Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

25. Kala Palaniappan - காஃபி வித் காதல்

காஃபி வித் காதல் 28 – Prefinal

அத்தியாயம் 28

கார்த்தி வேலைக்கு சேர்ந்ததுமே முதலில் ரத்னாவிற்கு நகைகளை தான் வாங்கினான்.



Advertisement

“இப்ப எதுக்கு கார்த்தி எனக்கு இவ்வளவு நகை? வேற ஏதாவது செய்வோம் டா. வீட்டை கொஞ்சம் பெருசா கட்டலாம்ன்னு நான் நினைச்சிட்டு இருந்தேன்” என்றார் ரத்னா.

“வீடு தானே அம்மா, அடுத்து அது தான். ஆனா, அப்பா வாங்கி கொடுத்த நகை.. அதை விக்கும்போதே நான் நினைச்சது, நான் சம்பாரிக்க ஆரம்பிச்சதும் உங்களுக்கு முதல்ல அதை திரும்பி வாங்கி கொடுக்கணும்னு”

Advertisement

Advertisement

“அம்மா, அண்ணா மட்டும் இல்லை, நான் வேலைக்கு போனதும் நானும் உனக்கு வாங்கி கொடுப்பேன் நீ வாங்கிக்கணும்” என்றான் விக்கி.

இப்பொழுது ஊருக்கு அடிக்கடி சென்று வரும்பொழுது அங்கே விஷேங்களின் பொழுது உறவு பெண்கள் நிறைய நகைகளை அணிந்து வருவதை பார்த்திருந்தனர் இருவரும்.

Advertisement

நகை வாங்க ரேவதி வேலை செய்யும் கடைக்கு தான் இப்பொழுதும் சென்றனர். காமாட்சி அம்மாவையும் அழைத்து தான் சென்றார்கள். அதில் அவருக்கு அவ்வளவு சந்தோசம்.

ரேவதிகூட மனதிற்குள் நினைத்து கொண்டார். ‘இந்த பசங்களுக்கு எவ்வளவு பாசம் அவங்க அம்மா மேலே, என் பொண்ணும் தான் ஒரு வருஷமா வேலைக்கு போறா.. அம்மாக்குன்னு ஒரு மூக்குத்தியாச்சும் வாங்கி கொடுக்கணும்னு தோணுச்சா? ‘ பின் அப்படி நினைத்ததற்கு தன்னையே திட்டியும் கொண்டார்.

ஹோட்டல்களுக்கு கணக்கு பார்க்க ஆரம்பித்த நாளில் இருந்து மாதம் மாதம் ஒரு தொகையை அப்பாக்கள் கொடுக்கிறார்கள் என்றாலும் அது கார்த்தி வாங்கும் சம்பளத்தின் அளவு கிடையாதே.

பாலமுருகன் லாவண்யா கல்யாணம் சிறப்பாக நடந்தேறியது. அண்ணன் கல்யாணத்தில் ஓடியாடி வேலை செய்த எழிலரசியை அநேகம் பேர் பெண் கேட்டனர்.

“என்ன மீனா அக்கா.. நாம இன்னும் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணத்துக்கு பார்க்கலாம்னு நினைச்சா, இப்பவே நாலஞ்சு பேர் பொண்ணுக்கு கல்யாணம் பேசுறீங்களா?ன்னு கேட்டுட்டு போறாங்க” என்றார் ரேவதி மீனாவிடம்.

“ஒரு கல்யாணத்துல இன்னொரு கல்யாணம் நிச்சயம் ஆகுறது சகஜம் தானே ரேவதி. நீ ஒன்னும் வேண்டாம்னு எல்லாம் சொல்லாத.. விவரம் கேட்டுக்கோ.. வீட்ல கலந்திட்டு சொல்றோம்னு சொல்லு.. சரியா?”

“சரி அக்கா..”

இவர்கள் பேசுவதை கேட்ட தமிழரசி உடனே சென்று,

“அக்காடீ , பல பேர் உன்னை தான் வச்ச கண் எடுக்காம பார்த்துட்டு இருக்காங்க.. இதுல அம்மாகிட்ட வேற விசாரிக்கிறாங்க” என்று விஷயத்தை அக்காவிடம் கூறினாள்.

“வீட்ல கல்யாண வயசுல பொண்ணு இருந்தா நாலு பேர் கேட்க தானே செய்வாங்க தமிழு” என்றாள் எழில் அசால்ட்டாக.

“என்ன எழிலு.. டென்ஷன் ஆகாம இப்படி கூலா சொல்ற?”

“நடக்கிற எல்லா விஷயத்துக்கும் ஒரு காரண காரியம் இருக்கும் தமிழு. நீ சின்ன பொண்ணு.. அது எல்லாம் இப்ப உனக்கு புரியாது..”

“நிஜமாலுமே உனக்கு டென்ஷன் ஆகலையா?”

“இன்னும் ஒரு வருஷம் கழிச்சு தான் கல்யாணம்னு அப்பா அம்மா நினைக்கிறாங்க இல்லையா? அப்படி அவங்க நினைக்கிறப்ப, நானே போய், நான் ஒருத்தரை காதலிக்கிறேன் எனக்கு கல்யாணம் செஞ்சு வைங்கன்னு சொன்னா அது நல்லவா இருக்கும்?

ஆனா, இப்ப நாலு பேர் வந்து பொண்ணு கேட்கறப்ப, நம்ம பொண்ணுக்கு கல்யாணம் செய்யலாமான்னு யோசிக்க ஆரம்பிப்பாங்க.. அப்படி யோசிச்சா, நான் காதலை பத்தி சொல்ற சூழ்நிலை உருவாகுதா இல்லயா?”

“எப்படி அக்கா இப்படி?” என்றாள் தமிழ் ஆச்சர்யமாக.

“எல்லா விஷயத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கும். நாம நேர்மறையான பக்கத்தை பார்க்கணும்..”

தமிழ் மண்டையை ஆட்டி வைத்தாள்.

“சரி சரி வா, தாம்பூல பை இன்னும் கொஞ்சம் போட சொன்னாங்க பெரியம்மா” என்று தங்கையை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள் எழில்.

————

பாலு கல்யாணம் முடிந்து மறுவீடு விருந்து என்று அடுத்த ஒரு வாரம் அனைவருக்கும் கொஞ்சம் பிஸியாகவே சென்றது.

அவர்களை தனி குடித்தனம் வைக்க ஏற்பாடு செய்ய தொடங்கவுமே லாவண்யா குறுக்கே விழுந்து தடுத்து விட்டாள்.

“இல்ல லாவண்யா, தனியா இருந்தா நல்லது தானே ம்மா.. நாங்க யாரும் உன்னை தப்பா எல்லாம் நினைக்கவே மாட்டோம்” என்றார் சாந்தி மருமகளிடம்.

“ப்ளீஸ் ப்ளீஸ் அத்தை.. நான் உங்க எல்லார்கூடவும் சேர்ந்து தான் இருப்பேன். என்னை போக சொல்லாதீங்க” என்று அடமாய் கூறிவிட்டாள்.

லாவண்யாவிற்கு எப்பொழுதும் யாராவது உடன் இருக்க வேண்டும் என்று ஆசை.. அதே போல வேலை செய்ய எல்லாம் சோம்பி இருக்கவில்லை. பிடித்த வேலையை ஆசையாக செய்தாள். காலையில் கோலம் போடுவது என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். காலையில் வாசலை அடைத்து கோலம் போடுவாள். அதனை அனைவரும் பாராட்டவே பெண்ணுக்கு பெருமையாக இருந்தது.

என்ன இதில் பாதிக்கப்பட்டது பாலு தான். “வயசு பொண்ணு தனியாவா காலையில கோலம் போடும்? அதுவும் ஒரு மணி நேரம் போடறா.. நீ அவளுக்கு துணையா உட்கார்ந்து இரு” என்று சாந்தி கூறிவிட்டார்.

அன்பரசியையும் பிரசவத்திற்காக அழைத்து வந்துவிடவே, வீடே கலகலப்பாக இருந்தது.

அனுராதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்னும் ஒரு வாரத்தில் இருந்தது.

விஜயன் இம்முறை அவர்கள் வீட்டில் திதி கொடுக்கலாம் என்று கேட்டு கொள்ளவே அனைவரும் சரி என்றனர். முதலாம் ஆண்டு திதி சண்முகம் வீட்டிலே கொடுத்திருந்தார்கள்.

கவியரசி இரண்டு நாட்கள் முன்பே அப்பாவிற்கு உதவ என்று கணவனுடன் வந்துவிட்டாள்.

காலையிலே ஒரு முக்கிய வேலை என்று விஜயனை அழைத்துக்கொண்டு சென்றாள் எழிலரசி.

கவியோ, “நான் தான் இருக்கேன் இல்ல கவின். நீங்களும் கூட இருக்கும்பொழுது எப்போவும் போல இந்த எழில் எல்லாத்துக்கும் முன்ன நிக்குறதை பாருங்க. இப்ப எதுக்கு அப்பாவை கூட்டிட்டு போறா?” என்று பொருமி கொண்டிருந்தாள்.

கவினோ ‘என்னை காப்பாத்து பாலு..’ என்று பாலுவிற்கு மெசேஜ் போட்டுவிட்டான்.

பிறகு காலை உணவை அங்கே உண்ண வருமாறு சாந்தி கவிக்கு அழைத்து கூறினார்.

கவினும் உடனே வா வா போலாம் என்று நிலா பாப்பாவை தூக்கி கொண்டு கவியை கிட்ட தட்ட இழுத்து கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டான்.

கவினின் வேகத்தை பார்த்து பாலு, தமிழ், குகன், அன்பு என்று அங்கே ஒரே சிரிப்பலை.

“இங்க பாருங்க அத்தை எழில் செய்றது சரியா” என்று சாந்தியிடம் சென்றுவிட்டாள் கவி.

அப்பாடா.. என்று கவின் பாலு அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

“என்ன அண்ணா, இன்னுமா கவி அத்தாச்சி பார்த்து பயப்படறீங்க?” என்றாள் அன்பரசி.

“அட போம்மா அன்பு.. எழில் செய்றது சரியான்னு அரைமணி நேரமா என் காதை ஒரு வழி ஆக்கிட்டு இருக்கா? இவங்க சண்டை எப்ப தான் முடியுமோ?”

“அதுக்கு எல்லாம் வாய்ப்பில்லை தம்பி.. வாய்ப்பில்லை..” என்று வந்தார் ரேவதி.

அவன் அவரை பாவமாக பார்க்கவும், “இது எல்லாம் அவங்க சின்ன வயசுல ஆரம்பிச்சது. நாங்களும் வளர்ந்தா சரி ஆயிடும்னு தான் நம்புனோம்.. எங்கே.. என்ன ஒன்னு முன்னாடி எல்லாம் சிண்டை பிடிச்சு போடற சண்டை, இப்ப வாய் வார்த்தையோட நிக்குது..”

அவர் கூறிவிட்டு அடுப்படிக்கு சென்றுவிட்டார்.

“அதை விடுங்க அண்ணா, நாம இங்க பக்கத்துல கிரிக்கெட் விளையாடலாம் வாங்க” என்றான் குகன்.

காலை உணவை முடித்துவிட்டு, நைசாக நழுவிட்டனர் பாலு குகன் கவின் மூவரும்.

கவியை வீட்டில் செய்யும் வேலைகளில் திசை திருப்பி விட்டனர் அத்தைகள்.

எழில் விஜயனை அழைத்துக்கொண்டு சென்றது ஒரு கான்செர் இன்ஸ்டிட்யூடுக்கு.

“இங்க எதுக்கு எழில் வந்திருக்கோம்” என்றார் விஜயன் குழப்பமாக.

“மாமா இதை வேற யார்கிட்டயும் சொல்லவேண்டாம். அத்தையோட நினைவு நாளுக்கு, ஒரு ஏழை குழந்தை வைத்தியத்துக்கு காசு கொடுக்கனுன்னு நினைச்சிருந்தேன். ஒரு வருஷமா எனக்கும் சம்பளம் தராங்க தானே.. அதான்..

உங்களை மட்டும் எதுக்கு கூட்டிட்டு வந்தேனா, அத்தை வேற நீங்க வேற இல்லைதானே மாமா.. அதான். அதுவுமில்லாம நீங்க கூட வந்தா அத்தை சந்தோஷ படுவாங்க இல்ல?”

விஜயன் பேச்சற்று போனார்.

எட்டு வயது காயத்ரி என்ற சிறுமிக்கு நுரையீரல் புற்றுநோய். மிகவும் வசதி குறைவான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எழில் தான் அவர்களுக்கு உதவி இங்கே சேர்த்திருக்கிறாள் என்பது புரிந்தது. அவளிடம் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை மறுநாள் நடக்கவிருக்கும் அறுவை சிகிசைக்கு என்று கட்டினாள்.

பிறகு இருவரும் அங்கே இருந்து புறப்பட்டார்கள்.

“அதற்கு பிறகும் செலவுகள் இருக்குமே எழில்?” என்றார் விஜயன்

“ஆமா மாமா, பார்ப்போம் அதுக்கு ஏதாவது நம்மளால ஏற்பாடு செய்ய முடியுமான்னு..”

“இந்த குழந்தைக்கு ஆகுற செலவை இனி நான் செய்றேன் எழில்”

“சரி மாமா”

அந்த குழந்தையின் நிலைமை மனதிற்கு கொஞ்சம் அழுத்தமாக இருந்தாலும், தங்களால் உதவி செய்ய முடிகிறதே என்று தேற்றிக்கொண்டு அந்த குழந்தை பிழைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் இருவரும் வீடு திரும்பினார்கள்.

யாரிடமும் கூற வேண்டாம் என்று எழில் கேட்டுகொண்டாலும், இதை மறைப்பதில் விஜயனுக்கு விருப்பமில்லை. வீட்டு பெரியவர்களிடம் விஷயத்தை கூறினார் விஜயன். அவர் மிகவும் உணர்ச்சிவசமாக இருந்தார். என் பொம்மி மேலே எவ்வளவு பாசம் எழிலுக்கு என்று வியந்து போனார்.

பெரியவர்கள் அனைவருக்கும் இதில் எழிலரசியை நினைத்து பெருமிதமே!

“நீங்க எல்லாம் பிள்ளைக்கிட்ட வேலையை மட்டும் பிழிஞ்சு வாங்கிப்புட்டு, சம்பளத்துல மட்டும் கஞ்சத்தனம் பார்க்கவேண்டியது” என்று மீனா தான் நொடித்துக்கொண்டார்.

ரேவதிக்கு அவ்வளவு பெருமிதமாக இருந்தது. “என் பிள்ளை எனக்கு தங்கம் வாங்கி கொடுக்கலைனா என்ன? தங்கமான மனசு அவளுக்கு” என்று எண்ணி எண்ணி மகிழ்ந்து போனார்.

“நம்ம பொண்ணு சொக்கத்தங்கம் தான் இல்லைங்க?” என்றார் கணவரிடம்.

சரவணன் சிரித்து கொண்டார். அவருக்கும் மனதுக்கு நிறைவாகவே இருந்தது.

மறுநாள் அனுராதாவின் திதி நல்லபடியாக காலையில் நடந்தேறியது.

“யாரும்மா அத்தைக்கு டார்க் ப்ளூ கலர் சேலை வாங்கினது” என்றாள் அங்கே அனுராதாவிற்கு சாமி கும்பிட வைத்திருந்த புடவையை பார்த்து.

ரேவதி பதில் சொல்வதற்கு முன்பு அவளே மீண்டும்,

“அத்தைக்கு அந்த கலர் எடுக்கவே எடுக்காது. ராமர் ப்ளூ எடுத்திருக்கணும்.. யோசிக்கவே மாட்டீங்களா?” என்றாள்.

“இப்ப என்ன சொல்ல வர எழில்? எங்க அம்மாவுக்கு நான் ஒரு சேலை கூட செலக்ட் பண்ண கூடாதா? இப்ப அவங்க சொன்னாங்களா இது பிடிக்கலைன்னு?” என்று ஆரம்பித்தாள் கவி.

இப்படி அடிக்கடி கவிக்கும் எழிலுக்கும் மட்டும் முட்டிக்கொண்டது. இவர்கள் இருவரையும் சமாளிப்பது ஒன்றே சவாலான செயலாக இருந்தது.

ஒரு கட்டத்தில் என்னமோ செய்யுங்க என்று யாரும் அதை கண்டுகொள்ளவில்லை.

அன்று மாலை அப்பா அம்மாவை முருகன் கோவிலுக்கு அழைத்து வந்தாள் எழில்.

மூவரும் சாமி தரிசனம் முடித்து அங்கே பிரகாரத்தில் அமர்ந்தனர்.

“இந்த கோவிலுக்கு வந்தா அத்தை என்கூடவே இருக்க மாதிரி இருக்கும் ப்பா” என்றாள் அப்பாவிடம்.

அவர் வாஞ்சையாக மகளின் தலையை வருடி கொடுத்தார்.

ரேவதிக்கு மகள் எதையோ சொல்ல தான் இங்கு தங்களை அழைத்து வந்திருக்கிறாள் என்று புரிந்து போனது.

அப்படி என்ன சொல்ல போகிறாள் என்று ரேவதியின் மனது குதிரை வேகத்தில் ஓடி யோசிக்க ஆரம்பித்தது.

“உங்க ரெண்டு பேர்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்று ஆரம்பித்தாள் பீடிகையோடு.

இருவரும் அவளே சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தார்கள்.

“எனக்கு உங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும். இருந்தாலும் அத்தையை ஒரு இன்ச் அதிகம் பிடிக்கும். அத்தை இருந்திருந்தா கண்டிப்பா அவங்க கிட்ட தான் முதல்ல சொல்லி இருப்பேன். அதனால தான் இன்னிக்கு அத்தையோட நினைவு நாள்ல அத்தையோட ஞாபகம் நிறைஞ்சு இருக்க இந்த கோவில்ல உங்க கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்.

எனக்கு ஒருத்தரை பிடிச்சிருக்கு அப்பா, அவர்கூட என் வாழ்க்கை சந்தோசமா இருக்கும்னு நான் நினைக்கிறன் அம்மா..” என்றாள் நிதானமாக.

ஓரளவிற்கு அவள் பீடிகையில் பெற்றோர்கள் இப்படி ஒன்றை எதிர்பார்த்து இருந்தனர்.

அவர்கள் இப்பொழுதும் பேசவில்லை…அமைதியாகவே இருந்தனர்.

அவர்களின் அமைதியில் தான் எழிலின் திடம் கொஞ்சம் ஆட்டம் கண்டது.

“அது யாருன்னா, உங்களுக்கு தெரிஞ்ச பையன் தான்..” என்று இழுத்து நிறுத்தினாள்.

“————————”

‘என்ன ஒன்னுமே கேட்க மாட்டேங்குறாங்க?’ என்று கலக்கமாக அப்பா அம்மாவை பார்த்தாள்.

“கார்த்திகேயன்.. நம்ம நாகரத்னா ஆன்ட்டியோட பையன்..”

“————————”

அதற்கு மேலே என்ன சொல்வது என்று பெண்ணிற்கு புரியவில்லை.

பாவமாக அப்பா அம்மாவை பார்த்து அமர்ந்திருந்தாள்.

முதலில் சுதாரித்தது ரேவதி தான்.

“எதுக்கு இப்ப எங்க முகத்தை மாறி மாறி பார்த்திட்டு இருக்க? திடீர்ன்னு தானே சொல்லி இருக்க.. எங்களுக்கு நீ சொன்னதை உள்வாங்கவே நேரம் எடுக்கும். அதுக்கு அப்புறம் யோசிக்க நேரம் வேணுமில்லை..” என்றார் கொஞ்சம் சூடாக.

“கோவமா ம்மா? கோவமா ப்பா?” என்றாள் பெண் கொஞ்சம் கலங்கிய குரலில்.

“கோவம்னு இல்லை எழில்.. அதே சமயம் ஒரு அப்பா அம்மாவா எங்களுக்கு ஏமாற்றம் இல்லைன்னு சொல்ல மாட்டேன். அம்மா சொன்ன மாதிரி கொஞ்சம் டைம் வேணும்.. யோசிக்கலாம். இப்ப வீட்டுக்கு கிளம்புவோம் வாங்க” என்று மனைவி மகளுடன் வீட்டிற்கு கிளம்பினார் சரவணன்.

எழிலுக்கு காதலை பற்றி சொல்வதற்கு முன் இருந்த தைரியம், சொன்ன பிறகு ஏனோ இல்லை.

அவர்கள் சம்மதிப்பார்கள் என்றே நினைத்திருந்தாள். முதலில் திட்டுவார்கள் பிறகு நல்ல குடும்பம்.. தெரிந்த இடம்.. நல்ல பையன்.. நிச்சயம் சம்மதித்து விடுவார்கள் என்று நம்பிக்கையோடு இருந்தாள். இந்த அமைதி அவள் எதிர் பாராதது.

கோவிலில் இருந்து திரும்ப வந்த மூவரின் முகமும் சரி இல்லை என்று குடும்பத்தார்கள் கவனித்தார்கள். இருந்தாலும் யாரும் எதையும் கேட்டு கொள்ளவில்லை.

அன்றைய இரவு தூங்கா இரவாகி போனது அவர்கள் மூவருக்கும்.

கார்த்தியிடம் மட்டும் நடந்தை கூறி இருந்தாள். கார்த்திக்கும் படபடப்பாக இருந்தது. அம்மாவிடம் சொல்லிவிடலாமா என்று நினைத்தான். பின் முதலில் எழில் வீட்ல கொஞ்சம் செட்டில் ஆகட்டும். அப்புறம் இங்கே சொல்வோம் என்று இருந்துகொண்டான்.

மறு நாள் இரவு, “என்ன ரேவ்ஸ்.. என்ன செய்யலாம்?” என்றார் சரவணன் மனைவியிடம் தனிமையில். அதுவரை தன்னை கட்டுக்குள் வைத்திருந்த ரேவதி அழ ஆரம்பித்துவிட்டார்,

“நான் தான் தப்பா? அவளை நம்பி தானே கொல்கத்தா வரை அனுப்பி வச்சேன்? இப்படி என்னை ஏமாத்திட்டாளே?” என்றார் தேம்பிக்கொண்டே.

மனைவியை தோளில் சாய்த்துக்கொண்டார்.

“இல்ல ரேவதி, அப்ப காதல் எல்லாம் இல்லை. இது அதுக்கு அப்புறமா வந்திருக்கணும்”

“எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?”

“நம்ம பொண்ணை பத்தி நமக்கு தெரியதா ம்மா.. சில விஷயத்தை ரொம்ப ஆராய கூடாது. இப்ப அடுத்து என்னன்னு மட்டும் யோசி”

“நம்ம பொண்ணை பத்தி எனக்கு தெரியலையே?”

“சும்மா சொல்லாத ரேவ்ஸ்.. எழில் சொன்னப்ப நாம ரெண்டுபேரும் ஓரளவுக்கு அதை எதிர்பார்த்து தானே இருந்தோம்.. வெளிப்படையாக சொல்லாட்டியும், மனதுக்குள்ளே எதிர்பார்த்தோம் தானே”

“————-”

“சரி.. இப்ப என்ன செய்யலாம்? நம்ம அந்த பையனை வேண்டாம்னு சொல்ல பெருசா கரணம் இல்லைன்னு தான் எனக்கு தோணுது”

“எனக்கு தெரிஞ்சு காரணம்னா, அவங்களுக்கு குடும்பத்தோட தொடர்பு இல்லை, சொந்த பந்தம் அதிகமில்லைன்னு தான் சொல்லி இருப்போம். அதுக்காக தானே உங்க பொண்ணு குட்டி கர்ணம் அடித்து அவங்க குடும்பத்தோட சேர்த்து வச்சிருக்கா..இப்ப தானே புரியுது மேடம் ஏன் இதுல இவ்வளவு தீவிரமா இறங்கினாங்கன்னு”

“ஹா ஹா.. சரி தான். அப்ப அந்த பையனை வேண்டாம்னு சொல்ல காரணம் இல்லை, அப்படித்தானே”

“உக்கும்.. எனக்கு மனசே ஆர மாட்டேங்கிதுங்க” என்றார் ரேவதி.

“நம்ம பொண்ணு நல்ல பொண்ணு ரேவ்ஸ்.. நீ சொன்ன மாதிரி சொக்கத்தங்கம் தான்.. என்ன அவளுக்கு கார்த்தி மேலே விருப்பம் வந்திருக்கு. அது தப்புன்னு சொல்ல முடியது ரேவ்ஸ்..”

“புரியுதுங்க.. ஆனா மனசு பட படன்னு இருக்கே”

“புரியுது ம்மா.. விடு பார்த்துக்கலாம்.நாளைக்கு அண்ணன் அண்ணிங்ககிட்ட பேசுவோம். அப்புறம் மேலே என்னன்னு யோசிக்கலாம்.”

“அவங்க எல்லாம் நான் பொண்ணை இப்படி வளர்த்து வச்சிருக்கேன்னு என்னை கேவலமா பார்ப்பாங்க தானே?”

“எனக்கு தெரிஞ்சு யாரும் அப்படி யோசிக்க மாட்டாங்க. நடக்கும்போது பார்த்துக்கலாம், மனசை போட்டு அலட்டிக்காத”

ஓரளவிற்கு இருவரும் எழிலின் காதலை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.

“ஆனா நாம ஒத்துக்கிட்டோம்னு அவ கிட்ட சொல்லாதீங்க.. நம்ம கிட்ட சொல்லாம இவ்வளவு பெரிய விஷயத்தை செஞ்சிருக்கா.. ரெண்டு நாள் மண்டை காயட்டும்..” என்றார் ரேவதி புசுபுசுவென.

“நல்ல அம்மா.. நல்ல பொண்ணு.. இப்ப தூங்கு, நாளைக்கு பேசிக்கலாம்”

மறுநாள் பக்குவமாக விஷயத்தை அண்ணன் அண்ணிகளிடம் கூறினார் சரவணன். விஜயனும் அங்கு தான் இருந்தார். ரேவதி குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தார். கண்கள் கலங்கி கொண்டே இருந்தது அவருக்கு.

“நல்ல இடம் தானே தம்பி.. நம்ம காமாட்சி சித்திக்கு அவங்க அப்பா தூரத்து சொந்தம் தான். நல்ல பொறுப்பான பிள்ளை. ரத்னாக்கும் தங்கமான மனசு. ரத்னா ஒரு சாயல்ல நம்ம அனு மாதிரியே இருப்பா. அது தான் எழிலோட விருப்பத்திற்கு ஆரம்ப புள்ளியா இருக்கணும்” என்று நிதானமாக கூறினார் சாந்தி.

“எதுக்கு ரேவதி இப்ப கலங்கிப்போய் இருக்க? நாமளே பார்த்திருந்தா கூட இப்படி ஒரு நல்ல இடம் கிடைக்காது” என்றார் மீனா.

“எழில் மாதிரி பக்குவமான பொண்ணு இந்த காலத்துல பார்க்கவே முடியாது. அவ தேர்ந்தெடுத்திருக்க பையனும் நல்ல பையன். நாம மேற்கொண்டு பேசலாம்னு தான் எனக்கு தோணுது” என்றார் விஜயன்.

காதலிப்பது தவறு என்று யாரும் நினைக்கவில்லை. இருந்தும் நம்ம பிள்ளையா காதலிக்குது என்று பெரியப்பாக்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

“சரி சரவணா.. சாந்தி சொல்ற மாதிரி நல்ல இடம் தான். மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்ப்போம்” என்றனர் சண்முகமும் சிங்காரமும்.

“ரத்னா கிட்ட பேசுவமோ அக்கா ?” என்றார் ரேவதி.

“கொஞ்சம் பொறு ரேவதி. அந்த பையன் வீட்ல சொல்லி இருக்கானோ என்னமோ? எழில் கிட்ட முதல்ல கேளு.. நல்ல நாள் பார்த்திட்டு அப்புறமா பேசுவோம்”

“சரி அக்கா..”

—————-

பெரியவர்கள் சம்மதித்தது தெரியாமல், எழிலோ சோக கீதம் வாசித்து கொண்டிருந்தாள்.

“என்ன அக்கா சொல்ற? அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டியா? என்ன சொன்னாங்க?” என்றாள் தமிழ் எழில் விஷயத்தை கூறியதும்.

“ஒன்னுமே சொல்லலை தமிழு. அதான் பயமாவே இருக்கு”

“அப்பா திட்டலையா? அம்மா அடிக்கலயா?”

“அடிச்சு திட்டிருந்தா கூட பரவாயில்லை டீ.. இப்படி அமைதியாவே இருக்காங்களே?”

“அவங்க பேஸ் ரியாக்ஷன் எப்படி இருந்துச்சு?”

“தெரியலை தமிழ்..”

“எப்படி இருந்த எழிலரசியை இப்படி புலம்ப விட்டுட்டாங்களே! அவங்க யாரு.. நம்ம அம்மாவாச்சே.. இவ்வளவு கூட உன்னை புலம்ப விடலான எப்படி”

“போடி.. நானே டென்ஷனா இருக்கேன்”

“வாழ்க்கை ஒரு வட்டம் அக்காடீ.. நோ டென்ஷன்னு சுத்தன உன்னையவே டென்ஷனா சுத்த விட்ருச்சு விதி பார்த்தியா?”

உன்ன இப்ப என்ன செய்ய போறேன் பாரு என்று தங்கையை அடிக்க துரத்தினாள் எழில். தமிழ் அவள் கையில் சிக்காமல் வீட்டை சுற்றி ஓடினாள்.

———————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!