Skip to content
Post Views: 14,199
கள்ளி காட்டு காதலியே!
அத்தியாயம் 2
தன்னை நோக்கி வரும் கணவனை சின்ன சிரிப்போடு பிரபா பார்த்து நிற்க. அவனோ மனைவியை ஒட்டி வந்தவன் கண்டுகொள்ளாமல் கடந்து விட்டான். பிரபாக்கு வருத்தம் எல்லாம் ஒன்றுமில்லை.
ஐந்து ஆண்டு திருமண வாழ்வில் அவன் கோபம் எல்லாம் அத்து படி. கண் சிவந்து, சத்தம் கூடி,முகம் உக்கிரமாகுமே தவிர ஒரு நாளும் அவளை கை நீட்டியதில்லை. கல்யாணத்துக்கு முன்பு இருந்த குடி பழக்கம் கூட தற்போது கிடையாது. தன்னை மட்டுமே நம்பி வந்த பெண். தான் மட்டுமே துணை. தானும் இல்லாமல் போனால் அல்லது தன்னுடைய கெட்ட பழக்கத்தால் வேற எந்த கஷ்டத்தையும் மனைவிக்கு கொடுத்து விட கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.
Advertisement
முகம் வாடாமல் கணவனை தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்தாள் பிரபா. சாப்பாட்டு மேசையில் இருந்த பொருளை பார்த்து புன்னகை இன்னும் கூடி போனது. அவள் ஆசையாக கேட்டது தான், கிடைப்பது கஷ்டம். அலைந்து திரிந்து வாங்கி வந்து இருக்கிறான். ஒரு வகை சமாதான முயற்சி போல…
அப்படி ஒன்றும் பொன்னும், பொருளும் கேட்க வில்லை. பிரபா ஆசைப்பட்டு கேட்டது இலந்தை பழம், சூரம் பழம். இவர்கள் கள்ளி காட்டில் எளிதாக கிடைக்கும். குட்டியாக சிவந்த நிறத்தில் இலங்தையும், கருநீல நிறத்தில் சூரம் பழத்தையும் நாக்கு எறியும் வரை ஆசையாக உண்ணுவாள். ஏனோ மசக்கையில் இதன் மீது தான் கொள்ளை ஆசை. ஊர் நினைப்பா, பெற்றவர்கள் நினைப்பா என்று தெரியவில்லை. அந்த பழத்தின் வாசம் சொந்த ஊருக்கே இழுத்து சென்றது. மெல்ல கண்கள் கூட கலங்கி போனது.
மெத்தென்று நாலு தேசையும், புளி தொக்கும் மனைவி முன் வைத்தவன், அவளின் கலங்கிய கண்களை கண்டு முகம் இருக உள்ளே சென்று விட்டான். அவனுக்கு, வீட்டு நினைப்பில் இவள் அழுதால் சுத்தமாக பிடிக்காது. ஏன் அழுக வேண்டும். எல்லாம் தெரிந்து தானே வீட்டை விட்டு வெளி வந்தது.
Advertisement
மனம் கொண்ட காதலுக்கு போராடாமல் இல்லையே. வெவ்வேறு சமூகம் என்று ஓரேடியாக மறுத்த பின் தானே தனித்து நின்றது. எல்லாம் தெரிந்தும் இவள் அழுதால், அப்போ நான் என்ன கெட்டவனா?…
Advertisement
“இருந்தால் இனி உன்னோடு தான், இல்லையேல் உடல் மண்ணோடு தான்…” என்று பாட்டு பாடி விட்டு, இன்று அம்மா, அப்பா என்று அழுது உடம்பை கெடுத்து கொள்வது என்ன அர்த்தம். நாசமாக போவாய் என்று சாபமிட்டார் கண் பார்க்க, நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டாமா!…
விக்ரமும் முகம் திருப்பி கொண்டு படுத்து விட்டான். பிரபா வந்தவள், கணவனின் கையை கெட்டியாக பிடித்து கொண்டு அவன் தோளில் சாய்ந்து கண் மூடி கொண்டாள். விக்ரம் ஒதுக்கவெல்லாம் இல்லை. தானும் கோபம் கொண்டு ஒதுக்கி வைத்தால், யாரிடம் சொல்லி ஆறுதல் தேடுவாள். எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் ஒரு நாள் தான். இருவராலும் பேசாமல் இருக்க முடியாது. இருவரும் வேற யாரிடம் சொல்வார்கள், ஒருவருக்கொருவரே துணை.
பிரபாக்கு கணவனின் நியாயம் புரிகிறது. இவள் இவர்கள் வீட்டில் முதல் பெண். இவள் குழந்தை தான் முதல் வாரிசு. முன்பே அப்பா, அம்மா இருவருக்கும் அவ்வளவு ஆசையில் இருந்தவர்கள். இன்று?… அதை எண்ணி தான் அழுகை. இவன் தான் புரிந்து கொள்ள மறுக்கிறான்.
Advertisement
பிரபா நன்றாக அசந்து உறங்கிய பின், வசதியாக படுக்க வைத்தான் விக்ரம். அவளின் ஒற்றை வைர கல் மூக்குத்தி கவர்ந்து இழுக்க, மெல்ல ஒரு முத்தம் வைத்தான்.
ஒரு ஈர்ப்பும், ஆர்வமுமாக பார்த்தவனை முழுதாக சாய்த்தது இந்த ஒற்றை கல் மூக்குத்தி தான். முதலில் விக்ரம், நீ நினைப்பது போல நான் இல்லை, ஆள் பார்த்து பழகும் ஆள் இல்லை என்று சொல்ல தான் நினைத்தான். ஏதோ ஒன்று அவள் புறம் கட்டி இழுத்து விட்டது.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக அந்த ஆறு மணி பஸ்ஸில் பார்த்த பெண்ணை தேடுகிறான், கையில் சிக்க வில்லை. எந்த ஊரு என்றெல்லாம் தெரியும் தான். ஆனாலும் சுலபமாக தேட முடியாது. இவர்கள் ஊர் ஆட்கள் காரணமின்றி அந்த ஊர் பக்கம் செல்ல கூட மாட்டார்கள். இவன் எளிதாக ஒரு பொண்ணை தேடி செல்ல முடியாது. அதனால், பஸ்சை தவிர வேற மார்க்கம் இல்லாமல் அதிலேயே தொங்கி நின்றான்.
அடுத்த ஒரு மாதம் கடந்து மாலை ஆறு மணி பஸ்ஸில் தான் அவளை கண்டான்.
“ஏம்மா ஏய்?…” என்று அழைக்க,
தன் ஊர் போகும் வண்டியை பார்த்து நின்றவள், கேட்ட சத்தத்தில் யார் என்று திரும்பி பார்த்தாள்.
“அன்னைக்கு நீ எதுக்கு அம்புட்டு கோபமா பேசுனா. அன்னைக்கு அவன் உன் பக்கத்துல வந்ததை நான் கவனிக்கல. நானும், மதனும் படி பக்கம் தான் நின்னு இருந்தோம். தெரிஞ்சு இருந்தா அவனை சும்மா விட்டுருக்க மாட்டேன்…” அவள் மேல் கொஞ்சம் சடவாகவும், தன் நியாயத்தையும் சொல்ல,
பிரபா அரண்டு போய் தான் அவனை பார்த்தாள். அவள் இதை மறந்தே போனாள். இதை ஒரு விசயமாக நினைவு வைத்து, ஒரு மாதம் கழித்து வந்து பேசியவனை அதிர்ந்து போய் தான் பார்த்தாள்.
“நான் அப்படில்லாம் இல்லை. எங்க பார்த்தாலும் ஒரு பொண்ணுக்கு ஒன்னுண்ணா ஓடி போய் முத ஆள நிப்பேன். ஆள் பார்த்து எல்லாம் நான் பழக மாட்டேன்…” மீண்டும் ஒரு விளக்கம் கொடுக்க,
பிரபா அமைதியாக தலையசைத்து கொண்டாள்.
என்னடா இது, கொக்குனு வந்த கோழி மாதிரி வெடுக்கென்று கழுத்தை திருப்பி கொள்பவள், பௌமியமாக தலையாட்டுகிறாள் என்று பார்த்தவன்,
“உன் பேர் என்ன? எந்த காலேஜ்? என்ன படிக்கிற?…” சகஜமாக விக்ரமன் கேட்க.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், ஒதுங்கி போய் நின்று கொண்டாள். அவன் யாரோடோ பேசியதை போல தள்ளி நின்றாள். முகம் சுருங்க ஒதுங்கிய விக்ரமனுக்கும் இந்த அவமதிப்பு வலித்தது.
பிரபா என்ன செய்வாள். அவர்கள் ஊர் டவுன் அது. இருவரும் பக்கத்து ஊர் தான் என்றாலும் சொந்தமெல்லாம் கிடையாது. யாராவது அறிந்தவர் கேட்டால் என்ன உறவு முறை சொல்ல முடியும். என் ஃப்ரண்ட் என்று ஒரு ஆணை சொல்லி எல்லாம் கடக்க முடியாது. கலைச்செல்வி உப்பு கண்டம் போட்டு விடுவார். பிரபாவை பொறுத்த வரை அவனோடு ஒரு பழக்கம் தேவையே இல்லாதது. அத்தோடு ஆபத்தானதும் கூட…
விக்ரம் தான் பொசுங்கிய முகத்தோடு நின்று இருந்தான். ஆள் பார்த்து உதவி செய்கிறான் என்று குற்றம் சாட்டினாயே… இன்று நீ தான் ஆள் பார்த்து பழகுகிறாய் என்று உள்ளே சொல்லி கொண்டான்.
ஜெய விக்ரமன். கள்ளி காடு அருகில் இருக்கும் குளத்து கரை தான் இவனது சொந்த ஊர். நீதிபதி, திலகவதி பெற்ற மூன்றாம் மகன் இவன். இவனுக்கு மூத்தது இருவரும் பெண் பிள்ளைகள் ஜெய சந்திரா, ஜெய இந்திரா. தவமிருந்து பெற்ற ஒற்றை புதல்வன் விக்ரமன்.
வீட்டுக்கு ஒரு என்ஜினீயர் என்பதை மெய்யாக்கும் விதமாக படித்து முடித்தவன். சென்னை, பெங்களூர், ஓசூர் என்று ஊர் ஊராக அலைந்து எதிர்பார்த்த வேலை கிடைக்காமல், இனி வேலைக்கு போனால் அரசு வேலை தான் என்று பயிற்சி வகுப்புக்கு செல்கிறான்.
ஒரு வாரம் கடந்த நிலையில், அன்று ஊருக்கு வந்து இருந்தாள் பிரபாவதி. ஒரு குட்டி வைர கல் மூக்குத்தியை வைத்து கொண்டு அவளோடு மல்லு கட்டி கொண்டு இருந்தார் கலை செல்வி. அவர்கள் பக்கம் பெண் பிள்ளைக்கு மூக்குத்தி குத்துவது வழக்கம்.
“அம்மா, பிளீஸ் என்னை விடுங்க. எங்க காலேஜ் எல்லாம் சிரிப்பாங்க. இப்போதெல்லாம் யாரு மூக்குத்தி போடுறா… என்னை ஓட்டியே எடுத்துடுவாங்க… நான் மட்டும் வித்தியாசமா தெரிவேன்…” சிணுங்கி கொண்டாள் பெண்.
“போடி இவளே! நாளைக்கு போற வீட்டுல முனி மூக்குத்தி கூட குத்தாம வந்தவன்னு ஒரு பேச்சு வராது. நீ சேலை தான கட்டுற, உனக்கு அம்சமா இருக்கும்…”
“ ஆமா, ரொம்ப அம்சமா இருக்கும். கிழவி மாதிரி இருக்கும். பட்டிக்காட்டுன்னு என் பிரெண்ட்ஸ் சிரிப்பாங்க…” முகத்தை தூக்கினாள் மகள்.
“அதுக்கு சின்ன மூக்கு வச்சு இருக்கணும். ஆளை குத்துற மாதிரி நீள மூக்கு வச்சுகிட்டு, மூக்குத்தி வேணாமாக்கும். நான் குத்தி விட தான் போறேன் பாரு…” செல்வி கத்தி கொண்டு இருந்தார்.
“அப்பா…” என்று மகள் தந்தையின் துணை பிடிக்க,
“என் செல்ல பட்டு. அம்மா சொல்ற மாதிரி மூக்குத்தி போட்டுக்க தாயி. எனக்கே ஆசை தான். அதான் காசை எல்லாம் போட்டு ஒத்த வைர கல் வாங்குனேன். உங்க அப்பத்தா, உங்க அயித்த எல்லாம் போட்டு நான் பார்த்து இருக்கேன். நீயும் போட்டுக்க தங்கம்…” என்று தந்தை கொஞ்சவும், அடுத்து மறுக்க வில்லை பிரபா.
அதை பார்த்த செல்வி, “என்னவோ போங்க. இந்த பொட்டை கழுதை கிட்ட கூட எம் பேச்சு எடுபடல. அப்பன் சொல்றது தான் வேத வாக்கு…” என்று சடவாக சொல்லி கொண்டாலும், தந்தை, மகள் பாசத்தை நினைத்து பெருமை தான்.
பிரபா மூக்குத்தி குத்தி கொண்டாள். ஒற்றை கல் சின்ன மூக்குத்தி தான். அவளுக்கு எடுப்பாக இருந்தது. அவள் அம்மாவை பார்த்து இருக்கிறாள். அவர் அணிந்து இருப்பது வெள்ளை கல் வைத்த கிளி மூக்குத்தி.
பிரபாக்கு, அழகாக தான் இருக்கு என்று நினைத்தாலும், தற்போது யாரும் அணிவது இல்லையே. தான் மட்டும் வித்தியாசமாக தெரிவோம் அல்லவா… அந்த கவலை தான்.
நீதிபதி தன் மகனை கிளப்பி கொண்டு கள்ளி காட்டு பகுதிக்கு வந்து இருந்தார். இந்த பக்கம் கிடா நன்றாக இருக்கும் என்று வாங்குவதற்கு…
விக்ரம், “என்னப்பா… சீக்கிரம் எனக்கு ஆயிரம் வேலை இருக்கு…” என்று சடவு சொன்னாலும், கண்கள் அந்த பகுதியையே அலசியது.
“எதுவும் நல்லதா கிடைக்கல விக்ரம். மிலிட்டரிகாரன் வீட்டுல கேட்டு பார்ப்போம். வண்டியை எடு…” என்று கிளம்பினார்கள்.
நல்ல மாடி வைத்த கார வீடு தான். வீட்டை சுத்தி சுவர் இருந்தது. வீட்டின் முன் பக்கம் தாழ்வாரம் இறக்கி, திண்ணை என்று பழமையும் சேர்ந்து தான் இருந்தது. அதன் அருகில் ஒரு வேப்ப மரம். அதில் ஒரு கயிற்று ஊஞ்சல். அதில் அந்த பக்கம் திரும்பி அமர்ந்து இருந்தாள் பிரபா.
“விக்ரம், உள்ள போய் ஆள் இருக்கான்னு சத்தம் கொடு…” என்று நீதிபதி சொல்ல,
“என்னப்பா… நான் என்ன சின்ன பையலா?…” சடைத்து கொண்டான் விக்ரம். சின்ன கேட்டை திறந்து உள்ளே போக ஒரு பாட்டு குரல்,
“ கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறத;
கற்கண்டு, சர்க்கரை எல்லாம் இப்போ தான் கசக்கறத…” என்று பாடிய படி, மாங்காயை கடித்து கொண்டிருந்தாள் பிரபா.
“வீட்டுல யாருங்க…” விக்ரம் குரல் கொடுக்க,
பதறி போய் எழுந்தவள், திரும்பி பார்க்க, வந்தது விக்ரம்.
அட, நம்ம ஆறு மணி பஸ்… என்று ஆச்சர்யமாக பார்த்தவன். மிலிட்டரிகாரர் மகளா, நமக்கு தெரியாம பேச்சே என்று நினைத்தவன்,
“வீட்டுல யாரும் இல்லையா?…”
தெளிந்தவள், அப்பா என்று உள்ளே ஓடினாள். வெளியில் வந்த தமிழ்ச்செல்வன்.
“யாரு தம்பி நீங்க?…” என்று கேட்க.
விக்ரம் வெளியே பார்த்தான்,
“யாரு? அட பஞ்சாயத்தார். வாங்க, வாங்க உள்ள வாங்க…”
உபசரித்து உள்ளே கூட்டி செல்ல, வெளி வாசல் தாண்டி உள்ளே செல்லவில்லை நீதிபதி. அவர் எப்போதும் அப்படி தான்.
“குட்டிம்மா, ரெண்டு சேர் எடுத்துவா…” குரல் கொடுத்தார் தமிழ் செல்வம்.
பிரபா கொண்டு வந்து போட்டாள்.
“ஆடு பார்க்க வந்தோம் மிலிட்டரி. எதுவும் நல்லதா அமையல…” நீதிபதி பேச்சை ஆரம்பிக்க,
“அதுக்கென்ன, நம்ம வீட்டுலையும் ஆடு இருக்கு பாருங்க. தோத இருந்தா, உங்களுக்கு இல்லாததா…”
சிரித்து கொண்டார் நீதி. அவர் எதிர்பார்த்தது அதை தானே.
“அப்புறம் பிள்ளை யாரு, நம்ம பிள்ளையா?…” நீதி, பிரபாவை காட்டி கேட்க.
செல்லை பார்த்து கொண்டு இருந்தாலும், காதை தீட்டி கொண்டான் விக்ரமன்.
“ஆமாங்க பஞ்சாயத்தார், எம் மக தான், மூத்த பிள்ளை. பேரு பிரபாவதி. கணக்கு மூணு வருசம் முடிச்சுட்டு, டீச்சருக்கு படிக்குது விருதுநகர் பக்கம்…” என்றார் பெருமையாக.
“அடே அப்ப, பரவாயில்ல மிலிட்டரி. பொம்பளை பிள்ளையை படிக்க வைகிறிங்க. நல்லது தான். நம்ம வீட்டுலயும் ரெண்டு பிள்ளைக இருந்துச்சு. பன்னிரண்டு முடிச்சதும் அக்கா மகனுக்கு ஒன்னும், மச்சினன் மகனுக்கு ஒன்னும் கட்டி கொடுத்துட்டேன்…” பேசி கொண்டு இருக்கும் போதே, கத்தரி மூட்டையோடு வந்து விட்டார் கலை செல்வி.
“வாங்க அண்ணே…” என்று வரவேற்போடு சொம்பு நிறைய தண்ணி கொண்டு வந்து வைத்தார். அதை யாரும் தொட போவதில்லை. ஒரு முறைக்கு மட்டுமே…
“பிரபா, கொண்டு வந்த காய பிரிச்சு வை…” மகளை அனுப்பி வைத்தார்.
“கணக்கு பாடம் கஷ்டமே. உன் மக அதவே எடுத்து படிக்குதே. நல்லா படிக்கிற பிள்ளை தான்…” நீதி சொல்ல,
“ஆமாங்க. பிள்ளைக படிப்பு விசயத்துல எங்களுக்கு எந்த தொந்தரவும் வந்தது இல்லை. எல்லாத்துலயும் ஃபர்ஸ்ட் தான் எம் பிள்ளை. முதல் அஞ்சுக்குள்ள தான் ரெண்டு பேரும்…” என்று பெருமையாக சொல்ல,
தன்னிடம் சொல்லாமல் ஒதுங்கி கொண்ட அவளின் விவரங்களை, அவள் அப்பா மூலமே தெரிந்து கொண்டான் விக்ரமன். அதில் அவன் நமட்டு சிரிப்புடன் பார்க்க,
“பரவாயில்லை கெட்டிக்கார பிள்ளை தான். எம் மகனெல்லாம் பத்தாவது பெயில். அதுவும் கணக்குல தான்…” என்று நீதிபதி சொல்ல,
“அப்பா…” அலறினான் விக்ரமன்.
“ஏய்! சும்மா இருடா… திரும்ப எழுதி தான் பாஸ் பண்ணான். அப்புறம் பன்னிரண்டாவது கணக்கு எடுக்கல. அப்புறமும் மார்க் சுமார் தான். ஆனா, பாஸ் பண்ணான்…”
“எப்பா…” கையை பிடித்தான். அவனின் பின் பக்கம் தான் பிரபா காயை பிரித்து வைப்பது. நிச்சயம் கேட்கும்.
“நீ சும்மா இருடா… காச கொட்டி தான் என்ஜினீயர் படிக்க வச்சேன். ஒரு உருப்படியும் இல்லை. ரெண்டு வருசம் வடக்கு சுத்தி, காச கரியாக்குனது தான் மிச்சம். ஒத்த வேலைக்கும் போகல…”
“சரியா போச்சு…” நொந்து கொண்டான் விக்ரமன்.
“தம்பி ஏதோ கவர்மெண்ட் பரிச்சைக்கு படிக்கிறத சொன்னாங்களே…” தமிழ் செல்வன் கேட்க.
“ஆமா மிலிட்டரி. ரெண்டு வருசம் ஊர் ஊரா சுத்துனான். எந்த வேலையும் கிடைக்கல, படிச்சு, பாஸ் பண்ணி கவர்மெண்ட் வேலைக்கு போக போறானாம்… உள்ளூர்ல மாட்டு வண்டி ஓட்ட தெரியலை, வெளியூர்ல ஏரோபிளேன் ஓட்ட போறானாம். என்னத்த சொல்ல…” என்று நீதி சொல்ல,
“இதுக்கும் மேல என்னத்த சொல்ல போற…” முணங்கினான் விக்ரம்.
கலைச்செல்வி தான் “வாங்க அண்ணே ஆட்ட பார்க்கலாம்…” என்று பின் பக்கம் இருக்கும் தொட்டிக்கு அழைத்து சென்று பேச்சை முடித்து வைத்தார்.
விக்ரம் லேசாக கழுத்தை மட்டும் சாய்த்து பார்க்க, பிரபா காயை பிரித்து கொண்டு இருந்தாள். எந்த அலங்காரமும் இல்லை, பச்சை தாவணியில், எண்ணெய் வைத்து, இழுத்து பின்னி, சடையை முன் பக்கம் விட்டு இருந்தாள். மிக சாதாரண தோற்றம் தான்.
ஆனால், விக்ரம்க்கு என்னவோ ஒரு வித்தியாசம் அவள் முகத்தில். அன்று பார்த்த மாதிரி இல்லையே… பிரபா, அவனை சைடு பார்வை கூட பார்க்க வில்லை.
“போச்சு போ… ஏற்கனவே என்னை நல்ல மாதிரி தான் நினைக்கிற. இதுல என் படிப்பு தெரிஞ்சு, என்ன நினைப்பா…” யோசித்தவன், உடனே மதனுக்கு அழைத்து விட்டான்.
“என்ன மாப்பிள்ளை?…” என்று அந்த பக்கம் சத்தம் கேட்கவும்.
“மச்சான், படிப்பு என்ன மச்சான் படிப்பு. நான் யார்ன்னு தெரியுமல்ல. அத்லட் பிளேயர், என்னை மாதிரி ரன்னிங் யாரும் போக முடியாது. எல்லாம் மாவட்டத்திலும் நான் தான ஃபர்ஸ்ட். எம்புட்டு பதக்கம் வாங்கி இருக்கேன். எஸ்.ஐ செலக்சன்ல ரன்னிங் நான் தான் ஃபர்ஸ்ட்…”
“டேய் உரக்கடைல வேலையா இருக்கேன்டா…”
“அதில்லை மச்சான். இந்த உலகத்திலேயே பெரிய காப்பி எது தெரியுமா… யாரோ எழுதி வச்சத படிச்சு எழுதி மார்க் வாங்குறது தான். நான் சுயமா எழுதி வச்சேன். நீயாவது என் அருமையை புரிஞ்சுக்க மச்சி…”
“அப்படி நீ எழுதுனதுக்கு தான் பெயில் ஆனா மச்சான். எனக்கு வேலை இருக்கு தேவையில்லாம பேசாதா…” எரிந்து விழுந்தான் மதன்.
திரும்பவும் விக்ரம், பிரபாவை நோட்டம் விட, அவளிடம் ஒரு அசைவும் இல்லை.
“என்ன அசரவே மாட்ற இவன் வெத்து வாய்ன்னு நினைச்சுட்டாளோ. ஐயோ! எப்படி ஹீரோவா ஆகுறது…” அவன் யோசிக்கும் போதே, ஆடு பார்க்க போன மக்கள் வந்து விட்டார்கள்.
“நல்லாத அமஞ்சு போச்சு. நல்ல நாள் பார்த்து வந்து புடிச்சுகிறேன் மிலிட்ரி… எம் மகனுக்கு ஏதாவது அரசாங்க வேலை கிடக்குமானு கொஞ்சம் பாரு…” நீதிபதி சொல்ல,
“ஊர் பூராவும் சொத்து இருக்க, உங்க மவன் எதுக்கு அண்ணே வேலைக்கு போகணும்…” கலைச்செல்வி கேட்க.
“காட்டு வேலைக்கு இவன் தோது பட மாட்டான். சொந்ததுல பொண்ணு இருந்தாலும், ஏதாவது வேலை இருக்கணுமாம். நீங்க பாருங்க மிலிட்டரி, உனக்கு உலக விவரம் தெரியும்…”
“தம்பி நல்ல வளர்த்தியா வாட்ட, சாட்டமா இருக்காங்களே. பேசாம போலீஸ், ஆர்மின்னு பிடிக்க வேண்டிய தான…” யோசனை சொன்னார் தமிழ் செல்வன்.
“வாஸ்தவம் தான். ஆனா, அங்கேயும் பரிச்சை எழுதனுமாம்…” நீதிபதி சொல்ல,
“விளங்கும்…” என்றவன், வாப்பா போகலாம்…” என்று தந்தையை தள்ளி கொண்டு வந்து விட்டான் விக்ரமன்.
“என்னடா… அவன் கிட்ட தான் உனக்கு வேலைக்கு சொல்லி இருக்கேன். இப்படி தள்ளிக்கு வார, ஒரு மரியாதை வேணாம்…” காய்ந்தார் நீதிபதி.
“நான் பத்து வருசத்துக்கு முந்தி வாங்குன மார்க் எல்லாம் உன்னை யாருப்பா சொல்ல சொன்னது…” எகிறினான் மகன்.
“சொன்னா தாண்ட வேலைக்கு ஏற்பாடு பண்ணுவான். உள்ளத சொல்லணும்ல…” தந்தையும் காரணம் சொல்ல,
“ஆமா, நீ சொல்லி வச்ச உள்ளதுக்கு, அவர் வீட்டுல ஆடு மேய்க்க கூட என்னை சேர்க்க மாட்டார்…” என்று காய்ந்தவன்,
“இத எல்லாம் சொன்னியே, நான் ஸ்போர்ட்ஸ்ல பெரிய ஆளுன்னு சொன்னையா… என்னை பத்தி அவங்க வீட்டுல என்ன நினைப்பாங்க…”
“அவங்க வீட்டுல நினைக்க என்ன இருக்கு மகனே. உனக்கு வேலை கிடைக்க வேணாமா?…”
“எப்பா! அவர் என்ன கவர்மெண்டா வச்சு நடத்துறாரு வேலை கொடுக்க. எம் மானத்தை வாங்கி வச்சு இருக்க. என் கௌரவம் என்ன ஆகுறது. நான் பெயில் ஆனா கதையெல்லாம் உன்னை யாரு சொல்ல சொன்னா…”
“அப்புறம் கூகிள் ஓனர்ன்னு சொல்லவா. போட கூறு கெட்டவனே, என்னத்த பெரிய கௌரவம்… நாம என்ன சம்பந்தமா பண்ண போறோம்…” வண்டிய எடு
“அதை தானப்பா பண்ண போறோம்…” சத்தமில்லாமல் சொல்லி கொண்டவன், வண்டியை எடுத்தான்.
அப்புறம் என்ன, அடுத்த நாள் முதல் பிரபா விவரம் எல்லாம் விக்ரம் கையில் அத்துப்படி. அதன் படி பிரபா திரும்ப கல்லூரி செல்லும் போது அவள் உடனே பஸ்ஸில் ஏறி கொண்டான்.
பிரபா பார்த்தாலும் அவனை கண்டு கொள்ள வில்லை. அவனுக்கு ஆயிரம் வேலை இருக்கும்.
“என்ன எ
இந்த கொடை மிளகாய் நம்மளை கண்டுகல, நமக்கு மட்டும் ஏன் இவ நினைப்பா இருக்கு..” அவளையே பார்த்தவாறு விக்ரம் யோசிக்க,
“என்ன மாப்பிள்ளை, அந்த பிள்ளையவே பாக்குற…” சந்தேகம் மதனுக்கு.
“அது கோபமா பாக்குறேன் மாப்பிள்ளை. அன்னைக்கு நம்ம கிட்ட சடவா பேசுச்சுல்லா, அதான்…”
“பார்த்த அப்படி தெரியலை. ஆளை முழுங்குற மாதிரி பாக்குற. மாப்பி, அந்த புள்ளை கள்ளி காடு. கலவரம் ஆகி போகும் பார்த்துக்க…”
விக்ரம் கண்டு கொள்ளவே இல்லை. இன்னைக்கும் என்னவோ வித்தியாசம் தெரியுதே. அவளையே ஆராய, நீல வண்ண சுடிதார் போட்டு இருந்தாள்.
விக்ரம் கை பிடித்து நின்று இருந்த கம்பியில், பிரபாவின் மூக்குத்தி பட்டு மின்ன, கண்டு கொண்டான்.
அட, மூக்குத்தி. ஆமா, அது தான் முகம் தனியா தெரியுது. மஞ்சள் முகம் தான் பிரபாவதி. அதில் குட்டி குட்டியாக சிவந்த பருக்கள் இருந்தது.
“பாரேன், பரு கூட பொம்பளை பிள்ளைகளுக்கு தான் அழகா இருக்கு. நமக்கு தான் வந்த அசிங்கமா தெரியுது. பூ வைக்காம இருக்கா. அடுத்த முறை வாங்கி கொடுக்கணும்…”
விக்ரம் பார்வை மூக்குத்தியை விட்டு நகரவில்லை. அவன் அம்மா அணிந்து இருப்பார். அவன் இரு அக்காக்கள் கூட அணிய வில்லை. பிரபா மூக்குத்தி அவனை கட்டி இழுத்தது.
அடுத்து விருதுநகர் பஸ் பிடிக்க பிரபா இறங்கி நடந்தாள். பின்னவே வந்தவன்,
“பிரபா…” என்றான் எதார்த்தமாக,
அவன் பேர் சொல்லி கூப்பிட்டதிலே அரண்டு போய் பார்த்தாள்.
“என்ன, உரிமையா பேர் சொல்றான்…” என்று நினைக்க,
“நான் நல்ல பார்த்துட்டேன். இந்த அஞ்சு நாளும் கற்கண்டு, சர்க்கரை, கருப்பட்டி, வெல்லம் கூட கசந்து தான் போச்சு. என்னன்னு பார்த்த, நீ தான் இனிக்கிற…” என்று அசால்டாக காதலை சொல்லி விட்டான்.
“என்னது…” என்று பயந்து போய் நெஞ்சில் கை வைத்தாள் பிரபா.
error: Content is protected !!