Skip to content
Post Views: 2,082
கற்பனை 31
சாகேத்தின் வார்தைகள் கொடுத்த தாக்கத்தில் இரவு உணவைக்கூட மறுத்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான் நரேந்திரன். அவனது மனதுக்குள் இப்போது ஆயிரம் கேள்விகள். திருமணம் ‘எப்படியோ திருமகளை சம்மதிக்க வைத்து முடித்துவிட்டாலும்,அதற்குப் பின்,அவள் சாகேத்தை ஏற்றுக்கொள்ளாமல் முரண்டு பிடித்தால்,இருவரது வாழ்க்கையும் பிரச்சனை ஆகிவிடுமே! என்று பயம் பிடித்துக்கொண்டது.
Advertisement
ஏற்கனவே தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சிணுங்க ,தனது அறைக்குள் நுழைந்தால் சாரு . கணவன் அமர்ந்திருக்கும் நிலையை பார்த்தவளுக்கு ‘ஐயோ; என்று இருந்தது. எல்லாம் நன்றாகிவிடும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது தாழி உடைந்த கதையாகிவிடக் கூடாதே!என்று மனம் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய, வெளியே காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாகவே உள்ளே நுழைந்தவள் கையில் அவன் வேண்டாமென்று சொல்லிவிட்டு வந்த இரவு உணவு .
மனைவியை சலிப்புடன் பார்த்தவன்,”இப்போ எதுக்கு இதே தூக்கிட்டு வந்தே..சாப்புடுற இண்டேரெஸ்ட் சுத்தமா இல்ல..”என்றவாறே தட்டை வாங்கிக்கொண்டான். இட்லிக்கள் சாம்பாரில் குளித்துக்கொண்டிருந்தது.மேலே கொஞ்சமாய் வெங்காயம் அரிந்து போடப்பட்டிருக்க,அவனது சுவை நரம்புகள் விழித்துக்கொண்டன .
Advertisement
Advertisement
‘என்னை எப்படி வழிக்கு கொண்டுவரணும்னு யோசிச்சுட்டே இருப்பா போல’ என்று செல்லமாய் மனதில் கடிந்து கொண்டான். அவளது காதலின் ஆழம் இன்னமும் கூடிக்கொண்டே செல்கிறதே தவிர குறையவில்லை. அவன் அம்மா கூட சாப்பிட்டு போ என்று வற்புறுத்தி சொல்வார்கள்தான்.அதில் அக்கறையும் பாசமும் என்றால்,இதில் காதலும் நேசமும். சாப்பிட்டு அவன் முடிக்கவும் சாரு பேச்சை தொடங்கினாள். குழந்தை லேசாக அசைந்து படுத்து தூங்கிவிட்டான்.
“ம்ம்..அவங்க வீட்டுல எல்லாருக்கும் ஓகே தான்.இன்னமும் சொல்லனும்னா..நம்ம திருவை பத்தி அவங்க தப்பாவும் பேசல,நம்மையும் தப்பா எடுக்கல. ஆனா,கல்யாணம் திருமகளோட முழு சம்மதம் கொண்டு நடக்கணும்.எங்க பையன் திரும்பவும் கஷ்டப் பட எங்களுக்கு இஷ்டம் இல்லைனு சொல்லிட்டாங்க. சாகேத்துக்கும் கல்யாணம்னு ஆகிடுச்சுன்னா,எல்லா விதத்துலயும் என்னோட மனைவியா இருக்கணும்.அப்படி அவளுக்கு இஷ்டம் இல்லன்னா..இப்படியே இருந்திருவேன்னு சொல்லிட்டேன்”
Advertisement
கணவனின் பேச்சை உள்வாங்கியவளுக்கு மனம் குழம்பியது. திருவை முழு மனதுடன் திருமணத்திற்கு எப்படி ஒப்புக்கொள்ள வைப்பது என்று யோசிக்கத் தொடங்கினாள். ” சரி ,நீங்க நாளைக்கே வீட்டுல எல்லாரையும் கூப்பிட்டு வச்சு அவகிட்டே இதை பத்தி பேசிடுங்க.எவ்வளவு வருஷம் இப்படியே அவளால இருந்துற முடியும். ஹான்..நீங்க பேசும்போது நா நம்ம ரூமிலேயே பசங்கள பார்த்துக்கிட்டு இருக்கேன்” என்று சொன்ன சாரு , தூங்குவதற்கு ஆயத்தமானாள் .
நரேந்திரனுக்குத்தான் ‘நாளைக்கே பேசணுமா’ என்று கண்ணை கட்டியது .தூக்கமும் அவனுக்கு டாட்டா சொல்லிவிட்டு சென்றுவிட,காளி விடிவதற்க்காக காத்திருந்தான். எதுவும் மாறவில்லை.அவரவர் தங்கள் வேலைகளை முடித்துவிட்டு அலுவலகம் கிளம்பிவிட்டார்கள்.திருமகளும் கூட கிளம்பிவிட்டாள். மனைவியின் கண்ணசைவில் நரேன்தான்,”அப்பா-தங்கை இருவருக்கும் பொதுவாக எனக்கு கொஞ்சம் பேசணும். ரெண்டுபேரும் பி மதியம் ரெண்டு மணிக்கு மேல வீட்டுல இருக்கிறா மாதிரி பார்த்துக்கோங்க” என்றுவிட்டு தனது கிளையண்ட் அலுவலகம் நோக்கி புறப்பட்டான்.
திருவுக்கு எந்த யோசனையும் இல்லை. சாம்பசிவம் விஷயம் புரிதவராக ‘சரி’என்றுவிட்டு கிளம்பினார். கண்மணி கோவிலுக்கு கிளம்பிவிட்டார். இப்போதெல்லாம் காலை பதினோரு மணிவரை அருகில் இருக்கும் எல்லா கோவில்களுக்கும் சென்று தங்கள் மகளின் வாழ்க்கை சீர்பட வேண்டுதல்கள் வைப்பதை வழக்கமாக்கி கொண்டார். இப்போது அவருக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை.
சாரு மனதில் திரு மறுத்தால் என்னவென்று சொல்லி அவளை சம்மதிக்க வைப்பது என்று சென்றுகொண்டிருந்தது.
ஆளாளுக்கு எதேதோ நினைத்திருக்க அவர்கள் காத்திருந்த அந்த நேரமும் வந்தது. மதிய உணவை முடித்துவிட்டு எல்லோரும் சிந்தனைவயப் பட்டவர்களாக ஹாலில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். சாரு அறையிலிருந்து ஹாலில் நடப்பவற்றை கவனிக்கலானாள். நரேந்திரனுக்கு எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கம் வந்துவிட, அவன் அமைதியாகத்தான் இருந்தான். கண்மணிதான் பேச்சை ஆரம்பித்தார்.
சாகேத் திருமகள் திருமணம் சம்மந்தமாக நரேந்திரன் பேசி சென்ற பிறகு பெற்றவர்கள் இருவருக்குமே யோசனைதான். தங்கள் காலத்திற்கு பிறகு ,திருமகளின் நிலை என்ன ..என்று. இந்த திருமணம் நடந்தால் அவர்கள் இருவருக்கும் சந்தோஷம்தான். அப்படி ஏதாவது தடங்கல் வந்தாலும்,திருமகளுக்கு வேறு ஒரு வரனை பார்த்து முடித்து வைத்துவிட வேண்டும் என்பதில் அவர்களுக்கு மாற்று கருத்தே இல்லை.
இந்த காலத்தில் விவாகரத்து எவ்வளவு சுலபமாகி விட்டதோ,மறுமணமும் சாதாரண ஒன்றாகிவிட்டது.அப்படி இருக்கும் பொழுது தங்கள் மகளை மீண்டும் திருமண வாழ்வு வாழவைப்பதில் தவறு என்ன?என்ற கேள்வி ,அதற்கான விடையை தேட ஆர்மபித்து விட்டார்கள்.
“திரு,உனக்கு கல்யாணம் செய்யலாம்னு நாங்க யோசிக்கிறோம்”–கண்மணி. அம்மாவின் வார்த்தைகளில் திடுக்கிட்டு பார்த்தவள்,”எனக்கு ஏற்கனவே பட்ட வலி அதிகம்ம்மா.. இன்னொரு முறை ,நிச்சயம் என்னால முடியாது.அதோட எனக்கு ரெண்டு குழந்தைகள் பிறந்தாச்சு.அவங்க என்கூட இல்லைன்னாலும், அது மாறாது. என்னிக்காவது ஒரு வாய்ப்பா,அவங்கள சந்திக்க நேர்ந்தா அவங்க பார்வை என்னை தரக்குறைவான எடை போடக்கூடாது.”
மகளின் மனம் புரிந்தது. ” சரிதான் திரு. எவ்ளோ நாள் இப்படியே இருக்க முடியும்? என்னிக்கோ பாப்போமா இல்லையானு நிச்சயம் இல்லாத குழந்தைகளை பத்தி யோசிக்கிற. உன்னோட நல்லத மட்டுமே யோசிக்கிற எங்களை பத்தி உனக்கு அக்கறை இல்லையா.? என்றாள் கண்மணி.
திருமகளுக்கு சுத்தமாக இஷ்டமில்லை.அவளும் தனது மறுப்பிலிருந்து கீழே இறங்கி வருவதாக இல்லை.நரேந்திரன் வாயை திறக்கவில்லை. பெரியவர்கள் பெரும்பொழுது,தான் வாயை திறக்க வேண்டாம் என்று நினைத்து அமைதியாக இருந்தான். சாம்பசிவம் மகனை அர்த்தமாக பார்த்துவிட்டு,பேசத் தொடங்கினார்.
” பாரு திரு.கல்யாணம் செஞ்சுகிறது கண்டிப்பா உன்னோட இஷ்டம்தான். ஆனா,எங்களுக்கும் வயசாகுது. வயசான காலத்துல எங்களை வேணும்னா நரேனும் அவன் மனைவியும் பார்த்துப்பாங்க .உன்னோட சுமையை எப்படி அவன் தலைல கட்ட முடியும்? இங்கே நீ இப்படி இருக்கும் பொழுது அவன் தன்னோட மனைவியோட சந்தோஷமா பேசக் கூட யோசிக்கணும். அவங்க கல்யாணம் ஆன புதுசுல நீ எப்படி நடந்துக்கிட்டன்னு எங்களுக்கும் நினைவுல இருக்கு திரு. இப்போவும்,ஆரம்பத்துல சகஜமா எடுப்ப..அப்புறம் பிரச்சனை பண்ணுவ . உன்ன சின்ன வயசுலேந்து பாக்குற சாகேத் உன்னை கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டான் . உனக்கு அவன் மேல நம்பிக்கை இருந்தா அவனை பண்ணிக்க..இல்ல,வேற இடம் பாக்குறோம். உன்னோட பாரத்தை நரேன் சுமக்க முடியாது. அதோட,எங்களை மாதிரி நீயும் படிச்சிருந்தா, பிழைச்சுப்பன்னு நம்பிக்கை இருக்கும். உனக்கு.. ப்ச்.. நல்ல பதிலை சொல்லு” என்றுவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இவ்வளவு வருஷங்களாக திட்டியிராத அப்பா..செல்லம் கொஞ்சிய அப்பா, இப்போது நிறம் மாறி பேசியது திருமகளின் கண்களில் நீரை வஞ்சனை இல்லாமல் உற்பத்தி செய்தது. அவர் சொல்வதில் இருக்கும் உண்மையும் சுட்டது. திருமணம் செய்துகொண்டு செல்லும் முன்னர் இதே வீட்டில்’ தான்’ நடந்துகொண்ட விதம் ரொம்பவும் மோசம்தான். அப்போது கண்டிக்காமல்,இப்போது சொல்லிக் காட்டுகிறாரே என்று நினைத்து அழுதாள். நரேந்திரனுக்கு அவளை சமாதானம் செய்ய பிடிக்கவில்லை. அப்பா சொல்லிவிட்டு சென்றிருக்கும் போது தான் ஏதாவது சொன்னால் அவளுக்கு நிஜம் புரியாமல் கானல் நீரில் வாழ்ந்து விடுவாள் என்றது அவன் மனம். அதோடு,அவள் தங்களுக்கு எந்த விதத்திலும் பாரம் கிடையாதுதான் .அதற்காக,அவளுக்கென வாழ்க்கை,அவளது இளமை,அதன் தேவைகள்,முதுமை அதற்க்கான துணை?
கொஞ்ச வருஷங்கள் கழித்து தங்களது பிள்ளைகள் பெரியதாகி அவர்கள் வாழ்க்கை என்று வரும் பொழுது இதே தங்கை பாரமாக கூடும். அவளுக்கு தனிமை உணர்வு வரலாம் இப்போது நடப்பதுதான் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டான். மகளுக்கு மறுமணம் செய்ய வேண்டும் என்ற பெற்றோரின் எண்ணம் அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுக்க தவறவில்லை.
கண்மணியும் மகளை சமாதானம் செய்ய விழையவில்லை. தங்களது அறைக்குள் சென்று விட்டார். கணவர் சொன்னதில் ஒரு தவறும் இல்லை என்று இருக்கும் பொழுது அவர் வருத்தப்பட என்ன இருக்கிறது? சில சமயங்கள் ‘அறுவை சிகிச்சை போல நிஜமும்’ மரணவலியை கொடுக்கும்தான்
.ஆனால்,காலப் போக்கில் எல்லாம் சரியாகிவிடும்’என்று தன்னை தேற்றிக் கொண்டார் கண்மணி. கணவர் அலுவலக வேலைக்குள் தன்னை அமிழ்த்துக்கொள்ள,அந்த மாதத்தில் வந்த சார்ட்டட் செகரட்டரி இதழில் தன்னை திணித்துக்கொண்டார் கண்மணி.
எதிலும் தன்னை நுழைத்துக்கொள்ள முடியாமல் தவித்தவள் திருமகள்தான். இன்னொரு முறை ‘திருமணம்’என்பதே அவளுக்கு வயிற்றில் பயப்பந்தை உருள வைக்க போதுமானதாக இருந்தது. வெளியே பெற்றவர்களானாலும் எந்த காரணத்தை சொன்னாலும், அவளது அந்தரங்க காரணம் வேறு இருக்கிறதே!அவனுடனான தாம்பத்தியம்.நிவாஸ் தன்னை நடத்தியிருந்த விதத்தில், ஆண்கள் என்றாலே அவளுக்கு நடுக்கம் வந்துவிட்டிருந்தது.போதாத குறைக்கு நிரூபன் கொடுத்திருக்கும் அனுபவப்பாடம் வேறு ஆண்கள் மீதான வெறுப்பை அவளுக்குள் ஆழமாக விதைத்திருந்தது.இதை எப்படி பெற்றவர்களிடம் சொல்ல முடியும்?என்று தவித்தாள். அதோடு குழந்தைகள் பற்றி அவள் யோசிப்பதும் நிஜம்தான்.
ஒரு வாரம் போல் அவளிடம் திருமணம் பற்றி யாரும் எதையும் கேட்கவுமில்லை,பேசவுமில்லை.அவளுக்குத்தான் இவர்கள் அன்று பேசியதெல்லாம் நிஜம்தானா!என்றாகிப்போனது. அந்த வார இறுதியில் மீண்டும் எல்லோரும் ஒன்றாக மதியம் இருக்கும் நேரத்தில் சாம்பசிவமே மீண்டும் பேச்சைத் தொடங்கினார். அப்பா இந்த பேச்சை விடவே மாட்டாரா..என்று திருமகளுக்குள் ஆயாசம் எழும்பியது.
“எனக்கு சாகேத்கிட்டே பேசணும்ப்பா..அவரோட கல்யாண் வாழ்க்கை என்னாச்சுன்னு தெரிஞ்சுக்கணும்.அதோட என்னோட பாஸ்ட் பத்தியும் கண்ணடிப்பா சொல்லணும். இவருன்னு இல்ல,நீங்க யாரைப் பார்த்தாலும் இதுதான் என்னோட முடிவு” என்றாள் திருமகள்.
அன்று மாலையே சாகேத்துடனான திருமகளின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தான் நரேந்திரன். எப்படியாவது சீக்கிரமாக இந்த திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று அவனுக்கு. நேரத்தை இன்னும் கடத்தினால் ஏதாவது தடங்கல் வரக்கூடுமோ என்று வேறு பயந்தான். சாகேத்தின் வீட்டில் தான் சந்திப்பு. வெகு வருஷங்கள் கழித்து அவர்களது வீட்டுக்கு வருகிறாள் திருமகள். வீட்டின் முகப்பின் பிரம்மாண்டம் அவளை மிரட்டியது. முன்பு இவ்வளவு பெரியதெல்லாம் கிடையாது. நரேந்திரன் திருமகளை சாகேத்தின் வீட்டுக்குள் அழைத்து செல்லாமல், வீட்டின் சிறிய கேட்டின் வழியாக வீட்டு மாடியில் இருக்கும் சாகேத்தின் அலுவலகத்திற்கு அழைத்து சென்றான்.
திருமகளுக்க்காக காத்திருந்தான் சாகேத். திருமகளின் கால்கள் பின்னியது. போன வாரம் வரை தங்கள் வீட்டுக்கு சாதாரணமாக வந்து சென்று கொண்டிருந்த சாகேத் இவனில்லையோ என்றுகூட யோசித்தாள் . அவன் முகத்தில் பல வருஷங்களுக்கு முன்னே இருந்த அப்பாவித்தனமும், மென்மையும் இன்று இல்லை. வெகு கம்பீரமாக இருந்தான். அவன் அணிந்திருந்த ஷர்ட் கூட அவனுக்கு வெகு பொருத்தமாக இருந்தது.
திருமகள் எதுவும் பேசவில்லை. திருவை அங்கே அமரச் செய்துவிட்டு நரேந்திரன்,”நா கீழ மாமா-அத்தையை பார்த்துட்டு வரேன்.நீங்க ரெண்டு பேரும் பேசுங்க”என்றுவிட்டு சென்றுவிட்டான். சிறிதுநேரம் பெண் ஏதாவது பேசுவாளா..என்று காத்திருந்த சாகேத் தானே ஆரம்பித்தான்.
தனது மணவாழ்க்கை,அது முடிந்த விதம்,அதற்கான காரணம்,அதில் தனது பங்கு என்று அவன் எதையும் மறைக்கவில்லை. அதோடு,திருமகள் மீதான தனது பலவருஷங்களுக்கான காத்திருப்பையும் கூட அவளுக்கு சொன்னான். அவளால் அவன் சொன்னவற்றை ஜிரணிக்க முடியவில்லை.”என்னை காதலிச்சிருந்தா எதுக்கு அக்காவை கல்யாணம் செஞ்சு அவங்க லைப்ல குழப்பத்தை ஏற்படுத்தினீங்க?” என்று திருமகள் கேட்ட கேள்விக்கு அவனிடமும் பதில் இல்லை.
திருவும் தனக்கும் நிவாஸுக்குமான திருமணம் ஆரம்பித்து , குழந்தைகளை அவனிடம் இழந்தது வரை ஒன்று விடாமல் சொன்னவள்,”நா உங்களை கல்யாணம் செஞ்சுக்க சம்மதம் சொல்லலாம்.ஆனா, உங்களோட தோழியா கூட வர முடியுமே தவிர மனைவியா என்னால நடந்துக்க முடியுமான்னு தெரியல. அது நடக்கலாம்,இல்லே நடக்காமலும் போகலாம்’ என்று மரத்த குரலில் சொல்லி முடித்தாள் . கைகளை குறுக்கே கட்டியவாறே அவள் சொன்னவற்றை ஆழ்ந்து கவனித்தவனுக்கு அவளது மனமும்,அதில் இருக்கும் உணர்வுகளும் புரிந்தது.
அதோடு,அவள் தன்னைத் தவிர வேறு யாரைத் திருமணம் செய்துகொண்டாலும், அவர்களால் இவள் சொல்லும் விஷயங்களை ஒப்புக்கொள்ள முடியாது என்றும் நினைத்தவன்,”இட்ஸ் ஓகே. . கணவன் மனைவி உறவுல மனசு ஒண்ணாகாம உடம்பு மட்டும் சேர்ந்து பிரயோசனம் இல்ல.என்னோட முதல் கல்யாணம் தோல்வில முடியவும் அதுதான் காரணம். இப்போ ,என்னோட பலவருஷ காதலை முன்னிறுத்தி கேக்கறேன்..என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்றவரிடம் அழுது கொண்டே தனது சம்மதத்தை சொன்னாள் திருமகள்.
இருவரும் ஒன்றாக கீழே இறங்கி வருவதிலேயே அவர்கள் மனம் புரிந்துவிட ராஜம் தம்பதிக்கும் ஆஸ்வாசம்தான்.
error: Content is protected !!