Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கரைந்தேன் மெல்ல தொலைந்தேனே

கரைந்தேன் மெல்ல தொலைந்தேனே அத்தியாயம் -2

கரைந்தேன் மெல்ல தொலைந்தேனே அத்தியாயம் -2

 

விழிகளில் இருந்து கண்ணீர் வடிந்துக் கொண்டிருந்தது.அப்பொழுது  ஏதேச்சையாக உள்ளே வந்த ஹீன் பாவைக்காக கையில் பழங்களோடு கதவு திறந்து இருக்கவே நேராக உள்ளே வந்தான்.

 



Advertisement

அங்கே பாவை இருக்கும் நிலைமையைப் பார்த்து அவனுக்கே ஒரு மாதிரியாகி விட்டது.அவன் அப்படியே அமைதியாக நிற்கவும்  விழிகளை மூடியிருந்தாலும் தன் முன்னே நிழலாக யாரோ நிற்பதை உணர்ந்து   விழிகளை திறந்தவள் எதிரே ஹீன் நிற்பதை பார்த்து பதறியபடி எழுந்தவள் சிவந்திருந்த விழிகளை துடைத்து விட்டு “என்னாச்சு என்ன வேணும்?”என்றாள்.

 

அவனோ அவள் முகத்தை பார்க்காதவாறு “ஒம்மா இந்த பழங்களை சாப்பிடக் கொடுத்தாங்க சாப்பிடுங்க நைட் டின்னர் வீட்டுக்கு சாப்பிடவாங்க அம்மா சொல்லச் சொன்னாங்க “ என்று தன் கையில் இருந்ததை அவளுக்கு கொடுத்து  விட்டு வேகமாக வெளியே  சென்று விட்டான்.

Advertisement

 

Advertisement

பாவை என்னச் செய்வதென்று தெரியாமல் அப்படியே நாற்காலியில் அமர்ந்தவள் எதிரே இருந்த கண்ணாடியில் தன்னை பார்த்தவள் மனதினுள் ‘’யார் முன்னாடியும்  இனிமேல் நான் பலவீனமாக இருக்கக் கூடாது’ என்று தனக்குள்ளேச் சொல்லிக் கொண்டாள்.

 

ஆனால் வெளியே தோட்டத்தில் ஓரமாய் நின்றுக் கொண்டிருந்த ஹீன் பாவையின் நிலைமையைய் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.சற்று முன்பு வரை எந்தவிதமான வருத்தத்தையும் காட்டாமல் புன்னகையோடு வந்திருந்தவளின் முகம் தனியே இருக்கும் போது வேறு ஒரு முகத்தை தான் அவன் பார்த்திருந்தான்.

Advertisement

 

ஹீன் மனதினுள் ‘எனக்கு எதுக்கு தேவையில்லாத பற்றி யோசனை?’ என்று நினைத்தவாறு தன் அறைக்குள் போய் இருந்துக் கொண்டான்.

 

இந்தியாவை விட தென் கொரியாவில் மூன்றரை நிமிடம் முன்னோக்கி இருப்பதால் பாவைக்கு நேரமாறுபாடுவினால் ஒருவிதமான அசதியாகவே இருந்தது.அதனால் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அறையில் போய் படுத்துக் கொண்டாள்.

 

கண்களை மூடியவள் அசதியில் தூங்காமல் யாரோ தன்னை கவனிப்பது போல் இருக்க சுற்றும் முற்றும் பார்த்தாள்.ஆனால் திருப்தியாக இல்லாமல் இருக்க வெளியே வந்தவள் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தாள்.யாரும் இல்லை வீட்டின் வாயிற்கதவு மூடாமல் இருப்பதை கவனித்தவள் நேராகச்  சென்று கதவை தாழிட்டு விட்டு படுக்கையில் போல் தூங்கினாள்.

 

சிறிது நேரத்தில் எழுந்தவள் குளித்து விட்டு உடையை மாற்றி தலைமுடியை விரித்து விட்டு வரவேற்பறையில் உட்கார்ந்து தான் கொண்டு வந்திருந்த துணிகளை எடுத்து அலமாரியில் வைத்து அடுக்கினாள்.

 

அடுத்து மற்ற பொருட்களை எடுத்து ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்தாள்.அவளுடைய துணிகளை மட்டும் தான் அவள் எடுத்து வைத்திருந்தாள்.ஆனால் மற்றவை எல்லாம் இவள் சென்னையிலிருந்து செல்வதற்கு முன்பாகவே சென்னை விமான நிலையத்திற்கு  சேகர் அங்கிள் அனுப்பி வைத்திருப்பது அவளுக்கு அங்கே சென்ற பிறகு தான் தெரிய வந்தது.

 

அதை எடுத்து பிரித்துப் பார்த்தாள்.மூன்று, நான்கு மாதங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் எல்லாம் இருந்தது.அதை பார்த்ததும் விழிகளில் கண்ணீர் நிறைந்துப் போய் இருந்தது.

 

பெற்றவர்களைப் போல் அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கி வைத்தனர்.எல்லாவற்றையும் எடுத்து ஒவ்வொன்றாக அடுக்கி வைத்தாள்.

 

மனதினுள் ‘’இன்னும் கொஞ்சநாளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிடலாம்னு நினைக்கிறேன் முடிஞ்ச வரைக்கும் இந்தியன் பொருட்கள் கிடைக்கிற கடையை கண்டுபிடிக்கனும்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

 

எழுந்து கதவை திறந்ததும் அஜ்ஜீமா தான் நின்றுக் கொண்டிருந்தார்.அவரை உள்ளே அழைத்ததும் அவரோ “பாவை சாப்பிட போகலாம் வாம்மா” என்றார்.

 

பாவையோ “வேண்டாம் அஜ்ஜீமா நானே சமைச்சுக்கிறேன்” என்றதற்கு கட்டாயப்படுத்தி அவளை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

 

உள்ளே வரவேற்பறையில் மேற்கத்திய உடையில்  சாப்பாடு மேசையில் அமர்ந்திருந்து கைப்பேசியை பார்த்துக் கொண்டிருந்தாள்.இவர்கள் உள்ளே சென்றதும் அஜ்ஜீமா “ஏரா” என்று அழைத்தவர் பாவையை அறிமுகப்படுத்தினார்.

 

பாவையை மேலிருந்து கீழே வரை பார்த்தவளிடம் “ஏலாகா பாபைகி டங்ஸினியாயி தஹே மல்ஹேஹாயியோ – ஏரா பாவைகிட்ட உன்னைப் பற்றி சொல்லு” என்றார்.

 

உடனே அந்தப் பெண்ணோ சிரித்த முகத்துடன் “அன்னியாங்சியோ நா ஏரா” என்று வணக்கம் சொல்லி தான் பல்கலைக்கழகதத்தில் மூன்றாம் வருடம் படிப்பதாக அறிமுகப்படுத்தினாள்.

 

பாவையும் பதிலுக்கு ஆங்கிலமும் கொரியன் மொழியும் கலந்து அவளை சந்தித்ததில் மகிழ்வதாகச் சொன்னாள்.குர்தி அணிந்து தலைக்கு குளித்து விட்டு தனது நீண்ட தலைமுடியை விரித்து விட்டு இருந்தாள்.

 

அவளின் தலைமுடியை கவனித்த ஏரா “தங்ஸினின் முடினின் எல்லோமா கில் எலாயோ- உங்க தலைமுடி எவ்வளவு நீளமாக இருக்கு”என்று ஆச்சரியப்பட்டாள்.

 

அதற்கு பாவை “எனக்கு நீளமான முடி வளர்க்க பிடிக்கும்” என்றாள்.

 

அவளை பார்த்த ஏரா “ரொம்ப அழகா இருக்கீங்க அதோடு உங்க பெரிய காஜல் இட்ட கண்களும் தான்” என்றாள்.அதற்கு சிரிப்பை ஒன்றை பதிலாக தந்தாள்.

 

சாப்பாடு மேசையில் கொரியன் உணவுகளாக இருந்தன.ஹீன் கையில் சிக்கன் சூப்பை பாத்திரத்தில் கொண்டு வந்து நடுவில் வைத்தான்.அஜ்ஜீமாவும் வந்து அமர உணவினை பரிமாற ஆரம்பித்தார்.முதலில் பாவையை பார்த்ததை விட இப்பொழுது ஹீன் பார்க்க வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தாள்.

 

அதோடு தன் தங்கை  ஏராவிடம் அவள் சிரித்துக் கொண்டு பேசியதை  அவனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

கொரியன் உணவில் அரிசி,காய்கறி,இறைச்சி ஆகிய உட்கூறுகளை கொண்டதாகும்.மரபுக் கொரிய உணவில் தொட்டுக் கொள்ளும் பக்க உணவுகள் (பன்ச்சன்) நிறைய இருக்கும்.ஆவியில் அவித்த குறுமணி அரிசிஉணவும் அமையும்.அனைத்து உணவிலும் கிம்சி என்னும் ஊறுகாய் எண்ணெய் இல்லாமல் மசாலாவால் தேய்த்து பதப்படுத்தப்பட்ட காய்கறி உணவு பரிமாறப்படும்.அரிசியால் செய்யப்பட்ட டெப்போக்கி என்னும் உணவும் அவளால் சாப்பிடக் கூடியதாக இருந்தது.மற்றவை எல்லாம் காரமான உணவாக இருப்பதால் ருசிக்காக ஒரு கவளம் எடுத்து வாயில் வைத்ததும் காரத்தினால் அவள் உதடுகள் சிவந்து மூக்கும் மாறிப் போயின.

 

இதை ஹீன் கவனிக்க அவனுக்கு அவளைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது.சிறுபிள்ளைப் போல் அவளின் செய்கை இருந்தது.ஏரா கவனித்தாலும் சிரித்தால் பாவைக்கு சங்கடமாக இருக்கும் என்று அமைதியாக இருந்து விட்டாள்.

 

அஜ்ஜீமா பாவைக்கு எல்லா உணவையும் பரிமாறினார்.ஆனால் அவளால் காரமான அந்த உணவுகளை சாப்பிட முடியவில்லை.அதனால் சோறும் கொஞ்சம் சாலட்டும் சிக்கின் சூப்பு – சிக்கன் சூப்பும் எடுத்துக் கொண்டாள்.

 

சாப்ஸ்ட்டிக் -சியோட் கராக் அஜ்ஜீமா அதைப்  பயன்படுத்த சொல்லிக் கொடுக்கும் போதும்  இவளுக்கு தானாகவே அவனின் நினைவும் வந்து போனது.ஏற்கனவே சாப்ஸ்ட்டிக்கை  பயன்படுத்த தெரிந்து இருப்பதால் ஓரளவு சமாளித்தாள் பாவை.

 

அவர்களோடு கொஞ்சம் தன்னுடைய உறவை பலப்படுத்த இந்த இரவுநேர விருந்து வசதியாக இருந்தது.அவர்கள் சாப்பிடுவதால் இவளும் பொறுமையாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.ஆனால் அங்குள்ள காலநிலையால் இவளுக்கு குளிர ஆரம்பித்தது.

 

சிறிது நேரம் சமாளித்து தன் வீட்டிற்கு சென்று விடலாம் என்று நினைத்தால்  குளிரால் அவளுடைய உதடுகள் நடுங்க ஆரம்பித்தது.இதை கவனித்த ஹீன் எழுந்து போய் அவனுடைய கோர்ட்டை எடுத்து வந்து பாவையிடம் கொடுத்து “ரொம்ப குளிரா இருக்கு இந்த கோர்ட்டை போட்டுக்கோங்க” என்றான்.

 

அவளோ  தர்ம சங்கடமாய் அவர்களைப் பார்த்தாள்.அவளின்  நிலைமையைப் புரிந்துக் கொண்ட அஜ்ஜீமா பாவையின் கையை ஆதரவாக பிடித்தவர் “கொச்சா காச்சின் மாசியோ உலிடோ தங்ஸ்ஸினின் உ காஜா யியோ – நாங்களும் உன்னுடைய குடும்பம் தான் கவலைப்படாதே!” என்றார் ஆதாரவோடு….

 

அஜ்ஜீமாவின் பதிலில் அன்பாய் உணர்ந்தவள் விழிகள் நீரோடு தலையசைத்தவள் “குமாவாயோ அஜ்ஜீமா – நன்றிகள் அஜ்ஜீமா” என்றாள் அன்போடு…

 

ஹீனின் கோர்ட்டை போர்த்திக் கொண்டதும் கொஞ்சம் குளிருக்கு இதமாக இருந்தது பாவைக்கு.எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் பாவையும் உடனிருந்து எல்லா பாத்திரங்களையும் எடுத்து வைக்க உதவினாள்.

 

ஆறடி உயரத்தில் இருப்பவனின் முழு நீள உடையோ இவளுக்கு ஐந்தடியில் இருப்பவளுக்கு துணி  தரையில் இழுத்துக் கொண்டிருந்தது.இதில் வேறு இவளோ இங்கும் அங்குமாக நடப்பதைப் பார்த்து ஹீனும் ஏராவும்  சிரிப்பை அடக்கிக் கொண்டு வாயில் கைவைத்து அழுந்த பிடித்தப்படி அமர்ந்திருந்தனர்.

 

அவள் உதவி செய்வதைப் பார்த்த அஜ்ஜுமா “ஏரா அமைதியா உட்கார்ந்து வேடிக்கைப் பார்ப்பதை நிறுத்திட்டு வந்து உதவி செய்” என்றதும் எழுந்து சென்று விட்டாள்.

 

பாவை ஹீனிடமும் அஜ்ஜீமாவிடம் சொல்லி விட்டு வீட்டிற்கு போய் தூங்கப் போனாள்.கதவை தாளிட்டு போய் 

படுத்தாள்.கண்கள் இரண்டும் இமைகளை மூட மறுத்தன.

 

நேரம் வேகமாக செல்ல ஆரம்பித்தது.நள்ளிரவு நேரத்தில் புதுவகையான உணவுமுறையால் நெஞ்சில் ஒரு அழுத்தம் வர குமட்டிக் கொண்டு வந்தது.கடந்த நான்கு மாதங்களாக எந்தவிதமான வித்தியாசமும் தெரியாமல் இருந்தது.ஆனால் இப்பொழுது ஐந்தாவது மாதம் பிறந்ததிலிருந்து கொஞ்சம் வாசனையையும் தெரிய ஆரம்பித்து இருந்தது.

 

இதில் கொஞ்சம் அதிக சாப்பாடு அவளுக்கு குமட்டிக் கொண்டு வர குளியலறைக்குச் சென்று வாந்தி எடுத்தாள்.அதனால் வியர்த்துக் கொண்ட வர கதவை திறந்து வாசலில் நின்றுக் கொண்டிருந்தாள்.அந்த இடமே நிசப்தமாக இருந்தது.

 

இன்னும் வயிற்றில் பிசைந்துக் கொண்டு வர வெளியில் கொஞ்சம் நடக்கலாம் என்று மெதுவாக நடக்க ஆரம்பிக்க திரும்பவும் குமட்டிக் கொண்டு வந்தது.

 

வேகமாக வீட்டினுள்ளே செல்ல கைப்பேசியில் தன் நண்பனுடன் பேசிக் கொண்டிருந்த ஹீன் பாவை ஓடுவதைப் பார்த்து அவள் பின்னாலேயே சென்றான்.இம்முறை சமையலறையில் சென்று விடாமல் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

ஹீன் திறந்திருந்த கதவின் வழியே எட்டிப் பார்த்தான்.நிற்க முடியாமல் தடுமாறி போனவளைப் போய் பிடித்துக் கொண்டான்.

 

அவளோ லேசான மயக்கத்தினால் அவனின் மேல் சாய்ந்துக் கொள்ள திரும்பவும் வாந்தி வரவும் குனிந்துக் கொண்டாள்.ஹீன் அவளின் முதுகை தடவி விட்டான்.

 

வாந்தி எடுத்து முடித்ததும் அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு இருக்கையில் அமர வைத்து விட்டு நேராக வெளியே சென்று விட்டான்.

 

பாவையோ ஒருவித கலக்கத்தில் இருந்தாள்.தனியாக எப்படியும் சமாளித்து விடலாம் என்று பார்த்தால் நிலைமை எப்படி மாறப் போகிறாதோ? அதோடு வந்த முதல் நாளே பக்கத்தில் உள்ளவர்களை அவள் பெரிய தொந்தரவு செய்ததாக எண்ணியவள் இதனால் வேறு எதாவது பிரச்சினை வந்து விடுமோ? என்ற யோசனை வேறு அவளைப் படுத்தி எடுத்தது.

 

வெளியே சென்ற ஹுன் சிறிது நிமிடத்தில் திரும்பி வந்தவன் கையில் எலுமிச்சை சோடா எடுத்து வந்து கையில் கொடுத்து “பாவை இந்த சோடாக் குடிங்க வாந்தி நின்னுடும் கொஞ்சம் புத்துணர்ச்சியா இருக்கும் நாளைக்கு டாக்டரைப் போய் பார்க்கலாம்” என்று கொரியனும் ஆங்கிலமும் கலந்துச் சொன்னான்.ஹீன் கொடுத்த எலுமிச்சை சோடா இரண்டு மடக்கு குடிக்கவும் கொஞ்சம் வாய்கசப்பு குறைந்த மாதிரி இருந்தது.

 

அவனை நன்றியோடும் கொஞ்சம் அசவுகரியமாகவும் உணர்ந்தவள் “என்னை மன்னிச்சிடுங்க மிஸ்டர் ஹீன் இந்த நடுராத்திரியில் உங்களை தொந்தரவு செய்துட்டேன் இனிமேல் இந்த மாதிரி நடக்காமல் பார்த்துக்கிறேன் மன்னிச்சிடுங்க” என்றாள்.

 

அவனோ “ஹாச்சு நீங்க என்னை உதவிக்கு அழைக்கலை நானாகத் தான் வந்தேன் தேவையில்லாமல் எதுக்கு மன்னிப்பு போய் தூங்குங்க இப்போ பரவாயில்லை தானே” என்றான்.

 

அதற்கு அவளோ லேசாக புன்னகைத்து ஆமாம் என்பது போல் தலையசைத்தவாறே…. “இத்தனை மாசமா ஒரு தொந்தரவும் தரலை இப்போ ஐந்தாவது மாசம் பொறக்கவும் தான் என்னை லேசா தொல்லை செய்து இருக்கான்” என்று தன் வயிற்றின் மேல் கைவைத்து அன்பாகச் சொன்னாள்.

 

அவள் சொன்ன அழகைப் பார்த்து சிரித்தவன் “குட் நைட்” சொல்ல அவளும் பதிலுக்கு சொல்லி அவன் அங்கிருந்து தன் அறைக்குச் சென்றான் ஹுன்.

 

இப்பொழுது ஹீனுக்கு தூக்கம் வரவில்லை.பாவை நின்றிருந்த நிலைமையே கண்ணில் வர தனியாக இவள் எப்படி குழந்தையைப் பெற்றெடுத்து வளர்க்கப் போகிறாள்? என்பதே பெரிய மலைப்பாக இருந்தது.அதோடு அவள் திருமணமானவள் என்பதற்கான எந்த அடையாளமும் அவன் கண்ணில் தென்படவில்லை.கையில் ஒரு மோதிரமும் இல்லை.அதனால்  இணையத்தில் இந்தியப் பெண்கள் திருமணம் ஆனதை காட்டும் விதமாக அணியும் அணிகலன்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆவல் கொண்டு அதைப் பற்றி தேட ஆரம்பிக்க ஓரளவு எல்லாவற்றை பற்றி அறிந்துக் கொண்டான்.

 

அதில் குறிப்பிடப்பட்ட தாலி,மெட்டி,மோதிரம்,சங்கிலி என்று எந்தவொரு அணிகலனும் அணியாமல் இருந்தாள்.அதோடு முக்கியமாக நெற்றியில் இருக்க வேண்டிய குங்குமமும் அவள் நெற்றியில் இல்லை மாறாக சிறிய பொட்டுத் தான் வைத்திருந்தாள்.

 

இதை எல்லாம் நினைத்து ஆழ்ந்து யோசித்த ஹீன் பாவையை பற்றி  நிச்சயம் என்னவென்று  அறிந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.ஆனால் இதைப் பற்றிய அவசியம் தனக்கு தேவையில்லாதது என்று நினைக்கவில்லை.

 

இரவு தாமதமாக தூங்கியதால் பாவை விடிந்தும் காலையில் தூங்கிக் கொண்டிருந்தாள்.ஹீனும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.அஜ்ஜுமா செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.பாவையின் வீட்டின் வாசலைப் பார்க்க அது உள்ளே பூட்டியிருந்தது.

 

களைப்பாக இருப்பதால் தூங்கியிருப்பாள் என்று நினைத்து தன் வேலையை பார்க்கச் சென்று விட்டார்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!