Skip to content
Post Views: 34
கண்ணாமூச்சி 18
பிரஸ் மீட் நடப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, விஷ்வாவின் சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பின் படுக்கையறையில் அதிகாலை அமைதி நிலவிக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே விடிந்து கொண்டிருந்த சென்னை மாநகரத்தின் அழகை விஷ்வா வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவனது மொபைல் போன் மெல்ல அதிர்ந்தது. திரையில் அமெரிக்காவில் இருக்கும் அவனது தாயின் பெயர் மின்னியது.
காலை அட்டெண்ட் செய்து காதில் வைத்த அடுத்த நொடி, மறுமுனையில் அவனது சம்யுக்தாவின் கவலையும் ஆதங்கமும் கலந்த குரல் ஒலித்தது. “விஷு… என்ன நடக்குது அங்கே? சோஷியல் மீடியா முழுக்க நயனிகாவுக்கும் உனக்கும் ஏதோ ரிலேஷன்ஷிப், கல்யாணம்னு நியூஸ் வந்துட்டே இருக்கு. நீ இதைப் பத்தி என்கிட்டே எதுவுமே சொல்லலை, இப்படி ஒரு விஷயத்தை உன் அம்மா நான் வேற எங்கிருந்தோ கேட்டுத்தான் தெரிஞ்சுக்கணுமா? ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல?”
விஷ்வா மென்மையாகப் புன்னகைத்தான். அவனது குரலில் எப்போதுமிருக்கும் அந்த நிதானம் அப்படியே இருந்தது. “அம்மா… நான் உங்ககிட்ட சொல்லல, ஏன்னா நீங்க கேள்விப்பட்ட அந்த நியூஸ்ல ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. நிஜமாவே எனக்கு யார் மேலயாவது காதல் வந்துச்சுன்னா, அந்த விஷயத்தை உலகத்துலயே முதலா தெரிஞ்சுக்க போறது நீங்கதான். அது உங்களுக்கே தெரியாதா அம்மா?” என்று தாயைத் தேற்றினான்.
Advertisement
மகனின் உறுதியான வார்த்தைகளைக் கேட்டதும் அவரது மனம் லேசானது. “சரிப்பா… நீ சொல்றதை நான் நம்புறேன். ஆனா, இப்போ கொஞ்ச நாளா உன் குரல் ஒரு மாதிரி டல்லா இருக்குற மாதிரி எனக்குத் தோணுது. அங்கே எல்லாமே ஓகேதானே? சந்தோஷமா இருக்கியா கண்ணா?” என்றார் கவலையுடன்.
“உனக்கு பிடிச்ச வேலைன்னுதான் நீ நடிப்பை சூஸ் பண்ணின, இத்தனை வருஷமா எங்களை எல்லாம் பிரிஞ்சு இந்தியால தனியா வாழ்ந்துகிட்டு இருக்க, ஆனா இப்போ கொஞ்ச நாளா உன் குரல்ல ஒரு தனிமை தெரியுது விஷு, இப்போ நீ நிஜமாவே இந்த வேலையை ரசிச்சுதான் பண்றியா?” என்று தாய்க்கே உரிய உள்ளுணர்வோடு கேட்டார்.
தன் மனதில் குடிகொண்டிருக்கும் நிலாவின் நினைவுகள், அதனால் ஏற்பட்ட தனிமை, சினிமா உலகின் போலித்தனங்கள் எனத் தன் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளலாமா என்று விஷ்வா ஒரு நொடி யோசித்தான். அவனது அந்தச் சிறிய மௌனத்த்திற்கும் அர்த்தம் கண்டுபிடித்த அவனது தாய், “விஷ்வா, உனக்கு அங்கே ஒர்க் பண்றதுல நிம்மதி இல்லைனா, எல்லாத்தையும் விட்டுட்டு பேசாம திரும்பி வந்துடு,” என்றார்.
Advertisement
அப்போது அவனது தந்தை சந்திரசேகர் ஃபோனை வாங்கி, “ஆமாம் விஷ்வா… உன்னோட ஆர்வம் எப்போ உனக்கு ஒரு பாரமாத் தெரியுதோ, அப்போ அது ஆர்வமாவே இருக்காது. அது ஒரு செய்ய விரும்பாத கடமையா மாறிடும், உனக்கு எப்போ ஒரு விஷயத்தை செய்யுறது சுவாரஸ்யமா தோணலையோ, அப்போ அதை அப்படியே நிறுத்திட்டு வீட்டுக்குத் திரும்பி வர்றதுக்கான முழு சுதந்திரமும் உனக்கு எப்பவும் இருக்கு,” என்று அழுத்தமாகக் கூறினார்.
Advertisement
பெற்றோரின் இந்த நிபந்தனையற்ற ஆதரவும் பேரன்பும் விஷ்வாவின் மனதிற்குள் ஒரு மாபெரும் பலத்தைத் தந்தன. அவனது கண்கள் லேசாகக் கலங்கினாலும், அவனது நெஞ்சில் அசாத்தியமான தைரியம் பிறந்தது. “ரொம்ப தேங்க்ஸ்பா, தேங்க்ஸ்மா. எனக்கு எந்தப் பாரமும் இல்லை, நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க. என் பேரை வச்சு சுயநலத்துக்காக விளையாடுறவங்களோட இந்த போலி நாடகத்துக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல நான் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்போறேன். என் லைஃப்ல நிஜமாவே ஒரு ஸ்பெஷலான நபர் வரும்போது, அவங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடியே நான் உங்ககிட்டதான் சொல்லுவேன், பிராமிஸ்!” என்று கூறிவிட்டு காலை முடித்தான்.
பெற்றோரின் வார்த்தைகள் தந்த அந்த அசாத்திய நம்பிக்கையோடு, தன் நற்பெயரைக் கெடுக்க நினைப்பவர்களை ஒட்டுமொத்தமாக வீழ்த்துவதற்கான முழு ஆற்றலோடும் பிரஸ் மீட்டை நோக்கி கம்பீரமாகப் புறப்பட்டான் சூப்பர் ஸ்டார் விஸ்வநாத்!
அதே நாள் காலை, சோல்மேட் நிறுவனத்தின் பின்தள கேபினில் ஏசி குளிரூட்டியின் மெல்லிய சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. நிலா தன் லேப்டாப் திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கைகள் கீபோர்டில் இயங்கினாலும், அவளது கவனம் முழுவதும் அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருந்த ‘மௌனம் பேசிய மொழியே’ படக்குழுவின் அவசர பிரஸ் மீட்டில்தான் இருந்தது. நயனிகாவின் மேனேஜர் மீடியாக்களுக்குத் தந்திருந்த அந்த ‘அதிகாரப்பூர்வ’ அறிவிப்பால், ஒட்டுமொத்தத் திரையுலகமும் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்நோக்கித்தான் காத்துக்கொண்டிருந்தது.
Advertisement
அனன்யா காபி கப்புடன் நிலாவின் கேபினுக்குள் நுழைந்தாள். நிலாவின் முகத்தில் இருந்த சோர்வைக் கண்டு, அவளது தோள்களை மென்மையாகத் தொட்டாள். “நிலா… நீ இன்னும் அந்த நியூஸைப் பத்திதான் யோசிச்சிட்டு இருக்கியா? சோஷியல் மீடியாவுல வர்றதெல்லாம் வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட். நீ எதையும் போட்டு குழப்பிக்காத,” என்று தேற்ற முயன்றாள்.
“இல்லை அனன்யா… விர்ச்சுவல் உலகத்துல நான் பார்த்த விஷ்வா வேற, நிஜ உலகத்துல இருக்குற சூப்பர் ஸ்டார் விஸ்வநாத் வேறங்குற எதார்த்தம் எனக்குப் புரிஞ்சிடுச்சு. ஆனா, ஏன் இந்த மனசு இன்னும் அந்தப் பழைய நினைவுகள்லயே நிற்குதுனுதான் தெரியல,” என்று லேசான புன்னகையுடன் தன் ஆதங்கத்தை மறைக்க முயன்றாள் நிலா.
அதே நேரத்தில், பிரவீன் தன் கேபினில் இருந்த பெரிய எல்இடி திரையில் அந்தப்பிரஸ் மீட்டிற்கான லைவ் ஸ்ட்ரீமிங்கை ஆன் செய்தான். அனன்யாவும் நிலாவும் பிரவீனின் கேபினுக்குள் வந்தபோது, அவர்களின் கவனமும் திரையில் ஓடிக்கொண்டிருந்த அந்த பிரஸ்மீட் நேரலை ஒளிபரப்பு ஈர்த்தது. திரைக்கருகில் நின்று தடதடக்கும் இதயத்துடன் மூவருமே வெவ்வேறு காரணங்களுக்காக அங்கு நடப்பதைப் பார்க்கத் தொடங்கினர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலின் பிரம்மாண்டமான அரங்கம்.
நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களும், லோக்கல் டிவி கேமராக்களும் அங்கே குவிந்திருந்தன. கேமராக்களின் பிளாஷ் லைட்டுகள் இடைவிடாது மின்னிக் கொண்டிருந்தன. மேடையில், ‘சிகண்டி’ படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தீபக் அமர்ந்திருக்க, அவர்களின் நடுவே அக்மார்க் வெற்றியாளரின் புன்னகையோடு பட்டுப்புடவையில் நயனிகா அமர்ந்திருந்தாள். அவளது முகம் இப்போதே விஷ்வாவைத் தன் வசப்படுத்திவிட்டது போன்ற கர்வத்தைக் காட்டியது.
ஆனால், விஷ்வாவிற்காக ஒதுக்கப்பட்டிருந்த நாற்காலி மட்டும் இன்னும் காலியாகவே இருந்தது.
பத்திரிகையாளர் ஒருவர் எழுந்து, “மேடம், சோஷியல் மீடியாவுல விஸ்வநாத் சாருக்கும் உங்களுக்கும் காதல்ன்னும் ரகசியத் திருமணம் நடக்கப்போறதாவும் ஒரு வீடியோ வைரல் ஆகிட்டு இருக்கே? அது உண்மையா? விஷ்வா சார் இன்னும் ஏன் வரல?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
நயனிகா மைக்ரோஃபோனைத் தன் கையில் எடுத்து, போலி வெட்கத்துடன், “விஷ்வா எப்போதுமே கொஞ்சம் பர்சனல் விஷயங்களை வெளிய சொல்லத் தயங்குவார். அந்த வீடியோவுல இருக்குறது நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஸ்பெண்ட் பண்ணின அழகான தருணங்கள் தான். அவரோட சம்மதத்தோட தான் நாங்க…” என்று அவள் வாக்கியத்தை முடிப்பதற்குள் அரங்கத்தின் பின்பக்கக் கதவு அதிரடியாகத் திறந்தது.
ஒட்டுமொத்த கேமராக்களும் அந்தத் திசையை நோக்கித் திரும்பின.
கறுப்பு சூட் அணிந்து, அசாத்தியமான கம்பீரத்துடன் உள்ளே நுழைந்தான் சூப்பர் ஸ்டார் விஸ்வநாத்! அவன் பின்னாலேயே அரவிந்தும். அவனது முகத்தில் எந்தவொரு பதற்றமும் இல்லை, மாறாக ஒரு தந்திரமான புன்னகை குடிகொண்டிருந்தது. மேடைக்கு வந்தவன், நயனிகாவை ஒரு நொடி கூட ஏறிட்டுப் பார்க்காமல், தனக்காக ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்தான்.
“விஷ்வா சார்! நயனிகா மேடம் உங்களோட ரிலேஷன்ஷிப் உண்மைனு இப்போதான் சொல்ல ஆரம்பிச்சாங்க. உங்க தரப்பு விளக்கம் என்ன?” என்று மீடியாக்கள் மாறி மாறி கேள்விகளைக் கேட்டன.
விஷ்வா மைக்ரோஃபோனைப் பிடித்து, அரங்கத்தையே தன் காந்தக் குரலால் நிசப்தமாக்கினான். “நயனிகா சொன்னதுல ஒரு சின்ன திருத்தம். அந்த வீடியோவுல இருக்குறது எங்களோட பர்சனல் வாழ்க்கை கிடையாது. அது ‘மௌனம் பேசிய மொழியே’ படத்தோட அடுத்த ஷெட்யூலுக்காக நாங்க ரகசியமா பிளான் பண்ணின ஒரு ப்ரோமோஷனல் லீக்,” என்றான் மிகக் கூலாக.
மேடையில் இருந்த நயனிகாவின் முகமும், தீபக்கின் முகமும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போயின.
“வாட்? ப்ரோமோஷனல் லீக்கா?” என்று மீடியாக்கள் குழம்பின.
“ஆமாம்,” விஷ்வா தன் மொபைலை எடுத்து அரவிந்திடம் கொடுத்து, அவனுக்குக் கண்ணைக் காட்டினான். அரவிந்த் மேடையில் இருந்த மெயின் ஸ்கிரீனுடன் அதைக் கனெக்ட் செய்தான். “அந்த வீடியோவோட அசல் கிராபிக்ஸ் லேயர்ஸ், அப்பறம் எடிட்டிங் ஃபைல்களை இப்போ நீங்க ஸ்கிரீன்ல பார்க்கலாம். இது ஒரு காதல் படம், அதனால அதோட ப்ரோமோஷனுக்காக எடுத்த சில வீடியோ கிளிப்பிங்ஸை யாரோ எங்க அனுமதி இல்லாம லீக் பண்ணி இப்படி ஒரு புரளியை கிளப்பி விட்டுட்டாங்க. அப்படியே இடுக்கு முக்கியத்துவம் குடுக்காம விட்டுடலாம்னுதான் நினைச்சீன், ஆனா நிலைமை கை மீறி போகுதோன்னு தோனுச்சு, அதோட இந்த மாதிரி விஷயங்கள் மௌனமா இருக்குறது தப்புனுதான் நான் உங்ககிட்ட பேச வந்தேன்,” என்றான் விஷ்வா நிதானமாக.
ஆனா நடந்ததை எங்களுக்கு சாதகமா யூஸ் பண்ணிக்க நினைச்சோம், அதனாலதான் இந்த லீக் வீடியோவை வச்சே படத்தோட பப்ளிசிட்டியை அடுத்த லெவலுக்குக் கொண்டு போகலாம்னு நானும், என் டைரக்டரும், தயாரிப்பாளரும் சேர்ந்து பண்ணின ஒரு சின்ன மார்க்கெட்டிங் கேம் விளையாடினோம். நயனிகாவும் அவங்களோட டீமும் இதை ரொம்ப நல்லாவே நடிச்சு மீடியா முன்னாடி கொண்டு வந்து சேர்த்துட்டாங்க. தேங்க்ஸ் நயனிகா!” என்று அவளைப் பார்த்து ஒரு நக்கல் புன்னகையை வீசினான்.
திரையில், தீபக் எடிட் செய்த அத்தனை கிராபிக்ஸ் லேயர்களும் அக்குவேறு ஆணிவேறாக ஆதாரத்துடன் அம்பலமாகின. நயனிகா விரித்த சதிவலையை, அவளது ஆயுதத்தை வைத்தே நிர்மூலமாக்கி, அவளை ஒட்டுமொத்த மீடியாவின் முன்னிலையிலும் அசிங்கப்படுத்தி, அதைத் தன் படத்திற்கான பப்ளிசிட்டியாக மாற்றிவிட்டான் விஷ்வா! நயனிகாவின் முகம் அவமானத்தில் கருகிப் போனது.
சோல்மேட் கேபினில் விஷ்வாவின் இந்த அதிரடியான சமயோசித நகர்வை லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்த்துக் கொண்டிருந்த பிரவீனும் அனன்யாவும், “வாவ்! இதுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக், சூப்பர் விஷ்வா!” என்று கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.
ஆனால், நிலா திரையையே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். விஷ்வாவின் அந்த அசாத்தியமான புத்திசாலித்தனமும், வஞ்சகர்களைக் கையாண்ட விதமும் அவளுக்குள் ஒரு புதிய பிரமிப்பை ஏற்படுத்தின.
அப்போது, பத்திரிகையாளர் ஒருவர் விஷ்வாவை நோக்கி, “சார், நீங்க வேற யாரையாவது காதலிக்கிறீங்களா? அவங்க யார்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?” என்று நேரடியாகக் கேட்டார்.
அதற்கு விஷ்வா, “அது என்னோட தனிப்பட்ட விஷயம். இந்த விஸ்வநாத் ஒரு நடிகனா, மீடியாவுக்கு பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கேன், ஆனா ஒரு தனிமனிதனா, என்னோட தனிப்பட்ட வாழ்க்கையில என்னோட காதல், கல்யாணம்னு எல்லாத்தையுமே மீடியாவோட வெளிச்சம் படாம பிரைவேட்டா வச்சுக்கவே நான் விரும்புறேன். அதை நீங்க எப்ப தெரிஞ்சுக்கணுமோ, அப்ப கண்டிப்பா தெரிஞ்சுப்பீங்க, நானே உங்களை எல்லாம் கூப்பிட்டு அவங்களை உங்களுக்கு அறிமுகம் பண்ணி வைப்பேன், அது வரைக்கும் என்னோட தனிப்பட்ட விஷயங்களை தனிப்பட்டதாவே இருக்க விடுங்க, பிளீஸ்,” என்று மிக நிதானமாகப் பதிலளித்தான்.
தொடர்ந்து அந்த நிருபர், “அப்போ உங்களோட வாழ்க்கைத் துணைவி எப்படி இருக்கணும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க சார்?” என்று தன் கேள்வியைத் திருப்பினான். ஒட்டுமொத்த அரங்கத்தின் கவனமும் இப்போது விஷ்வாவின் பக்கமே திரும்பியிருந்தது. பக்கத்தில் அவமானத்தாலும் கோபத்தாலும் கொதித்துக் கொண்டிருந்த நயனிகாவையும், அவளது மேனேஜர் தீபக்கையும் அங்கிருந்த மீடியாக்கள் முழுமையாகப் புறக்கணித்தன.
விஷ்வா லேசாகப் புன்னகைத்துவிட்டு, “என்னோட வாழ்க்கைத் துணைவி… அவங்க எந்த விதத்துலயும் இந்த சினிமா உலகத்தோடவோ இல்ல என்டர்டெயின்மென்ட் இன்டஸ்ட்ரியோடவோ சம்பந்தப்படாதவங்களா இருக்கணும்னு நான் நினைக்கிறேன். இந்த மீடியா வெளிச்சம், பரபரப்புகள் எதுவுமே இல்லாம, ரொம்பவும் அமைதியான, நிம்மதியான ஒரு சாதாரண வாழ்க்கையை அவங்களோடு வாழணும்னுதான் நான் ஆசைப்படுறேன்,” என்று தீர்க்கமாகக் கூறினான்.
ஆபீஸின் மீடியா ரூமில் அனன்யாவுடன் அமர்ந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த நிலாவிற்குள் ஒரு இனம்புரியாத நிம்மதி ஏற்பட்டது. விஷ்வாவிற்கு நயனிகா மீது காதல் இல்லை என்கிற உண்மை அவளுக்கு ஒரு மாபெரும் ஆச்சரியத்தைத் தந்ததோடு, அவளது நெஞ்சில் இருந்த பாரத்தையும் குறைத்தது. தான் அப்படி ஒரு மகிழ்ச்சியை வெளிக்காட்டக் கூடாது என்று அவளது மூளை தடுத்தாலும், விஷ்வா தனக்கு வரப்போகும் துணைவி சினிமா உலகத்தைச் சாராத ஒரு சாதாரண பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதைக் கேட்ட அவளது இதயம், பேரானந்தத்தில் துள்ளிக் குதித்தது!
error: Content is protected !!