Skip to content
Post Views: 8,438
கற்ப(து)னை சுகமானதே…
Advertisement
அத்யாயம் 1
Advertisement
Advertisement
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா…”
Advertisement
திருமகள் கர்ம சிரத்தையாய் வீட்டில் இருந்த விநாயகர் முன் நின்று கண்மூடி சொல்லிக் கொண்டிருக்க ,தனது பதினாறு வயது சில்வண்டின் குரலில் மயங்கியவாறே அடுக்களையில் அவசர அவசரமாக தனது திறமையை காட்டிக்கொண்டிருந்தாள் அவளது அம்மா கண்மணி. இன்று சங்கட ஹர சதுர்த்தி. ஒவ்வொரு சங்கட ஹர சதுர்த்திக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் விநாயகப் பெருமானுக்கு பூஜைகள் செய்து , கொழுக்கட்டையும்,சுண்டலும் நைவேத்தியம் வைத்து வழிபடுவது வழக்கம்.
பிள்ளைகளுக்கும் அதே பழக்கத்தை பழக்கி விட்டிருந்தார்கள் கண்மணி சாம்பசிவம் தம்பதியர். அவர்களது குடும்பம் பற்றிய சிறு அறிமுகத்தை உங்களுக்கு இப்போதே சொல்லி விடுகிறேன்.
சாம்பசிவம் அவர் சென்னையில் புகழ்பெற்ற பட்டயக் கணக்காளர்.{ஆடிட்டர்) அவரது மனைவி கண்மணியும் சி ஏ இன்டெர் வரை முடித்துவிட்டு,கணவரின் அலுவலகத்திலேயே வேலை செய்கிறாள்.என்ன…குடும்பமும் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் வீட்டிலிருந்தே வேலைகளை முடித்துக்கொடுத்துக்கொண்டு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பில் கண்மணி .
சாம்பசிவம் தனியாக நிறுவனம் வைத்து நடத்துவதால் குடும்பத்தில் தனது பங்களிப்பை அவரால் அதிகம் கொடுக்க முடிவதில்லை. அதற்கும் சேர்த்து கவனிப்பது கண்மணியின் பொறுப்பாகிவிட்டது.
இரண்டு குழந்தைகள்.மூத்தவன் நரேந்திரன். கல்லூரியில் முதலாமாண்டு பி.காம் படிக்கிறான்.அப்பா வழியில் நிறுவனத்தில் பங்கெடுக்கவென சி.ஏ வும் சேர்ந்துவிட்டான் . திருமகள் பதினோராம் வகுப்பில் படிக்கிறாள். கணினி அறிவியலுடன் கூடிய அறிவியல் பிரிவில் படிப்பவள் இந்த வயதியிலேயே ஆளை மயக்கும் அழகினை வரமாகப் பெற்று அத்துடன் கூடிய உயரமுமாய் எதிராளியை நின்று ஆவலுடன் பார்க்க வைக்கும் . நடனத்துடன் வாய்ப்பாட்டும் கற்கிறாள். படிப்பில் சுட்டி என்று புகழ முடியாது…ஆனாலும் அறுபது மதிப்பெண்களை தாண்டி விடுகிறாள். அவள் பிறந்த பிறகு சாம்பசிவம் தனியாக தொடங்கிய நிறுவனம் நிறைய முன்னேற்றம் காண ஆரம்பித்தது. அதில் திருமகள் வீட்டில் செல்ல ராணி ஆகிவிட்டாள் .
எல்லாமுமாக சேர்ந்து அவளுக்குள் கர்வத்தை விதைக்காமல் விடுத்தால் தானே ஆச்சர்யம்! தன்னை விட எல்லோரையும் கீழாக நினைக்கும் எண்ணம் அவளுக்குள் வளர்ந்தாலும்,அதை அவ்வளவாக அவள் வெளிப்படுத்தாமல் இருந்தாள் . வெளியே தெரியாத விஷயத்தை சீர் செய்வது எப்படி?
அந்த சிறுமிக்கு தெரியாதே..இந்தக் குணத்தை வலிக்கக் கீறி குணமாகும் வைத்தியன் ‘காலம் ‘என்று.
அகங்காரமும்,கர்வமும் மனிதனை அழிக்கும் வல்லமை வாய்ந்த பிரம்மாஸ்திரம்.
பூஜை முடிந்து திருமகள் டியூஷன் வகுப்புக்கு சென்றுவிட , அம்மாவுக்கு அடுக்களையில் வேண்டிய உதவிகள் செய்துவிட்டு தானும் தனது கணக்கியல் புத்தகத்துடன் பேசத் தொடங்கினான் நரேன். மாடியில் தனது அறையில் அமர்ந்திருந்த நரேனைத்தேடி அவன் வீட்டுக்கு வந்தான் சாகேத். அவன் நரேனுடன் கல்லூரியில் படிக்கிறான்.
அவன் அப்பா துரைசாமியிடம்தான் திருமகள் டியூஷன் போகிறாள். கணக்கும், வேதியிலும் அவரது வகுப்பில் படிப்பவள் மற்ற பாடங்களுக்கு வெவ்வேறு இடங்களில் டியூஷன் போகிறாள். துரைசாமி ஐந்தாம் வகுப்பு வரைக்குமான ஆங்கில வழி பள்ளிக்கூடமும் நடத்துகிறார். பெரிய பணக்காரர் இல்லை எனினும் வருமானம் போதுமானதாக இருக்கிறது.அவரது மனைவி ராஜம். வீட்டிலேயே புடவை விற்கும் தொழிலை செய்து வருகிறாள். பத்தாம் வகுப்பு முடிந்த உடனேயே வீட்டில் அத்தை மகனென்று துரைசாமிக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். இருவருக்கும் ஒன்பது வயது வித்தியாசம். இன்னமும் ராஜம் குழந்தை மனம் தான். புடவை விற்பதில் கிடைக்கும் இலாபம் அவள் ஏமாந்த தொகையை மீறி வருவதுதான்.
ராஜம் வெகுளிதான் . எல்லோரிடமும் நம்பிக்கை உண்டு. கணவனும் ,ஒற்றை பிள்ளையான பத்ரீ மீதும் தன் உயிரையே வைத்திருக்கிறாள் . அவர்கள் இருவரையும் சுற்றித்தான் அவளது உலகம் சுழல்கிறது. துரைசாமிக்கு மனைவி மீது அளவு கடந்த காதல். அதை வெளிப்படுத்தவும் அவர் தயங்கியது இல்லை. ஆனால், பூ மனம் கொண்ட மனைவியின் குணம் மீது கவலை அவருக்கு உண்டு. அப்பா -அம்மாவின் அன்யோன்யம் பார்த்து வளரும் சாகேத் மனதில் நிரம்ப ஆச்சர்யம் !. இருவருக்குள்ளும் எவ்வளவு வித்தியாசங்கள் இருந்த போதிலும் அந்நியோன்யம் குறையவில்லை என்றால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று தானே அர்த்தம்…
அவன் மனதிலும் ,”தனக்கு வருபவள் எப்படி இருந்தாலும்,குறைகளை யோசிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றெல்லாம் யோசனைகள் . அவன் அப்பாவுக்கும் கூட அதிகமாக கோவம் வரும். ஆனால்,அதையெல்லாம் அம்மா பெரியதாக பேசியதோ, அப்பா மீது கோவம் கொண்டோ…அவ்வளவு ஏன் அழுதும் கூட அவன் கண்டது இல்லை.
தான் நூறு சதவிகிதம் தன் மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினான். கல்லூரிக்கு பின் வேலை. பிறகு எப்படியும் இன்னும் ஐந்து வருஷங்களில் திருமணம் என்று அவன் மனம் கணக்குப் போட்டது. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை…(அடுத்த வரிகள் அவ்வப்போது வர வாய்ப்பு அதிகம்)
இந்த வயதில் கல்யாண ஆசைகளா…என்றால் இதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அவன் சிறுவனல்லவே..மீசை முளைத்த ஆண்மகன். இது போன்ற எதிர்பார்ப்புகளும்,கல்யாணக் கனவுகளும் பள்ளிப் பருவம் தொடங்கி, வேலைக்கு செல்லும் வரை ஆணாகட்டும்,பெண்ணாகட்டும்..நிரம்பவே இருக்கிறது. பின்னர் ஏனோ சூழ்நிலை ,காணும் மனிதர்களின் வாழ்க்கை இவை எல்லாம் சேர்ந்து மனதின் ஓரத்தில் உண்டாக்கும் பயம், ‘அதன் விளைவு திருமண வாழ்க்கை அவசியம் இல்லை’ என்ற முடிவில் கொண்டு சேர்க்கிறது. முன்பெல்லாம் இது போன்ற எண்ணங்கள் வளரக் கூடாது என்றுதான் சீக்கிரம் திருமணம் செய்வித்தார்களோ..என்று கூட யோசித்திருக்கிறேன்.
போகட்டும்…சாகேத்துக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறது. அவன் எண்ணம் சீக்கிரம் நிறைவேறட்டும்!
டியூஷன் முடிந்து திருமகள் வீடு திரும்ப எத்தனிக்க, அப்போதுதான் அங்கே சென்டருக்கு வந்த சாகேத்தை நிமிர்ந்து பார்த்தாள் பெண். அவள் மனதில் ஏதேதோ எண்ணங்கள். அவற்றின் தாக்கம் அவளால் தாங்க முடியவில்லை. அதை கடக்க,கண்களில் அலட்சியம் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் .
அவளது பார்வைக்கு அர்த்தம் எடுக்கும் நிலையில் இல்லாத சாகேத் அவளிடம்,”இந்த புக்கை நரேன்கிட்ட குடுக்க முடியுமா” என்று இயல்பாக கேட்டான். அவனிடமிருந்து புத்தகம் கையில் வாங்குவதற்குள் அவளுக்கு நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. அது ஏன் என்று அவளால் உணர முடியவில்லை.
” ம்ம்..குடுக்கறேன் . நீங்க இப்போதானே எங்க வீட்டுலேந்து வந்தீங்க? அவன் கிட்ட நேரே குடுத்திருக்கலாமே …”அவள் கேள்வியில் கூட வேறெதோ தொனித்தது.
“இல்ல திரு..இங்க சென்டர்ல வச்சு படிச்சிட்டு,இங்கேயே விட்டுட்டு மறந்துட்டேன். உன்னை பார்க்கவும் உன்கிட்டேயே கொடுத்துட்டேன் ” நிதானமாக அவன் சொன்ன பதிலை மனதில் பதிய வைத்துக்கொண்டவள் “சரி,நா வரேன்” என்றுவிட்டு கிளம்பிவிட்டாள்.
அவர்கள் இருவரும் புரிந்து கொள்ளாததை அங்கேயே அமர்ந்திருந்த துரை புரிந்து கொண்டார். பெண்ணின் தடுமாற்றமும், முகம் காட்டிய பாவங்களும் துரைக்கு புரிந்தது. தன் மகனை அருகே கூப்பிட்டு,”இனிமே,நீ நரேனை பார்க்க அவங்க வீட்டுக்கு போகாதே..அதே மாதிரி இங்கே டியூஷன் சமயம் வராதே!” என்றுவிட்டார்.
‘ஏதாவது பிரச்சனைகள் வந்தால் ‘எனும் பயம் அவர் மனதில். இத்தனை வருஷங்களாக எந்த களங்கமும் இல்லாமல் வகுப்புகள் எடுத்து வருகிறார். பெயரை கெடுத்துக்கொள்ளும் எண்ணம் அவருக்கு இல்லை. சாகேத் இன்னும் அவளது பாவத்தை நல்ல வேளையாக புரிந்துகொள்ளவில்லை. அதற்குள் சரி செய்ய வேண்டும் என அவரது உள்ளுணர்வு எச்சரிக்கை விடுத்தது.
சாகேத் அப்பா அப்படி சொன்ன பிறகு நரேன் வீட்டுக்கு செல்வதில்லை. நரேன் தான் அநேக நேரம் இங்கே சாகேத் வீட்டுக்கோ,சென்டருக்கோ வருகிறான்.
இருவரும் கல்லூரி இறுதி ஆண்டு முடிப்பதற்கு முன்,அவர்களது நட்பு இறுகியது. நரேந்திரன் கல்லூரி முடித்து ,இண்டர் தேர்வுக்குப் பிறகு ,அவன் அப்பாவின் நண்பரின் அலுவலகத்தில் பயிற்சிக்காக சேர்ந்தான். அதே சமயம் சாகேத் மேலே எம் பி ஏ படிக்கவென சென்னையின் பிரபல கல்லூரியில் சேர்ந்துவிட்டான் .
அவன் அப்பாவுக்கு’ சாகேத் தனது பள்ளியை எடுத்து நடத்த வேண்டும் ‘என்ற எண்ணம் உண்டு. அவரது வற்புறுத்தலின் காரணமாகத்தான் அவன் மேலே படிக்க சேர்ந்ததே .அவர்களது பள்ளியில் இப்போது எட்டாம் வகுப்பு வரை வந்து விட்டது. இன்னும் பெரிய அளவில் பள்ளியை விரிவு செய்ய அவர் ஆசை கொண்டார். சாகேத் ,அவனது எண்ணம் நிச்சயம் கல்வி நிறுவனம் இல்லை. வங்கியிலோ,வேறு ஏதாவது தனியார் நிறுவனத்திலோ சேர விரும்பினான்.
இந்நிலையில், நரேந்திரனின் அப்பா புதியதாக பங்களா ஒன்றை வாங்க,அதன் கிருஹபிரவேச விழாவிற்கு அழைக்கப் பட்டான் சாகேத். அங்கே,அவன் கண்டது பருவத்தின் மொத்த அழகையும் தனக்குள் பதுக்கி வைத்திருந்த பேரழகு பெட்டகத்தை. அவளது வதனத்திலிருந்து அவனால் கண்களைப் பிரித்தெடுக்க முடியவில்லை. திருமகள்..அவள் பார்க்கவும் இப்போது திருமகள் பூமிக்கு பெயர்ந்து வந்து விட்டாளோ என்று எண்ணும் படிக்குதான் இருந்தாள் .அவள் மேனியில் தங்கத்தின் ஜொலிப்பா,இல்லை அவள் அணிந்து கொண்டிருக்கும் ஆபரணங்கள் அவளால் ஜொலிக்கிறதா என்ற பட்டிமண்டபம் சாகேத்தின் மனதில்.
அப்பட்டமான அவனது மயக்கம் கண்டு கர்வம் கொண்டாள் பாவை. நீண்டு வளர்ந்திருந்த அவளது கூந்தலில் முத்துக்களை கொண்டு அலங்காரம் செய்திருந்தாள் . வீட்டிலிருக்கும் பாட்டி அவள் கூந்தலில் பூ வைக்க வர, திரு அவர்களைத் தடுத்தாள் .”தலை அலங்காரம் மறைஞ்சிடும் பாட்டி ..பூ வேணாம்.”
“வீட்டில் சுபகாரியம் நடக்குது,பூ வேணான்னு சொல்லக் கூடாது திரு” என்று கண்டித்த பெரியவர்களின் குரல் அவள் காதுகளில் விழவில்லை. இப்போது பி சி ஏ படிக்கிறாள் திரு. என்ற நரேனின் வார்த்தைகளை உள் வாங்கிய சாகேத்தின் மனதில் லேசான நெருடல்.
‘ம்ஹும்..சரி உன் தங்கைக்கு பூ பிடிக்காதா..’என்று கேட்ட நண்பனை வித்திரயாசமாக பார்த்தவன் “பிடிக்கும், ஆனா இப்போவெல்லாம் கொஞ்சம்..ஹும்…நிறைய மாறிட்டா.” என்று வருத்தமாய் சொன்னான் நரேன். நரேன் மனதிலும் சில எண்ணங்கள் உண்டு.
சாகேத்தை தனக்கென ஒதுக்கப் பட்டிருக்கும் அறைக்குள் கூட்டி சென்றான் நரேன். இருவரும் வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். பேச்சு ஸ்வாரஸ்யத்தில்,” நம்ம திருமகளுக்கு கூட உன்ன மாதிரி மாப்பிள்ளை அமைஞ்சா பரவாயில்லடா ” என்று சொல்லிவிட்டான் நரேன்.
சட்டென்று மௌனமானான் சாகேத். பிறகு தொண்டையை லேசாக செருமி சீர்செய்து கொண்டவன்,நாம ரெண்டு குடும்பத்துக்கு நடுவுல நிறைய பொருளாதார வித்தியாசம் இருக்கு நரேன். இது மாதிரி வெளில பேசாத. நல்லா இருக்காது.” என்று அறிவுரை சொல்லிவிட்டு கிளம்பினான்.
இருவரும் சாப்பிடும் பொழுது நரேனுக்கு எதிரில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த திருமகளை பார்க்கும் பொழுது நரேன் சொன்ன வார்த்தைகள் மீண்டும் காதில் விழ ,லேசாக சிரித்துக்கொண்டான் சாகேத். அவளை பார்க்கும் ஆர்வம்,இப்போது வேறு வர்ணம் பூசிக்கொண்டது.
தான் சொன்ன விஷயத்தின் வீர்யம் புரியாமல், தனது நண்பனை வழியனுப்பி வைத்தான் நரேந்திரன். தன் எதிரில் அமர்ந்து ஒற்றைப் புருவம் தூக்கி என்னவென்று முக பாவனையில் விசாரித்த பெண் மானின் நினைவு சாகேத்தினுள் பிரளயத்தை உண்டு பண்ணியிருந்தது. அவள் திருமகள் இவன் மனதில் ஆசனம் இட்டு அமர்ந்து கொண்டாள் .
அவளை பெண் கேட்டு போக வேண்டுமெனில் தனது தகுதியை இன்னும் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான். அவளைத் தவிர அவனுக்கு வேறு யாருமே பெண்களாகத் தெரியவில்லை.
இறுதியாண்டு படிக்கும் பொழுது உடன் படிக்கும் ஜான்வி தனது காதலை சாகேத்திடம் சொல்ல அவன் பதில்?
error: Content is protected !!