Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 39

 

காதலும் கடத்தப்படும் – 39

இரவு தாமதமாக வீடு திரும்பிய மதன், அறைக்குள் கட்டிலின் மேல் அர்ஜுன் படுத்திருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டான். வெகு நாட்கள் கழித்து அவன் கட்டிலின் மேல் படுத்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், இனி அதனால் எந்த பயனும் இல்லை என்றே அவனுக்கு தோன்றியது. சந்தேகமாய் அர்ஜுனின் அருகே சென்று பார்க்க, அவன் அவளது புடவையை இறுக்க அணைத்தபடி உறங்கிப்போயிருந்தான். மதனிற்கு அவனது செய்கை ஏனோ விசித்திரமாக இருந்தது.



Advertisement

 

வரவேற்பறையில் சென்று படுத்தவன், தன்னை அறியாமல் உறங்கிப்போயிருந்தான். விடியற்காலை கதவு தட்டும் சத்தம் கேட்டு விழித்தெழுந்த மதன், கைபேசியில் நேரத்தைக் கண்டான். நாலே முக்கால் என்றது. ‘அதுக்குள்ள டாக்சி வந்துடுச்சா?’ என்று குழப்பமாய் எழுந்து சென்றவன், கதவினைத் திறக்க, தனக்கு பரிச்சயமான, வாகனங்களை பழுது பார்க்கும் ஒருவன் நின்றிருந்தான்.

“என்ன அண்ணே இந்த நேரத்துல?”

Advertisement

“அர்ஜுன் தான்பா அவசரமா வண்டியை ரெடி பண்ணி தர சொன்னான்…” என்றபடி வண்டி சாவியை நீட்டினான்.

Advertisement

‘எந்த வண்டி?’ என்று யோசனையாக மதன் பார்க்க, அவர்கள் பல மாதங்களுக்கு முன் அஞ்சலியைக் கடத்த பயன்படுத்தியிருந்த வண்டி நின்றிக்கொண்டிருந்தது. ‘இது எதுக்கு இந்த நேரத்துல?’ என்று மதன் குழம்பி நிற்க, 

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணே” என்றபடி, அவனின் கையில் பணத்தை திணித்த அர்ஜுன், மதன் கையிலிருந்த சாவியை எடுத்துக்கொண்டான். பணம் பெற்றுக்கொண்டவன் கிளம்பிச் செல்ல, அர்ஜுனை அப்பொழுதே கவனித்தான் மதன். கேசத்தை திருத்தி, முகச்சவரம் செய்து, புது துணி அணிந்திருந்தான். அது அஞ்சலி வாங்கித்தந்தது என்பதனை பார்த்த மாத்திரத்திலேயே கண்டுகொண்டான்.

“அஜூ??”

Advertisement

“எந்த கேள்வியும் கேட்காம, பத்து நிமிஷத்துல தயாராகி வர, நமக்கு லேட் ஆகுது…”

“ஆனா ப்ளைட்டுக்கு நேரமிருக்கே… அதுவுமில்லாம இந்த வண்டி எதுக்கு?” என்றான்.

“சிங்கப்பூர் போறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான வேலை ஒன்னு பாக்கி இருக்கு. அதை முடிச்சுட்டு கிளம்பிடுவோம்…”

‘அப்படி என்ன வேலை?’ என்று தயங்கியபடி மதன் நின்றிருக்க,

“சீக்கிரம் கிளம்பு உனக்கு இன்னும் எட்டு நிமிஷம் தான் இருக்கு…” என்றான் அர்ஜுன், சற்றே கோவமாக.

 

அவனது செயல்கள் விசித்திரமாக இருக்க, குழப்பமாக உள்ளே சென்ற மதன், அடுத்த பத்து நிமிடங்களில் தயாராகி வந்தான். 

 

திருமண மண்டபத்தில்…

அதிகாலைப் பொழுதில் துயில் எழும் சூரியனை பார்த்தபடி கண்கள் கலங்கி நின்றிருந்தாள், அஞ்சலி. செம்பட்டு புடவை உடுத்தி, தங்க வைர நகைகள் அணிந்து, மல்லிகைச் சரங்கள் சூடி, பெண்ணவள் தனது திருமணத்திற்கு தயாராகி நின்றாள். யாருமில்லா அந்த அறையில், அர்ஜுனுக்கு கொடுக்க நினைத்த இதயவடிவ உருவை கையில் ஏந்தியபடி நின்றிருந்தாள். அதனைக் காணக்காண அவளது மனம் வெம்பியது. கதவு தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டவள், கையிலிருப்பதை எங்கு ஒளித்து வைப்பது என்று புரியாமல், கட்டிலின் மேல் கிடந்த சில துணிகளின் அடியில் மறைவாய் வைத்துவிட்டு, கண்களை துடைத்துக்கொண்டு கதவினை திறந்தாள்.

“அடடடடா… என் பொண்ணு என்ன அழகா தயாராகியிருக்கா” என்று அவளை பார்த்த நொடியிலேயே பூரித்துப்போனார், மருதநாயகம்.

“சித்தப்பா…”

“மனசு நிறைஞ்சு போச்சு மா…” என்றவர் மகளை உச்சி முதல் உள்ளங்கால் வரை கண்டு வியந்தார்.

“உள்ள வாங்க சித்தப்பா, உட்காருங்க” என்றபடி அவள் அறைக்குள் செல்ல, அவளை பின் தொடர்ந்து வந்தவர், கட்டிலின் மேல் சென்று அமர்ந்தார். அதனைக் கண்டு ஒரு நொடி திடுக்கிக்கிட்டவள், செய்வதறியாது பதறினாள்.

“அஞ்சலி மா, உனக்கு இந்த நகையை வாங்கிட்டு வந்தேன். நீ இப்போவே இதை போட்டுக்கணும். கல்யாணம் முடிஞ்சு தர சொல்லி சில பேர் சொன்னாங்க. நான் என்ன விருந்தாளியா? இல்லை இதுதான் யாரோ வீட்டு கல்யாணமா? என் மக இத போட்டுக்கணும். அதான் எனக்கு வேணும்…” என்றவர், கையிலிருந்த நகை பெட்டியை திறந்து, ஒரு அட்டிகையை எடுத்து கொடுத்தார்.  

“சரிங்க சித்தப்பா, ரொம்ப அழகா இருக்கு” என்று வாங்கிக்கொண்டவள், பதட்டம் குறையாமல், அருகிலிருந்த கண்ணாடியின் முன் நின்று அதனை அணிய, சற்று சாய்ந்து அமர்ந்த மருதநாயகம், கைகளை பின்புறம் வைக்க, இடக்கையில் ஏதோ தட்டுப்பட, அவர் துணியை விளக்கி காண, அஞ்சலியின் இதய வடிவ உருவம் வெளிப்பட, நகையணிந்தவள் திரும்பி மருதநாயகத்தைக் காண, அவரது கைகளில் இருந்த இதய உருவைக் கண்டு திடுக்கிட்டு நின்றாள். 

“அஞ்சலி என்னமா இது?” – அவரும் அதிர்ச்சியில் உறைந்திருந்தார்.

“சித்தப்பா…”

“அந்த பயல விரும்பறியா? அதான் இத்தனை நாளா முகம் வாடி இருந்தியா?” 

அவள் எதுவும் கூறாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்றாள். 

“ஏன்மா சித்தப்பா கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல…”

“சித்தப்பா, என் ஆசை கானல் நீர் மாதிரி. தாகமும் தீராது. ஆசையும் நிறைவேறாது. இதை மறந்துடுங்க. அப்பாகிட்ட சொல்லிடாதீங்க” என்றவள், அவனது கையிலிருந்ததை வாங்கி தனது பெட்டியில் வைத்து பூட்டினாள். அதிர்ச்சியிலிருந்து மெல்ல தன்னை மீட்டுக்கொண்டவர், அவ்விடம் விட்டுச் சென்றார்.

 

“அஜூ, எங்க போறோம்? ஏறத்தாழ விடியப்போகுது… ஏதாவது சொல்லு” என்றான் மதன், பொறுமை இழந்தவனாய். அமைதியாக வந்த அர்ஜுன், பெரிய காம்பவுண்ட் சுவரின் அருகே தனது வண்டியை நிறுத்தினான். எந்த இடம் என்று மதன் குனிந்து, சுவரின் உள்ளே இருந்த கட்டிடத்தை பார்க்க, அது அஞ்சலிக்கு திருமணமாகவுள்ள திருமண மண்டபத்தின் பின்புறம்  என்பதை உணர்ந்து, நெஞ்சடைத்து போனான்.   

“அஜூ, எங்கடா வந்திருக்க?”

“வாழ்க்கையில கடைசியா ஒரு தப்பு பண்ண…”

“அப்படினா?”

“அஞ்சலியை கடத்த போறேன்…”

“டேய்…”

“அவ எனக்கு வேணும். முடிவு பண்ணிட்டேன்…”

“என்னடா திடீர்னு? நேத்து நான் பேசினதும் ஞானோதயம் வந்துடுச்சா?”

“ச்ச ச்ச… நேத்து அவ வீட்டுக்கு போயிருந்தபோது அவ என்னை என்ன சொன்னா தெரியுமா?”

“என்ன சொன்னா?”

“என்னை ‘அர்ஜுன்’னு சொன்னா…”

“புரியல…”

“என்னை அஜுன்னு தான கூப்பிடுவா. எப்படி அர்ஜுன்னு சொல்லலாம்?”

“அதுக்கு?”

“அதுல தான் ரொம்ப மனசு நொறுங்கிட்டேன். யோசிச்சேன். வாழ்க்கையில பயந்தா வேலைக்கு ஆகாதுன்னு, அவளை தூக்கறதுக்கு தான் வண்டியை நைட்டோட நைட்டா ஏற்பாடு பண்ணேன்…”

“அப்போ மணிக்கணக்கா நான் கொடுத்த லெக்ச்சர்?”

“கொஞ்சம் பீலிங்கா இருந்தது. ஆனா அஞ்சலி என்னை ‘அர்ஜுன்’னு சொன்ன அளவுக்கு பீலிங் இல்லை…”

“எனக்கு இது தேவை தான்” என்றவன், கண்களை மூடி பின்புறம் தலைசாய்த்து அமர்ந்தான்.

“முக்கியமான வேலையா வந்துட்டு, ஏன்டா தூங்கற?”

“நான் வந்தேனா? நீ தான் என்னை கடத்திட்டு வந்திருக்க…”

“ப்ச்… அஞ்சலிக்கு போன் போட்டு வெளிய வரச்சொல்லு…”

“ஆங் அப்படியே வந்துடுவா? அவ என்ன இங்க கல்யாணத்துக்கு வந்திருக்கற கெஸ்ட்டா, போன் போட்டதும் வெளியே வர? கல்யாணமே அவளுக்கு தான்… எப்படி வருவா?”

சற்றே யோசனையாகிப்போனான், அர்ஜுன்.

 

இங்கு இவர்கள் பேசிக்கொண்டிருக்க, அறையின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திடுக்கிட்டாள், அஞ்சலி. கதவைத் திறக்க, ஒரு பணிப்பெண் கையில் நெகிழிப்பையோடு நின்றிருந்தாள். அஞ்சலி கேள்வியாக பார்த்திருக்க,

“மருது அய்யா கொடுக்க சொன்னாங்க” என்றாள். 

பையை அவள் பெற்றுக்கொண்டு உள்ளே பார்க்க, அதில் இரண்டு வாழைப்பழங்கள் இருந்தன. எதற்கு என்று புரியாமல், அஞ்சலி மருதநாயகத்தை தேடித் சென்றாள்.

மருதநாயகமும், வேதநாயகமும் பேசிக்கொண்டு நிற்க, அவர்களின் எதிரே சென்று நின்றாள், அஞ்சலி.

“சித்தப்பா, இந்த பழம்??”

“அதுவா, மாட்டுக்கு கொடுத்துட்டு வாமா…”

“மாடா?” – வேதநாயகம் குறுக்கிட,

“ஆமா அண்ணே, அண்ணி என் கனவுல வந்து, அஞ்சலிய மாட்டுக்கு பழத்தை கொடுக்க சொன்னாங்க…”

‘மீண்டும் மீண்டுமா?’ என்று குழம்பிய வேதநாயகம், 

“இந்த நேரத்துல மாட்டுக்கு எங்க போவா?” என்றார்.

“பசங்க ஏற்பாடு பண்ணியிருக்காங்க. மண்டபத்துக்கு பின்புறம் நிக்கும், போய் பாரு அஞ்சலி” என்றார், மருதநாயகம். அவள் செல்ல எத்தனிக்க, 

“இரு அஞ்சலி…” என்றார், வேதநாயகம்.

“ஏன் அண்ணன் தடுக்கறீங்க?”

“மாட்டுக்கு ரெண்டே ரெண்டு பழமா கொடுப்பாங்க?” என்றவர், அருகிலிருந்த தாம்பாளத்திலிருந்து, ஒரு சீப்பு வாழைப்பழத்தினை எடுத்துக் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்டவள், சற்று தள்ளி இருந்த பின்புற கதவருகே சென்றவள், யோசனையாக மருதநாயகத்தை நோக்கினாள்.

“என்ன அஞ்சலி?” என்று அவள் அருகே அவர் வந்து நிற்க, அவள் நேரே கைகாட்டினாள். அவள் காட்டிய திசையில் அவர் பார்க்க, பின்புற இரும்புக் கதவுகளின் அருகே, ஒரு பூம் பூம் மாடும் மாட்டுக்காரனும் நின்றிருந்தனர். அதை கண்டு திடுக்கிட்டவர், ‘மாட்டை ஏற்பாடு பண்ண சொன்னா, என்ன பண்ணியிருக்கானுங்க’ என்று தன்னிடம் பணிபுரிவோரை எண்ணி கடுப்பான மருதநாயகம்,

“பரவால்ல போய் கொடு மா…” என்றார்.

“பசுமாட்டுக்கு தான கொடுப்பாங்க?”

“மாடுல என்ன பசு மாடு, காளை மாடு, பூம் பூம் மாடு? மாடு மாடுதான?” என்றவர் மாட்டுக்காரனிடம் கொடுக்கும்படி சில நோட்டுகளைக் கொடுத்தார். ஒன்றும் புரியாமல் முழித்தவள், “சரிங்க சித்தப்பா” என்றபடி மாட்டின் அருகே சென்றாள். அவனிடம் பணம் கொடுத்துவிட்டு, மாட்டிற்கு ஒவ்வொரு பழமாக கொடுக்கத் தொடங்கினாள். 

 

சில நிமிடங்களில், மாட்டுக்காரன் மாட்டினை ஒட்டிக்கொண்டு செல்ல, ஆள் அரவமற்ற அந்த ரோட்டினை ஒரு முறை கண்டாள். இடப்புறம், சற்று தொலைவில் அவளுக்கு பரிச்சயப்பட்ட வண்டி நின்றுகொண்டிருந்தது. அவள் மெல்ல நகர்ந்து அவ்வண்டியினை நோக்கி செல்ல, அர்ஜுன் உள்ளிருந்து இறங்கி நின்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!