காதலும் கடத்தப்படும் – 32

காதலும் கடத்தப்படும் – 32
Advertisement
வேதநாயகத்தின் நண்பர், நிகழ்ச்சியின் இடையில் விடைபெற்றுக்கொண்டு கிளம்ப, அவர் அருகே இருந்த இருக்கை காலியானது. அதற்கு அடுத்த இருக்கையில் மருதநாயகம் அமர்ந்திருக்க, அஞ்சலியை ஏனோ கவலை தொற்றிக்கொண்டது.
அடுத்த பாடல் தொடங்கியது. மதன் உடை மாற்றி வந்திருந்தான். அர்ஜுனும் மதனும் ஒன்று போல, கால்சராய், சட்டை, அதன் மேல் மேலங்கி (waist coat) அணிந்திருந்தனர்.
“அன்பு மலர்களே
Advertisement
நம்பி இருங்களே…
Advertisement
நாளை நமதே…
இந்த நாளும் நமதே…”
பாடலை பாடத் தொடங்கினான், அர்ஜுன்.
Advertisement
மதன் ஆட, அர்ஜுனும் உடன் ஆடினான். இருவரும் புரட்சித் தலைவரைப் போல ஆடிக்கொண்டிருந்தனர். அரங்கம் ஆர்ப்பரித்தது. வேதநாயகமும், மருதநாயகமும் அமைதியாக உட்கார்ந்திருந்தனர்.
“பாசம் என்னும் நூல் வழி வந்த
வாச மலர்க் கூட்டம்
ஆடும் அழகில் அமைவது தானே
வாழ்க்கைப் பூந்தோட்டம்“
அர்ஜுனும் மதனும் கைகோர்த்துக்கொண்டு ஒன்றாக ஆட, வேதநாயகம் கண்களை மூடி தலைகுனிந்து, நெற்றியில் கைவைத்தபடி அமர்ந்திருந்தார். பாடல் முடிய அரங்கம் மீண்டும் ஆர்ப்பரித்தது.
“ஒன்ஸ் மோர்… ஒன்ஸ் மோர்… ஒன்ஸ் மோர்…” என்று கூட்டம் ஆர்ப்பரிக்க, தொகுப்பாளர் ஒலிவாங்கியில், “என்ன மக்களே! ஒன்ஸ் மோர் வேணுமா?” என்று வினவ, மீண்டும் கூட்டம் ஆர்ப்பரித்தது. அதே பாடலை மீண்டும் பாடிட, அர்ஜுனும் மதனும் மேடையில் தயாராகினர். செய்வதறியாது கைகளை பிசைந்துகொண்டு அஞ்சலி அமர்ந்திருந்தாள். வேதநாயகம் ஆழ்ந்த யோசனையில் இருப்பதைக் கண்டாள். மருதநாயகத்தை அவரது மனைவி சமாதானம் செய்வதைக் கண்டாள். அண்ணன் தம்பி இருவரும், மனம் வெதும்பிய நிலையில் அமர்ந்திருந்தனர்.
பாடல் மீண்டும் தொடங்கியது. அஞ்சலி, தந்தையையும், சித்தப்பாவையும் பார்த்தபடி அமர்ந்திருக்க, சில நிமிடங்களில் மருதநாயகம் குலுங்கி அழுவது தெரிந்தது. அவரது தோள் மீது கையொன்று படர, தலையுயர்த்தி பார்த்தார். பக்கத்து இருக்கையில் வேதநாயகம், கலங்கிய கண்களோடு, மருதநாயகத்தின் கையை பற்றினார். அண்ணனின் கையை பற்றிக்கொண்டு தம்பி அழ, அண்ணனின் கண்களில் கண்ணீர் பெருக, அருகிலிருந்த அஞ்சலியின் கண்களும் கலங்கியது. எத்தனையோ ஆண்டுகள் அவள் வேண்டி நின்ற வரம், இன்று கிடைக்கப்பெற்றாள். அவள் அர்ஜுனைக் கண்டாள். அவன் உற்சாகமாக பாடிக்கொண்டிருந்தான். ‘ஐ லவ் யூ அர்ஜுன்!’ என்று மனதினுள் கூறிக்கொண்டாள். அவளது விரல்கள் ஒன்று சேர்ந்து இதய வடிவம் எடுத்தன. இருப்பினும் கைகளை உயர்த்தி, இதய வடிவின் வழியே அவனைப் பார்க்க தைரியமற்றுப்போனாள்.
“இத்தனை நேரமும், பாடிய பாடல்கள் எல்லாமே புரட்சித்தலைவர், மற்றும் சினிமாவின் சாலச் சிறந்த ஜாம்பவான்களுடைய பாடல்கள். இன்னைக்கும் அந்த பாடல்கள் உயிர்ப்போடு இருக்கு. இனி காலத்துக்கும் உயிர்ப்போடு இருக்கும். அதனால, அந்த ஜாம்பவான்களுக்கு ஒரு சின்ன சமர்ப்பனமா, இசை தொகுப்பை மாத்தாம உள்ளதை உள்ளபடியே பாடப் போறோம். நிச்சயம் இந்த பாட்டை பிடிக்காதவங்க இந்த உலகத்துலேயே இருக்க முடியாது!!” என்ற அர்ஜுன், “நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்…” என்று பாடத் தொடங்கினான். ஒரே குரலாக அங்கிருந்த கூட்டமும் உடன் பாடியது. இத்தனையும் அங்கே நிகழ்ந்துகொண்டிருக்க, வேதநாயகமும், மருதநாயகமும் உரையாடிக்கொண்டிருந்தனர். இருவரின் கைகளும் பிணைக்கப்பட்டிருந்தது. அஞ்சலி அவர்களை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அர்ஜுன் பாடிக்கொண்டிருந்தாலும், அவனது கவனம் முன் சீட்டில் இருந்தது. அண்ணனும் தம்பியும் உரையாடுவதைக் கண்டவன், அஞ்சலி முகம் மலர்ந்து அதனை பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு மனதில் இன்பம் கொண்டான்.
மேலும் சில பாடல்கள் பாடப்பட, விழா நிறைவை எட்டியது. தொகுப்பாளர் மேடை ஏற, “இன்னும் ப்ரோக்ராம் முடியல” என்ற அர்ஜுன், ஒலிவாங்கியின் முன், கையில் கிட்டாரோடு சென்று நின்றான்.
“எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம் தரமுடியுமா?” என்றான் கூட்டத்தாரை நோக்கி. அனைவரும் ஆர்ப்பரித்தனர்.
“எல்லார் வாழ்க்கையிலும் நாம நினைச்சுக்கூட பார்த்திடாத மிராக்கிள், நிச்சயம் என்னைக்காவது ஒரு நாள் நடக்கும். அந்த அதிசயத்தை ரொம்ப சாதாரணமா நிகழ்த்திட்டு, நம்ம கிட்ட ஒரு தேங்க்ஸ் கூட எதிர்பார்க்காம, அதை நிகழ்த்திக்காட்டினவங்க, அமைதியா இருந்திடுவாங்க. சில சமயம், அவங்க ஒன்னில்லை ரெண்டில்லை, பற்பல அதிசயங்களை நிகழ்த்தி நம்மள திணற வச்சுட்டே இருப்பாங்க. ‘இவங்களுக்கு கைமாறா நாம என்ன பண்ணப்போறோம்’னு திக்கு முக்காட வச்சுடுவாங்க… அப்படிப்பட்ட ஒருத்தருக்காக, ஒரு பாடல்” என்றவன், மெல்ல கிட்டாரினை இசைக்கத் தொடங்கினான்.
******************************************************************************************************
யாரோ நான்?
எதுவும் புரியவில்லை
பாதை என்ன?
அது தெரியவில்லை
கால்கள் செல்லும் வழிநெடுக
மனதும் நிழலாய் உடன் நடக்க
போவதெங்கே?!
வாழ்வதெங்கே?!
முடிவுமெங்கே?!
விளங்கவில்லை…
வந்தது ஓர் பட்டாம்பூச்சி
சிறகை விரித்து சிரித்திருக்க
விரல்களும் நீண்டது தீண்டிவிட
தயங்கியே நானும் கடந்துசெல்ல
தளராமல் அது தொடர்ந்திருக்க
தவறாமல் என்னைக் கண்டு சிரிக்க
தயக்கமும் மெல்ல கரைந்தொழுக
தோளின் மீது நானும் இடம் கொடுக்க
நடந்தோம் நடந்தோம் வெகு தூரம்
மொழியோடு மௌனமும் சில நேரம்
கண்ணின் விழி நீர் வழிந்தோடும்
மறவாமல் இறகாலே வருடிவிடும்
அங்கே போ என்றது, ‘எங்கே?’ என்றேன்
கீழே பார் என்றது, மலர்வனம் கண்டேன்
சிகரத்தை நோக்கி வழி சொன்னது
அரவணைப்பாய் துணை நின்றது
மலை மீது நின்றபடி மண்ணைக் கண்டேன்
முடியொன்று இல்லை, இருப்பினும் சூடிக்கொண்டேன்
விழி நீரும் தீர்ந்தது, நெஞ்சத்து வலியாவும் மறைந்தது
பகலிரவு பாராமல் அது என் தோள் மீது கிடந்தது..
வர்ணம் பூசிய அழகு பட்டாம்பூச்சி,
தலை கோதுகையில் என் தாயானதோ?!
உடன் சிரிக்கையில் தோழியானதோ?!
கண்ணீர் துடைக்க வந்த என் தேவதையோ?!!
எந்தன் உயிருக்கு உயிரான தேவதையோ…!!
******************************************************************************************************
அவன் பாடி முடிக்க, அவ்விடம் அமைதியானது. அவனது கண்கள் மென்மையான ஈரம் கொண்டிருந்தன. அவன் அஞ்சலியை நோக்கியபடி நின்றிருந்தான். அவளும் அசையாது அவனைப் பார்த்திருந்தாள்.
“அர்ஜுன், பாட்டுனு சொன்னீங்க ஆனா ஒரு கவிதையை பாட்டா படிச்சிருக்கீங்க?! ரொம்ப அற்புதமா இருந்தது” என்று தொகுப்பாளர் பேச, அரங்கம் கை தட்டியது.
அர்ஜுன் அழகாய் புன்னகைத்தபடி நிற்க, குழுவினர் அனைவரும் அவனோடு மேடையில் வந்து நிற்க, வேதநாயகத்தையும், மருதநாயகத்தையும் மரியாதை நிமித்தமாக மேடையேற்றி, விழா நடத்துனர் பரிசளிக்க, தொகுப்பாளரின் நன்றி உரையோடு, விழா இனிதே முடிந்தது.
திரைக்குப்பின் வேதநாயகமும், மருதநாயகமும் அர்ஜுனையும் மற்ற குழுவினரையும் பாராட்ட, அங்கு வந்த அஞ்சலி, அர்ஜுனை அன்பொழுக பார்த்தபடி அவன் எதிரே சென்று நின்றாள்.
“வாழ்த்துக்கள் அர்ஜுன்” என்று கை குலுக்கினாள்.
“தேங்க்ஸ் அஞ்சலி, உன்னால தான் எல்லாம்…” என்றான்.
அந்த நொடி, அவளை ஆரத்தழுவிக்கொள்ள ஆசை கொண்டான். யாருமில்லா உலகிற்கு அவளைக் கடத்திச்சென்றுவிட ஆவல் கொண்டான். அவளது கைகளுக்குள் முகத்தினை பொதிந்து கொள்ள, அவள் மடி மீது தலை வைத்து சாய்ந்துகொள்ள, தனது காதலை நாள் முழுதும் பேசிக்கிடக்க விருப்பம் கொண்டான்.
குழுவினர் சூழ்ந்துகொண்டு அஞ்சலியை புகழ, நன்றி சொல்ல, பெருமிதம் கொண்டார், வேதநாயகம். அனைவரும் கிளம்ப, அஞ்சலி இறுதியாக நண்பர்களோடு வருவாதாகக் கூறி, அப்பாவையும் சித்தப்பாவையும் வழியனுப்பி வைத்தாள். குழுவினர் கிளம்பிட, இறுதியாக சாம்’ன் காரில் அர்ஜுன், மதன் மற்றும் அஞ்சலி கிளம்பினர்.
“அப்புறம் அஞ்சலி, பெரிய வியாபார காந்தம் ஆயிட்டீங்க. வி.ஐ.பி. ஆயிட்டீங்க. செலிபிரிட்டி ஆயிட்டீங்க.. வாழ்த்துக்கள்” என்றான் மதன்.
“ஹே கிண்டல் பண்ணாத மதனா. இன்னைக்கு நீ தான் ஹைலைட்டே…”
“நானா?”
“ஆமா… நீ கரீனா சோப்ராவாக மாறிய தருணம், ஒருத்தருக்கு ஆனந்த கண்ணீர் வந்துடுச்சு…”
“அது யாரு?”
“உன் ஆளு கஜா தான்…”
அனைவரும் சிரிக்க, “என் ஆளுன்னு முடிவே பண்ணிட்டியா?” என்றான் மதன், பரிதாபமாக.
“ஆமா, நீ தான் பிரேக் அப் பண்ணாம மெயின்டெய்ன் பண்றியே?”
“யாரு நானு? முன்ன பின்ன லவ் பண்ணி பிரேக் அப் பண்ணியிருந்தா, அதெல்லாம் என்னன்னு தெரிஞ்சிருக்கும். என்ன பண்றதுனு தெரியாம, ஒரே குழப்பமா இருக்கு அஞ்சலி. நீயே இதுக்கு ஒரு யோசனை சொல்லேன்…”
“ஆமா, எனக்கு வேற வேலை இல்லை…”
“அது சரி நீங்க பெரிய வியாபார காந்தம். எனக்கெல்லாம் யோசனை சொல்வீங்களா?!!”
“டேய், அடிவாங்க போற. யோசிச்சு ஏதாவது சொல்றேன்” என்று அவள் கூற, அவளது இல்லத்தை அடைந்திருந்தனர்.
அவள் சாமிடம் நன்றி கூறிவிட்டு கீழே இறங்க, அர்ஜுனும் கீழே இறங்கினான். அவளை வாயிற்கதவு வரை உடன் அழைத்துச் சென்றவனுக்கு, அந்த இரவின் குளுமையில், உயிருக்கு இனியவளோடு நடக்கும் அந்தத் தருணம் பொக்கிஷமானது. பணிப்பெண் வாயிற்கதவினை திறக்க,
“குட் நைட் அஜூ” என்றாள், அஞ்சலி.
“ம்ம்… ப்ரோக்ராம் நல்லா நடந்ததா? உனக்கு சந்தோஷமா?”
“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…”
“எந்த பாட்டு ரொம்ப நல்லா இருந்தது?”
“கடைசியா நீ சொன்ன கவிதை” – சற்றும் சிந்திக்காமல் பதில் கூறினாள். அவன் இதழோரம் சிரித்துக்கொண்டான்.
“சரி நீ போய் தூங்கு அஞ்சலி, ரொம்ப நேரமாச்சு”
“தூங்கறதா? தூக்கம் வந்தா பார்க்கலாம்…” என்றவள், புன்னகைத்தபடி உள்ளே செல்ல, அவன் புன்முறுவல் மறையாது காரினை நோக்கி நடந்தான். தனது அறைக்குள், இருட்டில் நின்றபடி அர்ஜுன் செல்வதைக் கண்டவள், விரல்களை இதய வடிவாக்கி, அதன் வழியே அவனைப் பார்த்து ரசித்தாள். தனது கட்டிலின் மேல் படுத்தவள், கைப்பையில் பதுங்கியிருந்த மலரினை எடுத்து, நெஞ்சோடு சேர்த்துக்கொண்டாள். அர்ஜுனைப் பற்றி நினைக்க நினைக்க, அவள் உடல் முழுதும் இனம் புரியா விறுவிறுப்பு படர்ந்தது. கன்னங்கள் சிவந்தன. முகத்தில் பிறை புன்னகை மறையாமல் தவழ்ந்திருந்தது.
