Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கரைந்தேன் மெல்ல தொலைந்தேனே

கரைந்தேன் மெல்ல தொலைந்தேனே அத்தியாயம் -1

கரைந்தேன் மெல்ல தொலைந்தேனே…

அத்தியாயம் -1

 

முகத்தை காட்டும் கண்ணாடி போன்ற பளப்பளப்பான தரைகளில்  விரைவாக நடந்தவள் நவீன மயமாக்கப்பட்ட விமான நிலையத்தில் தங்களின்  பயணத்தை ஆரம்பிக்க சிலரும் முடித்துக் கொண்ட சில மக்கள் என எல்லோரும்  தத்தமது தேவைக்காக ஓடிக் கொண்டிருந்தனர்.



Advertisement

 

அதுவரை அழுத்தியிருந்த பாரம் ஒன்று கொஞ்சம் லேசாக ஆரம்பித்து  இருந்தது.பாதங்கள் கொஞ்சம் வேகத்தை தளர்த்தி இருந்தன.சுற்றி எங்கிலும் மனிதத் தலைகள் நிரம்பி இருந்தாலும் யாராவது தன்னை கவனிக்கிறார்களா? என்ற பார்வையை முடிந்தவரை தன்னை சுற்றி நோட்டமிட்டவள் கொஞ்சம் விரைவாக நடந்து  ஆகாயப் பறவையின் உள்ளே தஞ்சம் புகுந்துக் கொள்வதற்காக அங்கு செல்வதற்கு ஏற்பாடு செய்திருந்த பேருந்தில் ஏறினாள்.

 

Advertisement

அவளுடன் பயணிக்கும் மற்ற பயணிகளும் வந்து அமர்ந்ததும் பேருந்து மெதுவாக விமானத்தை நோக்கி சென்றது.பக்கத்தில் யாரும் அமராததால் கொஞ்சம் வசதியாக அமர்ந்திருந்தாள்.மெதுவாக தான் அணிந்திருந்த பர்தாவில் உள்ள முகத்திரையை எடுத்து விட்டு சீராக மூச்சு விட்டாள்.

Advertisement

 

எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் இவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.மெதுவாக அவளுக்கு பக்கத்தில் இருந்தவனிடம் ஏதோ கிசுகிசுத்தாள்.

அதை எல்லாம் கவனித்தாலும் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளும் எண்ணம் எல்லாம் இல்லை.விமானத்தின் உள்ளே ஏறுவதற்கான படிக்கட்டில் தான் அணிந்திருந்த கைப்பையை சரிசெய்து விட்டு மெதுவாக ஏறினாள்.

Advertisement

 

இருக்கையை சரிபார்த்து எல்லையில்லா வானத்தில் ஆகாயப் பறவை பறக்க எத்தனிக்க  தன் பயணத்தை ஆரம்பிக்கவும் இருக்கையில் சாய்வாக அமர்ந்தாள்.முதல் விமானப் பயணமாக இருந்தாலும் மனதில் தோன்றிய கலக்கத்தை ஒதுக்கி விட்டு தன் கரங்களை ஆதரவாக மேடிட்ட வயிற்றின் மேல் வைத்து  பத்திரப்படுத்திக் கொண்டாள்.கண்களை இறுக மூடிக் கொண்டாள். 

 

விமானம் மேலேறியதும் ஆர்ப்பாட்டமில்லாத பயணம் தொடர அதுவரை தள்ளிப் போட்டிருந்த தூக்கம் இப்பொழுது முழுமையாக தன்னை ஆக்கிரமித்துக் கொள்ள இமைகளை மூடி நித்திரையில் ஆழ்ந்தாள்.

 

எவ்வளவு நேரமாக தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாமல் தூங்கியவள் உடல் அசதி நீங்கவும் விழிகளைத் திறந்தாள்.ஏதோ பெரிய பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த உணர்வு வரவும் தன்னையும் மீறி தூங்கி இருந்தாள்.

 

எல்லோரையும் அமைதியாக பார்த்து விட்டு நேராக ஓய்வு அறைக்குச் சென்றவள் தான் அணிந்திருந்த பர்தாவை கழற்றினாள்.அப்பொழுது தான் கவனித்தாள் தன் நெற்றியில் பொட்டு இருப்பதை கவனித்தவள்

அதை எடுத்து விட்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ முகமும் குளிர மனதும் லேசாக குளிர்ந்தது.

 

தலைமூடியையும் சீர்  செய்து விட்டு பர்தாவை மடக்கி தான் அணிந்திருந்த சல்வாரையும் துப்பட்டாவையும் சரி செய்து விட்டு தன்னை கண்ணாடியில் கண்டவள் தூக்கமின்மையால் கண்களில் கருவளையமாக மாறி இருந்தது.அடுத்து தன் வயிற்றை பார்த்தாள்.இப்பொழுது வயிறு வெளியே தெரிய ஆரம்பித்து இருந்தது.இத்தனை நாட்களாக அவளின் மெலிதான தேகத்தால்  தெரியாமல் இருக்க இப்போது கொஞ்சம் வயிறு வெளியே தள்ள ஆரம்பித்து இருந்தது.விரைவில் எல்லாம் சரியாகும் என்ற எண்ணத்தோடு கொஞ்சம் தன்னம்பிக்கையோடு வெளியே வந்து உட்கார்ந்தாள்.

 

புன்னகை முகத்தோடு வந்த விமானப் பணிப்பெண் இவளுக்கு தேவையான உணவுகளைத் தர அதையும் இப்போது நீண்ட பெரூமூச்சோடு நிதானமாய் சாப்பிட்டு விட்டு இப்போது கொஞ்சம் திருப்தியாக தன்னைச் சுற்றி இருப்பவர்களை பற்றிய அறிய பார்வையை சுழலவிட்டாள்.

 

எல்லாம் புதிய  நபர்களாகவே இருந்தனர்.பயணத்தில் பாதிக்கு மேல் எல்லோரும் அயல்  நாட்டைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர்.மற்றவர்கள் இந்தியர்களாக இருந்தனர்.

 

கிட்டத்தட்ட எத்தனையோ மாதங்களுக்கு பிறகு  அவளுக்கு 

நிம்மதியான தூக்கம் கிடைத்து இருக்கிறது.‘இனிமேல் வாழ்வு உன்னோடு தான்’ என்ற எண்ணத்தோடு கூடிய அன்போடு தன் மேடிட்ட வயிற்றை தடவி விட்டாள்.

 

இவளுக்கு அருகில் அமர்ந்து  பார்த்துக் கொண்டிருந்த இவளை விட சிறுவயது பெண்ணொருத்தி ஆவலாய் “ஹாய்” என்று கையசைத்தாள்.

இவளும் புன்னகை முகமாய் சிரிப்பை ஒன்றை பதிலாக தரவும் “கொரியாக்கு சுத்திப் பார்க்க போறீங்களா?” என்றாள் ஆங்கிலத்தில்…

 

இவளோ ஒருநொடி  சட்டென்று யோசித்தவள் ஆமாம் என்று தலையசைத்ததும் அந்தப் பெண்ணோ “நானும் அதுக்கு தான் போறேன் என்ஜாய்” என்றாள் ஆர்வமாக…

 

இவளோ அதற்கு ஆமோதிப்பது போல் தலையசைக்கவும் விமானப் பணிப்பெண் எல்லோரையும் விமானம் தரையிறங்குவதற்கான அறிவிப்பை சொன்னவள் இருக்கையின் பெல்டை சரி செய்யச் சொன்னார்.

 

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலிருந்து புறப்பட்ட ஆகாயப் பறவை பாங்காக்கில் வந்து இறங்கியது. கிட்டத்தட்ட ஐந்து மணிநேர காத்திருப்பிற்குப் பின் பத்து  மணிநேரத்திற்கு மேலான  பயணத்தை தொடர்ந்து இப்போது தென்கொரியாவின் தலைநகரமான  சியோலுக்கு வந்தடைந்தது விமானம்.

 

எல்லோரும் ஒருவித ஆவலில் தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு நடக்க இவளோ தன்னை இனிமேல் பாதுகாக்க போகும் கூடாக இந்த நகரத்தை  நினைத்து நம்பிக்கையோடு தென்கொரியாவிற்குள் நுழைந்தாள்.

 

அங்கே எல்லோருமே புது முகங்களாகவும்,புது மனிதர்களாகவும்,புது கலாச்சாரமாகவும் புது இடமாகவும் தான்  அவள் கண்ணிற்கு தெரிந்தது.இதை எல்லாம் நினைத்து மனதில் ஒருவிதமான  கலக்கத்தோடு கூடிய பயம் உருவானாலும் எல்லாம் நல்ல விதமாகவே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தாள்.

 

தன்னுடைய பொருட்கள் வந்ததும் அதை தூக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பொழுது அருகில் நின்றிருந்த ஒரு கொரியாவின் பாதுகாவலர் வந்து தலையை குனிந்து “அன்னியாங்சியோ -வணக்கம்”

என்ற சொல்லி விட்டு அவளுக்கு அந்த பொருளை தூக்க உதவினார்.

 

இவளும் உடனிருந்து உதவி செய்ய எத்தனிக்க அவரோ அவளின் வயிற்றைக் காட்டி 

“இமினிசியாசிங் அன்ஆசூயி முன்சியாங்க் முன்ஹாங்குல் துஜி மாசியோ – கர்ப்பமாக இருக்கீங்கல்ல அதனால வெயிட் தூக்காதீங்க” என்று கொரியன் மொழியில் சொல்லி விட்டு எல்லாவற்றையும் எடுத்து வைக்க உதவினார்.அவரின் செயல்பாட்டைக் கண்டதும் அவனின் நினைவு சட்டென்று  வந்தாலும் அதை தூரமாக ஒதுக்கி விட்டு நிதர்சனத்திற்கு வந்தாள்.

 

கடைசியில்  இவள் “தாங்க்யூ” என்றதற்கு அவரும் தலை வணங்கி அவர்களின் நாட்டு வழக்கப்படி ஏற்றுக் கொண்டார்.இவளும் சிறு தலையசைப்போடு இதழோரம் சிறு புன்னகையை தவழ விட்டாள். அவளுடைய பொருட்களை மெதுவாக தள்ளிக் கொண்டு நுழைவாயிலில் வந்தாள்.

 

எங்கு நோக்கினாலும் செக்கச் சிவந்த மெலிந்த தேகத்தோடு நவீன உடையில் பெண்கள் தேவதைகளாக தென்பட்டனர்.பெண்களுக்கு நிகராக ஆண்களும் அப்படியே தனித்தன்மையில் இருந்தனர்.

 

அங்கே இவளின் பெயர் பலகையைத் தாங்கியபடி ஐம்பது  வயது மதிக்கத்தக்க கொரியப் பெண்மணி ஒருவர் யாரென்ற ஆவலோடு அங்கும் இங்கும் பார்த்தப்படி நின்றுக் கொண்டிருந்தார்.

 

நேராக அவருக்கு அருகில் செல்லவும் “அன்னியாங்ஸியோ இலுமியி பவையாங்கியோ- வணக்கம் உங்க பெயர் பவையா?” என்றார் கொரியன் மொழியில்….

 

அவளோ பதிலுக்கு “ஹாய் என் பெயர் பவை இல்லை பாவை” என்றாள் ஆங்கிலத்தில் ….

 

அவரும் சிரித்துக் கொண்டே பாவை சரி தானே என்று கொரியனும் ஆங்கிலமும் கலந்து பதில் சொன்னார்.

 

உடனே பாவை  சிரித்துக் கொண்டே “அஜீம்மா நன் பாவை- ஆன்ட்டி நான் பாவை” என்றவள் “உங்க பேரு க்வான் தானே” என்றாள் கொரியன் மொழியில்….

 

அவரோ அவளை அதிர்ச்சியாக பார்த்தப்படி தலையை அசைத்ததும் பாவையோ “எனக்கு கொஞ்சம்  கொரியன் தெரியும்” என்றாள்.

 

அவரோ சரி என்பது போல் தலையசைக்கவும் அவளது மேடிட்ட வயிற்றைப் பார்த்து யோசனையாய் “எத்தனை மாசம் ஆச்சு?”

 

அவளோ ஐந்து மாதம் என்று கையை விரித்து காட்டினாள்.அதைப் பார்த்தவர்  “என்கிட்ட சேகர் சார் எல்லாத்தையும் சொன்னார் வாங்க வீட்டுக்கு போகலாம்” என்று அவளை தான் ஓட்டிக் கொண்டு வந்த காரில் அவளுடைய பொருட்களை எடுத்து வைத்து இருவருமாக பயணித்தனர்.

 

பாவை வெளியே தன் பார்வையை செலுத்திப்  பார்த்தாள்.நன்றாக வளர்ச்சியடைந்த நகரமாக திகழ்ந்தது.வானளவு உயர்ந்த கட்டிடங்களும் எங்கும் டிஜிட்டல் மயமாக இருந்தது.அங்கிருந்தவர்களில் பாதிப்பேர்  தங்களின் கைப்பேசியில் லயித்து குனிந்தபடியே நடந்துக் கொண்டிருந்தனர்.

 

பக்கத்தில் இருந்தவர் பாவை ஆச்சரியமாக அங்கிருந்த இடங்களை பார்க்கவும் “இப்போ தான் முதல் தடவையா கொரியாவுக்கு வர்றீங்களா?”

 

ஆமாம் என்று தலையசைக்கவும் “அப்போ கொரியன் நல்லா பேசுறீங்களே எப்படி?” என்றதும் ஒருநிமிடம் அமைதியானவள் “இந்தியன் கம்பெனில கொரியன்ஸ் நிறைய பேரு இருக்காங்க அவங்க கூட பேசி பழகியதில் தெரியும் அதனால பேசுறது நல்லா புரியும் ஆனால் நான் பேசிறதுக்கு சரியாக வராது” என்றாள் கொரியனும் ஆங்கிலமும் கலந்து பேசினாள்.கொரியன் மொழி பெரிய வார்த்தைகள் பேச தடுமாறினாள்.

 

அஜ்ஜீமாவிடம் பேச வேண்டுவதை ஏற்கனவே பேசி பார்த்ததால் சரியாக உச்சரிக்க முடிந்தது.அவரும் யோசனையோடு  சரி என்று விட்டு அரைமணி நேர பயனத்திற்கு பிறகு நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து கார் நேராக குடியிருப்பு பகுதிற்குள் நுழைந்தது.சியோலின் பகுதிகள் மலைப்புறமாக இருப்பதால் கொஞ்சம் சரிவுப் பாதையாக போன அந்த இடத்தில் இன்னும் பதினைந்து நிமிட பயணத்திற்கு பிறகு கொஞ்சம் தனி வீடாக இருந்த வில்லாவின் வாசலில் நின்றது.

 

காரிலிருந்து இறங்கிய அஜ்ஜீமா “வாம்மா இது தான் என்னுடைய வீடு உள்ளே வாங்க” என்று பாவையை கைப்பிடித்து அழைத்தார்.உடனே பாவை கைப்பையை எடுத்து மாட்டிக் கொண்டு “அஜ்ஜீமா என்னோட லக்கேஜ்ஜை எடுக்கனும்” என்றாள்.

 

உடனே அவரோ “அதெல்லாம் என் பையன் எடுத்துட்டு வருவான் நீங்க வாங்க” என்று புன்னகை முகத்தோடு அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.

 

வீட்டின் வாயிற்கதவை திறந்ததும்  சின்னதாக ஒரு தோட்டம் இருந்தது.அதன் நடுவே இருந்த ஒற்றைப் பாதையின் வழியே  நடந்துச் சென்றாள் ஒரு வீடு இருந்தது. அதை ஒட்டி இன்னொரு சிறிய வீடும் இருந்தது.அந்த பெரிய வீட்டின் கதவை திறந்து உள்ளே செல்லும் போதே அவரோ “ஹேனுன் இடோயி சாயோ சானின் மிகினின் பாக்கிலி இசாயோ- ஹீன் எங்கே இருக்கே வெளியே கார்ல இருக்கிற பொருட்களை  எடுத்து உள்ளே வா” என்றார்.

 

உடனே உள்அறையில் இருந்து அவனோ “அதெல்லாம் முடியாது எப்போ வீட்டுக்கு வந்தாலும் வேலை செய்ய சொல்லுறீங்க” என்றான்.

 

இவரோ பாவையிடம் “ஒருநிமிசம் உட்காருங்க” என்று  அங்கிருந்த இருக்கையில் அவளை அமரச் சொல்லி விட்டு சமையலறைக்குச்  சென்றார்.

 

சத்தம் வந்த திசையில் இருந்து வெளியே வந்தான்  கொரிய இளைஞன் ஒருவன்.இவள் நிமிர்ந்துப் பார்க்க அவனோ இவளை ஆச்சரியமாக பார்த்தான்.ஆறடி உயரத்தில் கலைந்த கேசத்தோடு அரை டவுசரும் டீசர்ட்டும் அணிந்தபடி கையில் கேம்க்கான சாதனத்தோடு  நின்றிருந்தவன் “தங்சேனுன் இந்தோ ஸலாம் இபினிகா-நீங்க இந்தியரா?” என்றதற்கு அவளோ தயக்கத்தோடு “நே ஜைனோன் இந்தோ நியோ-ஆமாம் நான் இந்தியன்” என்று தட்டுத்தடுமாறி பதில் சொன்னாள்.

 

அதைக்கேட்டு அவன் வந்த  சிரிப்பை அடக்கிக் கொண்டு “இங்கிலிஷ் தெரியும்னா என்கிட்ட பேசுங்க நான் நல்லாவே பேசுவேன்” என்றான்.

 

அதைக்கேட்டு இவளுக்கு சிறிது தர்மசங்கடமாக இருந்தது.சரி என்பது போல் தலையசைத்தாள்.

 

அங்கே வந்த அஜ்ஜீமா கையில் காபியோடு வந்து அவளுக்கு கொடுத்தார்.“பாவை  முதல்ல காபி குடிங்க அடுத்து நாம நீங்க இருக்கப் போற வீட்டுக்கு போகலாம்” என்றார்.

 

உடனே அவருடைய மகன் அவரை தனியே அழைத்து வெளியே சென்றவன் “ஒம்மா இவங்க தான் நம்ம பக்கத்தில் வீட்டில் வாடகைக்கு வர போறாங்களா?” 

என்றதற்கு அவரோ “ஆமாம்” என்று சொல்லி தலையசைத்தார்.

 

உடனே ஹீன் “ஏன்ம்மா  வேற ஆளே இல்லைன்னா யார்னே தெரியாத  இந்த மாதிரி வேற நாட்டுக்காரங்களை நம்ம பக்கத்துல தங்க வைக்கிறீங்க?”

என்றான் பிடிக்காமல்…

 

அதற்கு அஜ்ஜீமா “உனக்கு சேகர் சார் தெரியும்ல உன் அப்பாவோடு வேலை பார்த்தவர் அவர் சொன்னாங்கன்னு தான் நான் இந்தப் பொண்ணை இங்கே தங்க வைக்க ஒத்துக்கிட்டேன் அதுவும் இல்லாமல் அந்தப் பொண்ணு பேரு ஹா..ஹான் பாவைக்கு அம்மா அப்பா யாருமே இல்லையாம் வயிற்றுல வேற குழந்தை இருக்கு அந்த குழந்தைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேங்குறான்னு கவலைப்பட்டாரு அதுவும் இல்லாமல் இந்த மாதிரி ஒரு நிலைமையில் ஏன் தன் தாய்நாட்டை விட்டுட்டு இப்படி மொழியே தெரியாத இந்த நாட்டுக்கு வந்து இருக்கான்னு எதுவுமே  தெரியலை”என்றார் 

சோகத்தோடு…

 

இதை எல்லாம் கேட்ட ஹீன் அப்படியே அதிர்ச்சியில் நின்றவன் “அப்போ அவ புருஷன் எங்கே?” என்றதற்கு “அதைப் பத்தியும் தெரியலைன்னு தான் சேகர் சார் சொன்னார்” என்றார் அஜ்ஜீமா.

 

உடனே ஹீன் மெதுவாக அவள் இருக்கும் பக்கம் எட்டிப் பார்த்தான் சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்தப்படி அவனுடைய அம்மா கொடுத்த கருப்பு காபியை கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டிருந்தாள்.அதை அவளின் முகமாற்றத்தை வைத்தே கண்டுக் கொண்டவன் 

“ஒம்மா அந்தப் பொண்ணுக்கு காபி பிடிக்கலை போல என்ன சாப்பிடுவீங்கன்னு கேட்டுட்டு கொடுங்கன்னு எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறீங்க சரி இனிமேல் இங்கே என்ன நடக்கப் போகுதுன்னு பார்க்கலாம்” என்று அவன் அம்மா சொன்ன வேலையை செய்யப் போனான் ஹீன்.

 

அஜ்ஜுமா பாவைக்கு அருகில் வந்தவர் “என் பையன் இப்படி கேள்வி கேட்கிறானேன்னு தப்பா நினைக்காதே! அவன்கிட்ட நீங்க வர்றதை நான் முதலிலேயே சொல்லலை அதான் என்னன்னு விவரம் கேட்டு இருப்பான் மற்றபடி நல்ல பையன் வயசு முப்பது ஆகுது இப்போ வேலை இல்லாமல் வீட்ல சும்மா தான் இருக்கான்  எனக்கு இன்னும் ஒரு  பொண்ணு இருக்கா அவ காலேஜ்

போயிருக்கா இதெல்லாம் சேகர் சார் சொல்லி தான் ஏற்பாடு செய்து இருக்கேன்” என்றார்.

 

உடனே பாவை எழுந்து “கம்சாயியோ அஜ்ஜீமா- நன்றிகள் ஆண்ட்டி” என்றாள்.

 

அவரோ அவளின் கையைப் பிடித்து “இருக்கட்டும் பரவாயில்லை நாளைக்கு லீவு அதனால உன் பொருளை எல்லாத்தையும் எடுத்து வை அதற்கு மறுநாள் நாம ஆபிஸிக்கு போகலாம்” என்றவர் “வாங்க நாம வீட்டை பார்க்க போகலாம்” என்றார்.

 

அதற்கு பாவை “அஜ்ஜீமா என்னைப் பார்த்து வாங்கன்னு மரியாதையாக சொல்ல வேண்டாம் உங்க மகளாட்டும் உரிமையா பெயர் சொல்லி அழைங்க” என்றதற்கு அவரும் புன்னகை ஒன்றை பதிலாக தந்து சரியென்று ஒப்புக் கொண்டார்.

 

இருவரும் பக்கத்தில் இருந்த அந்த சின்ன வீட்டுக்குள் நுழைந்தனர்.ஒரு சிறிய வரவேற்பறை அடுத்து அதனுள்ளே ஒரு சிறிய அறை மற்றும் அதனோடு கூடிய குளியலறை மேலும் வரவேற்பறையின் இன்னொரு பக்கமாக சமையலறையும் இருந்தது.அந்த இடத்தைப் பார்த்ததும் பாவைக்கு பிடித்து இருந்தது.

 

வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களும் சேர்த்து தான் அங்கே  இருந்தது.

 

பாவை யோசனையோடு “இந்த பொருட்கள் எல்லாம் யூஸ் பண்ணலாமா?” என்றதற்கு அஜ்ஜீமா “சேகர் சார் தான் எல்லாம் பொருளும் வாங்கச் சொல்லி பணம் அனுப்பி இருந்தாரு நானும் தேவையான எல்லாத்தையும் வாங்கிட்டேன் வேற எதாவது தேவைன்னா நீ வாங்கிக்கோ” என்று சொல்லவும் ஹுன் பாவையின் பொருட்களை எல்லாம் எடுத்து வந்து உள்ளே வைத்தான்.

 

அதைப் பார்த்த பாவை அவனுக்கு உதவிச் செய்யச் செல்ல அவனோ அவளைக் கண்டுக் கொள்ளாமல் எல்லாவற்றையும் எடுத்து வைத்தான்.ஹீன் அருகில் சென்றவள்  “ரொம்ப தாங்ஸ்” என்றாள் ஆங்கிலத்தில் அவனும் “இட்ஸ் ஓகே” என்று பதிலுரைத்து விட்டு சென்று விட்டான்.

 

அஜ்ஜீமாவும் “பாவை நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு எனக்கும் வேலை இருக்கு போய்ட்டு வரேன்” என்று சென்று விட்டார்.

 

எல்லோரும் சென்று விடவும் அமைதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்தவள் எல்லாவற்றையும் பார்த்தப்படி அப்படியே கண்ணீர் வடித்தவள் மனதினுள் ‘அப்பா அம்மா கடைசில இப்படி நான் மட்டும் தனியா நிப்பேன்னு நினைச்சுக் கூட பார்க்கலை ஏன் எல்லோரும் என்னை இப்படி பாதியிலே தவிக்க விட்டு போய்ட்டீங்க’ என்று கலங்கியவள் அப்படியே அந்த நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பற்றியபடி விழிகளை மூடினாள் பாவை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!