Skip to content
Post Views: 1,678
அத்தியாயம்-10
“வசீ கண்ணா..” என்ற பழக்கப்பட்டக் குரல் காதில் எதிரொலிக்க குரல் வந்த திசையில் திரும்பிப்பார்த்தான் வசீகரன், அங்கே வெறும் இருள் மட்டுமே தெரிந்தது,அங்கே யாரும் இல்லை..
“வசீ கண்ணா..” என்ற குரல் மீண்டும் கேட்க,
பரபரப்புடன் கண்கள் நாலாப்பக்கமும் அலைபாய.. மீண்டும் தேடினான், அந்த இருள் நாலாப்பக்கமும் அவனைச் சூழ்ந்துகொண்டே இருக்க,
Advertisement
“வசீ கண்ணா..” என்ற குரல் மட்டும் அருகில் கேட்டுக்கொண்டே இருந்தது.
இவன் பயத்துடனும் பதற்றத்துடனும்.
“அம்மா..எங்க இருக்கம்மா..” என்று தன்னைச்சூழும் அந்த இருளைப்பார்த்து கத்தினான்..
Advertisement
“அம்மா..அம்மா..” என்று அவன் அழைக்க அழைக்க அந்த இருள் மேலும் மேலும் அவனை விழுங்குவதுபோல் நெருங்கிக்கொண்டே இருந்தது.
Advertisement
“வசீ கண்ணா..” என்ற குரல் மட்டும் அவன் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது..
“அம்மா எங்கம்மா இருக்க.. எனக்கு பயமா இருக்கு.. சீக்கிரம் வா மா..” என்றவனின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
சூழ்ந்த இருள் அப்படியே அவனை விழுங்க இருளுடன் சேர்ந்து அவனும் மறைந்துபோக.. அவன் அம்மாவின் அழுகுரல் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது..
Advertisement
திடுக்கிட்டு விழித்தவன் உடல் முழுவதும் நடுங்கிகொண்டிருந்தது.. கண்கள் நனைந்திருந்தது..கையை நீட்டித் துலாவி விளக்கைப்போட்டான்.
அதே கனவு.. ஆறுவருடங்களாக அவனைத் துரத்திக் கொண்டிருக்கும் கொடுங்கனவு.. அப்படியே நெஞ்சில் பாறையைத் தூக்கிவைத்தது போல் கனத்தது.
இந்த கனவிலிருந்து அவனுக்கு இந்த ஜென்மத்தில் விடுதலை கிடையாது என்று அவனுக்குத் தெரியும். கட்டையில் வேகும் வரை அவனுக்கு நிம்மதி கிடைக்கப்போவதில்லை.
மொபைலை ஆன் செய்து அவனது 16வது பிறந்த நாளில் அவன் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட கடைசி போட்டோவைப்பார்த்தான்.
வசீகரனும் அவன் அம்மா அனுபமாவும் சோஃபாவில் அமர்ந்திருக்க இருவர் கன்னமும் ஒட்டியிருக்க முகத்தில் அத்தனை பெருமிதமும் மகிழ்ச்சியுமாக அவன் அம்மாவின் முகம் அவனைப்பார்த்து சிரித்தது.. வசீகரன் கவலையின்றி மனமாற கடைசியாக சிரித்ததும் அன்றுதான்.
வசீகரன் அவன் அம்மாவின் ஃபோட்டோகாப்பி என்றே சொல்லலாம்..அந்த அளவு உருவ ஒற்றுமை இருவருக்கும்.
வசியின் அப்பா சென்னைக்கு தன் நண்பனின் திருமணத்திற்கு சென்றபோது அங்கே மணப்பெண் தோழியான அனுபமாவை பார்த்து, பார்த்த அந்த கணமே காதலில் விழுந்து அந்தப்பெண்ணைதான் கட்டுவேன் என்று பிடிவாதமாகத் திருமணம் செய்தவர். இருவருமே மனமொத்த தம்பதிகளாகவே இருந்தனர்.
வசீகரனின் தந்தை சிவசந்திரன் அனுபமாவின் மேல் உயிரையே வைத்திருந்தார். வசீகரன் பிறந்தபோது பிரசவத்தில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டு சிசேரியன் செய்ய நேர்ந்ததால் அதற்குமேல் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்துவிடவே வசீகரன் ஒற்றைப் பிள்ளையாக நின்றுவிட்டான். அதுவே அவனுக்கும் அவன் அன்னைக்குமான பந்தமும் பாசமும் இறுக்கமாக காரணமாகவும் அமைந்தது.
வசீகரன் தான் அனுபமாவின் உலகமாக இருந்தான். அவனுக்கும் அம்மாதான் எல்லாம், அவரைவிட்டு பிரிந்து ஒரு நாள்கூட தாங்க மாட்டான்.
அப்பாவிடம் பாசம் இருந்தாலும் அது எப்போதும் பயம் கலந்த மரியாதையாகவே இருந்தது, அப்பாவிடம் எது கேட்கவேண்டும் என்றாலும் அது அம்மாவின் மூலமே நடக்கும்.தந்தைக்கும் மகனுக்கும் இடையே பாலமாக இருந்தார் அனுபமா.
பொதுவாக அனுபமா வசியை விட்டு வெளியூரில் தங்கமாட்டார், தன் தாய்வீடான சென்னைக்கு போகும் போதும் இவனை கூடவே அழைத்துக்கொண்டுதான் போவார்.
ஆனால் இந்தமுறை அவருடைய சித்தி மகனுக்குத் திருமணம், போயே ஆக வேண்டிய சூழ்நிலை, ஆனால் வசீகரனுக்கு பத்தாவது பொதுத்தேர்வுக்கு முன்பான மாடல் தேர்வு, அதனால் அவனை விடுப்பு போட்டு அழைத்து செல்லவும் முடியாத நிலைமை.
அதனால் அவனிடம் கெஞ்சி கூத்தாடாடி “ஒரு நாள் மட்டும் போய்விட்டு வந்துடுறேன் பட்டு..” என்று அவனை சமாதானப்படுத்திவிட்டு தம்பதியர் இருவரும் சென்னைக்குக் கிளம்பி சென்றனர்.
ஒருநாள் எப்படியோ சமாளித்துவிட்டு, மறுநாள் ஸ்கூல் போய்விட்டு திரும்பி வரும்போது அம்மா வீட்டில் இருப்பார் அவரிடம் தான் பரிட்சை நன்றாக எழுதியதைக் கூறவேண்டும் என்று சந்தோஷத்தில் துள்ளிகுதித்துக் கொண்டு வந்தவன் வெளியே தன் தந்தையின் கார் நிற்பதை பார்த்ததும் உற்சாகம் மேலும் பெருக
“அம்மா..” என்று கூச்சலிட்டுக்கொண்டே உள்ளே ஓடினான்.
ஆனால் சோஃபாவில் அவனின் அப்பா மட்டும் அமர்ந்திருந்ததைப் பார்த்து ஏமாற்றமடைந்தான்.
“அம்மா..” என்று மீண்டும் அழைத்தான் உள்ளே பார்த்துக்கொண்டே..
“இங்க நான் ஒருத்தன் இருக்கறது கண்ணுக்குத் தெரியலையா?” என்றார் சிவசந்திரன்.
“அம்மா எங்கப்பா..”
“அம்மா வரல, அங்க கல்யாணம் முடிஞ்சதும் எல்லாரும் திருத்தணி போறதா ப்ளான் பண்ணிட்டாங்க, உங்க சின்னபாட்டி உங்கம்மா பெரியம்மா எல்லாரையும் இருந்துட்டுதான் போகனும்ன்னு சொல்லிட்டாங்க..அதான் இன்னிக்கு கோயிலுக்கு போயிட்டு நாளைக்கு இண்டர்சிட்டில அம்மா வந்துடுவா..சரியா..?”
வசீகரனுக்கு ஏமாற்றத்திலும் ஆத்திரத்திலுமாக கண்ணீர் பொங்கியது,
“இவரு மட்டும் வந்துட்டாரு அம்மாவவிட்டுட்டு.. ஒரு நாளுன்னு தானே சொல்லிட்டு போனாங்க இப்போ இன்னொரு நாள் ஆகும்ன்னு சொல்றாங்க..சீட்டர்ஸ்.. எல்லாரும் என்னை ஏமாத்துறாங்க..” என்று உள்ளுக்குள் பொங்கினான்.
அந்த வயதில் அவனால் அவ்வளவு தான் யோசிக்க முடிந்தது. ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்குப் பிறகு பிறந்த வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு எவ்வளவு அரிதாகக்கிடைக்கும், அதுவும் இப்படி எல்லா சொந்தங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும் இது போன்ற தருணங்கள் வாய்ப்பது எவ்வளவு அரிது, அதனால் அவர்களுடன் மேலும் சிறிது காலம் செலவழித்துவிட்டு வரலாம் என்று நினைப்பது இயல்பே என்பதெல்லாம் புரியும் வயதில்லை அவனுக்கு.
தன் தாய்க்கு தன் மேல் அக்கறையில்லாமல் ஊரிலேயே தங்கி விட்டார் என்பது மட்டுமே அவனுக்கு பெரிதாக இருந்தது.
அப்போது உள்ளிருந்து அவனது பாட்டி கையில் காப்பியுடன் வந்து தனது மகனுக்குக் கொடுத்தவர் இவனைப்பார்த்துவிட்டு,
“வா கண்ணு, நீயும் காப்பி சாப்பிடுறியா?” என்றார்.
“ஒன்னும் வேண்டாம்..” என்று கோபமாக உரைத்துவிட்டு விடுவிடுவென மாடி ஏறி அவனது அறைக்கு சென்று கதவை அறைந்து சாத்தினான்.
“இந்த வயசுல என்ன கோவம் இவனுக்கு..? எல்லாம் இவன் அம்மா குடுக்குற இடம்தான்..”
“சின்ன பையந்தானே தம்பி..அம்மா மேல உசுரு அவனுக்கு..அதான் அவ வரலன்னு ஏமாத்தமாயிட்டான்.. நா பாத்துக்கறேன் விடுப்பா..” என்று அவனுக்காகப் பரிந்தார் வசீகரனின் பாட்டி..
ரூமுக்குள் வந்தவன் கோபமாக தொலைப்பேசியை எடுத்து அவன் அம்மாவிற்கு அழைத்தான்.
“வசீ கண்ணா..” என்ற அவரது குரல் கேட்பதற்குள் பொரியத்தொடங்கிவிட்டான்
“டோண்ட் டாக் டு மீ.. உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட அக்கறையில்லை,இப்ப நான் டென்த் படிக்கறேன்..போர்ட்டு எக்சாம் எழுதப் போறேன், மாடல் எக்சாம் ஆரம்பிச்சிட்டாங்க.. உங்களுக்கு இதெல்லாம் நியாபகம் இருக்கா..?என்னோட ஃப்ரண்டோட அம்மாலாம் அவனுக்காக அவங்க வேலையே விட்டுட்டு அவன் கூடவே இருந்து பாத்துக்கறாங்க தெரியுமா..”
“வசீ.. திஸ் ஈஸ் டூ மச்.. உனக்காக நான் எதுவுமே பண்ணாத மாதிரி பேசுற.. இப்ப கூட முருகர்கிட்ட உனக்காகத்தான் நான் வேண்டிக்கிட்டேன் தெரியுமா..?”
“ஒன்னும் வேண்டாம் போங்க.. ஸ்கூல்ல இருந்து வரும் போது நீங்க வீட்ல இருப்பீங்கன்னு எவ்ளோ ஆசைய வந்தேன் தெரியுமா?”
“ஒருநாள் தானே கண்ணா.. நாளைக்கு நான் வந்துடுவேன்..”
“ஒருநாள் ஒருநாளுன்னு சொல்லிட்டு வரவே மாட்டேங்கறீங்க.. போங்க..”
“சாரிடாமா..நாளைக்கு பக்கா ப்ராமிஸ்ஸா நான் வந்துடுவேன்..”
“அதெல்லாம் முடியாது நாளைக்கு மேத் எக்சாம் நீங்கதானே என்னோட லக்கி சார்ம்.. உங்கள பார்த்துட்டுப்போனாதான் நான் நல்லா எழுதுவேன்..”
“அடம்பிடிக்காத பட்டுகுட்டி..”
“போங்கம்மா நான் எக்ஸாம் நல்லா எழுதலன்னா அதுக்கு நீங்கதான் காரணம்..”
“சரி நாளைக்கு நீ எக்சாம்க்கு போறதுக்குள்ள நான் வந்துடுவேன் சரியா?”
“அது எப்படி..? நீங்க இண்டர்சிட்டியில வர்றதாதானே அப்பா சொன்னாரு..அந்த ட்ரெயின் நைட் தானே வரும்..”
“நான் இன்னிக்கி நைட் பஸ்ல கெளம்பி வரேன், காலையில 8மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவேன்.. போதுமா..?”
“நிஜமாவா மா?”
“ப்ராமிஸ்..இப்போ சமத்து பையனா அப்பாயிய தொந்தரவு பண்ணாம இருப்பியாம் சரியா?”
“ஓகே மா.. லவ்யூ.. யு ஆர் த பெஸ்ட்..”
“லவ் யூ கண்ணா..”
இணைப்பைத் துண்டித்தவன் உற்சாகத் துள்ளலுடன் தன் பாட்டியிடம் விஷயத்தை சொல்ல போனான்.
அடுத்த நாள் காலை விடிவதற்கு முன்பே அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் பாபு அண்ணன் அவனை தட்டி எழுப்பினார்.
“என்னண்ணா.. எனக்குத் தூக்கம் வருது..” என்று சிணுங்கியவனை..
“எழுந்திருங்க தம்பி.. அம்மாவுக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சாம்..” என்றார் பதற்றத்துடன்.
திடுக்கிட்டு விழித்தான் அவன்,அவசரமாக எழுந்தவன் “அம்மாவுக்கு என்ன ஆச்சு?”என்றான் பதறியபடி..
“தெரியல தம்பி அப்பாவுக்கு ஃபோன் வந்தது.. கிளம்பிப் போயிருக்கார்.”
அதன் பிறகு என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று கிரகிப்பதற்குள்
அவனின் அம்மாவின் உடல் ஐஸ் பெட்டியில் வீட்டிற்கு வந்து சேர்ந்தது..
அதை பார்த்ததும் மயங்கி விழுந்தவனை பார்க்கக்கூட யாருமில்லை.. அந்த வீடே துக்கத்ததில் தத்தளித்தது.
விஷயம் அறிந்து கதறியபடி வந்தனர் அனுபமாவின் பெற்றோர்.
அவரின் அம்மா தன் மகளின் உயிர் இல்லாத உடலைப் பார்த்ததும்
“அய்யோ.. பிள்ளைய பார்க்க போகனும்.. பிள்ளைய பார்க்கப் போகனும்னு அவசர அவசரமா கெளம்பினியே இப்படி ஒரேடியா விட்டுட்டு போறதுக்குதானா..” என்று கதறி அழுதபடி இவனைப் பார்த்து
“ஏன் சாமி.. ஒரு நாள் பொறுத்திருக்கக்கூடாதா..” என்று ஆற்றாமையால் கேட்கவும்..
வசீகரனுக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது, என்னால்தான் அம்மாவிற்கு இப்படி ஆகிவிட்டதா..இவன் அழுதுகொண்டே தன் தந்தையைப் பார்க்க
அழுது சிவந்த அவர் கண்களில் இருந்தது குற்றச்சாட்டா, வேதனையா.. வெறுப்பா.. இல்லை அருவருப்பா.. என்று தெரியவில்லை.. அவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது..
கொஞ்சமும் நியாமில்லாத தன் வீண் பிடிவாதத்தால்.. தன்னுடைய அம்மாவை இந்த உலகில் இல்லாமல் செய்துவிட்டான்..அவரின் மேல் உயிரையே வைத்திருந்த அப்பாவை தனி மரமாக உடைந்து போய் நிற்க வைத்துவிட்டான். தங்கள் வீட்டின் குலவிளக்கை அணைத்துவிட்டான், இந்த குடும்பத்தின் சந்தோஷத்தை ஒரேடியாக தொலைத்துவிட்டான்.
அந்தநாளில் அவன் அம்மாவுடன் சேர்ந்து அவனது சந்தோஷமும் நிம்மதியும் அவனைவிட்டுப் போனது.
முதல் சில மாதங்களில் குற்ற உணர்வு தாங்காமல் தன்னைத் தானே வருத்திக்கொள்ளத் தொடங்கினான். கையை கிழித்துக்கொண்டு தற்கொலைக்குக்கூட முயன்றான் ஆனால் தன் அம்மா அதை விரும்பமாட்டார் என்று உணர்ந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டான்..
ஆனாலும் தன்னை வருத்திக்கொள்வதை அவன் விடவில்லை, கை காலில் சூடு போட்டுக்கொள்வது,கை வலிக்க சுவரில் குத்துவது, கண்டதையும் போட்டு உடைப்பது என்று தனது வேதனைக்கு வடிகாலாக சுயஅழிவு பாதையில் சென்றான்.
வீட்டிலும் வெளியிலும் கட்டுங்காதவனாக மாறத்தொடங்கினான்.
அவனது பாட்டியாலும் அவனைப் கட்டுப்படுத்த முடியவில்லை.. பள்ளியிலும் படிப்பில் கவனமில்லாமல் வம்பு சண்டை அடிதடி என்று இறங்கினான்.
ஒருநாள் கூடபடிக்கும் பையனை ரத்தம் வர அடித்துவிட்டான் என்று இவன் அப்பாவிற்கு தகவல் கொடுத்து பள்ளிக்கு அழைத்திருந்தனர்.
“சார் உங்க முகத்துக்காகதான் இவ்ளோ நாளும் பொறுத்துட்டு இருந்தோம், ஆனா இப்போ கூடபடிக்கிற பையன ரத்தம் வர வரைக்கும் அடிச்சிருக்கான்.. இதுக்குமேலயும் சும்மா இருக்கமுடியாது, அந்த பையனோட பேரண்ட்ஸ்க்கு நான் என்ன சார் பதில் சொல்றது..?” என்று காட்டமாக பேசினார் பிரின்சிபல்.
“சாரி சார்.. அவனோட அம்மா சமீபத்துல தவறிட்டாங்க..அந்த துக்கத்துல நான் அவன சரியா கவனிக்க முடியாம போச்சு..”
அதுவரை அலட்சியமாக நின்றிருந்த வசீகரன் தன் தந்தையின் பணிவான குரலைக் கேட்டதும் அதிர்ந்தான்.எவ்வளவு கம்பீரமான மனிதர் அவர்.தன்னால் இப்படி தாழ்ந்து போகும்படி ஆகிவிட்டதே என்று அவனுக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது.
“அவங்க அம்மா இருந்திருந்தா இந்த அளவுக்கு வந்திருக்க விட்டிருக்க மாட்டாங்க.. ரொம்ப சாரி சார், இனி நான் பார்த்துக்கறேன், அந்த பையனோட மெடிக்கல் செலவையும் நானே செட்டில் பண்ணிடறேன். அவங்க கிட்ட வேணா நானே மன்னிப்பும் கேட்கறேன்.” என்றார்.
“அதெல்லாம் வேண்டாம் சார்..அந்த பையன் மேலயும் தப்பு இருக்கு தான்.. சரி இனிமேல் இப்படி நடக்காம பார்த்துக்கோங்க..” என்று கூறி அனுப்பிவிட்டார்.
வெளியே வந்ததும் இவன் முகத்தைக்கூட பார்க்காமல்
“நீ என்ன தப்பு பண்ணாலும் உன் அம்மா வளர்ப்பதான் குறை சொல்லுவாங்க.. மேல போயாவது அவள நிம்மதியா இருக்க விடு..” என்றவர் வேக நடையுடன் சென்றுவிட இவன் உறைந்து போய் நின்றுவிட்டான்.
அன்று முதல் என்ன நடந்தாலும் தன் தாயின் வளர்ப்பை யாரும் குறைகூறுமாறு நடந்துகொள்ளக்கூடாது என்று உறுதியேற்றான்.
மேலும் தனது தந்தையை யார் முன்பும் தலைகுனிய வைத்துவிடக்கூடாது,குறிப்பாக தன்னால் தன் தந்தைக்கு இன்னும் ஒரு கஷ்டம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தான்.
அன்றுமுதல் முயன்று படித்து பள்ளியிலேயே முதல் மாணவனாக வந்தான்.கலை, விளையாட்டு என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்கி, பள்ளியைவிட்டு வெளியேரும் போது அந்த பள்ளிக்கே மாடல் மாணவன் என்று பெயர் எடுத்தான்.
அன்று முதல் இன்று வரை எல்லோரும் “மிஸ்டர் பர்ஃபெக்ட்” என்று சொல்லும்படியாக தன்னைத்தானே செதுக்கிக்கொண்டான்.
இன்று அவன் அம்மாவின் ஆறாவது நினைவு நாள்.
எப்போதும் அவர் நினைவு அவனைவிட்டு நீங்காமல் இருந்தாலும் இந்த நாளில் அது தங்கமுடியாத வேதனையைத் தந்தது.
‘வலி வலி வலி’ மட்டுமே மனம் மற்றும் உடல் முழுவதும் நிறைந்திருந்தது. எழுந்து வெளியே வந்தான்.
மனம் ஆறும் வரை, இந்த வலி தீரும் வரை, உடல் சோரும் வரை யாருமில்லா அந்த பேஸ்கெட் பால் கோர்ட்டில் தனி ஒருவனாக ஆடிக்கொண்டிருந்தான்.
வேண்டுமென்றே தன் உடலை வறுத்தி விளையாடினான்.
வியர்வை சொட்ட சொட்ட, உடல் போதும் போதும் என்று கெஞ்ச அதை சட்டை செய்யாமல் வெறிபிடித்தவன் போல இருந்தான்.
ஒவ்வொரு முறை பாலை டன்ங் செய்யும் போதும்
“சாரி மா.. ஐ மிஸ் யூ மா ..” என்று முணுமுணுத்துக்கொண்டே இருந்தான்.
அந்த நிலையில் தான் அதிதி அவனைப் பார்த்தாள்.
error: Content is protected !!