திருமகளின் நிலை இவ்வளவு மோசமாக இருக்கும் என்று அவளது குடும்பத்தில் யாரும் நினைத்ததில்லை. அவளுக்கு இரட்டை குழந்தைகள் இருப்பதை கூட அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் வீட்டில் தங்கவென்று சென்றிருந்த தூரத்து உறவினர் மூலமாகத்தான் தெரிந்து கொண்டார்கள். அப்போதும் அவள் மீதும் மாப்பிளை மீதும் ஆற்றாமை தானே தவிர கோவமென்று எதுவும் இல்லை.
Advertisement
பல வருஷங்களாக அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை எனும் பொழுது இன்னுமே ‘சுருக்கென வலி’ . எப்படியோ ‘நாம் பார்த்து முடித்துவைத்த திருமணம் தானே!மகள் குடியும் குடித்தனமுமாக நல்லபடியாக வாழ்ந்தார் சரி என்று விட்டிருந்தார்கள்.
இப்போது பார்த்தால் ‘திருவின் நிலையே முற்றிலும் வேறாக இருந்திருக்கிறதே !’என்று மனதுக்குள் மருகளும் ,குற்ற உணர்ச்சியும் மிக ஆளுக்கொரு மூலையில முடங்கி உட்கார்ந்திருந்தார்கள். சாம்பசிவம் முற்றிலும் குறுகிப்போனார். பொதுவாகவே மகள் மீது இருக்கும் தகப்பனின் பாசம்,அதிலும் ஒற்றை மகள். நரேந்திரனை விட அவள் மீதுதான் பிடித்தமும்,பிடிப்பும் அதிகம்.
Advertisement
Advertisement
மகளுக்காக என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துவிட்டு,இதோ இங்கே பிடுங்கி எறியப்பட்ட கொடிபோல படுத்திருக்கும் திருவை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு,லேசாக மார்புப் பகுதியில் வலிப்பதுபோல் உணர்ந்தவர், நெஞ்சை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார். அவரை கவனிக்கும் நிலையில் அவர்கள் வீட்டில் யாருமில்லை. எல்லோருமே அவரவர் எண்ணங்களுக்குள் மூழ்கி விட்டிருந்தனர்.
திருவின் விஷயம் நரேந்திரன் மூலமாக தெரிந்து கொண்ட சாகேத் வேகமாக மருத்துவமனை வந்தடையும் பொழுது கண்டது தனது இடது பக்க மார்பை பிடித்துக்கொண்டு சாம்பசிவம் உட்கார்ந்திருப்பதையும் அவரது முகம் வழக்கத்துக்கு மாறாக வியர்த்திருப்பதையும் தான். திருவை மறந்தவனாக,சாம்பசிவத்தை அங்கிருந்த செவிலியரை அழைத்து அவன் பார்க்க சொல்லவும்தான் கண்மணியும் நரேந்திரனும் கவனித்தார்கள். இவர்கள் மூவரையும் மருத்துவ மனையில் விட்டுவிட்டு சாரு குழந்தையை கவனிக்க வீட்டுக்கு சென்றிருந்தாள் .
Advertisement
கண்மணிக்கு சாம்பசிவத்தின் நிலைமையை பார்த்து மயக்கம் வரும்போல் இருந்தது.ஏற்கனவே மகளின் நிலையில் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தவளுக்கு இதென்ன..’துன்பம் தனித்து வராதோ’ என்று இருந்தது. சாம்பசிவத்தை அதே மருத்துவமனையில் இருதய சிகிச்சை அவசர பிரிவில் சேர்க்கவேண்டிய நிர்பந்தம். மொத்தத்தில் அவர்கள் குடும்பமே அந்த நேரத்தில் ஸ்தம்பித்துதான் போய்விட்டது.
பள்ளியிலிருந்து சாகேத்துக்கு அலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தது. அவன் அவசர வேலையாக போய்விட்டு இரண்டு மணி நேரத்தில் வந்துவிடுவதாக தெரிவித்துவிட்டு வந்தவன் நான்கு மணிநேரமாக மருத்துவ மனையில் அமர்ந்திருக்கிறான். வேறு வழி இல்லாமல் ,தனது அப்பா துரையை பள்ளிக்கு செல்ல சொல்லிவிட்டு அங்கேயே அமர்ந்து விட்டான். நரேந்திரனுக்கு இப்போது கண்டிப்பாக சாய்ந்துகொள்ள ஆதரவான தோள் தேவை.கண்மணியை கவனித்துக்கொள்ளவும் ,அவருக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக்கொள்வதும் இப்போதைக்கு ரொம்பவும் அவசியம். நண்பனாக தான் அங்கிருப்பதை சாகேத் தனக்கு தானே உறுதிசெய்துகொண்டான்.
மாலையில் கொஞ்சம் நேரம் கிடைக்கும் பொழுது துரைக்கும் இங்கே நடந்து கொண்டிருப்பதை மேலோட்டமாக சொன்னவன், “இன்னும் இங்கே நிலைமை சரியா இல்லைப்பா. எப்போ கண்ட்ரோலுக்கு வரும்னும் புரியல. நரேன் ரொம்பவே உடைஞ்சு போய் இருக்கான். திருவை நினைச்சு ரொம்ப பாவமா இருக்கு. இன்னும் கண் முழிக்கல.நா இப்போ இங்கே இருக்கணும்ப்பா..இந்த வாரம் நீங்க பார்த்துக்க முடியுமா ?” தயங்கி தான் அவன் கேட்டது.
“ப்ச்..பத்ரி, இதுக்கு ஏன் இவ்வ்ளவு யோசிக்கறே.. நா பார்த்துக்கறேன். கொஞ்சம் நிலைமை சீரானதும் சொல்லு.நானும் அம்மாவும் பாக்க வரோம்”என்று வைத்துவிட்டார். சாரு அவளது பெற்றவர்களை இங்கே அழைத்துவிட்டாள் .வீட்டை பார்ப்பது,குழந்தைகள்,மருத்துவமனை இத்துடன் சேர்த்து அலுவலகம் என்று அவளுக்கே சுழலில் சிக்கிய உணர்வு. ஏற்கனவே மூன்று மாத கருவை வயிற்றில் சுமந்திருப்பவளுக்கு இந்த அதிகப்படியான விஷயங்களை சமாளிக்க முடியவில்லை.
மூன்று நாட்கள் போராட்டத்தின் முடிவில் திருமகள் கண்விழித்தாள் . கண்களை சுற்றி கருவளையம் வந்திருந்தது. ஐந்து வயது கூடியது போல் தோற்றம். விழிகளில் பார்வை இருக்கிறது.உயிர் இல்லை,உணர்வுகள் வற்றிப்போய் வெறும் கூடாகிப் போயிருந்தாள் . உதடுகள் வெடித்து ரத்தக்கசிவுடன் வெள்ளை பூத்திருந்தது.
வீட்டினர் மாறி மாறிப்போய் அவளை பார்த்துவிட்டு வந்தார்கள். அவள் யாருடனும் எதுவும் பேச முயற்சி செய்யவில்லை.அப்பா எங்கே என்று கேட்கவில்லை. சுற்றியிருப்பவர்களின் கலங்கிய கண்களை பார்த்தவளுக்கு மனதில் ஒன்றுமே தோன்றவில்லை. தான் ஏன் இன்னமும் உயிருடன் இருக்கிறோம் என்று வெறுத்துப் போயிருந்தாள் .
சாம்பசிவம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தான். திருமகளுடன் சாம்பசிவதையும் வீட்டுக்கு கூட்டிச் சென்றார்கள். நரேந்திரன் தனது காரில் கண்மணி,சாம்பசிவத்தையும், சாகேத் தனது காரில் சாரு ,திருமகள் இருவரையும் கூட்டிக்கொண்டு சென்றான்.
திருவின் சூட்கேசில் வெறும் நான்கு செட் உடுப்புகள் மட்டும்தான் இருந்தது. கூடவே அவளது பாஸ்ப்போட் மற்றும் இதர முக்கிய காகிதங்கள்.கூடவே விவாகரத்து செய்வதற்காக கையெழுத்திட்ட விண்ணப்பத்தின் நகல். திருவின் பெட்டியை பார்த்த நரேந்திரன் அதிர்ந்து தான் போனான்.
நங்கநல்லூரில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டு விலாசமிட்டு திருமகளுக்கு விவாகரத்து வழக்குக்கான அழைப்பு வந்திருந்தது. விவகாரத்திற்க்கான காரணத்தை குறிப்பிட்டிருந்த நிவாஸ் , குழந்தைகளை தனது கஸ்டடியில் விடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தான். நரேந்திரனால் எதையும் நம்ப முடியவில்லை. திருமகளோ எதற்கும் வாயை திறக்கவில்லை. எப்போதும் விட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
குழந்தைகள் தனக்கு வேண்டும் என்றெல்லாம் அவள் போராடவில்லை. வழக்கும் நிவாஸுக்கு சாதகமாகவே முடிந்தது. கண்மூடி திறப்பதற்குள் எல்லாமே நிகழ்ந்துவிட்டது.நிவாஸ், நேராகவே வந்து திருமகளின் நகைகளை ஒப்படைத்துவிட்டான் . அவனுக்கு அதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை. அவனுடன் நிரூபனும் வந்திருந்தான்.
எதேச்சையாக தனது பெற்றவர்களுடன் சாம்பசிவத்தை பார்க்கவென வந்திருந்த சாகேத்துக்கு நிரூபனையும் நிவாஸையும் பார்க்கும்பொழுது ஏதோ வித்தியாசமாக படவே ,அவர்களை இன்னமும் உற்றுப் பார்கலானான். குழந்தைகளை நிவாஸ் அழைத்துக்கொண்டு வரவில்லை. லாக்கரிலிருந்து நேரே வருவதாக சொன்னவன் அவர்கள் வீட்டில் அமரவும் இல்லை.
திருவுக்கு அவளது பெற்றோர் வங்கி கொடுத்திருந்த நகைகளுடன் தான் அவளுக்கு வாங்கிக் கொடுத்த நகைகளையும் சேர்த்து கொடுத்துவிட்டான். அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அங்கு யாருக்குமே புரியவில்லை. அதோடு திருவின் பெயரில் ஐம்பது லகரங்கள் வங்கியில் போட்ட ரசீதும் சேர்த்துக் கொடுத்தான்.”உங்க பொண்ணு அங்கே இருக்கும்பொழுது வேலைக்கு போய் சம்பாரிச்ச பணம்.அது எனக்கு தேவையில்லை. அவளோட வருங்காலத்தை அமைச்சுக்க என் சார்பா முப்பது லட்சமும் அவளோடது இருபது லட்சமும் என்று அவன் கொடுத்த பொழுது வீட்டினர் அயர்ந்து போனார்கள்.
திரு தனது அறையை விட்டு வெளியே வரவே இல்லை. எதையும் யோசிக்கும் நிலையில்கூட அவள் இல்லை.திருமகள் சார்பாக ஜீவனாம்சம் ஏதும் கோரியிருக்கவில்லை.ஆனாலும் நிவாஸ் தானே கொண்டுவந்து இவ்வளவு பணத்தை கொடுக்கிறான் என்றால்? சாகேத்தின் மனம் வேகமாக யோசித்தது. மனதுக்குள் நிவாஸ் திரும்ப செல்லும் முன் என்ன நடக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டான்.
சாம்பசிவமும் கண்மணியும் கண்கள் கலங்கியபடிக்கே வீட்டில் இருந்தார்கள். மொத்த வீடும் களை இழந்து காணப்பட,சாகேத்துக்கும் அவன் பெற்றவர்களுக்கும் மனமே தாங்கவில்லை. ராஜமும்,துரையும் திருமகளின் அறைக்கு சென்று அவளை பார்த்துவிட்டு வந்தார்கள் . துரைக்கு சிறுவயது திருமகள் நினைவுக்கு வர,அவரால் இவற்றை ஜீரணம் செய்துகொள்ளவே முடியவில்லை.மனதளவில் அடிவாங்கி சிறகுகள் வெட்டப்பட்டிருக்கும் இந்த பெண்ணின் வாழ்க்கை இனி எப்படி என்று பெரியவர்கள் இருவருக்கும் தோன்றியது.
திருமகளோ,இவர்கள் வந்திருப்பதையும் உணராமல்,சிலையென அமர்ந்திருந்தாள். கண்ணீர்கூட வற்றி விட்டிருந்தது. ராஜம் மனதில்,தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து அவனும் வாழவில்லை,இதோ இந்தப்பெண்ணும் இப்படி..யாருக்கு என்ன தவறு செய்தோம் கடவுளே!எண்டு யோசித்துக்கொண்டிருந்தார்.
சாகேத் தனது பெற்றவர்களை வீட்டில் விட்டுவிட்டு,நரேந்திரனுக்கு முதலில் அழைத்தான்.” டேய் நரேன், நாளைக்கு காலில ஒன்பது மணிக்கு ****ஹோட்டலுக்கு வந்திரு,ரூம் போட்டிருக்கேன்.ரொம்ப முக்கியமான விஷயம்.வீட்டுல யாருக்கும் ஒண்ணும் சொல்ல வேணாம்..என்றுவிட்டான்.
மறுநாள்,சொன்னபடிக்கே வந்து சேர்ந்த நண்பனை வரவேற்று,தங்களுக்கு தெரிந்த துப்பறிவாளரை நரேனுக்கு அறிமுகம் செய்தான் சாகேத். அத்துடன் இருவருக்கும் பொதுவாக தனக்கு இருக்கும் சந்தேகத்தை சொல்லி இதை கண்டுபிடித்தாக வேணும் என்றான். தனது நண்பனை விழி விரித்து பார்த்தான் நரேந்திரன்.
இதை பற்றியெல்லாம் நரேந்திரன் யோசித்தது இல்லை. ஒருவாரத்தில் சொல்வதாக துப்பறியும் நபர் விடைபெற்று செல்ல, சாகேத் நரேனிடம்,”அடுத்து என்னன்னு யோசியுங்க நரேன். திருவ இப்படியே விட்டுட முடியாது. ஒரு சைக்யார்டிஸ்ட் ஒபினியன் எடுங்க.அவளை மீட்டு கொண்டு வந்தாத்தானே அவளுக்கு திரும்ப வாழ்க்கையை சமாளிக்க தயார் செய்ய முடியும்? உனக்கும் குடும்பம் ஆகிடுச்சு.உன்னோட பேரண்ட்ஸ் நிலைமை உனக்கு தெரியும் தானே?” என்றான்.
நண்பன் சொல்வதை ஆமோதிப்பதாக தலையாட்டிய நரேந்திரன் அங்கிருந்து கிளம்பினான். சாகேத்தும் பள்ளிக்கு கிளம்பி சென்றான். சொன்னபடிக்கே திருவை மன நல மருத்துவரிடம் அழைத்து சென்று அவளுக்கான மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தார்கள் நரேனும் சாருவும். சாரு தனது நாத்தனாரிடம் முகம் திருப்பவே இல்லை. திருமகளின் நடத்தை கொடுத்த வலியை விட இப்போது திரு அனுபவிக்கும் வலி பெரியது என்பது சாருவுக்கு நன்றாகவே தெரியும். அதற்கான மன முதிர்ச்சி அவளிடம் இருக்கிறது.
சில சமயங்களில் நரேந்திரனோ,சாருவோ கூட்டி செல்வார்கள்.சில நேரம் கண்மணியோ ,சாம்பசிவமோ அழைத்து செல்வார்கள். ஆரம்ப நாட்களில் வாரம் ஒருமுறை சென்று வந்தவள்,பிறகு பத்து நாட்களுக்கு ஒருமுறை செண்டு வந்தாள். நிதானமான முன்னேற்றம் அவளிடம். மருத்துவர் அறிவுறுத்தியிருந்த மருந்துகளுடன்,உடற்பயிற்சி செய்தல்,அதிகநேரம் நடைப்பயிற்சி என்று வெகு நிதானமாக தன்னை நிதானம் செய்துகொண்டாள் .
தமது துப்பறிவாளர் கொடுத்த அறிக்கையை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான் சாகேத்.அவனால் நம்ப முடியவில்லை.நிரூபன் திருமகளுடன் லிவ் இன் பற்றி அவளின் திருமணத்திற்கு முன்னால் கேட்டதும் அந்த அறிக்கையில் இருந்தது,இப்போது நிவாஸ்-நிரூபன் இருவருக்குமான உறவு பற்றி எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை. எதையும் தெரிந்து கொள்ள முடியாமல் சாகேத்துக்கு கோவம் தலைக்கு ஏறியது. தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் .
மதியத்திற்கு மேல் அவனுக்கு கல்வி அமைச்சருடன் சந்திப்பு ஏற்பாடாகி இருந்தது. அவருடன் பேச வேண்டியவற்றை மீண்டும் சரிபார்ப்பதில் அவனது கவனம் சென்றது. நடுவில் ‘திருமகள் நன்றாக பாடுவாளே ‘ என்று சம்மந்தமே இல்லாமல் ஞாபகம் வந்தது. அதை ஒதுக்கிவிட்டு வேலையில் ஒன்றினான் .
திரு இப்போதெல்லாம் அநேக நேரம் தனது அண்ணன் மகனுடன் செலவழிக்க தொடங்கியிருந்தாள்.சாருவும் நரேந்திரனும் தூரத்திலிருந்து கவனித்துக்கொள்வதுடன் சரி.திரு குழந்தையை வைத்துக்கொண்டிருந்தால் யாரும் போய் குழந்தையை கேட்க மாட்டார்கள். அவனுக்கு குளித்து விட்டு,ஆடை மாட்டி,உணவு ஊட்டி என்று திரு தன் குழந்தை போலவே பாவித்து செய்தாள் .
நரேன் இவற்றை சாகேத்திடம் பகிர்ந்து கொண்டபொழுது,:அவல இப்படியேவும் விட முடியாது.மாண்டசரி ட்ரைனிங் நம்ம ஸ்கூல்ல இருக்கு.அவளை சேர்த்துவிடு . அங்கேயே குழந்தைகள பார்த்துக்கொள்ளட்டும். மேல என்னனு போகப்போக முடிவு பண்ணிக்கலாம்”என்றான் சாகேத்.
அதன்படிக்கு அடுத்த வார திங்கள் கிழமை அன்று திரு சாகேத்தின் பள்ளியில் பயிற்சியில் சேர்ந்தாள். ஆனால் இதுவரை இந்த பள்ளியை பற்றியோ,அதன் தலைவர் யார் என்றோ அவள் யோசிக்கவில்லை.அவளை பற்றியே யோசிக்கும் ஒருவன், அவனை முற்றிலுமாக மறந்துவிட்டு சற்றே தொலைவில் அவள். விதியென்று சொல்வதை தவிர வேறு வார்த்தைகள் உண்டோ…