Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கந்தபவனம்

கந்தபவனம் 20

அத்தியாயம் 20 

 

ஞாயிறு காலை ஜாகிங் முடித்து கொண்டு உள்ளே வந்த கதிரை வரவேற்றது தெய்வீக சூழல்.



Advertisement

மூன்று நாட்கள் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தான் கதிர். அங்கே ஹாலில் முருகப்பெருமானின் படம் அலங்காரத்துடன் வீற்றிருந்தது. எதிரே, நெற்றி நிறைய திருநீறு பட்டை அணிந்து, கழுத்தில் ருத்திராட்ச கொட்டை கோர்த்த கருப்பு கயிறு அணிந்து குளித்து அந்த முருகனே நேரில் வந்தது போல நின்றுகொண்டிருந்தான் சேந்தன்.

“டேய் என்னடா.. காலையிலே பட்டை போட்டுட்டு பக்தி பழமாய் நிக்கிற ?” என்று வந்தான் கதிர்.

Advertisement

Advertisement

“சித்தப்பா.. சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க.. இன்னிக்கு என்ன பிரசாதம் தெரியுமா?“ என்றான் ரகசிய குரலில்.

அவன் கூறியதும் கதிர் ஆழ்ந்த சுவாசத்தை உள்ளிழுத்து பார்த்தான். “ஒரு வாசனையும் வரலேயே டா?” என்றான்.

Advertisement

“மக்கு சித்தப்பா.. அன்னுமா பண்ணிட்டு இருக்காங்க.. இங்க எப்படி வாசனை வரும். இன்னிக்கு அன்னும்மா ஸ்பெஷல் கந்தரப்பம். சீக்கிரம் நீங்களும் குளிச்சிட்டு பட்டய போட்டுட்டு வாங்க, அப்பத்தான் தருவாங்க “

“என் செல்ல குட்டி.. பட்டைக்கு காரணம் அதானா? நம்ம வம்ச வாரிசுன்னு நிரூபிச்சிட்டா டா.. 

ஆமாம், உன்ன தவிர வேற யாரையும் காணும்?”

“ஆல் லேசி பெல்லோஸ் சித்தப்பா..”

தை பூசத்தன்று முறைப்படி விசாகாவை முருகனிடம் இருந்து வாங்கும் வேண்டுதலுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன் நாற்பத்தெட்டு நாட்கள் வீட்டில் முருகனுக்கு தினமும் பூஜை செய்து அசைவ உணவு தவிர்த்து விரதம் மேற்கொண்டிருக்கிறார்கள் சாலாவும் அருணும்.  

காலை மாலை தினமும் பிரசாதம் வைத்து தீபாராதனை காட்டுவார் சாலா. முடிந்தவரை காலை அனைவரும் கலந்துகொள்வார்கள்.

அன்றும், சரியாக ஒன்பது மணிக்கு, தீபாராதனை காட்டினார் விசாலாட்சி.

“முருகைய்யா முருகைய்யா வேல் வேல் வேல் வேல் முருகைய்யா…” என்று மழலை குரல் கணீர் என்று ஒலித்தது. சேந்தன் தான் திருப்புகழ் பாடிக்கொண்டிருந்தான்.

குளித்து சேந்தன் சொன்னது போல பட்டையுடன் வந்த கதிர் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றுவிட்டான். மொத்த குடும்பமும் ஆஜர் ஆகி இருந்தார்கள்.

“என்ன மம்மி.. என்ன பெரிய மம்மி .. கந்தரப்பம் உங்களை பக்தி ஆக்கிடுச்சு போல” என்று வள்ளி தெய்வா நடுவில் சென்று நின்றுகொண்டு மெல்லிய குரலில் கேட்டான்.

இருவரும் அவனை முறைக்கவும், “விடுங்க விடுங்க.. நம்ம எதுக்கு வந்திருக்கோம்னு நமக்கு தெரியாதா” என்றான்.

நல்லமையும் வள்ளிமயிலும் க்ளுக் என்று சிரித்து விட்டனர்.

அங்கே இருந்து முத்து கருப்பன், கதிரை பார்த்து முறைக்கவும், ‘நான் ஒரு போலீஸ்னாச்சு மதிக்கிறானா, என்னையவே முறைக்கிறது’ என்று நொடித்துக்கொண்டான்.

பூஜை முடிந்ததும், முதல் கந்தரப்பத்தை சேந்தனுக்கு கொடுத்தார் சாலா.

பின் “எல்லாரும் வாங்க சாப்பிடலாம்” என்று உள்ளே சென்றுவிட்டார்.

“டேய் சுப்பு, பெரியம்மா நமக்கு தராம போறாங்க” என்றான்,

 

“வாடா.. சாப்பிடும்போது தருவாங்க” என்று அவனை இழுத்துக்கொண்டே சென்றான் சுப்பு.

அன்று அனைவரும் சாலா வீட்டில் தான் உணவருந்தினார்கள்.

“இன்னிக்கு எல்லோரும் படத்துக்கு போலாமா?” என்று ஆசையாக கேட்டாள் விசாகா.

நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரும் ஒன்றாக சேர்ந்திருந்தனர்.

“போலாம் போலாம்” என்று உடனே கூறினார்கள் விசாகாவின் அண்ணன்கள்.

வள்ளிமயிலும் நல்லமையும் போலாமே என்று இணைந்து கொண்டார்கள்.

“இன்னிக்கு நான் வேற ஒண்ணு யோசிச்சு வச்சிருந்தேன்” என்று ஆரம்பித்தான் முத்து கருப்பன்.

“தெய்வமே.. இன்னிக்கு ஒரு நாள் விட்ருங்க.. நாங்க ஐ கேம்ப்.. பிளட் கேம்ப் எதுக்கும் வரலை” என்றாள் விசாகா வேகமாக.

“ஆமாம் தெய்வமே” என்று ராகம் இழுத்தார்கள், வீராவும் கதிரும். வெற்றியும் சுப்புவும் ஆமோதிப்பாக தலை ஆட்டினார்கள்.

“நான் உங்க கூட வரேன் அத்தான், இவங்களுக்கு எல்லாம் நல்லது சொன்னா  கசக்கும்” என்றான் பாலு வேகமாக. அவன் குருவை சொன்னால் அவனால் தாங்க முடியாது.

“டேய் குட்டி டாக்டரு.. கோர்த்து விட்றாத டா..” என்றான் வீரா.

“விடு முத்து.. இன்னிக்கு ஒரு நாள் படத்துக்கு போகட்டும்” என்றார் சுந்தரம்.

“ரொம்ப நாள் அப்புறம் எல்லாரும் இன்னிக்கு தானே ஒண்ணா சேர்றோம். அதான் பிரைவேட் பீச் புக் பண்ணி எல்லோரும் போலாம்னு நினைச்சேன்.. இட்ஸ் ஓகே… நீங்க படத்துக்கு போங்க.. நோ ப்ராப்லம்”  என்று கூறி விட்டு நிற்காமல் சென்றுவிட்டான்.

சாலா விசாகாவை முறைத்தார். அன்னம் சுந்தரத்தை முறைத்தார்.

“அந்த புள்ள என்ன சொல்ல வருதுன்னு கூட யாருக்கும் கேக்க பொறுமை இல்ல..” என்று பிள்ளைகளை கண்டித்தார் அருண்.

“ஹி..ஹி.. எங்க அனுபவம் அப்படி பெரியப்பா.. நம்ம முத்து தானே.. நாங்க சமாதானம்  படுத்திக்கிறோம்” என்றான் கதிர்.

விசாகவிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவனது வாடிய முகம் கொஞ்சம் குற்ற உணர்ச்சியை தந்தது. அவனும் எல்லோருடனும் நேரத்தை செலவழிக்க நினைத்திருக்கையில் தான் அவசர பட்டு பேசியதால், அவன் சென்றுவிட்டது மனதை மிகவும் வருத்தியது.

விசாகா முத்துவிற்கு அழைத்து படத்திற்கு வருமாறு கூப்பிட்டாள். “நான் மருத்துவமனை வந்துட்டேன் விசா.. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க.. அன்னுமா வந்தா அவங்களையும் கூப்பிட்டுக்கோங்க.. நான் பிஸி .. அப்புறம் பேசுறேன்” என்று வைத்து விட்டான்.

அவன் குரலில் கோபமோ வருத்தமோ தெரியவில்லை. அவன் எப்பொழுதும் ஒரு கூட்டுக்குள் ஒடுங்குவதாக பட்டது அவளுக்கு. 

அவளுக்கு படத்திற்கு போகும் மனநிலை இல்லை இப்பொழுது. ஆனால்  ஆசையாக போகலாம் என்று இருந்த அண்ணன் அண்ணியை ஏமாற்ற மனமில்லாமல் அவர்களுடன் படத்திற்கு சென்றாள். சாலாவும் பாலுவும் தவிர அனைவரும் சென்று வந்தார்கள்.

மதியம் அனைவரும் படத்திற்கு சென்று விட்டு வந்து மாலை தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். முத்து கருப்பன் மட்டும் வரவில்லை.

அன்னத்திடம்  “அன்னும்மா எங்க உங்க பிள்ளை?” என்றாள்.

“இப்ப தான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்தான். தலை வலிக்குதுன்னு வீட்டில் தான் இருக்கான்” என்று கூறி விட்டு சாலாவிற்கு உதவியாய் தேநீர் தயாரிக்க சென்றுவிட்டார்.

அதற்கு மேல் பொறுமை இல்லாமல், “நான் போய் அவங்கள கூட்டிட்டு வரேன்“ என்று அவர்கள் வீட்டிற்கு சென்றாள்.

ஹாலில் நீளிருக்கையில் கைகளை கண்களுக்கு மேலே வைத்து படுத்து கொண்டிருந்தான் முத்து கருப்பன்.

“சாரி, நான் வேணும்னு சொல்லல” என்று கூறிக்கொண்டே அவனருகில் சென்று தரையில் அமர்ந்து கொண்டாள்.

“இட்ஸ் ஓகே விசா..” என்றான் மெதுவாக அவளை பார்த்து.

“வருத்தமா இருந்தா சொல்லனும்”

“நான் வருத்தமா இல்ல”

“அப்ப கோவமா இருக்கீங்களா?”

“இல்ல விசாம்மா”

“நீங்க உங்க உணர்வுகளை காட்டாம உங்களுக்கு உள்ளேயே வச்சிக்கிறீங்க.. உங்களை நீங்களே கட்டி போட்டு வச்சிருக்க மாதிரி எனக்கு தோணுது”

“தெரியலையே விசா.. “

“என்ன பதில் இது.. “

“சரி.. வாங்க போய் எல்லோரோடவும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்”

“இல்ல விசா.. நிஜமா தலை வலிக்குது”

“நீங்க வரலன்னு எல்லோருக்கும் ஒரு உறுத்தல்.. நாங்க உங்களை காய படுத்திட்டோம்னு அண்ணன்களும் வருந்தப்படறாங்க”

“பாரு.. இப்படி தான்.. எல்லாருக்காகவும் யோசிச்சு என்ன பத்தி நான் யோசிக்கிறதே இல்ல.. சின்ன வயசுல அம்மா இருந்தப்ப, நான்  கோவப்பட்டா  ‘நமக்கு உடம்பு சரி இல்ல.. பையனை பார்த்துக்க முடிலன்னு’ அவங்க வருத்தப்படுவாங்கன்னு கவனமா இருப்பேன்… அப்புறம் அன்னும்மா.. என்னோட முக சுணக்கம் அவங்களை காய படுத்தக்கூடாதுன்னு கவனமா இருப்பேன்… உங்க வீட்ல எல்லோரோடவும் நல்லா பேசினாலும், ஒரு கவனம் எனக்குள்ளே எப்பவும் .. நம்மலால யாரும் காய படக்கூடாதுன்னு.. ” என்று மெதுவாக மனதில் இருப்பதை கூறினான்.

விசாகாவிற்கு என்ன பதில் சொல்ல என்று விளங்கவே இல்லை.

பல வருடங்களாக பொறுப்பு பாசம் என்ற விலங்குகளால் கட்டப்பட்டிருக்கும் அவனுக்கு அந்த விலங்குகளை உடைத்து விடுதலை அளிக்க வேண்டும் என்று ஒரு ஆவேசம் அவளுள்ளே தோன்றியது.

அந்த சிந்தனையில் மூழ்கி அமைதியாகி அமர்ந்திருந்தாள். சில நிமிடங்கள் மௌனம். வார்த்தைகள் கூறாத ஆறுதலை பிரியமானவர்களின் அருகாமையில்  மௌனம் அளித்துவிடும் போல.

சற்று நேரத்தில் முத்து கருப்பன்  இயல்பு நிலைக்கு வந்துவிட்டான். “வா விசா.. நாமளும் போவோம்”, என்று அவளை அழைத்துக்கொண்டு வீட்டையும் பூட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்றான். மெளனமாக அவனுடன் வந்தாள் விசா.

——————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!