணுவுக்குத் தெரியாத ஒரு பெரிய ரகசியம், அவன் பக்கத்துலயே உட்கார்ந்துக்கிட்டு கண்ணீர் விட்டுக்கிட்டு இருந்த தங்கமயிலுவோட மனசுக்குள்ள புதைஞ்சிருந்துச்சு.

ஆம்! தங்கமயிலு பிறவியிலேயே பார்வையற்றவள் அல்ல! அவளோட பார்வை பறிபோனதுக்குப் பின்னால, பெரியசாமியோட குடும்பமே நடுங்குற ஒரு பயங்கரமான சதியும், ரகசியமும் ஒளிஞ்சிருந்துச்சு.

மயிலுவோட இமைகளுக்குள்ள மறைஞ்சிருக்கிற அந்த மர்மம் என்ன? இருளுக்குள்ள வைரக்கண்ணு தேடப் போற வெளிச்சம் எது? –

இமைகள் திறக்கும் தருணத்திற்காக…❤️❤️❤️

அடுத்த அத்தியாயத்துல பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!