Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 9

காதலும் கடத்தப்படும் – 9

“காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்…” எங்கோ ஒலித்த பாடலை கேட்டு இதழோரம் சிரித்துக்கொண்டவள், தட்டச்சு செய்வதை நிறுத்திவிட்டு, தனது பையினைத் திறந்து ஒரு நெகிழிப்பையில் வைத்திருந்த மலர் ஒன்றினை எடுத்துப்பார்த்தாள். வெகு நாட்களுக்கு முன் இளமாறன் நடித்துக்கொண்டிருந்தபோது இவள் மீது வீசிய மலர் அது. அம்மலர் வாடி வதங்கி, வர்ணமிழந்து காணப்பட்டது. இருப்பினும் அவ்வப்போதான அவளது இதழோர புன்னகைக்கும், மனதோர வெப்பத்துக்கும் அது போதுமானதாக இருந்தது. 

 



Advertisement

“என்னதுடி அது? சார் வராரு” என்று லதா குரல் கொடுக்க, உடனே தனது பையை மூடி வைத்தவள், தட்டச்சு பயிற்சியினை தொடர்ந்தாள்.

வகுப்பு முடிந்து இருவரும் கிளம்ப, 

“லதா நீ வீட்டுக்கு கிளம்பு, நான் எங்க கடைக்கு போயிட்டு வீட்டுக்கு போயிக்கறேன்” என்றாள், இந்து.

Advertisement

“சரிடி, பத்திரமா போ” என்றவள், தனது மிதிவண்டியை எடுத்துக்கொண்டு விருட்டென செல்ல, தோழி சென்று மறைந்ததும், தனது மிதிவண்டியை அதே இடத்தில் நிறுத்திவிட்டு, எதிரே இருக்கும் தியேட்டருக்கு யாரும் அறியாவண்ணம், முக்காடிட்டபடி உள்ளே சென்றாள். அங்கங்கே யார் யாரோ நின்றிருக்க, இவள் மட்டும் சீட்டு வழங்கும் இடத்துக்கு சென்றாள். அகலமான அறை போல இருக்கும் அவ்விடம் இரும்பால் ஆன இழு வாயிற்கதவு கொண்டு மூடியிருந்தது. பூட்டப்படாமல் இருந்த அந்த வாயிற்கதவை மெல்ல திறந்தாள். உள்ளே சென்று மீண்டும் கதவை மூடியவள், யாரேனும் தன்னை கண்காணிக்கின்றனரா என்று கண்டாள். யாரும் இவளை பார்க்கவில்லை என்றதும், வாயிற் கதவின் அருகே இருந்த சுவரின் அருகே மறைவாக நின்றுகொண்டாள். பக்கவாட்டுச் சுவரில் ‘இதயம் ஒரு கோவில்’ என்று பெயர் கொண்ட சுவரொட்டியைக் கண்டாள். அதில் இளமாறனின் புகைப்படத்தோடு, வேறு சில நடிகர்களின் படங்களும் இருந்தது. 

Advertisement

 

அவள் தனது  இரு கைகளையும் சேர்த்து, குழாயைப்போல விரல்களைக் கூட்டி, அதன் வழியே சுவரொட்டியைக் கண்டாள். இளமாறனைத் தவிர பிறர் அவளது காட்சியிலிருந்து மறைந்தனர். கைகளை விளக்கி சிரித்துக்கொண்டாள். மீண்டும் ஒரு முறை விரல்களைக் கோர்த்து அதே போல் கண்டாள். ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டவள், சற்று விலகி வந்து என்னென்று பார்த்தாள். வெளியே எவ்வித சலனமும் இல்லை. பின்னே நகர்ந்து சற்று மறைவாக நின்றபடி மீண்டும் இரும்புக்கதவின் கம்பிகளின் வழியே வெளியே நோக்கினாள். எவ்வித சலனமும் இல்லை. தலைகவிழ்ந்து,  தனது இரு கைகளையும் கூட்டி, இதய வடிவம் செய்தாள். கன்னம் சிகப்பேற, லேசாக சிரித்துக்கொண்டாள். கைகளின் இதய வடிவின் வழியே அவனது புகைப்படத்தைக் காண வேண்டும் என்றொரு அவா அவளுள் எழுந்தது. குனிந்த தலை நிமிராது, தனது விரல்கள் கோர்த்து உருவாக்கியிருக்கும் இதய வடிவத்தினை நோக்கியபடி, கைகளையும், தலையையும் சுவரொட்டியை நோக்கி உயர்த்த, இளமாறனின் புகைப்படத்திற்கு அருகே, அவனே நின்றிருந்தான். கைகளை கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்தபடி அவன் இவளைக் கண்டு சிரிக்க, தனது கைகளை வெடுக்கென தளர்த்தியவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள். என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்து நகர்ந்தவள், வாயிற் கதவினை திறந்துகொண்டு வெளியே வந்தாள். யாரோ சிலர் தியேட்டரை நோக்கி வருவதைக் கண்டவள், கட்டிடத்தின் பக்கவாட்டில் நின்றிருந்த பேருந்துகளின் அருகே சென்று மறைவாய் நின்றுகொண்டாள். அவளது நெஞ்சம் மேலும் கீழும் ஏறியிறங்கியது. உடல் படபடத்தது. கால்கள் நடுங்கின. அவள் நிதானிக்க முயற்சிக்க, 

“இந்துமதி” என்று அழைத்தபடி அவளெதிரே வந்து நின்றான், இளமாறன்.

Advertisement

பதறியடித்துக்கொண்டு விலகிச் சென்றவள், ஆறடி இடைவெளியில் நின்றாள். மெல்ல திரும்பி அவனைக் கண்டாள். தனது இரு கைகளையும் இதய வடிவில் சேர்த்து அதன் வழியே அவளை அவன் காண, கண்கள் கலங்கியவளாய் ஓடிச்சென்று அவன் எதிரே நின்றான்.

இம்முறை, அவனது கண்களும் ஈரம் கொண்டிருந்தன. 

“தகுதியில்லை, படிப்பில்லை, அழகில்லை, பணமில்லை. காதல் மட்டும் தான் என்கிட்ட இருக்கு இந்துமதி”

“நான் தகுதியோ, பணமோ, பதவியோ தேடலை. காதலை மட்டும் தான் தேடி வந்திருக்கேன்”

அவளது குளமான கண்களின் நீர் விழி தப்பி கன்னம் வழியே உருண்டோட, அவனது கன்னங்களும் ஈரமாகின. 

 

****************************************************************

 

கண்ணாமூச்சி காட்டிடும் 

காதலும் கை சேர்ந்ததோ?!! 

கண்களும் கானா 

கனவுகள் நிகழுதோ?!! 

பூவொன்று கொடியினின்று 

உன் மடியை சேர்ந்ததோ?!! 

பூமியின் மீதொரு 

‘நம்’ உலகம் பிறந்ததோ?!! 

 

வாய்பேசும் வார்த்தையெல்லாம் 

இனி கண் பேசக்கூடுமோ?!! 

வாழ்விலே இன்பம் நூறு 

தினம் வந்து சேருமோ?!!

சிரித்திடவும் அழுதிடவும் 

துணை நீ என்றானதோ?!! 

சுற்றும் பூமி நின்றாலும் 

நம் காதல் நீளுமோ?!!

 

****************************************************************

 

 

அன்றிலிருந்து இவள் வகுப்பிற்கு வரும் பொழுதுகளில் தியேட்டர் வாசலில் தவம் கிடந்தான். இவளும் அவனுக்காக புன்னகைகளை பரிசளித்தாள். ஜென்ம ஜென்மமாய் பழகி வந்ததைப் போல அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் அருகாமையும், மௌனங்களும் மட்டுமே. அவனது நாடக ஒத்திகைகளுக்கு இவள் சிறப்பு விருந்தினராகிப் போனாள். இவள் கூறும் குறை நிறைகளை அவன் வாதமின்றி ஏற்றுக்கொண்டான். இயற்கையாகவே அவர்களுக்குள் ஒரு புரிதல் இருந்தது. 

 

கோவில் குளத்தருகே, ஓர் நாள், அவன் ஒரு ரோஜாவினை பரிசாக நீட்டினான். அதை பெற்றுக்கொண்டவள்,

“இதை விட இன்னொரு விலையுயர்ந்தது என்கிட்டே இருக்கு” என்றாள்.

“என்னது?” என்றான் ஆர்வமாக.

முன்பொரு நாள் அவன் எறிந்த மலரை எடுத்துக்காட்டினாள். புத்தகத்தினுள் பதப்படுத்தப்பட்டு சருகாகிப்போயிருந்த ரோஜாவினைக் கண்டவனுக்கு அவள் மீது மேலும் காதல் பொங்கியது. 

அவள் முகத்தினை பார்த்திருந்தான்.

“என்ன அப்படி பார்க்கறீங்க?”

“பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா” என்று பாடினான்.

“எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு… பாடுங்களேன்”

அவன் தொடர்ந்து பாடினான். அவள் உலகை மறந்து ரசித்திருந்தாள். 

 

இவர்களின் சந்திப்புகள் குறித்து அரசல் புரசலாக இந்துமதியின் தந்தைக்கு செய்திகள் போயின. இவளுக்காக அவர் முனைப்புடன் மாப்பிள்ளை தேடிக்கொண்டிருக்க, இவளது செயல் அவரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. வீட்டிற்கு விரைந்தவர்,

“யாரடி அவன்?” என்றபடி அவள் எதிரே வந்து நின்றார். அடுக்களையில் அம்மாவிற்கு துணையாய் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தவளுக்கு பயம் தொண்டையை அடைத்தது.

“என்னங்க? என்ன சொல்றீங்க? புரியல” என்று பதறிப்போனாள், அவளது தாய்.

“உன் மவ எவனோ ஒரு கூத்தாடி கூட கூத்தடிக்கறாளாம். வரவன் போறவனெல்லாம் காரித்துப்பறான். நான் ஊரெல்லாம் மாப்பிள்ளை தேடினா, உன் மவ அவளே தேடிக்கிட்டாடி. என்னத்த புள்ள வளர்த்திருக்க?” என்று கத்தியபடி அவளை அறைந்தார். தாய் சுருண்டு விழ, அவளை தாங்கிப்பிடித்தாள், இந்து. ஆத்திரம் அடங்காத அவளது தந்தை, இந்துவையும் அடித்தார். இருவரும் அடிவாங்கி கதற, 

“இன்னும் பத்து நாள்ல கல்யாணம், நான் சொல்றவனை கல்யாணம் பண்ற, இல்லை உன்னை கொன்னு புதைச்சுட்டு போயிட்டே இருப்பேன்” என்றவர் கத்திவிட்டு செல்ல, அழுது தேம்பியபடி அவள் அன்றிரவு படுக்கையில் கிடந்தாள்.

 

விடியற்காலை ஐந்தரை மணியளவில், தியேட்டரின் பின்புறம் உள்ள அறையில் தங்கியிருந்த இளமாறனின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்தவன், கதவைத் திறக்க, கையில் ஒரு பையோடு கண்கள் கலங்க நின்றிருந்தாள், இந்து.

“இந்து என்ன இந்த நேரத்துல?” என்று பதறியவன், அவளை உள்ளே அழைத்து அமரச் செய்தான். மின்விளக்கொளியில் அவளைக் கண்ட பின்னே, அவளது வலக்கண் பக்கம் நெற்றி, கன்னம், மற்றும் கண்கள் வீங்கியிருந்தது தெரிந்தது. அவளது கன்னத்தில் அடித்த தழும்பும் இருந்தன. அவளைக் கண்டவனுக்கு கண்கள் கலங்கின.

“என்ன ஆச்சு இந்து?”

“நாம பழகறத யாரோ என் அப்பாகிட்ட சொல்லிட்டாங்க. என்னையும் என் அம்மாவையும் மரண அடி அடிச்சாரு. என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கூட கேட்கல. பத்து நாள்ல எனக்கு கல்யாணமாம். இதுக்கு மேல முடியாதுன்னு கிளம்பி வந்துட்டேன். நாம உடனே கல்யாணம் செய்துக்கலாமா?”

“அவசரப்படாத இந்து. எனக்குத்தான் யாரும் இல்லை. நீயும் உன் குடும்பத்தை விட்டுட்டு வந்தா என்ன அர்த்தம்? நான் உன் அப்பாகிட்ட பேசறேன். அவங்க ஆசீர்வாதத்தோட நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.”

“அது இந்த ஜென்மத்துல நடக்காது. ஒன்னு நமக்கு இப்போவே கல்யாணம்… இல்லை, நாம சந்திக்கிற குளத்துல நான் மிதக்கறத பார்ப்பீங்க”

“என்ன வார்த்தை சொல்லிட்ட இந்து… சரி நாம உடனே கல்யாணம் செய்துப்போம்” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு, அங்கிருந்த மாரியம்மனின் கோவிலில், தெய்வத்தின் சாட்சியாக, அக்கோவில் திரிசூலத்தில் இருந்த ஒரு மஞ்சள் கயிற்றினை கழட்டி இந்துவுக்கு அணிவித்தான். கண்கலங்கியவள் அவனது மார் மீது சாய்ந்து அழுது தீர்த்தாள்.

 

இருவரும் வேறொரு ஊருக்கு சென்றுவிட முடிவு செய்து தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினர். ஜங்க்ஷன் பஸ் நிறுத்தத்தில் அவர்கள் காத்திருக்க, இந்துவின் தந்தை உற்றார் உறவினரோடு வந்து அவர்களை சூழ்ந்துகொள்ள, பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. அவ்விடத்தில் இருந்த மற்றவர்கள் அவர்களை சூழ்ந்துகொள்ள, காவல் துறையினர் தலையிட்டு சம்மந்தப்பட்டோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். 

இந்துவின் தந்தை அழுது கரைந்தபடி, “அம்மாடி வீட்டுக்கு வந்துடு, நான் உனக்கு நல்ல இடம் பார்த்து கட்டி வைக்கறேன். காசுக்கு ஆசைப்பட்டு உன்னை ஏதாவது இவன் செஞ்சுடுவான்” என்றார்.

“அப்படி காசுக்கு ஆசைப்பட்டிருந்தா, வீட்டுக்கு போ, நான் வந்து உன் அப்பா கிட்ட பேசறேன்னு சொல்லியிருக்க மாட்டார். நான் தான் பிடிவாதமா கல்யாணம் பண்ணனும்னு சொன்னேன். நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் என் மனசு மாறாது. பெத்த பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க கூட நீங்க விரும்பல. உங்களுக்கு உங்க கவுரவம் மட்டும் தான் முக்கியம் இல்லை? அதே மாதிரிதான், எனக்கு என் வாழ்க்கை முக்கியம். அம்மா மாதிரி அக்கா மாதிரி ஆக எனக்கு விருப்பம் இல்லை. இன்னையோட நான் செத்துட்டதா நீங்க நினைச்சுக்கோங்க”

“இந்து, என்ன வார்த்தை பேசற?” என்று குறுக்கிட்டான், இளமாறன்.

“நான் எவ்வளவு அடி வாங்கினேன்னு எனக்குத்தான் தெரியும். அது போதாதுன்னு என் அம்மாவையும்” என்று கலங்கியவள், “அவங்க என்ன தப்பு பண்ணாங்க?” என்று கலங்கினாள்.

“மன்னிச்சுக்க மா, ஏதோ கோவத்துல…”

“வேண்டாம்பா, நான் என் வாழ்க்கையை பார்த்துக்கறேன்”

“நீங்க என்ன சமாதானம் பேசிக்கிட்டு, பொண்ணை தூக்கிட்டு வாங்க” என்று இந்துவின் தந்தையோடு வந்திருந்த ஒருவன் குரல் கொடுக்க, 

“யாருயா அது? போலீஸ் ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டர் முன்னாடியே பொண்ண தூக்கிடுவீங்களோ? அந்த பொண்ணுக்கு இருவது வயசாகுது. சட்டப்படி இந்த கல்யாணம் செல்லும். இந்த அடிக்கறது, தூக்கறது, மிதிக்கறதுனு வாயை தொறந்தா அவ்வளவுதான். இந்த பயலுக்கு யாரும் இல்லைனு நினைக்காதீங்க. சட்டம் துணையிருக்கு. இந்த புள்ளைங்க மேல ஒரு கீறல் விழுந்தாலும் அதுக்கு நீங்க எல்லாரும் தான் பொறுப்புன்னு நான் உங்க எல்லாரையும் தூக்கிட்டு வந்துடுவேன். புரியுதா?” என்று கடுமையாக எச்சரித்தார் காவல்துறை ஆய்வாளர். எவ்வளவோ முயற்சி செய்தும் இந்து இளமாறனை விட்டு வராமல் உறுதியாக நின்றதால், அவளுடைய தந்தையும் மற்றவர்களும் விலகிச் சென்றனர்.

 

“கல்யாணம் பண்ணிக்கறது பெரிய விஷயம் இல்லை. கடைசி வரை வாழ்ந்து காட்டணும். வயசு வேகத்துல கல்யாணம் பண்ணி வாழ்க்கையை தொலைச்ச எத்தனையோ பேர பார்த்திருக்கேன். உங்க ரெண்டு பேரையும் பார்த்தா அப்படி தெரியல. தம்பி, நான் உன்னோட நாடகத்துக்கு வந்திருக்கேன். நல்ல திறமைசாலிதான் நீ. நல்லபடியா இந்த புள்ளைய பார்த்துக்க. அவங்க வீட்ல ஏதும் பிரச்சனை பண்ணா என்கிட்ட வா. நான் பேசி தீர்த்து விடறேன். எக்காரணம் கொண்டும் இந்த புள்ளைய கைவிட்டுடாத” என்று அவனிடம் அறிவுரை கூறியவர், இந்துவிடம், 

“நீ வசதியா வளர்ந்திருப்ப, பசி பட்டினியெல்லாம் பார்த்திருக்க மாட்ட. இந்த பய இனிமேல் தான் கையை ஊனி காலை ஊனி எழுந்து நிக்கணும். அதுக்கு நீ பக்கபலமா இருக்கணும். புரியுதா?” என்க, இருவரும் சரியென்று தலையாட்டிவிட்டு, அவரது காலில் விழுந்து வணங்கினர். அவர், தனது பங்கிற்கு ஒரு தொகையை கொடுத்து அனுப்பி வைத்தார்.

 

பேருந்தில் ஏறியவர்கள், வாழ்க்கை அவர்களை எங்கே அழைத்துச் செல்லப்போகிறது என்று புரியாத கவலையோடு, தற்பொழுது அர்ஜுன் வாழும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!