அதிதி தூக்கம் வராமல் புரண்டு படுத்தாள், எப்போதும் சீக்கிரம் எழுந்து பழகிவிட்டதாலோ என்னவோ தானாகவே விழிப்பு வந்துவிட்டது. விடுமுறைதானே இன்னும் கொஞ்சநேரம் தூங்கலாம் என்று நினைத்தாலும் வைஷாலி பேசிய வார்த்தைகள் மனதில் திரும்பத் திரும்ப படமாக ஓடி அவளைத் தூங்கவிடாமல் செய்துகொண்டிருந்தது. இன்று மட்டுமல்ல வைஷாலி அவளை வந்து பார்த்து,கிட்டத்தட்ட மிரட்டிவிட்டுப் போனதிலிருந்து மனதின் ஓரத்தில் அந்த நினைவாகவே இருந்தது.
வசீகரன் ஏன் இப்படி ஒருத்தியை காதலிக்கிறான்? அவள் அழகுதான் ஆனால் அதைத்தவிர வேறு எந்த பொருத்தமும் இருப்பதாகத் தெரியவில்லையே..
வசீகரனின் முகம் நிறைந்த சிரிப்பிற்கும்… குணத்திற்கும், சிடுசிடு என்று இருக்கும் வைஷாலிக்கும் அவள் அடாவடிபேச்சுக்கும் பொருந்தவே இல்லையே.. ‘ஹி டிசர்வ்ஸ் பெட்டர்..’ என்று தோன்றியது.
வசீகரன் தனக்குக் கிடைக்காத பொறாமையில் இப்படி நினைப்பதாகக்கூட அவளுக்குத் தோன்றவில்லை. வசீகரன் உண்மையிலேயே ஒரு நல்லப்பெண்ணைக் காதலித்திருந்தால் இவள் மனமாற சந்தோஷம்தான் பட்டிருப்பாள்.
Advertisement
வசீகரனைப் பார்த்து ஒரு வாரம் ஆகிறது, அவன் கல்லூரிக்கு வருகிறானா இல்லையா என்று கூட தெரியவில்லை, ஆனால் அவனைப் பற்றிய விஷயங்கள் எப்படியோ அவள் காதுகளுக்கு எட்டிவிடுகிறது.
நேற்று கூட வேறு ஒரு கல்லூரியில் விளையாடப்போய் இவர்கள் அணி மோசமாகத் தோற்றுத் திரும்பியதாக கேள்விப்பட்டாள்.
வசீகரன் எப்படி இருப்பானோ அவனுக்கு ஆறுதல் கூற வேண்டும் போல தோன்றியது, ஆனால் அவளால் முடியாதே.. அவன் காதலிக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாளே அவனிடம் பேசமாட்டேன் என்று… அதுவும் அவனது எண்ணை ப்ளாக் செய்தது போதாதென்று டெலீட்டும் செய்திருந்தாள்.
Advertisement
இப்படி இதையும் அதையும் யோசித்து அலைபாய்ந்து கொண்டிருந்தது அவள் மனம்.
Advertisement
சட்டென்று போர்வையை உதறிவிட்டு எழுந்தாள். இப்படியே சோக கீதம் பாடிக்கொண்டிருந்தால் சரிவராது, “ எப்படியும் வசீகரன் மாற்றான் தோட்டத்து மல்லிகை..” அவனை மறந்தே தீரவேண்டும் எனக்கு வேறு வழியில்லை.முதலில் அவன் நியாபகத்திலிருந்து மனதை வேறுபுறம் திருப்பவேண்டும் என்று எண்ணி வெளியே நடக்கக்கிளம்பினாள்.
வழக்கமாக செல்லும் வழியில் செல்லாமல் வேண்டுமென்றே வேறுபுறமாக சென்றாள். அப்படியே வசீகரனைப் பார்க்க நேர்ந்தாலும் சத்தம் காட்டாமல் திரும்பிவிடலாம் என்றும் நினைத்துக்கொண்டாள்.
நடக்க நடக்க மனம் சிறிது அமைதியடைந்தது.
Advertisement
அப்போது பக்கத்தில் யாரோ பந்து விளையாடுவது போல் சத்தம் கேட்க இவள் அனிச்சையாகத் திரும்பிப்பார்த்தாள்.
அங்கே வசீகரன் யாருமில்லா பேஸ்கெட் பால் கோர்ட்டில் தன்னந்தனியாக ஆடிக்கொண்டிருந்தான்.
ஒருவாரம் கழித்து அவனைப் பார்க்கிறாள் உணர்ச்சிமிகுதியில் தன்னையறியாமல் கண்களின் ஓரம் லேசாக கரித்ததது.
தூரத்திலிருந்து பார்க்கும் போதே அவன் களைத்திருப்பது தெரிந்தது.
சற்றுநேரம் நின்று பார்த்துவிட்டுத் திரும்பிவிடலாம் என்று நினைத்தபோது,
அவன் காற்றில் உயர பறந்து அந்த பத்தடி வளையத்தில் பாலை டன்ங் செய்துவிட்டு அப்படியே வேரில்லா மரம் போல சரிந்து கீழே சிமெண்ட் தரையில் பொத்தென்று விழுந்தான். இடுப்பில் நல்ல அடி பட்டிருக்கும்போலும், வலியில் அவன் “அம்மா..” என்று கத்த.. இவளுக்கு பதறியது. சட்டென்று எதையும் யோசிக்காமல் அவனிடம் ஓடினாள்.
கண்ணை மூடி வலியில் லேசாக முனகிக் கொண்டிருந்தவனின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து
“சீனியர்.. என்னாச்சு..” என்றாள் கவலையுடன்.
அங்கே அவளை சற்றும் எதிர்பார்த்திராத வசீகரன்..
திடுக்கிட்டுப்போய் கண்திறந்து பார்த்தான்.
“நத்திங்..” என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டே எழுந்து அமர முயல, அடிபட்ட இடத்தில் வலி அதிகரிக்க அவன் பல்லைக்கடித்து அதை சகித்தான்.
ஆனாலும் அவன் வலியில் இருப்பது புரிய, இவள் எழுந்து அவன் புறம் கையை நீட்டினாள்.
சற்று தயங்கியபோதும் அவள் நீட்டிய கரத்தைப்பற்றி மெதுவாக எழுந்தான். அவனை நடத்தி கூட்டிப்போய் அங்கே பார்வையாளர்கள் அமர கட்டப்பட்டிருந்த படிக்கட்டில் அமர வைத்து தானும் அருகில் அமர்ந்தாள்.
அவன் முகத்தில் வியர்வையுடன் சேர்ந்து கீழே விழுந்ததில் மண்ணும் ஒட்டியிருந்தது.
யோசியாமல் சட்டென்று தன் ஷாலை எடுத்து அவன் முகத்தைத் துடைத்தாள்.. அவன் கண்கள் கண்ணீரில் நனைந்திருப்பதைப் பார்த்து இவள் ஒரு கணம் செய்வதறியாது திணறிப்போனாள்.
‘ரொம்ப அடிபட்டுவிட்டதா..?இல்லை போட்டியில் தோற்றது இவனை இந்த அளவுக்கு பாதித்திருக்கிறதா? ஒரு கேப்டனாக அணியின் தோல்விக்கு தான் தான் காரணம் என்று தன்னையே நொந்துகொள்கிறானா?’ என்று பலவாறு அவள் மனம் யோசித்தது..
ஆனால் வசீகரன் எதுவும் பேசாமல் அதிதியையே பார்த்திருந்தான்.
‘தான் தன்னிலையிழந்து மனதளவில் பலவீனமாக மிக மோசமான நிலையில் இருக்கும்போது இவள் பார்க்க நேருவது இது இரண்டாவது முறை,
என்னைப்பற்றி என்ன நினைப்பாள்..இப்படி இவளிடம் அவமானப்படுவதே வாடிக்கையாகிவிட்டதே.. இப்போது இவளிடம் என்ன சொல்லுவது..?’ என்று நினைத்தவனின் கைமுஷ்டி தானாக இறுகியது.
கண்களை மூடி பெருமூச்செறிந்து தன்னை சமனப்படுத்திக்கொள்ள முயன்றான்.
அப்போது ஒருகரம் பூவின் மென்மையுடன் அவன் இறுகிய முஷ்டியைப் பற்றியது.
இவன் சட்டென்று கண் திறந்து அதிதியை திரும்பி பார்த்தான்.
அவள் கண்கள் அத்தனை கனிவுடன் அவனை பார்த்துக்கொண்டிருந்தது.
“சீனியர்..எதனால இப்படி உங்கள நீங்களே ஹர்ட் பண்ணிக்கிறீங்கன்னு தெரியல..ஆனா எதுவா இருந்தாலும் டோண்ட் ப்ளேம் யுவர் செல்ஃப்.. இட்ஸ் நாட் யுவர் ஃபால்ட்…
எல்லாராலயும் எல்லா நேரத்துலயும் சரியான முடிவுகளை எடுத்துற முடியாது..சில விஷயங்கள் இப்படித்தான் நடக்கனும்ன்னு இருந்தா அதை யாராலயும் மாத்தவும் முடியாது.. சோ உங்க கட்டுப்பாட்டுல இல்லாத விஷயத்தை நெனைச்சி நீங்க உங்கள ஹர்ட் பண்ணிக்காதீங்க..
இதுவும் கடந்து போகும்ன்னு சொல்லுற மாதிரி எல்லாம் சரி ஆகிடும்.. கவலைப்படாதீங்க..” என்றாள் மென் குரலில்.
அதிதி என்ன நினைத்து இதெல்லாம் சொன்னாளோ அவனுக்குத் தெரியாது, ஆனால் அந்த நிமிடம் அவன் கேட்க விரும்பிய அவனுக்கு மிகவும் தேவையான வார்த்தைகளாக இருந்தது. தன்னிடம் யாராவது வந்து “இது உன்னுடைய குற்றமில்லை..” என்று சொல்லிவிட மாட்டார்களா என்று அவன் ஏங்காத நாளில்லை.. இன்று அவன் எதிர்பாராவேளையில் அதிதி அந்த வார்த்தைகளைக் கூறியது அவனது அத்தனை நாள் காயங்களுக்கும் மருந்திட்டது போல் இருந்தது.மனம் பறவையைப்போல் லேசானது.
“எதாவது ஆஷ்ரமம் ஆரம்பிக்கப் போறியா..?மொரட்டு உபதேசமால்ல இருக்கு..” என்று கேலி பேசவும் முடிந்தது.
“உத்தரவு மாத்தா ஜி..” என்று அவன் போலி பணிவு காட்ட இருவரும் சேர்ந்து சிரித்தனர்.
சிரிப்பினூடே அதிதியைப் பார்த்தவனின் பார்வை மாறியது,
அதுநாள் வரை அவன் அதிதியைப் பார்த்து ரசித்ததே இல்லை என்று சொல்ல முடியாது,ஆனால் அன்று அவள் வித்தியாசமாகத் தெரிந்தாள்..
எந்த பதற்றமும் தயக்கமும் இல்லாமல் அவனுடன் அவள் இயல்பாக இருந்தது இதுதான் முதல்முறை என்று தோன்றியது..
அவளின் அகன்ற கரிய விழிகள், அடர்ந்த வில் புருவங்கள், இழுத்து போடப்பட்ட போனிடெயிலிக்கு தப்பி அவள் நெற்றியையும் கன்னத்தையும் வருடிய ஓரிரு மயிற் கற்றைகள்.. காதோரம் உரசி ஊஞ்சல் ஆடும் இரு வளையங்கள், சிரிக்கும் போது சுருங்கிய அந்தக் குட்டி மூக்கின் மேல் விழுந்த மூன்று கோடுகள், லேசாக சிவந்த கன்னங்கள்,பழிப்பு காட்டி குவிந்த உதடுகளின் பளபளப்பு என்று ஒவ்வொன்றையும் ஸ்லோ மோஷனில் அவன் மனம் பதிவு செய்ய.. இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறியது.
தன்னை மீறி பொங்கிய உணர்ச்சி மிகுதியில் தான் என்ன செய்கிறோம் என்றே யோசிக்காமல் சட்டென்று குனிந்து அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.
ஒரு கணம் என்ன நடக்கிறது என்றே அதிதிக்கு புரியவில்லை.. அதிர்ச்சியில் உறைந்துபோனாள், ஆனால் மறுகணம் சுயஉணர்வு பெற்றபோதோ அவன் அவளை இன்னும் நெருங்கி ஆழ்ந்து முத்தமிடத் தொடங்கியிருந்தான்,
அனிச்சையாக அவன் மார்பில் கைவைத்து வேகமாக தள்ளிவிட்டு எழுந்துநின்றாள் அதிதி.
அவளது முதல் முத்தம் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் களவாடிவிட்டானே..
“என்ன பண்றீங்க நீங்க..” என்றாள் உதட்டின் மேல் கையை வைத்து மறைத்தபடி. அவளுக்கு அவ்வளவு ஆத்திரம் பொங்கியது.
மாயவலையிலிருந்து விடுபட்டவன் போல ஒரு கணம் திகைத்து விழித்தவனுக்கு தான் செய்த காரியத்தின் தீவிரம் உறைக்கத் தொடங்கியதும்
“என்னைப்பத்தி என்ன நினைச்சீங்க? அலையிறவன்னா? இல்ல இதுக்காகதான் உங்க கிட்ட பழகுறேன்னா?”
“ஹேய் லூசு மாதிரி பேசாத.. நான் பண்ணது தப்புதான்.. வேணா என்னை ரெண்டு அடி கூட அடிச்சிக்கோ.. ஆனா இப்படிலாம் பேசாத..”
“இல்ல எனக்குத் தெரியும்.. அன்னிக்கு கார்ல நான் போதையில உளறுனத வச்சி இவதானே…நம்ம மேல பைத்தியமா இருக்கவதானேன்னு என்கிட்ட அட்வாண்டேஜ் எடுத்துக்கிட்டீங்க அப்படித்தானே..?” என்று குற்றம் சாட்டினாள்.
“ஐயோ கிட்டி..என்ன பேசுற நீ.. நான் அதையெல்லாம் யோசிக்கவே இல்ல.. ஒரு ஹீட் ஆஃப் த மொமெண்ட்ல தெரியாம நடந்துடுச்சி.. ஜஸ்ட் ஃபர்கிவ் மீ ஓகே..”
“அது எப்படி தெரியாம ஒருத்தர க்..கிஸ் பண்ணமுடியும்..? ஹீட் ஆஃப் த மொமெண்ட்ல உங்களுக்கு ஏற்கனவே கேர்ள்ஃப்ரண்ட் இருக்கறது கூட மறந்து போயிடுமா..?”
“கேர்ள்ஃப்ரண்ட் ஆ..??”
“என்ன அவ்ளோ ஷாக் ஆகுறீங்க..உங்களுக்கு கேர்ள்ஃப்ரண்டு இருக்கறது எனக்கு தெரியாதுன்னு நெனைச்சீங்களா..”
“உளறாத கிட்டி.. எனக்கு கேர்ள்ஃப்ரண்டுலாம் இல்ல..”
“ஓ அப்போ அந்த வைஷாலி யாரு உங்க சிஸ்ட்டரா..?
“வைஷாலி..” என்று அவன் தயங்கவும்..
“இப்ப நியாபகம் வருதா..அதே வைஷாலி தான்..என்னை என் ஹாஸ்ட்டல் ரூமுக்கே வந்து பார்த்து “என் பாய்ஃப்ரண்ட் கிட்ட இருந்து தள்ளி இரு”ன்னு ரொம்ப மரியாதையா மிரட்டிட்டுப் போனா..அதுக்கு என்ன அர்த்தம்.?” என்று கேட்டாள் கொதிப்புடன்.
“வாட்..?” என்று அவன் மேலும் அதிர்ந்து கேட்க.
அவன் அதிர்ச்சியை சற்றும் கண்டுகொள்ளாமல்..
“இது என்னோட ஃபர்ஸ்ட் கிஸ் தெரியுமா? என்னோட ஸ்பெஷல் பர்சன்காக சேவ் பண்ணி வச்சிருந்தேன், அதை இப்படி அநியாயமா திருடிட்டு சும்மா ஒரு சாரி சொல்லிட்டா எல்லாம் சரியா போயிடுமா?” அவளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை அவனை வைத்து வாங்கினாள்.
“ரொம்ப ஸ்மார்ட்டா பேசுறதா நினைப்போ..? ச்ச.. உங்கள எவ்ளோ உயரத்துல வச்சிருந்தேன் தெரியுமா.. ஆனா நீங்களும் ஒரு டிப்பிகல் ஆண்தான்னு நிரூபிச்சிடீங்க… ஒரு ரிலேஷன்ஷிப்ல இருக்கும் போது அதுக்கு உண்மையா இல்லாம சீட்(cheat) பண்ற சீட்டர் நீங்க….” என்று குரலில் கசப்புடன் கேட்க.
அதைத்தாங்க முடியாமல்..
“சீட்டரா..என்னடி பேசுற..? என்னை ஒரேடியா வில்லன் ஆக்காத..”
அந்த மனநிலையிலும் அவன் டி போட்டுபேசியதை அவள் கவனிக்கத்தவறவில்லை..
‘அவன் என்ன உரிமை உள்ளவன் போல் டி என்று கூறுவது?’
“டீ போட்டு பேசாதீங்க..” என்றாள் வெடுக்கென்று.
“ஓகே சாரி.. தெரியாம வந்துடுச்சி..போதுமா..?” என்று இரு கைகளையும் உயர்த்தி சரணடைந்தான்..
“நீங்க எப்படி வேணா இருந்துட்டுப்போங்க.. ஆனா நான் அப்படி கிடையாது.என்னைப்பத்தி நீங்க என்ன நினைச்சீங்க.. ஒரு ரிலேஷன்ஷிப்ப பிரிக்கறவன்னா??இல்ல சுயஒழுக்கம் இல்லாதவன்னா?நான் ஒன்னும் அவ்ளோ கேவலமானவ இல்ல..”
அதிதிக்கு மேலே பேச்சு வராமல் தொண்டையை அடைத்தது.. தன் நிலையை நினைத்து அழுகை வந்தது, இவன் முன் அழுவதும் பிடிக்காமல் தலையை குனிந்து கொண்டாள்.
வசீகரனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, அதிதியை இந்த நிலைமையில் பார்க்கவும் முடியவில்லை. பூ போன்ற பெண் என் தவறினால் இப்படித் தவிக்கிறாளே என்று அவன் மனம்நொந்தது.
அதே சமயம் இப்போது அவளுக்கு ஆரம்பத்திலிருந்து நடந்ததை விளக்கும் மன நிலையிலும் அவன் இல்லை.. ஒரு பெருமூச்சுடன் மெல்ல அவளை அணுகி
ஒற்றை விரல் கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தினான்.
“ஹே..கிட்டி இங்க பாரு..பைத்தியம் மாதிரி பேசாத..நீ நெனைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல.. ஐ வில் எக்ஸ்ப்ளெய்ன் எவ்ரிதிங் டு யூ.. எனக்கு ரெண்டு நாள் மட்டும் டைம் குடு.. அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு.. சரியா..?” என்றான் மென்மையாக..
விழி நீர்த்திரையிட அவனை ஏறிட்டவளால் மறுத்து எதுவும் பேசமுடியவில்லை..அவள் மௌனமாக சரி என்று தலையசைக்க
அவள் நெற்றியில் முத்தமிட வேண்டும் என்று உள்ளுக்குள் பொங்கிய உணர்வைக் கட்டுப்படுத்திக்கொண்டு மெல்ல அவளைவிட்டு விலகி நடந்தான்.
இந்த பாழாய்ப்போன மனது இவன் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்கிறதே.. பொங்கிய அத்தனை கோபமும் அவன் சிறு தொடுதலில் வடிந்துவிட்டதே.. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ..? என்று மனதில் ஓட.. அவன் போவதையே வெறித்துப் பார்த்திருந்தவளுக்கு தெரியாது,அதுதான் அவனை அவள் கடைசியாகப் பார்க்கப்போவது என்று.