Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கற்ப(னை)து சுகமானதே...

கற்ப(னை)து சுகமானதே… 4

நிரூபனின் எண்ணமும், இவளது மறுப்பின் காரணமாக அலுவலத்தில் அவன் நடந்து கொண்ட விதமும் திருமகளின் மனதில் கடுமையான தாக்கத்தை உண்டுபண்ணி விட்டது.

வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலமும் களை கட்ட செவ்வாய் தோஷ ஜாதகம் இவளது. அத்துடன் இன்னும் ஏதேதோ வரிசையாய் ஜோதிடர் அடுக்க, பரிகாரங்கள் செய்யவே அவளுக்கு நேரம் பற்றவில்லை.  தினமும் இரண்டு முறை கோவிலுக்கு செல்ல வேண்டி இருந்தது.

ஓயாமல் அவளது அம்மாவின் நச்சரிப்பு, நவக்கிரக பரிகாரத் தளங்கள் நோக்கி அம்மாவுடன் பிரயாணம்.ஒரே ஆறுதல் பஸ்ஸிலோ ரயிலிலோ அல்லாமல் இவர்களது காரில் சென்று வந்தார்கள்.

ஆறு மாதங்கள் பொறுத்து பார்த்தவள் ஒரு கட்டத்தில், வேலைக்கு போக முடிவெடுத்தால், வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.



Advertisement

நிறைய ஆண்கள் திருமணம் ஆகாமல் இருப்பதாலோ என்னவோ ஜாதகங்கள் வருவதில் குறைவு இல்லை. ஆனால் ஒன்று இவள் ஜாதகத்தோடு பொருந்தவில்லை.. பொருந்தும் ஜாதகங்கள் இவர்களது எதிர்பார்ப்புக்கு வரவில்லை.

இவள் கற்ற இடத்திலேயே நடன ஆசிரியையாக சேர்ந்து கொண்டாள்.

Advertisement

வீட்டின் மாடியில் பாட்டு வகுப்புகள் எடுத்தாள். மனம் கொஞ்சம் சமநிலைக்கு வந்தது.

Advertisement

அவள் யோசித்த ராஜகுமாரன் எப்போது வருவான் என்று அவளும், மகளுக்கு ஏற்ற மணாளனை தேடி அவள் பெற்றோரும் காத்திருப்பதில் நேரம் ஓடிக்கொண்டிருந்தது.  வரன் பார்க்கவென இரண்டு வருஷங்கள் பூர்த்தி ஆகிவிட்டது. இன்னும் தேடுதல் வேட்டை ஓயவில்லை.

நிரூபன் திரும்ப அமெரிக்கா சென்றுவிட்டான். லோங்பீச்சில் அவனது குடியிருப்பு. பெற்றோர் அவனுடன் வர மறுத்து விட்டார்கள். அதை பற்றிய பெரிய அக்கறை அவனுக்கு கிடையாது.

Advertisement

மனதளவில் அவன் அமெரிக்கவாசியாகி பல வருஷங்கள் ஆகிவிட்டது. ஆனால் பல விஷயங்களில் அவன் மாறவில்லை. மாறப்போவதும் இல்லை.

இங்கே பெங்களூருவில் நரேன் -சாரு ஜோடியின் வேலை எந்த தொய்வும் இல்லாமல் நன்றாக போய் கொண்டிருந்தது. அவர்களது காதலும் எவ்வித இடைஞ்சல்களையும் சந்திக்கவில்லை.

கவனிக்க வேண்டும் என்று மனதில் குறித்து வைத்திருந்த நரேனின் அப்பாவும் கூட பெண்ணை பற்றிய கவலைகளில் மகனை மறந்து போனார்.

பெண்ணை பற்றிய கவலைகளை அவர் தன் மகனிடமும் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஏனோ அவர் அதை செய்யவில்லை. ஒருவேளை ஈகோ தடுத்திருக்கலாம்.

அம்மாவிடம் பேசும்பொழுது அவள் நரேனிடம் விஷயங்களை சொல்லி ஆறுதல் தேடிக்கொண்டாள். அந்த பேச்சிலும் ‘ நாங்க பார்த்துப்போம் ‘என்ற பொருள் மறைந்திருக்க அடிவாங்கிய உணர்வில் நரேன் அமைதியாகி விட்டான்.

குடும்பத்திலிருந்து ஒதுக்கப் பட்ட உணர்வு அவன் மனம் முழுவதும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தது.

சாரு நரேந்திரனுடன் வேலை செய்ய ஆரம்பித்து கொஞ்ச நாட்களில் தனது காதல் விவகாரத்தை தன் பெற்றோரிடம் சொல்லிவிட்டாள் அதற்கான சுதந்திரம் அவளுக்கு வீட்டில் இருந்தது.

வீட்டிற்கு அழைத்து ஒருமுறையும், அலுவலகம், அவனது பிளாட், நண்பன் சாக்கேத் என நரேந்திரனைஅளவிட்டவருக்கு முழு திருப்தி. ஆனால், நரேனின் குடும்பம் அவருக்கு தைரியம் கொடுப்பதாக இல்லை.

இதை இருவரிடமும் அவர் சொல்லவும் தவறவில்லை. நரேந்திரனுக்கு மனம் துவண்டது.

“ அப்போ சாருவ எனக்கு கல்யாணம் செஞ்சு குடுக்க மாட்டிங்களா அங்கிள் “ என்றவனுக்கு என்ன பதில் சொல்வது என்று அவருக்கும் தெரியவில்லை.

‘நல்ல படிப்பு, குணம், மகளை காலம் முழுவதும் நன்றாகவே பார்த்துக்கொள்வான். அவள் மீது காதல்…இன்னும் என்ன வேணும்?

ஆனால், தான் இந்த திருமண உறவுக்கு பச்சை கொடி கட்டினால் நரேன் வீட்டில் நாம் பணத்திற்கு ஆசை பட்டதாக பேசவும் கூடும் ‘ என்றெல்லாம் குழம்பியவர்,

“ நா சொல்றத நிதானமா ரெண்டு பேரும் கேளுங்க.. நரேன், உங்க வீட்டுல ஒதுக்கிட்டா நாங்களும் சம்மதம் சொல்றோம். இல்லேன்னா.. சாரி, எங்க பதில் நோ தான் என்றுவிட்டார்.

நரேனுக்கு வேறு வழி இல்லை. பல வருஷங்கள் கழித்து சென்னை வீட்டுக்கு வந்தான். அவன் வந்திருப்பதே அதிசயம். அன்று இரவு உணவுக்கு பிறகு சற்றும் தாமதிக்க விரும்பாதாவனாக  தனது காதல், சாருவின் பெற்றோர் சொன்னது எல்லாவற்றையும் சொன்னவன் நீங்க மறுக்க காரணம் இல்லை. மறுத்தால் நா வேற யோசிக்க வேண்டி வரலாம் என்றவிட்டு தன் அறையில் புகுந்து கொண்டான். அவன் அம்மாவுக்கு அதிர்ச்சி என்றால், கவனிக்காமல் விட்டோமே.. என்று வருத்தம் அவன் அப்பாவுக்கு.

மறுநாள் காலை அந்த வீடு இறுக்கத்துடன் விடிந்தது.

நரேன் அன்று மதியம் கிளம்ப தயாராகி கொண்டிருந்தான்.

அவன் அறைக்கு வந்த அவன் அம்மா, “ எங்களுக்கு அவளையும் அவளோட பேமிலியயும் மீட் பண்ணனும். வரச் சொல்லு அதுவும் நெக்ஸ்ட் வீக் எண்ட்ல “ என்று முடித்து கொண்டாள்.

நரேன் தன் காரில் மீண்டும் பெங்களூரு கிளம்பிவிட்டான்.

அவன் வீட்டில் யாரும் ‘சாப்பிட்டு போ’  என்று சொல்லவில்லை. அவனும் நிற்கவில்லை.

நேரே சாக்கேத் வீட்டுக்கு சென்றவன் ராஜத்திடம், “ ம்மா.. பசிக்குது. சாப்பாடு போடுங்க “ என்று டைனிங் டேபிளில் தட்டுடன் அமர்ந்து விட்டான். ராஜமோ  துரையோ அவனிடம் என்னவென்று கேட்டு துருவவில்லை. ராஜம் போட்ட சாப்பாட்டை சாப்பிட்டவன் கொஞ்சநேரம் சாக்கேத்தின் அறையில் தூங்கினான். மதியம் காபி குடித்துவிட்டுத்தான் கிளம்பினான்.

நரேன் வீட்டில் அவன் சாகேத் வீட்டுக்கு சென்றதே தெரியாது.

குடும்பம் என்னும் அமைப்பு விசித்திரமான ஒன்று  எவ்வளவு நெருடல்கள் இருந்தாலும் ‘அனுசரித்து போகணும்..’எனும் என்ற கோட்பாட்டைக் கொண்டது.

வெறும் பணம், சமூக அந்தஸ்து என்றெல்லாம் யோசித்து குடும்பம் நடத்த முடிவு செய்தால் அந்த அமைப்பு வலிமையானதாக இருக்குமோ?

சாகேத் வீட்டிலிருந்து நேரே பெங்களூரு சென்ற நரேன் தன் பிளாட்டுக்குள் சென்றவுடன் தான் அவனுக்கு நிம்மதியான மூச்சே எடுத்தது.

சூடான உணவை தயார் செய்து “ குளிச்சிட்டு வா மச்சான்.. சாப்பிடலாம் “ என்று ஆதுரத்துடன் அழைத்த நண்பனிடம் ,

 “இப்போதாண்டா, என்னோட வீட்ல இருக்குற பீல் வருது “ என்றுவிட்டு தனது அறைக்குள் நுழைந்த நரேனை யோசனையாக பார்த்தான் சாக்கேத்.

அதற்குள் ராஜம் சக்கேதுக்கு அழைத்தவர், மதியம் நரேன் வந்து சென்ற விவரங்களை சொல்லிவிட்டு, நரேன் பத்திரமாக வந்து சேர்ந்தனா ‘ என்பதையும் ஊர்ஜிதம் செய்து கொண்டார்.

குளித்து விட்டு நரேன் வந்தவுடன் அவனுக்கும் பரிமாறி தானும் சாப்பிட்டு முடித்த சாகேத், சென்னையில் என்ன நடந்தது என்று கேட்கவில்லை. அவனுக்கு ஓரளவு என்ன நடந்திருக்கும் என்று ஊகம் உண்டு.

நரேன் தானாகவே சொன்னான், “  அவங்களுக்கு சாருவயும் அவங்க வீட்டு ஆளுங்களையும் மீட் பண்ணணுமாம். அவங்கள நெஸ்ட் வீக்எண்ட் சென்னை கூட்டிட்டு வர சொல்லி பெரிய இடத்து உத்தரவு “. இதை சொல்லும் பொழுது நிச்சயம் கசப்பு மிகுந்து இருந்ததை சாகேத் உணர்ந்து கொண்டான்  ஆனால் பதில் சொல்லவில்லை.

கடுப்பான நரேன் நண்பனிடம், “ஏதாவது சொல்லித்தான் தொலையெண்டா “ என்று கத்த  நிதானமாக “ உன் வீட்டு விஷயம் நா பேச கூடாது. நீதான் முடிவு பண்ணனும் என்றுவிட்டான்.

‘தான் ஏதாவது சொல்ல முயற்சி செய்து, அது வேறு விதமாய் முடிந்தால் ‘ என்று பயம் அவன் மனதில்.

நரேனுக்கு  உடனே சாருவை பார்க்கவேண்டும் என்று தோன்றவே, வீடியோ காலில் அழைத்தான்.

அவள் எடுக்கவில்லை. நரேன் வந்திருக்க கூடும் என்று அவளுக்கு தோன்றவில்லை. மொபைல் போனை அறையில் வைத்துவிட்டு குடும்பத்துடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். எப்போதும் அவர்கள் நால்வரும் ஞாயிறு இரவு ஒன்றாக அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டும், கேரம் போர்டு விளையாடுவதும் வழக்கம் தான். இதை நரேனிடம் கூட சாரு சொல்லியிருக்கிறாள்.

மணி இரவு பத்து என்றது. கையாலாகா கோவம் நரேனுக்குள். தூக்கம் வராமல் தவித்தவன் தனது லேப்டாப் எடுத்து வேலையை பார்க்க தொடங்கினான். முதலில் கஷ்டமாக இருந்தது. கவனச் சிதறல். கொஞ்ச நேரத்தில் வேலை அவனை இழுத்து கொண்டது.

மறுநாள் அலுவலகம் வந்து சேர்ந்த சாருவிடம் நரேன் முகம் கொடுத்தும் பேசவில்லை. சாரு பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் தன் வேலையை மட்டும் பார்த்தாள்.

மனதுக்குள் புழுங்கினான் நரேன். தாங்க முடியாமல் “ நா கோவமா இருக்கேன். ஏன்னு கேக்க உனக்குத் தோணலையா..” என்றான்.

“ இங்கே பாரு நரேன் எதுவா இருந்தாலும் நேரே சொல்லு. கேக்கறேன். கோவம் வந்தா, மௌனம் நல்லது. தேவை இல்லாம வார்த்தை விட்டா திரும்ப எடுக்க முடியுமா சொல்லு..  அனாவசியமா சண்டை தான் வரும் “.

 பெண் சொன்ன பதிலில் நரேன் அமைதியாகி விட்டான். மதியம் வரை அப்படியே இருந்தவன் மெல்ல,  லஞ்ச்சுக்கு போறேன். நீயம் வா “ என்று அழைத்தான்.

அவளும் கிளம்பிவிட்டாள். அவனுக்கு ஏதோ பேச வேண்டும் என்று அவளுக்கு தெரியுமே!

ஹோட்டலில் உணவை சாப்பிடாமல் அளந்து கொண்டிருந்த நரேனை வித்தியாசமாய் பார்த்தாள் சாரு.

இது போல் அமைதி இல்லாமல் அவன் இருந்தது கிடையாது.  அவளே கேட்டாள்.

 சென்னை போனியே, என்னாச்சு? “

“ப்ச்.. உங்க வீட்டுல பேசி உன்னையும் உங்க பேரண்ட்ஸ்சையும் கூட்டிட்டு வர சொல்லி இருக்காங்க. “

நரேன் சொன்னதை கேட்டவள் “ சரி, அதுக்கு ஏன் இப்போ இஞ்சி தின்ன ஏதோ மாதிரி முகத்தை வச்சிருக்க. என்னோட அப்பாகிட்ட பேசு “ என்றாள்.

“ ம்ஹும்.. என்னோட வீட்டு ஆளுங்க எப்படின்னு எனக்கு தெரியும். ஒரு வேளை அவங்கள மீட் பண்ண பிறகு உங்க வீட்டுல நோ சொல்லிட்டா… பயமா இருக்கு. “

அவன் எண்ணம் புரிந்தவள் லேசாக சிரித்துவிட்டு, “ எங்கப்பா நிறைய பார்த்தவர். சீக்கிரம் கோவம் வராது. அண்ட் நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன்னு அவருக்கு தெரியும் ஸோ நீ ஒர்ரி பண்ணிக்காத.. “ என்று ஆறுதல் சொன்னாள். ஆனால், அவள் மனம் சமாதானம் அடைவதாக இல்லை.

மாலை சாருவின் அப்பாவுக்கு அழைத்து விஷயம் சொன்னவன் தன் பெற்றோரை பற்றியும் சொல்ல ஆரம்பிக்க,

“ என்ன இருந்தாலும் உங்க பேரண்ட்ஸ். நா மூணாவது ஆளு. என்கிட்ட குறை சொல்லாதீங்க. நிலைமைக்கு தகுந்தமாதிரி எல்லாம் நல்ல விதமாக நடக்கும். பிளான் என்னனு சாருகிட்ட சொல்லி விடுங்க. தயாராகுறோம் என்று வைத்துவிட்டார்.

அவரது அணுகுமுறை நரேனுக்குள் அவர் மீதான மரியாதையை அதிகரித்தது.

சனிக்கிழமை காலை சாக்கேத் தன் சென்னை வீட்டுக்கு கிளம்பிவிட்டான். நரேன் தங்களுடன் சென்னை வர அழைத்து பார்த்தான். அதற்கு சாக்கேத், “ இல்லடா.. அப்பாம்மாவோட டைம் ஸ்பென்ட் பண்ணனும் “ என்றுவிட்டான்.

ஞாயிறு காலை நரேன் தனது காரிலும், சாருவின் குடும்பம் அவர்களது காரிலுமாக சென்னை வந்தது. நரேன் நேராக வீட்டுக்கு செல்ல, சாரு குடும்பம் சாக்கேத் வீட்டில் சென்று இறங்கியது. இரவு உணவுக்கு நரேன் வீட்டில் அழைத்து இருந்தார்கள். கொஞ்சம் அவர்கள் வீட்டுக்கு செல்லவென துரையும், சாருவின் அப்பாவும் பழங்கள் போன்றவற்றை வாங்கி வந்தார்கள். இருவருக்குள் நல்ல நட்பு உண்டானது.

நடப்பவற்றை பார்த்த ராஜத்துக்கும் தன் மகனுக்கு சீக்கிரம் பெண் பார்க்க வேணும் என்று தோன்றியது. அதை வாய்விட்டு சொல்லவும் செய்தாள். சாக்கேத் மனதில் இனம் புரியாது உணர்வு.. அது எவ்விதம் என்று அவனால் தொடர முடியவில்லை.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!