அதை அவனிடம் ஒப்படைத்து திருமண ஏற்பாட்டை நிறுத்துமாறு அவனிடம் கூறுவதற்காக அஞ்சலியின் கைபேசியில் இருந்து அஜயின் எண்ணைத் திருடி பலமுறை அவனை அழைத்து பார்த்துவிட்டாள் கீதா, ஆனால் அதற்கான பயன் என்னவோ பூஜ்ஜியம் தான்.
இரண்டு நாளாக அவனுக்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனவள், அஜயின் மேல் கொலைவெறியில் இருந்தாள்.
Advertisement
அஜயைக் கண்டதிலிருந்து இன்று வரை நடந்ததை அசை போட்டு பார்த்த கீதா, அஜயை நினைத்து கோபம், வருத்தம், காதல், குழப்பம் என பல வகையான உணர்ச்சிகளை பிரதிபலித்து உணர்வுக் குவியல்களாக அமர்ந்திருக்க, அவள் அறியாத ஒரு விஷயமும் அதில் அடங்கியிருந்தது.
Advertisement
அஜயும் கீதாவும் ஒரே குணாதிசியங்கள் உடையவர்கள் என்பதால், கீதாவின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை அஜயால் எளிதில் கண்டுகொள்ள முடிந்தது.
Advertisement
ஜித்தேஷினால் கீதாவிற்கு எந்த ஆபத்தும் வந்து விடக் கூடாது என அவள் அறியாமலே கீதாவிற்கு பாதுகாவலனாய் அஜய் இத்தனை நாளும் இருந்து கொண்டிருக்க, கீதா அவன் செயினை அடகு வைத்தது அவன் கண்களுக்கும் தப்பவில்லை.
Advertisement
அது போல் கீதா அவனின் செயினை அடகு வைக்க எவ்வளவு தயக்கம் காட்டினாள், என்பதையும் கண்டுகொண்ட அஜய்க்கு அவளின் காதலும் அவளின் தயக்கமும் நன்றாகவே புரிய அவளுடன் விளையாடிப் பார்க்க முடிவெடுத்தான்.
இவை எதையும் அறியாத கீதாவோ, தன் அழைப்பை ஏற்காத அஜய் மீது கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு புறம் அஜயுடனான நிச்சயம் தித்திப்பாய் அவள் மனதில் தேனை வார்த்தாலும், மறுபுறம் ஜித்தேஷுடனான பிரச்சனை வந்து அவள் மனதை நன்றாக கலங்கடித்தது.
இதில் அஞ்சலி வேறு நாளை காலை வரையில் அவளுக்கு கெடு வைத்து விட்டு போயிருக்க, தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் மங்கையவள்.
அன்று இரவு முழுவதும் கீதாவிற்கு உறங்கா இரவாகிப் போக, அவள் பல நேர சுய அலசள்களுக்குப் பின் தெளிவாய் அஜயுடனான இந்த திருமணம் வேண்டாம் என்று முடிவெடுத்த சமயம் அவளின் கைபேசி , “டொங்க்” என்ற சப்தத்துடன் ஒரு குறுஞ்செய்தியை கொண்டு வந்திருந்தது.
அதில் கவனம் கலைந்து அலைபேசியை எடுத்து பார்த்த கீதாவின் கண்கள் அதிர்ச்சியில் சாசர் போல் விரிய, அவள் இதயம் அவளிடமிருந்து நழுவியதைப் போல் கையிலிருந்து போனும் நழுவி பெருத்த ஒலியுடன் தரையில் விழுந்து சிதறியது.
எதிர் எதிர் துருவங்கள் ஈர்த்துக் கொள்ளும் எனும் விதியை பொய்யாக்கி, ஒரே குணாதிசியங்கள் கொண்ட இந்த இரு துருவமும் ஒன்றை நோக்கி ஒன்று ஈர்த்துக் கொள்ள, இயற்கையின் விதியை மீறி இந்த இரு துருவமும் இணையுமா?? பொறுத்திருந்து பார்க்கலாம்.
தனக்கு அனுப்பப்பட்ட முகவரிக்கு வந்து சேர்ந்த ஜித்தேஷிற்கு எதிரில் இருந்த அடுக்கு மாடி கட்டிடத்தைக் கண்டு யோசனையில் புருவங்கள் சுருங்கியது.
பொதுவாக கடத்தல்காரன் வரச்சொல்லும் இடமெல்லாம் ஆளில்லாத பங்களாவோ, இல்லை ஊருக்கு ஒதுக்குப்புறமாய் அமைந்துள்ள பழைய ஓடாத மில் அல்லது குடோனாகத் தான் இருக்கும் என மக்கள் மத்தியில் பரவலான கருத்து ஒன்று பரவியிருக்க, அதை உடைப்பதைப் போல் நகரத்திற்கு மத்தியில் மிகவும் பரபரப்பான சாலையில் அமைந்துள்ள அந்த அப்பார்ட்மென்ட்டைக் கண்டு குழம்பிய ஜித்தேஷ், அந்த கடத்தல்காரனிற்கு அழைப்பு விடுத்தான்.
அழைப்பை ஏற்றதும், “என்ன செல்லோ வந்துட்ட போல.. உன்னை பார்த்துட்டு தான் இருக்கேன்.. கால்ல ஏதும் சாணியை மிதிச்சிட்டியா என்ன ஏதோ பிடிச்சு வச்ச மாதிரி வாசல்லயே ரொம்ப நேரமா நிக்குற??” என்று கிண்டல் செய்து ஜித்தேஷின் ரத்த அழுத்தத்தை ஏகத்திற்கும் ஏற்றினான் அந்த கள்வன்.
ஜித்தேஷ் இங்கு கோபத்தில் பல்லைக் கடிப்பதை அவன் உணர்ந்தானோ என்னவோ, “சரி சரி டென்ஷனாகாத.. நல்லா கழுத்தை தூக்கி மேல பாரு.. டாப் ஃப்ளோர் அதாவது 42வது மாடியில இருக்க 42C ஃப்ளாட்ல தான் நாங்க இருக்கோம் சீக்கிரம் வந்து சேரு ” என்று அவனிற்கு தகவல் கொடுத்தவன் பின் நியாபகம் வந்தவனாக, “ஆமா சொல்ல மறந்துட்டேன்.. லிஃப்ட் வேலை செய்யலை சோ குட் பாயா குடு குடுன்னு படியில ஏறி ஓடி வா பார்ப்போம்.. உனக்கு ஃபைவ் மினிட்ஸ் தான் டைம்.. நீ அதுக்குள்ள வரலை உன் ஆகாஷ்வாணி பேபியை இங்க இருந்து தள்ளி விட்டிடுவேன்.. பார்த்துக்கோ 42வது ஃப்ளோர்ல இருந்து விழுந்தா எலும்பு கூட மிஞ்சாது” என ஜித்தேஷிற்கு அடுத்த சோதனையை வழங்கியிருந்தான் அவன்.
“ஏதே ஆகாஷ்வாணியா?? அவ ஷ்ராவனி.. என் வனி பேபிக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உன்னை சும்மா விட மாட்டேன் டா” என ஜித்தேஷ் கத்திக் கொண்டே அந்த அப்பார்ட்மென்ட்டினுள் நுழைந்தான்.
42 மாடிகளை அண்ணார்ந்து பார்க்கும் போதே மலைப்பாக இருந்தாலும் தன் ஷ்ராவனிக்காக மனதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு அவன் மூச்சிரைக்க ஒவ்வொரு மாடியாக விரைவாக நான்கு நான்கு படிகளாக தாவி ஏறினான்.
என்னதான் கட்டுமஸ்தான உடம்பைக் கொண்டிருந்தாலும் ஜித்தேஷால் இருபதாவது மாடிக்கு மேல் ஏற சுத்தமாக முடியவில்லை, அதிலும் நேற்று மதியம் சாப்பிட்டது அதற்கு பின் தண்ணீர் கூட அருந்தினானா இல்லையா என அவனிற்கு நினைவில் இல்லை.
அவன் உடல் சுத்தமாக தெம்பில்லாமல் போக, கால்கள் அதற்கு மேல் நகர மறுத்தது.
இருந்தாலும் ஷ்ராவனியின் மேல் கொண்டுள்ள காதல் அவனின் சோர்வையும் மீறி அவனை முன்னேறச் செய்ய, அவன் தத்தித் தவழ்ந்து 42வது மாடியை அடையும் போது இருபது நிமிடங்களைக் கடந்திருந்தது.
சரியாய் அவன் 42வது தளத்தில் காலடி எடுத்து வைக்கவும், அங்கிருந்த மின்தூக்கியின் கதவைத் திறந்து கொண்டு ஒரு வடநாட்டு ஜோடி வெளியே வருவதற்கும் சரியாக இருக்க,
தன்னிடம் பொய் கூறி இத்தனை மாடி ஏற வைத்த அந்த கடத்தல்காரன் மேல் கட்டுக்கடங்கா ஆத்திரம் பொங்க, அவனை ஒரு வழி செய்துவிட வேண்டும் என்ற வெறியுடன் அவன் கூறிய ப்ளாட்டின் முன் சென்று அந்த கதவை “டம் டம் டம்” என்று தட்டத் துவங்கினான்.
அங்கு அவனை ஏமாற்றுவதைப் போல் ஒரு வயதான பெண்மனி ஹிந்தியில் அவனை அர்ச்சித்துக் கொண்டே வந்து கதவைத் திறக்க, அதைக் கண்டு குழம்பியவன், “வேர் இஸ் மை ஷ்ராவனி??” என அவரிடம் கேட்க,
அந்த வயதான பாட்டியோ அவனை பைத்தியம் என்றே முடிவு செய்து விட்டார்.
அவர் பதிலளிக்காமல் இருக்கவும் மேலும் சினம் கொண்ட ஜித்தேஷ், “வேர் இஸ் மை ஷ்ராவனி யூ ப்ளடி ஓல்ட் லேடி?? ஆன்சர் மீ” என்று கோபத்தில் அந்த கம்பிக் கதவைப் பிடித்து ஆட்டத் துவங்க, பயந்து போன அந்த பாட்டி , “பாகல்(பைத்தியம்)” என திட்டிக் கொண்டே தன் வீட்டின் கதவை அவன் முகத்தில் படாரென அரைந்து சாற்றி விட்டு உள்ளே ஓடிச்சென்று விட்டார்.
அப்போது எதிர் ப்ளாட்டில் இருந்து “ஹாஹா ஹாஹாஹா” என்று பலமாய் நகைப்பொலி கேட்க, சந்தேகமே இல்லாமல் தெரிந்தது அது யாரென.
தன் காதலியையும் கடத்தி வைத்துக் கொண்டு தன்னிடம் இப்படி விளையாடிப் பார்ப்பவனை யாரென கண்டுகொள்ள வேண்டும் என கோபத்துடன் அவன் எதிர் வீட்டுக் கதவை தட்டப்போக, அது தானாகவே திறந்து கொண்டு அவனை வரவேற்றது.
உள்ளே வந்ததும் அவன் கண்கள் தன்னவளைத் தேடி அந்த வீடு முற்றிலும் ஆராய, அவனின் தேடலின் முடிவாய் அங்கு ஒரு ஓரத்தில் சுருண்டு போய் படுத்திருந்தாள் ஷ்ராவனி.
அவள் படுத்திருந்த கோலமே அவன் மனதை யாரோ கத்தியை வைத்து அறுப்பதைப் போல் இருக்க, அங்கு கோழிக்குஞ்சாய் சுருண்டு போய் படுத்திருந்தவளை தன் அரவணைப்பிற்குள் கொண்டு வந்து ஒரு தாய்ப்பறவையாக அவளை அடைகாக்க வேண்டும் என அவனின் செல்கள் ஒவ்வொன்றும் துடியாய் துடிக்க, விரைந்து அவள் அருகில் ஓடினான்.
இருவருக்குமிடையில் இரண்டு இன்ச் இடைவெளியே இருந்த சமயத்தில் அவர்களுக்கு நடுவில் வந்து நின்றது இரு உருவம்.
அப்போது தான் ஷ்ராவனியைக் கடத்தி தன்னை இந்த அளவிற்கு கொடுமை செய்த அந்த கடத்தல்காரனின் நினைவே எழ, தன்னை இப்படி படுத்தியவனின் யார் என காண கீழிருந்த அவன் கண்களை மெல்லமாய் மேலே உயர்த்த,
அங்கு அவனைக் கண்டு எள்ளல் புன்னகையுடன் நின்றிருந்தனர் நம் நாயகர்கள்.