Skip to content
Post Views: 143
அத்தியாயம் 26
இன்னும் ஒரு நாள் அங்கே தாய் வீட்டில் சீராடிவிட்டு மனநிறைவுடன் அங்கே இருந்து கிளம்பினார்கள்.
Advertisement
இவர்கள் வீட்டிற்கும் அனைவரையும் அழைத்து விட்டு வந்தனர்.
“இத்தனை வருஷம் சொந்தம் பந்தம் இல்லாமல் தனியா இருந்தவரைக்கும் போதும். இனி அடிக்கடி ஊருக்கு வந்து செல்லவேண்டும்” என்று தாத்தா பாட்டி பேரன்களிடம் வற்புறுத்தி கூறினார்கள்.
Advertisement
Advertisement
ஊருக்கு வரும்பொழுது என்ன நடக்கும் என்ற டென்ஷனில் அமைதியாக இருந்த பயணம் திரும்புகையில் சலசலவென பேச்சுகளோடு சென்றது.
வீட்டிற்குக்கு வந்த பிறகு ரத்னா கார்த்தி விக்கி என்று அனைவரும் தனித்தனியாக எழிலுக்கு கைபேசி மூலம் அழைத்து ஊரில் நடந்தவைகளை கூறினார்கள். எழிலும் ஆசையாக கேட்டு கொண்டாள்
Advertisement
ரத்னா ரேவதிக்கு அழைத்து அவரிடமும் அனைத்தையும் கூறினார். ரேவதியின் காதில் புகை வரும் அளவிற்கு எழிலின் புகழை பாடினார். “இப்படி தங்கமான புள்ளைய பெத்ததுக்கு ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கணும் ரேவதி நீ” என்று.
ஊரிலிருந்து ரத்னாவின் அப்பாவும் அம்மாவும் இவர்களுடன் வந்து ஒரு வாரம் தங்குவதாக கூறி வந்திருந்தனர்.
முதன் முறையாக தாத்தா பாட்டி உடன் தங்கும் இந்த நாட்களை கார்த்தியும் விக்கியும் மிகவும் அனுபவித்தனர்.
என்னதான் பெற்றோர்கள் பார்த்து பார்த்து கவனித்தாலும் தாத்தா பாட்டியின் கவனிப்பு என்பது தனி சுகமல்லவா? ஒருவித மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர் ரத்னாவும் பிள்ளைகளும்.
காலையில் மகளுடன் கடைக்கு வந்தார் சுப்பிரமணியன். தொழிலின் சில நெளிவு சுளிவுகளை கற்றுக்கொடுத்தார்.
இன்னும் கார்த்தி வேலைக்கு சேர நான்கு நாட்களே இருந்தது. அதற்கு முன்னர் எழிலும் கார்த்தியும் தனியே சந்திக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.
மறுநாள் மதியம் மூன்று மணி போல இருவரும் ஒரு காஃபி ஷாப்பில் சந்திப்பதற்கு ரகசிய திட்டம் போட்டார்கள்.
——————
ஒரு மாதம் அன்பரசி வீட்டில் இருந்துவிட்டு வீடு திரும்பினார்கள் சண்முகம் சாந்தி தம்பதியினர். அன்பரசிக்கு இப்பொழுது மசக்கை தொந்திரவு குறைந்துவிடவே, இனி நாங்கள் சமாளித்துக்கொள்வோம் என்று அருணும் அன்பரசியும் இருவரையும் மகழ்ச்சியாகவே அனுப்பி வைத்தனர்.
வந்து இறங்கியதுமே, குளித்துவிட்டு ஹோட்டலுக்கு கிளம்பிவிட்டார் சண்முகம்.
“இப்பதான்டா உங்க அப்பாக்கு உயரே திரும்பி வந்திருக்கு. ஓடறதை பாரேன்”, என்றார் சாந்தி பாலுவிடம்.
“விடும்மா பாவம் அப்பா “
“எதுக்கு இப்ப அவர் பாவம்ன்னு சொல்ற? என்ன இருந்தாலும் உனக்கும் உன் தங்கச்சிக்கு அப்பா தான் முதல்ல.. அம்மாலாம் சும்மா..” என்று அன்பரசி முறுக்கி கொண்டார்.
“உனக்கு மட்டும் என்னம்மா.. உனக்கும் அப்பா தானே முதல்ல.. ஒரு சின்ன பையனை தனியா விட்டுட்டு போனோமேன்னு கவலையா பட்ட? ஜாலியா அப்பாகூட பெங்களூரை சுத்தி பார்த்துட்டு …”
“யாருடா அந்த சின்ன பையன்? எங்க இருக்கான்?” என்று வாய் கேலி பேசினாலும், சாந்தியின் கை மகனுக்கு பிடித்த இடியாப்பத்தை செய்து கொண்டிருந்தது.
“போம்மா…”
“டேய் இதை எல்லாம் விடு. புது வரன் ஒன்னு வந்திருக்கு டா. ஜாதகம் எல்லாம் பொருந்தி இருக்கு. கவியோட மாமியார் தான் சொன்னாங்க. கவின் தம்பி கூட வேலை செய்ற பையனோட தங்கச்சியாம். பொண்ணு போட்டோ எல்லாம் அனுப்பி இருக்காங்க என் போன்ல.. எடுத்து பாரு பாலு..” என்றார் சாந்தி.
“உனக்கு பிடிச்சா சரிதான் ம்மா” என்று அசட்டையாக கூறினான் பாலு.
எங்கே இருந்து வந்தார்களோ, பாலு போனை எடுப்பதற்கு முன், எழில் தமிழ் குகன் மூவரும் அடித்து பிடித்து சாந்தியின் போனை எடுத்து பெண் போட்டவை பார்த்தனர்.
“பெரியம்மா, சூப்பர் பெரியம்மா.. பொண்ணு அழகா இருக்காங்க” என்றாள் தமிழ்.
“நல்லா அழகா இருக்கா இல்ல தமிழு?” என்றார் சாந்தியும் ஆசையாக.
“டேய் நானே இன்னும் பார்க்கலை, கொடுங்க” என்று வந்தான் பாலு.
“கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமா நீ தானே அண்ணா பார்த்துட்டே இருக்க போற..” என்றான் குகன். போனை பாலுவிடம் கொடுக்காமல் மூவரும் விளையாட்டு காட்டி கொண்டிருந்தனர்.
“பொண்ணு பேரு லாவண்யா..” என்றார் சாந்தி.
அதற்குள் ரேவதியும் மீனாவும் “அக்கா..” என்று வந்துவிட்டார்கள்.
பின் பெண்ணின் விவரங்களை சாந்தி கூற,
“அக்கா இவங்க.. பொண்ணோட அப்பா, எங்க அப்பாக்கு தூரத்து சொந்தம் தான். எனக்கு அண்ணன் முறை வேணும். அப்பா அம்மாகிட்ட விசாரிக்கலாம் அக்கா” என்றார் மீனா உற்சாகமாக.
“நல்லதா போச்சு மீனா. நீ விசாரிச்சு சொல்லு. நல்ல இடம்னா மேல பேசி முடிச்சிடலாம்.”
வீட்டில் அப்பொழுதே கல்யாண களை வந்தது போல இருந்தது.
——————-
மாலை மூன்று மணிக்கு சரியாக கார்த்தி எழில் கூறி இருந்த காஃபி ஷாப்பில் இருந்தான். அதிக நேரம் காக்க வைக்காமல் எழிலும் வந்து சேர்ந்தாள்.
“அப்புறம் பாஸ்.. ஒரு வழியா தனியா சந்திக்க வந்துட்டீங்க. நான் கூட இது மாதிரி சீன் எல்லாம் கனவுல மட்டும் தான் வரும்போலன்னு நினச்சிட்டேன்”
“எனக்கும் ரொம்ப நாளா இப்படி சந்திக்க ஆசை தான் எழில். என்ன செய்ய சந்தர்ப்பமே அமையல. சரி வா, முதல்ல இடம் பார்த்து உட்காரலாம்”
“என்ன குடிக்கிறீங்க பாஸ்? ஆர்டர் பண்ணிடலாம்”
“நான் காஃபி ஷாப்க்கு எல்லாம் அதிகம் போனது இல்ல. நீ தானே இந்த இடம் நல்லா இருக்கும்னு சொன்ன? எது நல்லா இருக்குமோ அதே ஆர்டர் பண்ணிடு எழில்.”
உண்மையில் அந்த இடம் மிகவும் அமைதியாக இருந்தது. இவர்கள் முதல் மாடியில் அமர்ந்திருந்தார்கள். அங்கே இருந்து கடற்கரை அழகாக தெரிந்தது. அலைகளின் ஓசையும் மெல்லிய இசையாக ஒலித்தது.
“கோல்டு காஃபி சொல்லவா? நல்லா இருக்கும்.”
“காஃபி சூடா இருந்தா தானே எழில் நல்லா இருக்கும். எனக்கு லேசா சூடு குறைஞ்சாலே பிடிக்காது.”
“அது அப்படி இல்ல பாஸ்.. கோல்டு காஃபியையும் பில்டர் காஃபியையும் கம்பேர் பண்ண கூடாது. ரெண்டும் வேற வேற. இது காஃபியோட கசப்பும் சாக்லேட்டோட இனிப்பும் சேர்ந்து, ஐஸ் போட்டு ஜில்லுன்னு புது டேஸ்ட்டா இருக்கும்… ஜில்லுன்னு ஒரு காதல் மட்டும் இல்லை பாஸ், அதுகூட ஜில்லுன்னு ஒரு காஃபியும் நல்லாவே இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க..”
எழில் சொன்னதை கேட்டு கார்த்தி ரசனையாக அவளை பார்த்துக்கொண்டு அவன் சென்டிமீட்டர் சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்தான்.
பின் இருவருக்கும் எழிலே கோல்ட் மோக்கா காஃபியை ஆர்டர் செய்தாள்.
அங்கே அந்த நேரத்திலும் கூட்டம் இருந்தது.
“அப்புறம் சொல்லு எழில்.. அடுத்து நாம என்ன செய்யலாம். இப்பவே வீட்ல சொல்லிடலாமா? உங்க வீட்ல ஒத்துப்பாங்களா? முன்ன அம்மா மட்டும் தான், லவ்வுன்னு சொன்னா ஓகே சொல்லிடுவாங்கன்னு நினைச்சேன். அதுவும் பொண்ணு நீன்னு தெரிஞ்ச அம்மாவே ரொம்ப சந்தோசப்படுவாங்க. இப்ப தாத்தா பாட்டி எல்லாம் என்ன சொல்லுவாங்களோன்னு இருக்கு”
“சொல்லலாம் பாஸ். இப்ப என்ன அவசரம். கொஞ்ச நாள் யாருக்கும் தெரியாம லவ் பண்ணலாமே.. இப்படி யாருக்கும் தெரியாம சந்திக்கிறது.. பேசுறது எல்லாம் த்ரில்லிங்கா இருக்கு தானே? திருட்டு மாங்காய்க்கு தான் ருசி அதிகமாம்..”
“அடிப்பாவி.. நான் கூட நீ வீட்ல உடனே சொல்லணும்னு சொல்லுவன்னு நினைச்சேன்”
“ஹ்ம்ம்.. வேற என்ன எல்லாம் நினைச்சீங்க?”
பேசிக்கொண்டிருக்கையில் இவர்கள் ஆர்டர் கொடுத்திருந்த கோல்டு காஃபியும் வந்துவிட்டது.
அழகிய கண்ணாடி க்ளாஸ்க்ளில், சாக்லேட் நிறத்தில் ஐஸ் கியூப்களை மிதக்க, அதன் மேலே கோகோ பொடி தூவி ஸ்ட்ராவ் போட்டு அழகா இருந்தது.
எழிலரசி மெதுவாக ஒரு வாய் காஃபியை உரிந்து குடித்தாள். காஃபியின் சில்லிப்பு அவள் கன்னத்தில் தெரிவது போல தோன்றியது கார்த்திக்கு.
அவன் பார்வை அவள் கன்னத்தில் படிய, அது இன்னும் சில்லிப்பை கூட்டியது.
“என்ன பாஸ் நீங்க.. உங்க காதலை எல்லாம் பார்த்தே எனக்குள்ள கடத்திடுவீங்க போலயே.. குடிங்க பாஸ்..”
“அது என்ன பாஸ்.. என்ன பார்த்த முதல் நாள்ல இருந்து அப்படி தான் கூப்பிடற?” என்று கேட்டுக்கொண்டே அவனும் மெல்ல காஃபியை ருசி பார்த்தான்.
“நான் பொதுவா ப்ரோன்னு தான் கூட படிக்கிற பசங்களை எல்லாம் கூப்பிடுவேன். என்னமோ உங்களை ப்ரோன்னு கூப்பிட தோணலை.. பாஸ்ன்னு தானா வந்திடுச்சு.. பிடிச்சிருக்கவே அதையே கன்டிநியூ பண்ணிட்டேன்.. பிடிக்கலையா?
“பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு.. ஆனா, நம்ம ரெண்டு பேர்லயும் நீ தான் பாஸ் மாதிரி இருக்க..”
“நான் தான் நீங்க.. நீங்க தான் நான்.. சோ நீங்க தான் பாஸ்..”
ஸ்வீட் நத்திங்ஸ்.. என்று இருவரும் அடுத்த ஒரு மணி நேரம் என்ன பேசினோம் என்று தெரியாமலே பேசிக்கொண்டிருந்தார்கள்.
அந்த ஒரு மணி நேரமும் ஜில்லென்று காஃபியும் இவர்களுக்கு துணையானது.
———–
மீனா அவர் அம்மாவிற்கு போன் செய்து லாவண்யாவின் விவரம் கூறி, அவள் ஜாதகம் பாலுவிற்கு வந்திருப்பதாக கூறி,” பெண் எப்படி, அந்த அண்ணன் அண்ணிக்கூட எனக்கு ரொம்ப பழக்கம் இல்லை. அவங்கலாம் எப்படி?” என்று விசாரித்தார்.
மீனா விசாரிக்க ஆரம்பித்ததுமே, அங்கேயும் பரபரப்பு ஆரம்பமாகியது. அவர் அம்மா அவரின் நாத்தனாரிடம் பேச, அவர் அவரின் அண்ணியிடம் பேச என பெண்ணின் அம்மாவரை சென்றது பேச்சு.
சுத்தி சுத்தி நம்ம சொந்தத்துக்குள்ளையே வருதே என்று லாவண்யாவின் அம்மாவிற்கு மகிழ்ச்சியாக போனது.
அவரே மீனாவிற்கு அழைத்து பேசினார். அவர் அழைத்தது மதிய உணவு நேரத்தில்.அப்பொழுது சிங்காரமும் உடன் இருந்தார்.
“மீனா நாந்தான் லலிதா பேசுறேன். உனக்கு அண்ணி முறை வேணும். எப்படின்னா ” என்று அவர் பேச ஆரம்பித்ததுமே மீனாவிற்கு புரிந்து போனது.
“சொல்லுங்க அண்ணி, தெரியுது. காலையில தான் அம்மாகிட்ட பேசினேன்.”
“அது தான்மா நம்ம லாவண்யாவை உங்க வீட்டுக்காரர் சொந்தத்துல கேட்குறாங்க.”
“சொந்தம் எல்லாம் இல்லை. இவங்க அண்ணன் பையன். எங்க பையன் தான்.” என்றார் மீனா.
“அதான் மீனா, அங்க உங்க வீட்டு ஆளுங்க எப்படி. நேரடியா உங்கிட்ட கேட்டுடலாமேன்னு தான். ஒரே பொண்ணு, செல்லமா வளர்த்துட்டோம்..”
“இங்க எங்க வீட்லயும் எல்லா பிள்ளைகளையும் செல்லமா தான் அண்ணி வளர்க்கிறோம்”
அதற்கு மேல எப்படி பேசுவது என்று லலிதாவிற்கு புரியவில்லை. என்ன இந்த மீனா இப்படி பட்பட் என்று பேசுகிறாள் என்று. உண்மையிலும் மீனாவின் குணமே அதுதான். மனதில் பட்டத்தை பட்டென்று எப்பொழுதுமே சொல்லிவிடுவார். தப்பு என்றால் முகத்துக்கு நேரே சொல்லிடுவார்.
“நீங்க கூட்டு குடும்பம்னு முன்ன ஒருதடவை யாரோ சொன்னாங்க. பெரிய குடும்பம்னா வேலை நிறைய இருக்குமே.. இப்பவும் ஒண்ணா தான் இருக்கீங்களா? லாவண்யாக்கு அதிகம் வேலை செய்து பழக்கம் இல்லை. தப்பா நினைக்காதே.. வெளிப்படையா உன் கிட்ட கேட்கலாம்னு தான் உரிமையா கேட்கிறேன்”
“புரியது அண்ணி.. இப்ப தனி தனியா தான் இருக்கோம். ஆனாலும் பக்கத்து பக்கத்துல தான். நல்லது கெட்டது எல்லாம் ஒன்னாதான் இருப்போம்.
“சரி மீனா, உங்க ஓர்ப்படி என் பொண்ணை நல்லா பார்த்துக்குமா? உன்னை நம்பி தான் பொண்ணை கட்டலாம்னு யோசிக்கிறோம்“ என்று அவரது அண்ணி கூற,
“என்னையே அவங்க தான் இத்தனை வருஷமா பார்த்துக்குறாங்க.. தங்கமான மனசு அக்காக்கு. ஆனா என்னை நம்பி மட்டும் நீங்க பொண்ணை கொடுக்க வேண்டாம். யோசிச்சே முடிவு செய்ங்க. ”
“என்ன மீனா இப்படி சொல்ற?”
“இல்ல அண்ணி, நானும் வெளிப்படையாவே சொல்றேன். வாழ வந்த மருமகளை மகளா நாங்க பார்த்துப்போம். அதுக்காக உங்க மகளை உட்கார வச்சு இங்க எல்லாரும் சேவகம் செய்யணும்னு நீங்க நினைச்சா அது நடக்காது. இங்க எல்லாரும் வேலையை சேர்ந்து செய்வோம். இது உன் வேலை அது என் வேலைன்னு எல்லாம் இல்லை.
சும்மா கொஞ்சிட்டே இருப்பாங்கன்னு எல்லாம் சொல்லு முடியாது. ஆனா எல்லாரும் பாசமா இருப்பாங்க.
தப்புனா சொல்லத்தான் செய்வாங்க.. இப்ப உங்க வீட்ல உங்க பொண்ணு தப்பு செஞ்சா நீங்க கண்டிக்க மாட்டீங்களா? வர மருமகள் எங்க பொண்ணு மாதிரி தான். எங்க பொண்ணுங்களுக்கு எவ்வளவு சலுகையோ அதே அளவு சலுகை இருக்கும்.. சும்மா சொகுசா உட்கார்ந்திருக்கணும்னு நீங்க நினைச்சா வேற இடம் பார்த்துக்கோங்க அண்ணி.. இல்ல இந்த குடும்பத்துல ஒரு நபரா உங்க பெண் இருக்க ஆசைப்பட்டா எங்க வீடு மாதிரி நல்ல வீடு கிடைக்காது” என்று சொல்லிவிட்டார்.
“சரி மீனா.. நான் வீட்ல கலந்து பேசிட்டு உனக்கு சொல்றேன்.” என்று லலிதா வைத்துவிட்டார்.
இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த சிங்காரம், “என்ன மீனு இப்படி பட்டுனு சொல்லிட்ட?”
“பட்டுனு சொன்னாலும் பக்குவமா சொன்னாலும் கருத்து இது தானேங்க..”
“இப்ப நிறைய பொண்ணுங்க எல்லாம் எனக்கு சேலை கட்ட தெரியாது.. ஓ.. பால் காய்ச்சணுமான்னு.. கொஞ்சிட்டே இருக்குங்க.. அது எல்லாம் நமக்கு ஒத்து வராது இல்ல. இது என் வீடு… அப்படினு நினைப்பு வரணும். எல்லா வேலையும் செய்யணும் நான் சொல்லல.. ஆனா வேலை செய்றதுல தப்பில்லை.. ஒரு குடும்பத்துல அடிப்படை தேவை உரிமை உணர்வே தவிர உல்லாச உணர்வு இல்லை.”
“அடேங்கப்பா பாலுக்கு பொண்ணு பார்க்கறப்பவே இவ்வளவு பேசுற.. ஆனா இந்த இடம் அமையாட்டியும் பரவாயில்லைங்கிற மாதிரி பேசுற? “
“என்ன சொல்ல வரீங்க?”
“குகனுக்குன்னா இப்படி பேசுவியா? பாலுவுக்கு ஏற்கனவே ஆறுமாசமா பொண்ணு பார்க்கிறோம். இப்ப நீ கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கணும்”
“———————–”
“இல்ல மீனு , நான் என்ன சொல்ல வந்தேனா” என்று மனைவியின் அமைதியில் தன் தவறை புரிந்து கொண்ட சிங்காரம் அதை சமாளிக்க முற்படுகையில்,
“நான் முதல்ல தூக்கி வளர்த்த பிள்ளை பாலுதான்.. எனக்கு பாலுவும் குகனும் ஒன்னுன்னு யாருக்கும் நான் சொல்லி புரிய வைக்கவேண்டிய அவசியம் இல்லை” என்று அவரை மேலே பேசவிடாமல் தடுத்துவிட்டார்.
மீனா எப்பொழுதுமே நேர்மையை கடைப்பிடிக்க எண்ணுவார். நாலு வார்த்தை பேசினாலும் நச்சென்று இருக்கும் அவர் பேச்சு. சாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை எல்லாம் அவர் குறையாகவே நினைக்க மாட்டார். எப்பவும் எல்லாருமே முதல்ல நிக்கமுடியாது.
‘படகு சவாரி போறப்ப, பாரம் முன்னாடியும் பின்னாடியும் பாலன்ஸ் ஆகி இருக்கணும்.. அதே மாதிரி தான் வாழ்க்கையும். ஒருத்தவங்க முன்னாடி நின்னு வழி நடத்துனா, ஒருத்தர் பின்னாடி கவனமா காற்றின் திசை பார்த்து அந்த படகை கட்டுப்பாடில் வச்சுக்கணும். அப்பதான் படகு கவிழாது’ என்பார்.
திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் இவர்களுக்கு பிள்ளை இல்லை. எழில் பிறந்து ஓராண்டுக்கு பிறகே குகன் பிறந்திருந்தான். அவருக்கு கவி, பாலு, எழில், தமிழ், குகன் எல்லாருமே ஒன்றுதான்.
கணவர் தன்னை இப்படி கூறிவிட்டாரே என்று அவருக்கு வருத்தமாக போய் விட்டது.
“மீனா நான் என்ன சொல்ல வர்றேன்னு நீ சரியா புரிஞ்சிக்கல” என்று சிங்காரம் அவர் கூறியதை சரி பண்ண முயற்சித்தார் தான்.
“இத்தனை வருஷத்துல நீங்க தான் என்னை ரொம்பவே சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க..” என்று மூக்கை உறிஞ்சு கொண்டே மீனா உள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டார்.
சிங்காரம் தன்னையே நொந்து கொண்டு, சாயந்தரம் வந்து பேசிக்கலாம் என்று ஹோட்டலுக்கு கிளம்பிவிட்டார்.
“பெண்ணை பற்றி விசாரித்தாரா?” என்று கேட்க சாந்தி மீனா வீட்டிற்கு கிளம்புகையில் கவியரசியும் மகளை அழைத்துக்கொண்டு வரவே, அவர்களையும் அழைத்து கொண்டே இங்கு வந்தார்.
மீனா முகமே வாட்டமாக இருந்தது. அழுதத்திற்கு அடையாளமாக கண்கள் சிவப்பேறி இருந்தது.
“என்ன மீனா?” என்று சாந்தி பதற்றமாக கேட்கவே நடந்தவைகளை மீனா வருத்தமாக கூறினார். “நான் பாலுவை வேறயா நினைப்பேனா அக்கா” என்று கேட்கையில் அவர் குரல் கரகரத்தது.
“தம்பிக்கு பேச தெரியாது. உன்னை போய் தப்பா நினைப்பாரா? சின்ன பிள்ளையாட்டம் என்ன மீனா?” என்று சாந்தி சாமாதானம் கூறிக்கொண்டிருக்கையில், கவியரசி, “அது என்ன அத்தை அப்படி சொல்றீங்க? மாமா அத்தையை அப்படி சொல்லலாமா? அத்தை அப்படியா?” என்று பொங்க ஆரம்பித்துவிட்டாள்.
“அவ்வளவு எல்லாம் தம்பி யோசிச்சு பேசி இருக்க மாட்டாங்க கவி, நீ விடு..” என்று கவியை அடக்கி நிலா பாப்பாவுடன் விளையாட ஆரம்பித்தார்.
இரண்டு நிமிடங்களுக்கு பிறகு மீண்டும், “அத்தை மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தா அவங்க கண்ணெல்லாம் கலங்கி இருக்கும். இன்னிக்கு மாமா வரட்டும், நான் கேட்காம விடமாட்டேன்” என்று ஆரம்பித்தாள் கவி.
“இல்ல கவி, அக்கா சொல்ற மாதிரி உங்க மாமா வேணும்னு சொல்லி இருக்க மாட்டாங்க. நான் தான் ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டேன், விடுடா” என்று மீனா கவியை சமாதானம் செய்யும்படி ஆயிற்று.
“இல்ல அத்தை எனக்கு ஒரு கஷ்டம்னா நீங்க எப்படி பார்த்துக்குறீங்க.. அப்ப உங்களுக்கு ஒரு கஷ்டம்னா நான் எப்படி ஒன்னும் செய்யாம இருக்க முடியும்?”
கவியரசி பிடிவாதமாக நின்றாள்.
இது என்னடா? என்று சாந்தியும் மீனாவும் நொந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
சிறிது நேரம் கழித்து கவி, “ஆனா அத்தை, அந்த பொண்னோட அம்மா கேள்வியும் சரி இல்லையே“ என்றாள்.
“அது அப்படி இல்லை கவி, அவங்களுக்கு ஒரே பொண்ணு. ஒரு அம்மாவா அவங்க கவலையை நம்ம சொந்தம் தானேன்னு மீனாகிட்ட கேட்டிருக்காங்க.” என்றார் சாந்தி.
“நீங்க ஒரு ஆள் அத்தை. உங்களுக்கு சூதுவாது தெரியாது. எல்லாரையும் நல்லவங்கனே நினைப்பீங்க..” என்று நொடித்து கொண்டாள் கவி.
“இந்த இடத்தை சொன்னதே உங்க மாமியார் தானே கவி. அவங்களுக்கு சூதுவாது தெரியுமில்ல?” என்றார் சாந்தி சிரித்துக்கொண்டே.
“ஆங்.. அது எல்லாம் நல்லா தெரியும் எங்க மாமியாருக்கு..”
“அதுவுமில்லாமல் கவினுக்கு தெரிஞ்ச குடும்பம் போலவே”
“அதுக்காக எல்லாம் பாலு லைஃப்ல ரிஸ்க் எடுக்க முடியாது அத்தை.. நம்மளை நம்பி பெண் பார்க்கும் பொறுப்பை கொடுத்திருக்கான் பாலு. அப்ப நாம எப்படி பட்ட பொண்ணா பார்க்கணும், சொல்லுங்க?” என்று சாந்தியையும் குழப்பி விட்டாள்.
மீனாவோ, “நீ சொல்றது சரி தான் கவி. ஆனா அந்த அண்ணி ஒன்னும் தப்பா எல்லாம் கேட்கலை. எங்க அம்மா அவங்க ரொம்ப நல்ல குடும்பம்னு தான் சொன்னாங்க..” என்று கூறினார்.
“எனக்கு என்னமோ மனசுக்கு சரின்னு படலை. முதல்ல மாமா வரட்டும். உங்களை பேசுனதுக்கு மாமாவை என்னனு கேட்டுட்டு அப்புறம் இந்த பொண்ணு விஷயத்தை பார்ப்போம்” என்று சூலுரைத்தாள்.
சாந்தியும் மீனாவும் என்ன செய்ய என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.
.
“எல்லா தடவையும் எழிலே பெரிய மனுஷி மாதிரி பஞ்சாயத்து பண்றா.. இந்த தடவை, நாம சரியா ஒரு பஞ்சாயத்தை முடிக்கணும். எனக்கும் இந்த குடும்பத்து மேலே அக்கறை இருக்குன்னு எல்லாருக்கும் புரியட்டும்” என்று கவியரசி தனக்கு தானே கூறிக்கொண்டாள்.
———————
error: Content is protected !!