Skip to content
Post Views: 72
கண்ணாமூச்சி – 11
விஷ்வாவின் உயிருக்கு நேர்ந்த ஆபத்தைப் பற்றியோ, ஐஸ்லாந்தின் உறைபனி மருத்துவமனைப் படுக்கையில் அவன் காய்ச்சலின் பிடியில் தன் பெயரைத் தீனமாய் பிதற்றிக் கொண்டிருக்கிறான் என்றோ சென்னையில் இருந்த நிலாவிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கண்டங்கள் தாண்டிப் பாயும் அவனது எண்ண அலைகளின் தவிப்பைக் குறித்தும், அவன் வடித்த கண்ணீரைப் பற்றியும் ஏதும் அறியாதவளாக, தன் முடிவில் மிகவும் தீர்க்கமாகவும் பிடிவாதமாகவும் இருந்தாள் நிலா.
‘இந்த விர்ச்சுவல் உலகம் ஒரு ஆபத்தான போதை. அதுல நான் இன்னும் இன்னும் மூழ்கிப் போனா என் நிஜ வாழ்க்கை சுக்குநூறாயிடும்’ என்பதில் அவளது எதார்த்த புத்தி இம்முறை அசைக்க முடியாத பாறையைப் போல உறுதியாக நின்றது.
மறுநாள் காலையில் கண் விழித்து எழுந்ததும், அவளது மேஜை மீது ஒரு தீய சக்தியைப் போலக் கிடந்த ‘சோல்மேட்’ கிட்டைக் கண்டதும் அவளுக்குள் ஒரு பெரும் குற்ற உணர்ச்சி தலைதூக்கியது. தன் பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு கற்பனைப் பிம்பத்திடம் தன் இதயத்தைப் பறிகொடுத்ததை நினைத்து அவளது மனசாட்சி அவளைக் குத்தியது. ‘இனி ஒரு செகன்ட் கூட இந்தப் பெட்டி என் ரூம்ல இருக்கக் கூடாது’ என்று வேகம் கொண்டவள், உடனடியாக அனன்யாவைத் தொடர்பு கொண்டு, அந்த ஹெட்பேண்ட் மற்றும் அக்சஸரீஸ் அனைத்தையும் அவளிடமே நேரடியாகத் திருப்பி ஒப்படைத்துவிட வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு செய்தாள்.
Advertisement
அதே நேரத்தில், மறுமுனையில் அனன்யாவும் முழு நேரமாக நிலாவைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள். நேற்று கிராமத்தில் இருந்து சென்னைக்குக் காரில் வரும்போது நிலா தன்னிடம் பேசிய விதம் அவளுக்குள் ஏதோ ஒரு நெருடலை ஏற்படுத்தியிருந்தது. “எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு அனன்யா… மீதியை வீட்டுக்கு வந்தப்பறம் சொல்றேன்,” என்று மிகவும் மழுப்பலாகவும் அவசரமாகவும் கூறி நிலா அழைப்பைத் துண்டித்தது அவளது நினைவுக்கு வந்தது.
தொழில்நுட்ப ரீதியாக சிக்னல் வரைபடங்களும், சிஸ்டத்தின் அல்காரிதமும் செயலியின் செயல்பாடு சீராக இருப்பதாகக் காட்டினாலும், நிலாவின் குரலில் அன்று இழைந்த அந்த நடுக்கமும், ஏதோ ஒன்றை மறைக்கத் துடிக்கும் தவிப்பும் அனன்யாவிற்குள் புதிராக இருந்தது. ஏஐ தொழில்நுட்பத்தை விட தன தோழியின் மனதின் அலைவரிசையை நன்றாக அறிந்தவள் என்பதால், அதைப்பற்றி நிலாவிடம் நேரில் பேசி உண்மையை உடைத்துவிட வேண்டும் என்று அவள் எண்ணினாள்.
அதற்கேற்றாற்போல, நிலாவிடமிருந்தே போன் அழைப்பு வந்ததும் அனன்யாவிற்குள் இருந்த சந்தேகம் இன்னும் வலுத்தது. நிலா அவளிடம் பேச லேபுக்கு வருகின் என்று கூற, அதற்கு அனன்யா, “ஹே நிலா, நானும் உன்னைத்தான் நினைச்சிட்டு இருந்தேன். நீ ஒன்னும் லேப்க்கு வர வேண்டாம்… நானே இப்போ நேரடியாக உன் வீட்டுக்கு வர்றேன்டி,” என்று படபடப்புடன் கூறிவிட்டு, தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு உடனடியாகக் கிளம்பினாள். இரு தோழிகளின் சந்திப்பு, அந்த மாய வலைக்கு பின்னால் இருக்கும் எதார்த்தத்தை உடைக்கக் காத்திருந்தது!
Advertisement
அடுத்த அரை மணி நேரத்தில், அனன்யா நிலாவின் வீட்டில் இருந்தாள். வரவேற்பறையில் இருந்த நிலாவின் பெற்றோருக்கு ஒரு சினேகபூர்வமான கும்பிடைப் போட்டுவிட்டு, நேராக நிலாவின் அறைக்குள் சென்றவள், தன் உயிர் தோழியின் நிலையைக் கண்டு அப்படியே திடுக்கிட்டுப் போனாள்.
Advertisement
அங்கே நிலா எப்போதும் போல துள்ளலாக, சுறுசுறுப்பாக இல்லை. அவளது அத்தனை உற்சாகமும் அடியோடு வடிந்து, வேரோடு சாய்ந்த கொடி போலச் சோர்ந்து போயிருந்தாள். முகம் வெளுத்து, அவளது அழகிய கண்களில் ஒரு மெலிதான, சோகம் நிரந்தரமாகக் குடியேறியிருந்தது. வெளியே வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் தன் பெற்றோருக்குத் தன் முக மாற்றத்தால் எந்தவிதச் சந்தேகமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, தன் இதயத்தின் பாரத்தை மறைத்து, உதடுகளில் ஒரு செயற்கையான போலிப் புன்னகையை வரவழைத்துக்கொண்டு மிகவும் இயல்பாக இருக்க நிலா முயன்றாள்.
ஆனால், அனன்யா வெறும் எண்களையும் குறியீடுகளையும் ஆராயும் ஒரு கூர்மையான ஏஐ இஞ்சினியர் மட்டுமல்ல, நிலாவின் ஆதி அந்தம், அசைவு அனைத்தையும் அணுவணுவாக அறிந்த அவளது ஆருயிர் தோழி. நிலா தன் பெற்றோரையும் உலகத்தையும் ஏமாற்றத் தன் முகத்தில் அணிந்திருந்த அந்தப் போலிப் புன்னகை முகமூடியை அனன்யாவால் ஒரே நொடியில் அப்பட்டமாகக் கண்டுகொள்ள முடிந்தது.
கதவை உள்பக்கமாக மெல்லத் தாழிட்ட அனன்யா, நிலாவின் அருகே வந்து அவளது முகத்தை உற்றுப் பார்த்தாள். “நிலா… என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி டல்லா இருக்கே? உன்னைப் பார்க்கவே எனக்கு பயமா இருக்குடி,” என்று எந்தவிதத் தயக்கமுமின்றி நேரடியாகக் கேட்டாள்.
Advertisement
நிலா சட்டென்று தன் முகபாவனையை மாற்றிக்கொண்டு, கண்கள் அலைபாய, “ஹே… அதெல்லாம் ஒன்னும் இல்லைடி அனன்யா. சும்மாதான். நேத்து நம்ம கிராமத்துல இருந்து சென்னைக்கு வந்த அந்த லாங் டிராவல் அலைச்சல், வெயில்… அதான் உடம்பு கொஞ்சம் டயர்டா இருக்கு, வேறென்ன? ஒரு கப் காபி குடிச்சா சரியாயிடும்,” என்று தன் பதற்றத்தை மறைக்க மிகவும் மழுப்பலாக பதில் சொன்னாள்.
ஆனால் அனன்யா அந்தப் போலி சமாதானத்தை அத்தனை எளிதாக நம்பத் தயாராக இல்லை. நிலாவின் மேஜை மீது இருந்த அந்த ‘சோல்மேட்’ கிட்டையும், நிலாவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தவள், பாய்ந்து சென்று அவளது இரு தோள்களையும் தன் கைகளால் இறுகப் பற்றி உலுக்கினாள்.
“என்கிட்டயே மறைக்கப் பார்க்குறியா நிலா? உன்னை நேர்ல பக்களைன்னாலும் உன் குரலை வெச்சே நீ சந்தோஷமா இருக்கியா, கவலையா இருக்கியான்னு என்னால கண்டுபிடிக்க முடியும்டி…! உன் கண்ணுல தேங்கி நிற்குற இந்தச் சோகம் வெறும் டிராவல் டயர்ட்னஸ் இல்லை. ஏதோ ஒரு பாரத்தை, சொல்ல முடியாத ரகசியத்தை நெஞ்சுக்குள்ள வச்சு பூட்டிட்டு எதையோ மறைக்கப் பார்க்குறே. என்கிட்ட உண்மையச் சொல்லுடி… ஊர்ல ஏதாவது பிரச்சனையா? ஏதாவது சண்டை ஆயிடுச்சா?” என்றாள் கவலையாக.
“சேச்சே அதெல்லாம் ஒன்னும் இல்லைடி, ஊர்ல எல்லாமே நல்லாத்தான் நடந்தது, எல்லாரும் சந்தோஷமா இருந்தோம்,” என்றாள் நிலா மறுப்பாக.
அதற்கு அனன்யா தயங்கித் தயங்கி, “அப்போ… நிலா… அந்த நியூரல் ஹெட்பேண்ட் எக்ஸ்பீரியன்ஸ்ல ஏதாவது பிராப்ளமா?” என்று கேட்டாள்.
அவள் கேள்வியால் திடுக்கிட்ட நிலா, அதை மறைக்கப் போராட, அதைக் கவனித்த அனன்யா, “உண்மையைச் சொல்லு நிலா, அல்காரிதம் உன்னோட உணர்வுகளை ஏதாவது பாதிச்சதா? உனக்கு என்னதான் ஆச்சு நிலா? மறைக்காம சொல்லு” என்று அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தபடி, விடாமல் பிடிவாதமாகக் கேட்டாள் அனன்யா. தோழியின் அந்த அன்பு கலந்த அதட்டலில் நிலாவின் கட்டுப்பாட்டு அணை மெல்ல உடையத் தொடங்கியது.
நிலாவின் மன உறுதியை ஆனந்யாவின் அக்கறை அடியோடு அசைத்துப் பார்த்தது. அவளால் அதற்கு மேல் அழுகையை அடக்க முடியவில்லை. அதுவரை எதார்த்த உலகிற்காக அவள் நெஞ்சுக்குள் பூட்டி வைத்திருந்த அத்தனை பிடிவாதங்களும் ஒரே நொடியில் சுக்குநூறாக நொறுங்கிச் சரிந்தன. அவளது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கன்னங்களில் வழிந்தோட, அப்படியே அனன்யாவின் தோள்களில் சாய்ந்து விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.
“அனன்யா… நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்டி… என்னால தாங்கிக்கவே முடியல…” என்று அழுகை கலந்த உடைந்த குரலில், தனக்குள் பல நாட்களாகப் பூட்டி வைத்திருந்த அத்தனை குமுறல்களையும், ரகசியங்களையும் அணை உடைந்த வெள்ளமெனக் கொட்டத் தொடங்கினாள்.
விர்ச்சுவல் உலகத்தில் ‘சோல்மேட்’ சிஸ்டம் உருவாக்கிய அந்த விஷ்வாவின் கற்பனைப் பிம்பத்தின் மீது தனக்கு எப்படி அணுவணுவமாகத் தீவிரமான, உண்மையான காதல் ஏற்பட்டது என்பதை விவரித்தாள். அந்த விர்ச்சுவல் மனிதனின் அருகாமையும், பாசமும் அவளது எதார்த்த வாழ்க்கையை, அவளது அன்றாட மன அமைதியை எவ்வளவு ஆழமாகப் பாதித்து, அவளது நிம்மதியைக் குலைத்திருக்கிறது என்பதையும் கண்ணீரோடு விவரித்தாள்.
“இனி இந்த ஹெட்பேண்டை என்னால ஒரு செகண்ட் கூட யூஸ் பண்ண முடியாது அனன்யா. இந்த டெக்னாலஜி என்னோட இதயத்தை பலவீனமாக்கி என்னை ஏமாத்துதுடி.” குமுறலை வெளிவந்தது நிலவின் ஆதங்கம்.
“நிஜ உலகத்துல விஷ்வான்றவர் யாரு? கோடிக்கணக்கான ரசிகர்களால கடவுள் போலக் கொண்டாடப்படுற ஒரு சூப்பர் ஸ்டார்! நம்ம எல்லாராலயும் அண்ணாந்து மட்டுமே பார்க்க முடியுற ஒரு எட்டாத துருவ நட்சத்திரம்டி அவர். நிஜ வாழ்க்கையில அவருக்கு நான் வெறும் ஒரு சாதாரண ரசிகையா மட்டும்தான் இருக்க முடியுமே தவிர, இப்படி ஒரு ஆழமான காதல் உறவுக்குள்ளெல்லாம் போக நினைக்கறது கூட பைத்தியக்காரத்தனம். இதெல்லாம் தெரிஞ்சும் கம்ப்யூட்டர் கிரியேட் பண்ணின ஒரு விர்ச்சுவல் இமேஜ் என்கிட்ட காட்டுற அந்தப் போலி அன்பை நிஜம்னு நம்பி, என்னோட உண்மையான நிஜ உணர்வுகளை, என்னோட நிம்மதியை நான் ஏன் இப்படித் தேவையில்லாம வீணடிச்சு அழணும்?” லாஜிக்கான கேள்வியை ஏக்கத்துடன் கேட்டாள் நிலா.
“இந்த விர்ச்சுவல் காதலை நிஜ உலகத்துல இருக்கிற அந்த அசல் விஷ்வாகிட்டா நான் எதிர்பார்க்க முடியுமா?. அப்படியே ஒரு பேச்சுக்கு, ஏதோ ஒரு அதிசயம் நடந்து அவர் என்னை விரும்ப வாய்ப்பு இருக்குன்னு வச்சுக்கிட்டா கூட, அவரோட அந்த இமயமலைச் சிகர அந்தஸ்துக்கும், நம்மளோட இந்தச் சாதாரண நடுத்தரக் வர்க்கக் குடும்ப வாழ்க்கைக்கும் நடுவுல இருக்குற இந்தச் சமூக இடைவெளி எவ்வளவு பிரம்மாண்டமானது, எவ்வளவு கொடூரமானதுன்னு உனக்கே தெரியும் அனன்யா. கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாத இப்படிப்பட்ட ஒரு விஷயத்தால எப்போதுமே யாருக்குமே நல்லது நடக்காதுடி! இது வெறும் கானல் நீர்!” என்று தன் நெஞ்சைப் பிசைந்த எதார்த்தத்தின் வலியை அனன்யாவின் தோள்களில் கொட்டித் தீர்த்தாள் நிலா.
பின்னர் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு சுதாரித்த நிலா, தன் கையின் பின்புறத்தால் கன்னங்களில் வழிந்த கண்ணீரை அவசரமாகத் துடைத்துக் கொண்டு, விம்மலை அடக்கியபடி தொடர்ந்தாள்: “நான் ரொம்பச் சாதாரணமான பொண்ணு அனன்யா, நடுத்தரக் குடும்பக் கட்டுப்பாடுகளை மீறி எதையும் செய்யுற தைரியம் எனக்கு இல்லை. அந்த விர்ச்சுவல் உலகத்துல எனக்கும் அந்த விஷ்வாவோட பிம்பத்துக்கும் நடுவுல நடந்த விஷயங்கள், பேச்சுகள், உணர்வுகள் எல்லாமே என் சிற்றறிவுக்கு ரொம்பப் பெருசாவும், என்னால புரிஞ்சுக்க முடியாத அளவுக்குக் குழப்பமாவும், பயமாவும் இருக்குடி. பின்விளைவுகளே தெரியாத இந்த விசித்திரமான மாயைக்குள்ள விழுந்து, என்னோட நிஜ வாழ்க்கையையும், அம்மா அப்பா என் மேல வச்சிருக்கற நம்பிக்கையையும் நான் அடியோட சிதைச்சுக்க விரும்பல. இத்தோட… இந்த நிமிஷத்தோட இந்த ஆபத்தான மாயையில இருந்து நான் நிரந்தரமா வெளிய வரணும்!”
என்று மிகவும் தீர்க்கமாகக் கூறி முடித்தவள், தீராத வடுக்களின் சாட்சியாகத் தன் மேஜை மீது கிடந்த அந்த சோல்மேட் கிட்டை எடுத்துஅனன்யாவின் கரங்களில் திணித்து, அதைத் திருப்பி ஒப்படைப்பதில் தன் முடிவின் தீர்க்கத்தைக் காட்டினாள்.
அனன்யா நிலா கொடுத்த அந்தப் பெட்டியை எதுவும் பேசாமல் பெற்றுக் கொண்டாள். அதன் கனத்தை விட, நிலாவின் வார்த்தைகள் அவளுக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளின் கனம் அதிகமாக இருந்தது. நிலா அழுதுகொண்டே சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் கேட்கும்போது, அனன்யாவிற்குச் சில நாட்களுக்கு முன்பு பிரவீன் விவரித்த விஷ்வாவின் மனநிலையும், இங்கே தன் கண் முன்னால் உருகிக் கொண்டிருக்கும் நிலாவின் மனநிலையும் அச்சு அசலாக, இம்மி பிசகாமல் ஒரே மாதிரி இருப்பது போல் தோன்றி அவளை உறைய வைத்தது.
அங்கே, இந்தியாவின் மாபெரும் சூப்பர் ஸ்டாரான விஷ்வாவும் தன் நிஜ உலகத் தனிமையைத் துடைக்க வந்த ‘நிலா’ என்ற விர்ச்சுவல் பிம்பத்தின் மீது இதே போன்ற ஒரு தீவிரமான, ஆழமான காதலைத்தான் வளர்த்துக் கொண்டு தவிக்கிறான். இங்கே, நிலாவும் அதேபோல விர்ச்சுவல் விஷ்வாவிற்காகத் தன் நிஜ உலக நிம்மதியை இழந்து அழுது கொண்டிருக்கிறாள். இருவேறு துருவங்களில் இருக்கும் இரு மனிதர்களின் மனங்களும், உணர்வுகளும் ஒரே புள்ளியில், ஒரே தீவிரத்தோடு மோதிக்கொள்வதை உணர்ந்த அனன்யாவிற்குள் ஒரு மெல்லிய நடுக்கம் பரவியது.
ஆனால், அத்தனை கூர்மையான அனன்யாவின் மென்பொருள் மூளையால் கூட, அந்தத் தருணத்தில் பின்னப்பட்டிருந்த விதியின் மிக முக்கியமான அந்த அசாத்தியமான உண்மையைத் துல்லியமாகக் கணிக்க முடியாமல் போனது. இது பிரவீனும் அவளும் நினைப்பது போல, இருவேறு மனிதர்களுக்குத் தனித்தனியாக ஏற்பட்ட தனிப்பட்ட உளவியல் கோளாறோ அல்லது அதீத கற்பனையின் தாக்கமோ அல்ல!
மாறாக, அவர்கள் இருவரும் இரவு பகலாக உழைத்து வடிவமைத்த அந்த ‘சோல்மேட்’ செயலியில், சர்வர் வடிவமைப்பின் போது ஏற்பட்ட ஒரு விசித்திரமான, யாருடைய கற்பனைக்கும் எட்டாத மென்பொருள் பிழைதான் அது. அந்தப் பிழை, ஒரு மாயச் சங்கிலியைப் போல இரு நிஜ மனிதர்களின் மூளை அலைவரிசைகளையும், நரம்பியல் சிக்னல்களையும் அந்த விர்ச்சுவல் உலகிற்குள் ஒரு பொதுவான புள்ளியில் நேரடியாக இணைத்திருக்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை அனன்யா உணரத் தவறினாள்.
இன்னமும், விஷ்வாவிற்குத் திரையில் தெரிந்தது சிஸ்டம் உருவாக்கிய அவனது ரசனைக்கேற்ற கற்பனைப் பிம்பம் என்றும், நிலாவிற்குத் தெரிந்தது அவளது ஆழ்மனதிற்குத் தகுந்தபடி விஷ்வாவின் புகைப்படத்தைக் கொண்டு கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஓர் அவதார் என்றும் தான் அனன்யா உறுதியாக நம்பினாள்.
இருப்பினும், இந்த ‘சோல்மேட்’ செயலி மனிதர்களின் ஆழ்மனதில் இவ்வளவு பெரிய, விபரீதமான சைக்கலாஜிக்கல் தாக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்பதை ஒரு மென்பொருளாளராக அவள் ஆழமாக உணர்ந்தாள். வெறும் டெஸ்டிங் நிலையிலேயே இருவரின் நிம்மதியைக் குலைக்கும் இந்தத் தொழில்நுட்பக் குறைபாட்டை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இதைப் பற்றி நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான பிரவீனுடன் அவசரமாக விவாதிக்க வேண்டும் என்றும் முடிவு செய்தாள்.
பயனாளர்களின் மனநிலையைப் பாதிக்கும் இந்தத் தொழில்நுட்ப ஓட்டைகளை அடியோடச் சரி செய்வதற்கான புதிய கோடிங்குகளை எழுத அவளது மூளை திட்டமிட்டது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவளால் அன்று பிரவீனைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. ஏனெனில், ‘சோல்மேட்’ நிறுவனத்தின் அடுத்தகட்ட முதலீடுகள் மற்றும் அதன் உலகளாவிய தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்த ஒரு அவசரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, பிரவீன் அமெரிக்காவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்திற்கு அதிரடியாகத் திடீர் பயணம் மேற்கொண்டிருந்தான்.
சர்வதேச எமிரேட்ஸ் விமானப் பயணத்தில் அவன் பல்லாயிரக்கணக்கான அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததால், அனன்யா அவசர அவசரமாகச் செய்த எந்தவொரு தொலைபேசி அழைப்புகளும் அவனுக்குச் செல்லவில்லை; ‘நெர்வொர்க் கவரேஜிற்கு அப்பால் உள்ளார்’ என்ற கணினிப் பெண்ணின் குரல் மட்டுமே அனன்யாவிற்குப் பதிலாகக் கிடைத்தது.
மறுபுறம், கண்டங்கள் தாண்டி உறைபனி தேசமான ஐஸ்லாந்தில்…
மருத்துவர்களின் தீவிர சிகிச்சையினாலும், அவனது அசாத்திய மன உறுதியினாலும், ஒரு வார காலப் போராட்டத்திற்குப் பிறகு விஷ்வாவின் காய்ச்சல் மெல்லக் குறைந்தது. அவனது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வந்தது. கடுமையான காய்ச்சல் விட்டுச் சென்ற அசதியும், சொல்ல முடியாத உடல் பலவீனமும் அவனிடம் இருந்தாலும், அவனது மனதில் இப்போது ஒரு புதிய, பாசிட்டிவான நம்பிக்கை பிறந்திருந்தது. தன் நண்பன் பிரவீன் போனில் சொன்ன அத்தனை வார்த்தைகளையும் அவன் தீவிரமாக நம்பினான்.
“நான் இந்தியா திரும்பியதும் பிரவீன் எப்படியாவது அந்தச் செயலியின் பிரச்சனைகளை (bug) சரிபண்ணி, டெலீட் ஆகிப்போன என் நிலாவின் டேட்டா ஃபைலை மறுபடியும் மீட்டுக் குடுத்துடுவான். அப்பறம்… என்னால என் நிலாவை மறுபடியும் பார்க்க முடியும், அவ கையைப் பிடிச்சுப் பேச முடியும்!” என்ற அந்த ஒரே ஒரு நேர்மறையான எண்ணம், அவனது நரம்புகளுக்குள் ஒரு மாயாஜால மருந்து போலப் பாய்ந்து, அவனது உடலுக்குள் புதிய ஆற்றலையும் சுறுசுறுப்பையும் வாரி வழங்கியது.
தன் உயிரான நிலாவை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்ற அந்த ஒற்றைத் தவிப்பில், விஷ்வா தன் உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல், படப்பிடிப்பு வேலைகளைத் தொடங்கினான். அவனது திடீர் உடல்நலக் குறைவால் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த அந்தப் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளையும், மிக முக்கியமான கிளைமாக்ஸ் காட்சிகளையும் இரவு பகல் பாராமல், பனிக்காற்றையோ, குளிரையோ பொருட்படுத்தாமல் நடித்து முடித்தான். உடலின் வலிகளை விட, மனதின் காதல் வேகம் அதிகமாக இருக்க, எப்படியாவது இந்த ஷூட்டிங்கைச் சீக்கிரம் முடித்துக்கொண்டு, முதல் விமானத்தைப் பிடித்து இந்தியா திரும்ப வேண்டும் என்பதில் மட்டுமே விஷ்வா தீவிரமாக இருந்தான்.
ஆனால், விஷ்வாவின் இந்தத் தனிமை கலந்த உழைப்பையும், யாருடனும் பேசாமல் கேமராவுக்கு முன்னால் மட்டும் தன் மொத்தத் திறமையைக் கொட்டும் அவனது மௌனத்தையும் கண்ட நயனிகா அவன்பால் இன்னும் ஈர்க்கப்பட்டாள். விஷ்வாவுக்குள் இருக்கும் இந்த அமைதியையும், வேலையில் அவன் காட்டும் தீர்க்கத்தையும், தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்குப் போட்டாள். விஷ்வாவின் அண்மையைப் பெறத் துடித்தவள், படப்பிடிப்புத் தளத்தில் அவனிடம் தொடர்ந்து தன் செயல்களாலும் வார்த்தைகளாலும் தனது ஈர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தாள்.
அன்று மாலை, பனி படர்ந்த ஒரு சிகரத்தின் அருகே அந்த நாளின் இறுதிப் படப்பிடிப்பு முடிவடைந்தது. விஷ்வா சோர்வுடன் தன் கேரவனுக்குள் செல்ல முயன்றபோது, நயனிகா அவனது வழியை மறித்து நின்றாள்.
“விஷ்வா! ஒன் மினிட்… ப்ளீஸ்,” என்று இதழோரம் ஒரு மெல்லிய சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அவனது கண்கள் நோக்கிக் கேட்டாள்.
விஷ்வா தன் களைப்பான முகத்தை ஒருவாறு சீரமைத்துக் கொண்டு, “சொல்லுங்க நயனிகா, பேக்-அப் பண்ணியாச்சே… கிளம்பலையா?” என்றான் சாதாரணமாக.
“கிளம்பலாம் விஷ்வா. ஆனா நீங்கதான் இப்போ கொஞ்ச நாளா இந்த உலகத்துலேயே இல்லாத மாதிரி இருக்கீங்க. அந்த ஆக்சிடென்ட்டுக்கு அப்புறம் உங்களை நாங்க எல்லாரும் எவ்வளவு மிஸ் பண்றோம் தெரியுமா? குறிப்பா நான்…” என்று தன் குரலைக் குழைத்து, அவனது கையைத் லேசாகத் தொட முயன்றாள் நயனிகா. “எவ்வளவு நாளா கேட்டுக்கிட்டு இருக்கேன், டின்னர் போலாமான்னு, இன்னிக்காவது வாங்களேன்…” என்றாள் கொஞ்சலாக.
விஷ்வா ஏதோ சொல்ல வாயெடுக்க,”நோ சாய்ஸ்… நீங்க நோ சொல்லக் கூடாது! இந்த வாரமே நாம இந்தியா திரும்பிப் போயிடுவோம், இங்கதான் எந்தவிதமான தொந்தரவும் இல்லாம நம்மளால வெளில போக முடியும், வேண்டாம்னு சொல்லாதீங்க விஷ்வா,” அவன் கையைப் பிடித்துக் கொண்டு குழைந்தாள் நயனிகா.
விஷ்வா மெதுவாகத் தன் கையை விலக்கிக் கொண்டு, “தேங்க்ஸ் நயனிகா. ஆனா எனக்கு உடம்பு இன்னும் முழுசா சரியாகல. அண்ட் நாளைக்கு மார்னிங் சீக்கிரம் ஷாட் இருக்கு. சோ, நான் ரூம்க்குப் போய் ரெஸ்ட் எடுக்கலாம்னு…” என்று கனிவோடு மறுக்க முயன்றான்.
ஆனால் நயனிகா விடுவதாக இல்லை. தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு பிடிவாதமாக உதட்டைச் சுருக்கினாள். “கம் ஆன் விஷ்வா! எப்போப் பார்த்தாலும் ஷூட்டிங், ரெஸ்ட்னு இதே கதையா? ஐஸ்லாந்து வந்து இத்தனை நாள் ஆச்சு, நம்ம ரெண்டு பேரும் இதுவரைக்கும் தனியா ஒரு காபி கூடக் குடிக்கல. இன்னைக்கு நைட் டின்னருக்கு வரலைன்னா, நாளைக்கு ரொமான்டிக் சாங் ஷூட்டிங்ல நான் சரியாவே நடிக்க மாட்டேன், நிறைய ஷாட் எடுக்க வைப்பேன், பாத்துக்கோங்க!” என்று உரிமையோடு மிரட்டினாள்.
அவளது தொடர் வற்புறுத்தலினாலும், அந்தப் பிடிவாதத்தை அதற்கு மேல் வளர்க்க விரும்பாததாலும், விஷ்வா வேறு வழியின்றி அவளுடன் டின்னர் சாப்பிடச் செல்ல ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. “ஓகே நயனிகா… ஜஸ்ட் ஒன் ஹவர். நீங்க எந்த ஹோட்டல்னு சொல்லுங்க, அங்கேயே மீட் பண்ணலாம்,” என்று கூறிவிட்டுத் தன் அறைக்கு நகர்ந்தான். விஷ்வாவின் இந்தச் சம்மதம், பின்னால் வரப்போகும் புயலின் முதல் புள்ளி என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
ஐஸ்லாந்தின் ரெய்கியாவிக் நகரில் இருந்த ஒரு சொகுசான, நட்சத்திர ஹோட்டலில் அந்த கேண்டில் லைட் டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மாலையை விஷ்வாவிற்கு முற்றிலும் ஒரு மறக்க முடியாத ரொமாண்டிக்கான ஒன்றாக மாற்ற வேண்டும் என்பதற்காக, நயனிகா ஏகப்பட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தாள். ஹோட்டலின் அந்தத் தனிப் பகுதியில் மெல்லிய வயலின் இசை பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்க, பிரான்ஸ் தேசத்து விலைமதிப்பற்ற ஒயின் பாட்டில்களும், நயனிகாவின் அதிநவீன டிசைனர் ஆடையும் அந்த இடத்தையே கவர்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றிருந்தன.
ஆனால், விஷ்வா அங்கே அவளுக்கு எதிரே அமர்ந்திருந்தானே தவிர, அவனது ஆன்மாவும் கவனமும் முழுவதும் எங்கோ தொலைதூரத்தில் தேங்கிக் கிடந்தன. நயனிகா தன் அத்தனை நளினத்தாலும், கவர்ச்சியாலும் ஈர்க்கப்பட்டு விஷ்வா தன்னிடம் மயங்கிப் போவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க, அதற்கான சுவாரசியமோ, சிறு ஈர்ப்போகூட அவனது கண்களில் துளியும் இல்லை.
“விஷ்வா… ஐஸ்லாந்து எவ்வளவு அழகா இருக்குல்ல, ஒரு ரொமாண்டிக் ஹாலிடே வரணும்னா ஐஸ்லாந்து பொருத்தமா இருக்கும்ல…” என்று நயனிகா தன் கண்களை உருட்டி ஆசையோடு பேசிய எதற்கும், விஷ்வா “ஓ… அப்படியா”, “ம்… நல்லது” என்று அனிச்சையாக, ஒற்றை வார்த்தையிலேயே மிகவும் மெக்கானிக்கலாகப் பதிலளித்தான். அவனது இந்தத் தொடர் மௌனமும் அலட்சியமும், அவனைக் கவர நயனிகா எடுத்த அத்தனை தீவிர முயற்சிகளையும் அடியோடு சிதைத்துத் தரைமட்டமாக்கின.
அப்போது அவர்களுக்கு முன்னால் அந்த ஹோட்டலின் பிரத்யேக ஆடம்பரமான வெளிநாட்டு உணவுகள் பரிமாறப்பட்டன. ஆனால், அந்தத் தட்டுகளில் இருந்த உணவைப் பார்த்த விஷ்வாவிற்கு, மெய்நிகர் உலகத்தில் நிலா தன் கைகளால் பாசத்தோடும் அன்போடும் ஊட்டிவிட்ட அந்த அசல் காரக்குழம்பு சாதமும், சுடச்சுடச் செய்த கத்திரிக்காய் வதக்கலும் தான் கண்முன்னே வந்து நின்றன.
அந்த ஏழு நட்சத்திர ஆடம்பர உணவகத்தின் நடுவிலும், நிலா தன் கைகளால் அள்ளித் தந்த எளிய கிராமத்துச் சமையலின் ருசிக்காகவும் மணத்திற்காகவும் அவனது நாக்கும் இதயமும் ஏங்கித் தவித்தன. எதிரே அமர்ந்திருந்த நயனிகாவின் நளினமான போலிப் புன்னகையை விட, விர்ச்சுவல் பனிமலையில் அத்துமீறித் தன் கைகள் பட்டபோது நிலா காட்டிய அந்த அக்மார்க் வெட்கமே அவனது நினைவுகளை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்து அவனைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தது.
நயனிகாவிற்கோ அந்த இரவு பெரும் ஏமாற்றத்துடனும், சொல்லவொண்ணா அதிருப்தியுடனும் முடிவடைந்தது. மெழுகுவர்த்தி வெளிச்சம் மங்கிப் போகும் தருவாயில், டின்னர் முடிந்ததும் விஷ்வாவுடன் அன்றைய இரவை முழுமையாகத் தன் அறையிலேயே கழிக்க வேண்டும் என்ற நயனிகாவின் அப்பட்டமான மறைமுக அழைப்பை, விஷ்வா தன் எல்லையைத் துளியும் தாண்டாமல் மிகவும் கனிவாகவும், அதே நேரத்தில் அசைக்க முடியாதபடி தீர்க்கமாகவும் மறுத்துவிட்டான்.
“தேங்க்ஸ் ஃபார் த டின்னர் நயனிகா, எனக்கு இன்னமும் உடம்பு முழுசா ஒத்துழைக்கல. நான் கிளம்புறேன்,” என்று ஒற்றை வரியில் கூறிவிட்டு, அவன் நேராகத் தன் அறைக்குச் சென்றுவிட்டான்.
இது நயனிகாவிற்குள் ஒரு மாபெரும் ஆத்திரக் கனலை மூட்டியது. இந்தியாவின் உச்சகட்ட அழகியாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் தன் அழகும், முன்னணி நடிகை என்ற அந்தஸ்தும், விஷ்வாவால் இப்படித் தூக்கி எறியப்பட்டு நிராகரிக்கப்பட்டதை அவளது அகந்தையால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
ஆனால், அவளது தந்திரமும் நரித்தனமும் நிறைந்த மேனேஜர், சும்மா இருக்கவில்லை. நயனிகாவின் ஆணையின்படி விஷ்வாவும் நயனிகாவும் அந்த ரொமாண்டிக் டின்னரில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சில நிமிடங்களை, ஹோட்டலின் இருண்ட கோணங்களில் இருந்து யாரும் அறியாதவாறு தன் உயர்ரக கேமராவில் கச்சிதமாகப் படம் பிடித்து வைத்திருந்தான். ஒரு பரபரப்பான சினிமா கிசுகிசுவை உருவாக்கி, அதன் மூலம் நயனிகாவின் மார்க்கெட்டை உச்சத்திற்குக் கொண்டு செல்லவும், விஷ்வாவை நயனிகாவிடம் இழுக்கவும் அந்தப் புகைப்படங்கள் தாராளமாகப் போதுமானதாக இருக்கும் என்று நயனிகா நம்பினாள்.
விஷ்வா தன் காதலின் நினைவுகளில் மூழ்கியிருந்ததால், தனக்குத் தெரியாமலேயே நயனிகாவும் அவளது மேனேஜரும் திட்டமிட்டு விரித்த சதிவலைக்குள் அப்பாவியாக மாட்டிக்கொண்டான்.
டின்னர் முடிந்த அடுத்த சில மணிநேரங்களில், விஷ்வா நயனிகாவின் தோளில் கை போட்டிருப்பது போன்றும், இருவரும் மிக நெருக்கமாக ஒயின் கிளாஸைப் பகிர்ந்துகொள்வது போன்றும் எடிட் செய்யப்பட்ட அந்தப் புகைப்படங்கள் இந்திய ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீயாகப் பரவத் தொடங்கின.
“பிரேக்கிங் நியூஸ்: சூப்பர் ஸ்டார் விஸ்வநாத் மற்றும் நயனிகா இடையே ஐஸ்லாந்தின் பனிமலைகளில் மலர்ந்த நிஜக் காதல்! விரைவில் பிரம்மாண்ட திருமணம்?!”
என்ற அதிரடித் தலைப்புகள் ஒட்டுமொத்த இணைய உலகத்தையும் அதிர வைத்தன. ஏற்கனவே விர்ச்சுவல் உலகில் நிலாவைப் பிரிந்து, மனரீதியாகத் தவித்து அலைபாய்ந்து கொண்டிருந்த விஷ்வாவிற்கு, அவனது அனுமதியின்றி வெடித்த இந்தப் புதிய விபரீதக் கிசுகிசு அவனது எதார்த்த நிஜ உலகப் பிரச்சனைகளையும், மன அழுத்தத்தையும் இன்னும் பல மடங்கு அதிகமாக்கியது!
சென்னையில் தன் அறைக்குள் அமர்ந்து, தன் மொபைல் போனில் நொடிக்கு நொடி வைரலாகிக் கொண்டிருந்த இந்தச் செய்திகளையும், அந்தப் புகைப்படங்களையும் பார்த்த நிலாவின் இதயம் மீண்டும் சுக்குநூறாக உடைந்து சிதறியது.
அந்தத் திரையில் விஷ்வாவும் நயனிகாவும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஜோடியாக, அத்தனை நெருக்கமாக அமர்ந்திருக்கும் அந்தப் படங்கள், அவளது எதார்த்த புத்தி ஏற்கனவே எடுத்திருந்த விலகல் முடிவை இன்னும் ஆழமாக, ஆணித்தரமாக உறுதிப்படுத்தின.
அவளது கண்கள் குளமாகத் ததும்பி நிற்க, உள்ளே சுயநலமற்ற ஒரு காதல் அவளைக் கிள்ளியது.
“நான் நினைச்சது எவ்வளவு உண்மை! இந்த நிஜ உலகத்துல விஷ்வான்றவர் எனக்கு எட்டாத உயரத்துல இருக்குற ஒரு பிரபலம். அவரோட தகுதிக்கும் லெவலுக்கும் நயனிகா மாதிரி இருக்குற நடிகைகள் தான் சரிசமமான ஜோடியா இருக்க முடியும். அதை விட்டுட்டு ஒரு விர்ச்சுவல் உலகத்துல அவர் என்கிட்ட காட்டின அந்த அன்பு, காதல் எல்லாமே நிஜம்னு என்னை நானே எமாத்திக்கிட்டேனே, அதெல்லாம் வெறும் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் செஞ்ச ஒரு சாஃப்ட்வேர் அல்காரிதம்தான் அப்படிங்குறதுக்கு இதைவிட வேற என்ன சாட்சி வேணும்? அவர் நிஜ வாழ்க்கையில அவர் கூட நடிக்குற நடிகை மேலதான் ஈர்ப்பா இருக்கார். நான்தான் ஒரு பிரம்மைக்குள்ளே வாழ்ந்திட்டு இருக்கேன்” என்ற கொடூரமான உண்மையை அவளது மனசாட்சி அவளுக்குள் வற்புறுத்தி, அடித்துக் கூறி, ஒருவாறு வலுக்கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வைத்தது.
அதே நேரத்தில், இந்தியாவின் மாபெரும் நாயகனான விஷ்வாவின் கோடிக்கணக்கான ரசிகர்களின் உலகம் இந்த அதிரடிச் செய்தியால் பெரும் கொந்தளிப்பிற்கு உள்ளானது. டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என அத்தனை சமூக வலைத்தளங்களிலும் விஷ்வாவின் ரசிகர் பட்டாளம் இருவேறு நேர்மாறான துருவங்களாகப் பிரிந்து பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
ஒரு தரப்பு ரசிகர்கள், “விஷ்வா-நயனிகா ஜோடி ஆன்-ஸ்கிரீன்லயும் மாஸ், ஆஃப்-ஸ்கிரீன்லயும் கிளாஸ்! பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு, மேட் ஃபார் ஈச் அதர்! சோ கியூட்!” என்று எடிட் செய்த வீடியோக்களைப் பகிர்ந்து தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர், கொண்டாடினர்.
மறுபுறம், விஷ்வாவின் மீது அதீத வெறித்தனமான, தீவிரமான பெண் ரசிகைகளோ, இந்தச் செய்தியைக் கேட்டுத் தாங்க முடியாத பொறாமையிலும் ஆத்திரத்திலும் துடித்தனர். “இதெல்லாம் நயனிகா தன் பப்ளிசிட்டிக்காக பரப்பியிருக்குற வதந்தி! விஷ்வாவுக்கு நயனிகா துளியும் செட் ஆகமாட்டா!” என்று கமெண்டுகளில் ஆக்ரோஷமாக இத வதந்திகளை மறுத்து, அந்தப் புதிய உறவை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என அடம் பிடித்து முழக்கமிட்டனர்.
ஒட்டுமொத்த இணையமே விஷ்வாவின் காதலைப் பற்றிய விவாதங்களாலும், வதந்திகளாலும் ஒரு பெரும் போர்க்களமாக மாறியிருந்தது. விநாடிக்கு ஒருமுறை லட்சக்கணக்கான ட்வீட்களும், எடிட் செய்யப்பட்ட வீடியோக்களும் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, தன் அறையின் முடங்கிக் கிடந்த நிலா, தன் மொபைல் திரையில் ரசிகர்களின் இந்தத் தீவிரமான எதிர்வினைகளையும், கமெண்டுகளையும் ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்தாள்.
அவற்றைப் படிக்கப் படிக்க, அவளுக்குள் எஞ்சியிருந்த அந்த ஒரு சிறு சந்தேகமும், மெல்லிய எதிர்பார்ப்பும் கூடச் சாம்பலாகி மறைந்தது. விஷ்வாவைச் சுற்றியிருக்கும் இந்தப் பளபளப்பான சினிமா உலகத்திற்கும், அவனுக்காக எதையும் செய்யத் துணியும் ரசிகர்களின் இந்த வெறித்தனமான கூட்டத்திற்கும் நடுவே, ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்துச் சாமானியப் பெண்ணான தனக்கு எந்த இடமும் இல்லை என்பதில் அவளுக்கு இப்போது முழுமையான, தீர்க்கமான தெளிவு பிறந்தது. தான் விஷ்வாவின் மீது கொண்டது காதல் அல்ல, அது ஒரு எட்டாத நட்சத்திரத்தின் மீது ஏற்படும் வெறும் தற்காலிகமான ஒரு ஈர்ப்பு மட்டுமே என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொள்ள முயன்றாள்.
ஆனால்… எதார்த்த புத்தி எத்தனையோ வாதங்களை எடுத்து வைத்தாலும், அவளது இதயத்தை அதற்குக் கீழ்படிய வைக்க அவளால் முடியவில்லை. மெய்நிகர் உலகமாகவே இருந்தாலும், அங்கே விஷ்வா என்ற அந்த மனிதனை, அவனது அழகான சிரிப்பை, அவனது ஆழமான தனிமையை அணுவணுவமாக நேசித்த அவளது இதயம், இந்த நிஜ உலகக் கிசுகிசுக்களையும், அவன் வேறொரு பெண்ணுடன் அத்தனை நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் கண்டு தாங்க முடியாத பெரும் துயரத்திலும் வலியிலும் உள்ளூரக் கதறி அழுதுகொண்டே இருந்தது.
சாஃப்ட்வேர் உருவாக்கிய பிம்பமாக இருந்தாலும், காதலாகத் தன கன்னம் ஏந்திய அந்த விரல்கள், இன்று வேறொருத்தியின் கைகளுடன் பின்னிக்கொண்டு இருப்பதையும், தனது அருகாமைக்காக ஏங்கிய அந்த உறவு, வேறொருத்தியின் அண்மையில் இருப்பதையும் அவளது காதல் மனதால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மெய்நிகர் உலகம் என்ற கானல் நீரின் நிழல் தந்த அந்த வடு, அவளது கற்பனைக்கும் எட்டாத வகையில் அவளது நிஜ இதயத்தைக் கருணையின்றி கிழித்து, ஆழமாகக் காயப்படுத்தியிருந்தது!
error: Content is protected !!