Skip to content
Post Views: 41
கண்ணாமூச்சி – 3
ஐஸ்லாந்தின் தென்பகுதியில் உள்ள ‘ரெய்னிஸ்ஃபியாரா’ கறுப்பு மணல் கடற்கரை. ஒரு பக்கம் அட்லாண்டிக் பெருங்கடலின் ஆக்ரோஷமான அலைகள் கரையை மோதிச் சிதற, மறுபக்கம் வானைத் தொடும் பிரம்மாண்டமான பாறைகள். இதற்கிடையில், மைனஸ் 10 டிகிரி குளிரில் அந்தப் பிரம்மாண்டமான தமிழ்ப் படத்தின் காதல் காட்சி படமாக்கப்படவிருந்தது.
“சார், ஷாட் ரெடி!” – உதவி இயக்குநரின் குரல் கேட்டதும், விஸ்வநாத் தனது கேரவனிலிருந்து வெளியே வந்தான்.
அவன் அணிந்திருந்த அடர் நீல நிற வெல்வெட் கோட், அவனது கம்பீரத்தை இன்னும் கூட்டிக் காட்டியது. அந்தப் பனிச் சூழலில், விஸ்வநாத்தின் சாக்லேட் நிறக் கண்கள் சூரிய ஒளியில் தேன் நிறமாக மின்னின. அங்கே குழுமியிருந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் படப்பிடிப்பு ஊழியர்களே அவனது அழகைக் கண்டு ஒரு நிமிடம் திகைத்து நின்றனர்.
Advertisement
“ஸ்டார்ட் கேமரா… ஆக்ஷன்!”
என்று இயக்குநர் கத்திய அடுத்த விநாடி, விஸ்வநாத் ஒரு சூப்பர் ஸ்டாராக மறைந்து அந்தத் திரைக் கதாபாத்திரமாகவே மாறினான்.
அவன் முன்னால் கதாநாயகி நடுங்கிக் கொண்டு நின்றிருந்தாள். விஸ்வநாத் மெல்ல அவளை நெருங்கினான். அவனது ஒவ்வொரு அடியிலும் ஆளுமை தெறித்தது. கடும் குளிரால் உறைந்து போயிருந்த அந்தச் சூழலில், விஸ்வநாத்தின் பார்வை மட்டும் தகிக்கும் நெருப்பாக இருந்தது.
Advertisement
மெல்ல நெருங்கிய அவன் அவளது கைகளைப் பற்றி தன்னருகில் இழுத்தான். அந்தப் பெண்ணும் எந்தவித எதிர்ப்பும் இன்றி அவன் கைகளுக்குள் அடங்கினாள். “இந்த உலகமே பனிக்கட்டியா உறைஞ்சு போனாலும், உன்னோட இந்தக் கண்கள்ல தெரியுற காதல் போதும் பூஜா… நான் உயிர் வாழ,” என உருக்கமாக வசனம் பேசினான்.
Advertisement
வசனம் பேசும்போதே அவனது அந்த சாக்லேட் நிறக் கண்கள் ஒரு விதமான காதலோடும் ஏக்கத்தோடும் அவளை ஊடுருவின. அந்தப் பார்வையில் இருந்த தீவிரத்தை எதிர்கொள்ள முடியாமல் கதாநாயகி நிஜமாகவே தடுமாறி, தனது கண்களைத் தாழ்த்திக் கொண்டால், அவளையும் அறியாமல் அவள் கன்னங்கள் சிவந்தன. விஸ்வநாத் அவளைத் தன் பக்கம் இன்னும் நெருக்கமாக இழுத்து அணைத்துக்கொண்டான். பின்னணியில் ஐஸ்லாந்தின் வெண்ணிறப் பனிமலைகளும், கறுப்பு மணலும் அந்தக் காட்சியை ஒரு ஓவியம் போல மாற்றியிருந்தன.
“கட்! எக்ஸலண்ட் ஷாட் சார்! உங்க கண்ணுல இருக்குற அந்த எக்ஸ்பிரஷன்… தியேட்டர் அதிரப்போகுது, விஷ்வா!” என்று இயக்குநர் கைதட்டினார்.
ஷாட் முடிந்ததும் உதவியாளர்கள் ஓடி வந்து விஸ்வநாத்திற்கு போர்வையைச் சுற்றினார்கள். ஆனால் விஸ்வநாத் அமைதியாக இருந்தான். திரையில் அவன் காட்டிய அந்தத் தீவிரமான காதல் ஒரு நடிப்பு தான் என்று அவனுக்குத் தெரியும்.
Advertisement
“இந்தத் திரையில நான் பார்க்குற பார்வைக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் உருகலாம். ஆனா, விஷ்வாவோட மனசை மட்டும் நேசிக்குற ஒருத்தி இந்த உலகத்துல இருப்பாளா?”
அப்போது அவன் கையில் இருந்த மொபைலில் ‘SoulMate’ ஆப் நோட்டிபிகேஷன் மின்னியது. திரையில் காதலை நடித்து முடித்த அந்த நாயகன், இப்போது ஒரு மெய்நிகர் உலகில் தனக்கான உண்மையான அன்பைத் தேடிப் போகத் தயாரானான்.
தனது சொகுசு கேரவனுக்குள் நுழைந்த விஸ்வநாத், பின்னால் திரும்பி தனது உதவியாளர் கொடுத்த ஆவிபறக்கும் காபியை வாங்கிக் கொண்டவன், “என்னைக் கொஞ்ச நேரம் யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம், நான் ரெஸ்ட் எடுக்கணும்,” என்று கூறிவிட்டு உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
ஜன்னல் வழியே தெரிந்த ஐஸ்லாந்தின் பனிமலையின் பிரம்மாண்டமான அழகும், அந்தப் பரந்த வெளியின் அமைதியும் அவனது மனதைக் கவர்ந்தன. “இந்த இடம் எவ்வளவு அமைதியா, அழகா இருக்கு… ஆனா இந்த நிஜ உலகத்துல என்னால சுதந்திரமா இந்த அழகை ரசிக்க முடியலையே. நான் எங்கே போனாலும் இந்த சூப்பர் ஸ்டார் இமேஜ் என்னைத் துரத்துதே…” என்று அவன் நினைத்தான்.
பிரவீன் கொடுத்த அந்த நியூரல்-லிங்க் ஹெட் பேண்ட் மேஜை மீது மின்னிக் கொண்டிருந்தது. அவன் அதைக் கையில் எடுத்தபோது பிரவீன் சொன்ன அந்த நிபந்தனை அவன் காதுகளில் ஒலித்தது…
“விஷ்வா, இது சாதாரணமான டேட்டிங் ஆப் கிடையாது. இந்த ‘SoulMate’ உலகத்துல நீ நுழையும்போது, அங்கே இருக்குற உன் நிலா உன்னை எடுத்தவுடனேயே காதலிக்க மாட்டா. நீதான் அவளைக் கவரணும், அவளோட நம்பிக்கையைச் சம்பாதிக்கணும். அவளைப் படிப்படியா உன்னை நேசிக்க வைக்கிறதுதான் இந்த ஆப்போட ஸ்பெஷாலிட்டி. முக்கியமா, அவ உன்னோட இந்த ‘சூப்பர் ஸ்டார்’ பிம்பத்தை நேசிக்கக் கூடாது. உண்மையான உன்னை நேசிக்கணும். அப்போதான் உனக்கு அந்த நிஜமான காதல் அனுபவம் கிடைக்கும்.”
விஸ்வநாத் மெல்ல அந்த ஹெட் பேண்டை அணிந்துகொண்டான். கண்களை மூடி ரிக்லைனரில் சாய்ந்தான். அதிலிருந்த சிறிய நீல விளக்கு மெதுவாக மின்னத் தொடங்கியது. மெய் உலகத்தில் இருந்து வெளியேறி விஷ்வா மெய்நிகர் உலகத்தில் பயணிக்கத் தொடங்கினான்…
அவன் அணிந்திருந்த அந்த அதிநவீன ஹெட் பேண்ட், அவனது மூளையின் அலைகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியது. விஸ்வநாத் அந்தத் தருணத்தில் சிந்தித்துக் கொண்டிருந்த ஐஸ்லாந்து பனிமலையின் பிரம்மாண்ட அழகு, அதன் அமைதி, அத்துடன் அவனது மனதிற்குள் இருந்த தீவிரமான தனிமை ஆகிய அத்தனையையும் அந்தச் செயலி தன் அல்காரிதம் மூலம் உடனே உணர்ந்துகொண்டது. அவனது ஆழ்மன ஆசைகளுக்கேற்ப, அந்தப் பனிச்சூழலையும் அவனுக்குப் பொருத்தமான ஒரு சந்திப்பையும் அது கண நேரத்தில் வடிவமைக்கத் தொடங்கியது.
தொடக்கத்தில் ஒரு மெல்லிய நீல நிற இருள்… பிறகு மெல்ல மெல்ல பனிமலையின் அந்தத் தூய்மையான, குளிர்ந்த காற்று அவனது முகத்தில் வீசுவதை விஸ்வநாத் உணர்ந்தான்.
அவன் கண்களைத் திறந்தபோது, அவன் கேரவனுக்குள் இல்லை. ஐஸ்லாந்தின் ஒரு பிரம்மாண்டமான பனிப்பாறையின் விளிம்பில் நின்று கொண்டிருந்தான். ஆனால் நிஜ உலகப் படப்பிடிப்பின் சத்தமோ, மனிதர்களின் கூட்டமோ அங்கே இல்லை. சுற்றிலும் அமானுஷ்யமான அமைதி நிலவியது. தூரத்தில் அரோரா பொரியாலிஸ் எனப்படும் மாயாஜால வடதுருவப் பச்சை வெளிச்சம் இருள்கவியத் தொடங்கியிருந்த அந்தி வானில் நடனமாடிக் கொண்டிருந்தது.
அந்தப் பனிவெளியின் நடுவே, ஒரு நவீன குளிர்கால ஓவர்கோட் அணிந்து, கையில் ஒரு கேமராவுடன் நின்றுகொண்டிருந்தாள் ஒரு பெண். பிரவீனின் செயலி அவனது குரல் பதிவையும் ரசனையையும் அப்படியே செதுக்கியிருந்தது. நீளமான பின்னல், மேக்கப் இல்லாத இயற்கையான முகம். குளிர் மிகுதியால் அவளது கன்னங்களும் மூக்கின் நுனியும் செர்ரிப் பழம் போல சிவந்திருந்தது. குளிர்காற்றில் அவளது பின்னலில் இருந்து சில முடிக்கற்றைகள் விடுபட்டு அவள் முகத்தில் நடனமாடிக் கொண்டிருந்தன. அவளது யதார்த்தமான அழகு விஷ்வாவை அப்படியே கட்டிப் போட்டது.
அவள் பனிமலை வானில் நடனமாடிய ஒளி ஜாலத்தின் அழகைத் தன் கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தாள். அவளின் அழகால் ஈர்க்கப்பட்ட விஸ்வநாத் மெல்ல அடிமேல் அடி வைத்து அவளருகில் சென்றான். அவனது காலடிச் சத்தம் கேட்டு அவள் நிமிர்ந்தாள். அவளது மை தீட்டிய கண்கள் அறிவின் கூர்மையோடும், அதே சமயம் ஒரு சுட்டித்தனத்தோடும் அவனை ஏறிட்டன.
“ஹேய் மேன்… யாரு நீங்க? ஃபோட்டோ எடுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன்னு தெரியலையா? அடுத்தவங்க ஃபிரேம்குள்ள இப்படி அனுமதியில்லாம வர்றது தப்புன்னு உங்க ஊர்ல யாரும் சொல்லிக் கொடுக்கலையா? நான் அழகா ஒரு லேண்ட்ஸ்கேப் ஷாட் எடுக்கலாம்னு பார்த்தா, நடுவுல வந்து போஸ் கொடுக்குறீங்க!” என்று தன் கேமராவைத் தாழ்த்தி, கோபமான குரலில் கேட்டாள்.
விஸ்வநாத் ஒரு கணம் உறைந்து போனான். நிஜ உலகத்தில் அவனைக் கண்டால் பெண்கள் அலறுவார்கள், ஆட்டோகிராஃப் கேட்பார்கள், உருகிப்போவார்கள், பித்துப் பிடித்து அலைவார்கள். ஆனால் இவளோ, அவனைத் தன் புகைப்படத்தைக் கெடுக்க வந்த ஒரு சாதாரண அந்நியனைப் போல ஏறிட்டுக் கேள்வி கேட்கிறாள்!
“நான்… என் பேரு விஷ்வா. சும்மா இந்த இடத்தோட அமைதியையும் அழகையும் ரசிச்சுட்டு வந்தேன், நீங்க ஃபோட்டோ எடுத்துக்கிட்டு இருந்ததை கவனிக்கலை” என்றான் விஸ்வநாத், தன் சூப்பர் ஸ்டார் பந்தா எதையும் காட்டாமல்.
“அமைதியை ரசிக்க வந்தீங்களா? இல்ல, தனியா இருக்குற பொண்ணைப் பார்த்து கலாட்டா பண்ண வந்தீங்களா? பார்க்க என்னவோ டீசன்ட்டான ஆள் மாதிரி இருக்கீங்க, ஆனா பேச்சு ஒண்ணும் சரியா இல்லையே, எவ்வளவு நேரம் இந்த லைட்டுக்காக காத்துக்கிட்டு இருந்தேன் தெரியுமா, கரெக்டா ஷாட் எடுக்கும்போது வந்து ஃபிரேம்ல நுழைஞ்சு, கெடுத்துட்டீங்களே!” என்றாள் நிலா இன்னும் கோபம் குறையாமல்.
விஸ்வநாத்தின் அந்த சாக்லேட் நிறக் கண்கள் அவளது முகத்தையே வியப்புடன் பார்த்தன. அவளுக்குத் தன்னை ஒரு நடிகன் என்று தெரியவில்லை என்பது அவனுக்குப் பெரும் விடுதலையைத் தந்தது.
“சாரி… ஃபிரேமைக் கெடுத்ததுக்குச் சாரி. ஆனா, இந்த ஐஸ்லாந்து பனிமலையை விட, இந்த அரோராவைவிட ரொம்ப அழகான ஒரு விஷயத்தைப் பார்த்தேனா, அதான் என்னையே மறந்துட்டேன்,” என்று விஷ்வா ஒரு குறும்புடன் அவளது கண்களைப் பார்த்துக் கூறினான்.
நிலா சட்டென்று முகம் சிவந்தாள், ஆனால் அதை மறைத்துக்கொண்டு, “ஓஹோ… பேச்செல்லாம் பலமா இருக்கே மிஸ்டர் விஷ்வா! சும்மா ஐஸ் வைக்காம, அந்தப் பனிப்பாறைக்கு முன்னாடி ஒரு நல்ல ஆங்கிள்ல என்னை போட்டோ எடுத்துத் கொடுங்க. நான் ப்ரோஃபைல் போஸ்ட் போடணும். வேலை செய்யுறவங்களுக்குத் தான் இங்கப் பேச விசா கிடைக்கும்!” என்று தன் கேமராவை அவனிடம் நீட்டி, உரிமையாக உத்தரவிட்டாள்.
விஸ்வநாத் சிரித்துக் கொண்டே அந்த கேமராவை வாங்கி அவளைப் பல ஆங்கிள்களில் படம் பிடிக்கத் தொடங்கினான். அவளும் பலவிதமாகப் போஸ் கொடுக்கத் தொடங்கினாள். பல வருடங்களாக அவனது மனதை வாட்டிய அந்தத் தனிமையின் பாரம், பனிமலையின் அமைதியிலும் அவளது இந்தத் துறுதுறுப்பான நடத்தையிலும் மெல்லக் கரையத் தொடங்கியபோது ஒரு மணிநேரக் கால அவகாசம் முடிந்து விஸ்வநாத் மெய்நிகர் உலகிலிருந்து வெளியேற்றப்பட்டான்.
மெல்லக் கண்களைத் திறந்தான் விஸ்வநாத். ஹெட்பேண்டைக் கழற்றி மேஜை மீது வைத்தபோது, அவனது விரல்கள் லேசாக நடுக்கமுற்றன.
பல வருடங்களாகக் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கு நடுவிலே உணர முடியாத ஒரு ஆத்மார்த்தமான நிம்மதி, அந்த ஒரு மணி நேர ‘விர்ச்சுவல்’ பனிமலைச் சந்திப்பில் அவனுக்குக் கிடைத்திருந்தது.
“அவள் என்னைத் தெரியாதுன்னு சொன்னாளே… ஒரு சாதாரண மனுஷனா என்னைப் பார்த்தாளே… அதுதான் எனக்கு வேணும்,” என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டான். நிலா அவனைக் கிண்டல் செய்த அந்தத் தைரியமும், அவனது இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் பழகிய அந்த எதார்த்தமும் அவனது மனபாரத்தை மொத்தமாகக் கரைத்திருந்தது.
மறுநாள் காலை, படப்பிடிப்புத் தளத்தில் விஸ்வநாத் வழக்கத்திற்கு மாறாக மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டான். வழக்கமாக யாரிடமும் பேசாமல் கேரவனுக்குள் முடங்கும் அவன், இன்று படப்பிடிப்புத் தளத்தில் இருந்த லைட்பாய்களிடம் கூட, “சாப்பிட்டீங்களா ப்ரோ?” என்று நலம் விசாரித்தான்.
இயக்குநர் வியப்புடன் அவனது மேனேஜர் அரவிந்திடம் கேட்டார், “என்ன அரவிந்த்… உங்க ஆளு இன்னைக்கு ரொம்ப ஹேப்பியா இருக்காரு? நேத்து வரைக்கும் மூட் அவுட்ல இருந்தாரு, இன்னைக்கு ஆக்ஷன் சீன்ல டூப் இல்லாமலேயே பின்னிப் பெடல் எடுத்துட்டாரு, ஐஸ்லாந்து அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போலயே!”
அரவிந்துக்குமே விஷ்வாவின் இந்த மாற்றம் புதிதாகவே இருந்தது. அவனுக்கு என்ன தெரியும், விஸ்வநாத்தின் முகத்தில் இருக்கும் இந்த நிஜமான புன்னகைக்குக் காரணம் ஐஸ்லாந்தின் இயற்கை அழகோ, ரம்மியமான சூழலோ அல்ல; ‘SoulMate’ உலகத்தில் அவன் சந்தித்த அந்த ‘நிலா’ என்கிற டிஜிட்டல் தேவதைதான் என்று!
அதே சமயம் சென்னையில்…
அறையின் மூலையில் விழுந்து கிடந்த ஹெட் பேண்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா. அவளது இதயம் இன்னும் நூறு கிலோமீட்டர் வேகத்தில் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.
“என்ன இது வம்பாப் போச்சு… இந்த அனன்யா ஏதோ கோடிங், சாஃப்ட்வேர்னு சொன்னா. ஆனா உள்ளே போனா, அப்படியே விஷ்வா நேர்ல நிக்கிற மாதிரியே இருக்கு! அவரோட அந்தக் கண்ணு… அவரோட குரல்… ஐயோ, என்னால நம்பவே முடியலையே!” என்று தன் தலையணையை இறுக்கக் கட்டிக்கொண்டாள்.
கணினி அறிவியல் படிக்கும் அவளது அறிவுக்குத் தெரியும், இது அவளது ஆழ்மனதின் பிம்பத்தை அந்த நியூரல்-லிங்க் எடுத்துக்கொண்டு உருவாக்கிய ஒரு கற்பனை உருவம் என்று. “ஆனா… ஒரு மெஷினால எப்படி இவ்வளவு தத்ரூபமா ஒரு மனுஷனை உருவாக்க முடியும்? அவர் ‘ஹாய் நிலா’ன்னு சொன்னப்போ என் உடம்பே நடுங்கிடுச்சே…” என்று குழம்பினாள்.
“நிலா… இன்னுமா தூங்கல? விடியப் போகுது பாப்பா, சீக்கிரம் படு,” என்று வெளியில் இருந்து தங்கம்மாவின் குரல் கேட்க, நிலா சட்டென்று விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள். ஆனால், அவளது மூளைக்குள் அந்த விர்ச்சுவல் விஷ்வாவின் புன்னகையே ஆக்கிரமித்திருந்தது.
அடுத்த நாள் காலை, நிலா திண்ணையில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தாள், அவளது மனம் தன்னிச்சையாக அந்த மெய்நிகர் உலகத்தில் தோன்றிய விஷ்வாவின் மீதே லயித்திருந்தது.
“என்ன நிலா குட்டி… இன்னைக்குக் காபியில சர்க்கரைக்கு பதிலா ஒரு ஸ்பூன் காதலை கலந்து குடிச்சுக்கிட்டு இருக்க போல? என்ன ஒரே சிரிப்பு? எப்படி இருந்தது விர்ச்சுவல் விஷ்வாவோட முதல் சந்திப்பு?” என்று கேட்டபடி அனன்யா அவளருகில் வந்து அமர்ந்துகொண்டாள்.
அனன்யாவின் காதல் என்ற சொல்லில் முகம் வியர்த்து படபடப்பான நிலா யாரும் கேட்டுவிடவில்லையே என்று சுற்றும்முற்றும் பார்த்தபப்டி “அதெல்லாம் ஒன்னுமில்லைடி… நீ சும்மா இரு… எல்லாம் அப்பறம் சொல்றேன். அம்மா காதுல விழுந்துடப் போகுது,” என்று மழுப்பினாள்.
ஆனால், அவளது மனம் “இன்னைக்கு ராத்திரி மீண்டும் அந்த ஆப்ல போய் பார்க்கலாமா? அவர் இன்னைக்கும் அங்கே வருவாரா?” என்கிற ஒரு விசித்திரமான ஏக்கத்தில் தவித்தது. அவளது எதார்த்தமான கொள்கைகளுக்கு மாறாக, அந்த இயந்திர உலகமும் அதில் தோன்றிய விஷ்வாவின் முகமும் அவளை மெல்ல ஈர்க்கத் தொடங்கியிருந்தது.
அன்று முழுவதும் அவள் என்ன செய்தாலும் பின்னணியில் விஷ்வாவின் நினைவுகளே சஞ்சரித்துக் கொண்டிருந்தன. இப்போதும் அனன்யாவுடன் காபி ஷாப்பில் உட்கார்ந்திருந்தாள், எதிரில் நுரை ததும்பும் கேப்புச்சினோ இருந்தாலும், நிலாவின் மனம் அதில் லயிக்கவில்லை.
“உனக்கு தெரியுமா நிலா, இந்த காபிஷாப் ராத்திரி முழுசும் திறந்திருக்குமாம், நடுராத்திரில யாரு வந்து காபி குடிப்பாங்கன்னு ஒருநாள் வந்து பாக்கணும். இல்லைன்னா பேய் பிசாசு வந்து காஃபி குடிக்குமோ…” அனன்யா சளசளத்துக் கொண்டிருந்தாள்.
நிலாவின் பாதி கவனம்தான் தோழியின் பேச்சில் இருந்தது. மனம் இரவு எப்போது வரும், அறையின் மறைவில் விஷ்வாவை ரகசியமாய் எப்போது சந்திக்கலாம் என்று காத்திருந்தது.
இரவும் வந்தது…நிலவும் வந்தது…
பகல் முழுக்கத் தன்னைத் துரத்திய ஆவலுக்கு விடை காண நினைத்தவள், மீண்டும் அந்த ஹெட்பேண்டைத் தன் நெற்றியில் அணிந்துகொண்டு கண்களை மூடினாள்.
தொடக்கத்தில் ஒரு மெல்லிய நீல நிற இருள்… பிறகு மெல்ல மெல்ல ஒரு நவீன கஃபேயின் மணம் அவளது நாசியைத் தொட்டது. வறுத்த காபி கொட்டைகளின் வாசனையும், பின்னணியில் ஒலித்த மெல்லிய ஜாஸ் இசையும் அந்தச் சூழலை அப்படியே நிஜமாக்கின.
அது சென்னையின் ஒரு அமைதியான நள்ளிரவு நேரத்து கஃபே. கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே லேசாகத் தூறல் போட்டுக் கொண்டிருந்தது. நிலா ஒரு ஓரமாக ஜன்னலருகில் இருந்த மர மேஜையின் நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவள் முன் ஒரு பெரிய கப்பில் நுரையால் இதயம் வரையப்பட்ட கேப்புச்சினோ இருந்தது.
காபியின் மணம் தந்த சுகமும், வெளியில் விழுந்த பூத்தூரல்களின் இதமும், நள்ளிரவின் அமைதியும் நிலாவின் மனதில் ஒருவிதமான நிம்மதியை நிறைத்திருந்தது.
அப்போது, அந்த அமைதியைக் குலைக்கும் வகையில் அவளது மேஜைக்கு எதிரே இருந்த நாற்காலியை இழுத்துக்கொண்டு வந்து போட்டுக்கொண்டு ஒருவன் அவள் முன் அமர்ந்தான்.
அவன் வேறு யாருமல்ல… விஷ்வா! அதே சாக்லேட் நிறக் கண்கள், அதே வசீகர முகம். ஆனால், அவன் அணிந்திருந்த சாதாரண கறுப்பு நிற ஹூடி ஷர்ட்டும், கலைந்த தலைமுடியும் அவனை ஒரு சராசரி கல்லூரி மாணவனைப் போலக் காட்டியது.
அவன் அவளைப் பார்த்து தன் காந்தப் புன்னகையை உதிர்த்து, “ஹாய்… நான் இங்க உக்காரலாமா?” என்றான்.
நிலா ஒரு கணம் திகைத்தாள். திரையில் உலகையே மயக்கும் அந்த ‘சூப்பர் ஸ்டார்’ விஸ்வநாத், இப்போது தனக்கு முன்னால் ஒரு சாதாரண நண்பனைப் போல அமர்ந்திருக்கிறான்! ஆனால், தன் திகைப்பைச் சட்டென்று மறைத்துக் கொண்டு, கோப முகம் காட்டினாள் நிலா.
“ஹலோ மிஸ்டர்! யாரு நீங்க? உக்கார்ந்துட்டு பெர்மிஷன் கேக்குறீங்க, இன்விட்டேஷன் இல்லாம வந்து இப்படி ஆஜராகிட்டீங்க? இப்படித்தான் முன்னபின்ன தெரியாத ஒரு பொண்ணோட பிரைவசில தலையிடுவாங்களா?” என்றாள் அதே கோபத்துடன்.
“இல்ல… இந்த கஃபேயில காஃபி செமயா இருக்கும்னு என் ஃப்ரெண்ட் சொன்னான். அதான் வந்தேன். அதோட இந்த நள்ளிரவுல, இவ்வளவு அழகான ஒரு பொண்ணு தனியா உட்கார்ந்திருந்தா… கம்பெனி கொடுக்கிறது ஒரு ஜென்டில்மேனோட கடமை இல்லையா?” என்றான் விஷ்வா, ஒரு குறும்புச் சிரிப்புடன்.
நிலாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது, “ஓ, மிஸ்டர், நீங்க ஜென்டில்மேனா இல்லையான்னு மத்தவங்க சொல்லணும், நீங்களே உங்களைப் புகழ்ந்துக்கக் கூடாது. சரியான செல்ஃப் டப்பாவா இருப்பீங்க போலருக்கே?” என்றாள், கோபம் கொஞ்சம் தணிந்து நட்புணர்வு மெலிதாகத் தலை தூக்கியது.
வெடித்துச் சிரித்தான் விஷ்வா. அவன் சிரிப்பு அந்த இரவில், காலியான காஃபி ஷாப்பின் சுவர்களில் பட்டு எதிரொலித்தது. “நான் விஷ்வா. டிராவலிங் என்னோட ஹாபி. பகல்ல ஊர் சுத்தி போர் அடிச்சிடுச்சு, அதான் நைட்லைஃப் என்ஜாய் பண்ணலாம்னு வந்தேன், இந்த கஃபே செம வைபா இருக்கும்னு கேள்விப்பட்டேன், வந்து பார்த்தாதான் தெரியுது எவ்ளோ அழகுன்னு,” என்றான் விஷ்வா.
அவன் கண்கள் நிலாவின் முகத்திலேயே நிலைத்திருந்தன. அவன் கஃபேயைப் பற்றிப் பேசவில்லை என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்தது நிலாவுக்கு. அவளது கட்டுப்பாடே இல்லாமல் அவனது பார்வை வீச்சில் நிலாவின் கன்னங்கள் சிவந்தன. அவன் கண்களைச் சந்திக்காமல் இங்கும் அங்கும் பார்க்கத் தொடங்கினாள்.
“உங்க பேரைச் சொன்னா ஒரு வார்ம் கேரட் கேக் உங்களுக்கு கிஃப்ட்டா கிடைக்கும்,” என்று அவள் முன்னால் ஒரு குட்டி கேக்கை வைத்தான் விஷ்வா.
“லஞ்சம் குடுக்குறீங்களா? ஆர்டர் பண்ணினா எனக்கும் ஒரு கேக் கொண்டு வரப்போறாங்க, அதுக்கு எதுக்கு, யாருன்னே தெரியாத உங்களுக்கு என்னோட பேரைச் சொல்லணும்?” என்றாள் முறைப்பாக. அவளது இயல்பான கூச்ச சுபாவத்தை அந்த ஹெட்பேண்ட் அப்படியே பிரதிபலித்திருந்தது.
“சரி. சொல்ல வேணாம், நானே ஒரு பேரு வெச்சிக்குறேன் உங்களுக்கு,
இந்த நள்ளிரவில், காரிருளில் அழகிய நிலவைப்போல
மென்மையாய் ஒளிரும் அழகுப் பதுமையே,
உனக்கு நான் இன்று நிலவென்று பெயர் சூட்டுகிறேன்…”
என்று கவி பாடினான் அந்தக் கள்வன்.
அவள் பெயரையே அவனைச் சூட்டவைத்து போங்காட்டம் ஆடியது ஹெட்பேண்ட்.
அவனையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் நிலா.
“ஹாய் நிலா, உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அதை ஸ்வீட் எடுத்து கொண்டாடுவோம் வாங்க…” என்று ஒரு ஸ்பூனை அவளிடம் நீட்டினான், கேக் சாப்பிட.
கேக்கும் காபியும் மழையும் மந்தஹாசமும் இருவருக்குள்ளும் ஒருவிதமான மெல்லிய ஈர்ப்பை உருவாக்கத் தொடங்கியிருந்தது. கப்பில் காஃபி காலியாகும் முன் ஒரு மணிநேரம் காலியாகி, நினைவுலகில் இருந்து நிஜவுலகிற்குள் தள்ளப்பட்டாள் நிலா.
அன்று இரவு, நிலா அந்த ஹெட் பேண்டைக் கழற்றியபோது, அவளது அறையின் சுவர்கள் அவளுக்கு அந்நியமாகத் தெரிந்தன. அவளது மனம் இன்னும் அந்த காஃபி ஷாப்பிலும், அந்தப் சாக்லேட் நிறக் கண்களின் நிழலிலுமே சுற்றிக் கொண்டிருந்தது…
நிழல்கள் நிஜமானால் நிம்மதி நிலைக்குமா? அல்லது நிஜங்கள் நிழலாகி நிலவை நிலைகுலைக்குமா?
error: Content is protected !!