Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலால் காதலாய்

காதலால் காதலாய் 35 (1)

அத்தியாயம் 35 (1)

“நீ கிளம்பு அஞ்சலி! நான் பார்த்துக்குறேன்.. அதான் வேலைக்குன்னு ரெண்டு பேரை அப்பா வர சொல்லி இருக்காங்க இல்ல.. அவங்க என்னை பார்த்துப்பாங்க” காஞ்சனா மகளிடம் கூற,



Advertisement

“ஆனா இன்னும் உங்களுக்கு சரியாகலையே ம்மா!” என்றாள் கவலையாய் அஞ்சலி.

ஒரு வாரம் சென்றதே தெரியாத அளவிற்கு தான் அஞ்சலிக்கு நாட்கள் சென்றது. அன்னை அருகில் தான் முழுவதுமே இருந்திருந்தாள்.

Advertisement

Advertisement

காஞ்சனாவே மிரளும் அளவுக்கு இருந்தது அஞ்சலியின் மாற்றங்கள்.

நாட்கள் என்னவோ வேகமாய் நகர்ந்திருந்தாலும் மனம் மட்டும் சூர்யா என்ற ஒருவனை அதிகமாய் சுற்ற தொடங்கி இருக்க, ஏற்கனவே அவள் உணர ஆரம்பித்து இருந்த நேசத்தின் அளவையும் புரிந்து கொள்ள ஏதுவாய் இருந்தது இந்த பிரிவு.

Advertisement

அவனாய் அழைக்காமல் தான் அழைத்து பேசவும் அத்தனை தயக்கம்.. பேசிவிட்டால் மட்டும் காதல் வசனமா பொழிய போகிறான்.. என்று நினைத்தவளுக்கு, நிச்சயம் கிண்டல் குத்திக் காட்டும் பேச்சுக்கள் போன்றவை தான் அவனிடம் இருந்து கிடைக்கும் என்று தோன்ற அழைக்கும் எண்ணமே இல்லை.

குணசீலனும் மனைவியை கவனித்துக் கொண்டார் என்றாலும் அவரால் முழுதாய் வீட்டில் இருக்க எல்லாம் முடியாத காரியம். அதற்காகவே வேலைக்கு என இருவரை தேர்ந்தெடுத்திருக்க, ஒருவர் சமையலையும் மற்றவர் காஞ்சனாவையும் பார்த்துக் கொள்வது என முடிவானது.

காஞ்சனாவிற்கு மகளின் மனம் புரிய துவங்க, அவள் கேட்காமலே சென்று வா என்றும் கூறினார்.

‘இல்லை போக முடியாது’ என்று கூறாமல் அவள் தயங்கியதே இன்னும் தெளிவாய் அவள் மனதினைக் காட்ட, சிரித்துக் கொண்டவர்,

“இப்ப நான் ஓரளவு ஓகே தான் அஞ்சலி.. பாத்ரூம் போக கூட தனியா எழுந்துக்குறேனே அப்புறம் என்ன? நீ போய்ட்டு வா” என்று கூற, அதைக் கேட்டபடி வந்தார் குணசீலன்.

“அவளை ஏன் போக சொல்ற? வேலைக்கு ஆள் இருந்தாலும் அஞ்சலி இருக்குறதால தானே நான் வெளில நிம்மதியா போய்ட்டு வர முடியுது?” என சத்தம் போட்டார்.

எவ்வளவு அடாவடி பேர்வழி என்றாலும் மனைவி இல்லை என்றால் அவர் உலகம் நின்றுவிடும் என்பதை இந்த நாட்களில் உணர்ந்திருந்தவர்க்கு மகளை உடனே அனுப்ப விருப்பம் இல்லை.

“இவர் வேற விவஸ்தை இல்லாமல்!” என நினைத்த காஞ்சனா,

“நீங்க கொஞ்சம் பேசாம இருங்க!” என்று கூறவும் இருவருக்குமாய் ஒரு சண்டை பரவ, இறுதியில்,

“ப்பா! நான் ரெண்டு நாளுக்கு ஒரு தடவை வந்து பார்த்துக்கறேன் ப்பா.. அம்மாக்கும் இப்ப பரவாயில்லைனு தோணுறதால தானே போக சொல்றாங்க?” என்று கூறிவிட,

“அவ போய்ட்டு வரட்டும்.. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்” என்றுவிட்டார் காஞ்சனா.

“நான் டிரைவரை அனுப்புறேன்!” குணசீலன் கூற,

“ஏன் நீங்க கொண்டு விட மாட்டிங்களா?” என காஞ்சனா கேட்க, மீண்டும் வாக்குவாதமாகும் முன்,

“என் வீட்டுக்கு போக எனக்கு வழி தெரியும்.. யாரும் வர வேண்டாம்” என்று கிளம்பி விட்டாள் அஞ்சலி.

“என்ன டி இப்படி பேசுறா?” குணசீலன் கேட்க,

“இப்ப தான் தெளிவா இருக்கா.. உங்க சேர்க்கை இல்லாத காரணமா இல்ல சூர்யாவோட சேர்க்கையானு சரியா சொல்ல தெரியல” என காஞ்சனா கொட்டு வைக்க, மனைவியை முறைத்தபடி சென்றார் குணசீலன்.

ஞாயிற்றுக் கிழமை என்பதால் அனைவரும் வீட்டில் தான் இருந்தனர்.

பால நாதன் காலையில் வெளியே சென்றவர் மதியமாய் அப்போது தான் வந்திருக்க, ஜெய்யும் நிவியும் டிவி முன் அமர்ந்திருந்தனர்.

பிரேமா, மல்லிகா, ஜனனி என பெண்கள் மதிய சமையலில் இறங்கி இருக்க, வீடு வந்து சேர்ந்திருந்தாள் அஞ்சலி.

“வா அஞ்சலி!” என பால நாதன் அழைக்கும் சத்தத்தில் சமையலறையில் இருந்த அனைவருமே எட்டிப் பார்க்க,

“ஜனனி! நீ சொன்னது சரி தானா? கூட்டிட்டு வந்துட்டான் போலயே!” என்று கைகளை துடைத்தபடி பிரேமா வெளியே வர, ஜனனியும் உடன் வந்தாள்.

“ஹாய் அண்ணி!” என்ற நிவிக்கு அஞ்சலி புன்னகைக்கவும்,

“வா அஞ்சலி! அம்மா எப்படி இருக்காங்க?” என்று கேட்ட பிரேமா வாசலைப் பார்க்க,

“நல்லாருக்காங்க அத்தை!” என்றதில் அவளையும். ஜனனியையும் அவர் மாற்றி மாற்றி பார்க்க,

“அத்தையை தானே அத்தைனு சொன்னா? அதுக்கு ஏன் இந்த முழி முழிக்குறீங்க?” என்றாள் ஜனனி.

“உங்க மகன் வர்ல போல!..” ஜனனி கூறவும்,

“நீ மட்டுமா வந்த?” என்று அவளிடமே கேட்க,

“ஆமா அத்தை! அப்பா வீட்டுல இல்ல” என்று சேர்த்து கூற,

“சரி தான்.. ஜாடிக்கு ஏத்த மூடி தான்!” என்று உள்ளே சென்றுவிட்டார்.

“காபி கொண்டு வரவா?” ஜனனி கேட்க,

“வேண்டாம்! நான் போய் பிரெஷ் ஆகிட்டு வந்துடுறேன்!” என்று கூறி  மேலே செல்ல திரும்பியவள் சூர்யா வீட்டில் இல்லை என்பதையும் புரிந்து கொண்டாள்.

“இந்த வெயிலுல ஏன் மா வந்த? அவன்கிட்ட சொல்லி இருந்தா சாயந்திரமா வந்திருப்பான் இல்ல?” என்ற பால நாதனுக்கு,

“பரவாயில்லை மாமா!” என்று கூறி சென்றாள் அஞ்சலி.

“ஜானு!” என்று ஜெய் அழைக்க,

“இதோட பத்து முறை கூப்பிட்டீங்க அண்ணா! அண்ணி கொஞ்சம் கூட உங்களை மதிக்குறதே இல்லை” என நிவி கூற, அவள் தலையில் வந்து கொட்டிய ஜனனி,

“ஒன்னும் இல்லை சும்மா கூப்பிட்டு பார்த்தேன்னு உங்க அண்ணா சொல்றதை கேட்க ஜானுனு உன் அண்ணா கூப்பிட்டதும் சொல்லுங்க பிராண நாதான்னு நான் வரணுமா?” என்று கூற,

“வராதீங்கன்னு தான் நானும் சொல்ல வந்தேன்..” என்று தலையை தேய்த்துக் கொண்டாள் நிவி.

“அது!” என்றவளைப் பார்த்து ஜெய் கண்ணடிக்க,

“கண்ணை நோண்டிடுவேன்!” என்றவள் கையில் இருந்த கரண்டியையும் காட்டி சென்றாள்.

“இவன் இந்த ஒரு வாரத்துல அஞ்சலினு நீ ஒருத்தி இருந்ததையே மறந்திருப்பான் போல.. நீ தான் அவசரப்பட்டு ஓடி வந்துட்ட.. வந்து நல்லா நாலு கேள்வி கேட்பான்.. வந்ததுக்கு அதையும் நல்லா வாங்கிக் கட்டிக்கோ!” என புலம்பியபடி முகம் கழுவிக் கொண்டு கீழே வந்து மற்றவர்களுடன் இணைந்து கொண்டாள் அஞ்சலி.

ஜெய் மதிய வேளையில் சாப்பிட சூர்யாவிற்கு அழைத்த போதும் வர தாமதமாகும் என சொல்லிவிட்டான்.

மாலை கவிழ்ந்து இரவும் சாப்பிடும் நேரமும் வந்துவிட, அப்போது வந்து சேர்ந்தபாடில்லை சூர்யா.

பால நாதன், மல்லிகா, இருவரும் அமைதியாய் சாப்பிட, நிவி, ஜனனி பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

“இவ வந்ததும் வந்தா.. சொல்லிட்டு வந்திருப்பாளா அவன்கிட்ட? காலையில அவன் தட்டை அளந்த மாதிரியே இவளும் அளக்குறா பாரேன்” பிரேமா ஜனனி காதை கடிக்க,

“கேட்டு சொல்லவா?” என்றாள் ஜனனி.

“பேசாம சாப்பிடு டி.. என்னவோ பண்ணட்டும் எனக்கென்ன” என்று விட,

“என்ன சொல்லுங்க அஞ்சலி தான் கிரேட்! உங்க மகன் வாயால வடை சுட தான் சரி!” என்று சீண்டிவிட,

“டேய்! உன் பொண்டாட்டி சாப்பிட்டாச்சுன்னா ரூம்க்கு கூட்டிட்டு போ! தேவையில்லாம பேசி என்கிட்ட அடி வாங்க போறா” என ஜெய்யிடம் பிரேமா கூற,

“நீங்க அடிச்சாலும் அவ திருந்த மாட்டா சித்தி! ஏற்கனவே வாய் கூட.. இங்க வந்து சூர்யா, நிவினு கேங் சேர்த்து வச்சு ஆட்டம் போடுறா!” என்றான் ஜெய்யும்.

பத்து மணிக்கு சாப்பிட்டு வேலைகளை முடித்து என அனைவருமாய் உறங்க செல்ல,

“எனக்கு தூக்கம் வர்ல, நான் சூர்யா வர்ற வரை இங்கேயே இருக்கேன்!” என அமர்ந்து கொண்டார் மல்லிகா.

பதினோரு மணி அளவில் வந்தவனிற்கு அவரே சாப்பிட எடுத்து வைத்து அவன் சாப்பிடும் வரை உடனிருக்க,

“நீங்க ஏன் முழிச்சுட்டு இருக்கீங்க? எனக்கு போட்டுக்க தெரியாதா?” என்றான் சூர்யா.

“தூக்கம் வர்ல டா அதான்.. உனக்காக எல்லாம் இல்லை” என்றதும் அவன் புன்னகைத்து சாப்பிட,

“சண்டே கூட என்ன வேலை உனக்கு? அதுவும் இவ்வளவு நேரம்?” மல்லிகா கேட்க,

“அது சர்ப்ரைஸ்.. கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க” என்று சிரித்தவனை அதன்பின் எதுவும் கேட்கவில்லை.

மாடி ஏறும் பொழுதே அஞ்சலி நினைவில் வர, அறைக்கு செல்வதை நினைத்து பெரு மூச்சோடு செல்லவும் அங்கே ஒரு புத்தகத்தோடு அமர்ந்திருந்தாள் அஞ்சலி.

நிஜத்தை நிழலாய் நினைத்தவன், “ரொம்ப பண்ணுற எலி!” என்று கூறியபடி பேகை வைத்துவிட்டு திரும்பிப் பார்க்கவும் அவனைப் பார்த்து சிரித்திருந்தவள்,

‘வரும் போதே என்ன திட்டலாம்னு யோசிச்சுட்டு வருவான் போல!’ என முறைத்தாள்.

“குளிச்சுட்டு வர்றதுக்குள்ள ஓடிடு!” என்று கூறி உள்ளே செல்ல போக,

“எங்க ஓடணும்? என்னால எல்லாம் போக முடியாது.. ஒரு வாட்டி தப்பு பண்ணினா எப்பவுமே தப்பு தான் பண்ணுவாங்களா? எப்ப பாரு விரட்டிகிட்டு.. உன்னால முடிஞ்சதை பண்ணிக்கோ!” என்று கோபமாய் கூறியவள்,

“இவனை எப்படி தான் உனக்கு புடிச்சுதோ!” என தன்னையே திட்டியவள், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு படுத்துவிட,

“ஹே எலி!” என்றவன் கண்களில் அத்தனை கோடி மின்னல்கள்.

“நீ எப்ப வந்த?” என்று அவள் அருகிலேயே சென்று விட,

“இப்ப தான் எதுக்கு வந்தன்னு ஓட சொன்னான்.. இப்ப எப்ப வந்தன்னு கேட்குறான்!” என்றவள் இன்னும் கோபமாய் இருக்க, அவள் கேட்டதற்கு விளக்கம் அளிக்க கூட தோன்றாமல் சிரித்துக் கொண்டிருந்த சூர்யாவிற்கு புதிதாய் ஒரு புதிரான உணர்வு.

பதில் வராமல் இருக்கவும் அஞ்சலி திரும்பிப் பார்க்க, அவன் இன்னும் அவளைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தான்.

“இப்ப எதுக்கு சிரிக்குற?” என்னவோ கிண்டல் செய்து தான் சிரிக்கிறான் என நினைத்து அவள் எரிச்சலாய் கேட்க,

“ம்ம்ஹும்ம்! ஒன்னும் இல்லை” என்றவன் குளியலறை சென்றுவிட்டான்.

“அதெப்படி தான் பேசினாலே முட்டிக்குதோ! எப்ப பாரு எலி, பல்லின்னு..” என்று முணுமுணுத்து படுத்தவள் அப்படியே உறங்கி விட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!