Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

37. துளசி - காட்டுப்பாதையில் ஒற்றை பூ

காட்டுப்பாதையில் ஒற்றை பூ – 2

தன்னுடைய அலுவலக அறையில் அமர்ந்திருந்தான் சிவபாலன். அண்ணனின் முன்னே பெரும் தயக்கத்தோடு வந்து அரைமணி நேரமாக ஒன்றுமே பேசாமல் அமர்ந்திருக்கிறான் கதிரேசன்.

 

கதவைத் தட்டிவிட்டு எட்டிப் பார்த்தான் முத்துப்பாண்டி, சிவபாலன் அவனை நிமிர்ந்து பார்க்க.  “அண்ணே இளநி ரெண்டு லாரி ஏத்தி அனுப்பியாச்சு தேங்கா லோடு ரெண்டு வண்டி நிக்குது போன வாட்டி கொடுக்கவேண்டிய காசை இன்னும் குடுக்கலையே இந்தத் தடவை இறக்கினதும் குடுக்குறேன்னு செல்வம் அண்ணே சொல்லுது என்ன சொல்ல”  என்றான்.



Advertisement

 

மெல்லப் புருவத்தை விரலால் நீவி சில நொடிகள் யோசித்தவன் முடிவெடுத்தவனாக  “நீ கூடப் போ லோடு எறக்குனதும் கையோட காசை வாங்கிக்கோ இல்லனா லோடு காசுக்குத் தேவையான தேங்காயைத் திரும்பி ஏத்தி நம்ம கந்தசாமி அண்ணன் மண்டியில எறக்கிடு நான் பேசிக்குறேன்”  என்க.

 

Advertisement

“சரிண்ணே”  என்று அவன் உற்சாகமாகக் கிளம்பிச் சென்றான்.

Advertisement

 

தம்பியின் புறம் பார்வையைத் திரும்பியவன் குரலைச் செருமினான். அதுவே சொல்லியது எனக்கு வேலை இருக்கிறது சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டுக் கிளம்பு என்று.

 

Advertisement

“அது… இந்தக் கல்யாணம்…”  என்ற கதிர் கீழே குனிந்துகொண்டு “கல்யாணம் எனக்கு வேண்டாம்” என்றான் மெல்ல.

 

எதிர்ப்பக்கமிருந்து எந்தப் பதிலும் இல்லை என்றதும் நிமிர்ந்து பார்க்க.  “தப்போ சரியோ முதல்ல எதிர்ல இருக்கவங்க கண்ணைப் பார்த்துப் பேசணும்”  என்றவன்  “ஏன்”  என்றான் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து.

 

“அவங்க அப்படிப் பேசியிருக்கக் கூடாது உங்களைப் பேசிட்டு நம்ம வீட்டுக்கே பொண்ணை குடுப்பாங்களா”  என்றான் ரோஷத்தோடு.

 

“என்னையதான பேசினாங்க”  என்றான் சிவபாலன் நிதானமாக.

 

“நீங்களும் நாங்களும் வேறயா”  என்றான் கதிர் உடனே.

 

அவனை ஆழ்ந்து பார்த்த பாலன்  “அது தெரியாமையா உன் அம்மாச்சியும் அக்காவும் சம்மதம் சொன்னாங்க”  என்றான். என்ன குரல் அது கதிரேசனுக்கு ஈட்டியைக் கொண்டு இதயத்தில் குத்தியதை போலச் சுருக்கென்றது.

 

உண்மைதானே அம்மாச்சியும் அக்காவும் சம்மதம் தானே சொல்லியிருக்கிறார்கள், பெண் வீட்டில் பேசக்கூட நாள் பார்க்கிறார்களே உன் அம்மாச்சி என்றுதானே அண்ணன் சொல்கிறார் இதுவரை பவுனுத்தாயை அவன் உறவு வைத்து அழைத்ததாகக் கதிருக்கு நினைவில்லை.

 

ஏன் கவிதாவை கூட அக்கா என்று அழைத்துப் பார்த்ததில்லை.சொல்லுங்க என்றுதான் கேட்பான், ரங்கசாமியை மட்டுமே அய்யா என்று உரிமையோடு அழைப்பான், அவன் ஆத்மார்த்தமாக அழைத்ததும் உரிமையாகப் பழகியதும் மாமன் சுந்தரேசனோடுதான்.

 

“எனக்குப் புரியலண்ணா அம்மாச்சியும் அக்காவும் எப்படி இதுக்கு ஒத்துக்கிட்டாங்க, உள்ள என்ன அரசியல் நடக்குதுன்னு சத்தியமா எனக்குப் புரியல உங்களை விட்டு எனக்குக் கல்யாணம் பேசுறதையே என்னால நம்ப முடியல”  என்றான்.

 

அதற்கான எந்தப் பதிலையும் சொல்லாமல்  “உனக்கு அந்தப் பொண்ணை பிடிச்சிருக்கா இல்லையா, என்னை இதுல சம்மந்தப்படுத்தாம பதில் சொல்லு”  என்க.

 

“பிடிச்சிருக்கு”  என்றான் அவன்.

 

“அவ்ளோதான் நீ ஆசைப் பட்ட வாழ்க்கை கல்யாணம் செஞ்சுக்கோ பொறுப்புகளை முழுசா ஏத்துக்க உன்னைத் தயார் படுத்திக்கோ”  என்று அவனின் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு வெளியில் சென்றான்.

 

செல்லும் அண்ணனைப் புரியாமல் பார்த்திருந்தான் கதிர். இப்படிப் பேசியெல்லாம் பார்த்ததில்லை இதைக் கற்றுக்கொள், இதைச் செய், இதை முடி அவ்வளவுதான் ஏனடா காதலித்தோம் என்று மண்டையை உடைத்துக்கொண்டான் இளையவன்.

 

திருமணப் பேச்சுவார்த்தையை அந்த வாரமே தொடங்கியிருந்தனர் வீட்டினர், இந்த முறை வீட்டில் வேண்டாம் பொதுவான இடத்தில் பேசலாம் என்று முடிவு செய்து அத்திவெட்டியிலிருந்து பத்துக் கிலோமீட்டர் இருக்கும் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் சந்தித்துக்கொண்டனர். ஆண்கள் மட்டும் கலந்து பேசச் சிவபாலன் அதில் கலந்துகொள்ளவில்லை.

 

ரங்கசாமிக்கு பெரிதாக நாட்டம் இல்லாத காரணத்தால் அவரின் பெரியப்பாவைத் தங்கள் வீட்டின் சார்பாக முன்னிறுத்திவிட்டு இவர் பின் நின்றார்.

 

மாப்பிள்ளை எந்த எந்தத் தொழில் பாக்குறார் எப்படி வருமானம் பங்கிடப்படுகிறது என்பதுவரை பேச்சுக்கள் சென்றது. அனைத்திலும் சிவபாலன் கை ஓங்கியிருக்கத் தங்கள் வீட்டுக்கு மாப்பிள்ளையாக வரப்போகிறவர் இவனிடம்தான் கையேந்த வேண்டுமா என்ற எண்ணம் அதைத் தொட்டுப் பல கேள்விகள்.

 

சொத்துக்களை எப்படிப் பிரிப்பார்கள்? சிவபாலனுக்கும் பங்கிருக்குமா!! அப்படி என்றால் என்னவெல்லாம் அவனுக்கு என்பதாகப் பல எண்ணங்கள் அவர்களிடம் ஆகையால் பொதுவாகவே பேசிப் பிரிந்துசென்றனர்.

 

ஆயிற்று மூன்று மாதங்கள். பேச்சுவார்த்தைகள் நீண்டு சென்று இன்று கதிரேசன் ஷர்மிளாவின் திருமணத்தைப் பேசி உறுதி செய்திருந்தனர் நிச்சயம் சம்பந்தமான பேச்சுவார்த்தை முடிந்து நாளும் குறித்தாகிவிட்டது.

*                         **************************************************************************

ஒரு நாள் சுற்றிப் பார்த்தால் தீர்ந்துவிடும் அதிசயத்தையா இராஜராஜசோழன் கட்டி வைத்திருக்கிறார். இந்த வாழ்வுதான் போதுமா அதன் மொத்த அழகையும் கலையையும் கண்டு ரசிக்க… நேற்று விட்ட இடத்திலிருந்து மெல்ல மெல்லக் கல்வெட்டுகள் சிற்பங்கள் அமரும் படிக்கட்டுகள்வரை தடவிப் பார்த்து விழிகளில் நிறைத்து என்று ரசித்துக்கொண்டிருந்தாள் அவள்.

 

தஞ்சைக்கு வந்து சேர்ந்த இந்தப் பதினைந்து நாட்களில் முதல் ஐந்து நாட்கள் மட்டுமே வீட்டில் இருந்தது. அடுத்த நாளே சித்தப்பா மகளை இழுத்துக்கொண்டு பெருவுடையாரை பார்க்க வந்தாயிற்று நினைவு தெரிந்த நாளிலிருந்து தந்தை சொல்லக் கேட்ட கதைகள் அத்தனை.

 

இரண்டோ மூன்றோ வருடங்களுக்கு ஒருமுறை வெறும் பத்துத் தினங்கள் வந்து தங்கிச் செல்வதோடு சரி அப்பொழுது அவசரமாகச் சாமியைத் தரிசனம் செய்துவிட்டுச் சென்றுவிடுவர். இப்பொழுது அப்படி அல்ல நேரம் எடுத்து ரசிக்கலாம் காலையிலே வந்தாயிற்று சாமியைத் தரிசித்து முடித்துத் தன்னுடைய ரசிப்பைத் தொடங்கிவிட்டாள்.

 

“பிரீ போதும் கால் வலிக்குது செத்த நேரம் ஒக்காருவோம்”  என்றாள் நிர்மலா.

 

“நீ சரியான சோம்பேறி அதுக்குள்ள கால் வலிக்குதா”  என்றாள் அவள்.

 

“சோம்பேறியா? நாம ரெண்டு மணிநேரமா நடந்துட்டே இருக்கோம்”  என்றாள் நிர்மலா பொய்யாக முறைத்து.

 

“சரி சரி வா”  என்று அழைத்துவந்தவள் ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்துகொள்ள நிர்மலா மறுபக்கம் அமர்ந்துகொண்டாள். இபோழுதும் இவள் விழிகள் மேலே செதுக்கப்பட்டிருந்த ஓவியங்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தது.

 

தோளில் க்ரோஷை எனப்படும் கொக்கிப்பின்னல் மூலம் நெய்யப்பட்ட சிறிய பை தொங்கியது இரண்டு சூரியகாந்திப் பூக்களை முன்னும் பின்னும் வைத்து இணைக்கப்பட்ட ஒரு அழகான குட்டி பை, மேலே ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தவள் ஏதோ உந்தக் கழுத்தைத் திருப்பிப் பார்த்தாள்.

 

அவர்கள் அமர்ந்திருந்த மண்டபத்தின் இடப்பக்கம் சிலர் குழுவாக நின்று ஏதோ பேசக் கூட்டத்தில் சேராமல் தனியாக நின்றிருந்தான் அவன். கோவிலுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பதாக. அவர்கள் அனைவரும் வெள்ளை வேட்டி சட்டையில் நிற்க இவன் கருமை நிறம் சூழ நின்றான்.

 

“அட நம்ம அர்னால்டு”  என்று விழிகளை விரித்தவள்  “ப்பா… ஏய் நிம்மி பாரேன் அர்னால்டு எப்படிக் கெத்தா நிக்குறாரு”  என்றாள் நிர்மலாவிடம்.

 

திரும்பிப் பார்த்தவள்  “அடியே மெல்ல யாருக்காவது கேக்க போவுது”  என்றாள் பதட்டமாக.

 

“ஏன்”  என்றாள் இவள்.

 

“அவர் ஒருமாதிரி” என்றாள் நிம்மி.

 

“அதேதான் நானும் சொல்றேன் ஒருமாதிரி தான் பாரு தனியா தெரியுறாரு”  என்றாள்.

 

“உனக்கு என்னமோ ஆயிடுச்சு அவரை மொதமுற பாத்ததுல இருந்தே நீ சரியில்ல சைட் அடிக்கிறியா”  என்றாள் நிம்மி சந்தேகமாக.

 

“ச்சி ச்சி என்ன நீ தப்பு தப்பா பேசுற”  என்றவள்  “டாவடிக்குறேன்”  என்றாள் கண்ணடித்து.

 

“ஆத்தி”  என்று நெஞ்சில் கைவைத்த நிர்மலா.  “பிரீ விளையாடாத உனக்குச் சரியா தெரியல அவங்க ஊர்ல கொஞ்சம் பெரிய ஆளுங்கதான் ஆனா எப்படிச் சொல்ல அப்பாவுக்குச் சுத்தமா பிடிக்காது”  என்றாள் அவசரமாக.

 

“அதுக்கு சித்தப்பாவை யார் டாவடிக்க சொன்னா அவருக்குத்தான் சித்தி இருக்காங்களே”  என்றவள் விழிகள் மட்டும் அவனை மொத்தமாக வாரிச் சுருட்டிக்கொண்டிருந்தது.

“உனக்கு அவங்களை பத்தி…”  என்ற நிர்மலாவை திரும்பிக் கண்டனமாகப் பார்த்தவள்.

 

“எனக்குத் தெரியும் நிம்மி இன்னும் சொல்லப்போனா தெரிஞ்ச அப்பறம்தான் வெறும் ஈர்ப்பா இருந்தது இன்னும் இன்னும் அழுத்தமான பிடித்தமா மாறியிருக்கு. நீ வளவளன்னு பேசாம உன் பிரென்ட் சித்ராவை எனக்கு இன்றோ குடு”  என்றவளை கலவரமாகப் பார்த்தாள் நிர்மலா.

 

ஏதோ கூற வந்த நிர்மலாவின் பேச்சு அப்படியே நின்றது யாரை இப்படி பாக்குறா என்று திரும்பியவள் தங்களுக்குப் பின்னால் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த பெண்மணி தங்களைப் பார்ப்பதைப் பார்த்து  “ஹாய் ஆண்ட்டி”  என்றாள்.

 

நிர்மலா மெல்ல இவளின் கையைச் சுரண்ட “ ச்சூ”  என்று தட்டிவிட்டாள்.

 

இவளைப் பார்த்துப் புன்னகைத்தவர்  “யாருமா நிர்மலா இது”  என்றார்.

 

“எங்க பெரியப்பா பொண்ணு”  என்றாள் அவள்.

 

“ஓஹ் வெளியூர்ல வேல பாக்குறாரே அவரா லீவுக்கு வந்திருக்கியாமா”  என்றார் அவர்.

 

“இல்ல ஆண்ட்டி இங்கேயே வந்திட்டோம் அப்பா ரிடைர் ஆயிட்டார். அவரோட ஊர் ஊரா சுத்தி நானும் அம்மாவும் டைர்ட் ஆயிட்டோம் நீங்களா வாரீங்களா இல்ல அம்மாவுக்குப் புதுசா அப்பாவைத் தேடட்டுமான்னு கேட்டேன் பயந்துட்டார் போல அதான் வந்துட்டார்”  என்றவளைப் பார்த்து அவருக்குப் புன்னகை விரிந்தது.

 

நல்ல கோதுமை நிறம் கூர் நாசியில் பொடிக்கற்கள் பதித்த கொஞ்சம் பெரிய மூக்குத்தி மையிட்ட பெரிய கண்கள், இடைவரை கூந்தல், அழகாகப் பின்னலிட்டிருந்தாள் கண்ணுக்கு நிறைவான காரிகை. தன் கையிலிருந்த கூடையில் வைத்திருந்த பூவை ஒருமுறை கையிலெடுத்தவர் மீண்டும் அதை அப்படியே கூடைக்குள் போட்டுவிட்டு சங்கடமாக அமர்ந்துகொண்டார்.

 

ஏன் என்று இவளுக்குப் புரியவில்லை. என்னவென்று கேட்க? ஆகையால்  “உங்க பேர் என்ன ஆண்ட்டி”  என்றாள்.

 

 

“அன்புக்கரசிமா”  என்றார் அவர்.

 

“செம்ம பேர் ஆண்ட்டி”  என்றிவள் கூற அன்பக்கரசிக்கு என்னவோ அவளைப் பிடித்துவிட்டது.

 

“இந்தாங்க”  என்று தன் கையிலிருந்த சிறிய பையிலிருந்து பட்டர் பேப்பரில் பொதிந்த இனிப்பு ஒன்றை எடுத்துக் கொடுத்தாள் அவள்.

 

“என்னம்மா”  என்றார் அவர்.

 

“இது தார்வாட் பேடா சூப்பரா இருக்கும் சாப்பிடுங்க எனக்கு இந்த ஊர்ல புதுசா ஒரு பிரென்ட் கிடைச்சாச்சுல்ல அதான் ஸ்வீட் எடு கொண்டாடு”  என்றவள் தன்னுடைய வாயிலும் ஒன்றைப் போட்டுக்கொண்டாள்.

 

அவர் புன்னகையோடு வாங்கிக்கொண்டே  “எனக்கு இன்னும் உன்னோட பேர் சொல்லலையே”  என்று கேட்டவர் மனதில் ஏதோ இதம் பரவியது. இதுவரை யாரும் அவரிடம் இப்படி அனுசரணையாகப் பேசியதில்லை ஏன் இவளோடு அமர்ந்திருக்கும் நிர்மலா அவரின் மகளின் தோழிதான் அவள்கூட தன்னோடு இப்படிப் பேசியதில்லை என்று எண்ணிக்கொண்டார்.

 

“எங்க நீங்கக் கண்டுபிடிங்க பாக்கலாம்”  என்றவள்.

 

“ஒரு ரகசியம் சொல்லவா இங்க இருக்கிறாரே இந்தச் சிவாவுக்கு ரொம்ப பிடிச்சவங்க பேரு”  என்றாள் கண்சிமிட்டி.

 

வீட்டிற்குக் கிளம்பலாம் என்று தாயை அழைக்க வந்த சிவபாலன் அவர் முகத்தில் இருந்த சிரிப்பைப் பார்த்து அப்படியே நின்றவன் இவள் பேசுவதைக் கேட்டு  ‘எந்தச் சிவாவை சொல்றா’  என்று கொஞ்சம் கூர்மையாக அவளைப் பார்த்தான்.

 

“பார்வதியா”  என்றார் அன்புக்கரசி.

 

“அச்சூ இல்ல நானே சொல்லவா”  என்றவள்  “சக்திப்பிரியா … சிவாவோட சக்தி கரக்ட்தான”  என்க.

 

அவருக்கு உள்ளுக்குள் ஓர் அதிர்வு இது தற்செயலா இல்லை கடவுள் வாக்கா என்று. தன்னை மீட்டுக்கொண்டவர்  “ஹ்ம்ம் ஆமா ஆமா”  என்றார்.

 

சிவபாலன் விழிகளும் அவளைக் கூர்மையோடு அளவிட்டது தன்னை தெரியுமா அவளுக்கென்று.  “ஒகே ஆண்ட்டி அப்புறம் மீட் பண்ணலாம்”  என்றவள் இரண்டடி நடந்துவிட்டு மீண்டும் அவரிடம் வந்து  “நான் ஒன்னு கேக்கவா”  என்றாள்.

 

அவர் அவளை ஏறிட்டுப் பார்க்க  “இல்ல அம்மா சொல்லுவாங்க இங்க நிறையப் பேர் பொண்ணுங்க தலைல பூவில்லாம இருக்குறத பாத்தா அவங்ககிட்ட இருக்கிற பூவை வெச்சுக்க குடுப்பாங்க அப்போ வேண்டாம்னு சொல்லக் கூடாது அது ரெஸ்பெக்ட் இல்ல அப்படின்னு , நீங்க அந்தப் பூவை எனக்குக் குடுக்கதான எடுத்தீங்க அப்புறம் ஏன் கொடுக்கல”  என்றாள்.

 

இப்பொழுது அன்புக்கரசி பெரிதாக அதிரவே செய்தார்  “இறைவா நீ என்னிடம் ஏதேனும் சொல்ல நினைக்கிறாயா”  என்று.

 

வேகமாக வந்த நிர்மலா  “பிரீ…”  என்று அவள் கையைப் பிடித்து இழுக்க  “இரு நிம்மி”  என்றவள்.

 

“ஏன் ஆண்ட்டி ஏதாவது ரீசன் இருக்கா. எனக்குத் தலை வெடிச்சிடும் அதான் கேக்குறேன் இல்ல வேற யாரும் பூவுக்கு வெயிட் பண்ணுவாங்களா அதனால குடுக்கலயா”  என்றாள்.

 

அவளைத் தவிப்பாகப் பார்த்தவர்  “என்கிட்டே யாருமா பூ வாங்கிப்பாங்க”  என்றார் ஒரு வித விரிக்தியான குரலில்.

 

“ஏன் ஏன் ஏன் வாங்கமாட்டாங்க”  என்று அவள் கேட்கச் சிவபாலனுக்கு கோபம் உச்சம் தொட்டது.

 

‘இவளுக்கு இப்போ என்ன வேணும் காரணம் தெரிஞ்சு என்ன செய்யப் போறா இவ, இம்சை எவ்ளோ பேச்சு எப்படித்தான் வெச்சிருக்கங்களோ வீட்டில’ என்று புருவத்தை நீவ ஆரம்பித்தான்.

 

“ஐயோ பிரீ வா சொன்னா கேளு அம்மாவுக்குத் தெரிஞ்சா பிரச்சனை ஆகும்”  என்றாள் நிர்மலா மெல்ல, என்றாலும் அவர்களுக்குக் கேட்கவே செய்தது.

 

“என்ன நிம்மி வாட்?”  என்றாள் சக்திப்பிரியா இப்பொழுது அவள் பக்கம் திரும்பிக் காரணம் சொல் என்பதாக.

 

பதற்றத்தோடு அங்கும் இங்கும் பார்த்த நிர்மலா  “இவங்க அந்த அர்னால்டோட அம்மா”  என்றாள் கலவரமாக.

 

“தெரியும்”  என்பதாக அவளிடம் கண்சிமிட்டி வாயசைத்த சக்திப்பிரியா  “சோ வாட் யாருக்கும் பூக்குடுக்கக்கூடாதுன்னு சொன்னாரா அர்னால்டு. இப்படிச் சின்ன விஷயத்துக்கெல்லாம் ரூல்ஸ் போடுறவரு மாதிரி தெரியலையே அவர் ரேஞ் தெரியாம நீயா பேசாத”  என்றாள் இவள்.

 

“ஐயோ”  என்று தலையில் அடித்துக்கொண்டாள் நிம்மி. இவ தெரிஞ்சு பேசுறாளா இல்ல தெளியாத பைத்தியமா என்று மண்டை காய்ந்தது அவளுக்கு.

 

“ஐயோ பிரீ அவங்ககிட்ட பூ வாங்க மாட்டோம் வாங்கினா வீட்ல திட்டுவாங்க அவங்க முறை இல்லாம வந்தவங்களாம்”  என்றாள் நிம்மி கொஞ்சம் படபடவென்று.

 

அன்புக்கரசி முகம் சட்டென்று வாடிவிட சிவபாலன் முகத்தில் ரௌத்திரம் கூடியது, அவன் தாயை நோக்கி அடி எடுத்து வைக்க  “ஷட் அப் நிம்மி”  என்று இரைந்தாள் சக்திப்பிரியா.

 

“என்ன வார்த்தை இது இந்த மாதிரி பேச்செல்லாம் உனக்கு யார் சொன்னது நிம்மி… சித்தியா? சித்தப்பாவா?”  என்றாள் கோபமாக. நிர்மலா தலை கவிழ்த்தாள்.

 

“சாரி ஆண்ட்டி”  என்ற சக்திப்பிரியா  “பூ வெச்சு விடுங்க”  என்று திரும்பி நின்றாள் மிகவும் சங்கடமாகப் போய்விட்டது அன்புக்கரசிக்கு.

 

“வேண்டாம்டா நீ கிளம்பு”  என்றார்.

ஒரு பெண்பிள்ளை அதும் இத்தனை நேரம் தன்னிடம் அத்தனை இணக்கமாகப் பேசிக்கொண்டிருந்தவள் அவளே கேட்டும் தன்னால் அவளுக்கு ஒரு முழம் பூவைக் கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடு.

 

“நீங்கக் குடுக்க எடுத்துட்டு குடுக்காம வெச்சுட்டீங்க இப்போ நானே கேட்டும் கொடுக்கல என் மேல என்ன வருத்தம் உங்களுக்கு”  என்றாள் மூக்கைச் சுருக்கி.

 

“வீட்ல எதுவும்…”  என்று அவர் இழுக்க  “அம்மா”  என்று வந்து நின்றான் சிவபாலன் அவனைப் பார்த்ததும் சக்திப்பிரியாவின் பின்னில் ஒளிந்துகொண்டாள் நிர்மலா, அவன் விழிகள் அவளை எரித்தது.

 

கண்களைச் சுருக்கி அவனை ஒரு நொடி பார்த்த சக்திப்பிரியா  “அவ தெரியாம பேசிட்டா சாரி”  என்று திரும்பி நடக்க.

 

“நில்லு மா”  என்ற அன்புக்கரசி கூடையில் இருந்த மொத்தப் பூவையும் கொண்டுவந்து அவள் பின்னலில் சூட்டினார், திரும்பி அவரைப் பார்த்துக் கண் சிமிட்டி சிரித்தவள் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம்.

 

“ஏன்”  என்று அன்புக்கரசிக்கு புரியவில்லை. சிவபாலன் விழிகளில் ஆராய்ச்சி என்ன செய்கிறாள் இவள் அழுகிறாளா! எதற்கு? ஒரு பூவுக்காகவா இல்லை… அவன் சிந்தனையை அதற்குமேல் வளர்க்காமல் நிறுத்திக்கொண்டான்.

 

மீண்டும் பையிலிருந்து ஒரு பேடாவை எடுத்து அவரிடம் நீட்ட  “நான் தான் சாப்பிட்டேனே”  என்றார் அவர்.

 

“ஒரு ரகசியம் சொல்லவா இது உங்களுக்கு இல்ல உங்க மகனுக்கு”  என்றவள் நிர்மலாவை அழைத்துக்கொண்டு அத்தனை உற்சாகமாகச் சென்றாள், அதைக் கையில் வைத்துக்கொண்டு திரு திருவென்று விழித்தார் அன்புக்கரசி.

 

அவருக்குத் தன்னை நினைவில்லை என்பது நன்றாகவே புரிந்தது சக்திப்பிரியாவுக்கு. இருக்கும் அது நடந்து ஓர் இரண்டு வருடங்கள் பதின்ம வயதில் சிவபாலன் என்பவன் அவளை ஏதோ ஒரு வகையில் ஈர்த்தான் தஞ்சை வரும்போது அவனைத் தேடி அலைந்தது அவள் விழிகள்.

 

இரண்டு வருடங்கள் முன்பு அவள் வந்திருக்க நிர்மலாவும் அவளும் தஞ்சை வரை ஒரு வேலையாகச் சென்று திரும்பினர் இரவு ஆகிவிட்டது. அத்திவெட்டிக்கு அடிக்கடியெல்லாம் பேருந்து கிடையாது இருப்பது ஒன்று அதுவும் சில நாட்கள் வராது.

 

அன்று அவர்கள் நல்லநேரம் பேருந்து வந்தது. இடையில் கெட்ட நேரம் பாதி வழியில் பழுதாகி நின்றது. சிலர் அறிந்தவர் தெரிந்தவர் என்று கிளம்பிச் சென்றனர்.

 

காய்ச்சல் கண்டிருந்த அன்புக்கரசி சில பரிசோதனைகள் என்று தஞ்சை மருத்துவமனை சென்று திரும்பிக்கொண்டிருந்தார், அனைவரும் வேலை என்று சென்றிருக்க இவர் டிரைவருடன் தனியேதான் சென்றார்.

 

நிர்மலாவை அவருக்குத் தெரியும் அவரின் மகள் சித்ராவுடன் படிக்கும் பெண் அதோடு அவளுடைய தந்தை செல்வராஜ் அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர்.

 

பேருந்து நிற்பதும் அருகில் இவர்கள் அலைபேசியில் யாரையோ அழைத்துக்கொண்டு இருப்பதையும் பார்த்தவர் தன்னுடன் வரச்சொல்லி அழைத்தார்.

 

நிர்மலா வேண்டாம் என்று மறுத்தாள்  “அப்பா வருவார்”  என்று அவள் நிற்கச் சக்திப்பிரியாதான் கட்டாயப்படுத்தி அவளையும் அழைத்துக்கொண்டு அன்புக்கரசியோடு பயணம் செய்தாள்.

 

இவர்களை வண்டியில் ஏற்றியதோடு சரி இவர்களிடம் பேசக்கூடயில்லை அவர் அத்தனை சோர்வு அவரிடம்.  “உடம்பு முடியலம்மா நீங்க நல்லா உக்காந்துக்கோங்க பத்திரமா வீட்டுக்குப் போய்டலாம்”  என்று கூறிவிட்டு சீட்டில் சாய்ந்து விழிகள் மூடிக்கொண்டார்.

 

நிர்மலாவுக்கு உள்ளுக்குள் உதறல்தான் தந்தைக்கு சித்ராவை பிடிக்காது அவளின் தாயைச் சுத்தமாகப் பிடிக்காது, சித்ராவுடன் பேசக் கூடாது என்பது அவரின் நிபந்தனைகளில் ஒன்று அவருக்குத் தெரியாமல்தான் இவள் சித்ராவோடு நட்பு பாராட்டுவது.

 

“அந்தப் பொம்பளை ஆள் சரியில்ல இப்போ பாக்குறது எல்லாம் நடிப்பு”  என்று கரித்துக்கொட்டுவர். படித்து ஆசிரியராக இருந்து என்ன பிரயோஜனம் அவர் மனது துருப் பிடித்த கத்திபோல அழுக்கு படிந்தது.

 

இதற்கே அவர் எதையும் நேரில் பார்த்ததில்லை அவரும் இந்த ஊர் ஆட்களைப் போலக் கேள்விப்பட்டதுதான். காலம்காலமாக நம்பப்படும் வழக்கமாகப் பொம்பளை இடம் குடுக்காம எப்படித் தப்பு நடந்திருக்கும் என்று நியாயம் பேசும் கண்ணியவான்.

 

அவர் பேசும் சில வார்த்தைகள் எல்லாம் நிர்மலாவுக்கே அருவருப்பாக இருக்கும் அப்படி இருப்பவர் இன்று தன்னை அன்புக்கரசியோடு பார்த்தால் என்ன நடக்குமோ என்று பயந்தாள்.

 

அவள் பயந்த போலவே வண்டியிலிருந்து இறங்கியதும் நிர்மலாவின் முதுகிலே ஓங்கி ஒரு அடி போட்டார் அவளின் தாய் வனஜா. அதுவும் செல்வராஜின் உபாயம்தான் வயது வந்த பெண்பிள்ளையை அவர் தொடமாட்டாராம் அவர் கட்டளை இட மனைவி அதைச் செய்தார்.

 

“யார் கூட வரதுன்னு தராதரம் வேண்டாம் யார் கூப்பிட்டாலும் போவியா”  என்று செல்வராஜ் வார்த்தைகளைவிட அன்புக்கரசி முகம் சுருங்க  “போகலாம்”  என்றார் டிரைவரிடம்.

 

உதவி செய்த ஒருவரைச் சித்தப்பா இப்படிப் பேசியது சக்திப்பிரியாவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை அதிருப்தியை உணவில் காண்பித்தாள். இரவுணவு வேண்டாம் என்று அறைக்குள்ளேயே முடங்கியவளைத் தேடி வந்தார் வனஜா உணவோடு.

 

சித்தப்பாவின் கோபம் எதனால் என்று அவர் சொல்ல இவளுடைய கோபம் இன்னும் ஏறியது. என்ன படித்தார் இந்த மனிதர் படிப்பைவிடச் சக மனிதர்களை மதிக்கும் பண்பு படிக்காத போதும் வரவேண்டாமா என்று ஆத்திரம்தான் வந்தது.

 

அன்றுதான் அவள் தெரிந்துகொண்டாள் சிவபாலன் தான் அன்புக்கரசியின் மகன் என்று. அதுவரை அவன்மேல் இருந்த ஒருவிதமான பிடித்தம் ஆழ்மனதில் நேசமாக உருமாறிப் பின் மெல்ல மெல்ல வளர்ந்து கிளை பரப்பிப் பெரும் காதலாக அவளை வாரிச் சுருட்டி சுழற்றி அடிக்கிறது.

 

கோவில் வேலையாக ரங்கசாமியும் சிவபாலனும் பெரிய கோவிலுக்குக் கிளம்ப  “என்னையும் கூட்டிட்டு போறியா தம்பி”  என்று கேட்டு மகன் முன் வந்து நின்றிருந்தார் அன்புக்கரசி.

 

“நான் சாமி கும்பிட்டுட்டு அப்படி மண்டபத்துல உக்காந்திருக்கேன் நீங்கப் பேசிட்டு வாங்க”  என்றுதான் அங்கே காத்திருந்தார். சக்திப்ரியாவுக்கு பூவை வைத்துவிட்டுத் திரும்பி வந்த தாயை ஒன்றும் சொல்லாமல் பார்த்துநின்றவன் முன்னே நடக்க இவரும் அமைதியாகப் பின்சென்றார்.

 

ரங்கசாமி ஜீப்பின் அருகில் காத்திருந்தார்  “என்னப்பா ரொம்ப நேரமா உங்களைக் காணுமேன்னு பாத்தேன்”  என்றவர் மனைவியின் முகத்தை ஆராய்ந்தார் அந்த முகத்தின் குழப்பமும் கவலையும் அவருக்குப் புரிந்தே இருந்தது என்ன செய்துவிட முடியும் அவரால், ஒன்றும் பேசாமல் சிவபாலன் அருகில் அமர்ந்துகொண்டார்.

 

“வீட்ல பேசுங்க அய்யா பெரியவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்டுக்கோங்க என்ன செய்யணுமோ நான் பாத்து செய்றேன்”  என்றான் கோவிலைத் தாண்டிச் சாலையில் வண்டியை விரட்டிக்கொண்டு.

 

“சொத்தைப் பிரிக்க அத்தை ஒதுக்கமாட்டாங்க தானே தம்பி”  என்றார் அவர் உனக்குத் தெரியாதா என்ற பாவனையோடு.

 

“தெரியும்… ஒருவேளை அவங்க வேற எதுவும் யோசிச்சு வெச்சிருந்தா கேட்டுக்கோங்க”  என்றுவிட்டான்.

 

அன்புக்கரசி விழிகளைத் துடைத்துக்கொண்டார் சிவபாலன் என்பவனுக்கு அதில் ஒரு பிடி மண் கூடச் சொந்தமில்லை. தன் மகன் வெறும் வேலைக்காரன் நினைக்க நினைக்கத் தன் வாழ்க்கை கொஞ்சம் நன்றாக இருந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கம் நெஞ்சம் முழுதும் நிறைந்தது.

 

திரும்பாமலே மனைவியின் கண்ணீரும் அதன் காரணமும் அறிந்த ரங்கசாமி  “உனக்கு அய்யா எந்த நியாயமும் செய்யல செய்யமுடியாத கோழையா நின்னுட்டேன், உனக்காக நீயே எண்ணத்தையும் செஞ்சிக்க சாமி அது எதுவா இருந்தாலும் அய்யா உன்னைய தப்பா நினைக்கமாட்டேன்”  என்று கூற அன்புக்கரசியின் விசும்பல் சத்தம் அந்த வாகனத்தின் உள்ளே நிறையத் தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!