Skip to content
Post Views: 128
அத்தியாயம் 22
“அம்மா நான் ரிச்சர்ட் சார் வீட்டுக்கு போய்ட்டு வர்றேன் ம்மா. இன்னிக்கு அங்கேயே சாப்பிட்டுடுவேன்..” பரபரப்பாக கிளம்பிக்கொண்டே அம்மாவிடம் கூறிக்கொண்டிருந்தான் விக்கி.
Advertisement
“அங்க எதுக்கு விக்கி சாப்பிட்டுட்டு.. நான் மதியத்துக்கு தக்காளி சாதம் செஞ்சு வச்சிருக்கேன்”
“ஹா ஹா.. உன் தக்காளி சாதத்தில் இருந்து தப்பிக்க தான் இன்னிக்கு அங்க போறேன். நந்திதா மேம் சமையல் ரொம்ப சுமார். ஆனா இன்னிக்கு சண்டே அவங்க ஃபுல் ரெஸ்ட்..”
Advertisement
Advertisement
“அப்புறம் எதுக்கு நீ போற? அவங்களே ரெஸ்ட்ல இருப்பாங்கன்னு சொல்ற..”
“இன்னிக்கு சமைக்கப்போறது ரிச்சர்ட் சார் தெரியுமா? நேத்தே எனக்கு என்ன பிடிக்கும்னு கேட்டாங்க. கண்டிப்பா அதை தான் சமைச்சிருப்பாங்க.. நான் போய் ஒரு கட்டு கட்டப் போறேனே”
Advertisement
“அந்த சாருக்கு சமைக்க எல்லாம் தெரியுமா விக்கி.. பார்க்க எப்பவுமே டிப் டாப்பா இருக்காரு.. அவர் எல்லாம் வீட்ல வேலை பார்ப்பாறா?”
“நீ வேற அம்மா.. ரிச்சர்ட் சார் ரொம்பவே ஸ்வீட். மேம் எப்பவுமே காலேஜ் முடிச்சாலுமே அவங்க ஸ்டுடண்ட்ஸ்க்கு ப்ராஜெக்ட் டவுட்ன்னு ஹெல்ப் பண்ணிட்டு லேட்டா தான் வருவாங்க. அவங்க வரும் பொழுது சார் அவங்களுக்கு டீ போட்டு வெயிட் பண்ணுவாரு. நான் அவங்க வீட்டுக்கு போறப்ப எல்லாம், சார் எதாவது வேலை செஞ்சுட்டு தான் இருப்பாங்க.”
“அவர் வேலைக்கு போகலையா டா?”
“அவர் ஆர்மில இருந்தவராம் ம்மா. ரிட்டயர் ஆயிட்டதா சொன்னாங்க.. நீயும் வாயேன் ம்மா போயிட்டு வரலாம். ரொம்ப நாளா உன்னையும் கூப்பிட்டுட்டு இருங்காங்க தானே?”
“அப்ப தக்காளி சாதம்?” என்றார் கவலையாக.
“நம்ம டாம்மி இருக்க பயமேன்” என்றான் இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவர்கள் வீட்டு நாய் டாம்மியை பார்த்து.
என்ன புரிந்ததோ, அது ரத்னாவை பாவமாக பார்த்து வைத்தது.
“என்ன டா உனக்கும் தக்காளி சாதம் வேணாமா?” என்றார் ரத்னா அதை பார்த்து. அது ரத்னாவின் காலை நக்கி செல்லம் கொஞ்சியது.
“வேணாம்னு சொல்றான் மா” என்றான் விக்கி வெடித்து சிரித்துக்கொண்டே.
ரத்னாவுமே சிரித்து விட்டார்.
“ஏன்மா உனக்கும் தக்காளி சாதம் பிடிக்காது எனக்கும் பிடிக்காது, அப்புறம் அதை ஏன் சமைச்சிருக்க? சரி நீயும் வர்றீயா?”
“நானும் வரவான்னு நீ எதுக்கும் அவங்களுக்கு போன் பண்ணி கேளு, அப்புறம் கிளம்புவோம்” என்றார் ரத்னா.
விக்கி இப்பொழுது ரிச்சர்டின் செல்ல பிள்ளை போல ஆகியிருந்தான்.
அவருக்கு ஏனோ விக்கியை மிகவும் பிடித்து விட்டது.
மாதம் ஒரு முறையாவது விக்கியை அவர்கள் வீட்டிற்கு அழைத்து அவனுக்கு நல்ல நல்ல புத்தகங்களை கொடுத்து படிக்க கூறுவார். விக்கியுடன் ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடுவார். தெரியாத விஷயங்களை கற்று கொடுத்தார். அவருடனான நட்பு விக்கியின் எண்ணங்களையும் கருத்துக்களையும் விசாலமாக்கியது என்றே கூறலாம்.
இவர்கள் வருவதாக கூறிவிட்டு அன்று மதியம் ரத்னாவும் விக்கியும் அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
அவர்கள் வீட்டு வாயில் வரும்பொழுதே உள்ளே இருந்து பேச்சுக்குரல் கேட்டது.
“இங்க பாருங்க ரிச்.. இன்னிக்கு நான் தான் சமைக்க போறேன். நீங்க எனக்கு ஹெல்ப் பண்ண போறீங்க..”
“அது எல்லாம் முடியவே முடியாது புரொபசர் மேடம்.. இன்னிக்கு விக்கி சாப்பாட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்கான்”
“அதுக்கு?”
“நான் சமைக்கிறேன்னு சொன்னதால தான் வர்றேன்னு சொன்னான்..”
“ஏன், நான் சமைச்சா வர மாட்டான்னா..”
“கண்டிப்பா.. இதுல என்ன டவுட் நந்து?”
உஃப்.. உஃப்.. என்று நந்திதா விடும் பெருமூச்சு வெளியே வரை கேட்டது.
“இன்னிக்கு அவங்க அம்மாவை கூட்டிட்டு வர்றேன்னு வேற சொன்னான்.. பேசிகிட்டே இருக்காம அந்த வெங்காயத்தை கட் பண்ணு..”
“என்ன சார் அதிகாரம் எல்லாம் தூள் பறக்குது?”
“தினமும் காலேஜ்ல எத்தனை பசங்களை அதிகாரம் பண்ணிட்டு இருக்க நீ.. ஒரு நாள் ஒரு தடவை ஒரு வேலை சொன்னதுக்கு உன்னால கேட்க முடியலேயே!”
“சரி சரி.. அதுக்காக நீங்க ஒன்னும் எனக்கு பாடம் எடுக்க வேணாம். வெங்காயத்தை கொடுங்க ..”
“இப்படி தான் ம்மா அவங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் மாதிரி தான் எப்பவுமே பேசுவாங்க..” என்று பெருமையாக கூறிக்கொண்டே காலிங் பெல்லை அடித்தான் விக்கி.
நந்திதா தான் வந்து கதவை திறந்து இருவரையும் வரவேற்றார். வீடு மிகவும் அழகாகவும் ரசனையாகவும் அலங்கரிக்க பட்டிருந்தது. திரைச்சீலை, சோபா கவர், சுவற்றில் மாட்ட பட்டிருக்கும் ஓவியம் என்று அனைத்துமே மிகவும் வசீகரமாக இருந்தது.
“வீடு ரொம்ப நல்லா வச்சிருக்கீங்க” என்றார் ரத்னா நந்திதாவிடம்.
“இதுக்கான கிரெடிட் ரிச்சர்டுக்கு தான். எனக்கு இதுல எல்லாம் அவ்வளவா இன்டரெஸ்ட் இல்லை..” என்றார் சிரித்துக்கொண்டே.
“ஆமாம்மா ரத்னா.. காலேஜ்ல புரொபசர்னு தான் பேரு.. வேலைக்கு போய்ட்டு வந்து ஹாண்ட் பேக் ஒரு பக்கம், வாட்ச் ஒரு பக்கம், புக்ஸ் ஒரு பக்கம், இந்த மேடம் ஒரு பக்கம்னு இருக்கும்.
அப்புறம் காலையில என் வாட்சை காணும், என் கழுத்தை காணும்னு சுத்திட்டு இருப்பாங்க..”
“அதுக்கு தானே ஆர்மி ஆஃபிசர் நீங்க இருக்கீங்க.. தீவிரவாதிகளையே கண்டுபிடிச்சவருக்கு இது எல்லாம் எம்மாத்திரம்.. சொல்லுங்க..” என்றார் நந்திதா உடனே பதிலுக்கு.
பேசிக்கொண்டே அழகான கண்ணாடி க்ளாஸ்களில் வாட்டர்மெலன் ஜூஸ்களை கொண்டு வந்து கொடுத்தார் ரிச்சர்ட்.
அதில் மேலாக புதினா தலைகளை நைசாக நறுக்கி தூவி கொண்டு வந்திருந்தார். ஜூஸில் சர்க்கரை சேர்க்காமல் மிளகும் சிறுதளவு உப்பும் போட்டிருநத்து புது வித சுவையாக இருந்தது, புத்துணர்ச்சியாகவும் இருந்தது.
“அப்புறம் லேடீஸ் இன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் ஜாலியா அரட்டை அடிச்சிட்டு இருங்க.. நானும் விக்கியும் சமைச்சிட்டு கூப்பிடறோம்” என்றார் ரிச்சர்ட்.
“நான் ஹெல்ப் பண்றேனே” என்றார் ரத்னா வேகமாக.
“ஹா ஹா.. அவ்வப்போது ஓய்வு எடுத்துகிறது தப்பில்லை ரத்னா. உண்மையில் ஓய்வெடுக்கவும் கத்துக்கணும், சரியா?” என்று சிரித்து கொண்டே விக்கியுடன் அடுப்படிக்குள் புகுந்து கொண்டார் ரிச்சர்ட்.
நந்திதா செல்லும் கணவனையே காதலாக பார்த்து அமர்ந்திருந்தார்.
ரத்னாவிற்கு அவரை பார்த்து ஆச்சர்யமாக இருந்ததது.
“எப்பவுமே இப்படி தான் ரிச். நான் கணவன் நீ மனைவி அப்படின்னு எல்லாம் பார்க்க மாட்டங்க. எல்லா வேலைகளையும் என்கூட பகிர்ந்து செய்வாங்க..”
என்றார் நந்திதா பெருமையாக.
“என் கண்ணத்தானும் இப்படி தான் மேம்.. என்னை நிறைய வேலை செய்ய விடமாட்டாங்க.. நிறைய உதவி செய்வாங்க.. எனக்கு இரண்டு பிரசவத்தப்பயையும் அவர் தான் கூடயிருந்து பார்த்துக்கிட்டாங்க.. இப்படி சார் மாதிரி கலகலப்பாக பேசமாட்டாங்க.. அமைதியா இருப்பாங்க.. ஆனா ரொம்ப அக்கறையா பார்த்துக்குவாங்க..”
“தெரியுமே ரத்னா.. உங்க காதல் கதை ரொம்பவே நல்லா இருந்துச்சு.. விக்கி போன தடவை வந்தப்ப சொன்னான்.”
“இந்த பிள்ளைங்க எல்லாம் சேர்ந்து என் மானத்தை இப்படியா வாங்குவாங்க” ரத்னாவிற்கு சங்கோஜமாக போய்விட்டது.
“உனக்கு உன் கண்ணத்தானை ரொம்ப பிடிக்குமோ?”
“ரொம்பலாம் இல்லை.. ரொம்ப.. ரொம்ப.. ரொம்ம்பபப.. எவ்வளவுன்னு சொல்லவே முடியாது..”
“கார்த்தி சொல்லிருக்கான்.. எங்க அப்பா அம்மா மாதிரி ஆத்மார்த்தமான ஜோடியே இல்லைன்னு.. அதான் உனக்கு மறுமணம் செய்யலாம்னு நான் சொன்னப்ப கார்த்தியால அதை ஏத்துக்கவே முடியலை.”
ரத்னா அமைதியாக சிரித்துக்கொண்டார்.
“ரிச் என்னோட இரண்டாவது கணவர். என் முதல் கணவர் ரவிக்குமார். அவரும் ஆர்மில இருந்தவரு தான். எங்க தாத்தா சீரியஸ்னு திடீர்ன்னு ஏற்பாடான கல்யாணம் அது. கல்யாணமாகி ஒரு வாரம் தான் என்கூட இருந்தாங்க. அப்ப இந்தியா பாக்கிஸ்த்தான் பார்டர்ல போர் அபாயம் இருக்குன்னு உடனே கிளம்பி போனாங்க.
அந்த ஒரு வார வாழ்க்கையில நான் கர்ப்பம் ஆகிட்டேன். கர்ப்பத்தை பத்தி தெரிவிக்க கூட எங்களால அவரை தொடர்ப்பு கொள்ள முடியலை.
ஆறு மாசம் கழிச்சு, ஒரு நாள் அரசாங்க மரியாதையோடு, தேசிய கோடி போர்த்திய பெட்டியில் தான் வீட்டுக்கு கொண்டு வந்தாங்க.. எனக்கு அழுக கூட தோணலை. வயத்துல ஆறு மாச குழந்தை.. கணவரோட வாழ்ந்த அந்த ஒரு வார வாழ்க்கை ஒரு கனவு போலகூட நினைவுல இல்லை..
என்னை பார்த்து எங்க அப்பா அம்மா தங்கச்சிங்கன்னு எல்லாருமே கதறி அழுதாங்க. நான் ஒரு வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தேன்.
ரவியை கொண்டு வரும்போது அவர் கூட வந்தவர் தான் ரிச்சர்ட்.
என்னோட நிர்கதியான நிலைமையை பார்த்து என்னை கல்யாணம் செய்துக்க விரும்பவுதாக அடுத்த மாசமே வந்து நின்னாரு.
வேற்று மதத்தை சேர்ந்தவருன்னு எங்க வீட்ல அவரை திட்டி அனுப்பிட்டாங்க. நான் சொல்றது முப்பத்தி எட்டு வருஷத்துக்கு முன்னாடி.
மறுமணத்தை ஏற்கும் பக்குவம் எங்க அப்பா அம்மாவுக்கு இல்லை. அதுவுமில்லாமல், வேற்று மதத்தை சேர்ந்தவரை மறுமணம் செய்துகிட்டா எனக்கு அப்புறம் இருக்கிற மூனு தங்கச்சிங்க வாழ்க்கை என்னாகும்னு நினைச்சாங்க.
கடவுள் புண்ணியத்துல உனக்குன்னு ஒரு குழந்தை உருவாகிடுச்சு. இனி அந்த குழந்தை தான் உனக்கு வாழ்க்கைன்னு எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சாங்க.
எனக்கு அப்ப இருபது வயசு. பொட்டு வைக்க கூடாது, வெளிய போக கூடாது.. என் சாப்பாட்டுல நிறை உப்பு காரம் சேர்க்க கூடாதுன்னு என்னை ரொம்பவே கட்டுப்பாடா வச்சிருக்க ஆரம்பிச்சிட்டாங்க.
எனக்கு அந்த சூழல்ல இன்னொரு கல்யாணம் அப்படின்னு எல்லாம் எண்ணம் இல்லை. ஆனா எனக்கு எங்க சொந்த வீடே பிடிக்காம போயிடுச்சு.
அந்த மாசம் ஹாஸ்ப்பிட்டல் செக்அப் போன இடத்துல நான் மறுபடியும் ரிச்சர்டை பார்த்தேன்.
‘உன்கூட பேச தான் நான் ஊருக்கு போகாம இன்னும் இருக்கேன். ரவியும் நானும் ஒன்னா தான் வார் சமயத்துல இருந்தோம். கல்யாணம் முடிஞ்சு ஒரே வாரத்துல அவன் வந்துட்டான்னு எனக்கு தெரியும். உன் மேலே இரக்கப்பட்டு எல்லாம் கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு சொல்லலை. என்னமோ, உன்னை பார்த்ததும் உன்கூட வாழ்க்கை நல்லா இருக்கும்னு எனக்கு தோணுது. இந்த குழந்தை பிறக்கிறப்ப என்னோட குழந்தையா பிறக்கணும்னு ஆசை படறேன். என்னை கல்யாணம் பண்ணி என்கூட வா.. நம்ம சந்தோசமா வாழலாம்’ அப்படின்னு தைரியமா என் கிட்ட சொன்னாங்க.
எனக்கு காரணம் எல்லாம் தெரியலை. அந்த நொடி, இவர் கூட என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுச்சு.. அங்க இருந்து அப்படியே அவர் கூட கிளம்பிட்டேன்.
அங்க இருந்து நேரா அவர் வீட்டுக்கு போனோம். வயத்துல பிள்ளையோட ஒரு மருமகளை யார் ஏத்துப்பாங்க.
அப்புறம் அங்க இருந்து ரிஜிஸ்டர் மேரேஜ் முடிச்சு அவர் கூட என்னை குவாலியர் ஆர்மி குவாட்டர்ஸ் அழைச்சிட்டு போயிட்டாங்க. எங்களுக்கு துணையா நின்னது ரவியோட அம்மா.. அவங்க எங்க கூடவே வந்திட்டாங்க. ரவி அவங்களுக்கு ஒரே பையன். இருக்கிற வரை எங்களோட தான் இருந்தாங்க அத்தம்மா..
எங்க பொண்ணு ஜான்ஸி அங்க தான் பொறந்தா.. ப்ளஸ் டூ மட்டுமே படிச்சிருந்த என்னை அதுக்கு அப்புறம் ரிச் தான் படிக்க வச்சாங்க.. எனக்கு படிப்புல இருந்த ஆர்வத்தை பார்த்து நிறைய நிறைய படிக்க வச்சாங்க. அத்தம்மா எங்க கூடவே இருந்ததால அவங்க ஜான்சியை பார்த்துக்கிட்டாங்க.
அப்புறம் படிச்சு முடிச்சு அங்கேயே வேலைக்கும் போக ஆரம்பிச்சேன். அவ்வளவு காதலையும் அன்பையும் அன்னில இருந்து இன்னி வரைக்கும் தெகிட்ட தெகிட்ட கொடுத்துட்டே இருக்காரு ரிச். அவர் ரிட்டையர் ஆனதும் நாங்க இங்க வந்துட்டோம்.
இது தான் எங்க கதை..”
பிரமிப்பாக இருந்ததது ரத்னாவிற்கு.. எப்படி ஒரு அன்பு..
“என் அனுபவத்துல சொல்றேன்.. மறுமணம் தப்பு இல்லை ரத்னா”
“கண்டிப்பா நீங்க சொல்றதை நான் ஒத்துகிறேன்.. ஆனா அது ஒவ்வொருத்தர் வாழ்க்கையை பொறுத்தது. எனக்கும் கண்ணத்தானுக்கும் உள்ள பந்தம் வெறும் வார்த்தையால வடிக்க முடியாது.. அது உணர்வு ரீதியானது.. என் உணர்வோடு கலந்திருக்காங்க என் கண்ணத்தான்.
அவர் இறந்திட்டதா நான் ஒரு நாளும் நினைக்கவே இல்ல.. என்னை பொறுத்தவரைக்கும், எதுக்கு நாங்க இரண்டு பேரா இருக்கணும்னு கண்ணத்தான் எனக்குள்ளவே கலந்துட்டாங்க.. நான் அப்படிங்கிறது நான் மட்டுமே இல்லை, எனக்குள்ள இருக்கிற கண்ணத்தானும் தான்”
இப்படியும் ஒருவரை காதலிக்க முடியுமா என்று நந்திதா ரத்னாவை இப்பொழுது ப்ரமிப்பாக பார்த்தார்.
“ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு வகை. எப்படி இருந்தாலும் காதல் அழகு தான்!
இல்லையா?” என்றார் நந்திதா சிரித்து கொண்டே.
“அப்புறம் ஜான்சி எங்க இருக்காங்க?”
“அவளும் அவங்க அப்பா மாதிரியே ஆர்மில தான் இருக்கா.. ஆனா மெடிக்கல் ஆஃபிஸர்.. அவ வீட்டுக்காரரும் அங்கேயே மெடிக்கல் ஆஃபிஸர் தான்.. லவ் மேரேஜ்”
“ஓ.. சூப்பருங்க.. குழந்தைங்க..”
“அவளுக்கு ட்வின்ஸ்.. பசங்க.. ரெண்டு பேரும் காலேஜ் படிக்கிறாங்க..இரு போட்டோஸ் காட்றேன்” என்று அவர்கள் குடும்ப புகைப்படங்களை எல்லாம் எடுத்து காட்டினார்.
இருவரும் பேசிக்கொண்டே நேரம் போனதே தெரியவில்லை.
அதற்குள் அசத்தலான மத்திய விருந்தை தயார் செய்துவிட்டு இவர்களை அழைத்தனர் விக்கியும் ரிச்சர்டும்.
புல்கா.. தந்தூரி சிக்கென். பன்னீர் மசாலா, தயிர் சாதம், ஊறுகாய் என்று அசத்தலாக இருந்தது.
மகழ்ச்சியாக உணவை முடித்து கொண்டு புறப்பட்டனர் ரத்னாவும் விக்கியும்.
வீட்டிற்கு வந்து கார்த்திக்கு அழைத்து அங்கே சென்று வந்த கதை எல்லாம் கூறினார் ரத்னா.
அங்கே கார்த்தியோ, “ஒரே லவ் ஸ்டோரியா கேட்க வேண்டியதா இருக்கு. என் லவ் ஸ்டோரிய அடுத்த கட்டத்துக்கு எப்படி கொண்டு போறதுன்னு தான் புரியலை” என்று தன்னையே நொந்து கொண்டான்.
அம்மாவிடம் போன் பேசிவிட்டு மனம் மீண்டும் எழிலிடம் எப்படி காதலை சொல்லாம் என்று யோசிக்க தொடங்கவும் அவனால் முழுமனதாக படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அது இன்னும் அவனுக்கு மன அழுத்தத்தையே கொடுத்தது. யோசித்து கொண்டே எவ்வளவு நேரம் சென்றது என்றே தெரியவில்லை.
இது வேலைக்கு ஆகுது. இப்பொழுதே எழிலுக்கு அழைத்து கூறிவிடலாம் என்று மணியை கூட பார்க்காமல் எழிலரசிக்கு அழைத்தான்.
எழிலும் தமிழும் தான் ஒரே அறையில் எப்பொழுதும் போல தூங்கி கொண்டிருந்தனர்.
எழிலின் கைபேசி அடிக்கவும், “யார் எழிலு நடு ராத்திரில போன் அடிக்கிறது?” என்றாள் தமிழ் தூக்க கலக்கத்தில்.
எழிலோ “போடி” என்று போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு திரும்பி படுத்து கொண்டாள்.
“அக்காடீ உன் போன் தானே அடிக்குது” என்று தமிழ் அவளை திட்டிக்கொண்டே போனை எடுத்து பார்த்துவிட்டு,
“யாரது படிப்ஸ் பொறுப்ஸ்ன்னு வருது” என்றாள் சத்தமாக.
உடனே வாரி சுருட்டிகொண்டு எழுந்த எழில், தமிழ் கையில் இருந்து போனை பிடிங்கி.. “ஹலோ பாஸ்.. என்ன இந்நேரம் கூப்பிட்டிருக்கீங்க .. உடம்பு நல்லா தானே இருக்கு?” என்றாள் பதட்டமாக.
அப்பொழுது தான் கடிகாரத்தை பார்த்த கார்த்தி, அது நள்ளிரவு ஒன்றரை மணி என்று காட்டவும் தலையில் அடித்திக்கொண்டான்.
“சாரி எழில்.. உன்கிட்ட சொல்லிடலாம்னு முடிவு செஞ்சதும் டைம் பார்க்காம கால் பண்ணிட்டேன்..”
எழில் பேச ஆரம்பிக்கவுமே தமிழும் எழுந்து அமர்ந்துவிட்டாள். தூக்கம் எல்லாம் தூரம் சென்றுவிட்டது.
“நீ தூங்கு எழில். நான் வேணா நாளைக்கு கூப்பிடறேன்” என்றான் தப்பு செய்து விட்ட சிறுவன் போல.. நிசப்தமான நள்ளிரவு நேரம் என்பதால், ஸ்பீக்கர் போடாமலே கார்த்தி பேசுவது வெளியே கேட்டது.
“அய்யயோ… இப்படி கால் பண்ணிட்டு நீங்க சொல்லாம வச்சிட்டீங்கனா அக்கா என்ன தூங்கவே விட மாட்டா..” என்றாள் தமிழ் வேகமாக.
இப்பொழுது ஜெர்க்கானது என்னவோ கார்த்தி தான்.
“ஏய் சும்மா இருடி” என்று தங்கையின் காதை திருகி விட்டு,
“பாஸ் ஒரு நிமிஷம் இருங்க பாஸ்.. நான் சத்தமில்லாமல் மொட்டைமாடிக்கு வந்துடறேன்..” என்றாள் எழில் ரகசிய குரலில்.
“வேணாம் எழில், இந்த நேரத்துல தனியா எப்படி போவ? சாரி சாரி நான் இந்த நேரத்துக்கு கூப்பிட்டிருக்க கூடாது. நான் அப்புறம் பேசுறேன் எழிலு”
“நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க பாஸ்.. இங்க பயம் எல்லாம் இல்லை.. வீட்டுக்குள்ள தான் மாடிப்படி இருக்கு..” என்று கூறிகொண்டே பூனை நடை நடந்து மாடிக்கு சென்றுவிட்டாள்.
அடுத்த ஒரு நிமிடம் இருவர் மூச்சு காத்து சத்தம் மட்டும் தான் கேட்டது.
கார்த்திக்கு இதயம் திக் திக் என்று அடித்தது.
“வந்துட்டேன் பாஸ்” என்றாள் எழில் மெல்ல.
“எழில்.. எனக்கு ஒரு மாதிரி படபடப்பா இருக்கு. ஏதோ டக்குன்னு போன் பண்ணிட்டேன். டைம் பார்க்காம சொதப்பிட்டேன்” என்றான் பாவமாக.
“சொதப்பல்ஸ் கூட ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு..”
“எழிலரசி.. நான் என்ன சொல்ல போறேன்னு நீ கெஸ் பண்ணிருப்ப”
“ஆமா, அதுக்கு நான் என்ன பதில் சொல்வேன்னு நீங்க கூட தான் கெஸ் பண்ணிருப்பீங்க.. அதனால டென்ஷன் ஆகாம தைரியமா சொல்லுங்க பாஸ்”
“——————–”
“——————–”
கார்த்தி தொண்டையை செருமும் சத்தம் கேட்டது.
“நானும் இங்க மொட்டை மாடிக்கு வந்திட்டேன் எழில் “
“சூப்பர்.. வீடியோ கால் வரவா”
“இல்ல எழில்.. நீயும் நானும் பார்த்துகிறது புதுசு இல்லையே.. நான் சொல்றதை கேளு.. இங்க ஜில்லுன்னு காத்து அடிக்குது.. கருப்பு கலர்ல இருக்கிற வானம் கூட அழகா இருக்கு”
“ஹ்ம்ம்..”
“ஏன்னா, எனக்குள்ள தான் வெளிச்சமா நீ நிறைஞ்சிருக்கியே!”
“ஹ்ம்ம்..”
“இந்த வெளிச்சம் எனக்கு எனக்கே எனக்கா எப்பவுமே வேணும்.. என் வாழ்க்கைக்கு வெளிச்சமா நீ வரியா எழிலரசி”
“பாஸ்ஸ்ஸ்..”
“எனக்கு சரியா காதலிக்க தெரியுமான்னு கூட தெரியலை.. குடும்பம் படிப்பு வேலைன்னு இயந்திரக்கதியா தான் என் யோசனைகள் இருக்கும். ஆனா உன்னோட இருக்கிற நேரம் உன் கூட பேசுற நேரம் உன்னை நினைக்கிற நேரம் எல்லாம் என் மனசு லேசா.. ஒருவித அமைதியா.. இருக்கிற மாதிரி இருக்கு எழில்.. நாம காதலிக்கலாமா எழில்?”
“நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்லாம, காதலிக்க கூட காதலிக்கிட்ட அவ விருப்பத்தை கேட்கிற, நீங்க ரொம்பவே ஸ்பெஷலான ஆளு தான்..”
“உன் பதிலை சொல்லு எழில்”
“காதலிக்கலாம் பாஸ்.. நம் காலம் பூரா காதலிக்கலாம்.. எனக்கு ஓகே பாஸ்”
“ரொம்ப சந்தோசமா இருக்கு எழிலரசி.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ சோ மச்”
“எனக்கும் தான் ரொம்ப சந்தோசமா இருக்கு.. சிலுசிலு காத்துல.. நட்சத்திரங்கள் நம்மல பார்த்து கண் சிமிட்ட.. இந்த இரவு வானம் சாட்சியா நீங்க சொன்ன உங்க காதல்.. நம்ம காதல்.. எனக்குள்ள பரவசமா நிறைஞ்சு இருக்கு.. ஐ லவ் யூ பாஸ்”
“சரி எழில்,நேரமாயிடுச்சு. நீ சீக்கிரமா பத்திரமா ரூமுக்கு போ.. நாம நாளைக்கு பேசலாம்”
எழிலும் சரி என்று கூறி கைபேசியை வைத்து விட்டாள்.
அமைதியாக கீழே இறங்கி அறைக்குள் புகுந்துகொண்டாள்.
கார்த்தி சொன்னதை அசைபோட்டுக்கொண்டே சுகமாக கண்ணயர்ந்தாள்.
கார்த்தியும், நிறைந்த மனதுடன் அவன் அறைக்கு சென்று அமைதியாக படுத்து கொண்டான்.
இருவர் உதடுகளிலும் தங்கள் காதலை வெளிப்படுத்திய மகிழ்ச்சியில் சின்ன புன்னகை ஒன்று உறைந்திருந்தது.
———————
error: Content is protected !!