“மீனு ஐ மிஸ்ட் யூ” என்று ஓடி வந்து மீனாட்சியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஒப்பாரி வைத்தாள் கீதா.
Advertisement
” அட மலைக்குரங்கே கையை எடு.. விட்டா கழுத்தை நெறிச்சு கொன்னுடுவ போல” என்று அவளிடமிருந்து தன்னை காத்துக் கொண்ட மீனாட்சி,
Advertisement
” இப்போ எதுக்கு இந்த டிராமா??” என்று கையைக் கட்டிக் கொண்டு அவளை சந்தேகமாக பார்க்க,
Advertisement
” என்னோட பாசத்தை பார்த்தா உனக்கு டிராமா மாதிரியா இருக்கு” என்று பச்சைக் குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு அப்பாவியாக பார்த்த கீதாவைக் கண்டு சிரிப்பு வந்தாலும் அதை மறைத்துக் கொண்ட மீனாட்சி, ” ஆமா உங்களை கூட்டிட்டு வர நம்ம முத்துவை அனுப்பினேன் தான.. எங்க அவன்?? நீ மட்டும் வந்திருக்க??” என்று அவர் அப்போது தான் முத்துவைப் பற்றி ஞாபகம் வந்து கேட்க,
Advertisement
” என்னது முத்துவை அனுப்பினயா?? நான் அவரை பார்க்கவே இல்லையே .. எங்களுக்கு ஹெல்ப் பண்ணவே ஒரு கோமாளியை கடவுள் அனுப்பி வச்சிருந்தாரு.. அவர் காருல தான் நாங்க வந்தோம்” என்று ஜீவாவை மனதில் வைத்து கீதா பதிலளித்தாள்.
” கோமாளியா அது யாரு??” என்று மீனாட்சி புரியாமல் வினவ,
” அதான் அன்னைக்கு வீட்டுக்கு வந்து பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் சாப்பிட்டு போனான்ல அந்த மாட்டு டாக்டர்.. அவனோட ஃப்ரெண்ட் தான்” என்று அவள் அசட்டையாக கூறினாள்.
” ப்ச்.. கீதா உனக்கு எத்தனை டைம் சொல்றது.. மரியாதையா பேசிப்பழகு.. அந்த பையன் உன்னை விட பெரியவன்.. உனக்கு அவங்களை பிடிக்கலை அப்படின்றதுக்காக மரியாதை இல்லாம பேசாத” என ஒரு தாயாய் அவளை கண்டித்தார் மீனாட்சி.
“அடப்போமா.. அவனுக்கெல்லாம் என்னால மரியாதை தர முடியாது” என்று எரிச்சலுடன் கூறிய கீதா அடுத்து அவர் ஏதும் கூறும் முன் தன்னறைக்கு ஓடியிருந்தாள்.
மகளின் இந்த விளையாட்டு புத்தியால் அவள் வாழ்க்கைக்கு பிரச்சனை வந்து விடக்கூடாது என்று அவர் கவலை கொண்டு அமர்ந்திருந்த நேரம், களைத்துப் போய் வீட்டிற்குள் நுழைந்தார் சுந்தர பாண்டியன்.
கணவனைக் கண்டதும் மற்றவை மறந்து போக முகம் முழுக்க புன்னகையுடன் அவருக்கு பருக நீர் எடுத்து வந்து கொடுத்து கணவரை வரவேற்றார் மீனாட்சி.
மனைவியின் மலர்ந்த முகத்தைத் கண்டதும் இவ்வளவு நேரம் இருந்த மன உளைச்சல், சோர்வு அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் மறைந்து போக மனம் நிறைய புன்னகைத்தார் சுந்தர பாண்டியன்.
” உன் முகத்தை பார்த்தாலே என்னோட கவலை எல்லாம் பறந்து போய்டுது மீனம்மா.. அப்படி உன் முகத்துல என்ன தான் வசியம் வச்சிருக்க” என்று மீனாட்சியை கண்டு ஆசையாய் அவர் வினவ,
” ஆரம்பிச்சுட்டீங்களா வந்ததும் வராததுமா.. போய் முதல்ல ஃப்ரெஷ் ஆய்ட்டு வந்து சாப்பிடுங்க … அப்பறம் என் முகத்தை பத்தி ஆராய்ச்சி செய்யலாம்” என்று அவரை குளியலறைக்குள் தள்ளி கதவை சாத்திவிட்டு வந்த மீனாட்சி அவருக்கு பிடிக்கும் என பார்த்து பார்த்து சமைத்து வைத்த உணவு வகைகளை மேசையில் எடுத்து வைக்கத் தொடங்கினார்.
சற்று நேரம் கழித்து குளித்து முடித்து புத்துணர்ச்சியுடன் வந்து தன் மனைவியுடன் சேர்ந்து உணவருந்தி முடித்த சுந்தர பாண்டியன் தன் மனைவியின் மடியில் தலை சாய்ந்து கொண்டார்.
மீனாட்சியின் கரங்கள் தன்னிச்சையாக கணவனின் கேசத்தை கோதிக் கொடுக்க, சுந்தர பாண்டியனிற்கு ‘ எங்கெங்கோ அலைந்து தாய் மடி சேர்ந்து விட்ட ‘ உணர்வை அந்த தலைகோதல் கொடுத்தது.
” சொல்லுங்க ஏதோ சொல்லணும்னு நினைக்கிறீங்க போல” என்று தன் கணவரின் முகத்தை வைத்தே அவரின் மனதைப் படித்து விட்ட மீனாட்சி வினவ,
மனைவியை எண்ணி புன்னகைத்துக் கொண்டே சுந்தர பாண்டியனின் முகம் சிறிது நேரத்தில் கசங்கிப் போக, ” இன்னைக்கு கைது செஞ்சு கலவரம் ஆச்சே.. அந்த கதிரவன் என்ன பண்ணான்னு தெரியுமா மீனாம்மா.. ஸ்கூல் நடத்துறேன்ற பேருல சின்ன சின்ன குழந்தைகளுக்கு கேன்டீன் சாப்பாட்டுல டிரக்ஸ் கலந்து கொடுத்து அந்த பொண்ணுங்களை … ச்சே சொல்லவே வாய் கூசுது.. எப்படி அவனுக்கு மனசு வந்தது.. அந்த கருமத்தை வீடியோ வேற எடுத்து வச்சு அந்த பொண்ணுங்களை மிரட்டியிருக்கான்.. இப்படிப்பட்ட அந்த நாதாரிக்கு அவங்க அப்பன் சப்போர்ட் வேற.. அவன் பண்ண தப்பை கண்டும் காணாம விட்டிடனுமாம்.. எங்கிட்டயே வந்து மிரட்டுனான்.. அதான் அவனுங்க வெளியே வர முடியாதபடி இப்படி பண்ணிட்டேன்…பதவியே போன பின்னாடியும் அந்த MP அடங்கலை. இன்னைக்கும் என்னைப் பார்க்க வந்து மிரட்டிட்டு போனான்.. என் குடும்பத்தையே அழிச்சிருவேன்னு.. ” என்று அவர் தன் மன பாரத்தை எல்லாம் மனையாளிடம் இறக்கி வைக்க,
அவர் கரங்களை ஆதரவாக பற்றிக் கொண்ட மீனாட்சி, “தப்பு பண்ணவங்களுக்கு நீங்க சரியான தண்டனை தான் வாங்கி கொடுத்துருக்கிங்க.. இந்த மாதிரி ஆளுங்களை சுட்டுக் கொன்னா கூட திருந்த மாட்டாங்க .. அவங்க புத்தி அப்படி.. அதுனால அவங்களை பத்தி யோசிச்சு மனசை குழப்பிக்காம அடுத்த வேலையை பாருங்க” என்று அவர் தெளிவாய் உரைத்தார்.
” உனக்கு வருத்தமோ பயமோ இல்லையா மீனம்மா” என்று சுந்தரபாண்டி மீனாட்சியின் கண்களைப் பார்த்து கேட்க,
” நீங்க இருக்கப்போ எனக்கு என்ன பயம்.. உங்களை மீறி என்னை யாராவது தொட்டிட முடியுமா” என்று அவர் உறுதியான குரலில் கூற,
தன் மீது தன் மனைவி கொண்டுள்ள நம்பிக்கையில் ஒரு கணவனாய் பெருமிதம் கொண்ட சுந்தர பாண்டியன், மீனாட்சியின் நம்பிக்கையை என்றும் உடையாமல் காக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டார்.
செங்கதிரோன் தன் கதிர்களை கீழ்வானமெங்கும் சிதற விட்டுக் கொண்டிருந்த அந்த அதிகாலை வேளையில் அஸ்வத்தை மனதில் திட்டிக் கொண்டே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான் வினோத்.
அவன் பின்னால் அமர்ந்திருந்த அஸ்வத்தோ, ” சீக்கிரம் போ டா.. வடை தீர்ந்து போயிட போகுது” என்று அவனை அவசரப்படுத்த,
” டேய் என்னை கொலைகாரன் ஆக்காத.. அப்பறம் நான் செத்துப் போனாலும் பரவாயில்லைன்னு வண்டியை வாய்க்காலுக்குள்ள விட்டிடுவேன்.. தூங்கிட்டு இருந்தவனை மிட் நைட் அஞ்சு மணிக்கெல்லாம் அலாரம் வச்சு எழுப்பி வடை வாங்கணும் வான்னு கூப்பிட்டு போறியே மனசாட்சி இருக்காடா உனக்கெல்லாம்.. குடும்பமா இது ச்சை” என்று வண்டியை ஓட்டிக்கொண்டே புலம்பிக் கொண்டிருந்தான் வினோத்.
” என்னடா வினோ எனக்காக இதைக்கூடவா பண்ண மாட்ட?? நாயர் கடை வடை சூப்பரா இருக்குமாம் டா.. நீ வேணா பாரேன் அதை சாப்பிட்டதும் சென்னைக்கு போன பின்னாடி கூட இதுக்காகவே அங்க இருந்து வருவ” என்று அஸ்வத் அளந்து விட,
கண்ணாடி வழியாக பின்னால் அமர்ந்திருந்த தன் நண்பனை பாசப்பார்வை பார்த்த வினோத், ” எது இந்த ஊசிப்போன உளுந்தவடைக்காக நான் சென்னையில இருந்து வருவேனா?? நல்லா பண்றீங்க டா” என்று கடுப்புடன் மொழிந்தவன்,
” ஆமா உங்களுக்கு பக்கத்துல இருக்க கடையில எல்லாம் இந்த வடையை சாப்பிட பிடிக்காதா டா.. பத்து கிலோமீட்டர்க்கு அங்குட்டு இருக்க கடையில தான் அய்யா வடை சாப்பிடுவீங்களோ?? கருமம் குளிர் வேற தாங்க முடியலை.. ரொம்ப படுத்துறடா என்னைய” என்று புலம்பிக்கொண்டே அவன் வருகையில்,
” டேய் வினோ வண்டியை நிறுத்து” என்று பதற்றமாய் வெளிவந்த அஸ்வத்தின் குரலில், வினோ சடன் பிரேக் அடிக்க அதில் டயர் தேயாமல் இருந்தது அதிசயம் தான்.
” எதுக்குடா இப்படி கத்துன பரதேசி” என்று வினோத் கோபத்துடன் பின்னால் திரும்ப,
அவனிற்கு பதிலளிக்க அஸ்வத் அங்கு இல்லை.
“அதுக்குள்ள எங்க போனான்??” என்று வினோத் யோசனையோடு சுற்றும் முற்றும் பார்க்க, அஸ்வத் தெற்கு பக்கம் இருந்த வயல்வெளிக்குள் இறங்கி ஓடிக் கொண்டிருந்தான்.
“காலையில பாத்ரூம் போய்ட்டு தான வந்தான் … அப்பறம் எதுக்கு இப்படி தலைதெறிக்க வயலுக்குள்ள ஓடுறான்.. ஒருவேளை நைட்டு கெழவி வச்ச மீன் குழம்பு வேலையைக் காட்டிருச்சோ” என்று நினைத்து குழம்பிய வினோத்தும் அவன் பின்னால் ஓடினான்.
வேகமாய் ஓடி வந்த அஸ்வத் அங்கு வரப்புக்குள் மயங்கிக் கிடந்த சந்தனபாண்டியனைக் கண்டு அவர் அருகில் விரைந்து ஒரு மருத்துவனாய் அவரை பரிசோதித்து பார்த்தான்.
இதயத்துடிப்பெல்லாம் சீராக இருக்கவும் தான் அஸ்வத்திற்கு மூச்சே வந்தது.
அப்போது அவன் அருகில் வந்திருந்த வினோத் அங்கிருந்த சந்தனபாண்டியனைக் கண்டு, ” டேய் இது உன் மாமனாரு தான.. அவ்ளோ பெரிய வீட்டுல இடம் இல்லையா என்ன?? எதுக்குடா இங்க வந்து தூங்கிட்டு இருக்காரு??” என்று சந்தேகமாக வினவ,
” நீயெல்லாம் டாக்டருன்னு வெளிய சொல்லிக்காத.. த்தூ.. அவர் மயக்கத்தில் இருக்காரு.. தூரத்துல யாரோ மயங்கி கீழ விழுகிற மாதிரி இருக்குனு தான் வண்டியை நிறுத்த சொன்னேன்.. கிட்ட வந்த பின்னாடி தான் இவருன்னு தெரியுது.. பல்ஸ் எல்லாம் நார்மலா தான் இருக்கு.. இருந்தாலும் இவரை செக் பண்ணனும்.. தூக்கு.. பக்கத்துல இருக்க ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்” என்று அவனை துரிதப்படுத்திய அஸ்வத், தன்னவளைத் தூக்கி வளர்த்த அவளின் தந்தையை இப்போது தன் தோளில் சுமந்து கொண்டு வண்டி இருக்கும் இடத்திற்கு வந்தான்.
அவரை நடுவில் அமர வைத்து விட்டு பின்னால் அஸ்வத் அமர்ந்து கொள்ள, வினோத் அவசத்திற்கு அந்த கிராமத்தில் இருந்த சுகாதார நிலையம் ஒன்றில் சென்று வண்டியை நிறுத்தினான்.
அவர்கள் போன சமயம் மருத்துவர்கள் யாரும் வராமல் இருக்க, அஸ்வத் தான் ஒரு மருத்துவன் தான் என தன் ஐடி கார்டை அங்கிருந்த ஊழியர்களிடம் காண்பித்தவன் சந்தனபாண்டியனை பரிசோதனை செய்யத் தொடங்கினான்.
அதன் முடிவில் இரத்த அழுத்தம் கூடியதோடு அலைச்சலும் தூக்கமின்மையும் சேர்ந்து கொண்டதால் தான் அவர் மயங்கி விழுந்துள்ளார் என்பது தெரிய, அதன் பின்பே சற்று ஆசுவாசமடைந்தான்.
சந்தன பாண்டியன் இன்னும் சற்று நேரத்தில் கண் விழித்து விடுவார் என்று தெரிந்ததால் அங்கிருந்து கிளம்பலாம் என்று அஸ்வத் சொல்ல, வினோத்திற்கோ வேறொரு திட்டம் உதயமானது.
அந்த சுகாதார நிலையத்தில் இருந்த ஒரேயொரு கம்பவுண்டரை அழைத்த வினோத் அவன் காதுக்குள் ஏதோ சொல்லி அவன் சட்டைப்பையில் ஆயிரம் ரூபாயை திணிக்க, அந்த கம்பவுண்டரும் வாயெல்லாம் பல்லாக அவனிடமிருந்து விடை பெற்று கிளம்பி சந்தனபாண்டியனின் அறைக்குள் நுழைந்தான்.
” டேய் லூசே அவனுக்கு எதுக்கு டா ஆயிரம் ரூபாயை தூக்கி கொடுத்த??” என்று அஸ்வத் புரியாமல் வினவ,
“வெய்ட் அண்ட் வாட்ச்” என்று மட்டும் கூறிய வினோத் அந்த அறைக்கு சற்று ஒதுக்குப்புறமாக நின்று கொண்டு உள்ளே நடப்பதை வேடிக்கை பார்க்கலானான்.
அவன் செய்கை புரியாமல் அஸ்வத்தும் அவனுடன் சேர்ந்து நின்று கொண்டு உள்ளே பார்க்க, அங்கு அந்த கம்பவுண்டர் சந்தன பாண்டியனிற்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தில் இருந்து எழுப்பிக் கொண்டிருந்தான்.
மிகவும் சிரமப்பட்டு கண்களை திறந்த சந்தனபாண்டிக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை, அதன் பின்பே வயலுக்கு சென்று அங்கு நிற்க முடியாமல் மயங்கி விழுந்தது நினைவிற்கு வர, அப்போது தான் சுற்றத்தை கவனித்தார்.
‘ தான் எப்படி இங்கே வந்தோம்? ‘ என்று அவர் யோசிக்க,
அவர் சிந்தனையை கலைப்பதைப் போல், ” என்ன ஐயா எப்படி இங்க வந்தோம்னு யோசிக்கிறிங்களா??” என்று அந்த கம்பவுண்டர் வினவ,
அவரும் ஆமாம் என்பதைப் போல் தலையசைத்தார்.
“நீங்க போன ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் பண்ணிருக்கிங்க அதான் வயல்வெளியில் ஹார்ட் அட்டாக் வந்து சாகக் கிடந்த உங்களை தெய்வம் போல வந்து ஒருத்தர் காப்பாத்தி இருக்காரு” என்று அவன் வாங்கிய பணத்திற்கு வஞ்சகமில்லாமல் எடுத்துவிட,
.கேட்டுக்கொண்டிருந்த அஸ்வத்திற்கு தான் ‘ அடப்பாவி ‘ என்று இருந்தது.
” என்னது ஹார்ட் அட்டாக்கா!!!” என்று கேட்ட சந்தன பாண்டியனிற்கு அதிர்ச்சியில் உண்மையிலே நெஞ்சு வலி வந்து விடும் போல் இருந்தது.
“ஆமாங்க சார்.. நீங்க ஹார்ட் அட்டாக் வந்து வயக்காட்டுல மயங்கி விழுந்து கிடந்ததை பார்த்த அந்த தெய்வம் தான் உங்களை இங்க தூக்கிட்டு வந்து சேர்த்தார்.. அதுவும் இல்லாம இன்னைக்கு டாக்டர் வேற யாருமே இல்லை.. நல்லவேளைக்கு அந்த தெய்வமே டாக்டர் தானாம்.. அவர் தான் சரியான நேரத்துல CPR செஞ்சு அவரோட மூச்சுக்காத்தை உங்களுக்கு அனுப்பி உங்க உயிரை காப்பாத்தி இருக்காரு.. அவர் மட்டும் இல்லைனா நீங்க இந்நேரம் அந்த தெய்வத்துகிட்ட போய்ருப்பிங்க.. யாரோ எப்படியோ போகட்டும்னு சுயநலமாக இருக்கிற இந்த காலத்துல இப்படி ஒருத்தரை நான் பார்த்ததே இல்லை.. நீங்க நிஜமாகவே ரொம்ப கொடுத்து வச்சவங்க சார்” என்று அவன் அடித்து விட,
கேட்டுக்கொண்டிருந்த சந்தனபாண்டிக்கே தன்னைக் காப்பாற்றியவரைக் காண வேண்டும் என்கிற ஆவல் பெருக்கெடுக்க, ” அந்த தம்பி.. எ.. எங்க??” என்று வினவ,
“இதோ வெளிய தான் உங்களுக்காக மருந்து வாங்க போயிருக்காரு” என்று அவன் கூற, அவரும் வேகமாய் கட்டிலில் இருந்து இறங்கி வெளியே வந்து பார்த்தார்.
அங்கு அவருக்கு முதுகு காட்டி நின்றிருந்த அஸ்வத்தைக் கண்டு வினோத் கோபமாக ஏதோ கத்திக் கொண்டிருந்தான்.
‘ இவனா?? ‘ என்று அவர் அதிர்ச்சியடைய,
வினோத் அதைக்கண்டு மனதில் சிரித்துக் கொண்டு வெளியே கோபத்துடன், ” நீ என்ன பெரிய தியாகியா?? அன்னைக்கு அத்தனை பேரு முன்னாடி உன்னையும் உங்க அப்பாவையும் அசிங்கப்படுத்திய அந்த ஆளை எதுக்கு இப்படி துடிச்சுப் போய்காப்பாத்த நினைக்கிற? அவர் உங்களை அன்னைக்கு எவ்வளவு கேவலப்படுத்தி அனுப்பினாரு.. வேற எவனாச்சும் உன் இடத்தில இருந்தா எப்படியோ போய் தொலையட்டும்னு வண்டியைக் கூட நிறுத்தாமல் போயிருப்பான்.. ஆனா நீ ஏன் இப்படி இருக்க?? நாம எதுக்கு இங்க வந்தோம்?? எவ்வளவு பெரிய முக்கியமான ஆளைப் பார்த்து ஹாஸ்பிட்டல் கட்டுவதற்காக ஏற்பாடு பண்ண வந்தோம்.. இப்போ இவரை காப்பாத்த போய் உன்னோட கனவான அந்த ஹாஸ்பிட்டல் கட்டமுடியாம போச்சு.. அவர் இனி நம்மளை மீட் பண்ண மாட்டார்.. இது உனக்கு தேவையா?? உன்னை அசிங்கப்படுத்தியவருக்காக உன்னோட கனவை தொலைச்சிட்டு நிக்கிற அஸ்வத் நீ” என்று பேசிக்கொண்டே போக,
இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சந்தனபாண்டியின் முகம் ஆச்சரியத்தில் விரிந்தது.
‘ வொர்க் அவுட் ஆகுது ‘ என்று அஸ்வத்திற்கு வினோத் சைகை காட்ட,
இப்போது அஸ்வத்தோ குரலை செருமிக் கொண்டு, ” கனவை எப்போ வேணாலும் நிறைவேத்திக்கலாம் வினோ.. ஆனா ஒரு உயிர் போனால் திரும்ப வராது.. ஆமா அவர் என்னையும் எங்க அப்பாவையும் அசிங்கப்படுத்தியவர் தான்.. ஆனாலும் அதுக்காக ஒரு உயிர் சாகக் கிடக்குறப்போ அப்படியே போக சொல்றியா வினோ.. நீ வேணும்னா அப்படி இருக்கலாம் ஆனால் என்னால முடியாது.. என் கனவை விட அவர் உயிர் தான் எனக்கு முக்கியமா பட்டுச்சு.. இனி இதைப்பத்தி பேசி என்னை கோபப்படுத்தாத.. நான் போய் அவர் எப்படி இருக்கார் என்று பார்த்துட்டு வரேன்” என்று வினோவிடம் கூறிவிட்டு அவன் திரும்ப,
அங்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார் அஸ்வத்தின் வருங்கால மாமனார்.