Skip to content
Post Views: 1,501

அத்தியாயம்-20
அடுத்த சில நாட்களுக்கு தலை நிமிரகூட நேரமில்லாமல் அதிதிக்கு வேலையிருந்தது.
விக்ரமிடமும் வசீகரனிடமும் மாறி மாறி பேசி ஒரு வழியாக இருபுறமும் திருப்திகரமாக இருக்கும்படியான ஒப்பந்ததை தயாரித்து..எல்லா சட்ட ஆவணங்களையும் சேர்த்து முடித்து.. ஒப்பந்தம் கையெழுத்தாகும் நாளும் வந்தது.
இன்று ஒப்பந்தம் கையெழுத்தானதும் வசீகரன் நிறுவனத்திலிருந்து முதல் தவணைத் தொகை வந்துவிடும்.. அதன் பிறகு குறிப்பிட்ட நாள் இடைவெளியில் அடுத்தடுத்து பணம் முதலீடு செய்யப்படும் என்று ஒப்பந்தமானது.
Advertisement
கிடைக்கின்ற லாபத்தையும் வளர்ச்சியையும் பொறுத்து வருங்காலத்தில் முதலீடு அதிகரிக்கப்படும் என்றும் முடிவானது.
இரு நிறுவனத்திற்கும் இடையில் தொடரவிருக்கும் நீண்டகால தொழில்முறை உறவுக்கான முதல் அடி இன்று எடுத்துவைக்கப்படுகிறது.
இத்தனை வேலைகளுக்கு இடையிலும் வசீகரன் அவளிடம் பேசுவதை நிறுத்தவில்லை.. தினமும் வேலைவிஷயமாக அவனிடம் எத்தனை முறை பேசினாலும் இடையிடையில் இவளை சீண்டுவதற்கென்றே அழைப்பதை அவன் விடவில்லை..
Advertisement
அவளது நாளின் தொடக்கமும் முடிவும் அவனது குரலாகவே இருந்தது.
Advertisement
அன்றும் காலை இவளுடைய அலாரம் அடிப்பதற்கு முன்பே அவன் அழைத்துவிட்டான்.
அரைத்தூக்கத்தில் போனை எடுத்தவள்
“குட் மார்னிங் பேபி..” என்ற அவனது உற்சாக குரலில் நன்றாக விழித்தாள்.
Advertisement
“குட் மார்னிங்..” என்றாள் கரகரப்பான தூக்கக்குரலில்..
“இன்னுமா தூங்கிட்டு இருக்க..?” என்று அவன் அதிர்ச்சியாகக் கேட்கவும்..
ரொம்ப நேரம் ஆகிடுச்சோ என்று பதறியடித்து நேரம் பார்த்தவள்..
“ச்சு..மணி இன்னும் ஆறுகூட ஆகலையே..” என்று உச்சுக்கொட்டினாள்.
“நான் கெளம்பி ஏர்ப்போர்ட்டுக்கே வந்துட்டேன் நீ இன்னும் கெளம்பலையா..?”
“ஏங்க.. நீங்க கோயம்பத்தூர்ல இருந்து வரணும்.. நான் இங்க உள்ளூர்தானே.. நான் எதுக்கு இப்பவே கெளம்பனும்..?”
“அதெப்படி நான் முழிச்சிட்டு இருக்கேன்.. நீ மட்டும் தூங்கினா எனக்கு காண்டு ஆகாதா..?”
“அதுக்கு சாடிஸ்ட் மாதிரி இப்படி விடிய காலையில ஃபோன் பண்ணி எழுப்பி விடுவீங்களா..? நான் நைட் ஒரு மணிக்குதான் தூங்குனேன் தெரியுமா..?” என்று குறைகூறினான்.
“அச்சோ..சாரி கண்ணம்மா.. என்னைப் பாக்கபோற ஆர்வத்துல தூங்காம முழிச்சிட்டு இருப்பியோன்னு நெனைச்சி கால் பண்ணிட்டேன்.. சரிடா சரிடா நீ தூங்கு..நான் லேண்ட் ஆனதும் மெசேஜ் பண்றேன்..” என்றான் அரைத்தூக்கத்தில் எழுந்த குழந்தையை தட்டிக்கொடுத்து தூங்கவைப்பது போல..
இதற்குமேல் அவள் எங்கே தூங்குவது…? அவன் கண்ணம்மாவிலேதான் அவள் தூக்கம் பத்து கிலோமீட்டர் தூரம் தள்ளிப் போய்விட்டதே..
அவன் இந்த செல்ல அழைப்புகளையெல்லாம் உணர்ந்து சொல்லுகிறானா.. இல்லை அதுவும் அவனது சீண்டலின் ஒரு அங்கமா..? என்று பிரித்தறிய முடியாமல் அதிதி குழம்பிப்போனாள்.
இந்த நேரங்கெட்ட நேரத்தில் ஃபோன் அழைப்புகள்,கள்ள சண்டைகள், செல்ல சீண்டல்கள் எல்லாம் எதை நோக்கி போகிறது என்று தெரியவில்லை.
அவன் அவளிடம் உரிமை எடுத்துக்கொள்வது போல் அவளால் அவனிடம் தானாக உரிமையெடுத்து பழக முடியவில்லை. ஒருவேளை ‘இது எல்லாம் விளையாட்டு’ என்று சொல்லிவிட்டால் அதை அவள் எப்படி தாங்குவாள்?
கண்ணிழந்தான் பெற்றிழந்தான் என்பது போல, இழந்துவிட்டதாக நினைத்த உறவு, திரும்ப கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்து அது திரும்ப கிடைக்காமலே போய்விட்டால் மீண்டும் அந்த ஏமாற்றத்தின் வலியை எப்படி கடப்பது..?
இந்த குழப்பங்கள் எதுவும் அவனுடன் பேசும்போது தோன்றுவதில்லை.. அவனிடம் சரிக்கு சரியாக வாயாடுவதும் அவனது எதிர்பாரா நேரத்து செல்ல அழைப்புகளில் கிளர்ச்சியடைவதும் இயல்பாக நடந்தது.
ஆனால் ஃபோனை வைத்ததும் மனம் உதைக்கத் தொடங்கிவிடும்..
‘நான்தான் அவனுக்கு ஓவரா இடம் கொடுக்கறேனா..? என்னால ஏன் ரிஷிய எட்ட நிறுத்துன மாதிரி இவன்கிட்ட அந்த பவுண்டரிய செட் பண்ணி தள்ளி நிறுத்த முடியல..? அப்படி நிறுத்தினாலும் அவன் நிற்பானா..? நான் செய்வது சரியா..?
அவன் என்ன நினைத்து என்கூட பழகுகிறான்? என்னிடம் மட்டும்தான் இப்படி ஃப்ளர்ட் பண்றானா..? இல்லை இன்னும் வேறு யாருடனாவது இப்படி பேசிக்கொண்டு இருப்பானா..? என்றெல்லாம் எண்ணம் தோன்றி அலைக்கழிக்கும்.
சில சமயம் இந்த குழப்பங்களையெல்லாம் வர்ஷினியிடம் கூறி ஆலோசனை கேட்கலாமா என்று கூட நினைத்திருக்கிறாள். ஆனால் உடனே அவளது மனதில் ஒரு தயக்கம் வந்துவிடும்..
‘வர்ஷினிக்கு ஏற்கனவே வசீகரனைப் பிடிக்காது. இன்னும் அவனை திரும்ப பார்த்ததைக் கூட அவகிட்ட சொல்லல.. இப்ப இப்படி க்ளோசா பழகறதெல்லாம் தெரிஞ்சா.. கண்டிப்பா வேண்டாம்ன்னு தான் சொல்லுவா..’
அவனை ஒரேடியாக வெட்டிவிடுவதும் தன்னால் முடியும் என்று அவளுக்குத் தேன்றவில்லை.
இப்படியாக இந்த உறவுக்கு என்ன பெயர் என்று அவனும் வரையறுக்கவில்லை, அவளுக்கும் அவனிடம் விடாப்பிடியாக கேட்கும் தைரியமும் இல்லை..
இத்தனைக் குழப்பங்களுக்கிடையிலும் வசீகரனைப் பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வம் மட்டும் அவளைப் பாடாய்ப்படுத்திக்கொண்டே தான் இருந்தது.
நேற்றிலிருந்தே அவளுக்கு பரபரக்கத் தொடங்கிவிட்டது. என்னமோ அவனை பார்க்கப்போவதை நினைத்தாலே உடல்முழுவதும் உற்சாகம் பொங்கியது, எங்கிருந்தோ வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ள முகம் தானாக சிவந்தது.
அவனை இம்ப்ரெஸ் செய்வதற்காக புதிதாக ஆடை வாங்கி அணிந்தாள்.பார்த்துப் பார்த்து தயாரானாள்.
சொன்னது போலவே வசீகரன் சென்னை வந்துவிட்டதாக செய்தி அனுப்பியிருந்தான்.
இதயம் இன்னும் அதிகமாக திக் திக் என்று துடிக்க.. ஆவல்,நாணம்,ஏக்கம் எல்லாம் கலந்து கட்டி அடிக்க.. அவள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் ஆஃபிஸுக்குள் நுழைந்தாள்..
நுழையும் போதே வசீகரனின் காந்தச்சிரிப்பு காதுகளில் இனிமையான நாதம் இசைக்க, சிரித்துக்கொண்டே அந்தப்பக்கம் பார்த்தவளின் சிரிப்பு அவள் உதட்டிலேயே உறைந்து போனது.
வசீகரன் அதிதியின் வேலையிடத்தில் டேபிளின் மேல் லேசாக சாய்ந்து கொண்டு நின்றிருக்க .. அவனை சுற்றி லிடியா, ஜனனி,சாதனா, பூர்வா என்று நால்வர் நின்றிருந்தனர்.
அனைவரது முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு..
கோகுலத்தில் கண்ணன் கோபியருக்கு நடுவே இப்படித்தான் நின்றிருப்பான் என்று தோன்றியது அவளுக்கு.
“வசி.. உங்களுக்கு கால் வலிக்கலையா..?” என்று கேட்டாள் லிடியா உள்ளூற சிரிப்பை அடக்கியபடி..
“இல்லையே ஏன்..?” என்று வசீகரன் யோசனையாகத் திருப்பிக் கேட்க..
“இல்ல.. நாள் முழுக்க என் மைண்ட்ல நிக்காம ஓடிட்டே இருக்கீங்களே அதான் கேட்டேன்..” என்று சொல்லி சிரிக்கவும்..
“ஓஓஓஓ..” என்று அங்கே வெடிச்சிரிப்பு கிளம்பியது..
“குட் ஒன்..” என்று வசீகரனும் கூறி சிரிக்க, இவளுக்கு அடிவயிற்றிலிருந்து எரிமலை வெடித்துச்சிதறியது.
“இப்ப என்னோட டர்ன்..” என்ற ஜனனி..
“வசி.. உங்க கிட்ட மேப்(map) இருக்கா..?” என்றாள்
“மேப்பா..? எதுக்கு..?”
“நான் அடிக்கடி உங்க கண்கள்ல தொலைஞ்சி போயிடுறேன் அதுக்குதான்..” எனவும்.
அங்கே மீண்டும் சிரிப்பலை பரவியது..
அதிதிக்கு காதில் புகை வராத குறைதான்.
“அய்யோ போதும் ஆளை விடுங்க..” என்றுவிட்டு எதேர்சையாக திரும்பியவன் அதிதி நிற்பதைப் பார்த்ததும் முகம் முழுவதும் சிரிப்பாக..
இவளைப்பார்த்து கையாட்டி.
“ஹாய்..” என்றான்.
ஆனால் அவள் அவனைக் கொஞ்சமும் சட்டைசெய்யாமல்..நேரே விக்ரமின் அறைக்கு சென்றுவிட்டாள்.
அதிதி இவனை பார்த்தும் பார்க்காமல் போனதை பார்த்த வசீகரன் குழம்பிப்போனான்.
“இப்ப என்ன ஆச்சி..? காலைல நல்லாதானே பேசினா.. வேதாளம் ஏன் திரும்ப முருங்கமரம் ஏறுது..?” என்று வியந்தான்.
ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வை சிறிய கொண்டாட்டமாக ஏற்பாடு செய்திருந்தனர். இன்ஃபி டெக் பணியாளர்கள் எல்லாம் சேர்ந்து மீட்டிங் அறையில் பலூன், கலர் பேப்பர் என்று ஒட்டி அலங்கரித்திருந்தனர், கேக் கூட வாங்கி வைத்திருந்தனர். எல்லாம் அதிதியின் ஐடியாதான்.
ஆனால் இந்த சந்தோஷ நிகழ்வைகூட அனுபவிக்க முடியாமல் அதிதி கொதித்துக்கொண்டிருந்தாள்
‘இவனை பார்க்கறது என்னமோ சித்திரைத் தேரை பார்க்கறது மாதிரி கொண்டாட்டமா இருக்கனும்னு ஏற்பாடு பண்ணினா.. இவன் இருக்கற எல்லாப் பொண்ணுங்க கூடவும் சேர்ந்து சிரிச்சி கும்மியடிச்சிட்டு இருக்கான்.. இனிமே இவனோட பேசவே கூடாது..’ என்று முடிவெடுத்தாள்.
வசீகரனும் இவள் கவனத்தை ஈர்க்க வெளியே தெரியாமல் எவ்வளவோ முயன்றும் இவள் துளியும் அவனை கண்டுகொள்ளவில்லை..
ஒரு கட்டத்திற்கு மேல் போகிறாள் என்று அவனும் விட்டுவிட்டு அவன் வேலையை பார்க்க ,
“பண்றதையும் பண்ணிட்டு எப்படி கண்டுக்காம இருக்கான் பாரு..” என்று அதற்கும் குமைந்தாள்.
ஒப்பந்தம் நல்லபடியாக கையெழுத்தாகி, கேக் வெட்டி முடித்ததும் விக்ரம் எல்லாரையும் ஸ்பெஷல் லன்ச்க்கு அழைத்துப்போனான்.
அனைவரும் கிளம்பிப்போக, கடைசியாக இவள் வெளியே போகும்முன்.. இவள் கையைப்பிடித்து இழுத்து ஒரு மறைவான இடத்தில் கொண்டு நிறுத்தினான் வசீகரன்.
“இப்ப என்ன ஆச்சி உனக்கு?” என்றான் சிறு எரிச்சலுடன்.
‘ஓ இவனுக்கு கோபம் வேற வருதா?’ என்று மனதில் நினைத்தவள்..
“என்ன ஆச்சி..?எனக்கு ஒன்னும் ஆகல..” என்றாள் முகத்தைத் திருப்பிக்கொண்டு
“அப்புறம் ஏன் மூஞ்சிய இப்படி தூக்கி வச்சிட்டு இருக்க..?”
“என் மூஞ்சியே அப்படித்தான்..”
“ஏன்டி எப்பப்பாரு உர்ருன்னே இருக்க..?” என்றான் அலுத்த குரலில்.
“அதான் உங்ககிட்ட சிரிச்சி சிரிச்சி பேச ஆளுங்க இருக்காங்கல்ல.. அவங்ககிட்டயே போய் பேசவேண்டியதுதானே.. இந்த உம்மனாமூஞ்சிகிட்ட பேசி ஏன் கஷ்டப்படுறீங்க?” என்று அவள் எங்கோ பார்த்தபடி சொல்லவும்,
லேசாக புருவம் சுருக்கி யோசித்தவன்..சட்டென்று சிரித்துவிட்டான்.
“ஹேய் கிட்டி.. நீ ஜலஸ்(jealous) ஆகிட்டியா..? அது வெறும் விளையாட்டு பேச்சு..இதுக்கு போய் டென்ஷன் ஆவியா நீ..?”
“நான் ஒன்னும் ஜலஸ் ஆகல.. நீங்க யாருகிட்ட பேசினா எனக்கென்ன.?” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு..
“ஹே பூனகுட்டி..இவ்ளோ பொசசிவ்வா இருந்தா நான் என்னடி பண்றது..? ஒரு ஃபன்ன கூட உன்னால புரிஞ்சிக்க முடியாதா?” என்றான் அவள் உப்பிய கன்னங்களைப் பிடித்து செல்லமாக கிள்ளியபடி…
‘இவனைப்பார்க்க இங்கே ஒருத்தி ஒரு வாரமா தவமிருந்தால் இவன் வேறு யாருடனோ வாய் கிழிய சிரிச்சிட்டு இருப்பான் அதை நான் சாதாரணமா எடுத்துக்கனுமாம்..’ என்று உள்ளுக்குள் புகைந்தவள்.
அவன் கையைத் தட்டிவிட்டு
“விடுங்க யாராவது பார்க்க போறாங்க..”என்றவள்
“எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க நான் போறேன்..” என்றுவிட்டு அவனைத்தாண்டி சென்றாள்.
ரெஸ்டாரண்ட்டில் குழுவாக அமரும்படியாக இருந்த நீளமான டேபிளில் எல்லாரும் எதிரெதிராக அமர, வசீகரன் இவளை அவன் அருகில் உட்காருமாறு கண்ணால் அழைத்தான்.
ஆனால் அவனைக் கண்டுகொள்ளாதவள் போல அவனுக்கு நேர் எதிரே அமர்ந்திருந்த விக்ரமின் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள்.
வேண்டுமென்றே விக்ரமிடம் சிரித்து சிரித்து பேசினாள், இன்னொரு புறம் அமர்ந்திருந்த ரிஷி அடித்த மொக்கை காமெடிக்கு கூட விழுந்து விழுந்து சிரித்தாள்.
வசீகரன் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தான்
உணவு ஆர்டர் செய்யும் போதும்..
“பாஸ் உங்களுக்கு ப்ரான் தொக்கு அண்ட் ஃபிஷ் ஃப்ரை பிடிக்கும் தானே அதை ஆர்டர் பண்ணலாம்.” என்றாள்.
“எனக்கு பிடிச்ச டிஷ் எல்லாம் உனக்கு எப்படி தெரியும் அதி?”
“எவ்ளோ நாள் டின்னர் போய் இருக்கோம் இது கூட தெரியாதா?”
“பரவால்லையே நல்ல அப்சர்வேஷன் ஸ்கில் உனக்கு..” என்று அவன் மெச்சுதலாக கூற.. உதட்டை காதுவரை இழுத்துவைத்து சிரித்தாள்.
அந்த நேரம் மொபைல் சத்தமில்லாமல் அதிர..எடுத்து பார்த்தாள்.
“போதும் கிட்டி..ஸ்டாப்..” என்று வசீகரன் மெசேஜ் அனுப்பியிருந்தான்.
அனிச்சையாக நிமிர்ந்து அவனைப்பார்த்தாள்
அவன் இறுகிய முகத்துடன் கூர்விழிகளால் அவளை ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் பார்வையில் உடலில் லேசாக நடுக்கம் ஓடியது..
உடனே அந்த உணர்வை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தன் நாடகத்தைத் தொடந்தாள்.
“பாஸ் நீங்க எப்படி நைஃப், ஃபோர்க் எல்லாம் வெளிநாட்டுக்காரங்க மாதிரியே யூஸ் பண்றீங்க.. சான்ஸே இல்ல..” என்று புகழ்ந்தாள்.
“கார்ப்பரேட் எட்டிக்கேட்(etiquette) ட்ரெயினிங்ல இதெல்லாம் சொல்லித்தருவாங்க..நான் ஸ்டேட்ஸ்ல இருக்கும்போது கத்துக்கிட்டேன்” என்று விவரம் தந்தான் விக்ரம்.
“வாட் எவர் யு ஆர் டூயிங் ஜஸ்ட் ஸ்டாப் இட் கிட்டி..” என்று மீண்டும் மெசேஜ் அனுப்பினான் வசீகரன்.இம்முறை அவன் குறுஞ்செய்தியிலேயே அவன் கோபம் தெரிந்தது.
அதிதிக்கு மனம் குழம்பிப்போனது.அவனை வெறுப்பேற்றவென்று செய்தது தான், நினைத்தது போலவே அவன் கடுப்பாகிவிட்டான், ஆனால் இந்த வெற்றி ஒன்றும் அவ்வளவு இனிப்பாக இல்லையே..
அப்போது அனைவரும் உணவு உண்டு முடித்து கடைசியாக ஐஸ்கிரீம் ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
நாடகம் போட்டு வசீகரனை வெறுப்பேத்துவதிலேயே அதிதியின் சக்தி முழுவதும் வீணாகிவிட்டதால் அவள் சீக்கிரமே சோர்வாக உணர்ந்தாள். ரொம்ப நேரெமெல்லாம் அவள் இயல்பை மீறி நடந்துகொள்ள அவளால் முடியவில்லை. தான்செய்வது சரியா? என்று உள்ளுக்குள் அவளுக்கு உறுத்திக்கொண்டேதான் இருந்தது.. இந்த போராட்டத்திற்கு இடையில் அவள் சரியாக சாப்பிடக்கூட இல்லை…
கையிலிருந்த ஐஸ்கிரீமையும் உண்ணப்பிடிக்காமல் அளந்துகொண்டிருந்தாள்.
அதை பார்த்த விக்ரம் “என்ன அதி சாப்பிட முடியலையா..” என்று கேட்டான்..
“ஆமா பாஸ் நெறைய இருக்கு..” என்று அவள் அரைக் கவனமாக சொல்லி வைக்க..
“சரி குடு நான் சாப்பிடுறேன்..” என்றான் விக்ரம் சகஜமாக..
“அய்யோ பாஸ் அது நான் சாப்ட்டது..” என்று அதிதி பதற.
“அது பரவால்ல.. ஐ டோண்ட் மைண்ட்..” என்று அவன் அவளது ஐஸ்கிரீமை சாப்பிடவும்..
சட்டென்று எழுந்துவிட்டான் வசீகரன்..
“எக்ஸ்கியூஸ்மீ..” என்று பொதுவாக சொல்லிவிட்டு வெளியேறினான்.
அதிதிக்கு மனம் குழம்பிப்போனது, தான் ஆத்திரத்தில் அறிவிழந்து செயல்பட்டுவிட்டோமா..? என்று மனம் துணுக்குற்றது.
அவள் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்
“கம் அவுட்சைட்” என்று அவனிடமிருந்து மெசேஜ் வந்தது.
ஏற்கனவே குற்ற உணர்ச்சியிலிருந்ததாலோ என்னவோ பெரிதாக ஒன்றும் யோசிக்காமல் இவளும் யார் கண்ணையும் உறுத்தாதவாறு மெதுவாக எழுந்து வெளியே போனாள்.
அவன் கார் பார்கிங்கில் நின்றிருந்தான்.
இவள் தயங்கியபடி அருகே செல்லவும்..
“என்ன மேடம்…பழிக்குபழி வாங்கிட்டு சந்தோஷ வெள்ளத்துல நீந்திகிட்டு இருக்கீங்களா ?” என்று ஏளனமாக கேட்டான்.
அவள் எதுவும் மறுத்துப் பேசும்முன்.. அவனே தொடந்து..
“நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ.. ஆனா விக்ரம வச்சி விளையாடுறத மட்டும் இனிமே பண்ணாத.. அவன் என்னோட அண்ணன்..” என்று அடிக்குரலில் எச்சரித்தவன் அதற்குமேல் அங்கே நிற்காமல் சென்றுவிட்டான்.
எதோ பெரிதாக சொதப்பிவிட்டோம் என்று மட்டும் புரிய என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்றாள் அதிதி.
ஆனால் வசீகரனை வெறுப்பேற்றுவதற்காக இவள் விக்ரமிடம் கொஞ்சம் அதிக உரிமை எடுத்துப் பழகியது மற்றவர்கள் கண்ணுக்கும் தப்பவில்லை என்பது போகப்போகத்தான் அவளுக்கு புரிந்தது.
“என்ன அதி.. பாஸ் மேல இன்னிக்கு ஒரே பாசமழையா இருந்தது என்ன விஷயம்..?” என்று ஆர்வமாக் கேட்டாள் லிடியா..
“மேடம் பெரிய மீனுக்கு வலை போடுறாங்கடி..” என்று கொளுத்திப்போட்டாள் ஜனனி..
“என்ன பேசுறீங்க நீங்க?இந்த மாதிரிலாம் அசிங்கமா பேசாதீங்க..” என்று ஜனனியைப் பார்த்து கோபத்துடன் கூறவும்..
“ஓகே.. கூல்.. விளையாட்டுக்குதான் சொன்னேன்..” என்று சமாளித்தாள் ஜனனி..
“நீ கூடவா லிடி..?” என்று வலியுடன் கேட்கவும்
“ஹே சாரி அதி..” என்றாள் லிடியா குரலில் நிஜமான வருத்தத்துடன்.
அப்போதைக்கு இந்த பிரச்சனை முடிந்தது என்று நினைத்தால்… அன்று மாலை பவித்ரா அவளை தனியாக அழைத்து..
“அதிதி, உன்னோட பர்சனல் லைஃப்ல தலையிடுறேன்னு நினைக்க வேண்டாம்.. ஆனா இது ஆஃபீஸ், இங்க பர்சனல் விஷயத்தை புகுத்தாம இருக்கறதுதான் எப்பவுமே நல்லது.
உனக்கு விக்ரம் மேல இன்ட்ரெஸ்ட் இருந்தா நீ அவன தனியா கூப்ட்டு நேரடியா சொல்லிடு.. இப்படி எல்லார் முன்னாடியும் நெருக்கமா பழகினா அது அவனோட ரெப்யுடேஷனுக்கும் நல்லதில்லை, உனக்கும் கெட்ட பேராகிடும். விக்ரமுக்கு இந்த விஷயத்துல ஜாடை மாடையா சொன்னால்லாம் புரியாது, நேரடியா சொன்னாலே புரியுமாங்கறது சந்தேகம்தான்..” என்றாள் லேசாக சிரித்தபடி..
“சீரியஸ்சா எனக்குமே நீங்க என்ன பேசுறீங்கன்னு புரியல மேடம்.. எனக்கு விக்ரம் சார் மேல ரொம்ப மரியாதை இருக்கு, அவருதான் என்னோட ரோல்மாடல், அதுக்கு மேல எனக்கு அவர் மேல எந்த இண்ட்ரெஸ்டும் இல்லை மேடம். நீங்க என்ன தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க..” என்று முடித்தவளின் கண்கள் கலங்கிவிட்டது.
“ஹேய் சாரி.. நான்தான் தப்பா புரிஞ்சிகிட்டேன் போல.. அதுக்கு ஏன் அழற..” அவள் கண்ணீரைத் துடைக்கவும் அவளைக்கட்டிக்கொண்டு அழுதுவிட்டாள்.
அன்று முழுவதுமே வசீகரன் அவளை அழைக்கவில்லை.. சும்மாவே மணிக்கொருமுறை எதாவது ஒரு குறுஞ்செய்தியாவது அவனிடமிருந்து வந்துவிடும்.. ஆனால் இன்று அந்தப்பக்கம் மயான அமைதி நிலவியது.
நள்ளிரவு வரை அவனிடமிருந்து அழைப்பு வராதா என்று ஃபோனையே ஏக்கத்துடன் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள்.. கடைசியாக தாளமுடியாமல்
“ஐயம் ரியலி சாரி..” என்று செய்தி அனுப்பினாள்.
ஒரு மணிநேரதிற்கு பிறகுதான் அவன் அந்த செய்தியையே பார்த்தான்.
ஆனால் பதிலேதும் அனுப்பாமல் அவன் ஆஃப்லைன் போய்விட.. அதிதி செய்வதறியாது தவித்துப்போனாள்.
error: Content is protected !!