Skip to content
Post Views: 2,006
கருப்பன் ஆட்டம் 27
வீட்டிலிருந்து பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு வரும் வழியில் நீங்கள் இருவரும் முன்னே செல்லுங்கள் தான் பின்னே வருவதாக கூறி அவர்களை அனுப்பி வைத்த கருப்பன் ஒரு இடத்திற்கு சென்று வந்து மீண்டும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
Advertisement
பின் கருப்பன், மலர், தர்மன் என மூவரும் ஊரின் மத்தியில் உள்ள ஆலமரத்தில் பஞ்சாயத்து கூடும் இடத்திற்கு வந்தனர்.
அந்தக் கூட்டத்தில் பொண்ணுத்தாயி, அமுதா, அய்யனார்,மயில், மற்றும் தர்மனின் அம்மா முத்துலட்சுமி என அனைவருமே இருந்தனர்.
Advertisement
Advertisement
கிராமத்து தலைவர் கிருஷ்ணன் அவர்களிடம் “என்ன கருப்பா உன்கூட இருக்குற இந்த புள்ள வந்ததிலிருந்து நம்ம கிராமத்துல இருக்கிற சட்ட திட்டத்துக்கு மாறா நடந்துக்குதுன்னும், உன்கிட்ட கண்ட இடத்துலயும் நின்று பேசுதுன்னும்,
உன் தோப்பு வீட்டுல வீட்டுக்கு உள்ள வரைக்கும் வந்து உன்கிட்ட தனியா பேசிட்டு இருக்குன்னும், பேச்சு வந்துருக்கு, நீயும் அந்த புள்ளையும் பைக்குல எங்கெங்கயோ போயிட்டு வரீங்க இந்த மாதிரியெல்லாம் உன் மேல நெறைய பிராது வந்து இருக்குப்பா….!” என்று கேட்டார் கிருஷ்ணன்.
Advertisement
அதனைக் கேட்ட கருப்பன் பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கி கொண்டு அங்கிருந்தவர்களை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,
“அதுக்கு இப்ப என்னங்கையா பண்ணட்டும்…?” என்று கேட்டான்.
‘என்ன கருப்பா? உன் மேல தான் பிராது வந்து இருக்கு, ஆனா உன் பார்வையும் பேச்சும் ஒன்னும் சரியில்லையே…!” என்று அந்த இடத்திற்கு தகுந்த அதட்டல் குரலில் கேட்டார் கிருஷ்ணன்.
“இப்போ இவளும் நானும் பேசிக்கிறத வச்சு இந்த ஊர்க்காரய்ங்க என்ன பேசி இருக்காய்ங்கன்றது வரைக்கும் எனக்கு எல்லாம் தெரியும்….!
அதனால இவ மனசு ஒடஞ்சு போயி என்ன முடிவு எடுக்கப் போனா அப்படிங்கறதும் எனக்கு தெரியும்….! இந்த ஊர்காரய்ங்க எல்லாம் இவள வேண்டாம்னு முடிவு எடுத்தா…! நான் இவளதான் வேணும்னு முடிவு எடுப்பேன்….! இப்போ நீங்க என்ன முடிவு எடுக்குறீங்க….?” என்று தெளிவான மற்றும் அழுத்தமான பார்வையில் குரலில் அவரை பார்த்து கேட்டான் கருப்பன்.
கருப்பனின் இந்த தெளிவான பதில் அங்கிருந்த ஊர் மக்களுக்கு நடுவில் சலசலப்பை ஏற்படுத்த, கிருஷ்ணனோ தன்னை சுற்றி இருந்த மேலும் இரண்டு தலைக்கட்டு நபர்களிடம்,
“என்னையா கருப்பன் இப்படி பேசிட்டு இருக்கியான்… இவன் எப்பவும் இப்படி பேசறவன் இல்லையே…! இவன் பேச்சு ஒன்னும் சரி இல்லையேப்பா….!” என்று கேட்டார்.
“சரி அதுக்காக இப்படியே விட்டா வைக்க முடியும்…..! இந்த ஊருக்குன்னு இதுதான் இப்புடித்தான்னு ஒரு நடைமுறை இருக்குல்ல…, அதை மொறையா பண்ணனுமுல்ல, அப்பத்தானே நம்ம ஊருக்குன்னு இருக்குற மதிப்பு மரியாதை அது குறையாம நெலச்சு இருக்கும்….!” என்று அங்கிருந்த மற்றவர்களும் கூறினர்.
சிறிது நேரம் யோசித்த கிருஷ்ணன் ‘சரி நாம இப்படியே பண்ணிடலாம்…!’ என்று நினைத்தவராக அங்கிருந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவு எடுத்து கொண்டவர்,
“கருப்பா நான் இப்ப சொல்றேன் தெளிவா கேட்டுக்கோ…! இந்த புள்ள நம்ம ஊரு பழக்க வழக்கத்துக்கு மாறா நிறைய விஷயம்
பண்ணுது…..! அதனால நம்ம ஊர் புள்ளைகளும் கெட்டுப் போக அதிகமாக வாய்ப்பு இருக்கு….! அதனால நாங்க எல்லாம் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்து இருக்கோமப்பா, அதுக்கு நீ கட்டுப்பட்டுதேன் ஆகணும்….!” என்று கூறினார் கிருஷ்ணன்.
அதனை கேட்ட கருப்பன் என்ன என்பது போல் நேர்கொண்ட பார்வையோடு கிருஷ்ணனை பார்த்திருந்தான்.
“இதுக்கப்புறம் நம்ம ஊரு பிள்ளைகளும் சரி, வெளியூர்ல இருந்து வர பிள்ளைகளும் சரி, இது மாதிரி செய்றதுக்கு யோசிக்கணும். அது மாதிரியான ஒரு தீர்ப்பு தான் நாங்க சொல்ல போறோம்…!
இனிமே இந்த மலர் புள்ள நம்ம ஊருக்குள்ள இருக்க கூடாது….!” என்று கூறினார் கிருஷ்ணன்.
“ஊருக்குள்ள இருக்க
கூடாதுன்னா….! என்று ஒற்றை புருவம் உயர்த்தி ஆத்திரத்தை அடக்கி கொண்டு கேட்டான் கருப்பன்.
“ஊருக்குள்ள இருக்க கூடாதுன்னா இந்த ஊரு எல்லைக்குள்ள இருக்க கூடாதுன்னு தான்யா அர்த்தம்…! இந்த புள்ளைய பார்த்து நாளபின்ன நம்ம ஊர்க்கார புள்ளைகளை கெட்டுப்போகும்ல, நம்ம ஊர் ஜனதுக்கு எது நல்லதோ அத பத்தியும் நான் யோசிக்கணுமுல்ல…. அதனால இந்த புள்ளைய இந்த ஊர்ல இருந்து ஒதுக்கி வைக்கிறேன்….!”என்றார் கிருஷ்ணன்.
அதனைக் கேட்டு மேலும் ஆத்திரமடைந்த கருப்பன் “என்னையா பேசிட்டு இருக்கீங்க….? இப்ப அந்த புள்ள என்ன தப்பு பண்ணிடுச்சுன்னு அந்த பிள்ளையை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க முடிவு சொல்றீங்க….?” என்று அடக்க பட்ட குரலில் அழுத்தமான பார்வையோடு கிருஷ்ணனை பார்த்து கேட்டான்.
“கருப்பா அத இத பேசி வாக்குவாதம் பண்ணாம நீ உன் ஜோலி போய் பாருயா…!”
“நீங்க என்னய்யா சொல்றது ஏன் ஜோலிய பார்க்க சொல்லி….! இவளும் நானும் மனசார விரும்புறோம்…!எனக்கு இவள புடிச்சிருக்கு.! அவளுக்கு என்ன புடிச்சிருக்கு…! சட்ட ரீதியா பார்த்தாலும் அவளும் நானும் கல்யாணம் பண்ணிக்கிறதுல்ல இந்த தடையும் இல்லை….! அப்பிடி இருக்கு நாங்க ரெண்டு பேரும் பேசுறதுக்கும் பழகுறதுக்கும் தடை சொல்றதுக்கு நீங்க யாரு ? என்றான் கருப்பன்.
“என்ன கருப்பா இது ஊர் பஞ்சாயத்து சொல்லு பேச்ச கேட்காம பேசிட்டு இருக்க…!”
“ஊர் பஞ்சாயத்துக்கு மதிப்பு கொடுத்து தான் நானும் வந்தேன்….! ஆனா இங்க நடக்கிறது எல்லாம் பார்த்தா எனக்கு என்னவோ உங்க தீர்ப்பு சரியா படல….!”
“சரி…. இப்ப அதுக்கு என்னங்கற….!” என்றார் மற்றொருவர்.
“இப்போ இவ வெளியூர்க்கார புள்ள, கொமரி புள்ள, அதனால இப்படி பண்றது சரி இல்ல…, இந்த ஊர்க்கார புள்ளைகளும் அந்த புள்ளைய பார்த்து கெட்டுப் போயிடும்னு நீங்க சொல்றதை என்னால ஏத்துக்க முடியல,
இவ ஒரு கொமரி புள்ளையா இருக்கறதுனால என்கிட்ட பேசறது நடந்துக்கிறது எதுவும் உங்களுக்கு பிடிக்கல அப்படின்னு நீங்க சொன்னீங்கன்னா….!
இப்பவே இந்த நிமிஷமே இவ கழுத்துல நான் தாலி கட்டி என் பொண்டாட்டியா ஏத்துக்குறேன்….!” என்று கூறியவன் தான் தனது சட்டை பாக்கெட்டில் இருந்து மஞ்சள் கிழங்கை கட்டி இருந்த மஞ்சள் கயிறை எடுத்து ஊர் மக்களுக்கு மத்தியில் அவர்களை சாட்சியாக வைத்து மலர்விழி கழுத்தில் கட்டினான்.
அதனை யாரும் எதிர்பார்த்து இருக்கவில்லை….! ஏன் மலர்விழி கூட அதனை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் தனக்கு முன்பு நேர்கொண்ட பார்வையோடு தன்னை பார்த்து கொண்டிருக்கும் கருப்பனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கூட்டத்தில் நின்று இதனை பார்த்துக் கொண்டிருந்த பொண்ணுத்தாயி, அமுதா,அய்யனார்,மயில், தர்மன் என அனைவரும் அதிர்ச்சியோடு கண்கொட்டாமல் அந்த நிகழ்வினை பார்த்து இருந்தனர்.
சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்திருந்த ஊர் மக்களுக்கிடையில் மீண்டும் சத்தத்தோடு சலசலப்பு அதனை கவனித்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட கிருஷ்ணன்,
“ஏய் கருப்பா என்னயா இது, பஞ்சாயத்துல அந்த புள்ளைய ஊற விட்டு ஒதுக்கி வைக்கணும்னு சொல்லி பேசிட்டு
இருக்கோம்…. நீ என்னன்னா அந்த புள்ள கழுத்துல தாலி கட்டிட்டு இருக்க…?” என்று கூறினார்.
“ஆமா….நான் தான் முன்னயே சொன்னேனே இவள நீங்க வேணாம்னு சொன்னீங்கன்னா, நான் இவள தான் வேணும்னு சொல்லுவேன்னு….
இதுக்கு அப்புறம் அந்த புள்ளையும் நானும் ரகசியமா காதலிக்கறதோ, இல்ல ஊருக்கு நடுவால நிண்டு பேசுறதையோ, இல்ல வீட்டுக்குள்ள நிண்டு பேசுறதோ எல்லாம் காதலர்களா இல்லாம புருஷன் பொண்டாட்டியா செய்வோம்.
இதனால உங்க ஊரு நடமொறையோ இல்ல பழக்க வழக்கமோ கெட்டுப் போயிடாதுல்ல….?
இப்போ நான் அந்த புள்ள கழுத்துல தாலி கட்டினது கூட எங்க ரெண்டு பேத்துக்கும் மனசலவுள புடிச்சு போகவும் தான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.
அந்த புள்ள கழுத்துல நான் ஒன்னும் வலுக்கட்டாயமா தாலி கட்டல இத ஏன் சொல்றேன்னா இதையும் கூட உங்க நடைமுறைக்கு அப்பாற்பட்டதுன்னு சொல்லிக்கிட்டு பஞ்சாயத்தை கூட்டிக்கிட்டு வருவீங்களே அதான்….!” என்று அங்கிருந்தவர்களை பார்த்து கொண்டு கூறினான் கருப்பன்.
அவன் கூறியதை கேட்ட பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணருக்கோ என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.. அவர் அவனைப் அழுத்தமாக பார்த்துக் கொண்டடே இருக்க,
இங்கே மயிலுக்கும் தருமனுக்கும் இவர்களுக்கு திருமணம் முடிந்ததில் ஏகபோக மகிழ்ச்சி.
அதே சமயம் பொன்ணுத்தாய்க்கோ தன் மகன் தன்னிடம் உனக்கு சம்மதமா என்று ஒரு வார்த்தை கேட்காமல் யாரோ ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டியதை நினைத்து மனதளவில் கவலை கொண்டார்.
என்னதான் அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று நம்பிக் கொண்டிருந்தாலும், தனது கண் முன்னே தன் மகனும் மலர்விழியும் ஜோடியாக நிற்பதை பார்த்தவர்கள் ‘ஜோடி பொருத்தம் நல்லா தான் இருக்கு…!” என்றும் நினைத்துக் கொண்டார்.
ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்த தலை கட்டுகள் அனைவரும் தங்களுக்குள் கூடி பேசி இந்த விஷயத்தை முடிவு கட்டும் விதமாக,
“சரிப்பா கருப்பா நீ சொல்ற பேச்சுக்கே வருவோம்….! நீ ஒரு எளந்தாரி பயலா இருந்த அதனால நீ ஒரு பொண்ணு கிட்ட பேசுறது நம்ம நடைமுறைக்கு சரியா வராதுன்னு சொன்னோம்.
ஆனா நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா விரும்பி இப்ப ஊருக்கு மத்தியில கல்யாணமும் பண்ணிக்கிட்டிங்க இதுக்கு அப்புறம் இந்த விஷயத்துல நான் என்ன தீர்ப்பு சொல்ல முடியும் ?
இதுக்கு அப்புறமாவது ஊர் நடமொறைக்கு தகுந்தாப்ல உங்கள மாத்திக்க பாருங்க….!” என்று கூறி அந்த பஞ்சாயத்தை முடித்து வைத்தார் கிருஷ்ணன்
அதன் பின் அங்கிருந்த ஊர் மக்கள் அனைவரும் தங்களுக்குள்ளாக… “இருந்தாலும் கருப்பனுக்கு தாட்டியம் ஜாஸ்தி தான்டி பொசுக்குன்னு தாலிய கட்டி புட்டியான்” என்றும்….!
“என்ன இருந்தாலும் இந்த மெட்ராஸ்காரி கருப்பனுக்கு ஏத்த
புள்ளையா தான் இருக்கா” என்றும்…..!
“ஊருக்கு வந்த கொஞ்ச நாள்லயே எதுக்கும் யாருக்கும் அடங்காம இருந்த கருப்பனையே அடக்கி கைக்குள்ள வளச்சு போட்டு இப்ப கல்யாணமும் பண்ணிகிட்டாலே…, சரியான கை காரி தாண்டி இவ….!” என்று. சில குமரி பெண்களும் தங்களுக்குள்ளாக பேசிக்கொண்டே அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இன்று பஞ்சாயத்தில் மலர்விழியை எப்படியேனும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள்…. அதன் பிறகு தனக்கு அவளை அனுபவிக்க தோதுவாகி போய்விடும்….! என்று நினைத்த கொண்டிருந்த ஒரு கொடிய மிருகம் அவள் தன் கைக்கு எட்டாக கனியாக சென்றுவிட்டதை நினைத்து பொறுமிக் கொண்டு அங்கிருந்து சென்றது .
இப்பொழுது அங்கே கருப்பன்,மலர்விழி, தர்மன் மற்றும் பொண்ணுத்தாயி மட்டும் நின்று இருக்க, மயில் மலரின் அருகில் சென்று பேசலாம் என்று ஒரு அடி எடுத்து வைத்தாள். அதனை கவனித்த அமுதா மயிலின் கையை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று இருந்தார்.
கருப்பன் தன் அம்மாவிடம் வந்தவன் “அம்மா இருந்த நெலமையில நான் என் கல்யாணத்துக்கு உன் கிட்ட சம்மதம் கேட்கல… உனக்கு பிடிக்குமா என்னன்னு எனக்கு தெரியாது.
ஆனால் இனிமே என் வாழ்க்கையில இவதான் என் பொண்டாட்டி. இதுக்கு அப்புறம் என் வாழ்க்கை முழுசும் உனக்கும் இவதான் மருமக…! எங்கள ஆசீர்வாதம் பண்ணு….!” என்று கூறி இருவருமாக பொண்ணுத்தாயின் காலில் விழுந்தனர்.
என்னதான் தன் மகன் தன் விருப்பம் கேட்காமல் திருமணம் செய்து கொண்டான் என்கின்ற கோபம் சிறிதளவு இருந்தாலும் கூட, இப்பொழுது தன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க காத்துக் கொண்டிருந்த இருவர்களையும் பார்த்து மனமிறங்கிய பொண்ணுத்தாயி
“எந்திரிங்கப்பா ரெண்டு பேரும் நல்லா இருங்க” என்று கூறி ஆசீர்வாதம் செய்தார்.
பின் “வாப்பா நம்ம வீட்டுக்கு போலாம்…!” என்று கூறி பொண்ணு தாயி இருவரையும் அழைக்க,
“இல்லம்மா இருக்கட்டும் நாங்க என்னோட வீட்டுக்கு போறோம்….!” என்றான் அழுத்தமாக…
“என்னய்யா கல்யாணம் ஆன கையோட நம்ம வீட்டுக்கு வரணும் தானப்பா…!”
“பரவால்லம்மா….! நீதான சொன்ன எந்த காட்டு சிறுக்கியவோ உன் வீட்டுக்கு உன் வீட்டு மருமகளா கொண்டுட்டு வர விருப்பம் இல்லைன்னு…! இவ இனிமே எந்த காட்டு சிறுக்கியோ இல்ல என் பொண்டாட்டி…..!இந்த கருப்பனோட பொண்டாட்டி…..!
இவ இப்போ வேற எங்கேயும் போக வேண்டாம். தங்க எடம் இல்லாம தவிக்க வேண்டாம். இனிமே என் வீட்ல மகாராணி மாதிரி இருப்பா….! வேணும்னா எடப்பட்ட நாள் நாங்க வந்துக்குறோம்….!” என்று கூறிய கருப்பன் மலர்விழியின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு தனது மண் வீட்டிற்கு கிளம்பி இருந்தான். அவர்களின் பின்னாலேயே தர்மனும் சென்றான்.
போகும் தன் மகனையே கண்களில் தேங்கிய கண்ணீரோடு பார்த்திருந்தார் பொண்ணுத்தாயி. தன் மகனின் விருப்பம் என்னவென்று அறிந்தும் கூட, அவன் மனம் புண்படும்படி தான் நடந்து கொண்டோமே….! என்கின்ற எண்ணம் அவருக்குள்.
ஆலமரத்தில் இருந்து நேராக வீட்டிற்கு செல்லாமல் ஊருக்குள் வந்து பின் தோப்பில் இருந்த தன்னுடைய மண் வீட்டிற்கு மனைவியின் கைபிடித்து ஊர்வலமாக அழைத்து வந்தான் கருப்பன்.
தன்னவனின் கரம் பிடித்து இவன் தன்னவன் நான் அவனவள் என்ற கர்வத்தோடு அவனுடன் வந்தால் மலர்விழி.
வீட்டிற்கு வந்ததும் அங்கு இருந்த ஒரு தட்டை எடுத்து அதில் சிம்பிளாக ஆலம் கரைத்து எடுத்து வந்து மலருக்கும் கருப்பனுக்கும் சேர்த்து ஆரத்தி எடுத்த தர்மன்,
“வாமா தங்கச்சி…! இது ஒன் வீடு… இனிமே இந்த வீட்ல நீ தங்கறதுக்கு எவனும் எதுவும் சொல்ல முடியாது. ரெண்டு பேரும் சந்தோஷமா உள்ள போங்க….!” என்று மனம் நிறைவான குரலில் அவர்களை அழைத்து விட்டு தனது கையில் உள்ள ஆலத்தை சென்று கரைத்து வந்தவன், “டேய் மச்சான் உனக்கு ஏதாவது கலர் வாங்கியாரவாடா…?” என்றான்.
“எதுக்குடா…?”
“பஞ்சாயத்துல எனக்கு மலரு தான் வேணும்னு வீர வசனம் எல்லாம் பேசிட்டு இருந்த… இவ்வளவு வெயில்ல வேற புள்ளைய ஊர்வலம் கூட்டிட்டு வந்து இருக்க….? புள்ளைக்கு தாகமா இருக்கும் இல்ல இரு நான் போயி வாங்கிட்டு வரேன்டா ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க….!” என்று அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி அங்கிருந்து சென்று இருந்தான் தர்மன்.
கருப்பன் வேட்டை தொடரும்…
💝கருப்பனின் காரிகையவள்💝💝💝
error: Content is protected !!