காதலும் கடத்தப்படும் – 40

காதலும் கடத்தப்படும் – 40
“அஜூ” என்றபடி ஆச்சர்யமாக அவனெதிரே வந்து நின்றாள்.
“இப்போ மட்டும் ‘அஜூ’னு சொல்ற, நேத்து எதுக்கு ‘அர்ஜுன்’னு கூப்பிட்ட?” என்றபடி அவன் அவளை பார்த்துக்கொண்டு நிற்க, அவன் பின்னே மதன் வந்து நின்றான்.
Advertisement
அவள் குழப்பமாய் அவ்விருவரையும் பார்த்துக்கொண்டிருக்க, பின்னிருந்து வந்த எவனோ ஒருவன் ஒரு கைக்குட்டையை எடுத்து அர்ஜுனின் முகத்தினை மூட, அடுத்த சில நொடிகளில் அர்ஜுன் மயங்கி சரிய,
“தூக்கு டா மதனு” என்று அவன் கத்த, அப்பொழுதே மதன் உணர்ந்தான் அங்கே ராபர்ட் அண்ணன் நின்றிருப்பதை.
“அண்ணா, ப்ளான் மாறிடுச்சு…” என்றவன், அர்ஜுனை தாங்கிப்பிடிக்க, அஞ்சலியும் பதறிக்கொண்டு அவனை பிடிக்க, அவனை ராபர்ட்டும், மதனும், அர்ஜுனின் வண்டியில், பின்னிருக்கையில் ஏற்றினர்.
Advertisement
Advertisement
அவர்கள் அர்ஜுனை படுக்க வைப்பதற்குள், மற்றொரு கார் அவர்களை மறித்து நின்றது. அதிலிருந்து இறங்கிய நால்வரில், இருவர் அஞ்சலியை தங்களது வாகனத்தின் உள்ளே ஏற்ற, மதன் தடுக்க முயல, அவன் மீது மயக்க மருந்து தெளிக்கப்பட்டது. ராபர்ட்டை அடித்து கீழே தள்ளிவிட்டு, மயங்கிய மதனை, அர்ஜுனின் வண்டியின் பின் இருக்கையில், கீழே கால் வைக்கும் பகுதியில் கிடத்திவிட்டு, அவ்விருவரும் வண்டியோடு விரைந்தனர்.
மற்றொரு வண்டியில் அஞ்சலி திமிறிக்கொண்டிருக்க, அவள் மீதும் மயக்க மருந்து தெளிப்பான் பயன்படுத்தப்பட்டது. அடிபட்ட ராபர்ட் சுவரோரம் சுருண்டு விழுந்து கிடந்தான். முன் சென்ற வண்டியை தொடர்ந்து இவர்களும் விரைந்தனர்.
Advertisement
நேரம் கழித்து, அர்ஜுனுக்கு நினைவு திரும்ப, மெல்ல கண்விழித்துப்பார்த்தான். ஏதோ ஒரு செயல்பாட்டில் இல்லாத பாழடைந்த கிடங்கில் தான் இருப்பதை உணர்ந்தான். கைகள் கட்டப்பட்டு, தான் ஒரு இருக்கையில் அமர்ந்திருப்பதை உணர்ந்தான். மயங்கும் முன் அஞ்சலியை பார்த்த ஞாபகம் நினைவிற்கு வர, அவளை எண்ணி பதறியவனாய் அர்ஜுன் சுற்றும் முற்றும் பார்க்க, தனது அருகே மற்றொரு இருக்கையில் கைகள் கட்டப்பட்டு, மதன் அமர்ந்திருந்தான். அவனும் மெல்ல நினைவு திரும்ப, தடுமாறிக்கொண்டிருந்தான்.
“மதனா… மதனா…” என்று அர்ஜுன் கத்த,
“வாயை திறந்தா கொன்னுடுவேன்” என்று ஒருவன் உருட்டுக்கட்டையோடு அர்ஜுனின் எதிரே வந்து நின்றான்.
“டேய்” என்றொரு குரல் கேட்டு அந்த அடியாள் விலகி நிற்க, அர்ஜுனின் எதிரே மருதநாயகம் வந்து நின்றார்.
“சார்… நீங்க?” – கேள்வியாகிப் போனான், அர்ஜுன். சற்று தெளிவு பெற்ற மதனும், மருதநாயகத்தை அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை.
“உன்னை ரொம்ப நல்ல பையன்னு நினைச்சேன். என் பொண்ணை அழவச்சிட்டு நீ ஊரு ஊரா போய் பாட்டு பாட போறியா?”
“அது…”
“எதுவும் பேசாத… இந்த மாதிரி ஒரு பொண்ணு உனக்கு இந்த உலகத்துல எங்க தேடினாலும் கிடைப்பாளா? ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லியிருந்தா, உன் நிலைமை என்ன ஆயிருக்கும்? ‘எப்படிடா என் பொண்ணை வேண்டாம்னு சொல்லுவ?’னு என் அண்ணன் தோலை உரிச்சிருப்பாரு”
“சார்” – மதன் குறுக்கிட,
“வாயை திறந்தீங்கன்னா வாயிலேயே போடுவேன்…” என்று அவனை நோக்கி கத்தினார்.
“சித்தப்பா…” என்றொரு குரல் கேட்க திரும்பியவர், அஞ்சலி தட்டு தடுமாறி அங்கிருந்த வண்டியிலிருந்து இறங்கி வருவதைக் கண்டார்.
“என்ன சித்தப்பா இதெல்லாம்?”
“உன் ஆசைதான் எனக்கு முக்கியம்… அதான் உன்னையும், இந்த பயலையும் தூக்கிட்டேன்…”
“எதுக்கு சித்தப்பா…”
“நீ சும்மா இரு” என்று குறுக்கிட்டவர்,
“ஒழுங்கு மரியாதையா என் பொண்ணை கட்டிக்கல, அவ்வளவு தான் சொல்லிட்டேன்… ஊருக்கு தான் கவுன்சிலர், அடிப்படையில கேங்ஸ்டர்…” என்று அவர் உறும, மதன் அங்கு நின்றிருந்த நால்வரைக் கண்டான்.
‘ஒருத்தன் காலங்கார்த்தால மிக்ச்சர் தின்னுகிட்டு இருக்கான்… இன்னொருத்தன் மொபைல்ல கேம் ஆடிக்கிட்டு இருக்கான்… அங்க இருக்கறவன் கொட்டாவி விட்டுகிட்டு இருக்கான்… பக்கத்துல கட்டையோட நிக்கற கட்டப்பாவுக்கு வேணும்னா பாஸ் மார்க் தரலாம்… இந்த இத்துப்போன நாலு பேர வச்சிக்கிட்டு தான் இந்த ஆளு கேங்ஸ்டர்னு சுத்திக்கிட்டு இருக்கானா? காமெடி பீசு…’ என்று மனதினுள் எண்ணிக்கொண்டான்.
“சார்” – மீண்டும் அழைத்தான் மதன்.
“பேசாத டா… உன் அண்ணன் என் பொண்ணை கட்டல உன்னை வெட்டுவேன்”
“அதுக்கு முதல்ல கையை கட்டியிருக்கற கையித்த வெட்டி விடுங்க” என்றான்.
அஞ்சலியைக் கண்டதும், அதுவும் அவளது சித்தப்பாவின் அருகே பத்திரமாக அவள் இருப்பதைக் கண்டதும், அர்ஜுனின் மனம் நிம்மதி கொண்டது. அழகு பதுமையென அவள் அலங்கரித்து நிற்பதைக் கண்டு அவன் சொக்கித்தான் போயிருந்தான். இத்தனை அழகும் தனக்கே என்றொரு கர்வம் கூட அவனுக்கு முளைத்தது.
அவர்களின் கைகள் கட்டவிழ்த்து விடப்பட,
“சித்தப்பா, நாம மண்டபத்துக்கு போயிடலாம். அப்பா இந்நேரம் ரொம்ப பதட்டத்துல இருப்பாங்க. நீங்க இப்படி செஞ்சது தெரியவந்தா தேவையில்லாம உங்க ரெண்டு பேருக்கும் திரும்பவும் பிரச்சனை வந்துடும். இப்போ தான்…” என்று கூறிக்கொண்டே அவள் எதேச்சையாக அர்ஜுன் புறம் திரும்ப, அவனைக் கண்ட நொடியே உறைந்துபோனாள். தீவிர யோசனையிலிருந்த மருதநாயகம், அமைதியாகிப்போன அஞ்சலியைக் காண, அவள் பார்க்கும் திசையில் அவரும் நோக்கினார். அர்ஜுன் நின்ற நிலையில், அஞ்சலியை நோக்கி, கைகளை இதய வடிவாக்கி, அதன் வழியே அவளைக் கண்டிருந்தான். கண்களில் நீர் வழிய அவனை நோக்கி ஓடிச்சென்ற அஞ்சலி, அவனை இறுகக் கட்டிக்கொண்டாள். அர்ஜுனும் தனது உயிருக்கு நிகரான இனியாளை, ஆரத்தழுவி நின்றான். அஞ்சலி அழுதிருக்க, அர்ஜுனின் கண்களும் கலங்கின.
“ம்க்கும்… ம்ம்க்கும்…” என்று மருதநாயகம் குரலை செரும, அர்ஜுனும், அஞ்சலியும் மெய்மறந்து நின்றிருந்தனர்.
“அஜூ… அஜூ…” – குரல் கொடுத்தான், மதன்.
கண்களை மூடியபடியே, “என்னடா?” என்றான்.
“சார் இருமுவது கேட்கலையா?”
“கூட்டிட்டுபோய் இருமல் மருந்து வாங்கிக்கொடு…”
மருதநாயகம் மதனைக் கண்டு முறைக்க,
“டேய், நீங்க நிக்கற நிலமையைக் கண்டு தான் அவரு இருமறாரு…” என்று மதன் கூறியதைக் கேட்டு, அஞ்சலியும், அர்ஜுனும் சற்று விலகி நின்றனர். அர்ஜுன் புன்முறுவல் சிந்த, அஞ்சலியும் அவனைக் கண்டு நாணமொழுக அழகாய் புன்னகைத்தாள்.
ஏதோ யோசனை வந்தவனாய், அர்ஜுன் மருதநாயகத்திடம்,
“சார், கைமாத்தா ஒரு தாலி கிடைக்குமா?” என்றான்.
“ஏன்டா, கைமாத்தா சில்லறை தான கேட்பாங்க, இவன் என்னடா தாலி கேட்கறான்?” என்று மருதநாயகம் மதனிடம் வினவ,
“டேய், அவரு என்ன அம்மன் கோவில் வேப்ப மரமா? திடீர்னு தாலி கேட்டா அவரு என்ன பண்ணுவாரு?” என்று அர்ஜுனிடம் கடிந்துகொண்ட மதன்,
“அப்புறம் எதுக்கு சார், ‘என் பொண்ண கட்டலேன்னா வெட்டுவேன்’னு பொங்குனீங்க?” என்றான்.
“டேய் அதுக்குன்னு இந்த இடத்துலயா வச்சு கல்யாணம் முடிப்பாங்க? கிளம்புங்க கோவிலுக்கு போவோம்…”
“சித்தப்பா… மண்டபத்துக்கு போவோம்… அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டு, அவர் ஆசீர்வாதத்தோட எங்க கல்யாணம் நடக்கட்டும்…” என்றவள், அர்ஜுனைக் காண,
“சார், அஞ்சலி விருப்பப்படியே செய்வோம்” என்று அர்ஜுனும் கூற, சற்று யோசித்த மருதநாயகம், அவர்கள் மூவரையும் கூட்டிக்கொண்டு திருமண மண்டபத்திற்கு விரைந்தார்.
வண்டியில் முன் இருக்கையில் மருதநாயகம் அமர்ந்திருக்க, பின் இருக்கையில் அஞ்சலி, அர்ஜுன் மற்றும் மதன் அமர்ந்திருந்தனர். சென்றுகொண்டிருக்கையில்,
“சார், நீங்க இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுப்பீங்கன்னு நான் நினைச்சே பார்க்கல…” என்று பெருமிதம் கொண்டான், மதன்.
“எத்தனையோ பேருக்கு காதல் கல்யாணம் செஞ்சு வச்சிருக்கேன். எவ்வளவோ ரிஸ்க் எடுத்திருக்கேன்! எத்தனை சேசிங்!! எத்தனை ஃபைட்டிங்!! ஊருக்கே செஞ்ச நான், என் பொண்ணுக்கு செய்ய மாட்டேனா? நானே காதல் கல்யாணம்தான் செய்துக்கிட்டேன்…”
அந்த பதிலைக் கேட்ட மதனுக்கு, மருதநாயகத்தின் அடியாட்கள் நினைவிற்கு வர, சற்றே எரிச்சலாகிப் போனான்.
“கேள்விப்பட்டேன் சார், உங்க லவ் ஸ்டோரி கொஞ்சம் சொல்லுங்களேன்…”
“டேய், நாம என்ன வேலை செஞ்சுக்கிட்டிருக்கோம், நீ கதை சொல்லல சொல்ற?”
“சும்மா சொல்லுங்க சார்” என்க, மருதநாயகம் கூறத் தொடங்கினார்.
“சின்ன வயசுல, நான் பெரிய ரவுடியா சுத்திக்கிட்டிருந்த நேரம். தினம் தினம் சம்பவம் தான். நம்ம ஏரியா மார்க்கெட்ல ஒரு அம்மன் கோவில் இருந்தது. ரொம்ப சின்ன கோவில். அந்த கோவில் வாசல்ல ஒரு பொண்ணு பூ கட்டிட்டு இருந்தது…”
“அடடா ஆரம்பமே அசத்தலா இருக்கே…”
“மார்க்கெட்ல எல்லாரும் எனக்கு பயந்து காசு தருவாங்க. நான் கேட்கலனாலும் காசு தருவாங்க. ஆனா, அந்த பொண்ணுகிட்ட மட்டும் நான் கேட்டதே இல்லை, அதுவும் கொடுத்ததே இல்லை. ஆனா ஒன்னு, எல்லாரும் நம்மள பார்த்து பயப்படும் போது, அது மட்டும் என்னை பார்த்து ஆசையா சிரிக்கும். எனக்கு உள்ளுக்குள்ள என்னவோ செய்யும்…”
“பியார்… பிரேமா.. காதல்…”
“அதுமட்டுமில்ல… நான் எப்பவும் அந்த பொண்ணு கடைகிட்ட செருப்பை கழட்டி போட்டுட்டு கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வருவேன். கைல பெரிய கத்தி வச்சுக்கிட்டு இருப்பேன். ஒரு தடவை கும்பிட்டுட்டு வந்து நான் செருப்பு மாட்டும் போது, சின்ன மல்லி சரத்தை எடுத்து என்னோட கத்தி கைபிடில சுத்தி விட்டா. நான் ஒன்னும் புரியாம நிக்க, ‘செய்யுற தொழில் தெய்வம், அதான் பூ வச்சேன்’னு சொன்னா பாரு, அப்படியே உருகிட்டேன்…”
“மருதநாயகம் ரொம்ப மிருதுவான நாயகமா மாறிட்டிங்கனு சொல்லுங்க…”
சிரித்துக்கொண்டவர், மேலும் தொடர்ந்தார்.
“அடிக்கடி அவ பூ வைக்க, நான் சிரிக்க, அவ சிரிக்க… அப்புறம் என்ன எங்களுக்குள்ள காதல் முளைச்சு, அரும்பாகி, மொட்டாகி, பூவாயிடுச்சு…”
“பூ எப்போ பூமாலையாகி தோள் சேர்ந்தது?”
“ஹாஹா… ஒரு நாள் நானே தான் கேட்டேன், கல்யாணம் கட்டிக்கலாமான்னு. வீட்ல வந்து பேச சொன்னா. நானும் போய் பேசினான். அவ வீட்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க…”
“எந்த பொண்ணை பெத்தவன் ஒரு ரவுடிக்கு பொண்ணை கட்டிக்கொடுப்பான்?”
“பொண்ணை பெத்தவன் இல்லை, கட்டினவன்…”
“இல்லை புரியல…”
“நான் அவ புருஷன், மாமியார் கிட்ட போய் பொண்ணு கேட்டேன், முடியாதுனு சொல்லிட்டாங்க…”
மதன் எரிச்சலோடு அஞ்சலியைக் காண, அவள் வேறு புறம் திரும்பிக்கொண்டாள்.
“அப்புறம்?”
“அப்புறம் என்ன, நாம தான் பெரிய ரவுடி ஆச்சே… ரகளை பண்ணி பொண்ணை தூக்கிட்டு போய் கல்யாணம் கட்டிக்கிட்டேன்… அதான் அண்ணனுக்கு கோவம் என் மேல…”
“இப்படி ஒரு அறிய காரியத்தை செய்ததுக்கு கோவப்படாம, கேக் வெட்டி கொண்டாடுவாங்களா?” என்றான் மதன் எரிச்சலோடு.
“காதல் வந்துட்டா சரி தப்பெல்லாம் தோணாது. காதல் மட்டும் தான் தோணும். நான் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு தனியா போயிட்டேன். அப்புறம் மெயின் ரோட்ல ஆயிரம் வருஷத்து கோவில் ஒன்னு இருக்கு. அங்க பூக்கடை போட்டு கொடுத்துட்டேன்.”
“திரும்பவும் பூக்கடையா? இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே…”
“பொண்டாட்டிக்கு என்ன பிடிக்குமோ அதை செய்யறது தான் புருஷன் கடமை…”
அவர்கள் பேசிக்கொண்டிருக்க, உரையாடலைக் கேட்டபடி அர்ஜுன் அஞ்சலியைக் கண்டு புன்னகைக்க, அவளும் மென்முறுவல் சிந்த, தனது இடது கையை மட்டும் இதயம் போல் வடிவு காட்ட, அஞ்சலி தனது வலது கையால் அதே வடிவு கொண்டு, இருவரும் ஒன்று சேர்த்து, வடிவினை பூர்த்தி செய்தனர்.
மண்டபம் அல்லோலகல்லோலப்பட, வேதநாயகம் கத்திக்கொண்டிருந்தார். ஆட்களை ஏவியபடி, கஜாவிடம் கடிந்து கொண்டிருந்தார்.
“சார், இன்னும் ஒரு மணி நேரத்துல பொண்ணு இங்க இருக்கும் சார்…” என்று அவன் கூற,
“போய் தேடற வழிய பாரு…” என்று அவர் கர்ஜிக்க, கஜா அவசர அவசரமாக மண்டபத்தை விட்டு வெளியே வந்தான். அவன் தனது வண்டியை நோக்கி ஓட, உள்ளே நுழைந்த காரொன்று அவன் அருகே வந்து நின்றது.
யாரென்று கஜா அருகே சென்று பார்க்க, மருதநாயகம், அஞ்சலி, அர்ஜுன் மற்றும் மதனோடு கீழே இறங்கினார்.
“தெய்வமே என் தெய்வமே…” என்றபடி மருதநாயகத்தின் கைகளை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டவன்,
“பாதி பிரச்சனை முடிஞ்சுது, இனி மீதி பிரச்னையை தீர்த்துட்டு வரேன்” என்றான்.
“மீதி என்ன பிரச்சனை?” என்றார் மருதநாயகம் யோசனையாக.
“மாப்பிள்ளை பையன காணோம். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தலைவரை ஒரு வழி பண்ணிக்கிட்டு இருக்காங்க…”
“அய்யயோ…” என்று பதறிய மருதநாயகம் உள்ளே விரைய, தொடர்ந்து அஞ்சலி, அர்ஜுன் மற்றும் மதனும் விரைந்தனர்.
அவ்விடம் விட்டு கிளம்ப நினைத்த கஜா, இந்த குழப்பத்தில் அர்ஜுனும் மதனும் என்ன செய்கின்றனர்?’ என்று யோசித்தவனாய், அவனும் உள்ளே சென்றான்.
முகம் சிவந்து எரிமலையாய் நின்றிருந்த வேதநாயகத்தின் எதிரே ஓடிச்சென்று நின்றாள், அஞ்சலி. கூச்சலிட்டுக்கொண்டிருந்தவர், மகளைக் கண்டதும் அமைதியாக, அங்கிருந்த சலசலப்பும் சற்று ஓய்ந்தது.
“அப்பா…”
“அஞ்சலி… என்ன மா… என்னமா நடக்குது?” என்றவர், மகளை வாரியணைத்தபடி கண்கள் கலங்கினார்.
“அண்ணே, நான் தான் அஞ்சலியை கடத்திட்டு போனேன்…” என்று போட்டுடைத்தார் மருதநாயகம்.
